3/31/2011

டோண்டு பதில்கள் - 31.03.2011

pt
டோண்டுசாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-1. தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஜெயலலிதா: பெண்களுக்கு இலவச மின்விசிறி, மிக்சி, கிரைண்டர்

பதில்: தமிழக மக்கள் முட்டாள்களாக இருக்கும் வரைக்கும் இதெல்லாம் தொடரும். அதானே, அவர்கள் குஜராத்தியர் அளவுக்கு புத்திசாலிகள் இல்லைதானே.

கேள்வி-2. தேர்தல் ஆணையம் இன்னும் வேகமாக செயல்பட வேண்டும்: ஜெயலலிதா பேட்டி
பதில்: அதுதான் தேர்தல் ஆணையத்திடம் உள்ள பிரச்சினை. மோதி போன்ற ஊழலற்ற முதலமைச்சர் மாநிலத்தில்தான் எல்லா கெடுபிடிகளையும் காட்டி ஒன்றும் தவறு அவரிடம் கண்டுபிடிக்க முடியவில்லை, தான் காங்கிரஸ் பூத் ஏஜெண்டாக செயல்பட்டதுதான் மிச்சம் என அசடு வழியும்.

இல்லாவிட்டால் மற்ற அடாவடி மாநில முதலமைச்சர்கள் விஷயத்தில் அவர்கள் காங்கிரசுடன் சம்பந்தம் உடையவர்களாக வேறு இருந்து தொலைத்தால் சலாம் போட்டு சீப்படும்.

கேள்வி-3. அ.தி.மு.க. அறிக்கை எடுபடாது: கருணாநிதி
பதில்: இல்லையா பின்னே. தன்னை மாதிரியே மக்களை டுபாக்கூராக்கும் அறிக்கையை மற்றவரும் தரலாமா என்னும் கோபம் வராதா? காப்பிரைட் வைத்திருப்பவர்களுக்கு வரும் தார்மீகக் கோபமே அது.

கேள்வி-4. தமிழகத்தில் தி.மு.க. அணிக்கு ஆதரவு திரட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கூட்டுப் பிரசாரத்துக்கு வர மாட்டார்கள்
பதில்: யார் சொன்னதாம்? அதை பொருத்துத்தான் அது உண்மையா அல்லவா என்பதை பார்க்கோணும்.

கேள்வி-5. இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் பிரச்னைகளுக்கு போர் மூலம் தீர்வு காணமுடியாது என்று பாக். பிரதமர் யூசஃப் கிலானி கூறியுள்ளார்.
பதில்: உண்மைதான். போர் என்றால் ஒரு நாளைக்கே கோடிக் கணக்கில் செலவாகும். இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்குமே அது தேவையில்லாத, கட்டி வராத ஆடம்பரமே.

Arun Ambie
கேள்வி-6. பிட் அடித்த மாணவர்களை "தேர்தல் நேரம், ஓட்டுப் போய்விடும்" என்று காப்பாற்றினாராம் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. இதில் சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கிறார்களாம். இந்த கண்றாவிக்கு இலவச +2, இலவச டிகிரி என்று கொடுத்து விட்டுப் போகலாமே? Your take, Sir!

பதில்: மன்னிக்கவும் உங்கள் சுட்டியில் இப்போது வரும் செய்தி அந்தந்த தினத்தினுடையது. ஆகவே மாணவர்கள் விஷயம் அதில் இல்லை. ஆனால் நான் அதை ஏற்கனவேயே பார்த்து விட்டேன். வெட்கக்கேடு.

ரமணா
கேள்வி-7. NAMATHU VARI PANAM IPPADI POKUTHU
பதில்: தோண்டத் தோண்ட அத்து மீறல்கள்.

கேள்வி-8. 2. Ananda Vikatan survey Result in Tamilnadu elections 2011
பதில்: // எனவே அதிமுக கூட்டணி வென்று ஆட்சியைப் பிடித்தாலும் அது, ஜெயலலிதா வார்த்தைகளின்படி மைனாரிட்டி அரசாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.//
அதாகப்பட்டது ஜெயலலிதாவும் கருணாநிதி போலவே மற்ற கூட்டணிக் கட்சிகளை அரசில் சேர்க்காமல் இருந்தால் மட்டுமே இங்கு சொல்லப்படுவது சரியே.

கேள்வி-9. A word to karunanidhi?
பதில்: //உலகத்தில் தமிழகத்தைத் தவிர வேறு எங்கேயுமே சுய மரியாதைக்கு கட்சி தொடங்கியதாகவோ, தன்​மானத்துக்காக இயக்கம் தொடங்கியதாகவோ, சரித்திரம் இல்லை. ஆனால், இன்றைக்கு அவமரியாதையின் அடை​யாளமாகவும், அவமானத்தின் சின்னமாகவும் எம் மக்கள்//
பகுத்தறிவு பகலவன் என அவதூறாக அழைக்கப்படும் ஈ. வே. ராமசாமி நாயக்கரே தன் கட்சியில் உள்ளவர்களுக்கு சுயமரியாதையோ பகுத்தறிவோ இருக்கக் கூடாது என்று சொன்னவர் ஆயிற்றே. அவர் சீடர்கள் மட்டும் என்ன ஸ்பெஷல்? விரை போட்டால் சுரையா முளைக்கும்?

கேள்வி-9. ANTHARANGAM AMBALAM
பதில்: சூடாமணி விகாரத்தின் தலைமை பிக்கு யார்?

கேள்வி-10. ARE YOU GOING TO VOTE "CONGRESS" OR "DMK"
பதில்: மனதை உருக்கும் நிகழ்ச்சிகள். ஆனால் நம்மூர்க்காரர்கள் இதை தேர்தல் பிரச்சினையாகப் பார்ப்பது போலத் தோன்றவில்லையே.

கேள்வி-11. TOP 10 REASONS KARUNANITHI GOING TO LOSE
பதில்: கூடவே இவற்றையும் பார்த்து விடுங்கள். நண்பர் பழமைபேசி நன்றாகவே அலசியுள்ளார் ஒவ்வொரு சினேரியோவையும்.
அ. அதிமுக தோற்பதற்கான காரணங்கள்
ஆ. அதிமுக வெல்வதற்கான காரணங்கள்
இ. திமுக வெல்வதற்கான காரணங்கள்
ஈ. திமுக தோற்பதற்கான காரணங்கள்

கேள்வி-12. இவர்களின் தேர்தல் பிரச்சாரம் பற்றி உங்கள் கருத்து?
1. கலைஞர் 2.அம்மா 3.மருத்துவர் 4.திருமா 5.ஸ்டாலின் 6.அழகிரி 7.வடிவேலு 8.விஜயகாந்த் 9.பிரேமலதா 10.சின்னத்திரைகள்

பதில்: ஒரு படம் 1000 வார்த்தைகளுக்கு சமம். ஒரு காணொளி?
1. விஜயகாந்த் அடாவடி/உளறல்:

2. வடிவேலு:
வடிவேலுவின் பேச்சு வண்டு முருகனாக அவர் ஒரு படத்தில் பேசிய காமெடிக்கு சற்றும் குறைந்ததில்லை. வீடியோ முதல் 25 விநாடிகளுக்கு சரியாக வரவில்லை. பொறுமையாக பார்க்கவும். ஆடியோ க்ளியராக உள்ளது.


மற்றவர்கள் பற்றிச் சொல்ல கருத்து ஏதுமில்லை.

மீண்டும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/25/2011

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 25.03.2011

நான் திரும்ப பதிவு போட முனைவதில் மிக அதிகமாக மகிழ்ச்சி அடைந்தவன் முரளிமனோகர்தான். “உடனடியாக நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் பதிவு ஒன்று வேண்டும் பெரிசு எனக் கேட்டான். ஆகவே இப்பதிவு.

பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார்
சமீபத்தில் 1966-ல் காஞ்சீபுரம் பிரும்மோத்சவம் காண சின்னக்காஞ்சீபுரம் சென்றிருந்தேன். எங்கள் வீட்டுக்கார மாமா W.P.K. ஐயங்கார் என்னை தன் குடும்பத்தாருடன் சேர்த்து அழைத்துச் சென்றிருந்தார். அவரது ஷட்டகர் ஜீயப்பையங்கார் வீட்டில் சன்னிதித் தெருவில் தங்கியிருந்தோம். தான் எங்கு சென்றாலும் என்னையும் கூடவே அழைத்துச் செல்வார் அவர். எங்கள் இருவரையும் ஒருசேர பார்த்ததில் உள்ளூர்க்காரர்கள் அதிர்ச்சியடைந்ததைக் காணமுடிந்தது. இல்லையா பின்னே, தென்கலை நாமக்காரரும் வடகலை நாமக்காரரும் (அடியேன்) ஒன்றாக உலா போவது ஆச்சரியம்தானே. சாதாரண சமயங்களில் உயிர்த்தோழர்களாக இருப்பினும் பிரும்மோத்சவ சமயத்தில் மட்டும் வடகலையாரும் தென்கலையாரும் கீழே இருப்பதுபோல ஒன்றாக சேரமாட்டார்கள் என எங்கள் வீட்டுக்கார மாமா கூறியுள்ளார். பை தி வே இவ்வளவு ஆண்டுகளாக சொந்த வீட்டில் வசித்தாலும் நான் வீட்டுக்கார மாமா என குறிப்பது அவரைத்தான்.



அதை விடுங்கள். பதிவில் இனி நாமங்கள் வராது. நான் கூற வந்தது பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் அவர்கள் பற்றித்தான். திருப்பாவை பற்றிய அவரது உபன்யாசங்களை கேட்டுக் கொண்டே இருக்கலாம். நல்ல ஞானஸ்தர். அவரை அண்ணா என்றும் குறிப்பிடுவார்கள். அவர் பற்றி இன்று வெளியான துகள்க்கில் சாரு நிவேதிதா எழுதியுள்ளார் (30.03.2011, பக்கம் 16-17). வாங்கி படிக்கவும், சுவாரசியமாகவே உள்ளது. அவர்தான் உண்மையான பேரறிஞர் அண்ணா என சாரு கூறுவதும் ஏற்கத் தக்கதே. [அவர் கூறியது, “தமிழில் எல்லா சொற்களுமே அவற்றின் உண்மையான அர்த்தத்தை இழந்து விட்டன. பெர்னாட் ஷாவைப் படித்திருந்ததால் ‘தென்னகத்து பெர்னார்ட் ஷா’ என்ற பட்டம், ஆங்கிலம் அறிந்ததால் ‘அறிஞர்’ பட்டம்’].

30.03.2011 தேதியிட்ட துக்ளக்
மன்மோகன் சிங் பற்றி சில வரிகள்.
1. அன்றைய பாராளுமன்றத்தில் நடந்ததை, இன்றைய பாராளுமன்றத்தில் கவனிக்க முடியாது - என்றும் கூறியிருக்கிறார். உண்மைதான். ஆனால் இன்றைய பிரதமரின் புகழ்பெற்ற ‘நேர்மை’ அன்றே என்ன கதி ஆகியது என்பதை இன்றாவது அறிந்து கொள்ள மக்கள் கடமைப்பட்டவர்கள்.

2. [மன்மோகன் சிங் பெயரளவுக்கு மட்டுமே பிரதமர் என விக்கி லீக்ஸ் கூறியதற்கு பதில்]: விக்கிலீக்ஸ் ரகசியத் தகவல்களைத்தானே வெளியிடும்? இதில் என்ன ரகசியம் இருக்குது?

டோண்டுவின் கேள்வி. எதுவுமே தமக்குத் தெரியாது என வெட்கமில்லாமலேயே கூறுகிறாரே, சோறுதானே சாப்பிடுகிறார்?

96 வயது வரை வாழவேண்டும் மாமா
என் அத்தைப் பிள்ளையும் பிற்காலத்தில் என் மைத்துனனாகவும் தங்கையின் கணவனாகவும் வரவிருந்த ஸ்ரீதரனும் நானும் என் அப்பாவுடன் பேசிக் கொண்டிருந்த போது அவன் சொன்னதுதான் மேலே உள்ளது. எங்கள் இருவருக்கும் அப்போதைய வயது 12. அவன் சொன்னதைக் கேட்டுத் திடுக்கிட்ட என் தந்தை அது மிகக் கொடுமையாக இருக்கும் என்பதை எடுத்துக் காட்டினார்.

அவர் கூறியதாவது, “உன் சமகாலத்தவர் யாருமே உயிருடன் இருக்க மாட்டார்கள். உன் நினைவுகளை உனக்கு ஈடாகப் பகிர்ந்து கொள்ளவும் ஆட்கள் கிடைக்காது. அது ஒருவித சித்திரவதையே”.

இந்திரா பார்த்தசாரதி அவர்களது ‘ஔரங்கசீப்’ நாடகத்தில் கடைசி காட்சியில் அவரது தனிமை மிக அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இத்தனை உறவினர்களைக் கொன்று வெற்றி பெற்ற அவருக்கு கடைசியில் அத்தனையும் வியர்த்தமே எனத் தோன்றுவதாக எனக்குப் பட்டது. ஏனெனில் அவர் வெற்றியை ஒரு புரிதலோடு ஏற்றுக் கொண்டு அட்மைர் செய்யவோ, பொறாமைப்படவோ யாருமே இல்லை என்பதுதான் நிஜம். He was just left alone and only an ignored man knows what this means.

பாண்டவ குமாரர்களை அவர்கள் தூங்கும்போது கொன்ற அசுவத்தாமனுக்கு அவன் இறப்பின்றி காலகாலத்துக்கும் பூமியில் அலைய வேண்டும் என்பதே பெரிய சாபமாக கிருஷ்ணர் தருகிறார். அதற்கு அவன் பதறுகிறான், புலம்புகிறான். ஆனால் பலன் ஏதுமில்லை. பல ஆண்டுகளாகத் திரியும் அவன் தனது கடந்தகால கசப்பான நினைவுகளுடனேயேதான் வளைவர வேண்டும். கூடவே புதிதாக அவனது செயல்பாடுகள் குறித்து சீறலோடு கேட்பவர்களையும் சமாளிக்க வேண்டும். ஆகவே என்ன செய்திருப்பான் என்றால் ஆட்டமேட்டிக்காக கிருஷ்ணர் சொன்னது போல் பூமியில் இங்குமங்கும் அலைய வேண்டும். அதுவும் தான் யார் என்பதை சட்டெனக் கூற முடியாத நிலை. யாருமே அவனது செயலை மறக்கத் தயாராக இல்லை என்பதுதானே அவனைப் பொருத்தவரை நிஜம்?

இங்கு ஸ்ரீதரன் விஷயத்துக்கு வருவோம். நீண்ட நாள் வாழ்வதின் வியர்த்தங்களை எடுத்துக் கூறிய என் தந்தை அவரது 67-ஆம் வயதில் இவ்வுலகை விட்டுச் சென்றார்? ஸ்ரீதரன்? 53 வயதுகூட நிரம்பாத நிலையில் எங்களை தவிக்க விட்டுச் சென்றான். உறவினன் பல வகையில் எனக்கு என்பதைவிட அவன் என்னுடைய சிறந்த நண்பன் என்பதுதான் நிஜம்.

நான்? இப்போதும் எங்களது பல பொது நினைவுகளை என்னால் பலருடன் பகிர்ந்து கொள்ள முடியாத நிலை. அவற்றில் ஒன்றுதான் சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய விடுமுறை நாட்களில் திருவல்லிக்கேணி சிங்கராச்சாரி தெருவில் இருந்த மாதவராவ் என்னும் பையனை வம்புச்சண்டைக்கிழுத்து அடிப்பது. ஸ்ரீதரன் அவன் மரணத்துக்கு சில மாதங்கள் முன்னால் கூட நானும் அவனும் அதைச் சொல்லிச் சொல்லி சிரித்து மாளவில்லை. அவன் மனைவி (என் தங்கை) “ ரெண்டு பேரும் துஷ்டப்பசங்களாகத்தான் இருந்திருக்கீங்க” என நொடித்தாள்.

இனி எனக்கு என்ன வாய்த்திருக்கிறதோ தெரியவில்லை.

ஒரு வேளை 96 வயது வரை வாழும் நிலை ஏற்பட்டால் என்ன செய்வது? இளைஞ்ர்களை அதிகம் நண்பர்களாகப் பெற்றுச் செல்வதுதான் ஒரே வழி. செய்ய முடியுமா என்பது தெரியவில்லை. யார் கண்டது, நான் ஏற்கனவே சொன்னதுபோல 2078-லும் உயிரோடு இருந்து, நான் பதிவிடும்போது சமீபத்தில் 2008-ல் என எழுத, அப்போதைய மடிப்பாக்க ஆஸ்தான பதிவர், “நம்ம கொள்ளுத் தாத்தா அடிக்கடி சொன்னது போலவே இந்த மாதிரி ஆள் ஒருத்தர் நிஜமாகவே இருந்திருக்கிறார் போலிருக்கே” எனப் புழுங்கலாம்.

கிரிக்கெட் மேட்சில் இந்தியா வெற்றி
நானும் கிரிக்கெட் பார்க்கும் விஷயத்தில் எங்கள் வீட்டுக்கார மாமா W.P.K. அய்யங்காரைப் போலத்தான்.

அவர் பம்பாயில் பல ஆண்டுகள் ரயில்வேயில் வேலை செய்துவிட்டு ரிடையர் ஆனவர். அவருக்கு பம்பாய் டீமை பிடிக்காது. அந்த டீம் இந்திய கிரிக்கெட் டீமை ரொம்பத்தான் ஆளுமை செய்கிறது என்பது அவர் எண்ணம். ஆகவே கிரிக்கெட் செலக்ஷன் கமிட்டி மேலும் அவருக்கு சுத்தமாக நல்ல அபிப்பிராயம் கிடையாது.

அறுபதுகளில் ஒரு சமயம் மேற்கிந்தியத் தீவுக்கு இந்திய கிரிக்கெட் டீம் சென்றது. டீம் உறுப்பினர்களை செலக்ட் செய்து ரேடியோவில் அறிவித்தார்கள். அச்சமயம் W.P.K. ஐயங்கார் அவர்கள் வீட்டில் இல்லை. வந்ததும் வராததுமாக என்னை அழைத்து கேட்டார்:
"என்ன டோண்டு, கிரிக்கெட் டீமை சொல்லிட்டாங்களா?"
நான்: "ஆயிற்று மாமா"
அவர்: "வெங்கடராகவன் டீமில் இருக்கானா?"
நான்: "இல்லை மாமா."
அவர்: "உருப்படாதுன்னா, நம்ம டீமுக்கு அஞ்சு மேட்சிலும் உதைதான்".

மேலே பேச விருப்பமின்றி அவர் சென்றார். ஆனால் அந்தோ, அவர் கூறியது அப்படியே பலித்தது. நன்றாக வேண்டும் இந்தியாவுக்கு என்றுதான் எனக்கும் அவருக்கும் அப்போது தோன்றியது.

நல்லதுக்கு காலம் இல்லை என்றுதான் கூற வேண்டும்.


அதை விடுங்கள். நேற்று இந்தியா ஆஸ்திரேலியா உலகக் கோப்பை காலிறுதி ஆட்டத்தை இந்தியா ஆடும்போது பார்த்தேன். ட்விட்டரில் இந்தியர்கள் கோட்டை விடும்போது பாரா, மாயவரத்தான், போன்றவர்களது எதிர்வினைகளையும் பார்த்தேன். மாயவரத்தான் மடிக்கணினியுடன் ஆஜராகியிருந்திருக்கிறார். ஆகவே பந்துக்கு பந்து கீச்சுகள் அவரது கணினியிலிருந்து வந்த வண்ணம் இருந்தன.

ஆனால் நான் மேட்சை முழுமையாக பார்த்ததாகக் கூற முடியாது. முந்தானை முடிச்சு, நாதஸ்வரம், தங்கம், தென்றல் ஆகிய சீரியல்கள் மிஸ் பண்ண முடியாத கட்டங்களில் உள்ளன. இருப்பினும் மேட்சையும் அவ்வப்போது விளம்ப்ர சீரியல்களின் இடைவேளைகளில் பார்த்தேன் என வைத்துக் கொள்ளுங்கள்.

கடைசியில் நானும் மடிக்கணினியுடன் டிவி முன்னால் ஆஜர் ஆனேன். மற்றவர்களைப் போலவே உடனுக்குடன் கமெண்ட் போடுவதும் நன்றாகவேதான் உள்ளது.

கடைசியில் இந்தியா வெற்றி பெற்றது என்பது இதற்குள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்தானே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/24/2011

சுட்டு சாப்பிடு சூப்பர் டேஸ்டு

இன்று இணையத்தை மேய்ந்து கொண்டிருந்தபோது எதேச்சையாக நண்பர் பாரா அவர்களது சுட்டு சாப்பிடு சூப்பர் டேஸ்டு என்ற தலைப்பில் உள்ள பதிவை படித்தேன். அதிலும் அக்காலகட்டத்தில் நானும் பின்னூட்டமிட்டிருந்திருக்கிறேன் என்பது அப்போதுதான் என் நினைவுக்கும் வந்தது.

லக்கிலுக்கின் விளம்பர உலகம் பற்றிய என்னும் புத்தகத்துக்கான மதிப்புரைதான் அப்பதிவு. ஆனால் இப்பதிவு அந்தப் புத்தகம் பற்றியல்ல.

பாரா அவர்கள் ஒரு விளம்பர வாசகத்துக்காக தான் பட்ட கஷ்டங்கள் பற்றிக் கூறினார். அதில் அவர் இவ்வாறும் எழுதினார், “வெகுகாலம் முன்னர் அப்பளம், ஊறுகாய் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று என்னிடம் தனக்கான விளம்பர வாசகங்களை எழுதித் தரச் சொல்லிக் கேட்டது. ரூ. இருநூற்றைம்பது மட்டும் என்று ரசீது எழுதி கையெழுத்து வாங்கிக்கொண்டு ஒரு மாமா ஐந்து ஐம்பது ரூபாய் நோட்டுகளை எண்ணிக் கொடுத்துவிட்டு, ‘அட்வான்ஸ் இப்ப வாங்கிக்கோங்கோ. மிச்சத்த முடிச்சதும் செட்டில் பண்ணிடறேன்’ என்று சொல்லிவிட்டுப் போனார்.

கிட்டத்தட்ட ஆறு மாத காலம் இருக்கும் என்று நினைக்கிறேன். நான் சலிக்காமல் சுமார் ஆயிரம் விளம்பர வாசகங்களையாவது எழுதிக் கொடுத்திருப்பேன். ஒன்றுகூட அந்த அப்பள கம்பெனி முதலாளிக்குச் சரிப்பட்டு வரவில்லை. இறுதியில் அவரே எழுதினாரோ, வேறு யாரைக் கொண்டு எழுதவைத்தாரோ தெரியவில்லை. வெளிவந்த அவர்களது விளம்பரத்தை செங்கல்பட்டு தாண்டி எங்கேயோ செல்லும்போது ஒரு சிறு ஹோர்டிங்கில் பார்த்து தலையில் அடித்துக்கொண்டேன். என்ன கண்றாவி இது என்று பார்ப்பவர்களிடமெல்லாம் புலம்பித் தள்ளினேன்.

ஏதோ ஒரு விளம்பரத்துக்கு இவன் ஏன் இத்தனை மாய்ந்து போகிறான் என்று நண்பர்கள் நினைத்திருக்கக் கூடும். அந்த அப்பள கம்பெனி மேலாளர் மாமா அதன்பின் என்னைச் சந்திக்கவில்லை. கொடுத்த 250 ரூபாயைத் திரும்பக் கேட்கவும் இல்லை. சனியன் விட்டது என்றுதான் நினைத்துக்கொண்டேன். அந்த விளம்பரம் ஒன்றே அவர்களுடைய கம்பெனியை இழுத்து மூடப் போதுமானது என்றும்.

ஆனால் நடந்தது வேறு. விளம்பரம் ஹிட். கிராமப்புறங்களில் ‘சுட்டு சாப்பிடு. சூப்பர் டேஸ்டு’ என்பது ஒரு வேத வரிபோல் ஆகிவிட்டது.

எண்ணெயில் பொறித்துச் சாப்பிடும் மத்திய தர வர்க்கத்துக்கு – அதற்கு மேற்பட்ட வர்க்கங்களுக்காகத் தனது அப்பளம் தயாரிக்கப்படவில்லை; எண்ணெய்க்குக் கூட வசதியற்றவர்கள்தான் டார்கெட் என்று அவர் என்னிடம் முதலிலேயே தெளிவாகச் சொல்லியிருக்கலாம். சுட்டு சாப்பிடு, சூப்பர் டேஸ்டு மாதிரி நானும் ஏதேனும் முயற்சி செய்திருப்பேன்.

எதற்கு இந்தக் கதை என்றால், விளம்பர உலகின் ஆதாரப்புள்ளி என்பது யார் டார்கெட் என்பதில்தான் இருக்கிறது”.


ரொம்ப சத்தியமான வார்த்தைதான். இலக்கு வாசகர்களை கண்டறிவதுதான் முதல் வேலையாக இருக்க வேண்டும். அவரது அப்பதிவில் நான் இட்டப் பின்னூட்டம், “மன்னிக்கவும் என்னால் ஒன்று சொல்லாமல் இருக்க முடியவில்லை. அப்பள கம்பெனி முதலாளி உங்களிடம் இலக்கு வாசகர்களை கூறினாலும் கூறாவிட்டாலும் அவரது பொருள் என்ன, யாரை குறிவைத்து விளம்பரங்கள் வரவேண்டும் என்பதை நீங்கள்தான் அவரைக் கேட்டிருக்க வேண்டும். நீங்களும் இதில் பல காலவிரயங்களை தவிர்த்திருக்கலாம்.

நான் பணிபுரியும் மொழிபெயர்ப்பு துறையிலும் இலக்கு வாசகர்கள் முக்கியம். உதாரணத்துக்கு ஆங்கிலத்திலிருந்து பிரெஞ்சு மொழிக்கு மாற்றும்போது அது ஒரு தொழிநுட்ப வார்த்தைகள் நிறைந்த கையேடாக இருந்தால் தயங்காமல் மொழிமாற்றும் நான் அதுவே அக்கம்பெனியின் இணையப்பக்கம் என்றால் அதை பார்க்க வேண்டியவர்கள் பிரெஞ்சை தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்பதையும் அவர்கள் மண்வாசனையே இல்லாத வாசகங்களை வைத்து கொண்டு சலிப்படைவார்கள் என்பதை உணர்ந்து மரியாதையாக வாடிக்கையாளரிடம் அவர் இந்த வேலையை பிரெஞ்சை தாய்மொழியாக கொண்டவரிடம்தான் தரவேண்டும் எனக்கூறி மேலே சொன்னதையும் சொல்வேன். இருப்பினும் பரவாயில்லை என சில வாடிக்கையாளர்கள் என்னையே செய்யச் சொன்னால், மண்வாசனை இல்லை என பின்னால் ஏதேனும் பிரெஞ்சுக்காரர் சொன்னால் அதை வைத்து என்னை தொந்திரவு செய்யக்கூடாது என்று கூறிவிட்டே வேலையைத் துவங்குவேன். அப்படியும் வேலையைத் தருபவர்கள் பிரெஞ்சுக்காரனுக்கு பணம் அதிகம் தரவேண்டும் என்னும் தயக்கத்தால்தான் என்னிடம் வருகிறார்கள் என்பது வேறு விஷயம்.

போகிற போக்கில், சுட்டு சாப்பிடு சூப்பரா இருக்கு என்பது அமர்க்களமான ஸ்லோகன்”.
மேலும், விளம்பர வாசகங்கள் என்பவை விளையாட்டல்ல, நல்ல உழைப்பு தேவைப்படும். அப்படித்தான் கோக்கோ கோலா சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டபோது ஒரு பிரச்சினை வந்தது. அதை அவ்வாறு உச்சரித்தால் சீன மொழியில் அது ஒரு ஒரு கெட்ட வார்த்தையாம். சீனாவில் ஒத்துக் கொள்ளும் பெயரை கண்டுபிடிக்க நீண்ட நாள் உழைப்பு தேவைப்பட்டதாம்.

இப்போது வேறு விஷயம் சொல்ல வேண்டும். இந்திய வாடிக்கையாளர்கள் இம்மாதிரியான தலைகீழ் மொழிபெயர்ப்புகளை (அதாவது ஆங்கிலத்திலிருந்து பிரெஞ்சு அல்லது ஜெர்மன்) என்னைப் போன்றவர்களிடம் தருவதற்கு பணம் மட்டும் காரணம் இல்லை. அவர்கள் என்னிடம் தரும் டெக்ஸ்ட்களில் உள்ளவை இந்திய ஆங்கிலத்தில்தான் இருக்கும். அதுவும் அவற்றில் எழுதியவரது தாய்மொழியின் வாசனையும் வரும். உதாரணம், some unknown person has set the paper இந்த மாதிரி வாக்கியத்தைப் பார்த்ததுமே ஆங்கிலத்திலிருந்து தன் மொழிக்கு மாற்ற முன்வரும் ஒரு சராசரி பிரெஞ்சுக்காரரோ ஜெர்மானியரோ தலைமயிரைப் பிய்த்துக் கொள்வது உறுதி. ஆனால் நான் அதை சரியாகக் கண்டு கொள்வேன். எழுதியவர் என்ன வார்த்தை போட நினைத்து இதைப் போட்டார் என்பதையும் அறிவேன் (நன்றி அப்பா).

கடந்த ஓரிரு மாதங்களாக அவ்வளவாக பதிவிடாததற்கு காரணம் வேலை மட்டுமல்ல. ஒரு வித அலுப்பே காரணம். அதிலிருந்து மீண்டு விட்டேன் என நம்புகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

டோண்டு பதில்கள் - 24.03.2011

pt
டோண்டுசாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-1.அதிமுக தலைமையின் தன்னிச்சையான போக்கால் கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறுகிறது: வைகோ

பதில்: தங்களை அறியாமலேயே வைக்கோவும் ஜெயும் கருணாநிதிக்கு துணை போகிறார்கள். வேறு என்ன கூறுவது?

கேள்வி-2. திமுகவின் தேர்தல் அறிக்கை, வறுமையும் ேலைவாய்ப்பின்மையும் அதிகரித்திருப்பதையே காட்டுகிறது: திருப்பூரில் டி.கே.ரங்கராஜன் பேட்டி
பதில்: சரியாகத்தானே கூறுகிறார்? பை தி வே, இப்பேட்டியைத்தானே குறிப்பிடுகிறீர்கள்?

கேள்வி-3. கிரைண்டர்(அ) மிக்சி, லேப்-டாப் இலவசம்: தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள்
பதில்: தேர்தல் நெறிமுறைகளுக்கு அப்பட்டமான சவாலாக அல்லவா இது உள்ளது? தேர்தல் கமிஷன் தூங்குகிறதா?

கேள்வி-4. தனியார் பார்சல் சர்வீஸ் மூலம் அனுப்பப்பட்ட 321 அரிவாள்கள் பறிமுதல்
பதில்: வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் இளநீர் வியாபாரிகளுக்கு இலவசமாக அனுப்பியிருக்கிறோம் எனக் கூறினாலும் வியப்படைவதற்கில்லை.

கேள்வி-5. ராஜீவ் காந்தியை குற்றவாளி என்கிறார் பிரதமர்: .அத்வானி
பதில்: நீங்கள் இச்செய்தியைத்தானே கூறுகிறீர்கள்? ராஜீவை விடுங்கள், அவரை யார் என்ன சொன்னாலும் அவருக்கு என்ன பிரச்சினை? உயிருடன் இருப்பவர் பற்றிப் பேசவும்.

மன்மோகன் சொன்னதையே எடுத்துக் கொள்வோம். காங்கிரஸ் 2009-ல் பணபலத்தால்தான் வெற்றி பெற்றது என்பதை எல்லோருமே அறிவர். அதையே தான் குற்றமர்றவர் என்பதற்கு எடுத்துக்காட்டாகக் கூறியதன் மூலம், வோட்டர்களுக்கு ஒரு லஞ்சமும் தர முயலாது போனாலும் வெற்றி பெற்ற மோதியின் தரப்பை இன்னும் பலமாக்கியுள்ளார். அவர் அறியாமலேயே மோதிக்கு கிடைத்த வெற்றி (2002, 2007 மற்றும் உள்ளாட்சி தேர்தல்) அவர் குஜராத் கலவரத்தில் குற்றமற்றவர் எனக் காட்டுவதை உறுதிபடுத்தியுள்ளார். மன்மோகனுக்கு எனது நன்றிகள். இந்த அழகில் மேலே குறிப்பிட்ட 3 குஜராத் தேர்தல்களிலும் சம்பந்தப்பட்ட தேர்தல் கமிஷன் தலைமை கமிஷனர்கள் காங்கிரசுக்கு பூத் ஏஜெண்டாகவே கோமாளித்தனமாகச் செயல்பட்டனர். இருப்பினும் மோதி ஜெயித்தார்.

இருக்கவே இருக்கிறது உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு விசாரணை டீம் மோதியை கோத்ராவுக்கு பிந்தைய கலவரம் பற்றிய குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது