எனக்கு பிரெஞ்சு மொழியின் அடிப்படைகளைப் போதித்த ஆசிரியை இவர். சினிமா கதாசிரியர் திரு. கே.ஜே.மகாதேவனின் புதல்வி. இவர் அக்கா லட்சுமி ஒரு டென்னிஸ் வீராங்கனை. இவர் கணவர் லாற்டே (Lartet) அச்சமயம் (1975 - 1978) சென்னை அல்லியான்ஸில் உதவி டைரக்டர். ஆசிரியரும் கூட.
சாரதா அவர்கள் வகுப்பு எடுப்பதே ஒரு அழகு. மாணவர்களின் சந்தேகங்களை மிக அன்புடன் தீர்த்து வைப்பார்.
மொத்தம் நான்கு நிலைகளில் மொழி கற்றுக் கொடுக்கப்பட்டது. அவை "செர்டிபிகா", "ப்ரே டிப்ளோம்", "டிப்ளோம்" மற்றும் "டிப்ளோம் ஸுபேரியேர்" ஆகும்.
வாரத்துக்கு நான்கு முறை மாலை வகுப்புகள். ஒவ்வொரு நிலைக்கும் வருடத்தை மூன்றாகப் பிரித்து பிரெஞ்ச் கற்பிக்கப் பட்டது.
அவசரக் குடுக்கையான நான் ஆர்வக் கோளாறில் முதல் மூன்று மாததிலேயே முதல் நிலைப் புத்தகத்தில் உள்ள எல்ல பயிற்சிகளையும் எழுத்தில் செய்து முடித்து அதன் பின் இரண்டாம் நிலைக்கானப் புத்தகத்தையும் முடித்தேன்.
மூன்றாம் நிலைக்கானப் புத்தகத்தை வாங்கப் போனால் ஒரே ரவுஸுதான். சாரதா அவர்கள் துணையை நாட அவர் அலட்டிக் கொள்ளாமல் தானே அப்புத்தகத்தைத் தன் பெயரில் வாங்கிக் கொடுத்தார். என் முயற்சிகளுக்கு உறு துணையாக இருந்தார்.
இரண்டாம் நிலைக்கான வகுப்பில் இருந்த போது எங்கள் வகுப்பு மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் கலைக்கப் பட்டது. நாங்கள் வேறு வகுப்பு நேரங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாமெ என்று கூறப்பட்டது.
ஆனால் என்னால் அது முடியாத காரியமாயிற்று. மறுபடியும் சாரதா அவர்கள் உதவி செய்தார். என்னை தன் கணவர் நடத்திய மூன்றம் நிலைக்கான வகுப்பில் சேர்த்து விட்டார். நானும் அவர் நம்பிக்கைக்கு ஊறு விளைவிக்காமல் அத்தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றேன். இரண்டாம் நிலைத் தேர்வு எழுதவே இல்லை.
நான்காம் நிலைக்கான இறுதித் தேர்வு சமயத்தில் ஸாரதாவும் அவர் கணவரும் ஸ்பெயினுக்கு மாற்றம் பெற்றனர்.
ஏதோ ஒரு தேவதையைப் போல வந்து எனக்கு உதவிகள் செய்திராவிட்டால் நான் சாதாரணப் பொறியாளனாகவே ஓய்வு பெற்றிருப்பேன். வாழ்க்கை அற்புதமயமானது.
சில மாதங்களுக்கு முன் சாரதா அவர்களுடன் தொலைபேசியில் பேசினேன். என்னை இவ்வளவு வருடங்களுக்குப் பிறகும் அவரும் அவர் கணவரும் ஞாபகம் வைத்திருந்தது எனக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது.