இதற்கு முந்தையப் பதிவில் சோம்பேறி பையன் அவர்கள் ஏற்கனவே படித்தது போன்ற உணர்வை அது தந்ததாகக் குறிப்பிட்டிருந்தார். உண்மைதான். ஒரு விஷயத்தைப் பற்றி முக்கியமாக எழுதுகிறோம். சில நாட்கள் கழித்து வேறு விஷயத்தைப் பற்றி எழுதும்போது மேலே கூறிய விஷயத்தையும் வேறு திருஷ்டிகோணத்திலிருந்து தொட வேண்டியிருக்கிறது. திரைப்படங்களில் ஒரே காட்சியை வெவ்வேறு காமெரா கோணங்களிலிருந்து காண்பதுபோலத்தான் இது.
ஐ.டி.பி.எல்லில் சேர்ந்த முதல் நாளன்றே ஒரு பெரிய ஆவணத்தைக் கொடுத்து அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கச் சொல்லிவிட்டனர். அலுவலக லைப்ரரிக்கு சென்று முதலில் பிரெஞ்சு<>ஆங்கில அகராதிகளை வாங்கிக் கொண்டேன். தலையணை சைஸ்களில் இருந்தன. பிறகு நேரடியாக மொழிபெயர்ப்பு வேலைதான். அல்ஜீரிய ஒப்பந்தத்துக்கான காகிதங்கள் அவை. அன்று மாலையே இந்தா பிடி என்று மொழிபெயர்ப்பை கொடுக்க, சம்பந்தப்பட்ட மேனேஜர் அசந்துபோனார். அவர் நான் மூன்று நாளாவது எடுத்துக் கொள்வேன் என எதிர்பார்த்திருக்கிறார். அக்கம்பெனியில் எனக்கு முன்னால் மொழிபெயர்ப்பாளராக வேலை செய்த பெண்மணியால் கம்பெனியில் பலரும் நொந்துப் போயிருந்தனர்.
அடுத்த நாள் ஆங்கிலத்தில் சாலை போடும் பணிகளை லிஸ்ட் செய்து அவற்றை பிரெஞ்சில் மொழிபெயர்க்கச் சொன்னார்கள். அப்படியே CPWD Shedule of Rates தான். மொத்தம் பத்து பத்திகள். முதலில் ஒரு சிவில் இஞ்ஜினியரிடம் சென்றேன். முதல் பத்தியில் தெருவுக்கான தளவரிசைகள் பற்றிக் குறிப்பிட்டிருந்தனர். முதலில் மணல், பிறகு ஜல்லி, பிறகு செம்மண் என்ற ரேஞ்சில் குறித்திருந்தனர். எனக்கு பழக்கமான CPWD ஆங்கிலம். அந்த மனிதரிடம் சாலைக்கான செக்ஷனை வரைந்து காட்டி ஒவ்வொரு அடுக்கையும் அளவுகளுடன் காட்டி, இதைத்தானே கூறுகிறீர்கள் எனக் கேட்டவுடன் அவர் மிரண்டு விட்டார். அவருக்கு நான் பொறியாளர் என்ற விவரம் தெரிந்திருக்கவில்லை. ஏதோ சாதாரண மொழிபெயர்ப்பாளன் என்றே நினைத்திருந்தார். அவருக்கு விளக்கிக் கூறி அதே CPWD யில்ருந்துதான் வருகிறேன் என்று கூறியதும் என்னைக் கட்டியணைத்து கூத்தாடாததுதான் பாக்கி. பிறகு என்ன, விறு விறுவென அந்த வேலையும் முடிய, அதை தட்டச்சு செய்தார்கள். பிரெஞ்சு எழுத்துக்குறிகள் சிலவற்றை நான் கையாலேயே போட வேண்டியதாயிற்று. ஆனால் சும்மா சொல்லக்கூடாது தட்டச்சு செய்தவர் தனக்கு தெரியாத மொழி என்றாலும் தவறின்றி செய்திருந்தார்.
நான் பிரெஞ்சில் மொழி பெயர்த்ததை அல்ஜீரியாவுக்கு அனுப்பி விட்டு காத்திருந்தனர். கூடிய சீக்கிரம் ஒரு டெலக்ஸ் வந்தது. அதில் அல்ஜீரியர்கள் தொழில் நுட்பம் சம்பந்தமானக் கேள்விகளே கேட்டிருந்தனர், அதாவது மணலை இன்னும் அதிகம் போட வேண்டும், ஜல்லியின் சைஸை மாற்றவும் என்ற ரேஞ்சில் அவர்கள் எழுதியிருந்தனர். ஆக, நான் பிரெஞ்சில் மொழி பெயர்த்ததும் அவர்களுக்கு புரியும் வண்ணம் இருந்தது என்பதை நம்மவர்களும் உணர்ந்ததில் என்னுடைய மதிப்பு இன்னும் விர்ரென எழும்பியது. எனக்கும் மனதுக்குள் சிறிது உதறல்தான். ஆங்கிலத்திலிருந்து பிரெஞ்சுக்கு மொழி பெயர்த்தது அதுவே முதல் தடவை.
இந்தத் தருணத்தில் மொழிபெயர்ப்பு சம்பந்தமாக ஒரு விஷயம். சாதாரணமாக தாய் மொழியிலிருந்து அன்னிய மொழிக்கு மொழி பெயர்க்கக் கூடாது என்னும் எண்ணம் இப்போது கோலோச்சுகிறது. இக்கேள்வி என்னைப் பொருத்தவரை தமிழ் அல்லது ஆங்கிலத்திலிருந்து ஜெர்மன் அல்லது பிரெஞ்சுக்கு மொழிபெயர்ப்பதை குறிக்கும். தமிழ் ஆங்கிலம் இரண்டும் என்னைப் பொருத்தவரை தாய்மொழி ஸ்தானத்தில் உள்ளன. ஏன் அவ்வாறு செய்யக் கூடாது என்றும் சிலர் கேட்கிறார்கள். ஆனாலும் நான் அதைத்தான் செய்தேன். ஏன் என்பதைப் பார்ப்போம்.
தொழில் நுட்பங்களை உள்ளிட்டுக் கலைச் சொற்கள் மிகுந்த ஒரு கட்டுரையை மொழி பெயர்க்க மொழியறிவு மட்டும் போதாது. விஷய அறிவும் வேண்டும். அப்போது கூட ஒன்று கூறுவேன். மொழியறிவு மற்றும் விஷய அறிவும் சேர்ந்து அமையப் பெற்றால் தாய் மொழியில் மொழி பெயர்ப்பவர்கள் அதிகம் ஆதரிக்கப்படுவர்.
ஆனால் இங்கு விஷய அறிவுக்கு முக்கியத்துவம் அதிகம். என்னுடைய உதாரணத்தை எடுத்துக் கொண்டால் நான் 12 வருடம் வேலை செய்த ஐ.டி.பி.எல்லில் பிரெஞ்சுக்காரர்கள் கிடையாது. ஆகவே கம்பெனி இந்திய மொழி பெயர்ப்பாளர்களுடன் திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியிருந்தது. அதில் எனக்கு முன்னால் இருந்தவரால் ஈடு கொடுக்க முடியவில்லை நான் ஈடு கொடுத்தேன். ஏனெனில் நான் ஒரு பொறியாளன் கூட. முன்னவர் வெறுமனே பிரெஞ்சில் எம்.ஏ. அவ்வளவுதான். என் மொழிபெயர்ப்பு எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்தது. இது பற்றி நான் போட்ட இப்பதிவில் நான் இதை பற்றி இன்னும் விவரமாகவே கூறியுள்ளேன்.
பை தி வே, நான் பிரஞ்சில் செய்த மொழிபெயர்ப்பை பல ஆண்டுகள் கழித்துப் பார்க்க நேர்ந்தது. பிரெஞ்சு மொழிநடை சற்று தமாஷாக இருந்தது. ஆனாலும் புரிந்தது. இப்போது நான் அதை செய்வதாக இருந்தால் வேறு சொற்களைப் போட்டிருப்பேன். மொழிநடையை சற்று நகாசு செய்திருப்பேன், அவ்வளவுதான். ஆனால் அல்ஜீரியர்கள் அதை ஏற்றுக் கொண்டனர். அதுதான் முக்கியம்.
நான் கம்பெனியில் சேர்ந்த சில நாட்களுக்குள் கிட்டத்தட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் நான் அறிமுகமானேன். நான் ஒரு பொறியாளர், மேலும் நானே ஒரு அதிகாரி வேறு என்பது பலருக்கு புதிதாகவே இருந்தது. பல நாட்கள் வேலை குவிந்து கிடந்ததால் தலை நிமிர முடியாத அளவுக்கு வேலை என்று ஆயிற்று. இஞ்ஜினியராக இருந்தாலும் அத்துறை வேலைகள் அளிக்கப்படவில்லை. அதை செய்ய ஏற்கனவே பலர் இருந்ததே காரணம். ஒரு நாள் விடுப்பு எடுத்தால் கூட அடுத்த நாள் ஏன் என்று பல தரப்பினரும் கேட்டனர். அது வரை சி.பி.டபிள்யூ.டி. யில் லூட்டி அடித்து கொண்டிருந்த எனக்கு மிகப் புதிய அனுபவம். நன்றாகவே இருந்தது. மனதுக்கு பிடித்த வேலை அல்லவா.
சென்னையிலிருந்து தில்லிக்கு கண்டைனரில் பொருட்கள் வருகின்றன அவற்றை இறக்கிவைக்க லீவு வேண்டும் என்று கேட்டபோது ப்ராஜக்ட் டைரக்டர் கையில் கொத்து பேப்பரை கொடுத்து "வீட்டில் மொழிபெயர்ப்பு செய்து அடுத்த நாள் கொண்டு வந்தால் போதும், இதை ட்யூட்டியாக வைத்துக் கொள், லீவ் எல்லாம் எடுக்க வேண்டாம்" என்று கூற எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம். எனக்கும்தான்.
சாதாரணமாக மொழிபெயர்ப்பாளர்கள் வேலைக்கு விண்ணப்பம் பெறும்போது சம்பந்தப்பட்ட மொழியில் எம்.ஏ. பட்டம் வேண்டுமெனக் கேட்பார்கள். தொழில் நுட்ப விஷயங்களை மொழிபெயர்த்த அனுபவம் இருத்தல் நலம் எனக் குறிப்பிடுவார்கள். ஐ.டி.பி.எல். மட்டும் விதிவிலக்காக இருந்தது. அவர்கள் இந்த விஷயத்தில் பெற்ற அனுபவம் அப்படிப்பட்டது. நான் வேலையில் சேர்ந்தது எனக்கு மிக அனுகூலமாக இருந்தது. சி.பி.டபிள்யூ.டி.யில் சாதாரண மேற்பார்வையாளனிலிருந்து இங்கு அதிகாரியானது என் மொழியறிவால் வந்ததே ஆகும். கம்பெனிக்கும் ஒரு திறமை வாய்ந்த மொழிபெயர்ப்பாளர் கிடைத்ததில் திருப்திதான். அது வரை பல மொழிபெயர்ப்புகளை வெளியில் நிறைய பணம் கொடுத்து செய்ய வேண்டியிருந்தது. நான் சேர்ந்த்தும் ஒரு நயாபைசா கூட வெளியில் செல்லவில்லை. ஆக இருதரப்பினருக்கும் சந்தோஷமே.
ஆனால் எல்லாவற்றுக்கும் முடிவு வரும் அல்லவா. இரண்டே ஆண்டுகளில் வேறுபல காரணங்களால் அல்ஜீரிய வேலை இல்லை என்று ஆகிவிட்டது. அப்போது என்ன நடந்தது என்பதை அடுத்தப் பதிவில் கூறுவேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்று விஷ்ணுபுரம் பரிசளிப்பு விழா! வருக!
-
விஷ்ணுபுரம் விருது இன்று கோவையின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாக
ஆகியுள்ளது. தமிழின் தலைசிறந்த இலக்கிய விருதாகவும் இது கருதப்படுகிறது. இந்த
விழாவில் கலந்து...
11 hours ago
5 comments:
Sir,
Nan ippa Azerbaijanla irukken, translator anubhavam eppadi irukkumnu neenga sollirukinga, oru translatora vechundu eppadi vela seiyarathunu ennoda pathivula solla try pannaren.
http://narpeyar.blogspot.com
just for enjoyment.
நன்றி ஸ்ரீதர் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வெவ்வெறு கோணங்களில், மீண்டும் அருமையாக எழுதியுள்ளீர்கள்..
நன்றி, எனது கருத்திற்கான, உங்கள் விளக்கத்திற்கு :-)
****
உங்கள் பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்ததே 'மீள்நினைவுகள்' மலரும் பதிவுகள்தான்.. இதை எனது சங்கிலித்தொடர் பதிவிலும் குறிப்பிட்டுள்ளேன்.. பார்த்து கருத்து கூறுங்கள்..
****
//சாதாரண மேற்பார்வையாளனிலிருந்து இங்கு அதிகாரியானது என் மொழியறிவால் வந்ததே ஆகும் //
நாம் எத்துறையில் இருப்பினும்,
கூடுதல் தகுதிகளை வளர்த்துக் கொள்வது நல்லது என்பதை நன்கு உணர்ந்தேன்..
நன்றி சோம்பேறி பையன் அவர்களே. தகுதியை வளர்த்துக் கொண்டதால்தான் இப்போது என்னால் ரிடைர்மெண்டுக்கு பிறகு முழு நேர வேலை செய்ய முடிகிறது. வி.ஆர்.எஸ்ஸில் என் கம்பெனியிலிருந்து முதலில் சென்றவர்கள் கிட்டத்தட்ட எல்லோருமே கையில் வேறு வேலை பெற்ற பிறகே சென்றனர். நான் ஒருவன் மட்டும் கையில் தொழிலை வைத்துக் கொண்டு 47 வயதிலேயே விருப்ப ஓய்வில் சென்றேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நாட்டாமை அவர்களே உங்கள் புகழ்ச்சிகள் மிகவும் அதிகம். மூச்சு திணறுகிறது. Let me set the record straight.
சங்கிலிப் பதிவு நான் ஆரம்பிக்கவில்லை. நடுவில் ஜோசஃப் மற்றும் இளமுருகு அவர்களால் அழைக்கப்பட்டவன். ஆகவே இந்த ஐடியாவுக்கான க்ரெடிட்டுக்கு நிச்சயமாக நான் அருகதையானவன் அல்ல.
மொழியறிவு பற்றி. எனக்கு மிகவும் நன்றாகத் தெரிந்த மொழிகள் என்று பார்த்தால் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மட்டுமே. ரஷ்யன் கற்க முயன்று தொடர முடியாது போயிற்று. இத்தாலிய மொழியறிவு மிகவும் குறைவே. வட மொழியறிவு என்பது அதன் சொற்கள் கேட்பதில் கஷ்டம் இல்லை என்னும் அளவோடு சரி. அது கண்டிப்பாக மொழியறிவு என அடையாளம் காட்டுவதற்குரியதல்ல.
உருதுவை எடுத்துக் கொண்டால் ஹிந்தி நன்கு தெரிந்த எவருக்கும் உருது கஷ்டமேயில்லை, ஏனெனில் இலக்கண விதிகளில் இரண்டு மொழிகளும் ஒன்றே. சொற்பிரயோகங்கள் மட்டும் மாறும், அது ஒன்றும் பிரம்ம வித்தையில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment