2/13/2006

எனக்கேற்பட்ட ஒரு விசித்திர italics அனுபவம்

இது ஒரு மீள்பதிவு என்பதை முதலிலேயே கூறிவிடுகிறேன்.

1982-ல் ஒரு ஆங்கில நாவலைப் படித்துக் கொண்டிருந்தேன். பெயர் நினைவில் இல்லை. ஆனால் புத்தகம் இஸ்ரேலைப் பற்றி. அதுவே என் ஆர்வத்துக்குக் காரணம்.

படித்துக் கொண்டிருக்கும்போது ஒரு பத்தி திடீரென சாய்வெழுத்தில் (italics) வந்தது. அதைப் படித்துவிட்டு மேலே வாசிப்பைத் தொடர்ந்தேன். சில பக்கங்கள் கழித்து இன்னொரு பத்தியும் சாய்வெழுத்தில் வந்தது. அதையும் படித்து விட்டு மேலே வாசிக்க ஆரம்பித்தேன்.

சிறிது நேரம் கழித்து திடீரென ஒரு எண்ணம் வந்தது. இப்பத்திகள் ஏன் சாய்வெழுத்தில் வந்தன என்பது எனக்குப் புரியவில்லை. ஏனெனில் அதில் கூறப்பட்ட விஷயங்கள் இடாலிக்ஸ் போடும் அளவுக்கு விசேஷமானதல்ல.

பக்கங்களைப் பின்னோக்கிப் பார்த்தால் முதல் பத்தி ஜெர்மனிலும் இரண்டாம் பத்தி பிரெஞ்சிலும் இருந்தன. படிக்கும்போது மொழி மாறியதைக் கூடக் கவனிக்காமல் படித்திருக்கிறேன்.

இது எவ்வாறு நிகழ்ந்தது?

யோசித்துப் பார்க்கும்போது இவ்வாறாக இருக்குமோ என்றுத் தோன்றியது. முதல் காரணமாக எனக்குப் புலப்பட்டது எழுத்துருக்களில் மாற்றம் இல்லை என்பதே. இரண்டாவதாக எனக்குத் தோன்றியது படிப்பது எம்மொழியில் இருப்பினும் என் எண்ணங்கள் தமிழில்தான் உள்ளன. ஆகவே எனக்கு மொழிமாற்றம் முதலில் புலப்படவில்லை போலும். எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை.

இன்னொரு நிகழ்ச்சியையும் கூறி விடுகிறேன். 1988-ஆம் வருடம் டில்லி கன்னாட் பிளேஸில் ஒரு ஐரோப்பியரைப் பார்த்தேன். அவர் கூட அவர் மனைவியும் இருந்தார். கணவர் தன் கையில் இருந்த ரூபாய் நோட்டுக்களை எண்ணிக் கொண்டிருந்தார். பிறகு என்னிடம் அங்கிருந்து குதுப் மினாருக்கு எவ்வாறு செல்வது என்று ஆங்கிலத்தில் கேட்டார். நான் உடனே அவர் செய்ய வேண்டியதை ஜெர்மனில் கூறினேன். அவருக்கு ஒரே ஆச்சரியம். "நான் ஜெர்மானியன் என்பதை எவ்வாறு கண்டு கொண்டீர்கள்?" என்று என்னிடம் ஜெர்மனில் கேட்டார். அதற்கு நான் அவரிடம் "நீங்கள் நோட்டுக்களை ஜெர்மனில்தானே எண்ணினீர்கள்? ஒருவருக்கு எவ்வளவு மொழி தெரிந்திருந்தாலும் எண்களை மட்டும் தங்கள் தாய் மொழியில்தான் சாதாரணமாகக் குறிப்பிடுவார்கள்" என்றேன். அதை ஒத்துக் கொண்டார் அவர்.

நானும் அப்படித்தான். கூட்டல்களைத் தமிழில்தான் செய்வேன். நம் தமிழ் பசங்கள் தமிழைப் படிக்காது கூட்டல்களை ஆங்கிலத்தில் போடும்போது மிக வருத்தமாக உள்ளது. இவ்வாறு செய்யும் பலர் தமிழ் படிக்க இயலாதவர்கள். ஆங்கில அறிவும் அப்படி ஒன்றும் சொல்லிகொள்வது போல இல்லை. அரசனை நம்பிப் புருஷனை விட்டக் கதையாகத்தான் எனக்கு இது படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

7 comments:

இராதாகிருஷ்ணன் said...

//...பலர் தமிழ் படிக்க இயலாதவர்கள். ஆங்கில அறிவும் அப்படி ஒன்றும் சொல்லிகொள்வது போல இல்லை. அரசனை நம்பிப் புருஷனை விட்டக் கதையாகத்தான் எனக்கு இது படுகிறது.// சரியாகச் சொன்னீர்கள். நிலைமை இன்னும் மோசமாகத்தான் போகப்போகிறது.

Vijayakumar said...

அய்யா! இந்த மாதிரி வினோத அனுபவங்கள் தங்களைப் போல மொழிக் கற்றவர்களுக்கே ஏற்படும். என்னைப் போன்று தமிழும், அரைகுறை இங்கீலிசு தெரிந்தவர்களுக்கும் இந்த அனுபவம் ஏற்படுவது ரொம்ப குறைவு.இருந்தாலும் தமிழ் கட்டுரைகளில் ஆங்கில எழுத்துக்கள் பொதிந்திருந்தாலும் நீங்கள் சொன்ன மாதிரி மூளை வாசிப்பதை இப்போது தான் கவனித்தேன். நல்ல தகவல். நன்றி.

தகடூர் கோபி(Gopi) said...

//படிப்பது எம்மொழியில் இருப்பினும் என் எண்ணங்கள் தமிழில்தான் உள்ளன.//

நமது எண்ணங்கள் பிம்பங்களின் தொகுப்பாகவே உள்ளன,
நாம் அதை முதலில் பதித்த மொழியில் (தமிழ்) வெளிப்படுத்துகிறோம் (நாம் தாய் மொழியில் சிந்திப்பதில்லை உருவங்களாகவே சிந்திக்கிறோம்) என்பது எனது கருத்து.

இது பற்றி எனது விரிவான பதிவை, நேரம் கிடைத்தால் வாசித்துப் பார்க்கவும் (http://higopi.blogspot.com/2004/10/blog-post_109912416957639904.html)

dondu(#11168674346665545885) said...

கோபி, நீங்கள் கூறியதும் ஏற்கத் தக்கதே. இருப்பினும் ஜெர்மன், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்ச் மொழிகளுக்கிடையே மாற்றம் இருப்பதைக் கூட முதலில் உணராததற்கு நான் தமிழில் எண்ணுகிறேன் என்பதாலேயே என்றுதான் நான் திடமாக நம்புகிறேன்.

இன்னொரு விஷயம். ரவீந்த்ரநாத் டாகூர் இங்கிலாந்தில் இருந்தச் சமயம் அவருக்கு ஒரு ஆப்பரேஷன் செய்ய வேண்டியிருந்தது. அவர் தான் கல்கத்தா போய் செய்துக் கொள்கிறேன் என்றுக் கூறி விட்டார். அதற்குக் காரணம் கேட்டதற்கு அவர் ஆப்பரேஷன் முடிந்து நினைவு திரும்புமுன் தான் தூக்கத்தில் பேசுவது வங்காள மொழியில்தான் இருக்கும், ஆகவே அதற்குத் தகுந்த இடம் கல்கத்தா மட்டும்தான் என்றுக் கூறினார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Muthu said...

மிக உண்மை. இது பற்றி எனக்கும் சில சிந்தனைகள் உண்டு. நல்ல பதிவு.

Muthu said...

தாகூர் பற்றி நீங்கள் சொன்னதும் ஐன்ஸ்டீன் பற்றிய நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. மரணப்படுக்கையில் ஐன்ஸ்டீன் இருந்தபோது கடைசியாக ஏதோ சொல்லியிருக்கிறார், அவரைக் கவனித்துக்கொண்ட நர்ஸிடம். ஆனால் அது என்னவென்று யாருக்கும் தெரியாமல் போய்விட்டது. ஏனென்றால் அவர் கூறிய கடைசிச் சொற்றொடர்கள் ஜெர்மன் மொழியில் இருந்திருக்கிறது, அந்த நர்சுக்கு ஜெர்மன் மொழி தெரியாது.

dondu(#11168674346665545885) said...

மிக்க நன்றி முத்து அவர்களே. உங்கள் பதிவில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://muthukmuthu.blogspot.com/2006/02/blog-post_13.html
"இதனாலேயே ஜெர்மன் உள்ளிட்ட எந்தப் பிறமொழியையும் கற்பிக்கும் "திறமையான" ஆசிரியர்கள் அதைப் பிறமொழிகளின் உதவியில்லாமல், இடைமுகமில்லாமல் நேரடியாய் அதேமொழியில் கற்பிக்கிறார்கள்."
ஆயிரத்தில் ஒரு வார்த்தை. இம்முறையாலேயே நான் பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் மொழிகளைச் சிறப்பாகக் கற்க முடிந்தது. இம்முறையை அனுசரிக்காது கேனத்தனமாக "Italian for forigners" என்ற அமெரிக்காவில் வெளியான புத்தகத்தை வைத்துக் கொண்டு தில்லியில் உள்ள இத்தாலிய கல்விக் கழகம் எங்களுக்கு சொல்லிக் கொடுக்க முயல, இன்றளவும் என்னால் இத்தாலிய மொழியில் சரளம் பெற முடியவில்லை. ரஷ்ய மொழி கற்றதும் அதே போல தோல்வியில் முடிந்தது.

இப்பின்னூட்டத்தை என் உருது இடாலிக்ஸ் அனுபவம் பற்றியப் பதிவில் பினூட்டமாக நகலிடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/02/italics.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது