கிணற்று நீரை இறைக்க இறைக்கத்தான் அதில் தண்ணீர் சுரந்து கொண்டே வரும். அதே போல புதிதாகக் கற்றுக் கொண்டிருந்தால்தான் அறிவும் வளரும். இதுதான் இயற்கையின் நியதி. கல்விக்கு அளவே கிடையாது. நூறாண்டுகள் வாழ்ந்தாலும் வாழ்வின் கடைசி நாளன்று கூட ஏதாவது புதிதாகக் கற்க வேண்டியிருக்கும்.
சிலருக்கு கல்லூரியில் சேர்ந்து படித்து ஏதாவது பட்டம் பெற்றவுடனேயே தான் மிகுந்த அறிவு பெற்று விட்டதாக ஓர் எண்ணம் தோன்றி விடும். இது ரொம்ப ஆபத்தானது. உண்மையைக் கூறப்போனால் ஒருவன் பட்டப் படிப்பு முடித்ததும்தான் வாழ்க்கைக் கல்வியையே கற்க ஆரம்பிக்கிறான். அவ்வாறு அக்கல்வியை அவன் பெறத் தொடங்கியதும்தான் தனக்குத் தெரியாத இன்னும் பல விஷயங்கள் இருப்பதையே அவன் அறிகிறான்.
மேலும், ஒருவன் ஒரு விஷயத்தைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள ஆரம்பிக்கும்போதுதான் இத்தனை நாள் எத்தனை அறியாமையில் அவன் இருந்திருக்கிறான் என்பது அவனுக்கு புலப்படுகிறது. ஏட்டுக் கல்வி அவனுக்கு பல விதிகளைப் பற்றிச் போதிக்கிறது. ஆனால் வாழ்க்கைக் கல்வியிலோ அவன் பார்ப்பது பல விதி விலக்குகளை.
இதைத்தான் ஔவையார் கூறுகிறார், கற்றது கைம்மண்ணளவு, கல்லாததது உலகளவு என்று. இதை நிரூபிப்பது போலவே அவர் வாழ்விலும் ஒரு நிகழ்ச்சி நடந்தது. ஒரு நாள் பட்டப் பகலில் நீண்ட தூரம் நடந்த களைப்பில் அவர் பசியுடன் ஒரு நாவல் மரத்தினடியில் இளைப்பாறிக் கொண்டிருந்தார். அப்பக்கம் சில ஆடுகளை ஓட்டிக் கொண்டு ஒரு 12 வயது பாலகன் வந்தான். ஔவையாரைப் பார்த்ததும் அவன் கேட்டான் "என்ன பாட்டி, மரத்திலேறி, பசிக்கு சில பழங்கள் போடட்டுமா" என்று. ஔவையும் சரி என்று சொல்ல, அவன் மரத்தில் ஏறிக் கொண்டே கேட்டான், சுட்டப் பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா என்று. ஔவைக்கு அவன் சொன்னது புரியவில்லை, இருப்பினும் சமாளித்துக் கொண்டு கூறினார், "மகனே, நான் கிழவி, சுட்டப் பழம் சாப்பிடுவது கஷ்டம், சுடாத பழமே போடு" என்று. அவனும் சில பழுக்காத, மற்றும் பழுத்த நாவல் பழங்களைப் பறித்துப் போட்டான். ஔவை பழுத்தப் பழங்களாக தேடி எடுத்து, அவற்றில் ஒட்டிக் கொண்டிருந்த மண்ணை வாயால் ஊதி விலக்கினார். அப்போது பையன் கேட்டான், "என்ன பாட்டி, பழம் சுடுகிறதா என்று. ஔவையார் அவனைப் பார்த்து, "என்னையே மடக்கிய நீ யார் அப்பா?" என்று கேட்க பாலகன் மறைந்து முருகப் பெருமான் தோன்றினார்.
அதே போல பொய்யாமொழிப் புலவர் என்ற பெயருடைய ஒருவர் "அம்மையப்பனைப் பாடும் வாயால் ஆண்டி சுப்பனைப் பாடுவேனோ" என்று கூறி, சிவன் பார்வதியைத் தவிர வேறு யாரையும், முக்கியமாக முருகனைப் பாட மறுத்துவிட்டார். இந்த அழகுக்கு எதுகை மோனையாக வந்ததென்ற சாக்கில் அவரை முட்டை என்றும் குறிப்பிட்டு விடுகிறார். விடுவாரா தமிழ்க் கடவுள். ஒரு நாள் அவர் முன்னால் ஒரு படிப்பறியாத இடையன் வேடத்தில் காட்சியளிக்கிறார். பேச்சு கொடுத்து பிறகு பேச்சுவாக்கில் தன்னைப் பற்றி ஒரு கவி பாடச் சொல்கிறார். புலவர் இடையனிடம் பெயரைக் கேட்க, அவர் "முட்டை" என்று கூற, இம்மாதிரி விசித்திரப் பெயரை வைத்தவரின் ரசனையை நொந்துக் கொண்டே (அவ்வாறு வைத்தது தானே என்பதைக் கூட உணராது) அவர் ஒரு பாடலை இயற்றுகிறார். அப்பாடலிலும் ஒரு பொருட்குற்றத்தைக் கண்டுபிடிக்கிறார் அந்த இடையன். தன் செருக்கை அடக்கிய அவ்விடையனை வியப்புடன் பார்க்க, முருகப் பெருமான் காட்சியளிக்கிறார். மன்னிக்கவும், பாடல் நினைவில்லை. ஆகவே அக்குறிப்பிட்டப் பொருட் குற்றம் என்னவென்றும் இப்போது கூற இயலவில்லை. ஏதோ சப்பாத்திக் கள்ளியை வைத்து அது கூறப்படும் என்று நினைவு. என்ன செய்வது, கற்றது கைம்மண்ணளவே. ஏதோ இதைப் படிக்கும் நண்பர்கள் யாராவது பாடலைக் கொடுத்து, பொருட் குற்றம் என்னவென்று கூறினால் நன்றாக இருக்கும்.
இதைப் பற்றித்தான் திருவள்ளுவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்:
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத்து ஊறும் அறிவு.
மேலே நான் எழுதியவற்றில் பொய்யாமொழிப் புலவர் பற்றிய பத்தியைத் தவிர்த்து மீதியெல்லாம் என் இணைய நண்பர் ஒருவரின் குழந்தை தன் பள்ளியில் பேச்சுப் போட்டியில் பேசுவதற்காக நான் எழுதிக் கொடுத்தது. அந்த இணைய நண்பரும் நான் கூறியதை அழகாக மெருகேற்றி அவளைப் பேச வைத்தார். குழந்தையும் அழகாகவே அதை எடுத்துரைத்தாள். நானே அதை தொலைபேசியில் கேட்டேன். போட்டியின் விதிப்படி, 3-லிருந்து 5 நிமிடங்களுக்குள் பேச்சு இருந்திருக்க வேண்டும். அதை மனதில் நிறுத்தி, நண்பரும் வாக்கியங்களைச் செதுக்கி, குழந்தை எளிதாக உச்சரிக்குமாறு வார்த்தைகளைத் தேவையான இடங்களில் மாற்றினார். குழந்தையும் அற்புதமாகவே பேசியதைக் கேட்டு மகிழ்ந்தார். ஆனால் பரிசு? விதிகளுக்குப் புறம்பாக 10 நிமிடங்களுக்கு மேல் வளவன்று பேசிய மாணவன் ஒருவனுக்கே பரிசு. அது முன்பே தெரிந்திருந்தால் இன்னும் கூட எழுதியிருக்கலாம் என்றே தோன்றியது, என்ன செய்வது, கற்றது கைம்மண் அளவே.
அதே போல நான் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தபோது கண்டிப்பாக 6 வயது முடிந்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. (இப்போதும் அப்படித்தானோ?) ஆக, ஜூலைக்கு அப்புறம் பிறந்த குழந்தைகள் ஒரு கல்வியாண்டையே இழந்தனர். ஆனால் பல பள்ளிகளில் இவ்விதியைப் புறக்கணித்து குழந்தைகளை ஐந்து வயதிலேயே முதல் வகுப்பில் சேர்த்துக் கொண்டனர். பள்ளியிறுதித் தேர்வு முடிந்து சமீபத்தில் 1962-ஆம் வருடம் புகுமுக வகுப்பில் நான் புதுக்கல்லூரியில் சேர விண்ணப்பித்தப்போது, விண்ணப்பத் தாளில் இவ்வாறு வயது வரம்பைக் குறிப்பிட்டிருந்தனர்: "Those who were born after 15th January 1948 are not eligible to join P.U.C.". ஏப்ரல் 1946-ல் பிறந்த எனக்கு எப்படியிருந்திருக்கும்? அவ்விதியைப் புறக்கணித்து, சீக்கிரம் பள்ளியில் சேர்க்கப்பட்டவர்கள் புத்திசாலிகள் ஆனார்கள். விதியை மதித்த நாங்கள் சோப்ளாங்கிகள் ஆனோம். ஆக, இங்கு வாழ்க்கைக் கல்வி விதிவிலக்கை கற்றுக் கொடுத்தது! ஒரு வருட வித்தியாசம் என்பது என்ன இழப்பு என்பது 58 வயதில்தான் புரியும்.
பிறகு கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். சில விதிகள் பைத்தியக்காரத்தனமானவையாகவே பட்டன. உதாரணத்துக்கு முழுநேர வேலையில் இருக்கும்போது பகுதி நேர வேலை எதையும் செய்யக் கூடாது என்ற விதியையே எடுத்துக் கொள்வோம். நான் இவ்விதியை முதலிலிருந்தே மதிக்கவில்லை. நான் பாட்டுக்கு என் மொழிபெயர்ப்பு வெலைகள் செய்து கொண்டே போனதில் என் career தலைகீழாக மாறி இப்போது ரிடையர்மெண்டுக்குப் பின்னாலும் வேலை செய்ய முடிகிறது. ஆக, நான் கற்றுக் கொண்டது என்னவென்றால் சில விதிகள் மீறப்படுவதற்காகவே உள்ளன. ஆக, கற்றனைத்து ஊறும் அறிவு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார்
-
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார் எழுத்தாளர், கல்வியாளர், ஆசிரியர்.
தமிழிசைச் சங்கத்தின் திருமுறை இசைப் பண்களின் ஆராய்ச்சிக் குழுவில் அறுபது
ஆண்டுகள் தலைவரா...
4 hours ago
9 comments:
Raghavan Sir,
nallathoru pathivu, vAzththukkaL !
ithil sarchchai ethuvum irukkAthu enRu ninaikkiREn ;-)
மிக்க நன்றி பாலா அவர்களே. யோசித்து யோசித்து சர்ச்சையை கிளப்புபவர்கள் இருக்கும் தமிழ்மணத்தில் இதாவது சர்ச்சை இல்லாது இருக்கட்டுமே.
முடிந்தால் நாளை மாலை ட்ரைவ் இன்னில் மாலை 5 மணிக்கு பதிவாளர்கள் மீட்டிங்கில் சந்திப்போம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
///அதே போல நான் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தபோது கண்டிப்பாக 6 வயது முடிந்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டது.//
டோண்டு அவர்களே,
நான் முதல் வகுப்பில் சேரும்போது ஐந்து வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும் என்பது விதி. தற்போது அது ஆறு வயது என்று நினைக்கிறேன்.
////சிலருக்கு கல்லூரியில் சேர்ந்து படித்து ஏதாவது பட்டம் பெற்றவுடனேயே தான் மிகுந்த அறிவு பெற்று விட்டதாக ஓர் எண்ணம் தோன்றி விடும். இது ரொம்ப ஆபத்தானது. உண்மையைக் கூறப்போனால் ஒருவன் பட்டப் படிப்பு முடித்ததும்தான் வாழ்க்கைக் கல்வியையே கற்க ஆரம்பிக்கிறான்.////
மிக உண்மை. கல்விக்கும் அறிவு, பண்புக்கும் நேரடித்தொடர்பு இருந்தாக வேண்டுமென்ற அவசியம் இல்லை. பல பட்டம் பெற்று, பல வருடங்களாய் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் சிலரின் அறிவு(!), பண்பு(!) ஆகியவற்றை நேரில் கண்ட என்னுடைய அனுபவத்தில்தான் இதைக் கூறுகிறேன்.
இப்படித்தான் வாழ வேண்டும் என்பது ஒரு விதி, எப்படியும் வாழலாம் என்பது இன்னொரு நியதி, மீறிய நீங்கள் ஒரு புதிய வார்ப்பு!
வெளிகண்டநாதரே, சற்று விளக்கிக் கூறவும். முழுநேர வேலையில் இருந்தபோது பகுதி நேர வேலையை செய்ததைப் பற்றிக் குறிப்பிட்டீர்களானால், இந்த விதி மீறப்பட்டதே அதிகம்.
எத்தனை பேர் தம் மனைவியர் பெயரில் இன்ஸ்யுரன்ஸ் ஏஜென்சி துவக்கியுள்ளனர்? தில்லியில் பேங்குகளில் வேலை செய்பவர்கள் தங்கள் குடும்பக் கடைகளிலும் வேலை செய்கின்றனர். அதற்காகவே ஆஃபீசர் பதவி உயர்வையும் வேண்டாம் என்று கூறி விடுகின்றனர்.
சி.பி.டபிள்யூ.டி. யில் இன்னும் ஒரு படி மேலே போய், அவ்வப்போது தங்கள் தற்காலிக வேலை முடக்கத்துக்கு வழி வகுத்துக் கொள்கின்றனர். பாதி சம்பளம் வரும் அல்லவா? அந்த நேரத்தில் தங்களுடைய தனிப்பட்ட வேலைகள் செய்து கொண்டு செம துட்டும் பார்த்தும் விடுகின்றனர். பிறகு சஸ்பென்ஷன் விசாரணையில் தங்கள் குற்றமற்றத் தன்மையை நிரூபித்து வேலையிலும் சேர்ந்து விட்டுப் போன சம்பளம் எல்லாம் அரியர்ஸ்களாக வாங்கி விடுகின்றனர்.
நான் கூறியதுபோல விதிகள் ஒருபுறம் இருக்கட்டும். வாழ்க்கை விதிவிலக்குகளையே அதிகம் காட்டுகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நான் சும்மா பாரதிராஜா வசனம் பேசனேன் சார், நீங்க போயி.. இதெ பெரிசா எடுத்துக்கிட்டு!
விதிகளோடு வாழ்ந்தா சுவாரசியமில்லை, மீறினாதான் சாதனை படைக்க முடியும், உலகம் உருண்டைன்னு சொல்ல ஆரம்பிச்சவரும் இப்படி மாறினதாலேயே சரித்திரம் கண்டார். ஆதலால், உங்கள் கருத்தை வழி மொழிகிறேன்!
நன்றி வெளிகண்டநாதர் அவர்களே. அதே சமயத்தில் சைட் பிசினஸ் செய்து உயிர்த்தோழர்களால் காட்டிக் கொடுக்கப்பட்டால் வேலை போவது என்னவோ நிச்சயம். ஆகவேதான் மாட்டிக் கொள்ளக் கூடாது என்கிறது.
இதை 11-ஆம் கட்டளையாகவே வடித்து விட்டனர்:
11. Thou shall not get caught!
அன்புடன்,
டோண்டு ராகவன்
நல்லாயிரூகு உங்க பதிவு.
//சிலருக்கு கல்லூரியில் சேர்ந்து படித்து ஏதாவது பட்டம் பெற்றவுடனேயே தான் மிகுந்த அறிவு பெற்று விட்டதாக ஓர் எண்ணம் தோன்றி விடும். இது ரொம்ப ஆபத்தானது. உண்மையைக் கூறப்போனால் ஒருவன் பட்டப் படிப்பு முடித்ததும்தான் வாழ்க்கைக் கல்வியையே கற்க ஆரம்பிக்கிறான்.//
முற்றிலும் உண்மை. இது பலருக்கு விளங்குவதில்லை.
நன்றி
நான் எனது மனைவியின் அத்தையன்பர் எழுதிவரும் பரிமேலழகர் திருக்குறளுக்கு எழுதிய உரையின் ஆங்கிலமாக்கத்தை சரிபார்த்து தட்டச்சு செய்து வருகிறேன். எதேச்சையாக நேற்றுத்தான் தொட்டனைத்தூறு மணற்கேணி... என்ற குறளை கையாண்டேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment