எபிசோட் - 20 (20.01.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
முதல் சுட்டி இன்னும் கிடைக்கவில்லை. இப்போதைக்கு டெக் சதீஷ் மட்டுமே.
நாதன் வீட்டுக்கு மீண்டும் பூஜைக்கு வருகிறார் சாம்பு சாஸ்திரிகள். அவரிடம் தான் கோபப்பட்டதற்கு மன்னிப்பு கேட்கிறாள் வசுமதி. பிறகு அவர் வீட்டிலேயே அசோக்குக்கு சாப்பாடு போட முடியாதா, பிட்சை எடுத்துத்தான் சாப்பிட வேண்டுமா என கேட்க, அவர் அசோக் அதற்கு கண்டிப்பாக ஒத்துக் கொள்ளமாட்டான் என்றும் மற்றப்படி அவனுக்கு சாப்பாடு போட தனக்கு என்ன ஆட்சேபணை இருக்க முடியும் என கேட்கிறார்.
தன்னிடம் ஒரு கோவில் நன்கொடைக்காக வரும் நீலகண்டனுடன் நாதன் பேசுகிறார். அசோக்கின் இந்த செயல்பாடுகளால் அவரது ஆத்திக நம்பிக்கை சற்றே ஆட்டம் கண்டுள்ளது புரிந்து கொள்ள முடிகிறது. வையாபுரியின் தம்பி நல்லத்தம்பிக்கு வாரிசு சான்றிதழ் கிடைக்க அவர் உதவி செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்ள நீலகண்டனும் சம்மதிக்கிறார்.
காலம் சென்ற வையாபுரியின் எல்லா சொத்துக்களும் நல்ல்த்தம்பியின் கைகளுக்கு வந்ததும் சிங்காரம் அவரிடம் அவர் முதலில் கூறியபடியே தனக்கு வந்த அந்த சொத்துக்களில் பாதி தர்மத்துக்கு போக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறான். அவ்வாறு தான் சொல்லவேயில்லை என அவர் மறுக்கிறார். அவர் நல்லத்தம்பியே இல்லை, செத்துப்போனாதாக கருதப்பட்ட வையாபுரியே என சிங்காரம் கூறுகிறான்.
இதென்ன சார் ஏதோ கூடுவிட்டு கூடு பாயும் வித்தை மாதிரி இருக்கிறதே என சோவின் நண்பர் வினவுகிறார். அவரிடம் சோ அவர்கள் இம்மாதிரி கூடு விட்டு கூடு பாயும் விஷயங்கள் பற்றி பல இடங்களில் எழுதப்பட்டதை எடுத்துக் கூறுகிறார். முக்கியமாக திருமூலர் நிகழ்த்திய சில அற்புதங்களையும் அவர் உதாரணங்களுடன் கூறுகிறார். பாம்பாட்டிச் சித்தர் என்பவர் பற்றியும் பேசுகிறார்.
ஒருமுறை, அரசன் ஒருவனை பாம்பு தீண்டிவிட, அவன் மரணித்துவிட்டான். அவனைக் கடித்த பாம்பையும் அடித்துக் கொன்று விட்டனர். அதைக் கண்ட பாம்பாட்டி சித்தர், ஓர் உபாயம் செய்தார். இறந்த பாம்பை எடுத்து, உயிருடன் இருப்பவர்கள் மேல் வீசி வேகமாக எறிய, அவர்கள் பயந்து ஓடினர். தங்களுக்கு உயிர் மேல் இருக்கும் பற்றினை அந்த நொடி வெளிக் காண்பித்தனர்.
அந்த நொடியில்…..உருமாறல் மூலம் அரசன் உடம்புக்குள் புகுந்த பாம்பாட்டி சித்தர், உயிர்த்து எழுந்து அமர்ந்தார். செத்த பாம்புக்கும் உயிர் தந்து, ‘உம் ஆடு’ என்றார்... அதுவோ உயிர் பிழைத்த ஆச்சரியத்தில் ஓடத் தொடங்கிற்று. அரசர் எப்படிப் பிழைத்தார்? அவரால் செத்த பாம்பை எப்படிப் பிழைக்க வைக்க முடிந்தது?
போன உயிர் எப்படித் திரும்பி வரும்? என்றெல்லாம் எல்லோரும் கேள்விகளில் மூழ்கிக் கிடக்க, அரசி மட்டும் சூட்சமமாக அரசரை வணங்கி, ‘‘என் கணவரை உயிர்ப்பித்து நிற்கும் யோகி யார்?’’ என்று கச்சிதமாய்க் கேட்டாள். பாம்பாட்டியாரும் அவளது தெளிவைக் கண்டு வியந்து, தான் யார் என்று உரைத்ததோடு, ‘‘அரவம் தீண்டி இறந்து போகுமளவு ஒரு கர்ம வாழ்வு இருக்கலாமா? இது எவ்வளவு நிலையற்றது... எவ்வளவு அச்சமுள்ளவர்களாக, உயிராசைமிக்கவர்களாக இருந்தால், செத்த பாம்பு மேலே விழுந்ததற்கே இந்த ஓட்டம் ஓடுவீர்கள்..!?’’ என்றெல்லாம் கேட்க, அனைவரும் சிந்திக்கத் தொடங்கினர்.
அப்படியே அரசனின் உடலில் இருந்த வண்ணமே, வாழ்வின் நிலையாமை, உடலின் தன்மை, உறவின் தன்மை, உலகமாயை, நிலையானவை எவை, நிலையற்றவை எவை என்று பல்வேறு பாடல்களைப் பாடினார். எளிய தமிழில் கருத்தைச் சொல்லி... அந்தக் கருத்தின் நிமித்தம் மகிழ்ந்து ஆடுபாம்பே... என்று அவர், தன் எதிரில் இருக்கும் பாம்புக்குச் சொல்வதுபோலவே, அகத்துக்குள் இருக்கும் பாம்புக்கும் உபதேசம் செய்தார்.
மேலும் இவர் எழுதிய பாடல்கள் புகழ் பெற்றவை. அதில் ஒன்று உடம்பை பற்றி இவர் சொல்லும் ஒருபாடல் இதோ:
" ஊத்தை குழிதனிலே மண்ணை எடுத்தே
உதிரப் புனலிலே உண்டை சேர்த்தே
வாய்த்த குயவனார் பண்ணும் பாண்டம்
வறையோட்டுக்கும் ஆகாது என்று ஆடுபாம்பே"
தன் தோழி மைதிலி வீட்டுக்கு செல்லும் வசுமதி அவளுடன் பேசிக் கொண்டிருக்க அங்கு அசோக் வந்து பிட்சை கேட்கிறான். அதைக்கண்டு திடுக்கிடும் மைதிலி அவனை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டு பிட்சை போட மறுக்கிறாள். பிறகு வசுமதி அவளைக் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவனுக்கு பிட்சை போடுகிறாள்.
(தேடுவோம்)
எபிசோட் - 21 (21.01.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
அசோக் பிட்சை எடுப்பதை நேரிலேயே பார்த்து விட்ட நிலையில் வசுமதி நாதனிடம் பொருமுகிறாள். அவள் மனதுக்கு சாந்தி தர நாதன் அவளை பல இடங்களுக்கு வருமாறு கூப்பிட அவள் மறுக்கிறாள். அங்கு வரும் நீலகண்டனும் தன் தரப்புக்கு அவளையும் நாதனையும் பாகவதர் செய்யும் கதாகாலட்சேபத்துக்கு கூப்பிட அப்போதும் அவள் மறுக்கிறாள். பிறகு நீலக்ண்டன் தன் மனைவி பர்வதத்தை போனில் அழைத்து வசுமதியுடன் பேசச்செய்கிறார். அவள் ஏதோ தான் எடுத்த புது புடவை பற்றிப் பேச, வசுமதியும் பழைய புடவை புதிய புடவை ஆகியவற்றைப் பேச ஆரம்பிக்கின்றனர்.
பாகவதர் நரசிம்மாவதாரம் பற்றி பேசுகிறார். அது பற்றி சோவின் நண்பர் கேட்க, அவரும் பாகவதர் போன்றவர்கள் டிரமாடிக்காக சில நிகழ்வுகளை கூறுவதை உதாரணங்களுடன் கூறுகிறார். நரசிம்மாவதாரத்தின் பல நுணுக்கமான விஷயங்களைக் கூறுகிறார்.
காலட்சேபத்துக்கு அசோக்கும் வந்திருக்கிறான். அவனை சாம்பு வீட்டுக்கு தான் காரில் டிராப் செய்வதாக நாதன் கூற அவன் அதை மரியாதையுடன் மறுத்து நடந்தே அவர் வீட்டுக்கு சென்றுவிடுவதாகக் கூறி விட்டு விடைபெறுகிறான்.
(தேடுவோம்)
சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
எம்.கோபாலகிருஷ்ணன் உரை
-
22 டிசம்பர் 2024 அன்று கோவையில் நிகழ்ந்த விஷ்ணுபுரம் விருது விழாவில்
எம்.கோபாலகிருஷ்ணன் ஆற்றிய உரை
7 hours ago
No comments:
Post a Comment