8/09/2008

லீயுக்கும் சீயுக்கும் சண்டை (Mr. Lee and Mr. Chee agreed to have a fight)

என்னுடைய 'சார், நீங்கதான் ஆடம் ஸ்மித்னு நினைக்கிறேன்' பதிவுக்கு தூண்டுதலாக இருந்த நண்பர் ஜயகமல் இன்றும் (05.06.2008) ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். (காலதாமதத்திற்கு மன்னிக்கவும் ஜயகமல் அவர்களே).

அதில் 'லீயுக்கும் சீயுக்கும் சண்டை' குறித்து அதே Atanu Dey 04.06.08 அன்று எழுதிய கட்டுரையை ஃபார்வேர்ட் செய்துள்ளார். முதலில் அதை சுருக்கி தமிழில் மொழிபெயர்த்துவிடுகிறேன். அதற்கு இதுவரை வந்த 9 எதிர்வினைகளையும் அங்கேயே போய் பார்த்துக் கொள்ளலாம். இப்போது அதானு பேசுவார். அதில் நான் என வரும் இடங்கள் அதானுவையே குறிக்கும்:

30.05.2008 தேதியிட்ட நியூயார்க் டைம்சில் வந்த செய்தியின் தலைப்பை இவ்வாறு தமிழில் கூறலாம்:"சிங்கப்பூர் நீதிமன்றத்தில் விடாக்காண்டனும் கொடாக்கொண்டனும் மோதல்". மாஜி பிரதமர் Lee Kuan Yew, (லீ குவான் யூ, வயது 84) அவரது அரசியல் எதிரி Chee Soon Juan, (சீ சோன் ஜுவான், வயது 45) ஆகிய இருவர்தான் மோதுகின்றனர். லீயானவர் சீயுக்கு விரோதமாக மான நஷ்ட வழக்கு போடுகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் 2006-ல் சிங்கப்பூர் பத்திரிகை ஒன்றில் சீ சிங்கப்பூர் அரசுக்கு எதிராக லஞ்ச ஊழல் குற்றச்சாட்டை வைத்தார். அதற்காகத்தான் லீ மான நஷ்ட வழக்கு போட்டுள்ளார். குற்றச்சாட்டைக் கண்டுகொள்ளாமல் விட லீ தயாராக இல்லை.

சீ கூறுவது உண்மையா பொய்யா என்பதை கோர்ட் தீர்மானிக்கட்டும். ஆனால் அது பொய் என்றால் எனக்கு நிம்மதி. ஏனெனில் நான் மிகவும் மதிக்கும் லீ தவறு செய்தார் என்பதைப் பார்க்க நான் விரும்பவில்லை.

நான் ஏன் லீயை அந்த அளவுக்கு மதிக்கிறேன்? அவரது சாதனைகள்தான் காரணமாக இருக்க வேண்டும். NY Times-ல் லீ கூறியதாவது:

"லிட்மஸ் சோதனையாக 1959-ல் லீ பிரதமரான போது சிங்கப்பூர் இருந்ததற்கும் தற்போது இருப்பதற்கும் உள்ள நிலைகளின் வேறுபாட்டைப் பார்த்தாலே போதும். அப்போது அன்னியச் செலாவணி இருப்பு $100 மில்லியன்களுக்கும் குறைவே. ஆனால் தற்சமயம்? $300 பில்லியன்களுக்கும் மேலே".

சிங்கப்பூரின் ஜனத்தொகை சில லட்சங்களே. கொசுக்கள் நிறைந்த சதுப்பு நிலத்தை மூன்றாம் தர நாட்டின் நிலையிலிருந்து இப்போதைய முதல்தர பணக்கார நாடாக மாற்றியது லீ அவர்களின் சாதனை. குறைந்த அளவிலேயே லஞ்ச ஊழல்கள், சட்ட ஒழுங்கான நிலை, சுற்றுப்புறச் சூழலை மதிக்கும் நிலை ஆகியவற்றில் சிங்கப்பூரை மிஞ்சும் நாடுகளை லென்ஸ் கொண்டுதான் தேடிப் பார்க்க இயலும். இதற்காக எல்லாம் வெறுமனே வெட்டித்தனமான கரகரத்த குரலில் பொருளாதார சிகரங்களை தொடப்போவதாகவெல்லாம் பேசவில்லை. வெறுமனே அதை செய்ய மட்டும் செய்தார், அதுவும் ஒரு தலைமுறை காலத்திலேயே. அன்னியச் செலாவணியை 3000 மடங்குக்கு ஏற்றினார்.

லீ கூறுகிறார், சிங்கப்பூரின் இந்த நிலையை. ஆனால், சீ என்ன சொல்கிறார் என்றால் அதனால் ஜனநாயகத்தை அழித்ததை நியாயப்படுத்த முடியாது என்கிறார். ஊடகங்களின் சுதந்திரத்தையும் பறித்தார் என்றும், தான் எலெக்‌ஷன் மீட்டிங்குகளில் பேசுவதையும் அவர் தடுத்தார் என்றும் அவர் கூறுகிறார்.

நான், அதானு கூறுவது என்னவென்றால், அரசியல் சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்தை நான் மதிக்கிறேன். நாகரீக உலகில் அவை அவசியமே. ஆனால் பட்டினி கிடப்பவனுக்கு அவற்றால் என்ன பயன்? பசி வந்திட பத்தும் பறந்து போகும்தானே. உங்கள் குழந்தைகள் பட்டினி கிடந்தால் நீங்கள் என்னவெல்லாம் செய்ய மாட்டீர்கள்? தனிப்பட்ட முறையில் நான் அச்சமயம் அரசியல் சுதந்திரமாவது மயிராவது என்றுதான் செயல்படுவேன்.

சீ மேலும் கூறுகிறார்: சிங்கப்பூரின் அன்னியச் செலாவணி இருப்புக்காக கொடுக்கப்பட்ட விலை மிக அதிகம் என்கிறார். அந்த விலையைத் தராமலேயே சிங்கப்பூரின் முன்னேற்றங்களும் எப்படியுமே வந்திருக்கும் என நம்புகிறார் அவர். ஆனால் எனக்கு அதில் சந்தேகம் உண்டு. நாடு ஏழ்மை நிலையில் இருக்கும்போது முன்னேறுவதை பார்க்காமல் பேசிக் கொண்டிருந்தால் பல சக்திகள் உள்ளே நுழைந்து இருக்கும் சிறிதளவு செல்வத்தையும் தங்களுக்கும் தங்களைச் சார்ந்தவர்களுக்குமே பங்கு போட்ட நினைக்கும்.

இப்போது நான் எழுதும் இந்த வரிகளை படிக்கும் எவருமே பட்டினி கிடப்பவர்கள் அல்ல. ஆகவே தனிப்பட்ட முறையில் உங்களுக்கு பசியின் கொடுமை தெரியவில்லை. அந்த நேரத்தில் கருத்து சுதந்திரமாவது மண்ணாங்கட்டியாவது?

நான் வைக்கும் கேள்வி இதுதான். எந்த இடத்தில் கருத்து சுதந்திரம் பசியின் தேவையை மிஞ்சுகிறது? அதுவும் அந்த கருத்து சுதந்திரத்தைக் கேட்பவர் மிகச்சிலரே. ஆனால் பசியினால் வாடுபவர்கள் அவர்களை விட ஆயிரம் மடங்குக்கும் மேல் அதிகமானவர்கள். அப்படியே கருத்து சுதந்திரத்தை உபயோகிப்பவர்களும் செய்யப்போவது என்ன? பட்டினி கிடப்பவர்களை குறித்து முதலைக் கண்ணீர் வடிப்பதுதான் அவர்கள் செய்யப் போவது. அம்மாதிரி கண்ணீர் வடிக்காது, வறுமையை ஒழிக்கும் செயல்களை செய்பவர்கள் எவ்வளவோ மேல்தானே.

தேவைகளை முன்னுரிமைகளின் அடிப்படயில்தான் கையாள வேண்டும். அந்த வகையில் முதலில் பொருளாதார முன்னேற்றம், பிறகுதான் கருது சுதந்திரம் போன்றவை. சுவாசிக்க காற்றே இல்லையென்னும் நிலையில் அதன் தேவை உணவு மற்றும் தண்ணீரை விட அதிகமே. அதே போல பட்டினியை ஒழிக்க நான் கருத்து சுதந்திரத்தை பலியிடவும் தயங்க மாட்டேன்.

மேலே கூறியதுடன் இதையும் கூறிவிடுகிறேன். இந்த விஷயத்தில் அவரவருக்கு அவரவர் அளவுகோல் உண்டு.

பின்குறிப்பு:

நான் ஏன் பட்டினி கிடப்பதற்கு அத்தனை அழுத்தம் தருகிறேன்? இரண்டு நாள் சாப்பிடாமல் இருந்தால் கதி என்ன ஆகும் என்பதை நான் சொந்த முறையிலேயே உணர்ந்தவன். இரண்டு நாட்களுக்கே இந்தக் கோலம் என்றால், விடாது பட்டினி கிடப்பவரின் மனநிலையை ஊகிப்பதா கஷ்டம்? இந்தியாவில் கிட்டத்தட்ட 20 கோடி மக்கள் இந்த நிலையில்தானே உள்ளனர். அவர்கள் நிலையில் நான் இருந்தால் சாத்தானுடன் கூட நான் ஒப்பந்தம் போட்டிருப்பேன். நம்ப இயலவில்லையா? கம்யூனிஸ்டுகளுக்கு வேறு எப்படி ஓட்டுகள் கிடைக்கிறதாம்?


இப்போது மீண்டும் டோண்டு ராகவன்.

ரொம்பத்தான் குசும்பு உங்களுக்கு அதானு அவர்களே. கடைசி வரியைத்தான் நான் குறிக்கிறேன். பட்டினியில் வாடும் மக்களுக்கு சோஷலிச சொர்க்கத்தை வாக்குறுதியாக அளித்துத்தான் கம்யூனிஸ்டுகள் பஜனை செய்கின்றனர். கூடவே தங்கள் சீன எஜமானர்களுக்கு விசுவாசமாக இருப்பதை தற்போதைக்கு இப்பதிவில் ஒதுக்கிவிடலாம். பொருளாதாரம் மட்டும் பேசுவோம். கம்யூனிஸ்டுகளும் லீயும் கருத்து சுதந்திரத்தை மதிக்காதவர்கள் என்பதில் மட்டும்தான் ஒற்றுமை. ஆனால் லீ நிஜமாகவே பொருளாதார மேம்பாட்டை கொண்டுவந்தார். ஆனால் கம்யூனிஸ்டுகள்? சொல்லிக்கொள்ளும் அளவுக்கு விஷயங்களே லேது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பின்குறிப்பு: அதே சமயம் லீ செய்வது வேண்டாத வேலை. அவரைப் பொருத்தவரை அவர் நன்றாகவே செயல்பட்டு, சிங்கப்பூரை இந்த பெரிய அளவுக்கு கொண்டு வந்தார். சீ சொன்னதால் அவரது மானம் போய்விட்டதாக நான் நினைக்கவில்லை. தேவையின்றி சீயுக்கு இவர் முக்கியத்துவம் தருகிறார். இவர் என்ன பாப்புலாரிட்டி தேர்வுக்கா நிற்கிறார்? விட்டுத் தொலையுங்கள் லீ அவர்களே.

பி.பி.கு.: இப்போது பிளாக்கரில் My Blog List என்ற புது வசதி வ்ந்துள்ளதால், நான் பார்க்கும் வலைப்பூக்களின் லேட்டஸ்ட் பதிவுகளை அவற்றின் முதல் சில வரிகளுடன் சேர்த்து காட்ட இயலுகிறது. ஆகவே இதுவே எனது ஆங்கிலப் பதிவுகளை விரிவான அளவில் போடும் ரேஞ்சுக்கு என்னை கொண்டு சென்றுள்ளது. எனது இப்பதிவின் ஆங்கில லோக்கலைசேஷனைப் பார்க்கவும்.

7 comments:

ராஜ நடராஜன் said...

குட்டி நாடு என்பதால் பிரச்சினையை தீர்க்கும் சாத்தியங்களும் அதே குட்டி நாடு என்பதால் சரியான அண்டை நாடுகள் இல்லாவிட்டால் அண்டைய நாட்டைச் சார்ந்து இருக்கவேண்டிய நிர்பந்தங்களும் உண்டு.

dondu(#11168674346665545885) said...

மனதிருந்தால் மார்க்கமுண்டு. மோடி குஜராத்தில் நடத்திக் காட்டவில்லையா? அதே அரசியல் அமைப்புகளுடன் கூடிய மகாராஷ்டிராவிலுள்ள செக்போஸ்டுக்கும் அதற்கு மிக அருகே உள்ள குஜராத் தரப்பு செக்போஸ்டுக்கும் இடையில் வருமான வேறுபாடு கோடிக்கணக்கில் என்பதையும் அறிவீர்கள்தானே, பார்க்க:
http://dondu.blogspot.com/2008/01/38-3.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

enRenRum-anbudan.BALA said...

Not related to this posting:
அந்தோணி பற்றிய எனது பதிவுக்கு உங்கள் தளத்தில் (நான் கேட்காமலேயே!) லிங்க் அளித்தமைக்கு மிக்க நன்றி.
எ.அ.பாலா

dondu(#11168674346665545885) said...

அந்தோனி என்று மட்டும் இல்லை. நீங்கள் என்ன பதிவு புதிதாகப் போட்டாலும் அது இங்கு இற்றைப்படுத்தப்படும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வஜ்ரா said...

அதானு டே எழுதிய பிற பதிவுகள் இதே போல் தமிழில் நீங்கள் வழங்கினால் தமிழ்மணத்தில் பாதிக்கு மேல் பதிவர்கள் தாங்கள் இவ்வளவு நாள் ஏமாற்றப்பட்டதை உணர்வார்களா அல்லது கம்யூனிச சொர்கத்திலிருந்து மீளாமல் மௌனிப்பார்களா ?

Anonymous said...

//மனதிருந்தால் மார்க்கமுண்டு. மோடி குஜராத்தில் நடத்திக் காட்டவில்லையா?//

எதற்கெடுத்தாலும் மோடி அதை செய்தார் மோடி இதை செய்தார்... மோடியை பற்றித்தான் எல்லோருக்கும் தெரியுமே டோண்டு அவர்களே?!!!

(எனது ஒரு பின்னோட்டதை ஏன் பதிக்கவில்லை?)

கோமணகிருஷ்ணன்

Anonymous said...

கோல்டு கொஸ்ட் தங்க காசு மோசடியில் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு தொடர்பு??

நளினி சிதம்பரத்துக்கு தொடர்பு உண்டு என்பதர்க்கான ஆதாரம்

http://in.youtube.com/watch?v=6wsSuLqveg8&feature=related

டோண்டு அவர்களே இந்த வீடியோவை பார்த்து இது தொடர்பாக ஒரு பதிவு எழுதவும்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது