2/16/2006

அப்பா, அன்புள்ள அப்பா

ரயில் அரக்கோணத்திலிருந்து கிளம்பி சென்னையை நோக்கி வேகம் எடுத்தது. பம்பாயிலிருந்து அது வரை பொறுமையாக இருந்த நான் இப்போது வண்டி சீக்கிரம் போகாதா என்று ஏங்க ஆரம்பித்தேன். வண்டி சென்ட்ரலை அடைந்தது. கையில் ஒரு சிறு பெட்டிதான். ஆகவே விறுவிறுவென்று பூங்கா ரயில் நிலையத்தை அடைந்து மீனம்பாக்கத்துக்கு 30 பைசா கொடுத்து டிக்கட் வாங்கினேன். பழவந்தாங்கல் ஸ்டேஷன் அப்போது இன்னும் உருவாகவில்லை. (வருடம் 1971). மீனம்பாக்கத்திலிருந்து பொடி நடையாக 8 நிமிடம் நடந்தால் வீடு. பம்பாயில் அவ்வருடம் ஜனவரியில் வேலையில் சேர்ந்து சில பொது விடுமுறைகள் கூடி வந்ததால், வெறுமனே நான்கு நாட்கள் கேஷுவல் லீவெடுத்து, 11 நாட்கள் மார்ச்சில் கிடைத்தன. ஜாலிதான்.

அப்போதெல்லாம் வழிகளில் வீடுகள் ரொம்பவும் இல்லை. வெகு தூரத்திலிருந்தே என் வீடு என் கண்ணுக்கு தெரிய ஆரம்பித்தது. என் அப்பா தோட்டத்தில் ஒரு ஆவல் நிறைந்த புள்ளியாய் என்னை எதிர்நோக்கி நின்றார். தூரத்திலிருந்தே என்னைப் பார்த்து கையை வேகமாக ஆட்டினார். அவரைப் பார்த்த உடன் என் வயிற்றில் சுரீரென்று யாரோ ஒரு கத்தியை இறக்கியது போன்று தோன்றியது. எவ்வளவு ஆஜானுபாகுவான மனிதர், ஹிந்து பத்திரிகையில் நிருபராக பணியாற்றி, 1970ல் ஓய்வு பெற்றவர். அவரது சகநிருபர்களால் ப்ரிகேடியர் என்று மதிப்புடன் அழைக்கப்பட்டவர். ஆனால் இன்று? தளர்ந்த உடல் நிலை. "எப்படியிருக்கே அப்பா?" என்று கேட்க, "எனக்கு என்னடா குறைச்சல், நிம்மதியாக சொந்த வீட்டில் இருக்கேன்" என்று கூற என் கவலை அதிகரித்தது. குரல் தளர்ந்திருந்தது. அவருக்கு நான் மாதா மாதம் அனுப்பிய 100 ரூபாய் போதவில்லையோ என்ற எண்ணம் வேறு என்னைப்படுத்தியது. நேரடியாகக் கேட்டால் மனிதர் ஒன்றும் கூற மாட்டார். ஆகவே அவர் இல்லாத போது வங்கிக் கணக்குப் புத்தகங்கள் இரண்டையும் பார்த்தேன். பரவாயில்லை, கிட்டத்தட்ட 1000 ரூபாய் ஒவ்வொரு கணக்கிலும் நிலுவையில் இருந்தது. அவருக்கு பிக்ஸட் டிபாசிட்டுகளிலிருந்து வரும் மாத வட்டிகள் ஒழுங்காய் வருகின்றனவா என்பதையும் பார்த்து வைத்துக் கொண்டேன். செலவுகள் 500க்குள் அடங்குகின்றன என்பதையு அவரது கணக்குப் புத்தகத்தைப் பார்த்து தெளிவு செய்து கொண்டதும் மனதில் நிம்மதி.

பணக்கஷ்டம் இல்லை. ஆனால் மன நிம்மதி? நான் ஒரே பிள்ளை. என் அக்கா கல்யாணம் செய்து கொண்டு ஹைதராபாத்தில் வசித்து வந்தார். என் அம்மா 1960லியே இறந்து விட்டார். அவரை விட்டு நான் பிரிந்து இருப்பது இதுவே முதன் முறை.

அவரை பார்த்து என்னென்னவெல்லாமோ கூற வேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால் ஒருவித கூச்சம் என்னை தடுத்தது. என் முகபாவத்திலிருந்து ஒரு விதமாக ஊகம் செய்து கொண்ட அப்பாவும் அவசர அவசரமாக "சீக்கிரம் குளித்து விட்டு வாடா, காப்பி போட்டு வைத்திருக்கிறேன். உடனே மாம்பலம் போக வேண்டும், உன் அத்தை வீட்டில் நமக்கு சாப்பாடு என்று கூற, அந்த இடத்தைவிட்டு அப்போதைக்கு அகன்றேன். அத்தையின் இரண்டாவது மகளை (இப்போது என் மனைவி) பார்க்கப் போகும் சந்தோஷத்தில் சற்றே மனம் தெளிந்தேன்.

பிறகு நான் வீட்டிலிருந்த அடுத்த சில நாட்களுக்கு அப்பாவுடன் மனம் விட்டுப் பேச விடாமல் ஏதோ என்னைத் தடுத்தது. அவரும் என் முகபாவ மாற்றங்களை அவ்வப்போது உணர்ந்து ரேடியோவை பெரியதாக வைத்துக் கொண்டு இஸ்ரேலைப் பற்றி என்னுடன் பேசி என் கவனத்தைத் திருப்பினார். அச்சமயம்தான் வீட்டிலிருந்த பழைய ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழில் ஒரு கட்டுரையைப் பார்த்தேன். தலைப்பு "To father with love". படித்தேன். அதில் கட்டுரையாசிரியர் சித்தரித்த நிகழ்ச்சிகள் என்னுடையதைப் போலவே இருந்தன. நினைவிலிருந்து தமிழாக்கித் தருகிறேன்.

//"அப்பா உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா, அம்மா எனக்கு ஆறு வயதாயிருக்கும்போது இறந்து விட்டார். என்னை எவ்வளவு அருமையாக வளர்த்தீர்கள்? இருட்டைக் கண்டு அலறும் என்னை அன்புடன் அணைத்து ஆறுதல் கூறி இருட்டின் பயத்தை போக்கினீர்கள்? உங்களைப் போன்ற பல பெரியவர்கள் உலகத்தைத் திறம்பட நடத்துகிறீர்கள் என்ற உறுதியுடன் எங்களைப் போன்ற சிறியவர்கள் காலம் கழித்தோமே. இப்போது இப்படி பாதியாக ஒடுங்கி விட்டீர்களே" என்றெல்லாம் கூற நினைத்த என் முகத்தைப் பார்த்து அப்பா அவசர அவசரமாக வேலைக்காரனை என் பெட்டியை எடுத்து வருமாறு கூறிவிட்டு என்னை ஸ்டேஷனுக்கு வெளியே அழைத்து சென்றார்.

அவருக்கு உடம்பு சரியில்லை என்று அவர் நண்பர் அப்பாவுக்குத் தெரியாமல் எனக்குத் தகவல் தர நான் என் ஆறுவயது பையனை அழைத்து வந்திருந்தேன். குழந்தையும் தாத்தாவுடன் ஒட்டிக் கொண்டான். அவருடன் பேசவிடாமல் என் நாவை ஏதோ கட்டிப் போட்டது. அவரும் அம்மாதிரி சந்தர்ப்பங்கள் வரும்போதெல்லாம் ஏதோ அவசர வேலை நினைவுக்கு வந்து பைய நகர்ந்தார். புறப்படுவதற்கு இரண்டு நாள் முன்னால் எனக்கு திடீரென ஒரு பழைய நினைவு ஞாபகத்துக்கு வந்தது.

அப்போது எனக்கு எட்டு வயது. இருள் இன்னும் பிரியாத ஒரு விடியற்காலை பொழுது. திடீரென என் அறையில் ஒரு வெளிச்சம். அப்பாதான். வேட்டைக்கு செல்லும் உடையுடன் வந்து என்னை எழுப்பினார். "அடேய் குட்டிப் பயலே, வா நாம் இருவரும் வேட்டைக்கு போகலாம். சீக்கிரம் பல் விளக்கி விட்டு வா, ஜீப் காத்திருக்கிறது" என்று கூற நானும் தலைகால் புரியாத சந்தோஷத்துடன் பரபரப்பாக உடைகளை அணிய ஆரம்பித்தேன். அன்றைய வேட்டையில் ஒன்றும் பெரிதாகக் கிடைக்காவிட்டாலும் அந்த அனுபவமே நல்ல பரிசு.

என் பையனை இங்கு வந்ததிலிருந்து நான் கவனிக்கவில்லை எனத் தோன்றியது. அடுத்த நாள் விடிகாலையில் அவன் அறைக்கு சென்று விளக்கைப் போட்டேன். "அடேய் குட்டிப் பயலே, வா நாம் இருவரும் வேட்டைக்கு போகலாம். சீக்கிரம் பல் விளக்கி விட்டு வா, ஜீப் காத்திருக்கிறது" என்று நான் கூற, அவனும் தலைகால் புரியாத சந்தோஷத்துடன் பரபரப்பாக உடைகளை அணிய ஆரம்பித்தான். அச்சமயம் என் அப்பா உள்ளே வந்தார். ஒரு நிமிடம் அவருக்கு புரியவில்லை. திடீரென மலரும் நினைவுகளால் அவர் முகமும் மலர்ந்தது. தன் பிள்ளை (நான்), தன் பேரன் (என் மகன்) ஆகிய இருவரையும் பார்த்து "அடேய் குட்டிப் பயல்களா போய் நன்னா என்ஜாய் பண்ணுங்க" என்று கம்பீரமாக கூறினார். தான் ஆரம்பித்து வைத்த இந்த வழக்கம் பின்வரும் பரம்பரைகளிலும் வரும் என்பதை உனர்ந்த அவர் மனதில் சந்தோஷம் ஏற்பட்டது அவர் முகத்திலே புலப்பட்டது. கூறவேண்டியதை செயலில் காட்டிய திருப்தி எனக்கு.//


திடீரென்று எனக்குள் ஒரு ஒரு ஃப்ளாஷ். பழைய ரீடர்ஸ் டைஜஸ்ட் கட்டுரைகளை இதழ்களிலிருந்து தனியாகப் பிரித்து அவற்றையெல்லாம் ஒன்றாய் சேர்த்து பைண்டிற்கு கொடுத்தேன். முதல் கட்டுரையே "To father with love" தான். நான் மறுபடியும் பம்பாயிற்கு செல்லும் நாள் வந்தது. அன்று அப்பாவிடம் அந்த பைண்ட் செய்யப்பட்ட புத்தகத்தைக் கொடுத்து விட்டு ரயிலேறினேன்.

1974ல் சென்னைக்கு மாற்றலாகி வந்து தந்தையுடன் இருந்தேன். அப்போது எனக்கு கல்யாணமும் ஆகிவிட்டிருந்தது. சொந்த மருமகளே மாட்டுப்பெண்ணாய் வந்ததில் அப்பாவுக்கு ஒரே மகிழ்ச்சி. என் வீட்டம்மாவும் அவரை நன்றாகக் கவனித்து கொண்டார். தன் பேத்தியை பார்த்துவிட்டு, குழந்தையுடன் சில ஆண்டுகள் இருந்து விளையாடி விட்டு 1979ல் தன் அருமை மனைவியிடம் சென்றார் என் அப்பா.

அப்போதுதான் அவர் பெட்டியில் அடியில் வைக்கப்பட்டிருந்த அந்த பைண்ட் புத்தகத்தைப் பார்த்தேன். அதை புரட்டிப் பார்த்த போது அப்பக்கம் வந்த வீட்டு வேலைக்காரி "சாமி, நீங்க பம்பாயில் இருந்த போது தினம் இந்த புத்த்கத்தை ஒரு மணி நேரமாவது புரட்டாமல் இருக்க மாட்டார். அதுவும் புத்தக ஆரம்பத்தையே அதிகம் பார்த்தார்" என்று கூற, என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை. நான் சொல்ல நினைத்ததை அவர் சரியாகவே புரிந்து கொண்டார் என்ற ஆனந்தத்தால் வந்தது அந்த கண்ணீர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

24 comments:

நாமக்கல் சிபி said...

என்ன டோண்டு சார்,

நம்ம ஜோசஃப் சாருக்கு குடுக்கற எதிர் விருந்துல உங்கள இன்னும் காணோம்! சீக்கிரம் வந்து சேருங்க சார்!

http://pithatralgal.blogspot.com/2006/02/41.html

dondu(#11168674346665545885) said...

அவர் கொடுத்த விருந்தும் புரியவில்லை, நீங்கள் கொடுத்ததும் புரியவில்லை. படத்தில் க்ளிக் செய்ய வேண்டுமா, தெளிவாக இல்லையே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

நாமக்கல் சிபி said...

இல்லை சார், படத்துல கிளிக்கெல்லாம் செய்ய வேண்டியதில்லை. எல்லாம் பார்த்தால் பசி தீரும் கான்செப்ட் தான்.

Radha Sriram said...

Dondu,

very touchy post. I have seen many boys slowly....start keeping a distance from their fathers in their adolescence..(seen with my brothers....suppose if they wanted perimission to go for a movie or some thing...i used to be their mouthpiece!!!!)But they come and try to revive the relationship after a few years....sometimes it happens after a few couple of awkard years.....or it never happens.....very sad...happy you had a beautiful relationship with yr father.

Radha

dondu(#11168674346665545885) said...

உண்மைதான் ராதா அவர்களே. நான் பம்பாயிலிருந்து இட மாற்றம் பெற்று அவருடன் அவரது கடைசி 5 வருடங்களைக் கழித்தது நிஜமாக நான் செய்த அதிர்ஷ்டமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

அப்படியா நாமக்கல்காரரே. பார்த்தால் போகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நாமக்கல்லார் அவர்கள் பதிவில் நான் இட்ட இந்த பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காக காத்திருக்கிறது. பார்க்க: http://pithatralgal.blogspot.com/2006/02/41.html

எனக்கு ஃப்ரையம்ஸ் போதும். அழைக்க வந்த இடத்தில் என் அப்பாவை கண்டு கொள்ளாமல் போன உங்க பேச்சுக் கா.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வெளிகண்ட நாதர் said...

என்ன சார் டோண்டுவின் 'தவமாய் தவமிருந்து' போட்டுட்டீங்களா!

dondu(#11168674346665545885) said...

நன்றி வெளிகண்ட நாதர் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்

சீமாச்சு.. said...

நல்லா இருந்தது டோண்டு சார்..

அருமையாக ஒரு தகப்பன் மகனின் உறவின் பரிமாணங்களை வெளிப்படுத்தியுள்ளீர்கள்..
பாராட்டுக்கள்.
என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு...

dondu(#11168674346665545885) said...

மிக்க நன்றி சீமாச்சு அவர்களே. வரவுக்குள் செலவை அடக்க வேண்டும், அதே நேரம் கருமியாகவும் இருக்கக் கூடாது என்பதை எனக்கு போதிக்காமல் வாழ்ந்து காட்டி நானே என் சுயவிருப்பத்தின் பெயரில் அதை கடைபிடிக்க செய்தவர் என் தந்தை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

நாமக்கல் சிபி said...

ரொம்ப நெகிழ்ச்சியான பதிவு சார்!

அது சரி தங்கள் பின்னூட்டம் எதுவும் இன்னும் என் மட்டுறுத்தலுக்காக வரவில்லை.

மனம் பிறழ்ந்த அந்த மனிதரின்(வேறு யார் போலிதான்) பின்னூட்டம் 2 வந்திருந்தது. அதுவும் தங்கள் வலைப் பூவில் நான் பின்னூட்டமிடக்கூடாது என்று கூறியிருந்ததை மீறி நான் செய்து விட்டேனாம்.

Muthu said...

டோண்டு அவர்களே,
நெகிழ்ச்சியான பதிவு.

ILA (a) இளா said...

இக்கணம் என் கண்களில் கண்ணீர், வேறெதுவும் தோணவில்லை.

Muthu said...

////மனம் பிறழ்ந்த அந்த மனிதரின்(வேறு யார் போலிதான்) பின்னூட்டம் 2 வந்திருந்தது. அதுவும் தங்கள் வலைப் பூவில் நான் பின்னூட்டமிடக்கூடாது என்று கூறியிருந்ததை மீறி நான் செய்து விட்டேனாம்.////

இப்படியே ஒவ்வொருத்தருக்கும் மின்னஞ்சல் அனுப்பி அவர் எதிர்பார்த்ததுக்குத் தலைகீழாய் டோண்டு அவர்களின் வலைப்பதிவினைப் பிரபலப்படுத்திக்கொண்டிருக்கிறார்.

நானறிந்த சிலருக்குப் போலியின் மிரட்டல் மின்னஞ்சல் தமக்கு வந்த பிறகு இந்த வலைப்பதிவைத் தினம் படிப்பது தம்மையறியாமல் பழக்கமாகிவிட்டதாம் .

டோண்டு அவர்கள் "வெப் கவுண்டர்" வைத்திருந்தால் எத்தனை பேர் தினமும் இப்பதிவைப் படிக்கிறார்கள் என்று அறியலாம். உறுதியாக என்னால் சொல்ல முடியும், போலியால் இவ்வலைப்பதிவுக்குத் தொடர்ந்து வாசிக்கும் பல வாசகர்கள் கிடைத்துள்ளார்கள். எல்லாம் ரிவர் சைக்கலாஜிகல் எபக்ட்தான் காரணம் . தொடரட்டும் போலியின் சேவை. :-)))

dondu(#11168674346665545885) said...

நாமக்கல்லார் அவர்கள் பதிவில் நான் இட்ட இந்த பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காக காத்திருக்கிறது. பார்க்க: http://pithatralgal.blogspot.com/2006/02/41.html
எனக்கு ஃப்ரையம்ஸ் போதும். அழைக்க வந்த இடத்தில் என் அப்பாவை கண்டு கொள்ளாமல் போன உங்க பேச்சுக் கா.

அன்புடன்,
டோண்டு ராகவன்
பின் குறிப்பு: இப்பின்னூட்டத்தை நான் ஒரு முறைக்கு மேல் அப்போது இட வேண்டியிருந்தது. காரணத்தை விளக்குவேன். டிஷ்னெட் செய்த சொதப்பலே காரணம். ஒவ்வொரு முறையும் பின்னூட்டத்தை பப்ளிஷ் செய்ய பட்டனை அமுக்கும்போதும் this page cannot be published என்று வந்தது. ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறையோ அல்லது அதற்கும் குறைவான இடைவெளியிலோ தொடர்பு இழந்து ஒரே படுத்தல். கடைசியில் பின்னூட்டமிட்டேன் என்று படவே என் பதிவுக்கு வந்து நகல் பின்னூட்டமிட்டேன். அங்கும் இரண்டு முறை டிஷ்னெட் தண்ணீர் காட்டியது. நேற்று இரவிலிருந்து இதே ஹிம்ஸை செய்து வருகிறது டிஷ்னெட். மன்னிக்கவும்.

இப்பின்னூட்டத்தையும் என்னுடைய அப்பா, அன்புள்ள அப்பா பதிவிலும் நகலிடுகிறேன்.

dondu(#11168674346665545885) said...

Danke sehr Muthu. Du hast sicher recht. Ich habe den Counter schon. Dieser Pooli Dondu hat mir enorm geholfen, mir eine weite Leserscahft zu schaffen.

Du hast doch nichts dagegen, dass ich Dich gedutzt habe?

Mit herzlichen Gruessen,
Dondu N.Raghavan

dondu(#11168674346665545885) said...

மிக்க நன்றி இளமுருகு அவர்களே.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள்
புன்கணீர் பூசல் தரும்

என்பது பொய்யாமொழியல்லவா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நன்றி சதீஷ் அவர்களே. இப்பதிவை போட்டதன் மூலம் என் தந்தையையே மறுபடி பார்ப்பது போல இருந்தது எனக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பழூர் கார்த்தி said...

அருமையான பதிவு டோண்டு அவர்களே.. நாம் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் பெற்றோருடன் இடைவெளி வந்துவிடுவதை தவிர்க்க வேண்டும்.. நமது தற்போதைய வாழ்க்கைக்கு அவர்களின் தியாகங்களும், முயற்சிகளுமே காரணம் என்பதை மறந்து விடக்கூடாது.. உங்களது பதிவு இன்னொரு 'தவமாய் தவமிருந்துதான்'... சந்தேகமில்லை !!

dondu(#11168674346665545885) said...

நன்றி சோம்பேறி பையன் அவர்களே,

நான் பம்பாயில் இருந்த மூன்றரை வருடங்களிலும் என் தந்தை இங்கு எங்கள் நங்கநல்லூர் வீட்டில் தனியாகவே இருந்தார். தானே சமையல் செய்து சாப்பிட்டு கொண்டிருந்தார். நான் எப்போது சென்னைக்கு வந்தாலும் கரண்டியை பிடித்து சமையல் செய்ய சென்று விடுவேன்.

ரிடையர் ஆன பிறகும் அவர் கடைசி காலம் வரை சுறுசுறுப்பாகவே இருந்தார். அவருடைய கடைசி ஆண்டுகள் அவருடன் இருந்து சேவை செய்ய எனக்கு கொடுத்துவைத்திருந்தது கடவுளின் அருளே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

சீமாச்சு அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://seemachu.blogspot.com/2006/02/11_18.html
மிக நெகிழ்ச்சியான பதிவு சீமாச்சு அவர்களே. எங்கே உங்கள் அம்மா கேட்டபடி வளையல் வாங்கி போடாமல் விட்டீர்களோ என்ற பதைபதைப்புடன் படித்தேன் நல்ல வேளை வாங்கித் தந்து விட்டீர்ர்கள்.

பசுக்களின் துயரம் பற்றி படித்தபோது நெகிழ்ந்து விட்டேன்.

இப்பின்னூட்டத்தின் நகலை என்னுடைய "அப்பா, அன்புள்ள அப்பா பதிவில் பின்னூட்டமாக நகலிடுவேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/02/blog-post_16.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

iniyavan said...

டோண்டு சார்,

முதல்ல நீங்க என் பதிவிற்கு வந்து பின்னூட்டம் இட்டதை பெருமையாக கருதிகிறேன்.

அடுத்து, உங்கள் பதிவப்பற்றி.

அருமையான பதிவு. அந்த காலத்தில் இருந்த அப்பா மகன் உறவில் இருந்த உணர்வுகளை அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்.

பா.ராஜாராம் said...

கண்கள் நிறைந்து போச்சு டோண்டு சார்..

மிக நிறைவான பதிவு.பகிர்வு.உங்கள் கைகளை பிடித்து கொண்டு சற்று நேரம் கலங்கி நிற்கணும் போல் ஒரு மனநிலை தோன்றியது...

மிக்க நன்றி சார்.இந்த அறிமுகத்திற்கு.ஒருவேளை என் தளத்தில் உங்கள் பின்னூட்டம் இல்லை எனில் இதை மிஸ் பன்னி இருப்பேன்.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது