8/21/2008

அரசு அதிகாரிகள் மக்களை விட புத்திசாலிகளா?

எனது சந்தன வீரப்பனை சுலபமாக தவிர்த்திருக்கலாமோ என்னும் பதிவில் சிலர் இம்மாதிரி பின்னூட்டம் இட்டிருந்தனர்.

"சந்தன மரத்தை வளர்க்கலாம். வெட்டத்தான் அனுமதி தேவை.அதற்கு காரணம் மரம் endangered species ஆக மாறி விடக்கூடாது என்பதுதான்". ஆக, இச்சட்டத்துக்கு அடிப்படை ஒரு நல்ல எண்ணம் என்பதை வாதத்துக்காக வைத்து கொள்வோம். வளர்ப்பவர்கள் எல்லாம் மாங்காய் மடையர்கள், அரசு அதிகாரிகள்தான் புத்திசாலிகள் என்று நினைத்த சோஷலிச காலத்தில் இச்சட்டம் போடப்பட்டுள்ளது. அதை மறுபரிசீலனை செய்யும் காலம் வந்துவிட்டது. காடுகளில் சந்தன மரங்களை ஒட்டுமொத்தமாக வெட்டி காசு பார்க்கிறார்களே பலர். அதற்கு காட்டிலாகா அதிகாரிகளும்தானே துணை? சந்தன மரங்கள் மிகுதியாக உள்ள ஒட்டுமொத்த காடுகளே அழியும் அபாயம் உள்ளதே. இதைத் தடுக்க வேண்டாமா? நரகத்துக்கு செல்லும் பாதை நல்லெண்ணம் என்னும் கற்களால் வேயப்பட்டுள்ளது என்பதை தெரியாமலா சொன்னார்கள்?

இதையெல்லாம் பார்க்கும்போது டி.ஜி.எஸ்.&டி. என்னும் அமைப்பு நினைவுக்கு வருகிறது. இதுதான் அரசு துறைகளுக்கான பொருள்களை வாங்கும் அமைப்பு. உதாரணத்துக்கு மின்விசிறி வாங்க வேண்டுமானால் இத்துறையிடம்தான் கோரிக்கை வைக்க வேண்டும். இவர்கள் பொறுக்கி எடுத்த சில கம்பெனிகளுடன் விலை ஒப்பந்தம் போட்டிருப்பார்கள். அவர்களுக்கு இவர்கள் ஆர்டர் கொடுப்பார்கள். ஓட்டையோ உடைசலோ அவர்கள் தரும் ஃபேனைத்தான் மொத்தமாக வாங்கி வினியோகம் செய்வார்கள். அத்துறையின் நிர்வாகச் செலவு கட்டுக்கடங்காமல் போனதில் உலகமயமாக்கம் வந்த தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் அதற்கு சாவுமணி அடித்தார்கள். இப்போது நிலைமை எவ்வளவோ பரவாயில்லை.

அரசு ஒரு துறையில் புகுந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை "The Adventures of Jonathan Gullible: A Free Market Odyssey" (எழுதியது Ken Schoolland) என்னும் புத்தகம் அருமையாக விவரிக்கிறது. சுதந்திரம் என்பது அவரவர் தமக்கு சரி எனத் தோன்றுவதை மற்றவருக்கு பாதிப்பின்றி செய்வது. சொல்ல எளிதாக இருப்பினும் இது மிகவும் கடினமான செயல்பாடு. பலருக்கு இந்த பொறுப்பு பிடிப்பதில்லை. யாராவது வந்து தாங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை சொல்ல வேண்டும் என எதிர்ப்பார்க்கிறார்கள். இங்குதான் அரசு நுழ்க்ஷைகிறது. இதைச் செய், இதை செய்யாதே என்று கட்டுப்பாடுகள் விதிக்கிறது. லைசன்ஸ் முறை வந்ததும் இப்படித்தான். ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் குறிப்பிட்ட தொழிலை செய்ய ஒருவருக்கு மட்டும் லைசன்ஸ் தருவது. பலர் ஒரே தொழிலை செய்தால் போட்டி மனப்பான்மை அதிகரிக்குமாம். அது நல்லது இல்லை சோஷலிசத்துக்கு என ஆரம்பகாலங்களில் செய்த முடிவை பிறகு பரிசீலிக்க பலருக்கு நேரம் இல்லாமல் போயிற்று. இந்தியா முழுக்க மூன்றே மூன்று கம்பனிகளின் கார்கள்தான் ஓடின. அவையும் உடனேயே கிடைக்காது. பதிவு செய்து முன்பணம் தர வேண்டும், சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அவை கொடுப்பதுதான் தரம். அதைத்தான் ஒத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலை. 1991-ல் தங்கத்தையே அடகுவைக்கும் நிலைக்கு அரசு தள்ளப்படும்வரை இப்படித்தான் நிலைமை இருந்தது. இப்போது? லைசன்ஸ் இன்னும் இருந்தாலும் அதை தாராளமாக கொடுப்பதால் பலனடைந்தது நுகர்வோர்கள்தானே.

இன்னொரு பாடாவதி சட்டம், வீட்டு வாடகைக் கட்டுப்பாடு. அதனால் விளைந்த அனர்த்தங்கள் அனேகம். இபோது கூட பம்பாயில் பல பழைய குடியிருப்புகளில் வாடகை 30 அல்லது 40 ரூபாய்கள்தான். வீட்டுச் சொந்தக்காரர்கள் பணக்காரர்கள், குடித்தனக்காரர்கள் ஏழைகள் என்ற தட்டையான மனப்போக்கால் எழுந்த சட்டம் அது. என்ன ஆயிற்றென்றால், வீடுகளை கட்டுபவர்கள் அவற்றை பூட்டி வேண்டுமானலும் வைத்தார்களே தவிர யாருக்கும் அவற்றை வாடகைக்கு விடுவதாக இல்லை. இந்த ஒன்றரையணா வாடகையில் மராமத்து யார் பார்ப்பார்களாம். கட்டிடங்கள் இடிந்து விழ ஆரம்பித்துள்ளன. பம்பாயில் அவ்வாறு இடிந்து விழும் கட்டிடங்களை கூர்ந்து கவனித்தால் அங்கிருப்பவர்கள் இந்த ரெண்ட் கண்ட்ரோலின் கீழ் குறைந்த வாடகை தருபவர்கள்தான் என்பது புலனாகும்.

ஆமையும் அமீனாவும் புகுந்த வீடு உருப்படாது என்பதை சற்றே மாற்றி அரசு தொடங்கும் தொழிற்முயற்சிகள் உருப்படாது என்றே கூறிவிடலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

29 comments:

புருனோ Bruno said...

//இதையெல்லாம் பார்க்கும்போது டி.ஜி.எஸ்.&டி. என்னும் அமைப்பு நினைவுக்கு வருகிறது. இதுதான் அரசு துறைகளுக்கான பொருள்களை வாங்கும் அமைப்பு. உதாரணத்துக்கு மின்விசிறி வாங்க வேண்டுமானால் இத்துறையிடம்தான் கோரிக்கை வைக்க வேண்டும்.//

எனக்கு தெரிந்த வரை அவர்கள் குறிப்பிடும் கட்டணத்திலோ அதற்கு குறைவாகவோ பொருள் வாங்கினால் “டெண்டர்” விட வேண்டியதில்லை

--

உதாரணமாக ஒரு 1 லிட்டர் தண்ணீர் பாட்டில் வாங்க வேண்டும் என்றால் ஒன்று

1. டெண்டர் விட வேண்டும்.
அல்லது
2. மூன்று நிறுவனங்களிலிருந்து “கோட்டேஷன்” வாங்க வேண்டும்.

முன்றாவது நடைமுறை

டி.ஜி.எஸ்.&டி. வெளியிடும் பட்டியலில் 1 லிட்டர் தண்ணீர் பாட்டில் என்ன விலையோ அந்த விலைக்கு வாங்கலாம்.

--

உங்கள் வார்த்தைகளில் அவர்கள் மூலம் தான் வாங்க வேண்டும் போல் வருகிறது

புருனோ Bruno said...

//ஆமையும் அமீனாவும் புகுந்த வீடு உருப்படாது என்பதை சற்றே மாற்றி அரசு தொடங்கும் தொழிற்முயற்சிகள் உருப்படாது என்றே கூறிவிடலாம்.//

ஹி ஹி ஹி

நன்றாக் ”உருப்பட்ட” என்ரான், ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க், தனியார் நிதி நிறுவனங்கள், தனியார் வங்கிகள் குறித்து உங்கள் கருத்தென்ன

:) :) :)
--

Unknown said...

//ஆமையும் அமீனாவும் புகுந்த வீடு உருப்படாது என்பதை சற்றே மாற்றி அரசு தொடங்கும் தொழிற்முயற்சிகள் உருப்படாது என்றே கூறிவிடலாம்.//

Ha..ha.

அப்படி எல்லாம் சொல்ல முடியாது.டாஸ்மாக் விற்பனை தெருவுக்கு தெரு சக்கைபோடு போடுகிறதே?:-)

மற்ற எல்லாவற்றிலும் சொதப்பும் அரசு சாராயத்தில் மட்டும் ஸ்டெடியாக நிற்பதன் ரகசியம் என்ன?:-)

dondu(#11168674346665545885) said...

//நன்றாக் ”உருப்பட்ட” என்ரான், ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க், தனியார் நிதி நிறுவனங்கள், தனியார் வங்கிகள் குறித்து உங்கள் கருத்தென்ன :) :) :)//
அவ்வாறு உருப்படாமல் போனவை மூடப்பட்டன. சம்பந்தப்பட்ட கம்பெனிக்கார்ர்களுக்குத்தான் நஷ்டம். அவற்றுக்கு மேல் நட்டத்தை சந்தித்த, இன்னும் சந்திக்கும் ஐ.டி.பி.எல். போன்ற கம்பெனிகள் இன்னும் குற்றுயிரும் குலையுயிர்மாக இருந்து வரி அளிப்போர்களுக்கு சுமையாக உள்ளன.
தனியார் எல்லோருமே திறமைசாலிகள் எனக் கூறவரவில்லை. திறமையற்றவர்கள் திவாலாவார்கள். ஆனால் அரசுத் துறை கம்பெனிகள் அப்படியில்லையே. :)))) :))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

டி.ஜி.எஸ். & டி. யின் பராமரிப்பு செலவுகள் பற்றி தெரிந்தால் இப்படி பேசமாட்டிர்கள். அவர்கள் செய்த சேவைக்கும் செலவுக்கும் சம்பந்தமே இல்லை.

இப்போது அது இல்லாததால் குடி ஒன்றும் முழுகிப்போகவில்லையே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ரவி said...

///ஆமையும் அமீனாவும் புகுந்த வீடு உருப்படாது என்பதை சற்றே மாற்றி அரசு தொடங்கும் தொழிற்முயற்சிகள் உருப்படாது என்றே கூறிவிடலாம்.

அன்புடன்,
///

ஆமையை ஏன் இதில் இழுத்தீர்கள் என்று சொல்ல முடியுமா ?

புருனோ Bruno said...

//ஆமையும் அமீனாவும் புகுந்த வீடு உருப்படாது என்பதை சற்றே மாற்றி அரசு தொடங்கும் தொழிற்முயற்சிகள் உருப்படாது என்றே கூறிவிடலாம்.//

அப்படியென்றால் ஆமையும் அமீனாவும் புகுந்த வீடு உருப்படாது என்பதை சற்றே மாற்றி அரசு தொடங்கும் சில தொழிற்முயற்சிகளும் தனியார் துவங்கு சில தொழிற்முயற்சிகளும் உருப்படாது என்றே கூறிவிடலாம்.

நீங்கள் முதலில் அரசை மட்டும் அல்லவா குறை கூறினீர்கள்

புருனோ Bruno said...

//அவ்வாறு உருப்படாமல் போனவை மூடப்பட்டன. சம்பந்தப்பட்ட கம்பெனிக்கார்ர்களுக்குத்தான் நஷ்டம். //
என்ரான் போன்ற தனியார் நிறுவனங்களினால், போபால் யூனியன் கார்பைட் போன்ற நிறுவனங்களால் மக்களுக்கு நஷ்டமில்லை என்ற உங்கள் கண்டுபிடிப்பு ஆச்சரியமாக இருக்கிறது :) :) :)

--

உருப்படாமல் போகும் நிறுவனங்கள் மூடப்படும். அது அரசு என்றாலும், தனியார் என்றாலும்

நீங்கள் அரசு நிறுவனங்கள் மட்டுமே உருப்படாதது போல் முதலில் கூறியது தவறு தானே

அதே நேரம் தனியார் வங்கி திவாலாகும் போது யாருக்கு சாமி நஷ்டம் என்பதை கொஞ்சம் தெளிவு படுத்துங்களேன்

புருனோ Bruno said...

//டி.ஜி.எஸ். & டி. யின் பராமரிப்பு செலவுகள் பற்றி தெரிந்தால் இப்படி பேசமாட்டிர்கள். அவர்கள் செய்த சேவைக்கும் செலவுக்கும் சம்பந்தமே இல்லை.//

இது உங்கள் கருத்து. ஒவ்வொருவரும் 3 கொட்டேஷன் வாங்கும் செலவு குறைகிறது என்பது என் கருத்து

//இப்போது அது இல்லாததால் குடி ஒன்றும் முழுகிப்போகவில்லையே.//

இப்பொழுதும் அது இருக்கிறது. டோண்டு சார்.

மத்திய அரசில் இருக்கும் உங்கள் நண்பர்களிடம் கேட்டு சொல்லுங்களேன்

dondu(#11168674346665545885) said...

////அவ்வாறு உருப்படாமல் போனவை மூடப்பட்டன. சம்பந்தப்பட்ட கம்பெனிக்கார்ர்களுக்குத்தான் நஷ்டம். //
என்ரான் போன்ற தனியார் நிறுவனங்களினால், போபால் யூனியன் கார்பைட் போன்ற நிறுவனங்களால் மக்களுக்கு நஷ்டமில்லை என்ற உங்கள் கண்டுபிடிப்பு ஆச்சரியமாக இருக்கிறது :) :) :)//
ஐ.டி.பி.எல். மாதிரி இன்னும் தொங்கிக்கொண்டிருக்கவில்லையல்லவா?

அதை மூடுவதே ஓட்டிழப்பு வருமோ என்ற பயத்தால் நடக்காமல் அல்லவா போகிறது. போப்பால் விஷயத்தில் அந்த கம்பெனியை மூட அலவ் செய்யவில்லை. அவர்களும் பராமரிப்பில் அசால்ட்டாக இருந்தனர். அவர்களை செக் செய்ய வேண்டிய இன்ஸ்பெக்‌ஷன் அதிகாரிகள் கையூட்டு வாங்கி அமைதியாக இருந்தனர். இம்மாதிரி விஷயங்களிலும் அரசு அதிகாரிகளின் ஊக்குவிப்பை கூறாமல் விடுவது அவர்களது புகழுக்கு செய்யும் அநீதி. :)))))))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

டி.ஜி.எஸ். & டி. இன்னும் இருந்தாலும் முந்தைய அளவுக்கு இல்லை. அங்கு போஸ்டிங் பெற இப்போது அவ்வளவு போட்டியும் இல்லை எனக் கேள்விப்படுகிறேன்.

செண்டரலிஸ்ட் பிளான்னிங் செய்த நாடே (சோவியத் யூனியன்) வரைபடத்திலிருந்து காணாமல் போனாலும் அந்த சிஸ்டத்தின் மேல் இவ்வளவு தெய்வ நம்பிக்கை ஆச்சரியமளிக்கிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

//செண்டரலிஸ்ட் பிளான்னிங் செய்த நாடே (சோவியத் யூனியன்) வரைபடத்திலிருந்து காணாமல் போனாலும் அந்த சிஸ்டத்தின் மேல் இவ்வளவு தெய்வ நம்பிக்கை ஆச்சரியமளிக்கிறது.//

இதில் தெய்வ நம்பிக்கை எங்கே வருகிறது.
எல்லாம் அவன் செயல் என்று எடுத்து கொள்வோம்மேன்றால்.
எதற்கு இத்தனை கேள்விகள்?

(பதிவு புரியவில்லை என்பதால் பின்னூட்டத்திற்கு கேள்வி)

வால்பையன்

Anonymous said...

//டி.ஜி.எஸ். & டி. இன்னும் இருந்தாலும் முந்தைய அளவுக்கு இல்லை. //
you told that it is not there few hours before

//செண்டரலிஸ்ட் பிளான்னிங் செய்த நாடே (சோவியத் யூனியன்) வரைபடத்திலிருந்து காணாமல் போனாலும் அந்த சிஸ்டத்தின் மேல் இவ்வளவு தெய்வ நம்பிக்கை ஆச்சரியமளிக்கிறது.//

Issue is not about centralised planning

The issue is that Both Private as well as Government sectors are equally efficient and equally corrupt

வஜ்ரா said...

//
உருப்படாமல் போகும் நிறுவனங்கள் மூடப்படும். அது அரசு என்றாலும், தனியார் என்றாலும்

நீங்கள் அரசு நிறுவனங்கள் மட்டுமே உருப்படாதது போல் முதலில் கூறியது தவறு தானே
//

சாமி, தனியார் நிறுவனங்கள் திவாலானால் மூடித்தான் ஆகவேண்டும். அரசு நிறுவனங்கள் போல் மக்கள் வரிப்பணத்தை சுவாஹா செய்து மிருத்யுஞ்சயம் செய்ய முடியாது.

எனக்குத் தெரிந்தே UTI நிறுவனம் இரண்டு முறை திவாலாகி, பின் அரசு வரிப்பணம் வாங்கிக் கொண்டு இன்று மியூச்சுவல் பண்டு நடத்துகிறது. ஏன் இப்படி ?

அரசின் வேலை வியாபாரம் செய்வது அல்ல. ஆட்சி செய்வது.

இன்று சில அரசு நிறுவனங்கள் (எ.டு., ரயில்வேஸ்) லாபத்தில் இயங்குகிறது என்றால் அதற்குக் காரணம் 100 க்கு 95% அந்தத் துறையில் தனியார் நிறுவனங்கள் இயங்குவதில்லை அல்லது அதற்குத் தடை இருக்கிறது என்பதால் தானே தவிற மக்கள் அரசு நிறுவனங்களைத் தான் விரும்புகிறார்கள் என்று சொல்லமுடியாது.

manikandan said...

டோண்டு சார்,

சந்தனமரம் endangered species ஆயிடும்ன்னு அரசு regulations கொண்டு வராங்க. அதுக்கும் அரசு நடத்தற தொழிலுக்கும் என்ன சம்பந்தம் ? எனக்கு கொஞ்சம் புரிய வைங்க.

siva gnanamji(#18100882083107547329) said...

//ஆமையும் அமீனாவும் புகுந்த வீடு
உருப்படாது//

//ஐ.டி.பி.எல் கலைக்கப்பட்டது//

நமது மூத்த பதிவர் ஒருவர் ஸமீபத்தில் நீண்ட காலம் ஐ.டி.பி.எல்லில்
குப்பை கொட்டினார்

ஆகவே மகா ஜனங்களே.........

Selvin Anish said...

தமிழில் இவ்வளவு பேர் Active ஆக Google Blogs use பண்றாங்க...
உள்ளூர் அரசியல்வாதியெல்லம் தமிழை நான் தான் வளக்குறேன்னு சொல்லிக்கிட்டு திரியிராங்கேய்....ஆனால் Larry Page மற்றும் Sergey Brin தான் உண்மையாவே தமிழை வளர்க்க வழி செய்திருக்காங்கேய்....

அது சரி said...

//
ஆமையும் அமீனாவும் புகுந்த வீடு உருப்படாது என்பதை சற்றே மாற்றி அரசு தொடங்கும் தொழிற்முயற்சிகள் உருப்படாது என்றே கூறிவிடலாம்
//

அரசு துவங்கும் தொழில்கள் உருப்படாது என்பது தவறான வாதம்!

நாசமாகி விடும், வேண்டுமென்றே நாசம் செய்வார்கள் என்பது தான் சரி! பல உதாரணங்கள். எ.கா. டெலிஃபோன். 90களுக்கு முன், ஒரு டெலிஃஃபோன் இணைப்பு வாங்க எம்.பி, எம்.எல்.ஏ சிபாரிசு வேண்டும், அது தவிர தனியாக லஞ்சம் அழ வேண்டும். அப்படியும், க்னெக்ஷன் வர சில மாதங்களிலிருந்து சில வருடங்கள் ஆகும்.

வங்கித்துறை. அரசு வங்கிகளில் இருக்கும் பலர் ரவுடிகள். இவன்கள் வேலை நேரமே 11லிருந்து 12 வரை தான். ஒரு கணக்கு ஆரம்பிக்க அவன்களை தொங்க வேண்டும். லோன்?? ம்கூம், பேசக்கூடாது. பிராஞ்ச் மேனேஜரிலிருந்து ப்யூன் வரை லஞ்சம் கொடுத்தால் தான் லோன் கிடைக்கும்.

இப்படி, இன்டியாவை நாசம் செய்ததில், அரசு ஊழியர் என்று சொல்லிக்கொள்ளும் இந்த ரவுடி கும்பலுக்கு பெரிய பங்கு உண்டு.

1947லிருந்து இந்தியாவை அரித்து வரும் பாரசைட் தான் அரசு ஊழியர்கள். அரசியல்வியாதிகளுக்காவது அஞ்சு வருடத்திற்கு ஒரு முறை மக்களை சந்திக்கவேண்டும். ஆனால், இந்த பாரசைட்களுக்கு வாழ்க்கை முழுக்க கொள்ளை அடிக்க உரிமை!

இப்பொழுது இந்தியாவில் கள்ள நோட்டு புழ்க்கத்திற்கு காரணம் பல அரசு வங்கி ஊழியர்களே!

எனக்கு தெரிந்த வரை 95% அரசு ஊழியர்களை நடுத்தெருவில் கழுவில் ஏற்றவேண்டும். அது இந்திய நாட்டுக்கு செய்யும் மிகப்பெரிய தொண்டாக அமையும்!.

Unknown said...

//உருப்படாமல் போகும் நிறுவனங்கள் மூடப்படும். அது அரசு என்றாலும், தனியார் என்றாலும்

நீங்கள் அரசு நிறுவனங்கள் மட்டுமே உருப்படாதது போல் முதலில் கூறியது தவறு தானே//

அரசு நிறுவனம் நடப்பது மக்கள் வரிப்பணத்தில்.அதை வைத்து திறமையற்ற முறையில் வணிகம் செய்து காசை தொலைத்தால் மக்கள் கேள்வி கேட்கத்தான் செய்வார்கள்.மாடர்ன் பிரட் என்ர பெயரில் ரொட்டி தயாரிக்கும் கம்பனியையும், அசோகா ஓட்டல் என்று ஓட்டல் நடத்தும் தொழிலையும் எல்லாம் அரசு செய்துவந்தது..அது எல்லாம் படுநஷ்டத்தில் ஓடின..அரசுக்கு எதுக்கு ஓட்டல் தொழிலும்,ரொட்டி தயாரிப்பு தொழிலும்?

தனியார் வணிகம் நடத்துவது அவன் சொந்தகாசில்.நஷ்டமானால் பங்குதாரரை தவிர யாரும் கேள்வி கேட்க முடியாது.


//அதே நேரம் தனியார் வங்கி திவாலாகும் போது யாருக்கு சாமி நஷ்டம் என்பதை கொஞ்சம் தெளிவு படுத்துங்களேன்//

பங்குதாரருக்கும் பெருமுதலீட்டாளர்களுக்கும்.

பணம் போட்ட சிறுமுதலீட்டாளருக்கு டிஜிஐசி பணம் கொடுத்துவிடும்.(அந்த ரிஸ்குக்கு பிரிமியம் வாங்குகிறது).தப்பான முறையில் பணம் சூறையாடப்பட்டிருந்தால் சிபிஐ கைக்கு கேஸ் போய்விடும்.

தனியார் வங்கி நஷ்டமானால் மகக்ளுக்கான நஷ்டம் லிமிட் செய்யப்பட்டுவிடுகிறது.ஆனால் அரசு கம்பனிகளை மூடுவதே முதலில் கஷ்டம்..ஊட்டியில் இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலை மூடப்பட்டு 20 வருடம் ஆகியும் சம்பளத்தை கொடுத்துக்கொண்டிருந்தார்கள்..

அரசுக்கு எதுக்கு போட்டோபிலிம் தயாரிக்கும் வேலை?

கம்பனி மூடி 20 வருஷம் ஆகியும் ஓட்டுபிச்சைக்கு சம்பளம் மட்டும் கொடுத்துகொண்டிருந்தால் வரிகட்டும் பொதுசனம் என்ன கேனையனா?இந்த மாதிரி கூத்து தனியார் கம்பனியில் நடக்குமா?

Anonymous said...

//1947லிருந்து இந்தியாவை அரித்து வரும் பாரசைட் தான் அரசு ஊழியர்கள். //

They are going to make a killing shortly. 6th Pay commission!!

Vikram

புருனோ Bruno said...

//வங்கித்துறை. அரசு வங்கிகளில் இருக்கும் பலர் ரவுடிகள். //

மிகச்சிறந்த நகைச்சுவை.

எந்த வங்கியில் ரவுடிகள் இருக்கிறார்கள் என்பது உலகறிந்த உண்மை :) :) :)

புருனோ Bruno said...

//சாமி, தனியார் நிறுவனங்கள் திவாலானால் மூடித்தான் ஆகவேண்டும். அரசு நிறுவனங்கள் போல் மக்கள் வரிப்பணத்தை சுவாஹா செய்து மிருத்யுஞ்சயம் செய்ய முடியாது.//

சாமி, தனியார் வங்கிகள் திவாலாகும் போது நஷ்டமடைவது யார்.

பணம் இழப்பது யார் என்று விளக்கு முடியுமா

புருனோ Bruno said...

எந்த தனியார் நிறுவனம் திவாலானாலும் பணம் இழப்பது முதலீட்டாளர்கள்தான்.

நான் குறிப்பாக கேட்டது தனியார் வங்கிகள் குறித்து.

அதற்கு குறிப்பிட்ட பதில் கூறினால் நன்றாக இருக்கும்

புருனோ Bruno said...

பின் குறிப்பு

கோழியை கொல்ல அரசு அனுமதி தேவையில்லை

புலியை கொல்லக்க்கூடாது

ஏன் என்று யோசித்தீர்களா

--

அது போல் மாமரத்தை வெட்ட அரசு அனுமதி தேவையில்லை

சந்தன மரத்தை வெட்ட அனுமதி தேவை

--

அரசு வியாபாரம் செய்யக்கூடாது என்பது வேண்டுமென்றால் சரி, ஆனால் அரசு regulate செய்யக்கூடாது என்று கூறுவது தவறான, முட்டாள்தனமான வாதம் என்பது என் கருத்து

புருனோ Bruno said...

அரசு வியாபாரம் செய்ய வேண்டுமா இல்லையா என்பது வேறு விஷயம்

-

ஒரு தொழிலை அரசு நடத்தினாலேயே அது உருப்படாது. தனியார் நடத்தினால் அனைத்து தொழிலும் உருப்படும் என்ற கருத்து தவறு என்பதை தெரிவிக்கத்தான் பல ஆதாரங்கள் தந்துள்ளேன்

--

25 வருடமாக நஷ்ட ஈடு அளிக்காத யூனியன் கார்பைடு பற்றி டோண்டுவின் கருத்து என்ன

dondu(#11168674346665545885) said...

//ஒரு தொழிலை அரசு நடத்தினாலேயே அது உருப்படாது. தனியார் நடத்தினால் அனைத்து தொழிலும் உருப்படும் என்ற கருத்து தவறு என்பதை தெரிவிக்கத்தான் பல ஆதாரங்கள் தந்துள்ளேன்//
ஏற்கக்கூடிய ஆதாரங்களைத்தான் தந்திருக்கிறீகள். ஆனால் அரசு தொழில் நடத்தி உருப்படாது போனால் வரும் தொடர் தொல்லைகள் பற்றித்தான் நான் முக்கியமாக கூறப்புகுந்தேன். பிரைவேட்டாக இருந்திருந்தால் ஐ.டி.பி.எல். எப்போதொ மூடப்பட்டிருக்கும். இப்போது இருப்பதுபோல இன்னும் ஊழியர்களுக்கு அரசு செலவில் தண்ட சம்பளம் தந்து கொண்டிராது.

சோஷலிச மாயையில் சகட்டுமேனிக்கு தொழில்களை தேசீய மயமாக்கினதன் வினையை இன்னமும் அனுபவித்து கொண்டிருக்கிறோம்.

யூனியன் கார்பைட் விஷயத்துக்கு வருகிறேன். நேரடி பொறுப்பு அதற்கு இருப்பினும், அதை இன்ஸ்பெக்‌ஷன் செய்து எல்லாம் சரியான முறையில் உள்ளனவா என்பதை கண்காணிக்கும் வேலையில் இருந்த அரசு அதிகாரிகள் பார்க்காமலேயே ஆண்டுதோறும் தரச் சான்றிதழ் அளித்து வந்துள்ளனர். மேலும் அதை மூடவும் அனுமதிக்கவில்லை. பல முயற்சிகளுக்கு பிறகு கிடைத்த நஷ்ட ஈட்டுத் தொகை (470 மில்லியன் டாலர்கள் என அறிகிறேன்) அரசிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு அதை பாதிக்கப்பட்டவர்களுக்கு பகிர்ந்தளிப்பதில் பல லஞ்ச லாவண்யங்கள் தலைவிரித்தாடுகின்றன. முக்கியமாக போப்பால் விவகாரத்தில் அரசு சொதப்பியது அதிகம்.

//அரசு வியாபாரம் செய்யக்கூடாது என்பது வேண்டுமென்றால் சரி, ஆனால் அரசு regulate செய்யக்கூடாது என்று கூறுவது தவறான, முட்டாள்தனமான வாதம் என்பது என் கருத்து//
குறைந்தபட்சம் அரசு வியாபாரம் செய்யக்கூடாது என்பதை ஒத்து கொண்டதற்கு மகிழ்ச்சி. கட்டுப்பாடுகள் கூடாது என்று நான் கூறவில்லை. அது கேஸ் பை கேஸ் பார்க்கவேண்டிய விஷயம். சந்தன மரங்கள் சில இடங்களில் விவசாயிகளின் நிலங்களில் எதேச்சையாகவே முளைக்க, அரசு கெடுபிடிகளுக்கு பயந்து அவற்றை இளம் குருத்திலேயே ஓசைப்படாமல் சம்பந்தப்பட்ட நிலச்சொந்தக்காரர்கள் வேருடன் பிடுங்கி எறிகின்றனர். இதுதான் அரசு கட்டுப்பாட்டின் பலன். புலிகளை கொல்லக்கூடாது என்பதால் பல மனிதர்கள் அவதிப்பட்டு எதிர்ப்பு ஊர்வலங்கள் நடத்துவதையும் பார்க்கிறோம். யாரும் புலியை சொந்தமாக பராமரிக்கும் அளவுக்கு பைத்தியக்காரர்கள் இல்லை.

அதே சமயம் சந்தனமரம் சம்பந்தப்பட்ட கட்டுப்பாட்டுக்கு இன்னொரு காரணமும் உண்டு. அதுதான் சந்தன பொருட்களின் விலையை குறையாமல் பார்த்து கொள்வது. சார்டர்டு அக்கௌண்டட்டுகள் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது போல என்று வேடிக்கையாகக் கூட கூறலாம்.

சந்தன மரங்கள் வளர்ப்பவர்கள் எல்லாம் மாங்காய் மடையர்கள், அரசு அதிகாரிகள்தான் புத்திசாலிகள் என்று நினைத்த சோஷலிச காலத்தில் இச்சட்டம் போடப்பட்டுள்ளது. அதை மறுபரிசீலனை செய்யும் காலம் வந்துவிட்டது.

காடுகளில் சந்தன மரங்களை ஒட்டுமொத்தமாக வெட்டி காசு பார்க்கிறார்களே பலர். அதற்கு காட்டிலாகா அதிகாரிகளும்தானே துணை? சந்தன மரங்கள் மிகுதியாக உள்ள ஒட்டுமொத்த காடுகளே அழியும் அபாயம் உள்ளதே. இதைத் தடுக்க வேண்டாமா? நரகத்துக்கு செல்லும் பாதை நல்லெண்ணம் என்னும் கற்களால் வேயப்பட்டுள்ளது என்பதை தெரியாமலா சொன்னார்கள்? இந்த மாதிரி கூத்துகளால் சந்தன மரங்கள் நிஜமாகவே அழியும் அபாயம் உள்ளது.

//சாமி, தனியார் வங்கிகள் திவாலாகும் போது நஷ்டமடைவது யார்.பணம் இழப்பது யார் என்று விளக்கு முடியுமா//
செல்வன் அவர்கள் ஏற்கனவே இதற்கான பதிலை கூறிவிட்டார். பல வங்கிகள் திரும்பிவாரா கடன்களை பெற்றதில் அரசு நடத்திய (ஜனார்த்தன் பூஜாரி) லோன் மேளாக்களும் முக்கிய காரணம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//நமது மூத்த பதிவர் ஒருவர் ஸமீபத்தில் நீண்ட காலம் ஐ.டி.பி.எல்லில்
குப்பை கொட்டினார்//.

ஆகவே மகா ஜனங்களே.........
அவர் அரசு நிறுவனங்களின் கூத்துகளை பற்றி தெரிந்துதான் கூறுகிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அது சரி said...

//
புருனோ Bruno said...
//வங்கித்துறை. அரசு வங்கிகளில் இருக்கும் பலர் ரவுடிகள். //

மிகச்சிறந்த நகைச்சுவை.

எந்த வங்கியில் ரவுடிகள் இருக்கிறார்கள் என்பது உலகறிந்த உண்மை :) :) :)

//

இது எனது கருத்தை பற்றிய கேள்வி என்பதால், என்னை பதில் சொல்ல அனுமதியுங்கள் டோண்டு சார்.

ரவுடிகள் என்பவர்கள் இப்படித்தான் இருப்பார்கள், அவர்கள் தனியார் வங்கிக்கடன் மட்டும் தான் வசூலிக்கிறார்கள் என்று நினைத்தால், எந்த அரசு வங்கிக்காவது சென்று லோன் வேண்டாம், ஒரு அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டும் என்று சொல்லிப்பாருங்கள்!

எனது அக்கவுண்டில் இருந்து 50,000 ரூபாய் வித்ட்ரா செய்ய சென்ற போது, லஞ்ச் டைமுக்கு 5 நிமிடம் தான் இருப்பதாகவும், அந்த நேரத்தில் 50,000 எண்ண முடியாது, அதனால் அப்புறம் வா (வாங்க இல்ல, வா!) என்று ஒரு பிச்சைக்காரனைப் போல என்னை துரத்திய ஒரு வங்கி ஊழியனை எனக்கு தெரியும். அப்பொழுது நேரம் 11:50!

ஏன் சார், 10 நிமிஷம் இருக்கேன்னு கேட்டதற்கு "என்ன, கேள்வி கேக்குறியா?? உன் அக்கவுண்ட்ல ஒம்போது எடத்தில தப்பு இருக்குன்னு நீ இன்னும் அஞ்சி மாசத்துக்கு பணம் எடுக்க முடியாம பண்ணிடுவேன். என்ன எவனும் ஒண்ணும் பண்ண முடியாது" என்று நடு பேங்கில், அத்தனை கஸ்டமர்கள் முன்னிலையில், தொடை தட்டி அசிங்கப்படுத்தியவனை "மக்கள் சேவகர்" என்று மாலையிட சொல்கிறீர்களா??

(இதில் ஒரே ஒரு விஷ்யம், அவனுக்கு நான் யார் என்று தெரியாதது நல்லதாக போயிற்று. அவன், சஸ்பெண்ட் செய்யப்பட்டு, மீண்டும் வேலயில் சேர அஞ்சு வருஷமாயிற்று! ஒரு அயோக்கியனை பழி வாங்கியதில் எனக்கு மிகுந்த சந்தோஷமே!)

Unknown said...

ப்ரூனோ

சட்டப்படி அரசு, தனியார் என்று எந்த வங்கி திவாலானாலும் 1 லட்சத்துக்கு மேல் பணம் போட்ட வாடிக்கையாளர் பணம் போய்விடும்.1 லட்சத்துக்கு கீழே டெபாசிட் செய்தவர்களின் பணத்தை டிஜிஐசி திரும்ப கொடுத்துவிடும்.

ஆனால் அரசு வங்கி திவாலாவதற்கும் தனியார் வங்கி திவாலாவதற்கும் பெரிய வித்தியாசம் உண்டு..அதாவது அரசு வங்கி திவாலாவது நடக்கவே நடக்காது என்பதுதான் அது..இந்தியன் வங்கி சில வருடங்களுக்கு முன்பு தனது முதலீடு முழுவதையும் இழந்தது.ஆனால் அரசு மீண்டும் கோடிக்கணக்கில் வரிப்பணத்தை முதலீடாக கொட்டி வங்கி முழுகாமல் காப்பற்றியது..யு.டி.ஐக்கும் சில வருடம் முன்பு இதே நிலைமைதான்.

இதனால் அரசு குறுக்கிட்டு காப்பற்றும் என்ற நம்பிக்கை இருப்பதால் இந்த நிறுவனங்கள் எல்லாம் தமது வழக்கமான திறமையின்மையை மாற்றிக்கொள்ளவேண்டிய அவசியமே இல்லாமல் போகிறது..தனியார் வங்கிகளுக்கு இம்மாதிரி உதவ ஒரு கிருஷ்ண பரமாத்மா இல்லாததால் அவை முழுக்க,முழுக்க தமது திறமையாலேயே பிழைத்திருக்க வேண்டியிருக்கிறது,..அதனால் அவை உதவாக்கரை அரசு வங்கிகளை விட மிகவும் திறமையாகவும், சிறப்பாகவும் செயல்படுகின்றன.

அரசு கடன் பத்திரங்களை தவிர வேறு எந்த முதலீடு செய்யும்போதும் பணம் பறிபோகும் ஆபத்து இருக்கத்தான் செய்கிறது.வங்கியில் பணம் போடுவதும் ஒரு ரிஸ்க் இருக்கும் முதலீடுதான்.அது எந்த வங்கியானாலும் சரி..அதுதான் அந்த துறையில் இயல்பு...அதை அறிந்துதான் பொதுசனமும் முதலீடு செய்கிறது.ரிஸ்கே வேண்டாம் என்றால் பொதுமக்கள் தனியார் (அரசு) வங்கிக்கு பதில் போஸ்டாபிசில் பணம் போடலாமே?

//ஒரு தொழிலை அரசு நடத்தினாலேயே அது உருப்படாது. தனியார் நடத்தினால் அனைத்து தொழிலும் உருப்படும் என்ற கருத்து தவறு என்பதை தெரிவிக்கத்தான் பல ஆதாரங்கள் தந்துள்ளேன்//

இது என்ன வகையான நகைச்சுவை என்று புரியவில்லை:-)

அமெரிக்காவிலும்,ஐரோப்பாவிலும் அரசுகள் பலவும் தொழில்களை நடத்தும் திறமை தனக்கு இல்லை என்பதால் தான் தனியாரை புகுந்து விளையாட சொல்லிவிட்டது...இந்திய அரசுக்க்கு இவர்களை விட தன்னம்பிக்கை அதிகம் போலும்:-)

மற்றபடி நமது மத்திய மாநில அரசு நிறுவனங்கள் தொலைத்த தொகையில் இரண்டு,மூன்று ஐந்தாண்டு திட்டங்களையே போட்டுவிடலாம்.ஏழைநாட்டுக்கு இதெல்லாம் சக்திக்கு மீறிய தொகை ஐயா...இந்த காசை உருப்படியாக செலவிட்டிருந்தால் நீங்கள் இன்னொரு பதிவில் வருத்தப்பட்டா மாதிரி அரசு ஆஸ்பத்திரிகளை இன்னமும் தரமாக வைத்திருந்து தருமபுரியில் இதய அறுவை சிகிச்சையை இலவசமாக வழங்கியிருந்திருக்க இயலும்...ஆனால் அதற்கு பதில் அந்த காசெல்லாம் அரசு ரொட்டி கம்பனி, ஓட்டல் கம்பனியின் நஷ்டத்துக்கு மானியமாக போய்க்கொண்டிருக்கிறது..

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது