பகுதி - 68 (08.05.2009):
போன பகுதியில் எனது புரிதலில் ஒரு சிறு குறை ஏற்பட்டுவிட்டது. அசோக் சாம்பு சாஸ்திரிகள் வீட்டில் நாற்காலியில் அமர்ந்து புத்தகம் படிப்பதை காண்பித்தார்கள், திடீரென அவன் மறைந்தான். இது பற்றி நான் அமானுஷ்யமாக வேறென்னவோ நடந்ததாக மனதில் கற்பனை செய்து வைத்திருந்தேன். இன்றைய பகுதியில் அப்படி ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை என்பதை மட்டும் இப்போதைக்கு கூறி வைக்கிறேன்.
கிருபா வீட்டில் பிரியாவும் அவன் அன்னை செல்லம்மாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது கிரி தன் அன்னையை அழைத்து கொண்டு அங்கு வருகிறான். கிருபா எங்கே என அவன் கேள்வி கேட்டதற்கு பிரியா அவன் பெங்களூர் சென்றிருப்பதாகக் கூறுகிறாள். செல்லம்மாவிடம் கிரியையும் அவன் அன்னையையும் பிரியா அறிமுகம் செய்து வைக்கிறாள். வேம்பு சாஸ்திரி வீட்டு சம்பந்தம் தன் கையை விட்டு போனதில் கிரியின் அன்னை தன் வருத்தத்தைத் தெரிவிக்கிறாள். அதற்கு பிராப்தம் இல்லை போலிருக்கு என வைத்து கொள்ள வேண்டியதுதான் என செல்லம்மா ஆறுதல் கூறுகிறாள்.
“ஏன் சார், இந்த பிராப்தம் என்றால் என்ன? விதிதான் பிராப்தமா” என சோவின் நண்பர் கேட்கிறார். “விதி என சொல்வதை விட, இதை வேறு முறையில் அணுக வேண்டும். பிராப்தம் என்பதை அகராதியில் பார்த்தால் அது பெற்றது என்பதை குறிக்கும்” என தன் விளக்கத்தை சோ ஆரம்பிக்கிறார். முந்தைய பிறவிகளில் செய்யப்படும் நல்வினை மற்றும் தீவினைப் பயன்களின் அடிப்படையில்தான் இப்பிறவியில் நாம் பெறுவது தீர்மானிக்கப்படுகிறது. தமிழில் இதையே நாம் கொடுப்பினை என இன்னொரு பார்வை கோணத்தில் கூறுகிறோம். “அதுக்கெல்லாம் நாம் கொடுத்து வைக்கவில்லை” எனக் கூறுவதும் இவ்வகையே.
கிரியின் அன்னை மேலும் தொடர்கிறாள். தான் முன்பு செய்த தவறுக்கு இப்போது விமோசனம் கிடைத்தது என சந்தோஷப்பட்டதாகவும், ஆனால் கடைசி நிமிடத்தில் எல்லாமே கைவிட்டு போனதாகவும் அவள் கூறுகிறாள். வேம்பு சாஸ்திரிகள் வீட்டில் அவர் மனைவிக்கு இதில் பூரண திருப்தி இல்லையென தான் நினைப்பதாகவும் கூறுகிறாள். செல்லம்மா மிருதுவாக, தான் கேள்விப்பட்டவரை கிரியின் தகப்பனார்தான் நடுவில் புகுந்து, சீர் அதிகம் கேட்டதாகவும், ஆகவேதான் திருமணம் நின்றதாகவும் சொல்ல, அது தன் கணவர் வேம்புவின் மனைவிக்கு இதில் பரிபூரண சம்மதம் இல்லை என்பதை அவர் மட்டும் உடனடியாகவே உணர்ந்ததாகவும், ஆகவே பிற்காலத்தில் வரக்கூடிய குழப்பங்களைத் தவிர்க்கவே அவ்வாறு செய்ததாகவும் கூறுகிறாள்.
கிரி சற்றே பொறுமை இழந்து தன் அன்னை ஏன் இப்படி பிராமண குடும்பத்தில்தான் சம்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் பிடிவாதம் பிடிக்க வேண்டும் என கேட்கிறான். அவள் இம்மாதிரி சுயமரியாதையை இழந்து எல்லோரிடமும் கெஞ்சுவது தனக்கு பிடிக்கவில்லை எனவும் கூறுகிறான். செல்லம்மாவும் கிரியை ஆதரித்து பேசுகிறாள். எது எப்படியானாலும் தன் மகனுக்கு நிச்சயம் பிராமணப் பெண்தான் மனைவியாக வருவாள் எனவும், அவ்வாறு பரந்த மனப்பான்மை கொண்ட ஒரு பிராமண குடும்பம் எங்கோ இருக்க வேண்டும் எனவும் கூறுகிறாள்.
சாம்பு சாஸ்திரிகள் வீட்டில் அவர் செல்லம்மாவிடம், அசோக்குக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கவிருப்பதாகவும், அது நல்லபடியாக முடிய வேண்டும் என தான் 1008 முறை காயத்ரி மந்திரம் ஜபிக்கப் போவதாகவும் கூறிவிட்டு, தன்னை யாரும் அது முடிவடையும் வரையில் தொந்திரவு செய்யாமல் பார்த்து கொள்ளும்படியும் கூறிவிட்டு நிஷ்டையில் அமர்கிறார். அடுத்த சில நிமிடங்களில் அங்கு நீலகண்டன் வந்து சாமு சாஸ்திரிகளை உரக்க அழைக்க செல்லம்மா அவரிடம் சத்தம் செய்யாமல் இருக்க சொல்க்றார். என்ன விஷயம் என நீலகண்டன் அடங்கிய குரலில் கேட்க, செல்லம்மா அசோக்கின் நலனுக்காக அவர் காயத்ரி ஜபத்தில் ஈடுபட்டுள்ளதை கூறுகிறார். நீலகண்டன் இதை கேலி செய்கிறார். பிறகு எவ்வளவு நேரம் இதற்கெல்லாம் பிடிக்கும் என கேட்க ஒன்றரை மணி நேரம் ஆகும் என செல்லம்மா பதிலளிக்கிறாள். நீலக்ண்டன் வேண்டுமானால் அப்போதைக்கு சென்றுவிட்டு, பிறகு திரும்பி வரலாம் என ஆலோசனை சொல்ல அவர் காத்திருந்து பார்ப்பதாகவே கூறுகிறார்.
“காயத்ரி மந்திரத்துக்கு இம்மாதிரியெல்லாம் பலன் இருக்கிறதா” என சோவின் நண்பர் கேட்க, சோ நிதானமாக பேச ஆரம்பிக்கிறார். “இந்த மந்திரத்துக்கென்று தனிப்பட்ட விசேஷ பலன்கள் என கிடையாது. இது மனிதனை மேம்படுத்தும் சாதனமே. ஆனாலும் மனதை ஒருவிஷயத்தில் ஒருமுகப்படுத்தி மனதார வேண்டிக் கொண்டால், காரியசித்தி நிச்சயம்”. “வெறுமனே வேண்டிக் கொண்டால் நடக்குமா” என நண்பர் விடாப்பிடியாக கேட்க, “ மனத்தூய்மையுடன் தகுதியான நபர்கள் வேண்டிக் கொண்டால் அது நிச்சயம் பலிக்கும்” என அவர் பதிலளிக்கிறார். உபபாரதத்திலிருந்து ஒரு கதையை இங்கு அவர் கூறுகிறார். அருச்சுனன் ஒருமுறை தேவலோகம் சென்றபோது ஓரிடத்தில் புஷ்பங்கள் மலைபோல குவிந்திருப்பதைக் கண்டு அது பற்றி விசாரிக்கிறான். அவை பீமன் சிவபூஜை செய்தபோது அர்ச்சிக்கப்பட்ட மலர்கள் என கூறப்படுகிறது. தனக்கு தெரிந்து பீமன் சிவபூஜை செய்ததாகத் தெரியவில்லையே என ஆச்சரியப்படும் அவன், தானும் தினமும் சிவபூஜைகள் செய்து வருவதாகவும், அந்த மலர்கள் எங்கே எனக் கேட்க, அவனிடம் ஒரு சிறு கூடையில் உள்ள மலர்கள் காண்பிக்கப்படுகின்றன. இந்த வேறுபாட்டை குறித்து அவன் வியப்ப்பையும் திகைப்பையும் தெரிவிக்க, அருச்சுனன் இதை வெறும் சடங்காகக் கருதி செய்ய, பீமனோ எல்லா கணமும் சிவபெருமானை மனத்தினால் தியானம் செய்து வருகிறான் எனக் கூறப்படுகிறது.
அதே போல திருநின்றவூர் எனப்படும் திண்ணனூரில் பூசலார் என்னும் சிவனடியார் தன் மனத்தால் சிவனுக்கு கோவில் கட்டுகிறார். இடம் தெரிவு செய்து, அஸ்திவாரம் எழுப்பி, செங்கல் செங்கலாக சுவர் எழுப்பி என எல்லாவற்றையும் தன் மனதிலேயே செய்கிறார். ஒரு நல்ல நாளாக பார்த்து கும்பாபிஷேகம் செய்ய மனதில் நிச்சயம் செய்கிறார். அதே சமயம் பல்லவ ராஜாவோ நிஜமாகவே கோவில் கட்டுவிக்கிறான். அவனுக்கு புரோகிதர்கள் கும்பாபிகேஷத்துக்காக குறித்து தந்த நாளும் பூசலார் குறித்த நாளும் ஒன்றாக அமைந்து விடுகிறது. ராஜாவின் கனவில் வந்த சிவபெருமான் தான் ராஜாவின் கோவில் கும்பாபிஷேகத்தின் போது அங்கிருப்பதற்கு இல்லை, ஏனெனில் தனது அன்பன் பூசலார் திருநின்றவூரில் கட்டிய கோவில் கும்பாபிஷேகம் எனக் கூறுகிறார். அரசனும் அந்த பூசலாரை காணும் அவாவுடன் அந்த ஊருக்கு வந்து பார்த்தால் ஒரு கோவிலும் இல்லை. பூசலார் யார் என விசாரித்தால் ஒரு எளிமையான சிவபக்தரை காட்டுகிறார்கள்.
அரசன் பூசலாரிடம் விசாரிக்க, அவரும் தன் மனத்தால் கட்டிய கோவில் பற்றி கூறுகிறார். அவர் கட்டிய கோவிலின் அதே வடிவமைப்பில் அரசன் அங்கும் கோவில் கட்டி தந்து மகிழ்கிறான். அந்த கோவிலின் ஈசனுக்கு ஹிருதயாலேஸ்வரர் என்ற பெயர். இப்போதும் அக்கோவில் உள்ளது. இருதய நோய் உடையவர்கள் அங்கு சென்று வழிபடுகிறார்கள்.
சாம்பு சாஸ்திரிகள் இன்னும் நிஷ்டையில்தன் இருக்கிறார். நீலகண்டன் செல்லம்மாவிடம் தன்னிடமிருந்து சாம்பு சாஸ்திரிகள் வாங்கிய பசு பற்றி விசாரிக்க, செல்லம்மா மகிழ்ச்சியுடன் அது நன்றாக இருப்பதாக்வும், தினமும் கோபூஜை செய்து விட்டுத்தான் தனது நித்திய கடமைகளை செய்ய ஆரம்பிப்பதாகவும் கூறுகிறாள். வைதீக பிராமணர்கள் இவ்வாறெல்லாம் ஏன் கஷ்டப்பட வேண்டும் என நீலகண்டன் கேலியாகக் கேட்க, அவருக்கு மரியாதையாகவும் அதே சமயம் உறுதியாகவும் செல்லம்மா தங்கள் வாழ்க்கை முறையை உயர்த்தியே பேசுகிறாள். நீலகண்டன் அவற்றையெல்லாம் ஒத்து கொள்வதில்லை என்பது வேறு விஷயம்.
பிறகு தான் வந்த விஷயத்தை அவர் கூறுகிறார். தான் வேலை செய்யும் வ்ங்கியின் புது கிளை கட்டப்போகிறார்கள் எனவும், அதை கட்ட ஆரம்பிக்கும் முன்னால் பூமி பூஜை செய்ய வேண்டும் எனவும் கூறி, அதற்கு நாள் குறித்து வாங்கி வரும்படி தன்னை சேர்மன் அனுப்பித்ததாகக் கூறுகிறார். தனக்கு இன்னும் காத்திருக்க நேரம் இல்லையென கூறி விட்டு, சாம்பு சாஸ்திரிகள் நிஷ்டையிலிருந்து எழுந்ததும் அவரிடம் விஷயத்தைக் கூறி, நாள் ஒன்றை குறிக்கும்படி சொல்ல வேண்டும் என்றும் அவ்வாறு குறித்தததும் தனக்கு ஃபோன் செய்யும்படியும் கூறிவிட்டு அப்பால் செல்கிறார்.
ஆஸ்பத்திரியில் நாதன், அசோக், நீலக்ண்டன் காத்திருக்க, வார்ட்பாய் வந்து அசோக்கை டாக்டர் கூப்பிடுவதாகக் கூறி அவனை ஷாக் ட்ரீட்மெண்டுக்கு அழைத்து செல்கிறான். நாதன் மனம் கலங்க, நீலகண்டன் அவரை ஆஸ்வாசப்படுத்துகிறார்.
கணினி திரையில் ஒரு கீழ்நோக்கி விரியும் மெனு (dropdown menu) கணக்காக நாரதர் இப்போது தோன்றுகிறார். கடின இதயம் படைத்த சோ அவர்களோ இந்த இடத்தில் போய் ‘தேடுவோம்’ என கேப்ஷனை போடச் செய்து, காட்சியை உறையச் செய்து விட்டார். “சோ அவர்களை நீர் மனதில் திட்டுவதை முதன் முறையாக உணர்கிறேன்” எனக்கூறுவது முரளி மனோஹர்.
எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Manasa Book Club, Chennai.
-
Hi Sir, Hope you’re doing well. Manasa Publications has launched the
‘Manasa Book Club’ — a monthly gathering for readers and writers. The meet
will be on ...
11 hours ago

2 comments:
/// கடின இதயம் படைத்த சோ அவர்களோ இந்த இடத்தில் போய் ‘தேடுவோம்’ என கேப்ஷனை போடச் செய்து, காட்சியை உறையச் செய்து விட்டார். “சோ அவர்களை நீர் மனதில் திட்டுவதை முதன் முறையாக உணர்கிறேன்” எனக்கூறுவது முரளி மனோஹர்.//
நானும் முதன்முறையாக சோ அவர்களை “திட்டினேன்” மனசிற்குள். ... திங்கள் வரை காத்திருக்க வேண்டுமே !
கேள்விகள்:
எம்.கண்ணன்
1. டெல்லியிலிருந்து அடிக்கடி சென்னை வரும் காங்கிரஸ் மற்றும் பாஜக பெருந்தலைகள் - குலாம் நபி ஆசாத், வயலார் ரவி, மொய்லி, வெங்கைய்யா நாயுடு போன்றவர்கள் விமானத்தில் வருவதற்கான செலவும், விமான நிலையத்திலிருந்து சத்தியமூர்த்தி பவனோ, ஹோட்டலோ செல்ல/வர, மற்றும் தங்கும் / உணவு செலவுகள் - யார் பணம் கொடுக்கிறார்கள் ? கட்சி நிதியா சொந்த பணமா ? ஒரு முறை வந்து செல்வதற்கு சுமார் எவ்வளவு செலவாகும் ?
2. சென்னையில் பலரும் குடிசை (kudisai) என்பதை Gudisai என்றே சொல்கின்றனரே ஏன் ? அதுமாதிரி பூரி (Poori) செட் என்பதை Boori set என்றும் பல இடங்களில் சொல்லப்படுகிறது.
3. தற்போது பல நடுத்தர குடும்பங்களும் தங்கள் வீட்டு கழிப்பறைகளில் வெஸ்டர்ன் ஸ்டைல் கம்மோடு பொருத்துகிறார்களே ? என்னதான் அது, வயதானவர்களுக்கும், மூட்டு/இடுப்பு வலி உள்ளவர்களுக்கு வசதியாக இருக்கும் என்றாலும், இண்டியன் ஸ்டைல் ஜான் எனப்படும் (ஒரிசா கம்மோடு) கழிப்பறைதான் சுகாதாரமானது இல்லையா ? பொது இடங்களில் (பள்ளி, கல்லூரி, ஹாஸ்டல், அலுவலகம், தியேட்டர், பஸ்ஸ்டாண்ட், ஆசுபத்திரி) உள்ள வெஸ்டர்ன் ஸ்டைல் கம்மோடு உபயோகிப்பதும் ரிஸ்க் தானே ?
4. தவறான உறவுகள் பற்றிய அந்தரங்கக் கேள்விகளுக்கு ரம்யா கிருஷ்ணனும், உமா கிருஷ்ணனும் (த்ரிஷாவின் அம்மா) குமுதத்தில் பதிலளிக்கிறார்களே ? இவர்களுக்கு என்ன ஸ்பெஷாலிட்டி என இந்த மாதிரி கேள்விகளுக்கு பதிலளிக்க குமுதம் உபயோகப்படுத்திக் கொள்கிறது ? தினமலர் வாரமலரில் அனுராதா ரமணனின் அந்தரங்கம் பதில் பகுதி படிப்பதுண்டா ?
5. அடுத்த வெளியுறவுத்துறை அமைச்சராக பிரகாஷ் கரத்தை 'த ஹிண்டு' ப்ரொஜக்ட் செய்வது போல தெரிகிறதே ? (கடந்த 2 நாள் - ஹிண்டு பேட்டிகள்) - கம்யூனிஸ்டுகளும் மத்தியில் அமைச்சரானால் நன்றாகத் தானே இருக்கும் ?
6. சஞ்சய் காந்தியின் மகன் வருண் மீண்டும் கு.க கட்டாயமாக்கவேண்டும் என சொல்லியதாக செய்தி. தற்போதைய இந்தியாவில் இது சாத்தியமா ? தேவையா ?
7. ப.சிதம்பரம் தோற்பார் என களத்திலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் பிரபலமான நிதி அப்புறம் உள்துறை அமைச்சர் ஏன் தன் தொகுதிப் பக்கம் எட்டிப்பார்க்காமல், வளர்ச்சிப் பணிகளை செய்யாமல் கோட்டை விட்டார் ? அவர் மகன் கார்த்தி எப்போதுமே சிவகங்கையில் டெண்ட் அடித்து வேலை பார்ப்பவராயிற்றே ? சிதம்பரம் நினைத்திருந்தால் சிவகங்கைச் சீமைக்கு சில தொழிற்சாலைகளோ வேலை வாய்ப்புகளோ ஏற்படுத்தி அந்தப் பகுதியை முன்னேற்றியிருக்கலாமே ? ஏன் செய்யவில்லை ?
8. அடுத்த 15 தினங்களில் ஜெயலலிதா முதலமைச்சர் ஆனால் காங்கிரசுக்கு மந்திரி பதவி அளிப்பாரா ? (மத்தியில் காங்கிரசுக்கு ஜெ.ஆதரவளிக்க - இங்கு திமுகவுக்கு காங்கிரஸ் ஆதரவு விலக்க, ஆட்சி கவிழ); அப்படி ஜெ.ஆட்சி வந்தால் மீண்டும் சசி சொந்தங்களின் உபத்திரவம் இருக்காது, ஜெ.யின் ஆணவ முடிவுகள் இருக்காது என்பதற்கு எந்த உத்திரவாதவும் இல்லாத நிலையில் ஜெ.ஆட்சிக்கு வருவது நல்லதல்லவே ?
9. எந்த ஆட்சி இருந்தாலும் பாமக மத்திய மந்திரிகள் சிறப்பாகவே பணிபுரிந்தார்கள் (ஏகே மூர்த்தி (ரயில்வே), அவரைவிட சிறப்பாக வேலு (ரயில்வே), அன்புமணி (சுகாதாரம்). அதற்குக் காரணம் மருத்துவர் ஐயாவின் பயிற்சியும் தலைமையும் தானே ?
10. மும்பை, பெங்களூர் நகரங்களில் வாக்குப்பதிவு மிகக் குறைவாகவும், டில்லியில் பரவாயில்லை ரகத்திலும் சதவிகிதம். சென்னை மக்கள் வெயிலில் வெளியே வந்து ஓட்டுப் போட்டு புரட்சி பண்ணுவார்களா ? இல்லை சன், கலைஞர் தொலைக்காட்சிகளில் சிறப்புத் திரைப்படத்தில் மூழ்கி இருக்கப் போகிறார்களா ?
Post a Comment