2/03/2006

மலர் மன்னனுக்கு நன்றி

மின்னஞ்சல்கள் உபயோகமாகவே உள்ளன. எரிதங்கள் என்பது கூட அதனுடைய தவறான உபயோகத்தால் வருவதே. ஆனால் பெரும்பாலான நேரங்களில் உபயோகமானத் தகவல்களை அவை தருகின்றன. பழம்பெரும் எழுத்தாளர் மலர் மன்னன் அவர்கள் எனக்கு அனுப்பிய மின்னஞ்சல் ஒன்று இங்கே உங்கள் முன் பதிவாக வருகிறது. அவருக்கு என் நன்றி. இதை என் ஆங்கிலப் பதிவிலும் போட்டுள்ளேன். எங்கள் மொழிபெயர்ப்பாளர் தலைவாசலிலும் இது பற்றி பதிவு போட்டுள்ளேன்.

நல்ல உடல் நலன் - ஸ்ட்ரோக்கை அடையாளம் காணுங்கள்!

நீங்கள் தனிப்பட்ட முறையில் ஆரோக்கியமானவராகவே இருக்கலாம். இருந்தாலும் கீழே கூறப்பட்டதை கவனமாகப் படிக்கவும். இதன் மூலம் நீங்கள் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும். அந்த உயிர் உங்கள் உறவினருடையதாகவோ, நண்பருடையதாகவோ அல்லது முன்பின் தெரியாதவருடையதாகவோ கூட இருக்கலாம்.

சென்னை கடற்கரையோரம் உள்ள ஒரு உல்லாச மையத்தில் திறந்த வெளியில் ஒரு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. லக்ஷ்மி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நடக்கும் போது திடீரென கால் தவறி கீழே விழுந்தார். விழுந்ததும் உடனேயே வேகமாக எழுந்து விட்டார். தனக்கு ஒன்றும் இல்லை என்றும் திடீரென ஒரு கல் தடுக்கி கீழே விழுந்ததாகக் கூறி விட்டார். பிறகு தொடர்ந்து நடந்த விருந்திலும் அவர் கலந்து கொண்டார். ஆனாலும் அவர் ஒரு வித சங்கடத்தில் இருந்ததாகத் தோன்றியது.

அன்று இரவு அவர் கணவரிடமிருந்து நண்பர்களுக்கு தொலைபேசி வந்தது. அவர் மனைவி லட்சுமி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு மாலை 6 மணியளவில் காலம் சென்றார். அவருக்கு வந்தது ஒரு ஸ்ட்ரோக், ஆனால் அந்தத் தருணத்தில் யாருக்கும் அது தெரியவில்லை. அது தெரிந்து, சில முன்ஜாக்கிரதை ந்டவடிக்கை எடுத்திருந்தால் அவர் இன்றும் உயிருடன் இருந்திருக்கலாம்.

கீழே குறிப்பிட்டுள்ளதைப் படிக்க உங்களுக்கு ஒரு நிமிடம் ஆகலாம், அவ்வளவுதான்:

ஸ்ட்ரோக் ஏற்பட்டு 3 மணி நேரத்திற்குள் தன்னிடம் நோயாளியைக் கொண்டு வந்தால் தன்னால் அவரை முழுக்கவே குணமாக்க முடியும் என்று ஒரு நரம்பியல் நிபுணர் கூறுகிறார். ஆம், முழுமையாகவே. இதில் செய்ய வேண்டியதெல்லாம் ஸ்ட்ரோக்கை அடையாளம் கண்டு, ஊர்ஜிதப்படுத்தி மூன்று மணி நேரத்திற்குள் ஒரு நரம்பியல் நிபுணரிடம் கொண்டு செல்வதேயாகும். இது கஷ்டமான காரியமே, இருப்பினும் செய்யப்பட வேண்டிய காரியம். அதிலும் முதல் ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவ மனையை அடைவது முக்கியம். "தங்க நேரம்" (Golden Hour) என்று குறிப்பிடப்படும் இதை பற்றி மருத்துவர்களுக்கும் மற்ற அவசர நிலை மருத்துவப் பணியாளர்களுக்கும் நன்றாகவே தெரியும்!

ஸ்ட்ரோக்கை அடையாளம் காண்பது

நீங்கள் இதற்கான "3" சோதனைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். மேலே படியுங்கள், அறிந்து கொள்ளுங்கள்!

ஸ்ட்ரோக்குகளை அடையாளம் காண்பது கடினமே, இருப்பினும் மருத்துவர்கள் கீழ்க்கண்ட சிறு சோதனைகளைப் பரிந்துரைக்கின்றனர்:

1. சம்பந்தப்பட்ட நபரை புன்னகை புரிய சொல்லவும்.

2. அவரை இரு கைகளையும் உயர்த்தச் சொல்லவும்.

3. அவரை ஒரு சாதாரண வாக்கியத்தைத் திருப்பிச் சொல்லச் சொல்லவும். (எடுத்துக்காட்டாக, "இன்னிக்கு வெய்யில் ரொம்பத்தான் அதிகம்)

மேலே கூறியதில் ஏதேனும் ஒன்றைச் செய்வதில் பிரச்சினை என்றாலும் அவசர மருத்துவ சேவையை தொலைபேசியில் கூப்பிட்டு நீங்கள் கண்டறிந்ததை விவரிக்கவும்.

மருத்துவத் துறையில் இல்லாதவர்களும் இம்மாதிரி ஸ்ட்ரோக்கின் அறிகுறிகளை கண்டு கொள்ள முடியும் என்றான பிறகு ஆய்வாளர்கள் இந்த மூன்று சோதனைகளை எல்லோருமே கற்றுக் கொள்ள வேண்டுமென வலியுறுத்துகின்றனர். இதனால் உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டு மூளைக்கு பாதிப்பு உண்டாவதிலிருந்து தடுக்க இயலும்.

இந்தப் பதிவை படிப்பவர்கள் தங்கள் நண்பர்கள் பத்து பேருக்காவது அதை மின்னஞ்சல் செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். இதனால் பல உயிர்கள் காப்பாற்றப்படும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6 comments:

rv said...

டோண்டு சார்,
மிகவும் அவசியமான பதிவு.

ஸ்ட்ரோக் பற்றி அதி முக்கியமான விஷயம். ஐம்பது சதவிகித கேஸ்களில் Transient Ischaemic Attack என்று ஒன்று யானை வருமுன் மணியோசையாக வரும். அதைச் சரியாக அடையாளம் கண்டுகொண்டு மருத்துவரை அணுகினாலே ஆபத்திலிருந்து தப்பித்து விடலாம்.

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சம்பவத்தில், ஒரு காரணமும் இல்லாமல் அப்பெண் நிலைதடுமாறி விழுந்தது TIA வே தான். ஆனால் அதை கவனிக்காமல் விட்டதே பிரச்சனைக்கு காரணம். மேலும் ஒன்றுக்கு மேற்மட்ட முறைகளும் TIA வரலாம்.

எந்த பகுதி மூளை பாதிக்கப்படுகிறதோ அதைப் பொருத்தே பாதிப்புகளும் இருந்தாலும், உலகளவில், நீங்கள் சொன்ன மூன்றையும் சேர்த்து இன்னும் இரண்டு உள்ளன. அவற்றை பட்டியலாகவே இட்டுவிடுகிறேன். இந்த ஐந்தையும் hallmark ஆக் கொண்டே பொதுமக்கள் எளிதில் ஸ்ட்ரோக்கை அடையாளம் கண்டுவிடலாம்.

1. புரிந்து கொள்ளலில் தீடீர்க்குழப்பம். பேசுவதில் சிக்கல். இதற்கு நீங்கள் சொன்ன மாதிரி ஒரு சிறு வாக்கியத்தை மறுமுறை சொல்லவோ அல்லது ஒரு சாதாரண கேள்விக்கு விடை சொல்லவோ சொல்லி கேட்கலாம்.

2. கை, கால், முகம் இவற்றில் ஒன்று திடீரென்று மரத்துப் போய் உணர்ச்சியற்று இருத்தல். பெரும்பாலும் உடலின் இடமோ, வலமோ ஒரு பாதி மட்டும் பாதிக்கப்படும். சோதிப்பதற்கு கையை தூக்கினால் இறந்தவர் கை போல் விழும். மேலும் உணர்ச்சியற்று இருக்கும்.

3. திடீரென்று பார்வையில் கோளாறு, மங்கின பார்வை போன்றவை. ஒரு கண்ணிலோ இரு கண்ணிலோ இருக்கலாம்.

4. திடீரென்று நடப்பதில் சிக்கல், balanceஉம் co-ordinationஉம் தவறிப் போகுதல்.

5. திடீரென்று காரணமேயில்லாமல் பொறுக்க முடியாத கடும் தலைவலி. இது விட்டு விட்டு வரலாம் (paroxysmal).

முக்கியமாக ஏற்கனவே TIA வந்தவர்கள், நீரிழிவு நோய், ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். மேற்கூறிய வற்றில் ஒன்று வந்தாலும், அல்லது வந்து போனாலும் அதை இக்னோர் செய்யாமல், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

நன்றி.

dondu(#11168674346665545885) said...

மருத்துவர் என்ற முறையில் நீங்கள் இட்ட இந்தப் பின்னூட்டம் மிகவும் மதிப்பு வாய்ந்தது. மிக்க நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

U.P.Tharsan said...

ஒரு நல்ல பதிவு ஒன்றை தந்தமைக்கு மிக்க நன்றி.

dondu(#11168674346665545885) said...

நன்றி தர்சன் அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மகேஸ் said...

கோடை காலத்தில் வரும் சன் ஸ்ட்ரோக் வந்தால் என்ன முதலுதவி செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறினால் சென்னை பொதுமக்களுக்கு உபயோகப்படும்.

dondu(#11168674346665545885) said...

மட்ட்றுத்தல் தாமதத்துக்கு மன்னிக்கவும். ஹெர்னியா அறுவை சிகிச்சை செய்து கொண்டு சற்று நேரம் முன்புதான் வீட்டிற்கு வந்தேன். சன் ஸ்ட்ரோக்குக்கான முதலுதவியும் சென்னை போன்ற ஊர்களுக்கு தேவைதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது