2/02/2006

சினிமா சம்பந்தமாக சில விஷயங்கள்

விகடனில் அறுபதுகளில் மூன்று வகையான விமரிசனங்கள் வரும். சற்றுப் படித்த மக்கள் பார்க்கும், நகரங்களில் மட்டும் நன்றாக ஓடக் கூடிய நாசூக்கானத் திரைப் படங்களுக்கு சேகர் - சந்தர் விமரிசனம் செய்வர். குடும்பப் படங்களுக்கு ஒரு கணவன் மனைவி ஜோடி (பெயர் சட்டென்று நினைவுக்கு வரவில்லை, ஒரு வேளை ஷண்முகம் பிள்ளை மற்றும் மீனாட்சி அம்மாள்?), கிராமீய மற்றும் பி, சி சென்டர்களில் ஓடக்கூடியப் படங்களுக்கு முனுசாமி மற்றும் மாணிக்கம் என்று விமரிசனம் செய்வார்கள்.

குமுதம் அதுபாட்டுக்குத் தூள் கிளப்பும்.

சில உதாரணங்களைப் பார்ப்போம்:

படம்: பாதகாணிக்கை (1961)
விமரிசனம்: முனுசாமி மற்றும் மாணிக்கம்
முனுசாமி:
"வீடு வரை உறவு,
வீதி வரை மனைவி,
காடு வரை பிள்ளை,
கடைசி வரை யாரோ?"
மாணிக்கம்:
"பாதி வரை பழசு,
பாதிக்கு மேல் புதுசு,
கடைசி வரை இருந்து,
பார்ப்பதுதான் யாரோ?"
அப்பாடலின் மெட்டிலேயே விமரிசனத்தைப் படிப்பது உத்தமம்.

படம்: தாயின் கருணை (விமரிசனம் குமுதம்): (1966)
படத்திலிருந்து இரண்டு ஸ்டில்கள்.
முதல் ஸ்டில்லில் முத்துராமன் அப்படத்தில் வரும் அம்மா நடிகையிடம் ஏதோ கெஞ்சுவது போன்ற முகபாவத்துடன் இருப்பார். இரண்டாம் ஸ்டில்லில் அப்பா நடிகர் ஒருவர் முத்துராமனின் கழுத்தில் துண்டு போட்டு இறுக்குவார்.

முதல் ஸ்டில்லின் கீழ் எழுதப்பட்டது: "தாயின் கருணை எப்படியிருந்தது என்று சொல்ல மாட்டாயா?"
இரண்டாம் படத்தின் கீழ்: "அந்தப் பேச்சை எடுத்தாலே கெட்ட கோபம் வரும் எனக்கு"

படம்:மணிமகுடம். விமரிசனம் குமுதத்தில் (1967)
இதற்காகப் படத்திலிருந்து மூன்று ஸ்டில்கள் உபயோகிக்கப்பட்டன.

முதல் படத்தில் விஜயகுமாரி தன் இடுப்பில் இரன்டு கைகளையும் வைத்துக் கொண்டு அதட்டும் முகபாவத்தில் இருப்பார், இரண்டாம் படத்தில் எஸ்.எஸ்.ஆர். ஜெயலலிதாவின் இடையை சுற்றி அணைத்துக் கொண்டு எதையோ காட்டுவது போல இன்னொரு கையை நீட்டியிருப்பார். மூன்றாம் படத்தில் நம்பியார் அதிர்ச்சியடைந்த முகபாவத்தில் காணப்படுவார்.

முதல் பட வசனம்: "ஓஹோ, நீர்தான் மணிமகுடத்தைத் திருடியவரோ?"
இரண்டாம் பட வசனம்: நான் இல்லை, அவர்தான்."
மூன்றாம் பட வசனம்: "நானா?" (நம்பியாரை மிமிக் செய்யும் விவேக் குரலில்)

ஸ்ரீவள்ளி படம் என்று நினைக்கிறேன். சிவாஜி, பத்மினி நடித்தது. குமுதம் விமரிசனம் ஒரு பக்கத்தில் வந்தது. அது முழுக்க முருகா முருகா முருகா என்றே எழுதப்பட்டிருந்தது. அதே குமுதத்தில்தான் என்று நினைவு. "தாய் மகளுக்குக் கட்டியத் தாலி" படத்துக்கு விமரிசனம் ஒரே சொல்லில் ஸ்டில் படத்துடன் வந்தது. "வெட்கக்கேடு".

மருத நாட்டு வீரனுக்கு விகடனில் வந்த முனுசாமி - மாணிக்கம் விமரிசனத்தில் மாணிக்கம் தான் அப்படம் பார்த்த போது முதலில் வந்த விளம்பரங்களிலிருந்து ஆரம்பித்து, காண்பிக்கப்பட்ட ஆங்கிலப் படத்தின் ட்ரைலர் பற்றிக் கூறி, பீஹாரில் வந்த வெள்ளம் பற்றி வந்த செய்திப் படத்தை உருக்கமாக விவரித்து விட்டு, "கடைசியில் எம்.என்.வீரனையும் காண்பித்தார்கள்" என்று கூறுவார். முனுசாமி "ஓகோ அப்படியா" என்று கேட்க விமரிசனம் அத்துடன் முடிவு பெறும்.

அதே போல அமுதவல்லி (1959) என்னும் படத்தைப் பற்றிய விமரிசனத்தில் கல்கியில் கடைசியாக கூறப்பட்டது; நினைவிலிருந்து தருகிறேன். "படத்தில் சந்திரகாந்த ரசம் அருந்தினால் பழைய ஞாபகங்கள் மறையும் எனக் கூறுகிறார்கள். அது கிடைத்தால் நாமும் இப்படத்தை மறக்க தோதாக இருக்கும்".

அதைவிட ஸ்வாரஸ்யமான விஷயம் பிற மொழி படங்களுக்கு தமிழில் போடும் தலைப்புகள். உண்மையாகவே வந்த தலைப்புகளைப் பார்க்கும் முன்னால் இதைக் கிண்டல் செய்து குமுதம் ப்ரபோஸ் செய்த தலைப்புகள் அடைப்புக் குறிகளுக்குள் ஒரிஜினல் டைட்டிலுடன்:

யாரோ அங்கே எட்டிப் பார்க்கிறார் (யாதோங்கீ பாராத்)
குப்தனின் ஞானம் (குப்த்க்யான்)
கோரமான காகம் (கோரா காகஜ்)
இஞ்சி (ஜஞ்சீர்)

இப்போது உண்மையாகவே வந்த தலைப்புகள்:
ஆறடி ஆழத்தில் அநியாயம் (தோ கஜ் ஜமீன் கே நீச்சே)
வந்தேன் உதை மாஸ்டர் (ஸ்பை ஸ்மாஷர்)
ஆயிரத்தில் ஒருவன் (க்ரிம்ஸன் பைரேட். இதில் பர்ட் லங்காஸ்டர் ஆயிரத்தில் ஒருவன் எம்.ஜி.ஆர். போல கப்பல் தளத்தில் இடுப்பில் கைகளை வைத்து போஸ் கொடுத்ததால் வந்தது)
அன்பே வா (கம் செப்டம்பர் கதையிலிருந்து தழுவப்பட்டதால். தமிழக ராக் ஹட்ஸன் என்று எம்.ஜி.ஆரையும் ஹாலிவுட் எம்.ஜி.ஆர். என்று ராக ஹட்ஸனைக் குறிப்பிட்டதும் உண்டு. ஆனால் ஓரினச் சேர்க்கை காரணமாய் ராக் ஹட்ஸனுக்கு எய்ட்ஸ் வந்து அவர் இறந்ததும் இம்மாதிரி கூறுவது வேகமாக புழக்கத்திலிருந்து மறைந்தது.)
தம்புராட்டியின் முதலிரவு (தம்புராட்டி)
மாமனாரின் இன்ப வெறி (ஒரிஜினல் டைட்டில் தெரியவில்லை, யாராவது தெரிந்தால் கூறவும்)

இப்போதும் அம்மாதிரி தமிழாக்கத் தலைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் படங்கள் பார்க்கும் ஆசை குறைந்ததால் எனக்கு இவற்றை பற்றி அறியும் ஆசையும் போய் விட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

14 comments:

அபுல் கலாம் ஆசாத் said...

ராகவன் சார்,

மாமனாரின் இன்ப வெறி = வழு.

அன்புடன்
ஆசாத்

dondu(#11168674346665545885) said...

மிக்க நன்றி ஆசாத் அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நீதிக்குப் பின் பாசம் படத்தின் விமரிசனம் நானும் அக்காலத்தில் படித்திருக்கிறேன். இங்கு குறிப்பிட மறந்து விட்டேன். ஞாபகப்படுத்தியதற்கு நன்றி நாட்டாமை அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

நிலா said...

சுவாரஸ்யமான பதிவு. வாழ்த்துக்கள்

dondu(#11168674346665545885) said...

நன்றி நிலா அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Raj Chandra said...

கல்கியின் விமர்சனங்கள் ஒரு தொகுப்பாக வந்திருக்கின்றன('மனிதன் எப்படி உயர்கிறான்'). அதில் சகட்டுமேனிக்கு பல படங்களைத் தாக்கியிருப்பார்(முக்கியமாக 'சம்சாரம்' மற்றும் 'மங்கம்மா சபதம்').

விகடனில் 'அகல்விளக்கு' என்ற படம்(விஜயகாந்த் நடித்த முதல் படம் என்று நினக்கிறேன்) பற்றிய விமர்சனம்: 'இப்படத்தைப் பார்த்ததற்கு வெட்கப்படுகிறோம்' என்று ஒரு வரி மட்டும் எழுதியதாக நினைவு.

நியூயார்க்கரில் வரும் ஆங்கில பட விமர்சனங்கள் நாம் வாய் பிளந்து பார்க்கும் படங்களை சில வரிகளில் ஏன் அவை அபத்தம் என்று விமர்சித்திருப்பார்கள். பார்க்க : http://www.newyorker.com/online/filmfile/

dondu(#11168674346665545885) said...

நன்றி ராஜ் சந்திரா அவர்களே. கல்கி பல படங்களைக் கிழித்திருக்கிறார். அதற்கு பழி வாங்குவது போலவே அவருடைய "தியாக பூமி" படம் மற்றவர்களால் கிழிக்கப்பட, அவர் பதிலுக்கு எல்லோரையும் கிழிக்க ஒரே அமர்க்களம் போங்கள். படமும் நல்ல ஹிட் என்று கேள்விப்பட்டேன். தியாக பூமியை பற்றி நிறையக் கூறிக்கொண்டே போகலாம்.

அன்புடன,
டோண்டு ராகவன்

மகேஸ் said...

அப்போது மட்டுமல்ல, சமீபத்தில் பாய்ஸ் படத்திற்கு ஆ.விகடன் விமர்சனம் கூட ஒரே வார்த்தைதான். வார்த்தை மறந்து விட்டது. யாராவது நினைவு படுத்துங்கள்.

மகேஸ் said...

ங், ஞாபகம் வந்துடுச்சி, 'சீய்ய்ய்' என்பதுதான் அது

U.P.Tharsan said...

இதிலயிருந்து அந்த காலத்திலேயே வெற்றுமொழிப்படங்கள் கொப்பியாகி தமிழுக்கு வந்திருக்கிறது என தெரிகிறது. :-))

Raj Chandra said...

மகேஸ், பாய்ஸ் படத்திற்கு "சீ" என்றோ "சே" என்றோ விமர்சனம் வந்தது. சுஜாதா 'கற்றதும் பெற்றதும்' பகுதியில் இதை எதிர்க்கும் முகமாக தமிழ் படங்கள் நிர்வகிக்கும் முறையை மட்டம் தட்டி ஆந்திரா எவ்வளவோ தேவலாம் என்றெல்லாம் புலம்பியிருந்தார்.

ராகவன், மற்ற தலைப்புகள்(1980 களில் திருச்சியில் அடிக்கடி கண்ணில் பட்ட தலைப்புகள்):

1) அஞ்சரைக்குள்ள வண்டி
2) அக்னி சிறகுள்ள தும்பி
3) கிள்ளாதே(இதை போஸ்டரில் சர்வ காரியமாக ஆங்கிலத்தில் "Don't Pinch" என்று மொழிப்பெயர்த்திருப்பார்கள் :). என்றும் அது தார் பூசப்பட்டதில்லை :) )

dondu(#11168674346665545885) said...

நன்றி மகேஸ் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

தர்சன். நீங்கள் கோப்பி என்று கூறுகிறார்கள். சம்பந்தப்பட்டவர்கள் ரீ மேக் என்று கூறுவார்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

தியாக பூமி திரைக்கதை எழுதத்தான் கல்கி நியமிக்கப் பட்டார். படத்தின் ஸ்டில்கள் விகடனில் கதையுடன் படங்களாக வந்தன. அக்காலத்தில் இது மிகப் பெரிய புதுமை. எல்லா ஊர்களிலும் விகடன் பத்திரிகை இதழ்கள் ரயில்வே ஸ்டேஷனிலேயே விற்றுத் தீர்ந்தன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது