பகுதி - 61 (29.04.2009):
தான் வாக்களித்தப்படி உமா அசோக்கை அவன் வீட்டில் சந்தித்து பேசுகிறாள். மாதா, பிதா, குரு, தெய்வம் என ஏன் இந்த வரிசைக்கிரமம் என முதலில் கேட்கிறாள். மாதா, பிதாவின் அருமைகளை அசோக்கை விட்டே கூறச்செய்து, பிறகு அப்படிப்பட்ட மாதா பிதாவுக்காக அவன் ஏன் சிறிது விட்டுக் கொடுத்து, மனநல நிபுணரை பார்க்க செல்லக்கூடாது என கேட்கிறாள். அவளை எதிர்வாதம் புரியும் அசோக்கை அவன் வழியிலேயே பொறுமையாக சென்று அவனை மெதுவாக கன்வின்ஸ் செய்கிறாள். அக்குழந்தையின் முகத்தில் தேஜஸ், கருணை எல்லாம் அப்படியே வெளிப்படையாக தெரிகின்றன. அந்த நடிகை அற்புதமாக இந்த சீன் செய்கிறார். அசோக்கும் கன்வின்ஸ் ஆகிறான். அதை உமா நாதனிடமும் உமாவிடமும் தெரிவிக்கிறாள்.
பாகவதர் வீட்டுக்கு நீலகண்டன் வருகிறார். நாதன் விரும்பியபடி அசோக்குடன் பாகவதர் ஏன் பேசவில்லை என கேட்கிறார். அது அசோக்கின் நலனுக்கு ஏற்றதாக இல்லை என தான் நம்பியதாலேயே அவ்வாறு செய்யவில்லை என பாகவதர் கூறுகிறார். ஆனால் அசோக் டாக்டரை பார்க்க போகிறான் என்றும், தனது மகள் உமாதான் கன்வின்ஸ் செய்தாள் எனவும் கூறுகிறார். “போக மாட்டான் என நினைத்தேன். போகிறானா? விநாசகாலே விபரீத புத்தி” என பாகவதர் கூறுகிறார்.
“இதை நான் நிறைய கேட்டிருக்கேன். இதை எந்த காண்டக்ஸ்டில் எங்கு கூறியுள்ளார்கள்” என நண்பர் கேட்க, “கெட்டகாலத்தில் முதலில் புத்தி பேதலிக்கும்” எனக் கூறிவிட்டு, சோ மேலும் பேசுகிறார். இது சாணக்ய நீதியில் வருகிறது. அதுவும் ராமருக்கு. அவ்வளவு புத்திமானாகிய அவரே பொன்மானைப் பார்த்து மயங்கிய கதையை கூறுகிறார்.
“இதானே உம்மகிட்ட பிரச்சினை, இனிமே நாதனாத்துலே உங்க ஜம்பம் சாயாது” என்று கூறிவிட்டு நீலக்ண்டன் அப்பால் செல்கிறார்.
அசோக்கும் நாதனும் டாக்டரும் டாக்டர் வீட்டிற்கு செல்லும் ஆயத்தங்களில் இருக்கின்றனர். காரில் ஏறும் சமயம் அசோக் திடீரென எதையோ நினைத்து கொண்டு உள்ளே சென்று “The power of now" என்னும் புத்தகத்தை எடுத்து வருகிறான்.
டாக்டர் வீட்டில் முதலில் நாதனை உள்ளே கூப்பிடுகிறார்கள். அசோக்கை அங்கேயே அமரும்படி கூறிவிட்டு நாதன் உள்ளே விரைகிறார். டாக்டர் அவரிடம் நீலகண்டன் சொல்லியதை முதலில் பட்டியலிடுகிறார். நாதனும் அவற்றை ஊர்ஜிதம் செய்கிறார். சற்றுமுன்னால் டாக்டர் வீட்டுக்கு கிளம்பும்போது சட்டென்று வீட்டுக்குள் திரும்பப் போய் ஒரு புத்தகம் எடுத்து வந்ததையும் கூறுகிறார். அதன் தலைப்பு The power of now என கூறி, “உங்களுக்கு இந்த தலைப்பு புரிகிறதா” என கேட்க, டாக்டர் ஆச்சரியத்துடன் தான் இந்தப் புத்தகத்தை ரொம்ப நாட்களாகத் தேடியதைக் கூறுகிறார்.
டாக்டர் நாதனிடம் அசோக்கை அனுப்புமாறு கூற, அவரும் அசோக்கிடம் வந்து அவனை உள்ளே அனுப்புகிறார். அசோக் புத்தகத்துடன் உள்ளே செல்ல முயல, நாதன் புத்தகத்தை தன்னிடம் கொடுத்துவிட்டு போகுமாறு கூறுகிறார். அசோக்கோ அதை டாக்டருக்காகவே எடுத்து வந்ததாகக் கூறி விட்டு டாக்டரிடம் செல்கிறான். அவருக்கு இந்தப் புத்தகத்தை அளிக்கிறான். டாக்டருக்கு ஒரே சந்தோஷம். “என்னமோ இது உங்களுக்கு தேவைப்படும்னு தோணித்து அதனால்தான் கொண்டு வந்தேன் என்றும் கூறுகிறான்.
பிறகு டாக்டர் அவனிடம் பிரச்சினை பற்றி கேட்க, தனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை எனத் தெளிவாகக் கூறுகிறான். அவன் தந்தை வேறுமாதிரியாகக் கூறுகிறாரே என டாக்டர் வினவ, அப்போ அது அவரது பிரச்சினை எனவும் சொல்கிறான். தூக்கம் எல்லாம் நன்றாக அசோக்குக்கு வருகிறதா என டாக்டர் கேட்க, அவர் எந்த நித்திரையை கேட்கிறார், யோக நித்திரையா என பதிலுக்கு கேட்கிறான். யோக நித்திரை என்பது விழிப்பு நிலைக்கும் மேற்பட்டது எனவும் கூறுகிறான். வெளியில் அவன் தந்தை உட்கார்ந்த வண்ணம் தூங்குவதை காட்டி அவர் தன்னை மறந்து தூங்குகிறார் என்றும் ஆனால் யோகநித்திரை என்பது விழிப்புடன் கூடிய தூக்கம், அது ஞானிகளுக்கு மட்டுமே சாத்தியம் எனக் கூறுகிறான்.
“இது என்ன சார், வெறுமனே தூக்கம்னு சொல்லிட்டு போகாம, என்னமோ யோக நித்திரைங்கறாங்களே” என்று நண்பர் அங்கலாய்க்கிறார். சோ அவர்கள் விழிப்பு நிலை, சொப்பன நிலை, சுஷுப்தி என்னும் ஆழ்ந்த தூக்கம், துரீயம் என்னும் யோக நித்திரை ஆகியவை பற்றி பேசுகிறார்.
பகுதி - 62 (30.04.2009):
“நீ சொல்வதைத்தான் நாங்கள் சப் கான்ஷியஸ் என்கிறோம்” என டாக்டர் கூற, “அது ஃப்ராய்டின் டெஃபினிஷன், ஆனால் தான் குறிப்பிடுவதோ சூப்பர் கான்ஷியஸ்” என அசோக் அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறான். ஆழ்மனம், சொப்பன நிலை, விழிப்பு நிலை என்று இருக்கின்றன. அவற்றுக்கும் மேலான தளத்தில்தான் யோக நித்திரை இருக்கிறது எனவும் அசோக் விளக்குகிறான். விலங்குக்கும் கடவுளுக்கும் இடையில் மனிதன் ஒரு பாலமே என்றும் அவன் கூறுகிறான். திக்குமுக்காடிப் போகும் டாக்டர், அசோக்கிடம் அவனது தந்தையை அனுப்புமாறு கூறுகிறார். அசோக்கும் வெளியே சென்று தந்தையை உள்ளே அனுப்புகிறான்.
உள்ளே வந்த நாதனிடம் டாக்டர் அவரது பிள்ளைக்கு ஒரு பிரச்சினையும் இல்லை எனக் கூற அவர் அதை நம்ப மறுக்கிறார். டாக்டர் தன்னை கிண்டல் செய்கிறாரோ என்ற தனது ஐயத்தையும் வெளிப்படையாக வைக்கிறார். டாக்டரோ தனக்கு தேவையான புத்தகத்தை சொல்லி வைத்தாற்போல அவன் ஏன் கொண்டு வர வேண்டும் என்று கேட்டு விட்டு, அசோக் ஒரு தெய்வக்குழந்தை என்றும், அவனுக்கு மருந்தெல்லாம் கொடுத்து துன்பப்படுத்த தான் விரும்பவில்லை எனக் கூறி நாதனை அனுப்புகிறார்.
வீட்டில் வசுமதி நாதன் சொன்னதைக் கேட்டு திகைக்கிறாள். நீகண்டனும் அப்பக்கம் வந்து சேருகிறார். அவரிடமும் நாதன் நடந்ததைக் கூற, “இது என்ன, பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காக மாறிப்போச்சே” என அவர் அங்கலாய்க்கிறார். சமையற்கார மாமியோ, “ஏன், குரங்கு பிடிக்கப் போய் பிள்ளையாரா மாறிப்போச்சுன்னு சொல்லலாமே” என கேட்க, நீலகண்டன் அவளிடம் கோபப்படுகிறார். இப்போது வசுமதி செகண்ட் ஒப்பீனியன் பற்றி கேட்கிறாள்.
“இப்போல்லாம் இது ரொம்ப காமனா போச்சு” என நண்பர் கூற, சோ அவர்கள் வைத்தியர் தனது மனசாட்சிப்படி நடந்து கொண்டால் பிரச்சினையில்லை. ஆனால் பல வைத்தியர்கள் வியாபார நோக்கத்தில் செயல்படுவது கவலையளிக்கிறது என கூறுகிறார். இது சம்பந்தமாக வடமொழியில் ஒரு சுலோகம் கூறுகிறார். அதன் பொருள்: “வைத்தியராஜரே வணக்கம்/நீங்கள் யமனது சகோதரர்/அவன் உயிரை மட்டும்தான் எடுப்பான்/நீங்களோ உயிருடன் சேர்த்து பணத்தையும் பறிக்கிறீர்கள்”.
அசோக்கும் கிரியும் பள்ளித் தோழர்கள். எதேச்சையாக தெருவில் சந்திக்கின்றனர். கிரி தனது தந்தை பிராமணர் இல்லாதபடியால் ஒரு பிராமண குடும்பத்தில் சம்பந்தம் வைத்து கொள்ள பிராமண குலத்தில் பிறந்த தனது தாயின் விருப்பம் நிறைவேறாது போனது குறித்து அசோக்கிடம் கூறுகிறான். தன்னையும் தன் அன்னை ஒரு பிராமணனாகவே வளர்த்திருப்பதையும் சொல்கிறான். அசோக் கிரியின் சார்பில் வேம்பு சாஸ்திரிகள் வீட்டுக்கு சென்று வாதிடுகிறான். கடைசியில் முத்தாய்ப்பாக ஒரு வாதத்தை முன்வைக்கிறான். அதாவது, வேம்பு அவர்கள் குலம் பார்த்து பிராமணன் ஒருவனுக்கு ஜெயந்தியை மணமுடித்து தந்தாலும், அவன் கெட்டவானகப் போனால் என்ன செய்வது? அதே சமயம் கிரி ரொம்பவும் நல்லவன். தெரியாத பிராமணன் ஒருவனை விட பிராமணனாகவே நடந்து கொள்ளும், இவர்கள் அறிந்த கிரி மேல் என அசோக் கூறுகிறான்.
திருச்சியில் நீலகண்டனும் பாகவதரின் மாட்டுப்பெண் ராஜியும் அவள் வீட்டை நோக்கி நடக்கின்றனர். அவர்கள் ஒரே வங்கியில் வேலை செய்பவர்கள். திருச்சியில் நடைபெற்ற வங்கி செமினார் ஒன்றில் இருவரும் சந்தித்திருக்கின்றனர். வீட்டில் பாகவதரின் மகன் சிவராமன் இருக்கிறார். நீலகண்டனை வரவேற்று உட்கார வைக்கிறார். தனது அலுவலகத்துக்கு நேரம் ஆகிவிட்டதால் அவர் செல்கிறார். நீலகண்டனும் ராஜியும் பேசுகின்றனர். அப்போது விசாரிக்கும்போது அவள் பாகவதரின் மருமகள் என்பதை அறிந்ததும் நீலகண்டன் பாகவதரை பற்றிய தனது எண்ணங்களை வெளிப்படையாகக் கூற, அப்பெண்மணியும் தனக்கும் தனது மாமனார் பற்றி அதே எண்ணமே எனக் கூறுகிறாள். பாகவதர் தனது பேரனை அச்சோக்கை கெடுத்தது போல கெடுக்கக் கூடும், ஆகவே அவர் பேரனை நெருங்காவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் எனக்கூறி விட்டு நீலகண்டன் விடைபெற்று செல்கிறார்.
பகுதி - 63 (01.05.2009):
பாகவதரின் பேரன் ராமசுப்புவின் ஹாஸ்டல் வார்டனிடம் பாகவதரின் மருமகள் ராஜி பேசுகிறாள். தனது பிள்ளையை விடுமுறை தினங்களில் ஹாஸ்டலை விட்டு வெளியில் போகலாகாது என அவள் வார்டனிடம் கூறுகிறாள். அதே போல பாகவதரையும் ஹாஸ்டல் பக்கம் வரவிடக்கூடாது எனவும் கேட்டு கொள்கிறாள். எல்லாவற்றையும் எழுத்து ரூபத்தில் அளித்து கணவன் மனைவி இருவருமே அதில் கையெழுத்திட வேண்டும் என வார்டன் கூறிவிடுகிறார்.
நாதன் வீட்டில் அந்த மனோதத்துவ நிபுணர் வந்து அசோக்கிடம் பகவத் கீதை உபதேசம் பெற்று கொள்கிறார். அசோக் கூறுகிறான், “மனிதன் தனக்குத் தானே நண்பனுமாகலாம், விரோதியும் ஆகலாம். பாதிக்கு மேல் மனிதர்கள் தமக்குத் தாமே விரோதிகள்தான் ஆகிறார்கள். பிறருக்கு கெடுதல் நினைப்பவன் தானே கெடுதலைத் தேடிக்கொண்டு தன்னையே விரோதிக்கிறான்”. கிருஷ்ணரை விட சிறந்த மனோதத்துவ நிபுணர் ஒருவர் இருக்கவியலாது எனவும், தான் வீட்டிற்கு போவதற்கு முன்னால் பகவத் கீதை ஒரு பிரதி வாங்கிப் போகப்போவதாகவும் கூறி விட்டு டாக்டர் விடை பெறுகிறார். நாதனுக்கும் வசுமதிக்கும் ஒன்றும் புரியவில்லை. வசுமதி இன்னொரு மனோதத்துவ நிபுணரிடம் போகலாமென ஆலோசனை தருகிறாள்.
கிருபா வீட்டில் சாம்புவும் வேம்புவும் கிரி ஜெயந்தி திருமணம் பற்றி பேசுகின்றனர். அசோக் வந்து, கிரிக்காகப் பேசியதை வேம்பு கூறுகிறார். சாம்பு தெளிவாகவே கூறுகிறார், கடைசி முடிவு வேம்பு குடும்பத்தினரின் கைகளில்தான் உண்டென. ஆகவே, திருமணத்தை நிச்சயம் செய்ய எண்ணினால் அது ஜெயந்தியின் நலனுக்கு உகந்ததாக இருப்பதுதான் முக்கியம் என கூறி, மீதியெல்லாம் இரண்டாம் பட்சமே என சொல்கிறார். வேம்புவும் இப்போது இறுதியாக ஜெயந்தி-கிரி திருமணத்துக்கு சாதகமான முடிவை தெரிவிக்கிறார்.
திருச்சியில் பாகவதரின் மருமகள் ராஜி வார்டனுக்கு தர வேண்டிய கடித்தத்தில் தன் கணவனின் கையெழுத்தையும் தானே போடுகிறாள். அதற்கு முன்னால் கடவுளிடம் மன்னிப்பு கேட்கிறாள்.
“அப்பெண்மணி செய்தது ஃபோர்ஜரி இல்லையா” என நண்பர் கேட்க, நல்லது செய்வதாக நினைத்து சிலர் இவ்வாறு செய்வது ஏற்கனவே நடந்துள்ளது எனக் கூறுகிறார். இதை சிவபெருமானே செய்துள்ளார் என்பதையும் பெரிய புராணத்தில் சுந்தரரின் வரலாற்றிலிருந்து மேற்கோள் காட்டிக் கூறுகிறார். ஆனால் பரமசிவன் செய்தது நிஜமாகவே சுந்தரரை தவறு செய்து விடாமல் தடுத்தாட்கொண்ட செயல் என்பதையும் கூறுகிறார்.
எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Manasa Book Club, Chennai.
-
Hi Sir, Hope you’re doing well. Manasa Publications has launched the
‘Manasa Book Club’ — a monthly gathering for readers and writers. The meet
will be on ...
12 hours ago

2 comments:
மொத்தம் 500 எபிசோடாம் :-(
100 அல்லது 120 என சோ அவர்கள் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார், இந்து பத்திரிகையில்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment