
That's the wise thrush; he sings each song twice over, lest you should think he never could recapture the first fine careless rapture!
மேலே உள்ள கவித்துவமான வரிகள் ஆங்கிலக் கவிஞர் ராபர்ட் ப்ரௌனிங் (1812 - 1889) எழுதிய HOME-THOUGHTS, FROM ABROAD என்னும் கவிதையில் வருகின்றன. கவிதை பற்றி பிறகு எப்போதாவது பார்ப்போம். முதலில் மேலே சுட்டப்பட்டுள்ள வரிகளை ஆராய்வோம். அதில் வரும் பறவை (படம் மேலேயுள்ளது) குயிலைப் போல பாடுமாம். ஒவ்வொரு பாட்டையும் இரு முறை பாடுமாம். இல்லாவிட்டால் யாராவது அது ஃப்ளூக்கில் பாடியது என நினைத்து கொள்ளக் கூடாதாம். ”ஏன் இதெல்லாம் இங்க சொல்ற” என வினவுகிறான் முரளி மனோஹர். அதைத்தான் இப்பதிவில் கூறவுள்ளேன்.
சமீபத்தில் 1957-ல் காலமான எழுத்தாளர் தேவன் அவர்களது நாவல்கள், கதைகள் கட்டுரைகள் ஆகியவை தற்போதும் படிக்க மிகவும் சுவாரசியமானவை. அவரது துப்பறியும் சாம்பு, மிஸ்டர் வேதாந்தம், ஸ்ரீமான் சுதர்சனம் ஆகிய நாவல்கள் இன்றும் அமரத்துவம் பெற்றுள்ளன. அவரது புத்தகங்களை கிழக்கு பதிப்பகம் வெளியிட ஆரம்பித்துள்ளது. துப்பறியும் சாம்பு மற்றும் சி.ஐ.டி. சந்துரு ஆகிய இரு புத்தகங்களை விலைக்கு வாங்கி படித்தேன்.
இரண்டிலுமே துப்பறிபவர்கள் வருகிறார்கள். சாம்பு குருட்டு அதிர்ஷ்டத்திலேயே எல்லா கேஸ்களையும் நடத்துகிறார். ஆனால் சி.ஐ.டி. சந்துருவோ தனது புத்தி கூர்மையின் துணையுடன் செயல்படுகிறார். ஆனாலும் பெயர் என்னவோ சாம்புவுக்குத்தான் அதிகம். தேவன் அவர்களுக்கே சாம்பு கேரக்டரைத்தான் அதிகம் பிடிக்கும் என நினைக்கிறேன். அவர்கள் இருவரும் சேர்ந்து வருவது போல எந்தக் கதையிலும் வரவில்லை என ஒரேயடியாகக் கூற இயலாது. ஏனெனில் சந்துரு தோன்றும் “கல்யாணி” என்னும் கதையில் சாம்புவைப் பற்றி பிரஸ்தாபம் உண்டு. நினைவிலிருந்து எழுதுகிறேன். ”சந்துரு சென்னையில் பல கேஸ்களில் அபாரமாக வேலை செய்திருந்தாலும், பெத்த பெயர் ஒன்றும் கிடைக்கவில்லை. ஏனெனில் அத்தருணத்தில் சாம்பு என்னும் பேர்வழி அவரைக் காட்டிலும் அதிக பிரசித்தம் பெற்றிருந்தார்” என்று கூறி கொண்டு போகிறார் தேவன். இவர்களுக்கு பொதுவாக வருபவர் இன்ஸ்பெக்டர் கோபாலன். புத்திசாலியான அவரும் சாம்புவின் குருட்டு அதிர்ஷ்டத்தால் கவரப்பட்டு அவரைப் பற்றி உயர்ந்த அபிப்பிராயமே வைத்துள்ளார்.
துப்பறிபவர்கள் என்றால் ஆங்கில எழுத்துலகில் பிரசித்தி பெற்றவர்கள் ஷெர்லாக் ஹோம்ஸ், ஹெர்க்யூல் ப்வாரோ (Hercule Poirot), மிஸ் மார்ப்பிள் ஆகியோர்தான். தமிழ் உலகில் சங்கர்லாலைக் கூறலாம். அந்த வரிசையில் துப்பறியும் சாம்புவுக்கு சந்துருவை விட அதிக இடம் உண்டு.
முதலில் சந்துருவைப் பார்ப்போம். அவரது புத்தி கூர்மை வியப்பளிக்கக் கூடியது. ஞாபக சக்தியோ அபாரம். “சி.ஐ.டி. சந்துரு” தொடர்கதை ஐம்பதுகளில் தேவன் இறப்பதற்கு சிறிது முன்னால் வந்தது. அதற்கு முன்னால் சந்துருவின் பெயர் எனக்கு தெரிந்து மேலே குறிப்பிட்ட “கல்யாணி” தொடர்கதையில் மட்டும் சிறு அளவில் வருகிறது. சாதாரணமாக புத்திசாலிகளாக செயல்படும் குற்றவாளிகளை கண்ணில் விரலை விட்டு ஆட்டக்கூடிய சந்துரு இதில் மகா முட்டாளான கதாநாயகனை குறுக்கு விசாரணை செய்ய வழி தெரியாமல் தளர்ந்து போகிறார். தேவன் இன்னும் சில ஆண்டுகள் இருந்திருந்தால் சந்துருவை மேலும் டெவலப் செய்திருப்பாராக இருந்திருக்கும். என்ன செய்வது, 44 வயதெல்லாம் ஒரு வயதா இறப்பதற்கு, என்ற பெருமூச்சுடன் புலம்பத்தான் வேண்டியுள்ளது.
இப்போது சாம்பு. மகா அசடு என தேவனே அப்பாத்திரத்தைப் பற்றி வர்ணிக்கிறார். ஒரு வங்கியில் சாதாரண குமாஸ்தாவாக இருந்தவர் வேலையை இழக்க நேரிடுகிறது. அதிலிருந்து ஐயாவுக்கு சுக்கிரதசை ஆரம்பமாகிறது. சாதாரண கேசில் ஆரம்பித்து அவரது முயற்சி ஏதுமின்றி காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாக அவை தீர்க்கப்பட்டு பெயர் மட்டும் சாம்புவுக்கே செல்கிறது. துப்பறியச் சென்ற இடத்தில் பொடி டப்பியை தவறவிட்டு விட்டு வர அதை திரும்ப எடுக்கப் போக அங்கு வந்து மாட்டும் குற்றவாளி, அவர் கலந்து கொண்ட விருந்தில் அவருடன் பழகியதை வைத்து உள்ளே புகுந்த குற்றவாளி வைரத்தைத் திருடி மைசூர்ப்பாக்கினுள் வைக்க, எச்சில் இலையை சாம்பு வளர்த்த நாய் கவ்விக் கொண்டு வீட்டுக்கு வந்து, சாம்புவின் மனைவி வேம்புவின் கையில் அடிவாங்கி ஓட, சாம்பு மைசூர்ப்பாகிலிருந்து வைரத்தை எடுத்து அதன் சொந்தக்காரரிடம் நீட்ட என்ற ரேஞ்சில் ஒவ்வொரு எபிசோடும் செல்கிறது.
சாம்புவால் கவரப்பட்டு எழுத்தாளர் ஆர்வி அசட்டு பிச்சு என்னும் கேரக்டரை சிருஷ்டி செய்தார். ஏ.பி. என்று செல்லமாக அழைக்கப்படும் அசட்டு பிச்சு ஒரு பள்ளி மாணவன். குருட்டாம்போக்கில் எல்லாவற்றையும் கண்டுபிடிக்கிறான். கண்ணன் பத்திரிகயில் அசட்டு பிச்சு கதை தொடராக வந்தது.
இப்போது முரளி மனோஹரின் கேள்விக்கு வருவோம். தேவன் அடிப்படையில் நல்ல நகைச்சுவை எழுத்தாளர். சாம்புவை நகைச்சுவை ததும்ப அவர் டெவலப் செய்து போயுள்ளார். ஆனால் சீரியஸ் எழுத்து? யாருக்கேனும் அதில் சந்தேகம் வந்து விடப் போகிறதே என்று அந்த மேலே சொன்ன பறவை நினைத்தது போல சி.ஐ.டி. சந்துரு கேரக்டரை உருவாக்கினார். காலதேவன் அவரை அழைத்து செல்லாதிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
ஆக, That's the wise thrush; he sings each song twice over, lest you should think he never could recapture the first fine careless rapture! (இங்கு பார்ப்போம் தேவனை. நகைச்சுவையும் எழுதுவார், சீரியஸாகவும் எழுதுவார். ஏனெனில் யாரும் அவருக்கு சீரியஸ் எழுத்து வராது எனக் கூறிவிடக்கூடாதல்லவா)?
அன்புடன்,
டோண்டு ராகவன்
10 comments:
டோண்டு அவர்களே
சாம்புவின் அனைத்து நாவல்,சிறுகதைகளையும் படித்திருக்கிறேன்.அந்த நாவல்களில் வரும் ஓவியங்கள் உயிரோட்டமானவை.பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களுக்கு மணியம் உயிர் கொடுத்தது போல் சாம்பு,அப்புசாமிக்கும் ஓவியங்கள் பிரமாதமாக அமைந்தன.
முந்தி தமிழ்நாவல் கதாபாத்திரங்களை பற்றி நான் எழுதியிருந்த பதிவில் குறிப்பிட்டிருந்தது...
http://holyox.blogspot.com/2008/06/375.html
தமிழ் நாவல் உலகின் புகழ் பெற்ற இந்த பாத்திரங்கள் அனைத்தும் அந்தந்த ஆசிரியருடன் முற்றுப்பெறுவது தான் சோகம்.அந்த ஆசிரியரின் வெறுப்பு விருப்புகளுக்கு இந்த பாத்திரங்கள் அவ்வப்போது பலியாகி வந்திருக்கின்றன."ப்ரியா" நாவலை சினிமாவில் சொதப்பியதும் சுஜாதா பயங்கர காண்டாகி ப்ரியா பார்ட் டூ எழுதி அதில் ப்ரியாவுடன் கணேஷ் உடலுறவு வைத்துக்கொள்வது போல் எழுதி தனது கடுப்பை காட்டினார்...வசந்த் காரக்டருக்கு ஒய்ஜிமகேந்திரனை போட்டு, லண்டனில் நடக்கும் கதையை சிங்கப்பூரில் நடப்பது போல் எழுதினால் அவர் கடுப்பாக மாட்டாரா என்ன?
ஆங்கில பளிஷிங் துறை இதை அழகாக சமாளித்தது. ஒரு பிரபல கதாபாத்திரத்தை ஒரு பப்ளிஷிங் கம்பனி உரிமையாக்கி கொள்கிறது.அந்த கதாபாத்திரத்தின் இமேஜ்,வாசகர் வட்டம் எல்லாம் ஒரு பிராண்டை போல் பாதுகாக்கப்படுகிறது.பல எழுத்தாளர்கள் அந்த பாத்திரத்தை பற்றி கதைகளை எழுதுகிறார்கள்.இதன்மூலம் ஒரு எழுத்தாளரின் விருப்பு வெருப்புக்கு ஒரு பாத்திரம் பலியாவதும், ஒரு பாத்திரத்தின் புகழுக்கு ஒரு எழுத்தாளர் அடிமையாவதும் தவிர்க்கப்படுகிறது.
ஹார்டி பாய்ஸ் நாவலை எழுதுபவர் ப்ராங்க்ளின் டிக்சான்..ஆனால் இந்த பெயரில் யாரும் கிடையாது.இது ஒரு கற்பனை பெயர்.பல ஆசிரியர்கள் இந்த பெயரில் ஜோ ஹார்டி, ப்ராங்க் ஹார்டி கதைகளை எழுதுகின்றனர்.நான்சி ட்ரூ கதையை எழுதுவதும் அதே போல் பல ஆசிரியர்களே.ஜேம்ஸ் பாண்ட் பாத்திரமும் இதேபோல் ப்ராண்டாக பாதுகாக்கப்படுகிறது.
சந்தையியல் உத்திகளை ஆங்கில நாவல் இலக்கியம் அழகாக பயன்படுத்தியது.தமிழ்நாட்டிலும் அதே போல் நடந்தால் சாம்பு,சங்கர்லால், வந்தியத்தேவன்,விவேக், நரேன் போன்ற பாத்திரங்கள் காலம் கடந்து நிற்கும்...
நான் ரொம்ப சின்னபையன் என்பதால் அவரது கதைகள் எதுவும் படித்ததில்லை
தேவனின் சிறுகதைகள் படித்திருக்கிறீர்களா?
வெகு நாட்களாய் அவரது சிறுகதைத் தொகுப்பைப் படிக்க ஆசைப் படுகிறேன்.
ஒரு மிக நல்ல எழுத்தாளரை நினைவு படுத்தியமைக்கு மிக்க நன்றி சார்.
//நான் ரொம்ப சின்னபையன் என்பதால் அவரது கதைகள் எதுவும் படித்ததில்லை//
அதனால் என்ன. இப்போதுதான் அவர் புத்தகங்கள் தாராளமாக கிடைக்கின்றனவே. வாங்கி படிக்கலாமே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சி.ஐ.டி சந்துரு ஒரே ஒரு நாவல் தான் வந்தது இல்லையா? அந்த கதைகூட ஆரம்பத்தில் ஒரு மாதிரியும் முடிவில் ஒரு மாதிரியும் ஒரு tone difference இருப்பதாக எனக்கு பட்டது. (சிவகாமி சபதம் கூட அப்படியே). ஒரு வேலை வெகுநாள் தொடராக எழுதுவதால் இருக்கலாம், அல்லது நடுவில் யாராவது ghost writing செய்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன்.
தங்களின் பதில்
1.தம்பியின் தொப்பியே அவனுக்கு நெருப்பு அது என்ன?
2.அருந்த முடியாத பால், உலகம் சுற்றும் பால் அது என்ன?
3.அடத்தியான ஒரு மரத்துக்குப் பல கால்கள் அது என்ன?
4.கறுத்த நீண்ட பாயின் மேலே வாகனம் ஓடுது அது என்ன?
5.வலை பின்னும் ஆனால் அதனிடம் நூலில்லை அது என்ன?
6.வாலால் நீர் குடிக்கும் வெளிச்சத்திலே தான் இருக்கும் அது என்ன?
7.ஒற்றைக்கால் மனிதனுக்கு பல கைகள் அவன் யார்?
8.வீட்டைச் சுற்றி கருவேலி அது என்ன?
9.காற்று வீசும் அழகான மரம் அது என்ன?
10.உலகமெல்லாம் கால் நீட்டி, உறக்கமின்றி அலைகின்றான் அவன் யார்?
11.ஓயாமல் இரையும் இயந்திரமல்ல, உருண்டோடி வரும் பந்தும் அல்ல அது என்ன?
12. சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?
13. மரத்துக்கு மரம் தாவுவான் குரங்கல்ல, பட்டை போட்டிருப்பான் சாமி அல்ல, அவன் யார்?
14. அடிக்காத பிள்ளை அலறித் துடிக்கும், அது என்ன?
15. அக்கா விதைத்த முத்து, அள்ள முடியாத முத்து, அது என்ன?
16. வீட்டிலிருப்பான் காவலாளி, வெளியில் சுற்றுவான் அவன் கூட்டாளி, அவர்கள் யார்?
17. எத்தனை தரம் சுற்றினாலும் தலை சுற்றாது, அது என்ன?
18. உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு, அது என்ன?
19. உருவத்தில் சிறியவன் உழைப்பில் பெரியவன், அவன் யார்?
20.மழை காலத்தில் பிடிப்பான், அவன் யார்?
21. அள்ளும் போது சலசலக்கும் கிள்ளும் போது கண் கலங்கும் அது என்ன?
22. வாயைப் பிளந்து வீதியோரங்களில் நிற்பான் அவன் யார்?
23. முக்கண்ணன் சந்தைக்குப் போகின்றான் அவன் யார்?
24. மீன் பிடிக்கத் தெரியாதாம் ஆனால் வலை பின்னுவானாம் அவன் யார்?
25. தொடலாம் ஆனால் பிடிக்க முடியாது அது என்ன?
26.உணவை எடுப்பான் ஆனால் உண்ணமாட்டான் அவன் யார்?
27. வெள்ளம் வெள்ளமாக கறுப்பன் கண்ணீர் விட்டானாம் அவன் யார்?
28.ஒற்றை கிண்ணத்துக்குள் இரட்டைத் தைலங்கள் அவை எவை?
29. தொடாமல் அழுவான், தொட்டால் பேசுவான். அவன் யார்?
30. வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்க ஆளில்லை. அது என்ன?
//வாலால் நீர் குடிக்கும் வெளிச்சத்திலே தான் இருக்கும் அது என்ன?//
சத்தியமா நானில்லை
30 கேள்விகள் கேட்ட நண்பரே. அவற்ரை அடுத்தவார பதில்கள் பதிவின் வரைவுக்கு கொண்டு செல்கிறேன். பொருத்தருள்க.
@வால்பையன்
:)))))
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு, சி.ஐ.டி. சந்துரு படிக்க வேண்டும் என்று பார்க்கிறேன், கிடைக்கமாட்டேன் என்கிறது. அலையன்சில்தான் தேடி இருக்கிறேன், இப்போது கிழக்கும் போட்டிருக்கிறார்களா?
@RV
ஆமாம். அங்குதான் இரண்டையுமே வாங்கினேன் என்பதை பதிவிலிலேயே கூறியுள்ளேன்.
கிழக்கு பதிப்பகம் செய்த நல்ல சேவை இது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment