8/13/2008

ராஜாஜி அவர்களின் சுதந்திரா கட்சி மீண்டும் வருமா?

"Dreaming of Swatantra" என்ற தலைப்பிலுள்ள கட்டுரையை நண்பர் ஹேயக் ஆர்டர் சந்திரசேகரன் அனுப்பியுள்ளார்.

இப்போது இல்லாமல் போன சுதந்திரக் கட்சியை பற்றியது அக்கட்டுரை. சமீபத்தில் 1959-ல் மாமனிதர் ராஜாஜி, பேராசிரியர் ரங்கா மற்றும் எம்.ஆர். மசானி ஆகியோரால் நிறுவப்பட்ட அந்த கட்சி அறுபதுகளில் தனது முத்திரையை பதித்தது. சோஷலிசம் பேசுவதுதான் முற்போக்காக தவறாக எண்ணப்பட்ட அக்காலத்தில் தைரியமாக தனியுடைமையை ஆதரித்து தனது கொள்கைகளை அது பரப்பியது. அதை அவதூறாக பணக்காரர்கள் கட்சி என அப்போதைய பிரதமர் நேரு அவர்கள் முத்திரையிட, ராஜாஜி அவர்கள் அனாயாசமாக காங்கிரஸ்தான் பணக்காரர்கள் கட்சி என்பதை நிறுவினார். இருப்பினும் பாப்புலர் வோட் ராஜாஜியிடம் லேது என்ற மறுக்க முடியாத உண்மையால் இது நேருவின் நம்பிக்கைத் தன்மைக்கு பங்கம் ஏதும் விளைவிக்கவில்லை என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். முழு கட்டுரையையும் எனது ஆங்கிலப் பதிவில் பார்க்கலாம். அதன் சுருக்கமான மொழிபெயர்ப்பு கீழே தடித்த சாய்வெழுத்துக்களில். கட்டுரையை எழுதியது நிரஞ்சன் ராஜ்யதக்‌ஷா. அதில் வரும் நான் என்பது நிரஞ்சன் அவர்களை குறிக்கும்

நவ இந்தியாவின் சரித்திரத்தில் வெற்றிகரமாக செயல்பட்ட ஒரே ஒரு லிபரல் கட்சி இப்போது இருந்திருந்தால் அடுத்த வருடம் 50-ஆம் ஆண்டு நிறைவை கொண்டாடியிருக்கும். அது சமீபத்தில் ஆகஸ்ட் 1959-ல் துவங்கப்பட்டது.

நோபல் பரிசு பெற்ற அமார்த்யா சென் அவர்கள் தற்சமயம் இந்தியாவின் தேவை ஒரு மதசார்பற்ற, சுதந்திர பொருளாதாரத்தை ஆதரிக்கும் வலதுசாரி லிபரல் கட்சி எனப் பேசியுள்ளார். இப்போது இப்பிரச்சினையை கையில் எடுக்க இரண்டு முக்கியக் காரணங்கள். ஒன்று இடதுசாரி கும்பல்கள் பொருளாதார சீர்த்திருத்தங்களை வரவிடாமல் என்னென்னவோ செய்கின்றன. இரண்டாவது எதேச்சையாக அடுத்த ஆண்டு அம்மாதிரி கட்சியாக இருந்த சுதந்திராக் கட்சியின் 50-ஆம் ஆண்டு நிறைவு.

பரஸ்பர நம்பிக்கை குறைந்து, லஞ்ச லாவண்யங்கள் நிறைந்த தேசங்கள் சுதந்திரப் பொருளாதாரத்துக்கு பொதுவாகவே எதிரானவை. கடந்த 15 ஆண்டுகளாக பொருளாதார சீர்த்திருத்தத்தால் விளைந்த நன்மைகளை பார்த்த பிறகு சாதாரணமாக இம்மாதிரி வலதுசாரி சிந்தனையுடைய லிபரல் கட்சியின் தேவைக்கான பலமான அரசியல் அடிப்படை உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை. சீர்திருத்தங்களால் பலனடைந்தவர்கள் கூட அரசு கட்டுப்பாடுகள் மூலம் விலைவாசி உயர்வைத் தடுக்க இயலும் என்னும் நம்பிக்கையிலிருந்து மீளவில்லை என்பது ஆச்சரியத்துக்குரிய விஷயமே. பலர் இன்னும் வல்லான் பொருள் குவிக்கும் தனியுடைமை சமூகத்துக்கு கெடுதல் என நம்புவதும் எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. ஆக, எந்தக் கட்சியும் துணிந்து வலதுசாரி கொள்கைகளை சுவீகரித்து கொள்ளும் என நம்பாததும் எவ்வாறு தவறாகும்?

ஏன் இப்படி? அரசியலையும் மீறி இந்திய சமூகத்தின் தன்மை மற்றும் தனியுடைமை ஆகியவை இதில் பங்கு வகிக்கின்றன.

ஹார்வேர்ட் பல்கலை கழகத்தைச் சேர்ந்த Philippe Aghion, Paris School of Economics-ஐ சேர்ந்த Yann Algan, Ecole Polytechnique-ன் Pierre Cahuc மற்றும் ஹார்வேர்ட் பல்கலை கழகத்தைச் சேர்ந்த Andrei Schleifer ஆகியோரால் தயார் செய்யப்பட்ட ஆய்வுக் கட்டுரை ஒன்று இதற்கான காரணங்களைப் பற்றிப் பேசுகிறது. அதாவது நாட்டு மக்களுக்குள் பரஸ்பர நம்பிக்கை இல்லாமல் போவதற்கும் நாட்டில் கட்டுப்பாடுகளுக்கான கோரிக்கைகள் அதிகரிப்பதற்கும் சம்பந்தம் உண்டு என்று அது கூறுகிறது.

இதை அவர்கள் பல பணக்கார நாடுகளை ஆராய்வதன் மூலம் உணர்ந்துள்ளனர். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மிக அதிக கவனத்தை ஈர்த்த சமுதாய மூலதனம் என்ற கோட்பாட்டை இங்கு அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். ஒரு நாட்டின் பொருளாதாரத்துக்கு தேவையானது இயந்திரங்களின் மூலதனம், பண் மூலதனம் மற்றும் மக்கள் செல்வம் ஆகியவையே. அவை வளர வேண்டும். அதே சமயம் சமுதாய மூலதனமும் தேவையே (அதாவது பரஸ்பர நம்பிக்கை). பொருளாதார நிபுணர் Kenneth Arrow ஒரு முறை கூறியதாவது: "எந்தவித வணிகச் செயல்பாட்டுக்கும் நம்பிக்கை என்பது அவசியம் தேவை, அதிலும் நீண்டகால நம்பிக்கை. இந்த நம்பிக்கை இல்லாமல் போவதே பொருளாதார பின்னடைவுகளுக்கு காரணம் எனவும் கூறலாம்."

Aghion-ம் அவரது மூன்று கூட்டாளிகளும் இந்த மக்களுக்குள் பரஸ்பர நம்பிக்கை குறைவுள்ள நாடுகளில் கட்டுப்பாடுகள் அதிகம், அதன் மூலம் லஞ்ச ஊழல் பெருகும் என்பதை இந்தக் கட்டுரை மூலம் காட்டியுள்ளனர். இதை நாம் ஏற்கனவே பெர்மிட், லைசன்ஸ் கோட்டா அரசில் பார்த்து விட்டோமே. "நம்பிக்கை குறையக் குறைய அதிக கட்டுப்பாடுகளுக்கான கோரிக்கைகள் வலுபெறுகின்றன என்பதும் ஒரு சுவாரசியமான விஷயமே. இதனால் லஞ்ச ஊழல் பெருகினாலும் கோரிக்கைகளில் மாற்றமில்லை" என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஏழை நாடுகளில் உள்ள கட்டுப்பாடுகள் சில நேர்மையற்ற முதலாளிகள் லைசன்ஸ்கள் பெற்று உற்பத்தியை முடக்குவதில்தான் முடிகின்றன. அவர்கள் செயல்பாடுகள் நேர்மையான தொழிலதிபர்களையும் பாதிக்கின்றன. ஆகவே தனியுடைமை பொதுவாகவே யாருக்கும் பிடிக்காத விஷயமாகிறது. இதைக் கூறுவது Harvard Business School-ஐச் சேர்ந்த Rafael Di Tella மற்றும் Imperial College-ஐச் சேர்ந்த Robert MacCulloch தயாரித்த இன்னொரு ஆய்வுக் கட்டுரை.

நாட்டில் உள்ள பரஸ்பர நம்பிக்கை மற்றும் அதன் பொருளாதாரத் துறையில் வரும் லாபங்கள் நேர்மையான முறையில் வருகின்றனவா அல்லாது அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் கொடுத்து அதர்மமான முறையில் வருகின்றனவா என்பதைப் பொருத்துத்தான் வலதுசாரி சிந்தனை கட்சிக்கு ஆதரவு கிடைக்குமா அல்லது இல்லையா என்பதைக் கூற இயலும் என இந்த இரு கட்டுரைகளும் நிறுவுகின்றன.

எண்பதுகளில் பிரிட்டிஷ் பிரதமராக இருந்த இரும்பு பெண்மணி மார்க்கரெட் தாச்சர் தைரியமாக தனியுடைமைக்கு ஆதரவாகச் செயல்பட்டார்.அவர் அளவுக்கு தில்லுடன் செயல்பட நமது அரசியல்வாதிகளுக்கு மஞ்சாச்சோறு இருக்கிறதா?


இப்போது மீண்டும் டோண்டு ராகவன். இக்கட்டுரையை அனுப்பிய சில நிமிடங்களில் சந்திரசேகரன் இன்னொரு மின்னஞ்சலையும் அனுப்பினார். அதில் அவர் கூறியதாவது:
"சென் அவர்கள் கடந்த திங்களன்று பாராளுமன்றத்தில் பேசும்போது சமூக நீதி தேவை எனப் பேசினார். என்ன குழந்தைத்தனமான நம்பிக்கை? அது எங்கேயிருக்கிறது? ("சமூக நீதியா? அப்படியெல்லாம் ஒண்ணுமில்லீங்கோ" என்பதை பல ஆண்டுகளுக்கு முன்னமேயே பிரபல பொருளாதார நிபுணர் ஹேயக் ஆர்டர் கூறிவிட்டார்).

நன்றி சந்திரசேகர். ஆனால் ஒரு பிரச்சினை. சுதந்திரா கட்சியோ அது போன்ற வேறு கட்சியோ வர இயலாது. ஏன் என்பதை எனது ஒரு முக்கியமான பொதுநல வழக்கு என்னும் பதிவில் குறித்துள்ளேன். அதாவது, புதிதாக வரும் எந்த கட்சியும் சோஷலிசம் என்னும் விளங்காதக் கொள்கையை ஆதரிப்பதாக உறுதிமொழி எடுத்தாக வேண்டிய சட்ட நிலை இப்போது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2 comments:

வஜ்ரா said...

Dreaming of swatantra என்னும் ஆங்கிலக் கட்டுரையில் குறிப்பிடப்படும் Constitution of liberty புத்தகம் F.A Hayek என்னும் நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதையால் எழுதப்பட்டது. அவர் எழுதிய இன்னொரு மிகப் பிரசித்தி பெற்ற புத்தகம் "The Road to serfdom" அந்தப் புத்தகத்தைத் திருப்பி அதை யாருக்கு அவர் சமர்பிக்கிறார் என்று பார்த்தால்...

"To ....

Socialists of the world.."

என்று இருக்கும்.

குடுகுடுப்பை said...

என் முதல் பதிவு வந்து பாருங்கள்.

http://kudukuduppai.blogspot.com/2008/08/blog-post_14.html

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது