11/16/2008

ஜெயமோகனின் ”ஊமைச் செந்நாய்” தூண்டிய எண்ணங்கள்

கதையைப் பார்க்க இங்கே செல்லவும்.

இக்கதை என்னை மிகவும் பாதித்தது. ஜெயமோகனின் தமிழ் சொல்லாட்சியை நான் சொல்லித்தான் மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றில்லை. கதையின் ஆரம்பத்திலேயே ஊமைச் செந்நாய் என்னும் பயரின் காரணத்தை இவ்வாறு சுருக்கமாகக் கூறிவிடுகிறார்.

“வேட்டை நாய் எப்படி இருக்குமோ அப்படி இருப்பேன். நான் கூடச்செல்வதே தெரியாது. தேவையான இடத்தில் மட்டும் சைகை செய்வேன். சைகைமூலம் சொல்லமுடியாத விஷயத்துக்கு மட்டும் குரல். அதுவும் ஒருசொல் அல்லது இரண்டு சொல். எனக்கு ஆங்கிலம் சொற்களாகத்தான் தெரியும். ஆகவே என்னை ‘ஊமைச்செந்நாய்’ என்று அவர்கள் அழைத்தார்கள்”.

அடுத்ததாக அவனது எஜமான் வில்சன் பற்றிய சில வரிகள்:
“என்னை வில்சன் என்று கூப்பிடு” என்றான் துரை. அவனுக்கு நாற்பது வயதுதான் இருக்கும். ஆனால் நம்மூரில் நாற்பதுவயதில் இருபது வயதான மகன் வந்து அவனுக்கும் பிள்ளை பிறந்து தாத்தா ஆகி மிச்சமிருக்கும் நாட்களை எண்ண ஆரம்பித்திருப்பார்கள். தொப்பை சரிந்து தடைக்கு கீழே சதை தொங்கி கண்ணுக்கு கீழே கறை விழுந்து தெரிவார்கள். துரை இறுக்கமாக பனைநாரால் பின்னிச் செய்தவன்போல இருந்தான். நரம்புகள் பச்சை நிறமாக தோளிலும் கழுத்திலும் கைகளிலும் தெரிந்தன. உதடே கிடையாது.காட்டுபூனையின் கண்கள். இரு பக்கங்களிலும் கைகளைக் கொடுத்து அழுத்திச் சப்பியது போன்ற முகம் அவனுக்கு. மூக்கு நீளமாக வயதான கழுகின் அலகு போல. தேங்காய்நார்போன்ற தலைமுடி. சேற்றுப்பாறை போல மடிப்பு மடிப்பாக இறுகி இருந்த அவன் வயிற்றைப் பார்ப்பவர்கள் அவன் ஒரே வேளையில் இரண்டு காட்டுச்சேவல்களைத் தின்பவன் என்று நம்ப மாட்டார்கள்”.

அந்த வில்சனது கேரக்டர் அடுத்த வரிகளில்:

“துரை எழுந்து வந்து ஒரு வெண்ணிறத் துண்டை கழுத்தில் கட்டிக்கொண்டு அமர்ந்து கொண்டான். மனைவி போல தோமா அருகே நின்று துரைக்கு முதலில் காய்கறிக¨ளை பரிமாறினான். துரை பூனைக்கால் கரண்டியால் அவற்றைக் குத்தி எடுத்து வாயிலிட்டு உதடுகளை மூடிக்கொண்டு மென்று தின்றான். அவனது சவரம் செய்யப்பட்ட தாடை உரித்த கோழியின் தொடை போல சிவப்பாக இருந்தது. அவன் மெல்வதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் பின் வான்கோழிகளை கத்தியால் வெட்டி பூனைக்கால் கரண்டியால் குத்தி பிய்த்து தின்றான். அவன் பழச்சாறை குடித்து முடித்ததும் அருகே நின்ற தோமா அவன் வாயை துடைத்தான்.
நான் காத்திருந்தேன். தோமா தட்டுகளுடன் வந்தான். அவற்றில் வான்மோழியின் எலும்புகளும் கொஞ்சம் சதையும் இருந்தன. தோமா தனக்காக சோறு பொங்குவான். தேங்காய் போட்டு வான்கோழிக் குழம்பும் வைப்பான். கொஞ்ச நேரத்தில் எனக்கு சட்டியில் சோறு வந்தது. வான் கோழிக்குழம்பு ஊற்றப்பட்டிருந்தாலும் துண்டுகள் இல்லை. துரை மிச்சம் வைத்த பொரித்த கோழி எலும்புகளை சோற்றுடன் சேர்த்து போட்டிருந்தான். நான் ஆவலுடன் சோற்றை வாரி வாரித் தின்றேன். நான் காலைமுதலே ஒன்றும் சாப்பிடவில்லை. மேலும் எனக்கு வேகமாக தின்றுதான் பழக்கம்”.


வில்சனின் இன்னொரு தேவை, கூடவே அவனது வேலையாட்களின் செயல்பாடு:
“துரையினு கூட்டு வரணும்” என்று சொன்னேன். அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. தரையில் இருந்த சேவப்பெண்ணை பார்த்தார்கள். சேவப்பெண்ணை நான் பையனாக இருந்தபோது பார்த்திருக்கிறேன். அப்போது அவள் முலைகள் தேங்காய் போல இருக்கும். இப்போது அவை தூக்கணாங்குருவிக்கூடுகள் போல இருந்தன. சேவப்பெண்ணு என்னை பார்த்து ”நீயல்லடா எரப்ப நாயி?” என்றாள். நான் புன்னகைத்தேன். ”சோதி நீ போயிட்டு வாயெடீ” என்றாள் கிழவி. ”சோதி வேண்டா…” என்றேன் ”துரை அடிப்பான்” கிழவி தூ என்று துப்பி ”சோதி மதி…நீ போடி பெண்ணே”என்றாள்
சோதி என்னுடன் வரும்போது தலை குனிந்து மெல்ல அழுதபடியே வந்தாள். விசும்பல் ஒலி கேட்டு நான் ”நீ எந்தெடீ குட்டி கரையுந்நே?” என்றேன். அவள் தூ என்று தரையில் துப்பினாள். நான் அதன்பின் அவளைப் பார்க்கவில்லை. நாங்கள் மீண்டும் பங்களாவை அடைந்தபோது தோமா வாசலிலேயே நின்றான். ”இவளா? இவளை அந்நு சாயிப்பு சாட்டை கொண்டு அடிச்சானே”என்றான்.
தோமா சோதியை கூட்டிச்சென்று முற்றத்தில் வைத்தே அவளுடைய முண்டுகோந்தலையை அவிழ்த்து நிர்வாணமாக ஆக்கினான். அவள் தன் கையால் முலைகளை பொத்தியபடி கண்ணீருடன் என்னைப் பார்த்தாள். அவளுடைய பின்பக்கம் பருத்து இரு பலாக்காய்களை சேர்த்து வைத்தது போல் இருந்தது. தோமா அவள் புட்டத்தில் படீரென்று அடித்து ”போ போ” என்றாள். அவள் தயங்கி உள்ளே செல்வதற்கு முன் என்னை ஓரக்கண்ணால் பார்த்தாள்.
நான் வராந்தாவில் மீண்டும் கால் மடித்து அமர்ந்துகொண்டேன். தோமா பக்கவாட்டில் சென்று நின்று ஜன்னல் வழியாக உள்ளே பார்த்து சிரித்தான். திரும்பி என்னைப்பார்த்து வா வா என்று கைகாட்டினான். நான் எழுந்து தோமாவின் அருகே நின்றேன். உள்ளே துரை நிர்வாணமாக நின்று தரையில் அமர்ந்திருந்த சோதியின் முகத்தை தன் இடுப்புடன் சேர்த்து, அவள் தலைமயிரைப் பிடித்து இறுக்கி வேகமாக அசைத்தான். அவள் மூச்சுத்திணறி துடித்துக் கொண்டிருந்தாள்.
தோமா என்னிடம் பெரிய பற்களைக் காட்டி சிரித்தான். நான் பேசாமல் நின்றேன். கொஞ்ச நேரத்தில் துரை மாட்டுத்தோல் சாட்டையால் சோதியை அடித்துக்கொண்டே நரி குழறுவது போல ஏதோ சொன்னபடி அவளை துரத்தி வந்தான். அவள் முலைகள் குலுங்க ”என்றே தேவே…என்றெ தேவே”என்று அலறியபடி ஓடி வந்து முற்றத்தில் நின்றாள். நிர்வாணமாக வந்த துரை முற்றத்தில் துப்பி விட்டு உள்ளே போனாள். சோதி தரையில் குந்தி அமர்ந்து ஓங்கரித்து கோழையைத் துப்பினாள்.
தோமா அவளை தலைமுடியைப் பிடித்து தூக்கி சமையலறைக்குள் இழுத்துக் கொண்டு சென்றான். அவள் ”என்றெ தேவே என்றெ தேவே’ என்று சொல்லி அழுதுகொண்டிருந்தாள். அவன் உள்ளே சென்றதுமே அவளை கீழே தள்ளிப் போட்டு மேலே படுத்துக் கொண்டான். நான் அவன் செய்வதை கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன்”.


கிட்டத்தட்ட 29 பக்கம் Word கோப்பில் வரும் இக்கதையின் சிறப்பே, அவ்வளவு நீளமாக இருப்பினும் நம்மை விடாது படிக்க வைக்கிறது. இங்கு இப்பதிவை நான் போடும்போது எதை எடுக்க, எதை விட என்று என்னைத் திணற அடிப்பது நியாயமா ஜெயமோகன் அவர்களே?

ஆகவே இப்பதிவின் நோக்கம், மற்றும் இடப்பற்றாக்குறையைக் கருதி பலவற்றை மனதில்லாமல் நீக்க வேண்டியுள்ளது. ஊமைச் செந்நாய் அடிமை, ஆனால் சிந்திக்கத் தெரிந்தவன். அவன் கடைசியில் செய்யப்போகும் காரியம் அதை மிகவும் வல்யுறுத்தும். வில்சன் ஒரு சேடிஸ்ட். ஆனால் கதை முடியும் தருவாயில் அவன் தரப்பு வெர்ஷனையும் ஜெயமோகன் அறியத் தருகிறார். நேரே அங்கே செல்வோம்.

(கொல்லப்பட்ட) “யானையை நெருங்கி அதன் மீது தன் சப்பாத்துக்காலைத்தூக்கி வைத்தான். யானையின் வயிற்றிலும் துதிக்கை நுனியிலும் மெல்லிய அசைவு மிச்சமிருந்தது. அதன் கண்கள் மெல்ல மூடிக்கொண்டிருந்தன, அந்த விழிகள் கரிய உடலுக்குள் மெல்லமெல்ல புதைந்து மறைவதுபோல் உணர்ந்தேன்.
துரை அதன் தந்தங்ளை துப்பாக்கியால் தட்டிப்பார்த்தான்.”அனேகமாக இதுதான் இந்தியாவிலேயே பெரிய யானைத்தந்தம்”என்றான். ”ஆப்ரிக்க யானைகளின் அளவுக்கே பெரியது…. ஆமாம், இது ஒரு மன்னன். யானைகளில் ஒரு மன்னன்” என்றான். யானையின் முன்னங்கால் மேல் அமர்ந்துகொண்டு தன் ஒரு சப்பாத்தைக் கழற்றினான்.
”மிகப்பெரியது…கன்ன எலும்பைப்பார்த்தால் எண்பது வயதுகூடச் சொல்லலாம். மூத்தவர்”என்றான் துரை என்னிடம். நான் அவன் கண்களிலும் புன்னகையிலும் மகிழ்ச்சியே இல்லாததைக் கவனித்தேன். அதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. பெரிய வேட்டையை கொன்றதும் ஏமாற்றம் வந்துவிடுகிறது. ஏனென்றால் அதற்குமேல் வேட்டையாட ஏதுமில்லை. ஆனால் அது மட்டுமல்ல. மிருகம் எப்போதுமே சாவின்மூலம் மனிதனை வென்றுவிடுகிறது. வேறு ஒரு உலகைச்சார்ந்ததாக ஆகிவிடுகிறது. அதை மகத்தானதாகவும் பெருந்தன்மை மிக்கதாகவும் நாம் நினைக்க ஆரம்பித்து விடுகிறோம் என்று சிம்ப்ஸன் பெரிய துரை ஒருமுறை சொன்னார். புலி ஒன்றைக்கொன்றபின் அவர் அதனருகே நின்று பிரார்த்தனை செய்துகொண்டே கண்ணீர் விட்டார்.
துரை என்னிடம் ”நான் புதருக்குள் விழுந்துவிட்டேன். என் தொப்பியை எடுத்துவா ”என்றான்’என் உடம்பெங்கும் முள்” நான் புதரை நோக்கிசென்றேன். துடலிமுள் அடர்ந்த குட்டையான புதருக்குள் துரையின் தொப்பி கிடந்தது. அதை எடுக்கச்சென்றபோது என் மூக்கு அதிர்ந்தது. கையை பின்னுக்கு இழுத்துக்கொண்டு துரையை நோக்கி திரும்பினேன்.
துரை யானைமீதிருந்து எழுந்து கையை ஆட்டி ஏதோ சொல்ல முயன்றான். துப்பாக்கி நழுவி கீழே விழுந்தது. அவன் வாய் இழுத்துக்கொண்டது. அவன் கழுத்து அறுபட்ட கோழி போல நடந்து, சில அடி தூரம் முன்னால் வந்து, குப்புற விழுந்தான். நான் அவனை நோக்கி ஓடி அவன் சப்பாத்துகளை உருவி எடுத்தேன். அவன் சப்பாத்துக்கு சற்றுமேல் கண்ணாடிவிரியனின் கடித்தடம் இருந்தது.
நான் இடையில் வைத்திருந்த ஈட்டி நுனியால் அந்த இடத்தை கிழித்தேன். பிளந்து ரத்தம் கொட்டிய காயத்தை அழுத்திப்பிழிந்தபின்னர் காட்டுக்குள் ஓடினேன். இலைகளுக்குள் முழந்தாளிட்டு துழாவியபடி வெறியுடன் அலைந்தேன். கைநீலி செடியைக் கண்டுபிடித்ததுமே கைநிறைய இலைகளைப் பறித்துக்கொண்டு வேகமாக ஓடிவந்தேன். அந்த இலைகளில் ஒரு தளிரை வாயிலிட்டு பார்த்தேன். என் குடல்கள் வரை கடும் கசப்பு பரவி உடல் அதிர்ந்தது.
பச்சிலையைக் கசக்கி வெட்டுக்காயத்தில் சாற்றைச் சொட்டினேன். பலா இலையைக் கோட்டி அதில் பச்சிலையைச் சாறு பிழிந்தேன் கிட்டித்துவிட்டிருந்த துரையின் வாயை ஈட்டி நுனியால் நெம்பித்திறந்து உள்ளே சாற்றை செலுத்தி வாயில் வாய் வைத்து ஊதி உள்ளே புகுத்தினேன். கண்களிலும் மூக்கிலும் காதுகளிலும் பச்சிலைச்சாற்றை செலுத்தியபின் துரையை திருப்பிப்போட்டு எஞ்சிய சக்கையை அவன் குதத்துக்குள் செருகினேன்.
துரையின் ரத்தம் கெட்டிப்படாமலிருக்க அவன் கைகால்களை மடக்கி நீட்டியபடி இருந்தேன். கைகால்கள் இறுகியபடியே வந்தன. பின்னர்மெல்ல அவை இலகுவாயின. துரையின் மூக்கு வழியாக கொஞ்சம் கரிய ரத்தம் வந்தது. வெட்டுக்காயத்தில் வழிந்த ரத்தம் கரிய பசையாகவும் தெளிந்த நீராகவும் பிரிந்து வெட்டுக்காயம் மாங்காய் பிளந்தது போல வெளிறி தெரிந்தது. மீண்டும் பச்சிலை கொண்டுவந்து துரைக்குக் கொடுத்தேன்.
மெல்ல துரையின் இமைகளில் அசைவை உணர்ந்தேன். அது பிரமையா என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. ஆனால் இமை மெல்ல மெல்ல துடித்து பிளவு விட்டு வெண் விழிகாட்டி பின்பு திறந்துகொண்டது. ”தண்ணீர்…தண்ணீருக்குள்…ஆழம்”என்றார் துரை. அவன் பார்வை தண்ணீருக்குள் இருப்பது போல அலையடிக்கிறது என்று தெரிந்து கொண்டேன். மீண்டும் கண்களில் இரு சொட்டு பச்சிலையை விட்டேன். துரை ”கப்பலில்…ஒரு ஸீகல்..கப்பல்…ஆனால் நீ என்னை…”என்றான். அவன் உதடுகள் துடித்துக்கொண்டே இருந்தன ”நான் வந்துவிடுவேன்…பெரியம்மை ஜீஸஸ்”என்று உளறிக்கொண்டிருந்தான்
சட்டென்று தீபட்டவன்போல துடித்தெழுந்து தன் துப்பாக்கிக்காக கை நீட்டினான். நான் துப்பாக்கிகளை ஏற்கனவே எடுத்து அகற்றியிருந்தேன். அவன் என்னிடம் ”நான் உன்னைக் கொல்வேன் ஊமைச்செந்நாயே…”என்றான். வரண்ட வாயில் நான் மீண்டும் சாற்றை பிழிந்தேன் ”… இது மிகவும் தித்திப்பானது”என்று நக்கினான்.கண்களை மூடிக்கொண்டான்.
இரு சடலங்கள் போல யானையும் துரையும் மண்ணில் கிடந்தார்கள். யானையின் ரணத்தில் சிறிய பூச்சிகள் வர ஆரம்பித்து விட்டிருந்தன. நான் பெட்டியில் இருந்து துணியை எடுத்து யானை ரத்தத்தில் தோய்த்தபின் சிறிய கிழிசல்களாக ஆக்கிக்கொண்டேன்.
துரை மீண்டும் கண்விழிந்த்தபோது சோர்வாகவும் தெளிவாகவும் இருந்தான். மெல்லிய குரலில் ”எந்த இடம்?”என்றான். ”காடு”என்றேன். அவன் கையை ஊன்றி எழுந்து கொண்டான். தலை சுழன்றதனால் மீண்டும் படுத்தான் ”எனக்கு மிகவும் தாகமாக இருக்கிறது…” என்றான். நான் அவனுக்கு பச்சிலைச்சறு பிழிந்து சேர்த்த தண்ணீர் கொடுத்தேன்.”இனிக்கிறதா?”என்றேன்.
”கொஞ்சம்…” என்றான். ”இன்னும் விஷம் போகவில்லை…” என்றேன். துரை ”என் தலை சுழல்கிறது”என்றான் ”உங்கள் ரத்தத்தில் பாதி நீராக மாறிவிட்டது…இனி நீங்கள் நன்றாக ஆவதற்கு ஒரு வருடம்கூட ஆகும்…” என்றேன்
துரை முழுபலத்தாலும் எழுந்து அமர்ந்துவிட்டான். ”இங்கே இருக்கமுடியாது…இன்னும் சற்று நேரத்தில் செந்நாய்களும் நரிகளும் வந்துவிடும்” நான் ”ஆம்”என்றேன். ”என்னைப் பிடித்துக்கொண்டு மெல்ல நடந்தால் போய்விடலாம்…”
”கிளம்புவோம்”’என்றான் துரை. பெட்டியை நான் சுமக்க முடியாது என்பதனால் அதை நன்றாக மூடி தூக்கி ஒரு மரத்தடியில் வைத்தேன். துரைக்கு ஒரு கம்பு வெட்டி ஊன்றிக்கொள்ளக் கொடுத்துவிட்டு யானைத்துப்பாக்கியை எடுத்துக்கொண்டு நடந்தேன். துரை ஒரு கையை என் தோளில் வைத்து மறுகையில் குச்சி ஊன்றி மெல்ல நடந்தான்
”நாம் அதிக தூரம் வந்துவிடவில்லை, நல்ல வேளை…”என்றேன். யானை ரத்தம் தோய்ந்த கிழிசல்துணிகளை செடிகளில் கட்டியபடி நடந்தேன். சிலநாட்களுக்குப் பின்னர் ஒரு வேட்டைநாய் துணையுடன் வேலையாட்களுடன் வந்து தந்தங்களை எடுத்துக் கொண்டு போகலாம்.அழுகிய சதையில் இருந்து தந்தங்களை வெட்டிஎடுப்பது எளிது. யானையின் உடலில் சிறு பகுதிதான் அப்போது மிஞ்சியிருக்கும்.

இரவாகும் வரை நாங்கள் நடந்தோம். துரை ஒன்றும் பேசாமல் உரக்க மூச்சுவிட்டபடி, அவ்வப்போது ”ஜீஸஸ்!”என்று குரலெழுப்பி அழுதபடி, என் தோளில் எடையை அளித்து தள்ளாடி வந்தான். நான்கு இடங்களில் அமர்ந்து ஓய்வெடுத்துக்கொண்டு எஞ்சிய மதுவைக்குடித்தான். இரவு ரீங்காரத்துடன் வானில் இருந்து பொழிந்து காட்டை மூடியது. துரைக்கு நான் மீண்டும் மீண்டும் பச்சிலைச் சாற்றைக் கொடுத்தேன். அதன் இனிப்பு குறைந்து வந்தது. கசப்பு தெரிய ஒரு வாரம்கூட ஆகும்.
”நாம் ஏதாவது மரத்தின்மேல் ஏறிக்கொள்ளலாம்”என்றேன்.துரை ”என்னால் மரமேற முடியாது…பாறை மீது தங்குவோம்”என்றான். ”இன்றிரவு இங்கே நிறைய செந்நாய்களும் நரிகளும் திரண்டு வரும்..”என்றேன். ஒரு யானையின் சடலம் அவற்றுக்கு பலநாள் உணவாகும். துரை பெருமூச்சு விட்டான்.
நான் அவனை அமரசெய்துவிட்டு மரத்தில் ஏறி கொடிகளை வெட்டி கயிறாக்கி தொங்கவிட்டேன். அவன் பலத்த முனகல்களுடன் மெல்லமெல்ல ஏறிவந்தான். அவனை என் பலத்தால் தூக்கி மரக்கிளையில் அமரச்செய்தேன். அதன்பின் காட்டுகொடிகளால் அவனை கிளைகளுடன் சேர்த்துக் கட்டினேன். ”நீங்கள் தூங்கினாலும் பிரச்சினை இல்லை. நான் விழித்திருப்பேன்”என்றேன்.
துரை மெல்ல ”ஜீஸஸ்”என்றான். நான் இன்னொரு கிளையில் அமர்ந்து என் தோளை அடிமரத்தில் சாய்த்துக்கொண்டேன். காட்டுக்குள் பன்றிக்கூட்டம் ஒன்று செல்லும் உறுமல்தொகைகள் கேட்டன. சில்வண்டுகளின் ரீங்காரத்துடன் காற்று செல்லும் ஓசையும் இணைந்துகொண்டது. நான் காட்டுக்கு மேல் இலைக்கூரைக்கு அப்பால் கரியவானில் மின்னியபடி விரிந்திருக்கும் நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டேன். துரை தூங்கிவிட்டானா என்று தெரியவில்லை.
துரை அசையும் ஒலி கேட்டு நான் ”ம்?”என்றேன். துரை ”ஊமைச்செந்நாயே”என்றான் ”நீ என்னை ஏன் காப்பாற்றினாய்?” நான் இருட்டுக்குள் பேசாமல் இருந்தேன். ” நீ என்னை விட்டுவிட்டு போயிருக்கலாமே” நான் ஒன்றும் சொல்லவில்லை.
துரை சற்றுநேரம் பேசவில்லை. பின்பு ”என்னைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய்?”என்றான். நான் அதற்கும் பதில் சொல்லவில்லை ”சொல்” நான் மெல்ல கனைத்ததுடன் சரி. ”நீ சொல்ல மாட்டாய் எனத் தெரியும்”என்றான் துரை. ”ஆனால் நீ ஒன்று தெரிந்துகொள்ளவேண்டுமென நான் விரும்புகிறேன்…நான் கெட்டவன் அல்ல. ஆணவம் பிடித்தவனாக இருக்கலாம் . இனவெறியனாக இருக்கலாம். ஆனால் நான் உள்ளூர கெட்டவன் அல்ல…”
அவன் நான் ஏதேனும் சொல்லக்கூடுமென எதிர்பார்த்தான். பின்னர் தொடர்ந்தான் ” ஊமைச்செந்நாயே, நாடுவிட்டு இந்த வெப்பநாட்டுக்கு வந்திருக்கும் நானும் என்னைப்போன்றவர்களும் எங்கள் சமூகத்தில் உன்னைப்போலவே கடைப்பட்டவர்கள். எங்களை எவரும் மனிதர்களாக மதிப்பதில்லை. ஒரு நல்ல குடும்பத்துப்பெண் எங்களை ஏறிட்டும் பார்க்கமாட்டாள். ஒரு சாதாரண விருந்தில்கூட நாங்கள் கலந்துகொள்ள முடியாது. எங்கள் கழுத்துக்குட்டைகளையும் காலுறைகளையும் தொப்பிகளையும் பார்த்து அவர்கள் சிரிப்பார்கள். அவர்கள் சிரிக்கும்தோறும் நாங்கள் மேலும் கோமாளிகள் ஆவோம்….நாங்கள் எங்கள் சமூகத்தில் உள்ள புழுப்பூச்சிகள் தெரியுமா?”
பேச ஆரம்பித்ததும் அவனுக்கு பேச்சு வந்தது ”எல்லாவற்றையும் உதறிவிட்டு இந்த வெயில் காடுகளுக்குள் வந்து பதுங்கிக்கொள்கிறோம். எங்களை வெறுப்பவர்களை நாங்கள் வெறுக்க முடியாது. அவர்கள் எங்கள் எஜமானர்கள். ஆகவே உங்களை வெறுக்கிறோம். சாட்டையால் அடிக்கிறோம். அவமானபப்டுத்துகிறோம். நீயே பார்த்திருப்பாய், அடிமைகள் அனைவருமே நாய் வைத்திருப்பார்கள்.”
நெடுநேரம் இருவர் நடுவே இருள் மட்டும் இருந்தது. பின்பு துரை ”நீ அசாதாரணமான மனிதன். என்னைவிட நீ எத்தனையோ பெரியவன். நான் சாதாரணமானவன்…ஆனால் நான் உனக்கு ஏதாவது தரவேண்டும்…பதிலுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும். உனக்கு என்ன வேண்டும்?” அவன் என்னை நோக்கி கை நீட்டி என் முழங்காலை தொட்டான். அவன் கை சூடாக நடுங்கிக்கொண்டிருந்தது ”சொல்…உனக்கு நான் என்ன செய்ய வேண்டும்?”
நான் ஒன்றும் சொல்லாமலேயே இருந்தேன் .என் முழங்காலைப் பிடித்து அவன் உலுக்கினான் ”சொல்…நிறைய பணம் தருகிறேன்.கீழே கிராமத்துக்குப் போய் ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டு நிலம் வாங்கி வீடுகட்டி விவசாயம்செய்…” அவன் மேலும் உலுக்கினான் ”சொல் என்ன வேண்டும் உனக்கு? அந்த சோதியை திருமணம் செய்துகொள்கிறாயா? அவளை கட்டாயப்படுத்தி உன்னை மணக்கச் செய்கிறேன்…”
நான் பேசாமலிருந்ததும் அவன் வெறிகொண்டான் ”சொல், முட்டாளே, சொல்…ஊமைச்செந்நாயே…உனக்கு நான் என்ன செய்ய வேண்டும்? சொல். வாயைத்திறந்து சொல்…ஏன் பேசாமலிருக்கிறாய்?”
நான் மெல்ல ”ஏனென்றால் நான் ஒரு ஊமைச்செந்நாய்’என்றேன். அவன் தளர்ந்து மெல்ல சாய்ந்துகொண்டான். ”நான் உன்னிடம் சொல்வதெல்லாம் இவ்வளவுதான். நீ என் நண்பன். என் சகோதரன். என் வாழ்நாளெல்லாம் நான் உன்னை நினைத்திருப்பேன்…ஒருநாளும் உன் நினைவை நான் இழக்க மாட்டேன்” அவன் குரல் தழுதழுத்திருந்தது.
அதன்பின் அவன் பேசவில்லை. ஆனால் அவன் இரவெல்லாம் தூங்கவில்லை. பெருமூச்சு விட்டபடியும் நெளிந்தபடியும்தான் இருந்தான். இருமுறை தண்ணீர் கேட்டான். விடியற்காலையில் அவன் சற்று தூங்கிவிட்டிருந்தான்.
தலைக்குமேல் பறவைகளின் ஒலி கேட்டபோது நான் எழுந்து அவனை எழுப்பி அவன் கட்டுகளை அவிழ்த்தேன். அவன் முகம் தெளிவாக இருந்தது. அது தூங்கியதனால் இருக்கலாம். அல்லது இரவு அவன் பேசியதனாலும் இருக்கலாம். என்னிடம் ”இன்று நானே நடப்பேன் என்று நினைக்கிறேன்”என்றான். நான் புன்னகைசெய்தேன்.
காட்டுக்குள் இறங்கி இருவரும் சென்றோம். அவன் சற்று திடமாகவே நடந்தான். ஏற்றங்களில் மட்டும் நான் சற்று பிடிக்க வேண்டியிருந்தது. மலைப்பாதை பெரிய குன்றின் விலாவில் வளைந்து சென்றது. கீழே மிக ஆழத்தில் பாம்புச்சட்டை போல ஆறு ஓடும் பள்ளம் தெரிந்தது. ”அது காரோடையா?” என்றான். நான் ஆம் என தலையசைத்தேன்.
அவனை மரத்தடியில் நிறுத்திவிட்டு நான் காட்டுக்குள் சென்றேன். பாதையோரத்தில் சிறிய பாறை ஒன்றின் இடுக்கில் ஊற்று கசிந்து அப்பால் பள்ளம் இறங்குவதைக் கண்டேன். நீரை அள்ளிச்செல்ல ஒரு கமுகுப்பாளை எடுத்து கோட்டிக்கொண்டிருந்தபோது சீறல் ஒலியைக் கேட்டேன். என் முன்னால் மாங்கொட்டை நிறத்து உடலுடன் ஒரு செந்நாய் நின்றது. அதன் பழுப்புக்கண்களை பார்த்துக்கொண்டே நான் காலை தூக்கி பின்னால் வைத்தேன்.
புதர்களுக்குள் மெல்லிய அசைவுகளாக நான் செந்நாய்களைக் கண்டேன் எந்த திசை நோக்கி விலகுவது என நான் கண்களை மட்டும் திருப்பி பார்ப்பதற்குள் செந்நாய் ஒன்று என் விலாப்பக்கமிருந்து என்னைத்தாக்கியது. யானைரத்தம் தோய்ந்த துணி அங்கே இருந்தது. அதை முகர்ந்து பின்னால் வந்த கூட்டம் அது. நான் என் இடுப்புத்துணியை உருவிவிட்டுக்கொண்டு பாய்ந்து அந்தப்பாறையில் ஏறினேன். என் அலறல் கேட்டு துரை திரும்பிப்பார்த்து ”ஜீஸஸ்!” என்றபடி தன் கைத்துப்பாக்கியை உருவி இருமுறை சுட்டான்.
காடே ஒலியில் அதிர செந்நாய்கள் வால் சுழற்றி எம்பிப்பாய்ந்து புதர்களுக்குள் விலகி ஓட துரை என்னை நோக்கி வருவதைப்பார்த்திருந்தபோது காட்சி சற்றே ஆடுவதை உணர்ந்தேன். அதைப்புரிந்துகொள்ளும் சில கணங்களுக்குள் நான் நின்றிருந்த சிறிய பாறை மண்ணுடன் பெயர்ந்து சரிவில் இறங்கியது.
நான் அதிலிருந்து குதித்து ஒரு தவிட்டைச்செடியைப்பற்றினேன். பாறை பெயர்ந்து உருண்டு வேகம் கொண்டு தம்ம்ம் என்ற ஒலியுடன் ஆழத்துக்காட்டை அடைந்தது. தவிட்டைச்செடி என் எடையை தாங்காமல் பிடுங்கப்பட்டு வந்தது. நான் பல்வேறுசெடிகளைப்பிடிக்க முயன்று ஈரமண்ணில் வழுக்கி வழுக்கி கீழிறங்கி செங்குத்தான சரிவின் விளிம்பில் நின்ற ஒரு வேரைப்பற்றிக்கொண்டு தொங்கினேன். மண்ணில் ஊன்ற முயன்று வழுக்கிய என் கால்களுக்குக் கீழே ஆழத்தை பார்க்காமலேயே உணர்ந்தேன்.
துரை ஓடிவந்து மேலே குப்புறப்படுத்துக்கொண்டு ”பயபப்டாதே …பயபப்டாதே…ஒரு நிமிடம்.. ”என்று கூவினான். தன் இடுப்பில் இருந்து பெல்ட்டை உருவி அதன் ஒரு நுனியை தன் கையில் சுற்றிப்பிடித்துக்கொண்டு அதை நீட்டினான்.
பெல்ட் என் முகத்தருகே வந்தது. என் வலக்கையை நீட்டி அதைப் பிடித்தபடி மேலே பார்த்தேன் ”’பிடித்துக்கொள்…நான் இழுக்கிறேன்’என்று அவன் கூவினான்.
நான் ”நரகத்துக்குப் போ!” என்று அவன் கண்களைப் பார்த்துச் சொல்லி காறித் துப்பிவிட்டு என் பிடிகளை விட்டேன். அடியாழத்தில் விரிந்திருந்த பசுமையான காடு பொங்கி என்னை நோக்கி வர ஆரம்பித்தது”
.


இக்கதையை படித்து வெகு நேரம் பிரமிப்புடன் அமர்ந்திருந்தேன். அதுவும் கடைசியில் வில்சன் தன்னைப் பற்றி கூறிய விவரங்கள் என் எண்ண அலைகளை மீட்டின. அவன் சொன்னது உண்மைதான்.

அதாவது அவனது சொந்த நாட்டில் அவனைப் போன்றவர்களை எவரும் மனிதர்களாக மதிப்பதில்லை. ஒரு நல்ல குடும்பத்துப் பெண் இவர்களை ஏறிட்டும் பார்க்கமாட்டாள். ஒரு சாதாரண விருந்தில்கூட இவர்கள் கலந்துகொள்ள முடியாது. இவர்கள் கழுத்துக்குட்டைகளையும் காலுறைகளையும் தொப்பிகளையும் பார்த்து அவர்கள் சிரிப்பார்கள். அவர்கள் சிரிக்கும்தோறும் இவர்கள் மேலும் கோமாளிகள் ஆவார்கள். இவர்கள் தங்களூர் சமூகத்தில் உள்ள புழுப்பூச்சிகள்.

இது ஆங்கிலேயருக்கும் மட்டும் பொருந்தும் என எண்ணக்கூடாது. காலனி ஆதிக்க நாடுகளாக இருந்த பிரான்ஸ், போர்த்துகல், ஸ்பெயின் போன்ற நாடுகளிலும் இதுதான் அப்போதைய நிலை. பிரெஞ்சு மொழியில் இவர்களுக்கு Pieds noirs என்று பெயர். அவர்கள் பற்றி இங்கு நான் படித்தது.

“Believe it or not, but the Pieds Noirs didn't feel welcome in France and many were resented too. Mainlanders accused them of the ill-treatment of Arabs that brought up the Algerian rebellion for independence.
Many mainlanders had lost sons or relatives conscripts in the army during the independance war, while the Pieds Noirs didn't have to serve in Algeria.
During the resettlement, many Pieds Noirs received dwellings from housing authorities and were accused of 'jumping the housing queue', same for places at school.
In the civil service, Pieds Noirs were accused of cronism and to favour their own for promotion.
But for the Pieds Noirs, it was a very dark period too. Many had never seen France and found the country cold, unhospitable and alien to them.
Many Pieds Noirs had copied Arab way of life, spoke French with a sort of Arabic accent and the arrival in mainalnd was a real culture shock. Also, they were always cold!!!
Another thing, the Pieds Noirs who used to occupy the higher echelons of society in Algeria, found it hard to have to work at the same level as many North African immigrants France had invired after WWII.
It was not a very happy time in France then, for anybody”.


இந்த நிலைமை இங்கு இன்னும் வேறு நிலைகளில் தொடர்வதுதான் நமது சோகம். இந்த மாதிரியான நம்மவரின் அடிமை புத்தியைப் பற்றி நான் எழுதிய பதிவு ஒன்றிலிருந்து:

“பிரெஞ்சு அல்லது ஜெர்மன் பேசும் தொழில் நுட்ப வல்லுனர்கள் வரும் போது அவர்களுக்கு துபாஷியாக என்னைக் கூப்பிடுகிறார்கள். வந்தவர் அவருடைய நிறுவனத்தில் அடி மட்டத்தில் இருப்பார். ஆனால் அவருக்கு இங்கு அளிக்கப்படும் உபசாரங்கள்! வெள்ளைத் தோல் அல்லவா? ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்குக் குறைந்து அவருக்கு ரூம் போட மாட்டர்கள். இந்திய நிறுவனத்தின் தலைமை நிர்வாகியே அவரை வரவேற்று அவருடன் குழைவார். எனக்கு சிரிப்புத்தான் வரும்.

நானும் சும்மா இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். என்னுடைய தொழில் நுட்பப் பின்னணி எனக்கு நல்ல பலத்தைக் கொடுத்தது. வந்தவருக்கு நான் எந்த வகையிலும் குறைந்தவன் இல்லை என்பதை உறுதியாக முதலிலேயே தெரியப் படுத்தி விடுவேன். வெளியூர்கள் சென்று அங்கு சில நாட்கள் தங்கும் நிலை வந்தால் நானும் வந்தவரின் அறைக்கு அடுத்த, அதே வசதிகளுடன் கூடிய அறையில்தான் தங்குவேன். இதைப் பற்றிப் பேசிய ஒரு வாடிக்கையாளருக்கு நான் இவ்வாறு நடந்துக் கொள்வதன் காரணத்தையும் கூறினேன். அவரும் என் கூற்றில் இருந்த நியாயத்தை ஒத்துக் கொண்டார்.

எர் இந்தியாவில் பயணம் செய்த என் நண்பன் அனுபவத்தை இப்போது குறிப்பிடுகிறேன். விமானப் பணியாளர்கள் வெள்ளைக்காரப் பயணிகளிடம் இளித்துக் கொண்டுப் பேசுவார்கள். இந்தியர்களை அலட்சியப் படுத்துவார்கள். ஏன் என்றுக் கேட்டால் அதுதான் நம் விருந்தோம்பல் என்றுக் கதை விடுவார்கள். புடலங்காய். வெளி நாட்டு விமான நிறுவனங்களிலும் இந்தியர்கள் என்றால் ஒரு அலட்சியம்.

அமெரிக்கத் தூதரகங்கள் வாசலில் தெருவில் நம்மவர்களைக் காக்க வைப்பார்கள். நாமும் வெட்கம் கெட்டு நிற்கிறோம். சென்னை ஜிம்கானாவில் இன்னும் தமிழ் நாட்டு வேட்டி சட்டைக்கு அனுமதியில்லை. நம் தமிழ் ஊடகங்களிலோ செய்திகள் வாசிப்பவர்கள் ஒரு முப்பது ரூபாய் கோட்டாவது (நன்றி சத்யராஜ்) போட்டுக் கொண்டுதான் வர வேண்டியிருக்கிறது. தமிழ்த் தலைவர்களில் ஜீன்ஸ்/கோட்டு சூட் போட்டுக் கொண்டு வரும் கோமாளிகளைப் பார்த்து அலுத்து விட்டது. பழைய தமிழ்ப் படங்களில் மேனேஜர் என்பவர் படபடக்கும் வெய்யிலிலும் சூட்டு, கோட்டு டை எல்லாம் கட்டிக் கொண்டுதான் காட்சி தருவார்கள். அதைப் பார்க்கும் எனக்கே வியர்த்து விறுவிறுக்கும். அவர்கள் எப்படித்தான் போட்டு கொள்கிறார்களோ. கேட்டால் அதுதான் அவர்களது தன்னம்பிக்கையை வளர்க்கிறதாம். புடலங்காய்”.


இங்கிலாந்திலோ பிரான்சிலோ ஊர்சுற்றி கொண்டிருந்த தத்தாரிப் பிள்ளைகளை நம்மூருக்கு கலெக்டராகவும் மாஜிஸ்ட்ரேட்டுகளாகவும் பதவி அளித்து அனுப்பியிருக்கிறார்கள். அது தெரியாத நம்மவர் அவன்களுக்கு சலாம் போட்டிருந்திருக்கிறார்கள். ராபர்ட் க்ளைவ் என்பவன் தன்னம்பிக்கை இன்றி வந்த புதிதில்` பல முறை தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறக்க முயற்சி செய்தவன். அவனுக்கு கிரீடம் அளித்து அவன் சேவை செய்தவர்கள் நம்மவர்கள். வெட்கக்கேடு. இன்னமும் இது நடப்பதுதான் பெரிய நகைமுரண்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

9 comments:

Anonymous said...

அய்யா,

கதையை நீங்கள் முழுதாகவே போட்டிருக்கலாம். :)
இராபர்ட் க்ளைவை இங்கே நிறைய பேர் கதாநாயகனாக கொண்டாடி கொண்டிருக்கிறார்கள். சாண்டில்யன் கூட தன் வரலாற்று புதினத்தில் அவ்வாறே எழுதியிருப்பார். ராஜ பேரிகை என்று நினைக்கிறேன்.
இராபர்ட் க்ளைவ் எவ்வாறு இங்கிலாந்துக்கு திருப்பி அனுப்பப்பட்டார் என யாருமே தெரிந்துக் கொள்ள அக்கறை காட்டவில்லை.
நானும் பிரமித்து போன நெடுங்கதை தான் ஊமை செந்நாய். உயிர்மை இதழில் நீங்கள் வாசித்திருக்க வேண்டும். சில அருமையான படங்களுடன் வெளிவந்தது.

dondu(#11168674346665545885) said...

அதுதான் சொன்னேனே word கோப்பில் 29 பக்கங்களுக்கு வருகிறது. அதைப் போடுவது இன்னொரு முறையிலும் தவறு. ஜெயமோகன் கதையை முழுக்க அவர் பதிவில் படிப்பதுதான் சரி.

ராபர்ட் க்ளைவ் இங்கிலாந்து திரும்பியதும் தற்கொலை செய்து கொண்டான். இம்முறை வெற்றி பெற்றான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//....இங்கிலாந்திலோ பிரான்சிலோ ஊர்சுற்றி கொண்டிருந்த தத்தாரிப் பிள்ளைகளை நம்மூருக்கு கலெக்டராகவும் மாஜிஸ்ட்ரேட்டுகளாகவும் பதவி அளித்து அனுப்பியிருக்கிறார்கள். அது தெரியாத நம்மவர் அவன்களுக்கு சலாம் போட்டிருந்திருக்கிறார்கள்....//

ராபர்ட் க்ளைவ் உருப்படாமல் ஊர்சுற்றிக்கொண்டிருந்ததால் அவனை கீழாக பார்த்தார்கள் என்று அர்த்தம் புரிந்துகொண்டிருந்தால் அது தப்பு.

காலனியாதிக்கத்தின் ஆரம்ப காலங்கள் வரை மேலை நாடுகளில் சாதி பிரிவினைகளும், தீண்டாமையும் தலைவிரித்தாடியது. ராபர்ட் க்ளைவ் போன்றவர்கள் தாழ்ந்த சாதிக்காரர்கள். தமிழ்நாட்டில் வந்து வேலைபார்த்த கால்ட்வெல் போன்றவர்கள் மிகப்பெரிய அடிமை சாம்ராஜ்ஜியத்தை நடத்திவந்தார்கள். அவருடைய எஸ்டேட்டில் உடம்பில் சூட்டுக்கோலால் முத்திரைபெற்றுக்கொண்டு அடிமை வேலை பார்த்த வெள்ளையர்கள் எண்ணிக்கை, கறுப்பர்கள் கிடைக்கும்வரை அதிகம்.

காலனியாதிக்கம் ஏற்பட்ட பின்னர், அடிமைப்படுத்த ஆட்கள் கிடைத்ததால் ஆண்ட நாடுகளில் சாதிவெறி அழிந்தது. ஆளப்பட்ட நாடுகளில் சாதிவெறி தழைத்தது.

இதுகுறித்து மேலும் தகவல்கள் அறிய Defiled Trades and Social Outcasts by Stuart, Kathy படிக்கவும்.

கூகிளில் இது கிடைக்கிறது: http://books.google.co.in/books?id=zBxL1XTdEb4C&pg=PA218&lpg=PA218&dq=defiled+trade&source=web&ots=uIqvX5cokP&sig=1wfiAVcGyqpaFdz0knB87h4r_fg&hl=en&sa=X&oi=book_result&resnum=3&ct=result#PPA218,M1

Anonymous said...

On Bharathi's 'Panchali Sabatham', there is a opinion that it had hidden meanings everywhere. Draupadi in Bharathi's work is Bharat Mata. Bheeman uses very harsh language for his elder Yudhishtrar - எரி தழல் கொண்டு வா.. கையை எரித்திடுவோம். Bharathi had mappings for his characters in mind but hid them in the Mahabharat story.

I think jayamohan has mappings in his mind for the characters from this story, in today's India. The elephant, the woman, the foreigner, servant Thoma, and the red-dog all might have mappings in present happenings. Jayamohan does not say why the red-dog made that choice in the end. Can you think along those lines? Getting into the writers' mind would be more rewarding.

There is another aspect - the sadistic foreigner and his domestic servant Thoma invoke aspects of their religion - God, symbol - at different places. In India and particularly Tamil nadu, we are used to symbols of only the majority religion invoked liberally in 'evil' contexts - Kamal's Anbe Sivam comes to mind. what are the chances a leading Tamil magazine will carry this story without editing this imagery out?

Why do you think Jayamohan slipped in the voyeurism that the servants indulge in, during the foreigners act of assault on the woman? Does he want the readers to feel like they are also part of the voyeurism, and are voyeurs, in a different context that he has in mind?

do you know when jayamohan wrote this story?

pt said...

1.அமெரிக்காவின் புதிய அதிபர் ஒபாமாவுக்கு ஜாதகப் படி 1-03-2009-to 12/2010 வரை சிக்கலாமே?

2.அமெரிகாவில் துப்பாக்கி வியாபாரம் படு சூடாய் இருக்காமே? இன மோதலுக்குக்கான அறிகுறியா?

3.பிரபல கேரள ஜோதிடர் கணிப்புப்படி , அத்வானிக்கு கிரக நிலை சரியில்லையாம்,காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்குமாம்-கிரகங்கள் தான் எதிர்காலத்தை முடிவு செய்கின்றன நம்புகிறிர்களா?

4.சட்டக் கல்லுரி மோதலில் தங்கள் சொல்லிய வகுப்பினருக்கு தொடர்பில்லை என்பது உண்மையா?

5.வழக்கம் போல் இதுவும் மக்களின் கவனத்தை திசை திருப்பும் செயலா?

வன்பாக்கம் விஜயராகவன் said...

ஜயமோகன் தன் மொத்த இலக்கிய திறனையும் செந்நாயில் உபயோகித்துள்ளார். தீம் படி பெரிய குறை என்னவென்றால் அது தற்கால மனப்பான்மைகளையும் செயல்களையும் ஆதாரமாக கொள்ளவில்லை. இந்தியாவில் தன்னிச்சையாக வேட்டையாடிய துறைமார்களும், அவர்கள் வேலைக்காரர்களும் போய் 60, 70 வருடங்கள் போய்விட்டன. அப்போது ஜயமோகன் பிறந்திருக்க மாட்டார். தற்கால இன மனப்பான்மைகளை நன்றாக பிரதிபலிக்கும் கதையை எதிர்பார்க்கிறேன்.

Anonymous said...

இது கேள்வி-பதிலுக்கு. எமர்ஜென்சி வருமா?

Unknown said...

1.சென்னையில் நடிகர் விஜய் தாய் தந்தையருடன் உண்ணாவிரதம்.அடுத்த நடிகர் அரசியலுக்கா?அதற்க்கான வெள்ளொட்டாமா?
2.நடிகர் ரஜினிக்கு எம்.பி பதவி கொடுத்து அரசியலுக்கு இழுக்கும் முயற்சிகள் தொடங்கிவிட்டன பார்த்தீர்களா?
3.இங்கே இவ்வளவு பரபரப்பில் -நடிகர் விஜய்காந்த் அமராவாதி அணையில் மரியாதை செய்ய?
4.இலங்கையில் போர் இறுதிக்கட்டம் எனும் செய்தி உண்மையா?
5.சீனா மீண்டும் அருண்சாலப்பிரதேசப் பகுதியை சொந்தம் கொண்டாட முயலுகிறதே?
6.மீண்டும் பா.ம.க -தி.மு.க வின் அணியில் அதனால் சட்டக்கல்லூரி மாணவர் மோதலில் அமைதி காக்கிறாதா?
7.ஹெல்மெல்ட் கட்டாயச் சட்டம் அமுல்படுத்தப் படுகிறதா?
8.புகை புடிக்கும் தடைச் சட்டம் எந்த நிலயில் உள்ளது?
9.பணவீக்கம் குறைந்தாய் அரசின் அறிக்கை கூறுகிறது ஆனால் விலைவாசிகள் உச்சத்தில்.இது என்ன கணக்கு?
10.மின்வெட்டு->இலங்கைத் தமிழர்->மாணவர் மோதல்-> அடுத்து?

Anonymous said...

Hi! வன்பாக்கம் விஜயராகவன்

"இந்தியாவில் தன்னிச்சையாக வேட்டையாடிய துறைமார்களும், அவர்கள் வேலைக்காரர்களும் போய் 60, 70 வருடங்கள் போய்விட்டன. அப்போது ஜயமோகன் பிறந்திருக்க மாட்டார். தற்கால இன மனப்பான்மைகளை நன்றாக பிரதிபலிக்கும் கதையை எதிர்பார்க்கிறேன்."


எதாவது சொல்லனும்னு சொல்லக்கூடாது. "தீம்" அதெல்லாம் இங்கே முக்கியமே இல்லை. கதையுநூடாக அடைந்த வாழ்வனுபவமே இங்கே சிறப்பாக கொள்ளலாம். நீங்கள் எதைபற்றியும் நினைக்காமல் எதன் பின்னாலும் நிற்காமல் கதையை மறுமுறை வாசித்து அனுபவிக்கவும். மிகவும் சிறப்பான கதை. மிக நேர்த்தியான படம் பார்த்த அனுபவம். ஜெயமோகனுக்கு வாழ்த்துக்கள்.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது