5/18/2009

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 18.05.2009

ரேஷன் குளறுபடிகள்:
இதன் முக்கியத் தொந்திரவே இந்த கார்டை பல இடங்களுக்கு அடையாளச் சீட்டாக காட்டும்படி வற்புறுத்துவதுதான். கட்டும் விலையில் அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு வினியோகம் செய்ய அரசு செய்த ஏற்பாடு மட்டுமே இது என்பதை மறந்து பல இடங்களில் இதையே அல்லது இதை மட்டும் அடையாள சான்றிதழாக பார்ப்பதால் பல தொல்லைகள் ஏற்படுகின்றன. இதையும் உபயோகிக்கலாம் என்பது ஒரு விஷயம், ஆனால் இதைத்தான் உபயோகிக்க வேண்டும் என பல இடங்களில் வற்புறுத்துவது அக்கிரமம்.

சரி, ஏதோ கஷ்டப்பட்டு வாங்கினால் ஆரம்பத்திலேயே முகவரியை தவறாக குறிப்பிட்டு தலைவலியை உருவாக்குகின்றனர். இது எப்படி நடக்கிறது? தகவல் உள்ளீடு செய்யவென்று அடிமாட்டு தினக்கூலிக்கு ஆட்களை அமர்த்துகின்றனர். அவர்களும் ஏனோதானோ என கையில் அகப்பட்ட முகவரிகளை தாறுமாறாகப் பதிவு செய்கின்றனர். அவர்களை செக் செய்யவென நியமிக்கும் அதிகாரியும் சுய நினைவில் இருப்பது போல தெரியவில்லை. பேசாமல் டிக் அடித்து விடுகின்றனர். அவர்களுக்கென்ன, பிறகு கார்டு வைத்திருப்பவர்தானே அங்கும் இங்குமாக ஓட வேண்டியிருக்கிறது?

இதில் இன்னொரு கொடுமைதான் சொல்லாமல் கொள்ளாமல் கார்டுகளை கேன்சல் செய்தலாகும். அதாகப்பட்டது, மூன்று மாதங்கள் தொடர்ந்து ஒருவர் ரேஷன் கார்டை காட்டி பொருள் ஏதும் வாங்கவில்லை என்றால், இவர்களாகவே தன்னிச்சையாக அனுமானம் செய்து விடுகின்றனர், சம்பந்தப்பட்ட நபருக்கு ரேஷன் பொருட்கள் தேவையில்லை என. ஆகவேதான் பொருட்கள் வாங்கவில்லை, இந்தாளின் கார்டையே ரத்து செய் எனச் செயல்பட்டுவிடுகின்றனர். அப்படி ஒருவர் சிக்கிக் கொண்டால் பிறகு அவர் லோலோ என அலைந்து கார்டை புதுப்பிக்க வேண்டும். ஆகவேதான் தேவையோ இல்லையோ சாமான் வாங்க வேண்டியிருக்கிறது.

சாதாரணமாக நாங்கள் சர்க்கரை மட்டுமே வாங்குவோம். ஆனால் பல நாட்கள் நாம் போகும் தினத்தன்று அது ஸ்டாக்கில் இருக்காது. ஆகவே இன்னொரு நாள் போக வேண்டியிருக்கும். அப்படியே மாதம் முழுக்க வாங்காமல் போனால் கேன்சலாகும் தொல்லைகள் ஆரம்பம். நம்மை ஒரு வழியிலும் போகவிடமாட்டேன் என்கிறார்கள்.

அப்படித்தான் இன்று நடந்தது. சர்க்கரை இல்லை சில நாட்கள் கழித்து வாருங்கள் என்றார்கள். அலுப்படைந்து போய் வாங்காவிட்டால் கார்டை கேன்சல் செய்யும் அபாயம் வேறு. ஆகவே நான் இன்று ஒரு காரியம் செய்தேன். “அரிசி இருக்கிறதா” என கேட்டேன். “இருக்கிறது, எவ்வளவு வேண்டும்”? என என்னிடம் கேட்கப்பட்டது. “ஒரு கிலோ” என்றேன் அழுத்தம் திருத்தமாக. அட அல்பையே என்று கேட்கும் முகபாவனையில் பில் போட்டார்கள். கார்டிலும் குறித்தார்கள். பக்கத்தில் இருந்தவருக்கும் அதே நிலைதான். அவர் என்னிடம் நான் அரிசி தேவைப்படாமல் இருப்பினும் ஏன் வாங்கினேன் என கேட்டதற்கு, நான் சொன்னேன், “ஆமாம் சார், 5 நாட்கள் கழித்து வந்தாலும் அதையே சொன்னால் என்ன செய்வது? இப்போது ஒரு கிலோ அரிசி வாங்கியதால், இம்மாதத்துக்கான உபயோகம் ரிகார்ட் செய்யப்பட்டு விட்டது”. இப்போதைக்கு அது போதுமே” என்றேன். அவரும் அவசர அவசரமாக தனகு ஒரு கிலோ அரிசி வாங்கிச் சென்றார். ரேஷன் கார்ட் குமாஸ்தா இப்படியெல்லாம் கூட பயனர்கள் தப்பிக்க வழியிருக்கா என்பது போல ஏமாற்றத்துடன் எங்களைப் பார்த்தார்.

நான் சொல்ல வருவது இதுதான். மூன்று மாதம் பொருட்கள் வாங்காமல் இருந்தார் என்ற ஒரே காரணத்துக்காக கார்டை கேன்சல் செய்வது போக்கிரித்தனம். ஆனால் அதற்காகவெல்லாம் ப்ரொடெஸ்ட் எல்லாம் செய்வதோ முட்டாள்தனம். மெனக்கெட்டு கடைக்கு போனதற்கு இந்த முட்டாள் விதியையாவது திருப்தி செய்யலாம் அல்லவா? அரிசியும் அவ்வளவு மோசமில்லை ரகம்தான். அப்படியே சர்க்கரை வாங்காவிட்டாலும் இம்மாதத்தைப் பொருத்தவரை பரவாயில்லைதானே.

டெல்லர் தொந்திரவுகள்:
செக்குக்கு பணம் வாங்கப் போனால் முன்னெல்லாம் டோக்கன் தருவார்கள், ந்மது முறை வரும்போது கூப்பிடுவார்கள். நாமும் அது வரை சவுகரியமாக ஏதேனும் நாற்காலியில் அமர்ந்திருக்கலாம். ஆனால் இந்த டெல்லர் முறை வந்த பிறகு பெரிய கியூவில் நிற்க வேண்டியிருக்கிறது. இந்தியன் ஓவர்சீஸ் மீனம்பாக்கம் கிளைக்கு பணம் எடுக்கப் போனால் பெரிய கியூ, டெல்லர் கவுண்டருக்கு முன்னால். பேசாம ஒரு காரியம் செய்தேன். டெல்லர் லிமிட் 10,000 ரூபாய். 10,100-க்கு செக் எழுதி டோக்கன் வாங்கினேன். நான் மட்டும்தான் அவ்வாறு வாங்கியிருக்கிறேன் போல. ஒரு டெல்லர் காசோலை, ஒரு டோக்கன் காசோலை என்னும் முறையில் எனது டர்ன் மிக வேகமாகவே வந்து விட்டது. பணத்தை வாங்கி கொண்டு சென்றேன்.

எலெக்‌ஷன் முடிவுகள்:
என்னைப் பொருத்தவரையில் பாஜக கூட்டணி வெற்றி பெறாததில் வருத்தமே. இருந்தாலும் காங்கிரஸ் கூட்டணிக்கு தெளிவான மேண்டேட் கிடைத்ததில் நிம்மதிதான். கம்யூனிஸ்ட் குழப்பவாதிகள் இப்போது பிளாக்மெயில் செய்ய இயலாது. பொருளாதார கொள்கைகளை பொருத்தவரை பாஜகவும் காங்கிரசும் ஒரே அலைவரிசையில்தான் உள்ளன. எது எப்படியானாலும் தமிழகத்தை பொருத்தவரை பாஜக களத்திலேயே இல்லைதான்.

அதிகம் களிப்படையக்கூடியவர் விஜயகாந்த் மட்டும்தான். நான் வரவிருக்கும் டோண்டு பதில்களில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளேன்: “விஜயகாந்த் இதுவரை செய்ததே அவருக்கு போதுமானது. வரும் அசெம்பிளி தேர்தலில் கண்டிப்பாக அவருடன் கூட்டணி வைத்துக் கொள்ளவே திமுகவும் அதிமுகவும் போட்டி போடும். எங்கு நல்ல வேட்டை கிடைக்கிறதோ அங்கே போய்க்கொள்ள வேண்டியதுதானே”.

பாஜகவினர் மனம் தளராது இன்னும் உழைக்க வேண்டும். உட்கட்சி சண்டைகள் எல்லாம் இப்போது மட்டுமல்ல, எப்போதுமே கட்டுப்படியாகாது.

நான் ஏற்கனவேயே இந்த டோண்டு பதில்கள் பதிவில் குறிப்பிட்டதுதான்; இலங்கை பிரச்சினை பலர் நினைத்தது போல தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கவில்லைதான். அதில் ஒரு திருப்தி.


அன்புடன்,
டோண்டு ராகவன்

18 comments:

துளசி கோபால் said...

ரேஷன் சாமான்கள் வேண்டி இருக்காதவர்களுக்குன்னு ஒரு கார்டு கொடுக்கக்கூடாதா?

எதுக்கு எல்லாத்துக்கும் ஒரு ரேஷன் கார்டு?

ஆனாலும் அந்த ஒரு கிலோ அரிசி ஐடியா சூப்பர்:-))))

dondu(#11168674346665545885) said...

@துளசி கோபால்
//ரேஷன் சாமான்கள் வேண்டி இருக்காதவர்களுக்குன்னு ஒரு கார்டு கொடுக்கக்கூடாதா?//
அதையும் செஞ்சாங்களே. அதைத்தான் H card (honorary card) என்றார்கள். ஜே காலத்தில் இருந்தது. ஆனால் அது குறிப்பிட்ட வர்மானத்துக்கு மேலே பெற்றவர்களுக்கு கட்டாயமாகக் கொடுக்கப்பட்டது. பிறகு ஓட்டு அரசியலில் வித்ட்ரா செய்யப்பட்டது.

அதன்றி கார்டுக்காரர்கள் அவர்களாகவே அவ்வாறு கேட்டு வாங்கும் ஏற்பாடு இருந்திருந்தால் அவை அப்படியே இருந்திருக்கும்போல.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Sivakumar said...

நீங்கள் பார்க்கும் தொலைக்காட்சித் தொடர்களிலிருந்து எங்கே பிராமணன் எவ்வாறு வேறுபடுகிறது? உதாரணங்கள்

யாரும் எதிர்பாராத முடிவு நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்டுள்ளது - இதை நீங்கள் எதிர்பார்த்தீர்களா?

இந்தியா முழுமையும் திருமங்கலமாக மாறி விட்டதா?

நான்காவது முன்னணியும் தோற்று விட்டதே? லாலுவின் கொட்டம் இனியாவது அடங்குமா?

கடைசியில் கருணாநிதியின் சதூர்யம் வென்று விட்டதே?

இனி ஈழ விடுதலை பற்றிய செய்திகள் என்ன ஆகும்?

மீண்டும் காங்கிரஸ் ஆட்சி - இந்த தேசம் என்ன ஆகும்?

காங்கிரஸ் மீண்டும் இந்தியாவின் நம்பிக்கையான கட்சி என்பது என்பது நிருபணமாகி உள்ளதே?

பல கட்சி ஆட்சி முறை என்பது தவறhன நடைமுறை தானே? எவ்வாறு இதை சீரமைக்கலாம்.

என் தேசத்தை கூறு போடுகின்ற எவரையும் எனக்கு பிடிப்பதில்லை (மத இன மொழி வாரியாக) என்னைப் பற்றி என்ன நினைக்கீறீர்கள்?

butterfly Surya said...

பகிர்விற்கு நன்றி.

இந்த பதிவை பார்க்கவும். கருத்து சொல்லவும்.


மே 16 தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று ஏப்ரல் 27 ம் தேதி சொன்னது..



தேர்தல் கிளைமாக்ஸ் பதிவின் சுட்டி:

http://mynandavanam.blogspot.com/2009/05/blog-post_16.html

dondu(#11168674346665545885) said...

நல்ல அலசல், பாராட்டுகள் வண்ணத்துபூச்சியாரே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

பா.ம.க வின் அடுத்த கட்ட நடவடிக்கை?


சிதம்பரம் இப்படி ஜெயிக்கலாமா?

வைகோவை இப்படி தோற்கடிக்கலாமா?

dondu(#11168674346665545885) said...

@வால்பையன்
என்ன செய்வது? அதுதான் ஜனநாயகத்தின் செயல்பாடு. ப.சிதம்பரம் நல்ல திறமைசாலி. அவர் மந்திரியாக வருவதில் மகிழ்ச்சியே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

பாமகவை பொருத்தவரை அதன் சாயம் வெளுத்துவிட்டது. இதுவரை மருத்துவர் ஐயா வாயை திறக்கவில்லை. பார்ப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

butterfly Surya said...

நன்றி டோண்டு சார்.

உங்கள் வாழ்த்து எனக்கு நிறைய மகிழ்ச்சி..

butterfly Surya said...

பாமக:

நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.. நான் ஏற்கனெவே எதிர்பார்த்ததுதான். இந்த கூட்டணியிலேயே அவர் இருக்க முயன்றாலும் ஜெ. காங்கிரஸிடன் நெருங்குவதையே விரும்புவார்.

பாமகவை கழற்றி விட நல்ல நேரம் பார்த்து கொண்டிருப்பார்

dondu(#11168674346665545885) said...

சோ அவர்களது கருத்துகளை அறிந்து மேலும் தெளிவடைய அடுத்த துக்ளக்குக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

பிரபாகரன் மரணமடைந்தார். அப்பாவி தமிழர்களுக்கு விடுதலை தானே?

வடுவூர் குமார் said...

உங்களை தொடர்ந்தாலே இந்த மாதிரி நிறைய யோஜனைகள் கிடைக்கும் போல் இருக்கு!!
எனக்கு பிடித்தது வங்கி தான்.

ராஜ சுப்ரமணியம் said...

/அதன்றி கார்டுக்காரர்கள் அவர்களாகவே அவ்வாறு கேட்டு வாங்கும் ஏற்பாடு இருந்திருந்தால் அவை அப்படியே இருந்திருக்கும்போல.//

நீங்கள் சென்னை மாநகரத்தில் தானே இருக்கிறீர்கள்? மயிலாப்பூர் ரேஷன் ஆபிஸில் நான் இவ்வாறு “பண்டங்கள் வேண்டாம்” என எழுதிக் கொடுத்ததும் அதன்படியே எங்களுக்கு குடும்ப அட்டை வழங்கியுள்ளார்கள்.

//செக்குக்கு பணம் வாங்கப் போனால் முன்னெல்லாம் டோக்கன் தருவார்கள், ந்மது முறை வரும்போது கூப்பிடுவார்கள். நாமும் அது வரை சவுகரியமாக ஏதேனும் நாற்காலியில் அமர்ந்திருக்கலாம். ஆனால் இந்த டெல்லர் முறை வந்த பிறகு பெரிய கியூவில் நிற்க வேண்டியிருக்கிறது.//

மீண்டும் அதே கேள்வி - நீங்கள் சென்னை மாநகரத்தில்தானே இருக்கிறீர்கள்? நான் கணக்கு வைத்திருக்கும் ICICI யிலும், SBI-யிலும், ஆட்டோமாடிக் டோக்கன் கொடுத்து, ஏஸி குளுகுளுப்பில் குஷன் நாற்காலியில் உட்கார்ந்து, எலெக்ட்ரானிக் அறிவிப்பில் நமது எண் வரும்வரை ஓய்வு எடுத்துக்கொண்டு ... உடனடியாக உங்கள் கணக்கை SBI க்கு மாற்றிக் கொள்ளுங்கள், ஸார்

Anonymous said...

//10,000 ரூபாய். 10,100-க்கு செக் எழுதி //

அதான் முக்குக்கு முக்கு ATM இருக்கே. செக் லீஃப் எதுக்கு வேஸ்ட் பண்ணனும்?

dondu(#11168674346665545885) said...

@அனானி
நான் ஏ.டி.எம். சேவையை ஏற்கவில்லை. வங்கி அனுப்பித்த கார்டை அப்படியே வீட்டில் வைத்து விட்டேன், ஆக்டிவேட் செய்யாமல்.

செக் லீஃபை யார் உபயோகித்தார்கள்? வித்ட்ராவல் ஸ்லிப் என்று எதற்காக இருக்கிறதாம்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

வஜ்ரா said...

தேர்தல் முடிவுகளால் சற்றே ஏமாற்றம் அடைந்திருப்பினும் இடது சாரிகளின், அதாவது தி சோ கால்டு மூன்றாவது மற்றும் நான்காவது அணியின் தோல்வி மன நிறைவைத் தந்திருக்கிறது.
மேலும் ஜெயிக்கிற கட்சியில் சேர்ந்து கொள்ளையடிக்கும் "மாம்பழ" மடையர்கள் தோற்றது மிக்க மகிழ்ச்சி. இலங்கைத்தமிழர்கள் பிரச்சனையை வைத்து வோட்டு வாங்கும் கட்சிகள் பூஜ்ய இலக்கையே பெற்றன. மேலும் பிரபாகரன் மாண்டதால் இனிமேல் இவர்களுக்கு வேலையில்லை என்பதும் உறுதியாகிவிட்டது.

இந்தியா முழுவதும் பொருளாதார ரீதியாக centre left சார்ந்த சிந்தனை வெற்றி பெற்றுள்ளது. இதை பா.ஜ.க வினர் யோசிக்கவேண்டும். பொருளாதாரத்தைப் பொருத்தவரை பா.ஜ.க வினர் centre-right சிந்தனைகளை கொஞ்ச காலம் ஒத்திவைக்கவேண்டும் என்று நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

இந்த வாரத்திற்கான கேள்வி பதில் இன்னும் ரெடியாகவில்லை என்றால் ஒரு கேள்வி கேட்டுவிடுகிறேன்.

பிரபாகரனை 22 வருடம் அறிந்த கருணா பார்த்து இது பிரபாகரன் தான் என்று சொல்லியும் சிலர் இன்னும் இது ஸ்ரீலங்காவின் கபட நாடகம் என்கின்றனரே. ஏன் ?

dondu(#11168674346665545885) said...

@வஜ்ரா
பதில்கள் ஏற்கனவே முந்தேதியிட்டு பப்லிஷ் ஆர்டர் கொடுக்கப்பட்டு விட்டன. இருப்பினும் உங்கள் கேள்வியையும் அதில் இப்போது சேர்த்து விடை தந்தாகி விட்டது. நாளை விடியற்காலை தானாகவே பதிவு வெளிவரும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது