சமீபத்தில் 1970-ல் வந்த மாட்டுக்கார வேலன் படத்தில் ஒரு காட்சி. எம்.ஜி.ஆர். படிக்காத கிராமத்தான் என்று நம்பிய லட்சுமியும் அவர் தோழிகளும் 'பட்டிக்காடா பட்டணமா' என்று பாடியவாறு கேலி செய்வார்கள். அது இரட்டை ரோல் படம். அவர்கள் கேலி செய்தது வக்கீலாக பிராக்டீஸ் செய்து கொண்டிருந்த எம்.ஜி.ஆர். அவர்களை. அவர் கோபத்துடன் "What nonsense is this"? என்று கத்தியவுடனேயே லட்சுமி "ஆகா நீங்கள் படித்தவரா" என்று மனம் உருகுவாராம், பிறகு காதலிப்பாராம். அதெல்லாம் எல்லா இரண்டாவது தமிழ் படங்களிலும் நடப்பதுதானே. ஆனால் அது இப்பதிவின் விஷயம் அல்ல. நான் குறிப்பிட நினைப்பது என்னவோ ஆங்கிலம் தெரிந்தவனே படிப்பாளி என்ற என்ணத்தைத்த்சான் சாடுகின்றேன்.
நான் சென்னை திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் படித்தவன். பத்தாவது வகுப்பு வரை தமிழில்தான் கல்வி. நல்ல ரேங்கில்தான் இருந்தேன். பத்தாம் வகுப்பில் பொறியியல் பாடம் எடுத்துக் கொண்டதால் எல்லாப் பாடங்களும் தமிழ் மொழிப் பாடத்தைத் தவிர ஆங்கிலத்தில்தான். ஆனால் நல்ல வேளையாக என்னுடையத் தாயாரும், என் எட்டாம் வகுப்பு ஆசிரியர் ஜயராம ஐயங்கார் அவர்களும் எனக்குக் கொடுத்த நல்ல ஆங்கில இலக்கண அடிப்படை என்னை ரொம்பக் கஷ்டப்பட வைக்கவில்லை. ரேங்கும் சிறிதுதான் குறைந்தது. ஆனால் ஆங்கிலத்தில் சரளமாகப் பேச முதலில் தயக்கமாகத்தன் இருந்தது. ஆங்கில மீடிய வகுப்புத் தோழர்கள் என்னுடைய இலக்கண சுத்தமான ஆங்கிலத்தை சிறிதே கேலி செய்தனர்.
பிறகு புதுக் கல்லூரியில் பி.யு.சி. படிக்கும்போதும், கிண்டி பொறியியல் கல்லூரியில் பி.இ. படித்தப் போதும் பிரச்சினை ஒன்றும் இல்லை. அதன் பிறகு ஜெர்மன், பிரெஞ்சு, இத்தாலியன் படித்தது ஒரு கனவு போல நடந்தது. ஆனாலும் ஒன்று. இப்போதும் எண்களைக் கூட்டும்போது அது என்னைப் பொறுத்தவரை தமிழில்தான் நிகழும். என்ன மொழியில் எந்தப் புத்தகம் படித்தாலும் என் மனத்திரையில் கருத்துக்கள் தமிழில்தான் வரும்.
இப்போது முக்கிய விஷயத்துக்கு வருகிறேன். பிரெஞ்சு அல்லது ஜெர்மன் பேசும் தொழில் நுட்ப வல்லுனர்கள் வரும் போது அவர்களுக்கு துபாஷியாக என்னைக் கூப்பிடுகிறார்கள். வந்தவர் அவருடைய நிறுவனத்தில் அடி மட்டத்தில் இருப்பார். ஆனால் அவருக்கு இங்கு அளிக்கப்படும் உபசாரங்கள்! வெள்ளைத் தோல் அல்லவா? ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்குக் குறைந்து அவருக்கு ரூம் போட மாட்டர்கள். இந்திய நிறுவனத்தின் தலைமை நிர்வாகியே அவரை வரவேற்று அவருடன் குழைவார். எனக்கு சிரிப்புத்தான் வரும்.
நானும் சும்மா இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். என்னுடையத் தொழில் நுட்பப் பின்னணி எனக்கு நல்ல பலத்தைக் கொடுத்தது. வந்தவருக்கு நான் எந்த வகையிலும் குறைந்தவன் இல்லை என்பதை உறுதியாக முதலிலேயே தெரியப் படுத்தி விடுவேன். வெளியூர்கள் சென்று அங்கு சில நாட்கள் தங்கும் நிலை வந்தால் நானும் வந்தவரின் அறைக்கு அடுத்த, அதே வசதிகளுடன் கூடிய அறையில்தான் தங்குவேன். இதைப் பற்றிப் பேசிய ஒரு வாடிக்கையாளருக்கு நான் இவ்வாறு நடந்துக் கொள்வதன் காரணத்தையும் கூறினேன். அவரும் என் கூற்றில் இருந்த நியாயத்தை ஒத்துக் கொண்டார்.
எர் இந்தியாவில் பயணம் செய்த என் நண்பன் அனுபவத்தை இப்போது குறிப்பிடுகிறேன். விமானப் பணியாளர்கள் வெள்ளைக்காரப் பயணிகளிடம் இளித்துக் கொண்டுப் பேசுவார்கள். இந்தியர்களை அலட்சியப் படுத்துவார்கள். ஏன் என்றுக் கேட்டால் அதுதான் நம் விருந்தோம்பல் என்றுக் கதை விடுவார்கள். புடலங்காய். வெளி நாட்டு விமான நிறுவனங்களிலும் இந்தியர்கள் என்றால் ஒரு அலட்சியம்.
அமெரிக்கத் தூதரகங்கள் வாசலில் தெருவில் நம்மவர்களைக் காக்க வைப்பார்கள். நாமும் வெட்கம் கெட்டு நிற்கிறோம். சென்னை ஜிம்கானாவில் இன்னும் தமிழ் நாட்டு வேட்டி சட்டைக்கு அனுமதியில்லை. நம் தமிழ் ஊடகஙளிலோ செய்திகள் வாசிப்பவர்கள் ஒரு முப்பது ரூபாய் கோட்டாவது (நன்றி சத்யராஜ்) போட்டுக் கொண்டுதான் வர வேண்டியிருக்கிறது. தமிழ்த் தலைவர்களில் ஜீன்ஸ்/கோட்டு சூட் போட்டுக் கொண்டு வரும் கோமாளிகளைப் பார்த்து அலுத்து விட்டது. பழைய தமிழ்ப் படங்களில் மேனேஜர் என்பவர் படபடக்கும் வெய்யிலிலும் சூட்டு, கோட்டு டை எல்லாம் கட்டிக் கொண்டுதான் காட்சி தருவார்கள். அதைப் பார்க்கும் எனக்கே வியர்த்து விறுவிறுக்கும். அவர்கள் எப்படித்தான் போட்டு கொள்கிறார்களோ. கேட்டால் அதுதான் அவர்களது தன்னம்பிக்கையை வளர்க்கிறதாம். புடலங்காய்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
-
அசோகமித்திரன், பூமணி, பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடைய
மொழிபெயர்ப்பாளரான என்.கல்யாணராமனுக்கு விஜயா வாசகர் வட்டம் வழங்கும்
அ.முத்துலிங்கம் விருது 2024...
5 hours ago
28 comments:
மூத்தபதிவர் ராகவன் அவர்களின் மொழ்ப்பற்று
மூடநம்பிக்கை போலிகளின் முகத்திரை கிழிக்கட்டும்
சுயமரியாதை காக்கும் போர்க்குணம் வாழ்க
சுந்தரத் தமிழனின் புகழ் ஓங்குக!
டோண்டு அவர்களே,
நலமா? பதிவின் கருத்துடன் எனக்கு ஒப்புதல் இல்லை என்பதை முதலில் கூறிவிடுகிறேன்.
இன்றைக்கு பெரும்பாலும் உலகம் முழுவதும் வணிக உடை, வணிக மொழி என்றால் அது ஆங்கிலம் தான்.ஜட்ஜுக்கு நீளமான அங்கியும், வக்கீலுக்கு கவுனும் இருப்பதுபோல் கோட், சூட்,டை தான் மானேஜர்களின் உடை. வேட்டி சட்டை அணிந்து கோர்ட்டில் அமர்ந்திருக்கும் ஜட்ஜை காட்டினால் அபத்தமாக இருக்கும்.மானேஜரை வேட்டி சட்டையில் காட்டினாலும் அதே போல் தான் அபத்தமாக இருக்கும்.
அமெரிக்க தூதரகத்தில் நிற்க வேண்டியதில்லை.இணையத்தில் அப்பாயிண்ட்மென்ட் புக் செய்து அந்த நேரத்துக்கு போனால் போதும்.7 மணிக்கு திறக்கும் தூதரகத்தில் 5 மணிக்கே போய் நிற்பது நம் குற்றம்.அவன் குற்றமல்ல.ரேஷன் கடையிலும், கலெக்டர் அலுவலகத்திலும் தான் கால்கடுக்க நிற்கவேண்டும்.
இந்திய பயணிகள் கீழ்மட்ட ஊழியர்களை மரியாதையாக நடத்துவதில்லை.விமான பணிப்பெண்களிடம் ஜொள்விடுவது அவர்கள் வழக்கம்.
சிங்கப்பூர், கொழும்பு, மலேயாவிலிருந்து இந்தியா வரும் விமானங்களில் வரும் இந்திய வம்சாவளியினர் லுங்கி கட்டிக்கொண்டு சீட்டில் குத்தவைத்து உட்கார்ந்து கொண்டு மாட்டுவண்டியில் வருவது போல் விமானங்களில் வருவார்கள். ஓடும் விமானத்தில் கட்டுசோறு கட்டிக்கொண்டு வந்து தின்பார்கள். விமான பணிப்பெண்களை படுகேவலமாக கிண்டல் செய்வார்கள்.பிறகு அவர்களுக்கு எப்படி மரியாதை கிடைக்கும்?
சிங்கப்பூர்,கொழும்பு ரூட்டில் வரும் இந்தியர்களை 'குருவிகள்' என அழைப்பார்கள்.ஏன் என்று தெரியுமா?
பொதுப்படையாக இந்தியபயணிகளை குற்றம் சாட்டுவது முறையாகாதுதான். ஏன் என்றால் நானும் இந்திய பயணிதான். ஆனால் என்ன செய்ய? இவர்களால் நானும் பாதிக்கப்படுகிறேனே? இதுமாதிரி பலர் நடந்துகொள்வதால் இந்தியர்கள் அனைவருக்கும் கெட்டபெயர். என்ன செய்ய?
இந்தியர்கள் பொதுவாக கீழ்மட்ட ஊழியர்களை அவமதித்தே பழகியவர்கள்.இது நம் ரத்தத்தில் ஊறிய கலாசாரம் என்பதுதான் உண்மை.அதனால் விமான பணிப்பெண்கள் நம்மை மதிப்பதில்லை என்றால் அதற்காக வெட்கப்படவேண்டுமே ஒழிய கோபம் கொள்ளக்கூடாது.
//7 மணிக்கு திறக்கும் தூதரகத்தில் 5 மணிக்கே போய் நிற்பது நம் குற்றம்.அவன் குற்றமல்ல.//
அவன் குற்றம் என்று நானும் கூறவில்லை. நம் குற்றம்தான் அது. அதுதானே பதிவின் அடிநாதம். நமது அடிமை புத்தியைத்தான் சாடுகிறேன்.
செய்திகள் கோட், சூட் டை எல்லாம் கட்டிக் கொண்டுதான் வாசிக்க வேண்டுமா? அதுவும் தமிழ் செய்திகள்? ஏன் சுகிசிவம் டி.வி.யில் ஆற்றும் சொற்பொழிவுகளில் வேட்டி ஜிப்பா அணிந்து கௌரவமாகத்தானே இருக்கிறார்.
//மானேஜரை வேட்டி சட்டையில் காட்டினாலும் அதே போல் தான் அபத்தமாக இருக்கும்.//
உடை என்பது முதலில் சௌகரியமாக இருக்க வேண்டும். கோட்டு சூட்டு இல்லாவிட்டால் வேட்டி சட்டைதானா? இதென்ன வச்சா குடுமி செரச்சா மொட்டைங்கறது மாதிரி இருக்கு? பேண்ட், சட்டை போதாதாமா. டை கட்டி தூக்கில் தொங்குவது போல என்ன ஃபீலிங்?
அப்படித்தான் வெளிநாட்டு விருந்தாளியை (ஜெர்மன்காரன்) வரவேற்க என்னுடன் வந்த தலைமை நிர்வாகி கோட்டு, சூட்டு, டை எல்லாம் அணிந்து அமர்க்களமாக வர, வெள்ளைக்காரன் வந்து இறங்கினான், பெர்மூடாஸிலும், ஒரு மெல்லிய டீ ஷர்ட்டிலும். இம்மாதிரி அடிமை புத்தியுடன் நம்மவர்கள் வர்ஜா வர்ஜமில்லாமல் எல்லாவற்றுக்கும் கோட்டு, சூட்டு, டை அணிவது அல்பனுக்கு பவிஷு வந்தால் அர்த்த ராத்திரியில் கொடை பிடிப்பது போலத்தான் உள்ளது. நீ நீயாகவே இரு. சில இடங்களில் ஃபார்மல் ட்ரெஸ் தேவைப்படலாம், அப்போது வேண்டுமானால் அவற்றை உடுத்தலாம் என்று இருந்தால் சுயமரியாதை காப்பாற்றப்படும்.
//சிங்கப்பூர், கொழும்பு, மலேயாவிலிருந்து இந்தியா வரும் விமானங்களில் வரும் இந்திய வம்சாவளியினர் லுங்கி கட்டிக்கொண்டு சீட்டில் குத்தவைத்து உட்கார்ந்து கொண்டு மாட்டுவண்டியில் வருவது போல் விமானங்களில் வருவார்கள். ஓடும் விமானத்தில் கட்டுசோறு கட்டிக்கொண்டு வந்து தின்பார்கள். விமான பணிப்பெண்களை படுகேவலமாக கிண்டல் செய்வார்கள்.பிறகு அவர்களுக்கு எப்படி மரியாதை கிடைக்கும்?//
இது எக்ஸ்ட்ரீம் கேஸ். கோட்டு, சூட்டு டை கட்டிக் கொண்டு அநாகரிகமாக யாருமே நடப்பதில்லையா? என்னமோ கலாட்டா செய்பவர்கள் வேட்டி சட்டை லுங்கி அணிந்தவர்கள் மட்டும்தான் என்ற வெள்ளைக்காரன் மனப்பான்மையை நாமும் சுவீகரிப்பதே அடிமை புத்திதான். அதைத்தான் இப்பதிவில் சாடுகிறேன்.
சென்னை ஜிம்கானாவில் இந்திய உடைகளுக்கு அனுமதி இல்லை என்பது எவ்வளவு கேவலமான நிலைமை?
ஜுனூன் ஹிந்தி சீரியலில் ஒரு ஹோட்டல் மேனேஜர் தன் ரிசப்ஷனிஸ்டிடம் கூறுகிறார் "வெளிநாட்டுக்காரர்கள் (அந்த சூழ்நிலையில் வெள்ளைக்காரர்கள்) பொய்யே பேச மாட்டார்கள்" என்று. என்ன அபத்தமான அடிமை மனப்பான்மை! இதைத்தான் இப்பதிவில் சாடுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நாட்டாமை மற்றும் டோண்டு ஐயா அவர்களுக்கு, அதிக விமான பயணம் (20 ஆண்டுகள், உலகம் முழுதும்) செய்தவன் (குறிப்பாக சிங்கை-சென்னை, கோலாலம்பூர்-சென்னை மார்க்கங்களில்) என்ற முறையில், நான் கண்ட பல காட்சிகளையும், அனுபவங்களையும்.. எனது வலையில் (http://keysven.blogspot.com) மே மாத இடுகைகளில் கொடுத்துள்ளேன்..வந்து தயவு செய்து பார்க்கவும்.
நாம் எப்படி நடந்து கொள்கிறோமோ, அப்படி தான் விமானங்களில் நமக்கு treatment ம் இருக்கும்.. இது என் அனுபவம்..கடந்த ஆகஸ்ட் மாதம் டெல்லி யிலிருந்து சென்னைக்கு ஜெட் Airways விமானம் மூலம் வந்தபோது.. அருகில் அமர்ந்திருந்த தமிழ் பயணி (50 வயது இருக்கலாம் .. அரசாங்க பணி மேல் வருகிறார் என்று நினைக்கிறேன்..) சாப்பாடுடன் கொடுத்த சிகப்பு அடி துணியை என் கண் முன்னே யே ஆட்டையை போட்டார்.. உண்டபின் tray களை எடுத்த விமான பணிப்பெண் துணி இல்லாததை கண்டு அவரை பார்த்து ஒரு கேவலமான சிரிப்பு சிரித்தார்.. இப்படி படித்த மக்களே நடக்கும் போது..வேறு என்ன சொல்ல... பெரும்பாலும் வெள்ளைக்காரர்கள் இந்த மாதிரி சில்லறை வேலைகளை செய்வதில்லை.. (இருந்தா ஒழுங்கா இருக்கிறது.. இல்லேன்னா, செக்ஸ் சிலுமிஷம் செஞ்சி உள்ளாரே போயிடறது.. :))
நெறைய இருக்கு.. இது மாதிரி.. என் பதிவிகளை பாருங்க.. உங்களுக்கு புரியும்.. ஏன் இந்தியர்களுக்கு விமானங்களில் அந்த treatment என்று...
Sir,
When I came to India this time, I bought 2 sets of Ramraj Veshti & Sattai (White) and wore that when I flew back to Sydney.. I was proud with that dress and was treated well in Singapore Airlines all the way till I reach Sydney.. even some Aussie ladies gave compliments for my dress.. I was proud of my national dress (tamil nadu style)
So, It is in our mind about all this dressing stuff.. why should we eat someone's shit when we have our full course meal ?
//செய்திகள் கோட், சூட் டை எல்லாம் கட்டிக் கொண்டுதான் வாசிக்க வேண்டுமா? அதுவும் தமிழ் செய்திகள்? ஏன் சுகிசிவம் டி.வி.யில் ஆற்றும் சொற்பொழிவுகளில் வேட்டி ஜிப்பா அணிந்து கௌரவமாகத்தானே இருக்கிறார்/
ஜிப்பா தமிழ்நாட்டு உடையா?
சரி,அதை விடுங்கள்..தமிழ் வலைப்பதிவர் சந்திப்புக்கு வரும் பெரும்பாலான பதிவர்கள் ஏன் பேண்ட்,சட்டை அணிந்து வருகிறார்கள்?வேட்டி,மேல்துண்டுடன் ஏன் வருவதில்லை?தமிழ் வலைப்பதிவர் சந்திப்புக்கு கூட பேண்டு சட்டையா?
டோண்டு சார்...டிரெண்ட்,பேஷன்,இமேஜ் என்று ஒன்று இருக்கிறது.வலைபதிவருக்கும் அதே விதிதான்,செய்தி வாசிபபளருக்கும் அதே விதிதான்.
//உடை என்பது முதலில் சௌகரியமாக இருக்க வேண்டும். கோட்டு சூட்டு இல்லாவிட்டால் வேட்டி சட்டைதானா? இதென்ன வச்சா குடுமி செரச்சா மொட்டைங்கறது மாதிரி இருக்கு? பேண்ட், சட்டை போதாதாமா. டை கட்டி தூக்கில் தொங்குவது போல என்ன ஃபீலிங்?//
பேண்ட் சட்டையை விட வேட்டியும் துண்டும் தான் சவுகரியம்...சரி அதை விடுங்கள்.பேண்ட் சட்டை என்ன நம்ம தமிழ்நாட்டு உடையா?சினிமாவில் வரும் மானேஜர் அதை போட்டால் உங்களுக்கு உறுத்தாது.கூட டை கட்டினால் தூக்கில் தொங்குவது போல் இருக்கிறதா?:-D
சரி, சினிமாவில் ஜட்ஜு நீள கவுனை போடுகிறாரே.வக்கீல் கருப்பு கோட் போடுகிறாரே?அது அவர்களுக்கு உறுத்தாதா இல்லை உங்களுக்கு உறுத்தாதா?வக்கீல் என்ரால் கோட் போடணும்னு யார் சட்டம் போட்டதுன்னு கேட்பீர்களா?டாக்டர் வெள்ளைகோட்டு போடுகிறார்.அதையும் கண்டிப்பீர்களா?
/இது எக்ஸ்ட்ரீம் கேஸ். கோட்டு, சூட்டு டை கட்டிக் கொண்டு அநாகரிகமாக யாருமே நடப்பதில்லையா? என்னமோ கலாட்டா செய்பவர்கள் வேட்டி சட்டை லுங்கி அணிந்தவர்கள் மட்டும்தான் என்ற வெள்ளைக்காரன் மனப்பான்மையை நாமும் சுவீகரிப்பதே அடிமை புத்திதான். அதைத்தான் இப்பதிவில் சாடுகிறேன்./
இதில் அடிமை மனப்பான்மை எதுவும் இல்லை டோண்டு சார்.உண்மையை தான் சொல்கிறேன்.அது சுட்டால் என்ன செய்ய முடியும்?
கொழும்பிலிருந்து சென்னை வந்த விமானத்தில் தமிழ்பயணிகள் பணிப்பெண்களிடம் நடந்துகொண்ட விதத்தை வார்த்தையால் வர்ணிக்க முடியாது.ஒரு கட்டத்தில் பணிப்பெண்கள் உணவு பரிமாறவே மறுத்துவிட்டார்கள்.இவர்கள் செய்த கலாட்டாவால் மற்றவர்களுக்கு எல்லாம் உணவு நட்டம்.சில ரூட்களில் இப்படித்தான் அட்டகாசம் செய்வார்களாம்.அதனால் இந்தியர்கள் எல்லோருக்கும் கெட்ட பெயர்.ஐரோப்பா வழியே வரும் விமானங்களில் இந்த மாதிரி புகார் வருவதே இல்லை.நீங்கள் வேண்டுமானால் எதாவது விமான பணிப்பெண்களிடம் கேட்டு பாருங்கள்.
'லுங்கி கட்டிக்கொண்டு விமானத்தில் வரகூடாதா?சீட்டில் குத்த வைக்க கூடாதா?கட்டுசோறு கட்டிக்கொண்டு சாப்பிட கூடாதா?' என்றெல்லாம் கேட்டால் என்னிடம் பதில் இல்லை.இதைக்கண்டு மற்ற நாட்டு பயணிகள் தாங்க முடியாத அருவருப்படைகிறார்கள் என்பதை மட்டும் இங்கே சொல்லிக்கொள்கிறேன். மதிப்பும், மரியாதையும் நம்ம நடத்தையில் தான் சார் இருக்கு.
/சென்னை ஜிம்கானாவில் இந்திய உடைகளுக்கு அனுமதி இல்லை என்பது எவ்வளவு கேவலமான நிலைமை?/
ஜிம்கானா என்பது என்ன என்று எனக்கு தெரியவில்லை.பொதுவாக உடையை வைத்து அனுமதி மறுப்பது தவறு என்பது தான் என் கருத்து.
இருந்தாலும் ஜிம்கானா தனியார் நிறுவனமானால் ஜட்டி போட்டுக்கொண்டு வந்தால் தான் உள்ளே விடுவேன் என்றாலும் அப்படித்தான் போகவேண்டும்.அரசு நிறுவனமென்றால் அது தவறு.
//அவருக்கு இங்கு அளிக்கப்படும் உபசாரங்கள்! வெள்ளைத் தோல் அல்லவா? ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்குக் குறைந்து அவருக்கு ரூம் போட மாட்டர்கள். இந்திய நிறுவனத்தின் தலைமை நிர்வாகியே அவரை வரவேற்று அவருடன் குழைவார். எனக்கு சிரிப்புத்தான் வரும். //
நீங்கள் கூறுவது சரி தான். இதை நான் கூட பல சமயம் யோசித்ததுண்டு. நாம் அவர்களுக்கு எந்த விதத்தில் குறைந்து விட்டோம் என்று தெரியவில்லை, நம்மவர்கள் ஏன் அவர்களை மிக அதிகமாக உபசரித்து வழிவது அல்லது பயப்படுவது ஏன் என்று எனக்கு புரியவில்லை. இதில் நான் எந்த பதவியில் இருக்கிறார் என்ற நிலையை வைத்து பேசவில்லை. யாராக இருந்தாலும் இயல்பாக பேசினாலே போதுமே.
என் அக்கா வீட்டுகாரர் சென்னையில் ஒரு பிரபல வங்கியில் நெட்வொர்க் அட்மின் ஆக பணி புரிகிறார். அங்கு வந்த ஒரு வெள்ளைக்காரர் அங்கு நடந்து ஏதோ பிரச்சனையில் ஒருவரை பார்த்து பிளடி இந்தியன் என்று கூறி விட்டாராம், என்ன தைரியம் இருந்தால் திமிர் இருந்தால் நம் நாட்டிலேயே இருந்து கொண்டு நம்மவரை இப்படி கூறி இருப்பார். பிறகு அனைவரும் அவர் மன்னிப்பு கேட்கும் வரை அவருக்கு ஒத்துழைக்க மாட்டோம் என்று கூறிய பிறகு, வேறு வழி இல்லாமல் மன்னிப்பு கேட்டுக்கொண்டாராம். இது அவர்கள் இன்னும் நம்மை அடிமைகளாகவே கருதுகிறார்கள் என்றே தோன்றுகிறது.
நம்மை போலவே அவர்களும் பணி புரிகிறார்கள் பின்னர் என் ஒரு சிலர் மிக அதிகமாக வழிகிறார்கள் என்று தெரியவில்லை.
//எர் இந்தியாவில் பயணம் செய்த என் நண்பன் அனுபவத்தை இப்போது குறிப்பிடுகிறேன். விமானப் பணியாளர்கள் வெள்ளைக்காரப் பயணிகளிடம் இளித்துக் கொண்டுப் பேசுவார்கள். இந்தியர்களை அலட்சியப் படுத்துவார்கள்//
இதற்க்கு நம்மவர்களும் ஒரு காரணம். விமானங்களில் எவ்வாறு தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறார்கள் என்று ஓவ்வொரு முறை செல்லும் போதும் எனக்கு நம்மவர்களிடம் பல அனுபவங்கள். மிகை படுத்தி கூறவில்லை. அதற்காக அவர்கள் மட்டும் யோக்கியமா? என்றால், நான் இல்லை என்று கூறவில்லை. அவர்களிலும் பலர் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள். ஆபாசமாக நடப்பதில் நமக்கு அவர்களும் சளைத்தவர்கள் இல்லை. ஆனால் நம்மவர்கள் செய்யும் 3 மணி நேர பயணத்தில் கூட 10 மணி நேரம் செய்யும் வேலையே செய்து விடுவார்கள். எனவே குறை நம் மீதும் உண்டு. நம் நிறைகளை கூறும் போது குறைகளையும் ஒப்பு கொள்வது ஒருவருக்கு அழகு.
//தமிழ்த் தலைவர்களில் ஜீன்ஸ்/கோட்டு சூட் போட்டுக் கொண்டு வரும் கோமாளிகளைப் பார்த்து அலுத்து விட்டது//
வேஷ்டி கட்டி "தமிழ் பற்றை" காட்டும் போலிகளிடையே இந்த கோட் சூட் போலிகள் எவ்வளோ பரவாயில்லை. இப்படி வேஷ்டி கட்டுவதை தவிர நம் பாரம்பரியத்தை இவர்கள் எந்த விதத்தில் தூக்கி நிறுத்தினார்கள்? இடத்திற்கு தகுந்த மாதிரி உடை உடுத்துவது தவறில்லை, அதே போல வேஷ்டி கட்டி நம் பாரம்பரியத்தை காப்பதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை.
அன்புடன்
கிரி
//இது எக்ஸ்ட்ரீம் கேஸ். கோட்டு, சூட்டு டை கட்டிக் கொண்டு அநாகரிகமாக யாருமே நடப்பதில்லையா? என்னமோ கலாட்டா செய்பவர்கள் வேட்டி சட்டை லுங்கி அணிந்தவர்கள் மட்டும்தான் என்ற வெள்ளைக்காரன் மனப்பான்மையை//
dondu sir, be realistic. It is a fact that so-called semi-skilled labourers behave very badly in flights, public place etc. I am not speaking low of their status, but this is in our blood to behave indecently in public such as spitting, eating and messing the place in public places, talking loudly and rudely, littering, jumping the line, not following rules, discipline etc.
Those who behave well, have learnt it from the West.
So, what is harm in acquiring good habits and leave out the bad ones?
why Indian who behave well and follow rules and discipline abroad? why dont those in India?
Because, that is in our blood. that is the truth.
Why do u term it as Slave Mentality? We have to correct ourselves and dont blame others.
Ofcourse, some of the points you mentioned as Slave Mentality are true (like putting Salaam to whoever comes with a white skin even if he is a beggar in his country)...but not all...
Vikram
வணக்கம் ராகவன் அவர்களே
நீங்கள் கூறியுள்ள கருத்துக்கள் நிச்சயம் யோசிக்க வேண்டியவை
நமக்குள் யோசித்து எது சரி என்று படுகிறதோ அதைச்செய்வோம்
நிச்சயம் யோசிக்க வேண்டும்
நன்றி
//பேண்ட் சட்டையை விட வேட்டியும் துண்டும் தான் சவுகரியம்...சரி அதை விடுங்கள்.பேண்ட் சட்டை என்ன நம்ம தமிழ்நாட்டு உடையா?சினிமாவில் வரும் மானேஜர் அதை போட்டால் உங்களுக்கு உறுத்தாது.கூட டை கட்டினால் தூக்கில் தொங்குவது போல் இருக்கிறதா?:-D//
வேட்டி சட்டையில் சில கஷ்டங்கள் உண்டு. முக்கியமாக சட்டென அழுக்காகும், காற்றில் தாறுமாறாக வேட்டி விலகும். பேண்ட் சட்டை நம் சௌகரியத்துக்காக போடுவது, அது நமது டிசிஷன். ஆனால் கோட்டு, டை எல்லாம் தேவையற்ற இடங்களில் ஊரார், முக்கியமாக வெள்ளைக்காரன் என்ன நினைப்பானோ என போடுவது அடிமை புத்தி. நான் குறிப்பிட்ட உதாரணத்தில் நம்மவர் கோட்டு சட்டை எல்லாம் போட்டு ஏர்போர்ட்டுக்கு வர, லேண்ட் ஆன வெள்ளைக்காரன் பாட்டுக்கு பெர்மூடாஸ் போட்டு வந்தான். நம்மவர் அசடு வழிந்ததுதான் மிச்சம்.
மறுபடியும் கூறுகிறேன், நமது சௌகரியத்துக்கு உடை போடுவது என்பது வேறு மற்றவருக்கு ஃபிலிம் காட்ட போடுவது வேறு.
ஜிம்கானா கிளப் என்பது பதிவு செய்யப்பட்ட கிளப். அதிலுள்ளவர்கள் தங்களை ஓட்டைக் கப்பலில் வந்த வெள்ளைக்காரன் ரேஞ்சுக்கு நினைத்து கோமாளிகள் ஆகிறார்கள். இந்த அடிமை புத்தி அவர்களது. அவர்கள் இருக்கும் இடம் அரசு லீசில் இருக்கிறது என நினைக்கிறேன். அரசு நினைத்தால் இந்த விதியை மாற்றலாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நல்ல பதிவு
தமிழ் பற்றை பற்றி ஆரம்பித்திருந்தாலும்
இந்திய பற்றுடன் முடித்திருப்பது அருமை
வால்பையன்
ஆங்கில மீடிய வகுப்புத் தோழர்கள் என்னுடைய இலக்கண சுத்தமான ஆங்கிலத்தை சிறிதே கேலி செய்தனர்.
- Today also, they will for your English.
Your decision to write in Tamil in your blog is the wisest one.
Learning grammar is not sufficient. Even with perfect grammar, one can write English which no one will like to read!
டோண்டு சார்,
எல்லாமே நம்ம மனசுல இருக்கு.. அரிசி கோணியை பேஷன் ன்னு சொல்லி குட்டை பாவடை தைச்சி போட்டுனு அலையுற பெண்களையும் மும்பையிலேயும், வேறு நாடுகளிலேயும் பாத்திருக்கேன்.. இந்த கருமாந்திரங்களுக்கு மத்தியில்..நம் வேஷ்டி சட்டை எவ்வளவோ சூப்பர்... வேட்டி பறந்தா அசௌகர்யம் ன்னு சொல்லாதீங்க.. வெள்ளைக்காரன் காட்டுறதை விட நாம ஒண்ணும் புதுசா செஞ்சிடலை..
ரெண்டாவது,
அதான்..பெயரிலேயே.."ஜிம்கானா" ன்னு இருக்கே.. அதான் வெள்ளைக்காரன் துப்பிட்டு போன எச்சியை ஈரம் காயாமல் பாத்துக்கிறாங்க.. இந்த cosmopolitan கிளப் ஐயும் உங்க லிஸ்ட்டுல சேத்துக்குங்க.. எல்லாம் வெளி பகட்டு தான்...
உதாரணத்துக்கு பாண்டி பஜார்ல பொம்மை விக்கிறவன் கூட tie கட்டுறான்..அதனால அவன் கம்பெனி எம்.டி. ன்னு சொல்லலாமே.. (அவனோட சொந்த கம்பெனி க்கு) ... அவனும் எதோ ட்ரை பண்ணுறான்...என்ன பண்ண.. இப்படி எல்லாம் நெனச்சா, 350 வருஷம் நம்மளை வெள்ளைக்காரன் ஆளவே விட்டிருக்கக்கூடாது... நுழைஞ்ச அன்னிக்கே செருப்பால அடிச்சி துரத்தி இருக்கணும்..
நம்ம ஜனங்க புத்தி யும், நடத்தையும் மாறணும்.. அப்போ தான் நீங்க சொல்லுறது சாத்திய படும்.. என்னைக்கு ரோட்டுல ஒண்ணுக்கு அடிக்கிறது, ரயில்வே track ல விடிக்கிறது, பிச்சையோ பிச்சை..(இந்தியாவில மட்டும் தான் பிச்சைக்காரர்கள் அதிகம் னு ஒரு புள்ளி விவரம் சொல்லுது..) எல்லாம் நிக்குதோ, அன்னைக்கி பேசுவோம்.. வேற நாட்டுல இந்த கொடுமை எல்லாம் பாத்திருக்கீங்களோ ? இந்தியா வில மட்டும் தான் இதெல்லாம்... even, தாய்லாந்து, இந்தோனேசியா எல்லாம் கூட ஜனத்தொகை அதிகமா இருக்கிற நாடுகள் தான்.. அங்கே போயி பாருங்க.. எவ்வளவு சுத்தமா இருக்கு ன்னு..
எனவே, திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது...
டோண்டு சார்,
1. வேட்டி என்றாலே வெள்ளை தான்.. கலர் லே கட்டினா அது லுங்கி ஆயிடும்.. பாண்ட், சட்டை யில் இந்த தொல்லை இல்லை.. எந்த கலர் ல போட்டாலும்.. ஒ.கே தான்.. நாம போட்டா அழகா இருக்கும்.. வெள்ளைக்காரன் போட்டா பசுவுக்கு கோமணம் கட்டின மாதிரி இருக்கும்... (Vice versa for Suits on Indians)
2. கோட் சூட் என்பது அந்த அந்த நாடுகளின் தட்ப வெப்ப நிலையை பொறுத்தது.. நம் நாட்டிற்கு அது அவசியம் இல்லை.. எனினும் சில இந்திய பக்கிகள் (வெள்ளைக்காரனை பார்த்து) ஆரம்பித்து வைத்த பழக்கம். இன்றும் தொடர்கிறது..
3. நான் இந்தியா வில் வேலை பார்த்த வரை என் கல்யாண reception தவிர (அதுவும் கட்டாயத்தின் பேரில்) வேறு எந்த ocation னுக்கும் சூட் அணிந்ததில்லை... காரணம்.. என் நாட்டில் எனக்கு அது தேவை இல்லை... சவூதி அரேபியர் களை எடுத்துக்கொள்ளுங்கள்.. அந்த வெள்ளை கவுன் தான் அவர்களுக்கு சொர்க்கம்.. உச்சா போக, மேற்படி வேலைகளை சேர்த்து...
Tell me about it! எனக்குத் தெரிந்த ஒருவர் - இந்தியர் - இங்கே ஒரு கம்பெனி வைத்துள்ளார்! சென்னையில் ஒரு கிளை திறக்கலாமென்று எண்ணி தன் கீழே வேலை பார்க்கும் ஒரு வெள்ளைக்காரரை அழைத்துக்கொண்டு போயிருக்கிறார் demo-வெல்லாம் செய்து காட்ட! திரும்பி வந்ததும் என்னிடம் அழாக்குறையாக புலம்பினார்ர்! ஏர்போர்ட்டில், ஹோட்டல் லாபியில், கான்ஃப்ரன்ஸ்களில், etc. எங்குமே இவரை மதிக்க வில்லையாம்! அவரிடம் சம்பளம் வாங்கும் வெள்ளைக்காரனை என்னமோ முதலாளி மாதிரி treat செய்தார்களாம்! ஒரு முறை தங்கியிருந்த ஹோட்டல் restaurant-இல் order செய்து காத்திருந்தபோது வெள்ளைக்காரனுக்கு தான் முதலில் சாப்பிட கொண்டுவந்தார்களாம்! சர்வரிடம் விசாரித்ததில் "அவரு கோச்சுப்பாரு சார்!"" என்று பதிலளித்தாராம்!நான் இதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தேன்!பாரதியார் கூறிய அடிமையின் மோகம் எப்போதும் போகாது போலிருக்கிறது!
இந்தியாவை விடுங்கள்! அமெரிக்காவில் எல்லாரும் சமம் என்றுதான் நினைப்போம்! வெள்ளைக்காரனாவது அதை பேச்சிலாவது காண்பிப்பான்! நம்மவர்கள் ஒரு டீமில் வெள்ளைக்காரன் இருந்துவிட்டால் அவனையே மையப்படுத்தி அவனை தூக்கிவிட்டுவிடுவார்கள்! அது என்னமோ அவனைப்பார்த்தாலே நம்மவர்களுக்கு பயம் வந்துவிடுகிறது போல!
//நான் குறிப்பிட நினைப்பது என்னவோ ஆங்கிலம் தெரிந்தவனே படிப்பாளி என்ற என்ணத்தைத்த்சான் சாடுகின்றேன். //
but it is also not right to say 'you are blabberring' when someone is trying to express in english, valpayan does this often...
டோன்டு அவர்களே,
பொதுவாகவே நம்மவர்களுக்கு பயப்பட அல்லது பயமுறுத்தத் தான் தெரியுமே தவிர அடுத்தவர்களை மதிக்கத் தெரியாது. அதாவது நம்மவர்கள் ஒன்று அடுத்தவர்களுக்கு கீழே வேலை செய்ய வேண்டும் அல்லது அடுத்தவர்கள் நமக்கு கீழே வேலை செய்ய வேண்டும். சமமாக மதித்து வேலை செய்யவே தெரியாது.
மிக மோசமான இன்டெர்பெர்சனல் ஸ்கில்ஸ் உடையவர்கள். அதே சமயம் உச்ச பட்ச அளவில் அடுத்தவர்களை உடல் மொழியாலும் சொல்லாடலாலும் அவமதிப்பவர்கள். ஒருவரிடம் அறிமுகமாகும் போதே அவருடைய சம்பளம் என்ன என்பது தான் நம்மவர்கள் அமெரிக்காவில் கேட்கும் கேள்வி.
என்ன செய்ய? இதையெல்லாம் திருத்த முடியாது. இப்படிப்பட்ட நமக்கு இப்படிப்பட்ட அரசியல் தலைமை தான் கிடைக்கும்.
1.நடிகர்கள் விஜயகாந்த்,சரத்குமார்.கார்த்திக் கூட்டணியின் எதிர்காலம் பற்றிய தங்கள் கருத்து ?
2.தலித்,வன்னியர் வாக்கு வங்கியில் பெரும் பகுதியை விஜயகாந்த் கவர்ந்துவிட்டாதால்தான் பா.ம.க.தலைவருக்கும்,தி.வழவனுக்கும் அவர் மீது கோபமா?
3.சரத் இதுவரை தென் மாவட்டங்களில் கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியாதாக தகவல் இல்லையே?
4.கார்த்திக் கதை இதற்குமேலே எடுபடுமா?(பாக்யராஜ்,ராஜேந்தர் கதை ஊரறிந்த உன்மை)
5.பதவிப் பங்கீடு ஒரு சமாதனத்தை எட்டியுள்ளதாக தெரியவில்லை அத்னால் தான் ஜுன் 3 -செப்15 க்கா?
6.அன்பழ்கனுக்கு க்ட்சியில் ஆதரவே இல்ல நிலையிலும் இந்த அந்தஸ்து எப்படி தொடர்கிரது( கலைஞருக்கு பிராமினை தொடர்ந்து,முதலியாரையும் பிடிக்காது என்பர்)
7.அழ்கிரியின் பிடிவாதம் சரியா,தயாநிதி ,கலாநிதி விசயத்தில்?
8.கனிமொழி அண்ணன் பக்கமா,தம்பி பக்கமா ?
9.மூத்த அமச்சர்கள் ஸ்டாலினை ஏற்கவில்லை என்கிறார்களே அவர்கள் யார்?
10.ஸ்டாலினைவிட ,அதிமுக தலைவி செல்வி ஜெயலலிதாவின் அதிரடி அரசியலுக்கு அழ்கிரிதான் சரி என்பதால்தான் கலைஞர் .........
மாதிரி சில்லறை வேலைகளை செய்வதில்லை..
ஜுனூன் ஹிந்தி சீரியலில் ஒரு ஹோட்டல் மேனேஜர் தன் ரிசப்ஷனிஸ்டிடம் கூறுகிறார் "வெளிநாட்டுக்காரர்கள் (அந்த சூழ்நிலையில் வெள்ளைக்காரர்கள்) பொய்யே பேச மாட்டார்கள்"
it is super :)))
and fine Doondu sir..
puduvai siva.
ஐயா, நானும் தமிழ் மீடியத்தில் படித்தவன். இந்தியாவில் இருந்தவரை ஒரு விதமான நகைப்பிற்கு ஆளானவன், ஆனால் அமெரிக்காவில் நான் எப்போதாவது தவறாக பேசிவிட்டால்கூட ஒருவரும் சிரித்ததுகூட கிடையாது.நமது தாய்மொழி ஆங்கிலம் இல்லை என்பதால் அவர்கள் கண்டுகொள்வதில்லை. சீனர்கள் ஒருவரி கூட ஒழுங்காக பேச தெரியாமல் இருந்தாலும் கலக்குகிறார்கள். இங்கு புஷ்ஷே தப்புத்தப்பாய் பேசுகிறார். புஷ் சாதாரண ஆள் இல்லை. ஐவிலீக் பல்கலைகழகங்களில் படித்தவர். ஆக ஆங்கிலம் தெரியாதது ஒரு குறைபாடு இல்லை எனத் தெரிய ஆங்கிலம் பேசும் அமெரிக்காவிற்கு வர வேண்டியுள்ளது. :-)
இன்னோருவிடயம், நான் ஜெட் ஏர்வேஸில் நியுஆர்க் (Newark) வந்த போது பெட்டி வரவில்லை எனக் காத்திருந்தேன். அப்போது ஒரு அமெரிக்கர் ஜெட்டில் வேலை செய்யும் பெண்ணிடம் தனது பெட்டி வரவில்லை என்ப் புகார் செய்தார். உடனே அப்பெண் பொறுப்பாக காத்திருக்கும் படி சொன்னார்,நான் புகார் செய்தபோது வெறுப்பாக பெட்டியை கண்டுபிடித்து எடுத்துகொள்வது எனது வேலை எனச் சொல்லிவிட்டார். இதே மாதிரியான சேவைக்குறைபாடு அமெரிக்கன் ஏர்லைஸில் ஏற்ப்பட்ட போது, அவர்கள் சிறிது நேரம் அவர்களே தேடினார்கள், பின்பு முகவரி கொடுத்துவிட்டு போகச்சொல்லிவிட்டு வீட்டில் கொண்டுவந்து கொடுத்தார்கள்.
டோண்டு அவர்களே! நாம் இயற்கையாகவே அடிமைகளாக பிறந்து இருக்கிறோம் என்பதை மறந்து விடாதீர்கள்.முன்பு நம் பழைய ராஜாக்களுக்கு அடிமையாக இருந்தோம்,பிறகு முகலாயமன்னர்களுக்கு,பிறகு ஆங்கிலேயர்களுக்கு.இப்போது நம்மை ஆட்சி செய்யும் நம்மவர்களுக்கு.நம் அடிமை புத்தியை வளர்த்தவர்கள் ஆங்கிலேயர்கள் என்றால் வளர்த்து மரமாக்கியிருப்பவர்கள் இவர்கள்தான். நாம்,அரசியல்வாதிகள் ஓட்டுக்கேட்க வந்தால் என்ன நடக்கிறது. நேரு காலத்திலும் "அப்பா அவரு என்னா வெள்ளையா இருக்கிறாரு?".இந்திராவின் காலத்திலும் அதுதான்.எம்ஜியாருக்கும் இதே நிலை. இன்று சோனியாவிற்க்கும்,அவர் புத்திரனுக்கும் ,அவர்கள் நல்ல நிறமாக உள்ளதே அவர்களுடைய தகுதி(வெள்ளைக்காரர்களுக்குப் பிறந்தவர்கள் வேறு எப்படித்தான் இருப்பார்கள்) என்று ஒட்டுப்போடும் ஜனங்கள்!.ஒரு காலத்தில் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ளவர்களை அவர்கள் அடிமைகளாக ஆக்கி கொண்டுச் சென்றார்கள்.நமக்கு என்றும் அந்த நிலைமை வராது.எனென்றால் அவர்கள் நம் தேசத்திலேயே நம்மவரை அடிமையாக ஆட்கொள்வார்கள்!
என்ன டோண்டு சார் !!
அப்படியே..ஜாம் ஆகி நின்னுட்டீங்களா ? பதிலையே காணும் ?
சங்க தமிழன் அவர்களே,
நீங்கள் என்ன கேள்வி கேட்டீர்கள், நான் அதற்கு பதில் சொல்லவில்லை என்கிறீர்கள்? எனது ஆர்கைவ்ஸில் தேடிப் பார்த்ததில் இதுதான் உங்கள் பின்னூட்டம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார் ! நான் குறிப்பிட்டது.. மற்ற பதிவர்கள் இட்ட பின்னூட்டங்களில்..உள்ள கேள்விகளை / கமெண்ட் களை பற்றி.. நான் ஒன்றும் இந்த இடுகையில் கேட்கவில்லை.. ஏனெனில் நான் உங்கள் இந்த பதிவை படித்து வருகிறேன்..இந்த இடுகையில் நான் கேட்க / பதிய நினைத்தவைகளை மற்றவர்கள் பதிந்து விட்டனர் ... அதுக்கு reply பண்ணுங்க..
Had a chance to read my blogs at keysven.blogspot.com ? any comments on my views there ... ??
சங்க தமிழன் அவர்களே,
அனானி கேட்ட 10 கேள்விகள் எனது அடுத்த டோண்டு பதில்கள் பதிவின் வரைவில் சேர்க்கப்பட்டுவிட்டன. அவற்றுக்கான பதில் வரும் வெள்ளியன்றுதான் வரும். மற்ற பின்னூட்டங்களில் எதிர்வினை தர வேண்டியதற்கு தந்துள்ளேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கீ - வென் அவர்களே,
உங்கள் வலைப்பூ பார்த்தேன். சுவாரசியமாக உள்ளது. எனது ஒரு பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வந்ததுக்கு நன்றியும்..பதிவுக்கு பதிலும் போட்டுட்டேன்..
இப்போ.. உங்க இடுகைக்கு ஒரு கேள்வி..
என் இந்திய மக்களுக்கு மட்டும் சுத்தம், பொது நலம் என்ற மனப்பான்மை இருப்பதில்லை..இதுவே நம் தவற்றுகளுக்கு காரணமோ ?
Post a Comment