அறிஞர் அண்ணா அவர்கள் அடிக்கடி சொன்ன கதை இது. ஒரு ஊரில் கந்தசாமி என்பவர் முந்தைய இரவு ஒரு பார்ட்டியில் வர்ஜா வர்ஜமில்லாமல் மொக்கிய மொக்கினால் அடுத்த நாள் காலை அஜீர்ணத்தால் வாந்தி எடுத்தாராம். இதுதான் நடந்த விஷயம். இதை ஒருவர் இன்னொருவருக்கு கூற, அந்த இன்னொருவர் வேறொருவருக்கு கூற விஷயம் எவ்வாறு மாறுகிறது என்பதைத்தான் அண்ணா அவர்கள் சுவைபட கூறினார்.
ஒருவர் இன்னொருவரிடம்: அண்ணே விஷயம் தெரியுமா, நேத்திக்கு கண்டதைத் தின்னதாலே நம்ம கந்தசாமி அண்ணன் வாந்தி எடுத்தாராம்.
இன்னொருவர் மூன்றாமவரிடம்: அண்ணே கந்தசாமி அண்ணன் குடம் குடமா வாந்தி எடுத்தாராம். ட்ரிப்ஸெல்லாம் வச்சிருக்காங்களாம்.
மூன்றாமர் நான்காமவரிடம்: ட்ரிப்ஸுல இருக்கிற கந்தசாமி அவுட்டாயிடுவார் என்னு பேசிக்கிறாங்க. மறுபடியும் கருப்பா வாந்தி எடுத்தாராம்.
நான்காமவர் ஐந்தாமவரிடம். கந்தசாமி காக்கா நிறத்துல கருப்பா வாந்தி எடுத்தாராம்.
அதற்குள் நம்ம கந்தசாமி குணமடைந்து வெளியில் வர இந்த ஐந்தாமவர் கந்தசாமி யார் என்று தெரியாததால் அவரிடமே போய்: அண்ணே நம்ம பேட்டை ரவுடி கந்தசாமி காக்கா காக்காயா வாந்தி எடுத்தாராம்.
ஐந்தாமவருக்கு நல்ல உதை கிடைத்தது.
அண்ணா சொன்ன கதையில் நானும் சிறிது மசாலா சேர்த்தேன் என்பதைக் கூறிடவும் வேண்டுமோ. இதே மாதிரி சமீபத்தில் 1969-ல் வந்த இரு கோடுகள் படத்தில் கலெக்டர் அலுவலக தலைமை எழுத்தர் ஜெமினி கணேசனுக்கும் கலெக்டர் சவுகார் ஜானகிக்கும் (அவர்கள் ஏற்கனவே கணவன் மனைவி என்பதை தெரியாது) கள்ள உறவு கற்பித்து நாகேஷ் கதை ஆரம்பித்து வைக்க அது காது மூக்கு எல்லாம் வைத்து, படிப்படியாக டெவலப் ஆகி நாகேஷிடமே திரும்பிவர ஒரே கலாட்டாவாக ஆகும். ஆனால் இதே காட்சி இதன் ஹிந்தி ரீமேக்கில் இன்னும் அற்புதமாகக் கையாளப்பட்டது. படம் சஞ்சோக், அமிதாப் பச்சன், மாலா சின்ஹா (கலெக்டர்) மற்றும் அருணா இரானி (ஜயந்தியின் ரோல்). தமிழில் ஆடியோ வந்தால் ஹிந்தியில் வீடியோ துணைக்கு வந்தது.
காட்சிகளை விவரிக்க ஜானி வாக்கர் (நாகேஷ் ரோல்) ஆரம்பிக்கிறார். ஒவ்வொருத்தர் மசாலா சேர்த்து கூறுவதும் ஒவ்வொரு காட்சியாக விரிகிறது.
முதல் காட்சி: கோவிலில் அருணா இரானியும் அமிதாப்பும் ஒரு பக்கம் வர, எதிரில் மாலா சின்ஹாவும் அவர் மகனும் வருகின்றனர். போகிற போக்கில் மாலா சின்ஹாவும் அமிதாப்பும் ஒருவரை ஒருவர் ஒரு கணம் பார்க்கின்றனர்.
இரண்டாம் காட்சி: அப்படி பார்க்கும்போது நின்று காதல் ததும்பும் பார்வையை வீசுகின்றனர்.
மூன்றாம் காட்சி: ஒரு கணம் பிரிய மனமின்றி தயங்குகின்றனர். அமிதாப்பை அருணா இரானி இழுத்து செல்ல, மாலா சின்ஹாவை அவர் மகன் இழுத்து செல்கிறான்.
நான்காம் காட்சி: மாலா சின்ஹா தன் மகனது கையை உதற, அமிதாப் அருணா இரானியின் கையை உதற, அமிதாப்பும் மாலா சின்ஹாவும் கோவில் பிரகாரத்திலேயே கைகோத்து நடனம் ஆடுகின்றனர்.
நான்காம் காட்சியின் வர்ணனை ஜானிவாக்கரிடமே கூறப்படுகிறது.
இதெல்லாம் ஏன் கூறுகிறீர்கள் என்றுதானே கேட்கிறீர்கள்? நண்பர் சந்திரசேகர் அவர்கள் அனுப்பிய மின்னஞ்சலே அதற்கு காரணம்.
அதிலிருந்து ஒரு சிறு பகுதி இங்கே தருகிறேன்.
ராமாயணங்கள் எத்தனை உள்ளன? 300? 3000? இக்கேள்வி பல ராமாயணங்களின் முடிவில் கேட்கப்படுகிறது. அதற்கு பதிலாக சில கதைகளும் கூறப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் இது.
ஒரு நாள் ராமர் அரியணையில் அமர்ந்திருக்க, அவரது மோதிரம் நழுவி தரையில் ஒரு ஓட்டையில் விழுந்து விடுகிறது. அதைத் தேடி அனுமார் அந்த ஓட்டை வழியாக கீழே செல்கிறார். அனுமார் அந்தண்டை போனதும் ராமரிடம் வசிஷ்டரும் பிரும்மாவும் வந்து அவரது அவதார காரியம் முடிந்தது என்றும் அவர் வைகுந்தம் திரும்ப வேண்டும் என்று கூற, அவரும் சரயு நதியில் இறங்கி முழுகுகிறார். இது தெரியாத அனுமன் கீழுலகத்து ராஜாவை சென்று சந்திக்க, அவர் என்ன விஷயம் என்று கேட்கிறார். அனுமனும் நடந்ததை கூறி ராமரின் மோதிரத்தை தருமாறு கேட்கிறார். அரசனோ ஒரு தட்டில் குவியலாக இருந்த ஆயிரக்கணக்கான மோதிரங்களை காட்டி அதிலிருந்து ராமரின் மோதிரத்தை எடுத்து கொள்ளுமாறு கூறுகிறார். ஆனால் இதனால் பயன் இராது என்றும் அவரது ராமர் ஏற்கனவே வைகுந்தம் சென்றுவிட்டதையும் கூறுகிறார். விஷயம் இதுதான். ராமாவதாரம் பல இடங்களில், பல காலகட்டங்களில் நடந்துள்ளது. ஒவ்வொரு முறையும் ராமரது மோதிரம் இப்படித்தான் விழுமாம். அதுதான் அவதார முடிவின் அடையாளமாம்.
ஆக ராமாயணம் பல முறை எழுதப்பட்டுள்ளது. எனவே பல வெர்ஷன்களில் இவ்வளவு மாறுதல்கள். ஒரு சாதாரண வாந்தியெடுத்த விவகாரமே அது பற்றி ரிபோர்ட் செய்கையில் இவ்வளவு மாறுதல்களையடையும் போது ராமாயணத்து வெர்ஷன்களை பற்றி கூறவும் வேண்டுமோ.
ராமாயணம் எந்தெந்த மொழிகளில் எழுதப்பட்டுள்ளது என்பதைப் பார்த்தாலே தலை சுற்றும். வியட்நாமிய, பாலி, வங்கள, காம்போஜ, சீன, குஜராத்தி, ஜாவானீஸ், கன்னடம், காஷ்மீர, லாவோசிய, மலாய், மராட்டி, ஒரியா, பிராக்கிருதம், வடமொழி, சிங்களம், தமிழ், தெலுங்கு, தாய்லாந்து, திபேத்திய மற்றும் ஐரோப்பிய மொழிகள். கடந்த பல நூற்றாண்டுகளில் ஒரே மொழியேலேயே கூட பல வெர்ஷன்கள் வந்து விட்டன. பிறகு பல கிளை மற்றும் உபகதைகள் வேறு.
ஒவ்வொரு முறையும் ராமாயணம் வெவேறு வகையாக கூறப்பட்டு வருகிறது. கூறுதல் என்னும் கிரியை வேண்டுமேன்றே உபயோகிக்கிறேன். ஏனெனில் செவிவழியாகத்தான் ராமாயணம் பரவியது. இதில் எது ஒரிஜினல்? யாருக்கு தெரியும்? வால்மீகியின் ராமாயணம் பழமை வாய்ந்தது என்பதால் அதற்கு தனி இடமும் பெயரும் உண்டுதான். ஆனால் பல வேறு ராமாயணங்கள் வால்மீகி இல்லாத வெர்ஷன்களிலிருந்தே வந்திருக்கின்றன.
சில வெர்ஷன்களில் சீதை ராவணனின் மகள் (மனோஹரின் இலங்கேஸ்வரன் நாடகம்). சிலவற்ரில் அனுமன் சம்சாரி. சில இடங்களில் ராமர் மனிதர் மட்டுமே, வேறு இடங்களில் ராவணன் நல்லவர். என்ன தலை சுற்றுகிறதா? கந்தசாமியின் கதையே மேல் என்று தோன்றுகிறதா?
பை தி வே, இன்றுதான் சன் டீவியில் ராமாயணம் தமிழாக்கத்தை ஒளிபரப்ப ஆரம்பித்துள்ளனர். அதை ஹிந்தி மூலத்தில் காண ஆசை. எங்கு எப்போது ஒளிபரப்பப்படுகிறது என்று யாரேனும் தகவல் தந்தால் தன்யனாவேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்றாடத்தில் இருந்து பறந்தெழுதல்…
-
நாம் இந்த ஒரு தலைமுறைக்காலமாகத்தான் அடிப்படைப் பொருளியல் விடுதலையை
அடைந்துள்ளோம். நம் முந்தைய தலைமுறைக்கு அன்றாடமே வாழ்க்கை. உழைப்பே அதன்
நடைமுறை. நிரந்தரம...
4 hours ago
12 comments:
original telecast available in NDTV Imagine
என்ன தான் மசாலா தூவி மேட்டர் எல்லாம் மிகைப்படுத்தப்பட்டாலும், கந்தசாமி வாந்தியெடுத்தது உண்மை தானே ?
ஆனால், ராமாயணம் ஒரு பொய்க்கதை என்று பிதற்றும் கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத்தின் சகளை பிரணாய் ராய் நடத்தும் NDTV imagine தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை ஒவ்வொரு இரவும் 9:30 மணிக்கு ஒளிபரப்புகிறார்கள் இந்தப் புதிய ராமாயணத்தை.
அந்த எபிசோடுகளை மொத்தமாக ஞாயிறு காலை 10:30 க்கு தமிழில் ஒளிபரப்புகிறது ராமன் ஒரு குடிகாரன் என்று சொல்லும் கருணாநிதியின் அக்கா மகன் நடத்தும் சன் தொலைக்காட்சியில்.
வாழ்க பாரதம். வாழ்க ராமாயணம்.
Vajra,
//ஆனால், ராமாயணம் ஒரு பொய்க்கதை என்று பிதற்றும் கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத்தின் சகளை பிரணாய் ராய் நடத்தும் NDTV imagine தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை ஒவ்வொரு இரவும் 9:30 மணிக்கு ஒளிபரப்புகிறார்கள் இந்தப் புதிய ராமாயணத்தை.
அந்த எபிசோடுகளை மொத்தமாக ஞாயிறு காலை 10:30 க்கு தமிழில் ஒளிபரப்புகிறது ராமன் ஒரு குடிகாரன் என்று சொல்லும் கருணாநிதியின் அக்கா மகன் நடத்தும் சன் தொலைக்காட்சியில்.
வாழ்க பாரதம். வாழ்க ராமாயணம்.
//
WE ARE LIKE THAT ONLY ;-)
இந்த ராமாயணப் பதிவில் குறிப்பிட்டது போலவே, நான் படித்த ஒரு ஃபிரெஞ்சு புத்தகத்தில் பழைய ஏற்பாட்டில் வரும் genesis நிகழ்வுகள் ஒவ்வொரு உலகிலும் அப்படியே வருகின்றது என்பதை வைத்து எழுதப்பட்டுள்ளது.
இக்கதை ஆரம்பிக்கும்போது ஒரே நிகழ்வு பல்லாயிரக்கணக்கான முறை பல்லாயிரக்கணக்கான உலகில் நடந்து விட்டது. ஆகவே இந்த முறை பாம்புக்கு கூட கொஞ்சம் போர் அடிக்கிறது. ஏவாள் ஈடன் தோட்டத்தில் சந்தோஷமாகப் பாடிக் கொண்டிருக்கிறாள். பாம்பு அவளிடம் வந்து வேகமாகத் தான் சொல்வதை சொல்லி விட்டு அறிவுக் கனியை பறித்துண்ணும்படி ஏவாளுக்கு ஆசை காட்டி விட்டு தன் வழியே போக யத்தனிக்கும் போது, ஏவாள் இம்முறை கூறுகிறாள், "பாம்பே, நீ சொல்வதை நான் கேளேன், பரமபிதா எங்களுக்கு இக்கனியை பறிக்கக் கூடாது என்று ஆணையிட்டு விட்டார். ஆகவே நான் அக்கனியைத் தொடேன்" என்று கூற பாம்புக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. சரி ஆதாமிடமாவது போய் முயற்சி செய்ய, அவனோ அதை அடி அடி என்று அடித்து விரட்டி விடுகிறான்.
அன்று இரவு பரம பிதா வருகிறார். அவருக்குப் பல வேலைகள். நடுவில் இந்த வேலை வேறு, அதாவது ஆதாம் ஏவாளை ஈடன் தோட்டத்திலிருந்து வெளியேற்றுவது. "ஆதாம் எங்கிருக்கிறாய்?" என்று கோபம் கலந்த இடிக்குரலில் கேட்க, அவனோ "இங்கிருக்கிறேன் ஆண்டையே" என்று ஏவாளின் கையை பிடித்துக் கொண்டு தைரியமாக ஆடையின்றி அவர் முன் வந்து நிற்கிறான். "அக்கனியை பறித்தாயா" என்று சற்றே குறைந்த சப்தத்தில் வழக்கமான கேள்வியைக் கேட்க, "இல்லை ஆண்டே, அவ்வாறு செய்வோமா நாங்கள்" என்று கூற, பரமபிதாவுக்கு மூர்ச்சை வரும்போலாகி விட்டது. "சரி, சரி, ஜாக்கிரதையாக இருந்துக் கொள்" என்று சுரத்தேயில்லாமல் கூறிவிட்டு தன்னிடம் இருக்கும் சூப்பர் கணினியிடம் சென்று பார்க்கிறார். அதனிடம் நடந்ததை எழுதி உள்ளிட, அது மெதுவாகப் பேச ஆரம்பிக்கிறது.
"இது என்ன சோதனை, இத்தனை உலகங்களிலும் சமத்தாக இருந்த ஆதாம் ஏவாள் இங்கு மட்டும் ஏன் படுத்துகிறார்கள்" என்று தனக்குத் தானே கேட்டுக் கொள்கிறது. பிறகு கூறுகிறது, "ஏவாள் இம்மாதிரி நடந்து கொள்வதற்கானச் சாத்தியக்கூறு ஒன்றின் கீழ் பத்து கோடி என்று நான் செட் செய்திருந்தேன். இது வரை நடக்காதது இப்போது நடந்து விட்டது". "சரி இப்போது என்ன செய்யலாம்" என்று பரமபிதா கேட்க கணினி சற்று நேரம் கேட்கிறது.
அதற்குள் இங்கு ஈடன் தோட்டத்தில் அனர்த்தம் ஆரம்பிக்கிறது. அக்கனியைப் பறிக்காததால் பாவம் புண்ணியம் பற்றிய அறிவே ஆதாம் ஏவாளிடம் சுத்தமாக இல்லை. ஏவாள் கையில் கிடைக்கும் பட்டாம்பூச்சிகளின் சிறகுகளை பிய்த்து ஆராய்கிறாள். ஆதாம் தோட்டத்திற்கே நெருப்பு வைக்கிறான். நேரம் செல்லச் செல்ல அவர்களது அட்டகாசங்கள் அதிகரிக்கின்றன. தோட்டத்தை விட்டு அவர்களை அனுப்பவும் முடியாது.
அப்போது பரமபிதாவின் புத்திரர் வருகிறார். "என்ன தந்தையே இப்படியாகி விட்டது, எப்போது இவர்கள் தோட்டத்தை விட்டு வெளியேறி, நான் சிலுவை சுமந்து எல்லாம் நடக்கும்" என்று அவர் தரப்புக்கு அவரும் கூற, பரமபிதா யோசனையில் ஆழ்கிறார். பிறகு வேறு வழியில்லாது புத்திரரிடம் ஒரு விஷயத்தைக் கூறுகிறார். அவரும் வேறு வழியின்றி அழகிய வாலிபன் உருவம் தரித்து, ஏவாளிடம் சென்று, அவள் மனதை மாற்றி அவளையும் ஆதாமையும் கனியைப் புசிக்கச் செய்கிறார். இப்போது பழைய ஏற்பாடுகளின்படி நிகழ்ச்சிகள் தொடர்கின்றன.
இப்புத்தகத்தை நான் முப்பது வருடங்கள் முன்னால் படித்தேன். ஆகவே 100% அப்படியே கொடுத்தேன் எனக் கூறமுடியாது. ஆனால் பிளாட் அதுதான்.
மேலே சொன்ன கதையை எழுதியது ஃபிரெஞ்சு எழுத்தாளர் Pierre Boulle. அது அவரது Quia Absurdum (Sur la Terre comme au Ciel) (சொர்க்கத்திலும் பூமியிலும் அபத்தங்கள்) என்ற சிறுகதை தொகுப்பில் வருகிறது. கதையின் பெயர் Quand le Serpent Échoua. (பாம்பு தோல்வியுற்றபோது).
இதே எழுத்தாளர் எழுதிய நாவல்தான் "Bridge on the river Quai". சர் அலெக் கினஸ் நடித்தது. அவரது பிரெஞ்சு நடை பிரமிக்கத் தக்கது.
இது பற்றி நான் போட்ட பதிவு இதோ. பார்க்க:
http://dondu.blogspot.com/2006/10/quia-absurdum.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
आपने "तीसरी आज़ाधि" देखा है क्या?
आपने "तीसरी आज़ाधि" देखा है क्या? (மொழிபெயர்ப்பு: நீங்கள் மூன்றாவது சுதந்திரம் என்ற தலைப்பில் உள்ள சி.டி பார்த்துள்ளீர்களா)?
பார்க்கவில்லை. இப்போதுதான் மாயாவதியின் அரசு அதற்கு காங்கிரஸ் மேல் குற்றம் சாட்டியது பற்றியும் படித்தேன். பார்க்க: http://groups.yahoo.com/group/ZESTCaste/message/9882
இந்த சி.டி பொருத்தவரை அதை எடுத்தவர்கள் கண்ணோட்டத்தில்இதுவும் ராமாயணத்தின் ஒரு வெர்ஷனே. கலைஞர் பார்த்தால் மகிழ்ச்சி அடைவார் என நினைக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//
இந்த சி.டி பொருத்தவரை அதை எடுத்தவர்கள் கண்ணோட்டத்தில்இதுவும் ராமாயணத்தின் ஒரு வெர்ஷனே. கலைஞர் பார்த்தால் மகிழ்ச்சி அடைவார் என நினைக்கிறேன்.
//
அந்த மூன்றாவது சுதந்திரம் என்பது, கிருத்தவ மிச்ச நரிகளால் உருவாக்கப்பட்ட கதை.
ஹிட்லர் மோசஸ் பற்றிய டென் கமேண்மெண்ட்ஸ் படத்தை எடுத்தால் எவ்வளவு உண்மை இருக்குமோ அதே அளவு உண்மை தான் அந்த ராமாயணத்திலும் இருக்கும்.
பார்க்க
அது காண்டு கஜேந்திரன் பெயரைக் கூட ஹிந்தியில் உருப்படியாக எழுதத் தெரியவில்லை.
गांदु गजेंद्रण (கஜேந்திரண்!!) என்பது गांदु गजेंद्रन என்றல்லவா இருக்கவேண்டும் ?
என் நண்பன் ஸ்ரீனிவாச மூர்த்தி என்னுடன் மத்தியப் பொதுப்பணித் துறையில் ஜூனியர் இஞ்சினியராகப் பணி புரிந்தான். அவன் கர்நாடகாவை சேர்ந்தவன். அவன் சமீபத்தில் 1973-ல் கன்னட ராமாயணத்திலிருந்து ஒரு காட்சியைக் கூறினான்.
அதாவது ராமர் காட்டுக்கு போவதாக பிடிவாதமாக கூறி, சீதையை தன்னுடன் வரக்கூடாது என்கிறார். சீதை தான் ஏன் கூட வரவேண்டும் என்று பல காரணங்களை கூறி மேலும் சொல்கிறார். எல்லா ராமாயணங்களிலும் சீதை ராமருடன் காட்டுக்கு செல்லும்போது இந்த ராமாயணத்தில் மட்டும் தன்னை ஏன் ராமர் விட்டு செல்ல வேண்டும் என்று கேட்கிறார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ராமரது மோதிரம் இப்படித்தான் விழுமாம். அதுதான் அவதார முடிவின் அடையாளமாம்.//
என்னுடைய மோதிரம் இப்படி தான் ஒருமுறை கிழே விழுந்தது.
அப்படின்னா என்னுடைய வாலாவதாரம் முடிந்ததா :((
//சில இடங்களில் ராமர் மனிதர் மட்டுமே, வேறு இடங்களில் ராவணன் நல்லவர். என்ன தலை சுற்றுகிறதா?//
அதெல்லாம் விடுங்க கந்தசாமி நல்லவரா கெட்டவரா அதை சொல்லுங்க
வால்பையன்
//
அதெல்லாம் விடுங்க கந்தசாமி நல்லவரா கெட்டவரா அதை சொல்லுங்க
//
தெரியல்லையேப்பா...
<==
dondu(#11168674346665545885) said...
இப்புத்தகத்தை நான் முப்பது வருடங்கள் முன்னால் படித்தேன்.
==>
"சமீபத்தில்" என்ற வார்த்தையை விட்டுவிட்டதால் என்னமோ ரொம்ப காலம் முன் நடந்தது மாதிரி ஒரு தோற்றம் =).
Post a Comment