சிவகுமார்:
1. சொந்தமாக தொழில் செய்வது நல்லதா? 20 - 25 வருடங்கள் உத்யோகத்தில் இருப்பது நல்லதா?
பதில்: இதே விஷயம் பற்றி நான் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு பதிவு போட்டேன். அதிலிருந்து சில வரிகள்:
ஒரு சராசரி இந்தியக் குடிமகன் மாதசம்பள வேலையைத்தான் முதலில் விரும்புகிறான் என்பது நான் அறிந்தவரையில் நிலை. அதிலும் அரசு வேலை என்றால் டபுள் ஓக்கே. நானும் அதற்கு விதிவிலக்கல்ல. முதலில் மின்வாரியத்தில் இளம் பொறியாளர் வேலைக்குத்தான் மனு போட்டேன். எனக்கு அதிர்ஷ்டம் இருந்தது. ஆகவே அந்த வேலை கிடைக்கவில்லை. அதாவது, அதற்கு முந்தைய ஆண்டு போட்டிருந்தால் கிடைத்திருக்கக்கூடும். ஆனால் அப்போது என் அதிர்ஷ்டம் நான் கடைசி ஆண்டு பரீட்சையில் கம்பார்ட்மெண்ட் வாங்கினேன். நிஜமாகவே எனது நல்வினைப்பயனே அது. இல்லாவிடில் ஜெர்மன் படித்திருக்க மாட்டேன். பின்னால் பிரெஞ்சு மற்றும் இத்தாலியன் படித்திருக்க மாட்டேன். ஆனால் இப்பதிவு அதைப் பற்றி இல்லை.
நான் சொல்ல வந்தது என்னவென்றால், எனது டிஃபால்ட் விருப்பம் சம்பளத்துடன் கூடிய வேலைக்குத்தான். அதில் 23 ஆண்டுகள் கழித்த பிறகே இப்போதைய சொந்த தொழிலுக்கு வந்தேன்.
மற்ற தொழில்களை பற்றி எனக்கு சொந்த அனுபவம் இல்லை. ஆனால் மொழிபெயர்ப்புத் துறையை பற்றி ஒன்று கூற முடியும். எடுத்த எடுப்பிலேயே அதை முழுநேரத் தொழிலாகக் கொள்ள முடியாது என்பதே. ஒன்று உங்களிடம் ஏற்கனவே நிறைய பணம் இருக்க வேண்டும், அதாவது உங்கள் அப்பாவிடம். அவரும் உங்களுக்கு முழுமனதோடு ஆதரவு தர வேண்டும். இப்போது இருக்கும் நிலையில் முதலில் நல்ல கணினி வேண்டும், அகலப் பட்டை இணைய இணைப்பு வேண்டும். அச்சடிக்கப்பட்ட நல்ல அகராதிகள் வேண்டும். அவையும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும். அல்லது நீங்கள் தனி கவனம் செலுத்த விரும்பும் துறைக்கு சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும். இதற்கெல்லாம் பணம்? கணக்கு பார்ப்போமா?
கணினி ரூபாய் முப்பதாயிரத்துக்கு குறையாமல் ஆகும். தவறு என்றால் எனக்கு சரியான தொகையை பின்னூட்டமாக இடுங்கள். விண்டோஸ் எக்ஸ் பி ப்ரோ குறைந்தபட்ச தேவை. பிறகு அகலப்பட்டை இணைய இணைப்பு. மோடம் முதலியவை ரூபாய் 2000/க்கு மேல் ஆகும். மாதக் கட்டணம் குறைந்த பட்சம் ரூபாய் 800. அகராதிகள்? உதாரணத்துக்கு ஜெர்மன் -> ஆங்கில பொறியியல் அகராதி ரூபாய் 5000. பொது அகராதி ரூபாய் 1000. பிறகு இருக்கவே இருக்கின்றன கட்டட இயல் அகராதி, சிமெண்ட் சம்பந்தப்பட்ட அகராதி முதலியன. மற்ற துறைகளுக்கான அகராதியும் உண்டு. இதெல்லாம் சேர்த்து தேவையான முதல் தொகை அரை லகரத்தைத் தாண்டி விடும். ஆகவே பணக்கார, இளகிய மனதுடைய அப்பா தேவை. :)
2. ஆங்கில அறிவை மேம்படுத்த என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம்?
பதில்: ஆங்கிலம் என்று மட்டும் இல்லை எந்த மொழி அறிவையுமே மேம்படுத்த சில பொது வழிகள் உள்ளன. சம்பந்தப்பட்ட மொழியில் வரும் புத்தகங்கள், பத்திரிகைகள் ஆகியவற்றை படித்த வன்ணம் இருக்க வேண்டும். அம்மொழியில் விடாது கூச்சமின்றி பேசவும் வேண்டும். அம்மொழியில் வரும் ரேடியோ மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை தவறாது கேட்டு வரவேண்டும். தவறில்லாமல் எழுதும் பழக்கம் வருவதற்கு அதிகம் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும். மொழியை முறையாக கற்கும்போது இலக்கணத்தை முதலில் கையகப்படுத்தல் அவசியம்.
3. வேற்று மொழி கதைகள் படிக்கும் போது எத்தகைய முறையைக் கையாண்டால் படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும்?
பதில்: எந்த மொழியாக இருப்பினும், கதையை படிக்கும்போது கற்பனைக்கு தடைபோடாது அவற்றுக்கு சிறகுகள் பொருத்தவேண்டும். படிக்கும்போது மனதில் காட்சிகளாக விரிந்தால் மிகவும் மயிர்கூச்செறியும் அனுபவங்கள் ஏற்படும். ஹாரி பாட்டர் 7-ஆம் புத்தகத்தில் கடைசி சண்டை காட்சி வர்ணனைகள் படிக்கும்போது என்னால் நாற்காலியில் அமர இயலவில்லை. அவ்வளவு உணர்ச்சிவசப்பட்டேன்.
4. தங்களுக்கு தமிழ் தவிர இந்திய மொழிகள் என்னென்ன தெரியும்?
பதில்: ஹிந்தி மட்டுமே; அம்மொழியை பொருத்தவரை மொழிபெயர்க்கும் அளவுக்கு தெரியும். நன்கு பேசவும் தெரிவதால் அம்மொழி பேசுபவர்களுக்கு துபாஷியாகவும் செயல்பட இயலும்.
5. சமஸ்கிருதத்தில் தங்களுடைய புலமை எத்தகையது?
பதில்: சுத்தமாக லேது. சடங்குகள் செய்யும்போது மந்திர ரூபத்தில் கேட்பதுடன் சரி.
6. ஒரு வாரத்திற்கு அதிகபட்சம் எவ்வளவு நேரம் வருமானம் சார்ந்த வேலைக்காக ஒதுக்குவீர்கள்?
பதில்: கைவசம் இருக்கும் வேலையை பொருத்து அமையும்.
7. ஒரு நாளைக்கு அதிகபட்சமாக எவ்வளவு நேரம் டிவி பார்ப்பீர்கள்?
பதில்: மேகலா, எங்கே பிராமணன், கோலங்கள். ஆக நிச்சயமாக ஒன்றரை மணி நேரம். அதிலும் விளம்பர இடைவேளை சமயங்களில் கணினி அறைக்கு சென்றுவிடுவேன். விளம்பரங்கள் முடியும்போது என் வீட்டம்மா எனக்கு குரல் தருவார். மற்றப்படி ஏதேனும் சுவாரசியமான டயலாக்கோ, பாடலோ காதில் பட்டால் சிறிது நேரம் போய் கேட்பேன்.
8. பே சானல்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நம்மிடம் பணம் வசூல் செய்யும் அத்தகைய சானல்களுக்கு ஏன் விளம்பரக் கட்டுப்பாடு ஏன் விதிக்கக்கூடாது? (விஜய் டிவியில் விளம்பர இடைவேளை மிகமிக அதிகம்)
பதில்: நாம் கொடுக்கும் பணத்தைவிட பலமடங்கு விளம்பரதாரரிடமிருந்து கிடைப்பதால் நீங்கள் சொல்வது நடப்பது துர்லபமே. நாம் ஏன் அதற்காகவெல்லாம் கவலைப்பட வேண்டும்? வேறு வேலைகளை பார்க்கலாமே? விளம்பரங்கள் முடிந்ததும் தெளிவாக மியூசிக் வருமே, அப்போது டிவி பக்கம் போனால் போயிற்று.
9. உங்கள் வீட்டில் கேபிளா டிடீஎச்-ஆ? கேபிள் எனில் உங்கள் பகுதியில் எவ்வளவு வசூலிக்கிறார்கள்? டிடீஎச் எனில் எந்த கனெக்ஷன் வைத்துள்ளீர்கள்?
பதில்: கேபிள் டிவி, மாதம் 110 ரூபாய். அதுவே தேவைக்கும் மேல் நிகழ்ச்சி சேனல்களை தருகிறது. ஸ்போர்ட்ஸ் சேனலில் சுவாரசியமே இல்லை. காமெடி சேனல் இலவசமாகவே, கொடுக்கும் மாத சந்தாவுக்கு உட்பட்டே கிடைக்கிறது.
10. எங்கே பிராமணன் இ-புத்தகம் எங்கே கிடைக்கும்? (சுட்டி தந்தால் தன்யன் ஆவேன். சீரியல் அநியாயத்திற்கு டிவிஸ்ட் ஆகிறது)
பதில்: இ-புத்தகம் எங்கும் கிடைப்பதாக தெரியவில்லை. சீரியல் புத்தகத்திலிருந்து ஏற்கனவே மிகவும் வேறுபட்டு விட்டது. இப்போது புத்தகம் படித்தால் குழப்பம்தான் மிஞ்சும். சீரியல் மிக நன்றாகவே எடுக்கப்பட்டு வருகிறது. செய்யப்பட்ட மாறுதல்கள் புத்தகத்துக்கு மேலும் மெருகூட்டுகின்றன என்பதுதான் நிஜம்.
11. எங்கே பிராமணன் சீரியலில் ஏன் ஐயங்கார் கதாபாத்திரங்கள் வரவில்லை? சோ ஐயர் என்பதாலா? (வரப்போகிறது என்று சொல்ல வேண்டாம் - டைடிலில் ஒரு ஐயங்கார் வருகிறார்)
பதில்: சீரியல் முழுவதுமே யார் பிராமணன், அவன் எங்கே இருக்கிறான் என்பது பற்றித்தான். ஆகவே இதில் ஐயர் என்ன, ஐயங்கார் என்ன?
எம். கண்ணன்:
1. எங்கே பிராமணன் தொடரில் பாத்திரத் தேர்வுகள் மிக அருமை தானே? நல்ல ஃபிகர் என யாரைச் சொல்லுவீர்கள்? கிருபாவின் மனைவியாக வரும் சங்கீதாவா? இல்லை சமையல் மாமியா?
பதில்: கிருபாவின் மனைவி பெயர் பிரியா அல்லவா, அல்லது அப்பாத்திரத்தை ஏற்று நடித்த நடிகையை குறிப்பிடுகிறீர்களா? மற்றப்படி நிஜமாகவே சொல்கிறேன், எல்லா ஆண்/பெண் கதாபாத்திரங்களுக்குமே மிக அருமையான முறையில் நடிகர்கள்/நடிகையர் தேர்வு நடந்துள்ளது. நடிகை யாரை பார்த்தும் எனக்கு நீங்கள் சொன்ன “ஃபிகர்” என்ற வார்த்தையே நினைவுக்கு வரவில்லை. நல்ல தேஜஸ் ஒவ்வொரு முகத்திலும். ஏதோ பக்கத்தாத்தை எட்டிப் பார்ப்பது போல யதார்த்தமான நிகழ்ச்சிகள், சம்பாஷணைகள். அவர்களை நேரில் பார்த்தால் கூட முகம் மட்டுமே பார்த்து பேசத்தான் தோன்றும்.
2. குமரி முனையில் வசிக்கும் ஜெயமோகனை பல ஊர்களிலிருந்தும் கூப்பிட்டு (வெளிநாடுகள் உட்பட) அவர் பல இடங்களுக்கும் செல்ல வாய்ப்பு ஏற்படுகிறதே? ஆனால் சென்னை மாநகரத்திலே வசிக்கும் சாரு நிவேதிதாவை யாரும் கூப்பிடுவது போல் தெரியவில்லையே ? சக வலைப்பதிவர் என்ற முறையில் ஏன் என நீங்கள் நினைக்கீறீர்கள்?
பதில்: இல்லையே, சாருவும் ஸ்பெயின், அமெரிக்கா எல்லாம் அடிக்கடி போகிறார் போலிருக்கிறதே.
3. ஆண் வாரிசு இல்லையே என வருத்தப் பட்டதுண்டா? ஆண் வாரிசு இல்லாதவர்களுக்கு நீங்கள் கூறும் மனவியல் அறிவுரை என்ன?
பதில்: இப்போது 63 வயதில் வருத்தப்பட்டு என்ன ஆகப்போகிறது? பைதிவே இக்காலத்தில் ஆணென்ன, பென்ணென்ன? சொல்லப்போனால் பெண் குழந்தைகளிடமிருந்துதான் அதிகம் பாசம் கிடைக்கும்.
4. ஜெர்மனியும் பிரான்ஸும் போகாமலேயே மொழிபெயர்ப்பு வேலைகள் செய்து வருகிறீர்கள். அங்கு ஒரு முறை சென்று அவர்கள் (தற்போது) வாழ்க்கை நடைமுறையை கண்டு வந்தால் உங்கள் மொழிபெயர்ப்பு இன்னும் சிறக்கக் கூடும் அல்லவா?
பதில்: பிரான்சும் ஜெர்மனியும் இத்தாலியும் எனது வீடு தேடி வரும்போது நான் ஏன் போக வேண்டும்? பாஸ்போர்ட் கூட என்னிடம் இல்லையே. ஒரு முறை ஸ்விட்சர்லேந்திலிருந்து ஜெர்மன் தாய்மொழிக்காரர்கள் இருவர் வந்திருந்தனர். நான் பேசுவது ஸ்விஸ் ஜெர்மன் என கற்பூரம் அடிக்காத குறையாக சத்தியம் செய்தனர்.
5. குமுதத்தில் வரும் ஜாதிகள் பற்றிய தொடர் ஏன் இப்போதெல்லாம் உங்கள் பதிவுகளில் எடுத்துப் போடுவதில்லை? அந்தந்த ஜாதிகளில் பிரபலங்களைப் பற்றிய சிறப்புச் செய்திகள் வருகின்றனவே? (குமுதம் பே சைட் ஆனது தான் காரணம் என சொல்லமாட்டீர்கள் என எண்ணுகிறேன்)
பதில்: முக்கியக் காரணமே சோம்பேறித்தனம்தான். இலவச சைட்டாக இருந்தவரை காப்பி பேஸ்ட் செய்ய முடிந்தது. இப்போதெல்லாம் கை ஒடிய தட்டச்சு செய்ய வேண்டியிருக்கிறது என்பது ஒரு காரணம். இன்னொரு காரணம் என்னை மிகவும் இன்ஸ்பைர் செய்த நாடார் சாதிக்கு பிறகு பதிவு போட மோட்டிவேஷன் இல்லை. ஆகவே காப்பி பேஸ்ட் இல்லை என ஆனவுடன் அப்படியே விட்டு விட்டேன்.
6. கம்ப ராமாயணம், வால்மீகி ராமாயணம் - எது பிடிக்கும்? ஏன்? உங்களுக்குப் பிடித்த அதன் சுவையான / நீங்கள் ரசித்த பாடல்களை / வர்ணனைகளை எடுத்து பதிவாக (தொடர்ந்து - வாரம் ஒருமுறை) பகிரலாமே? (வெறும் பாடல் அதன் பொருள் என்றில்லாமல் கொஞ்சம் விரிவாக)
பதில்: கேள்வி மிகவும் தவறான ஆளுக்கு வந்திருக்கிறது. நண்பர் ஹரிகிருஷ்ணன் போன்றவர்களுக்கு செல்ல வேண்டிய கேள்வி.
7. கதா காலட்சேபம் செய்யும் பௌராணிகர்கள் குறைந்துவிட்டார்களே? சுகி.சிவம், நாகை முகுந்தன் என சிலர் இருந்தாலும் எல்லோரும் வாழ்வியல் பக்கம் ஒதுங்கிவிட்டனரே? ஒரு டி.எஸ்.பாலகிருஷ்ண சாஸ்திரிகள் போலவோ, கிருபாநந்த வாரியாரைப் போலவோ, கமலா மூர்த்தி போலவோ ஆன்மீகம்/பக்தி பற்றி சொல்ல பெரியவர்கள் குறைந்ததற்கு என்ன காரணம்?
பதில்: எல்லாம் சப்ளை மற்றும் டிமாண்ட் விஷயம்தான். பௌராணிகர்களுக்கான தேவை குறைந்து விட்டது. அவ்வளவே. மெகா சீரியல்களின் தாக்கம்.
8. பெரும்பாலும் அரட்டையாகவே நடைபெறும் பதிவர் சந்திப்புகளுக்கு 'சொந்த' கார் வாடகைக்கு எடுத்துச் செல்ல எப்படி கட்டுப்படியாகிறது? பழவந்தாங்கலில் இல்லை வேளச்சேரியில் ரயில் பிடித்து போகலாமே?
பதில்: அவ்வளவு ஏன், எங்கள் வீட்டின் எதிரில் இருக்கும் டெர்மினசிலிருந்து கிளம்பும் M45B M21G பஸ்கள் கூட நேரே காந்தி சிலைக்குத்தானே வருகின்றன? பஸ்களில் செல்வது அல்லது “எனது” காரில் செல்வது ஆகியவற்றின் அனுகூல பிரதிகூலங்கள் பற்றி நான் இட்ட இப்பதிவிலிருந்து சில வரிகள் இங்கு பொருத்தமாக இருக்கும்.
“கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் சென்னையை விட்டு பிரிந்திருந்த சமயத்தில் எனக்கு அடிக்கடி வந்த கனவு பற்றி ஏற்கனவே பதிவு போட்டுள்ளேன். அது எனது நங்கநல்லூர் வீட்டுக்கு மட்டுமல்ல, சென்னைக்கும் சேர்த்துத்தான். வேலை அதிகமாக இருப்பதால் நேரத்தை மிச்சப்படுத்த கால் டாக்சியில்தான் அதிகம் செல்வேன். அதில் உள்ள ஒரே பிரச்சினை என்னவென்றால் நகரத்தின் பல அனுபவங்கள் கிடைக்காமல் போவதுதான். அவற்றில் முக்கியமானது பஸ்களில் செல்வது. ஆகவே கடந்த சில மாதங்களாக எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் பஸ்களில் செல்வது என ஆரம்பித்துள்ளேன்”.
ஒரு பொருளாதாரக் கணக்கு போடுவோமா? கால் டாக்சியில் செல்வதால் நேரம் குறைந்த பட்சமாக இரண்டு மணி நேரம் மிச்சமாகிறது. 5 மணி நேர டாக்சி, 30 கிலோமீட்டர், சார்ஜ் 400-450 வரை. கைவசம் வேலை இருந்து சேவ் ஆன அந்த இரண்டு மணி நேரமும் கணினியில் வேலை செய்கிறேன் என வைத்து கொள்ளுங்கள். 1400 ரூபாய் அனாயாசமாக வந்து விடும். அதில் டாக்சி போக மீதி நம் கைக்குத்தானே. அதுவும் வாடிக்கையாளர்கள் எல்லாம் வேலையை நாளைக்கு முடித்துத் தா என்று கூட கேட்பதில்லை. “எனக்கு மொழிபெயர்ப்பு நேற்றைக்கே வேண்டும்” என சொல்பவர்கள்தான் அனேகம். அவ்வளவுதான் விஷயம்.
9. உங்களுடைய கருத்துகளில் உறுதியாக நின்றாலும், அனைவரிடமும் நட்பு பாராட்டும் இந்த பன்முகத் தன்மை உங்களுக்கு வந்தது உங்கள் பம்பாய், டில்லி வாசத்தினால் என்று கூறினால் சரிதானே? பொதுவாக வடக்கில் (தமிழகம் / தென்னகம் விட்டு வெளியே) பல வருடங்கள் வாழ்ந்தவர்களுக்கு தமிழகத்திலேயே இருந்தவர்களை விட கொஞ்சம் பரந்த மனது என நண்பன் ஒருவன் கூறினான். உங்கள் கருத்து என்னவோ?
பதில்: இதில் என்ன ஆச்சரியம், நான் மட்டும்தானா அப்படி? பதிவர் சந்திப்புக்கு வரும் எல்லோருமே நேரில் பார்க்கும்போது மலர்ந்த முகத்துடனேயே பேசுவோமே. மற்றப்படி நீங்கள் குறிப்பிட்ட இந்த பன்முகத்தன்மை எனக்கு சமீபத்தில் 1971-ல் என்னைப் புரட்டிப்போட்ட அந்த ஞாயிற்றுக் கிழமையன்று வந்தது.
10. நங்கநல்லூர் வட்டாரங்களில் தற்போது வீட்டு வேலை செய்ய வரும் பெண்மணிக்கு எவ்வளவு மாதச் சம்பளம் கொடுக்க வேண்டி உள்ளது? சம்பளம் தவிர வேறு அடிஷனல் உண்டா? (உதா: காபி, மாதம் 2 நாட்கள் லீவு; வருடம் 2 புடவை என)? நகரத்தில் வேலைக்கு நம்பகமான ஆள் கிடைப்பது அரிதாகி வருகிறதே?
பதில்: ஒரு வேளை வீட்டை பெருக்கி துடைத்து, காலை மற்றும் மாலை பாத்திரம் தேய்க்க மாதத்துக்கு 500 ரூபாய். துணி துவைக்கச் சொன்னால் அதிகப்படியாக 200 ரூபாய். காலை ஒரு வேளை காப்பி, தீபாவளிக்கு ஒரு மாத சம்பளம் போனஸ், மாதம் 3 நாட்கள் லீவ். நீங்கள் சொல்வதுபோல நம்பகமான ஆள் கிடைப்பதும் கஷ்டமே.
சேதுராமன்:
1. சோனியா காந்தி கூட்டத்தை ரத்து செய்து விட்டாங்களாமே?
பதில்: புத்திசாலித்தனமான முடிவு. தமிழகத்தில் அவருக்கு வெளிப்படையான எதிர்ப்பு உருவாகியுள்ளதை யாராவது சொல்லியிருப்பார்கள் போல. இப்போது கூட்டத்துக்கு வந்து அது சந்தேகத்துக்கிடமின்றி ருஜுவாகி விட்டால் என்னாவது என்ற தயக்கம் அவருக்கிருந்தால் அது புரிந்து கொள்ளக் கூடியதே. Discretion is the better part of valor.
அதே சமயம் அம்மாதிரி தயக்கம் இல்லாமல் வேறு காரணங்களுக்காக அவ்வாறு செய்திருந்தால் அது துரதிர்ஷ்டவசமானதே. பயம் என மற்றவர்கள் முத்திரை குத்தி விடுவார்கள். அவுரங்கசீப்பும் அவன் சகோதரன் தாரா ஷுகோவும் அரியணைக்காக சண்டை போட்டபோது, திடீரென தாரா யானையிலிருந்து இறங்கி குதிரைக்கு மாறினார். ஓரிரு நிமிடம் அவர் கண் பார்வையிலிருந்து மறைய, “தாரா இறந்து விட்டார்” என கோஷம் எழுந்து, அவரது வீரர்கள் பயந்து ஓட ஆரம்பித்தனர். இறுதி வெற்றி அவுரங்கசீபுக்குத்தான்.
2. பிரபாகரன் சொந்த ஊர் கொல்லமாமே? இன்று காலை என்.டி.டிவி. அவங்க சொந்தக்காரங்களை பேட்டி எடுத்திருக்காங்க தெரியுமா?
பதில்: பிரபாகரனின் அத்தை மகள் கொல்லத்தில் இருப்பதாக அறிகிறேன். இந்த உரலைப் பார்க்கவும்.
3. பாரதி ராஜா, சேரன், சீமான் - சினிமாக்காரங்கள் திட்டம் சோனியா காந்தி கூட்டம் ரத்திலே முடிந்துள்ளது - இது இன்னும் தொடருமா?
பதில்: காங்கிரசுக்கு சுயபலம் தமிழகத்தில் லேது என்பது சோனியா காந்திக்கு நன்றாகவே தெரியும். இங்கு இப்போது பிரசாரத்துக்கு வந்து யாராவது தன்னையும் “சிதம்பரம்” செய்தால் என்ன செய்வது என அவர் பயந்திருக்க வேண்டும். மேலே என்ன நடப்பதானாலும் தேர்தலுக்கு பிறகுதான் பார்க்க வேண்டும்.
4. ராஹுல் ஸ்ருதி இறங்குகிறதே? ஏன்?
பதில்: எந்த விஷயத்தில் சுருதி இறங்குகிறதாம்? ஒருவேளை யாராவது உ.பி. யில் நடக்கப் போவதை அவருக்கு ஜோசியம் சொல்லியிருப்பார்களோ!
5. இந்த களேபரத்திலே பா.ஜ.வுக்கு ஏதாவது சான்ஸ் கிடைக்குமா?
பதில்: புத்திசாலித்தனமாக செயல்பட்டால் ஏதாவது நடக்கலாம். ஆனால் தமிழகத்தை பொருத்தவரை கட்சி ஐயோ பாவம் நிலையில்தான் உள்ளது.
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
முத்துலிங்கம்
-
கவிஞர், திரைப்பாடலாசிரியர், இதழாளர். திரைப்படங்களில் பாடலாசிரியராகப்
பணியாற்றினார். இதழ்களில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். அனைத்திந்திய அண்ணா
திராவிட மு...
1 day ago
7 comments:
என்ன சார் பாத்து ரொம்ப நாள் ஆச்சு ?.
மங்கையர்க்கரசி என்று ஒருவரின் பிரசங்கம் டோர்டர்ஷனில் வருகிறது , மிகவும் அருமை - வராகி
எஸ்.ராவின் உபபாண்டவம் படித்திருக்கிறீர்களா?
அதைப்படித்த பின் மகாபாரதம் பற்றிய உங்கள் கருத்து என்ன?
உபபாண்டவம் படித்த பின் துரியோதனன் கூட சில நேரங்களில் நல்லவனாக தான் தெரிகிறான்.
பாண்டவர்கள் .....????
மகாபாரதம் பற்றிய உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்.
உபபாண்டவம் படித்ததில்லை. ஆனால் கேள்விப்பட்டிருக்கிறேன். அடுத்த முறை கஸ்தூரி சீனுவாசன் நூலகத்துக்கு செல்லும்போது கிடைக்கிறதா என பார்க்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
< சீரியல் மிக நன்றாகவே எடுக்கப்பட்டு வருகிறது. >>
ஸாரி டோண்டு ஸார், என்னதான் நீங்கள் சப்பைக்கட்டு கட்டினாலும், “எங்கே பிராமணன்” தொடர் தற்போது தொய்வு அடையத் துவங்கிவிட்டது.
சராசரியான, typical-ஆன தமிழ் சீரியல்களைப் போன்றே பத்தோடு பதினொன்றாக இதுவும் உள்ளது.
நீலகண்டன் தெருவிலேயே பாகவதரின் இரண்டாவது மகனை கீழ்த்தரமான மொழியில் திட்டுவதும், காலரைப் பிடித்து அடிக்க கை ஓங்குவதும், சுட்டு விரலை நீட்டி, நீட்டி (வழக்கமாக தமிழ் சீரியல்களில் வரும் மோசமான காட்சி இது) வயதான் பாகவதரை தெருவிலேயே ஆபாசமாக் திட்டுவதும் ---- எங்கே பிராமணனின் தரத்தை அதல பாதாளத்திற்கு தள்ளி விட்டது.
@ராஜ சுப்பிரமணியம்
நீங்கள் சொன்ன தள்ளுமுள்ளு காட்சி ரியலிஸ்டாக எடுக்கப்பட்டதாகவே எனக்கு படுகிறது. நீலகண்டன் ஒரு பக்கம், எதிரில் பாகவதரின் இரண்டாம் மகன், பாகவதர், அவரது மனைவி ஆகியோர் தத்தம் பாத்திரத்துக்கு ஏற்றாப்போலவே செயல்பட்டனர்.
சாதாரண சீரியலில் இதை மிகுந்த மெலோட்ராமாவுடன் நிறைவேற்றியிருப்பார்கள், ஆனால் இங்கு அதை அவ்வாறெல்லாம் செய்யாது மேலோட்டமாகவே செய்துள்ளார்கள். ரப்பர் மாதிரியெல்லாம் இழுக்கவில்லை.
இந்த சீன் பற்றி நான் எனது லேட்டஸ்ட் பதிவில் எழுதியுள்ளேன் பார்க்கவும்
அன்புடன்,
டோண்டு ராகவன்
1. வருடத்திற்கு 364.5 நாட்கள் டில்லியிலும் (அல்லது சில நாட்கள் வெளி நாட்டிலோ) இருக்கும் மன்மோகன் சிங் ஏன் அசாமில் சென்று ஓட்டு போடுகிறார் ? ராஜ்யசபா எம்.பி ஆவதற்கு வீடு அங்கு இருக்கவேண்டும் ஆனால் வசிக்கத் தேவையில்லையோ ?
2. அதேபோல சிதம்பரம் வசிப்பது சென்னையில் அல்லது டில்லியில். ஏன் சிவங்கெ கண்டமனூரில் ஓட்டு போடுகிறார் ?
3. ஆழ்வார்பேட்டையில் பல்லாண்டுகளாக வசித்தும், பலமுறை தேர்தலில் ஓட்டு போட்ட கமல் ஹாசன் பெயர் ஏன் இந்த முறை வாக்காளர் பட்டியலில் இல்லை ? பரமக்குடியில் போய் ஓட்டு போடுங்கள் என்பார்களோ ?
4. இது போன்ற பாடாவதி சட்டங்களை ஏன் எந்த அரசும் மாற்றுவதில்லை ?
சுதாகர்
Post a Comment