9/11/2009

குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டும் கம்பெனிகள்

சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு ஜோக் படித்திருக்கிறேன். வேலைக்கான நேர்காணல். அதற்கு வந்திருக்கும் நபர் தான் வேலை செய்த முந்தைய கம்பெனியில் தனக்கு கார், க்வார்டர்ஸ், ஓவர்டைம் அலவன்ஸ், மெடிசல் அலவன்ஸ், ஒரு ரூபாய்க்கு 5 நட்சத்திர ஹோட்டல் ரேஞ்சுக்கு கேண்டீன் சாப்பாடு, வருடத்துக்கு மூன்று மாதம் முழு சம்பளத்துடன் விடுமுறை என்றெல்லாம் கொடுத்ததாக கூறினார். அப்படிப்பட்ட கம்பெனியை விட்டு ஏன் இங்கு வருகிறார் என அவரிடம் கேட்க, அதற்கு அவர் “ஏனோ தெரியவில்லை, கம்பெனி திவாலாகி விட்டது” என்றாரே பார்க்கலாம்.

அப்போது நான் அதை ஜோக்காக பார்த்து, சிரித்துவிட்டுச் சென்றேன். ஆனால் நேற்று நான் இடைவெளிகள் வலைப்பூவில் “வேலை இல்லாமல் ஒரு வேலை” என்னும் பதிவை படித்ததும் அவ்வாறு சிரிக்கத் தோன்றவில்லை. அதில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. முதலில் அப்பதிவில் சில வரிகளைப் பார்ப்போம்.

“குஜராத்தில் ஒரு தனியார் நிறுவனமொன்றில் வேலைக்கு ஆள் எடுத்துவிட்டு அவருக்கு எந்த வேலை கொடுப்பது என்று தெரியாமல் தடுமாறி ஏதாவது ஒருமணி நேரம் பார்க்கும் அளவுக்கு ஒரு வேலையைத் தந்துவிட்டு மீதி நேரம் முழுவதும் அவர் அரட்டை அடித்தாலென்ன, இணையதளத்தில் புகுந்து மேய்ந்தாலென்ன நிர்வாகம் அதைப்பற்றி துளியளவும் கவலைப்படுவதில்லை. ஆறு மாதங்கள் வரை அவருக்கு எந்த கவலையுமின்றி ஊதியத்தை வாங்கிக்கொண்டு ஜாலியாக சுத்துவார்கள், அதன் பிறகுதான் அவருக்கு தலைவலியே ஆரம்பிக்கும்.

வேலை கொடுக்கப்படாமலேயே அவரது பெர்மாமென்ஸ் மேலதிகாரியால் சரிபார்க்கப்பட்டு இவர் லாயக்கில்லை என்று ஒரு முடிவுக்கு வந்து பிறகு கொடுத்த ஒருமணி நேர வேலையையும் தருவதில்லை. காலையில் அலுவலகம் வருவதும் மதியம் சாப்பிட்டுவிட்டு மாலை வீடு கிளம்பிப்போவதும் தான் அவரது வேலையாக இருக்கும். கிட்டத்தட்ட இருபது நாள் அல்லது ஒரு மாதம் வரை இதே நிலைதான். அதன்பிறகு அவரே மனசொடிந்து வேலையை ராஜினாமா செய்துவிட்டு கிளம்பி போய்விடுவார்.

மீண்டும் தினசரியில் வேலைக்கான விளம்பரம் வரத்தொடங்கும். சலித்துப்போன குஜராத்வாசிகள் ஒரு கட்டத்தில் அந்த கம்பெனிக்கு வேலைக்கு விண்ணப்பிப்பதே இல்லாமல் போக, புது டெக்னிக் கண்டுபிடித்தது நிர்வாகம். கம்பெனியில் நிறைய தமிழ்பேசும் ஆட்கள் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் வேலையை தேடிப்பிடித்து செய்வார்கள், இதை கருத்தில்கொண்டு தமிழ்நாட்டிலிருந்து ஆட்களை கொண்டு வந்து வேலைக்கு அமர்த்தலாம் என முடிவெடுத்து தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளிதழில் விளம்பரம் கொடுத்து குஜராத்துக்கு நேர்காணலுக்கு வர விமான டிக்கெட் எடுத்து கொடுத்து வரவழைத்தார்கள். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நல்ல ஊதியம், தங்குவதற்க்கு கெஸ்ட்ஹவுஸ், சமைத்துப்போட தனி ஆட்கள், கெஸ்ட்ஹவுஸ்சிலிருந்து அலுவலகம் வந்து போக கார், இருசக்கர வாகனம் என எல்லா வசதிகளையும் செய்து தந்தது அந்த நிறுவனம். ஆனால் அவர்களும் ஆறு மாதம் தாக்குப்பிடிக்கவில்லை காரணம் சரியான திட்டமிடுதல் இல்லாமல் வேலையில் பகிர்தல் இல்லாமல் வந்த வழியே திரும்பி போய்விட்டார்கள்.

அஸ்திவாரம் கட்டுவதற்கு முன்பு ஜன்னலுக்கு வர்ணம் பூசும் கொள்கை உடையவர்கள் இந்த நிறுவனத்தினர். விற்பனைத்துறையில் அடித்தள வேலையாட்களை தேர்வு செய்யாமல் உயர்ந்த பதவிக்கு ஆட்களை அதிக சம்பளத்துக்கு எடுத்துவிட்டு மேல் மட்டமாக வேலை செய்தால் விற்பனை எப்படி உயரும். லாபம் குறைந்துவிட்டால் உடனடியாக ஆட்குறைப்பு என்ற மந்திரத்தை ஏவி நாலைந்து விக்கெட்டுகளை வீழ்த்திவிடுவார்கள்.

இங்கு வேலைக்கு ஆள் எடுப்பதே ஒரு வேலையாக வைத்துக்கொண்டு காலம் கடத்துபவர்கள் உண்டு. ஒருபுறம் வேலைக்கு ஆள் எடுப்பதும் மறுபுறம் வேலையை ராஜினாமா செய்வதும் வாடிக்கையாகிப்போன ஒன்று. வேலையை விட்டு செல்லும் பொழுது யாருக்கும் எந்த மன வருத்தமும் இருப்பதில்லை.

ஒவ்வொரு உயர் அதிகாரிகளுக்கும் தனி கேபின், ஒவ்வொரு கேபினுக்கும் ஒரு பீயுண், ஒவ்வொரு துறைக்கும் ஒரு ஜெராக்ஸ் மெசின், அந்த ஜெராக்ஸ் மெசினிலிருந்து ஜெராக்ஸ் எடுத்து தர தனிப் பியூன் ஆக மொத்தம் பியூன்களின் எண்ணிக்கையே 35 க்கு மேல்.

இத்தனை வசதிகள் நிறைந்த கம்பெனியில் பணியில் அமர்ந்து நிறுவனத்துக்கு போட்டு கொடுக்கும் ஊழியர்கள் மட்டும் தொடர்ந்து பணியில் வேலை செய்யாமலேயே காலத்தை ஓட்டலாம். நிறுவனத்தின் முட்டாள்தனமான முடிவுகளுக்கு தலை ஆட்டினால் வேலை தொடரும், எதிர்த்து பதில் பேசினால் வேலை காலி.

இங்கு நிர்வாகத்துக்கு பிடிக்காத நபர்களுக்கு சம்பளத்தை குறைத்துவிட்டு இடமாற்றம் கொடுப்பார்கள். பொருளாதார சரிவின் காரணமாக அதையும் ஏற்றுக்கொண்டு வேலை செய்பவர்களும் உண்டு. அங்கிருந்து வேறு ஊருக்கு இடமாற்றம் சொல்லி மறுபடியும் சம்பளத்தை குறைத்து அனுப்ப முடிவு செய்வார்கள்.முடியாது என்று மறுத்தால் இங்கு வேலை இல்லை, வேண்டுமானால் நீங்களே ஒவ்வொரு துறைக்கும் சென்று எங்காவது வேலை இருக்கிறதா என்று பார்த்து நீங்களே என்ன வேலை இருக்கிறது என்று தெரிந்து கொண்டு வாருங்கள் என்று முட்டாள்தனமாக சொல்வார்கள்.

தொடர்ந்து 20 நாட்கள் எந்த வேலையும் தரப்படாமல் போகவே போங்கடா நீங்களும் உங்க வேலையும் என்று ராஜினாமா கடிதம் எழுதி தந்து விட்டு போய்விடவேண்டும். இதைத்தான் அவர்கள் எதிர்பார்ப்பது.

இவ்வளவும் எழுதியிருக்கிறீர்களே நீங்க எங்கே வேலை பார்க்கிறீர்கள் என்றுதானே கேட்கிறீர்கள்? மேலே சொன்ன நிறுவனத்தில்தான் நான் கடந்த இரண்டு வருடங்களாக வேலை பார்த்து வந்தேன். முதலில் 3000/= சம்பளம் குறைத்து ஜெய்ப்பூர்க்கு இடமாற்றம் பெற்று மறுபடியும் 6000/= குறைத்து பெங்களூர் செல்லச் சொன்னபோது வெகுண்டெழுந்து முடியாது என்று மறுக்கவே 20 நாட்கள் வேலை எதுவும் தராமல் இழுத்தடித்து அய்யோ ஆள விடுங்கடா சாமி என்று ராஜினாமா செய்துவிட்டு சொந்த ஊர் திரும்பியவன் வேறுயாருமல்ல சாட்சாத் நானே தான்.

என்ன கொடுமை சார் இது. எனக்கு வயது 42 இன்னமும் 25 வயது இளைஞனைப்போல் வேலை தேடிக்கொண்டிருக்கிறேன்”.


அதற்கு நான் இட்டப் பின்னூட்டம் இதோ.

இம்மாதிரி தனியார் துறையில் நிறுவனமா? அதுவும் குஜராத்திலா? ஆச்சரியமாக இருக்கிறதே.

சமீபத்தில் 1970-களில் திரையிடப்பட்ட “புன்னகை” படத்தில் ஜெமினி கணேசனுக்கு கிடைக்கும் முதல் வேலை நீங்கள் சொல்வது போலத்தான் இருந்தது. அவர் உடனே ராஜினாமா செய்து விட்டு போய் விடுவார்.

அதில் என்ன சொன்னார்கள் என்றால், வெறுமனே ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் இடத்தை வளைத்து போட வேண்டியது, பிறகு ஒரு தொழிலுக்கான லைசன்ஸையும் வாங்கி வைத்து கொள்ள வேண்டியது. பிறகு குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுவது, பிறகு வேறு யாருக்காவது கணிசமான தொகைக்கு அந்த இடத்தையும் லைசன்சையும் மாற்றுவது என்றுதான்.

ஆனால் இன்னுமா அம்மாதிரி கம்பெனிகள் உள்ளன? கம்பெனியின் பெயரையாவது எழுதுங்கள் ஐயா, புண்ணியமாகப் போகும். வேறு சிலராவது ஏமாறாமல் இருக்கலாம் அல்லவா?


வேலை இடமாற்றம் சரிதான், ஆனால் நீங்கள் சொல்வது போல சம்பளத்தை குறைக்க இயலாதே? அவ்வாறு செய்ய முயல்வது சட்ட விரோதம் ஆயிற்றே? மேலும் கம்பெனியே இடமாறுதல் உத்திரவு பிறப்பித்தால் அவ்வாறு மாறுவதற்கான எல்லா செலவுகளையும் வேறு அல்லவா ஏற்றுக் கொள்ள வேண்டும்?

பதிவர் இடைவெளிகள் இடத்தில் நான் இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன்? செய்திருப்பேன் என்ன, செய்திருக்கிறேனே?

முதலில் எனது இப்பதிவைப் பாருங்கள்.

வருடம் 1986. சற்றும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் எனக்கு கார்ப்பரேட் அலுவலகத்திலிருந்து பக்கத்து வளாகத்தில் இருந்த குர்கான் தொழிற்சாலைக்கு மாற்றம் வந்தது. அப்போது நான் உதவி மின் பொறியாளர் மற்றும் பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளராகப் பணி புரிந்து வந்தேன். அதே நேரத்தில் தொழிற்சாலையில் என்னுடைய ரேங்கிலேயே இன்னொரு உதவி மின்பொறியாளர் இருந்தார். ஆனால் என் சீனியாரிட்டி அவருடையதை விட அதிகம். ஆகவே அவர் என் கீழ் வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம்.

அதுவும் அது வரை நான் வெறும் மொழிபெயர்ப்பு வேலைகள்தான் பார்த்து வந்தேன். ஜெனெரேட்டருக்கான வேலைகளை துவக்கி, நடாத்தி, முடித்துக் கொடுத்தது ஒரு விதிவிலக்காகவே பார்க்கப்பட்டது. அது வேறு அவருக்கு கடுப்பு. எங்கள் மேலதிகாரியிடம் போய் தன் செல்வாக்கைப் பயன்படுத்தியிருக்கிறார்.

விளைவு நான் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்த உடனேயே என்னைத் தலைமையகத்தில் உள்ள விளக்குகள், மின் விசிறிகள் முதலியவற்றைப் பார்த்துக் கொள்ளுமாறும் நான் இருக்க வேண்டிய இடமும் அதுதான் என்றும் கூறி திருப்பி அனுப்பிவிட்டார்கள். சம்பளம் மட்டும் தொழிற்சாலை கொடுத்து விடும். இப்படியாக மின் பிரிவில் மிக அதிக சீனியாரிட்டி உள்ள நான் ஒரு சாதாரண மேற்பார்வையாளன் செய்யக் கூடிய வேலையைச் செய்ய வேண்டியதாயிற்று. நான் என்ன செய்தேன்? பேசாமல் திரும்பி வந்தேன். என்னுடைய பழைய மேஜை நாற்காலிகள் எனக்கு கொடுக்கப்பட்டன. உதவிக்கு ஒரு எலெக்ட்ரீஷியன், ஒரு ஹெல்பர் மட்டுமே. மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு நாள் வேலை பத்து நிமிடங்களில் முடிந்து விடும். சந்தோஷமாக மீதி நேரங்களில் என் வெளி மொழிபேயர்ப்பு வேலைகளைச் செய்ய ஆரம்பித்தேன். தில்லி முழுக்க எனக்கு வாடிக்கையாளர்கள். அவர்கள் கொடுக்கும் வேலைகளை ஹாய்யாகச் செய்து கொண்டிருந்தேன். நல்ல பிராக்டீஸ், நல்ல அனுபவமும் கூடக் கிடைத்தன. என்னைக் கண்காணிக்க வேண்டியவர்கள் தொழிற்சாலையில், நான் இருப்பதோ தலைமை அலுவலகத்தில். அங்கு இல்லையென்றால் தொழிற்சாலையில் இருப்பதாக இவர்கள் நினைத்துக் கொள்ள ஒரே தமாஷ்தான் போங்கள். இந்தக் கண்ணாமூச்சி 6 வருடம் நீடித்தது.

ஐ.டி.பி.எல் அப்போது தன் வீழ்ச்சியை நோக்கிப் போய்கொண்டிருந்தது. கைவசம் ஆர்டர்கள் ரொம்ப இல்லை. பலரும் வேலை நேரத்தில் பொழுதுபோகாமல் வம்பு பேசிக் கொண்டிருந்தனர். தன் இடத்தில் அமர்ந்து வம்பு பேசாமல் வேலை செய்பவர்கள் மிகச்சிலரே. அவர்களில் நானும் ஒருவனாக இனம் காணப்பட்டதுதான் பெரிய தமாஷ். எப்போதும் உட்கார்ந்து எதையோ பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டிருந்தது பலரை இம்ப்ரெஸ் செய்தது.

திடீரென 1990-ல் ஒரு பிரெஞ்சுக்காரர் ரிஷிகேஷில் உள்ள தொழிற்சாலைக்கு வந்து 21 நாட்கள் டேரா போட, அவருக்காக துபாஷி வேலை செய்தேன். என்னுடைய மொழிபெயர்ப்பு வேலைகளை விடாமல் செய்து வந்ததால் அந்த வேலையை இடது கை விளையாட்டாகச் செய்தேன். எங்கள் தலைமை நிர்வாகிக்கு ஒரே ஆச்சரியம். அவர் என்னிடம் "ராகவன், இங்கு கிட்டத்ததட்ட 8 வருடங்களாக பெரிய அளவில் பிரெஞ்சுவேலை எதுவும் வரவில்லை, இருப்பினும் நீங்கள் நேற்றுத்தான் விட்டது போல எப்படி சமாளித்தீர்கள்?" எனக்கேட்டார். அவரிடம் உண்மையையா கூற முடியும்? வேறு மாதிரி சமாளித்தேன். "ஐயா இது சைக்கிள் விடுவதைப் போலத்தான். பல ஆண்டுகள் சைக்கிளையே தொடாவிட்டாலும் பேலன்ஸ் செய்வது எப்படி மறந்துப் போகும்?"


மேலே சொன்னது போல கொட்டம் அடித்துக் கொண்டிருந்த நான் எழுதிய இந்தப் பதிவையும் பாருங்கள்.

எங்கள் மேனேஜருக்கு மட்டும் என் மேல சிறிது சம்சயம் என்று நினைக்கிறேன். வேறு ஒன்றும் இல்லை, நான் ஆஃபீசுக்கு வராமல் எங்காவது மட்டம் அடித்து விடுகிறேனா என்றுதான். ஆகவே தினமும் தான் காலையில் வேலைக்கு வந்ததும் என்னை இண்டர்காமில் கூப்பிட்டு ஏதாவது பேசி அறுப்பார். நானும் சமயம் கிடைத்தது என்று அவரைப் போட்டு எதிர்மரியாதையாக அறுத்து விடுவது உண்டு.

வருடம் 1987. எம்.ஜி.ஆர். அவர்களது இறுதிச் சடங்குகள் நடந்த தினத்தன்று ஐ.டி.பி.எல். கார்ப்பரேட் ஆஃபீஸில் திடீரென காலை 10 மணிக்கு அமைச்சகத்திலிருந்து வந்த தகவல்களின்படி விடுமுறை அறிவிக்கப்பட்டது. மொத்தம் 5 பஸ்கள் ஸ்டாஃபுகளுக்காக. அடுத்த 5 நிமிடத்தில் எல்லோரும் பஸ்களில் ஏறிக் கொள்ள, கட்டிடமே காலியானது. நான் மட்டும் என் சீட்டில் இருந்து கொண்டு எனது மொழிபெயர்ப்பு வேலைகளைத் தொடர்ந்தேன். அடுத்த நாளிலிருந்து நான் பத்து நாட்கள் லீவில் போகவிருந்தேன். ஆகவே கையில் இருக்கும் வேலையை முடிக்க வேண்டுமே என்ற அவசரம் வேறு.

எண்ணி ஐந்தாவது நிமிடம் இண்டர்காம் ஒலித்தது. எடுத்துப் பேசினால் மேனேஜர். அவர் நான் இன்னும் என்னிடத்தில் இருப்பதைப் பார்த்து வியப்படைந்தது போல இருந்தது. சாதாரணமாகப் பேசுவது போல நினைத்துக் கொண்டு என்னெனாவோ சம்பந்தம் இல்லாத கேள்விகள். பிறகு கார்ப்பரேட் ஆஃபீஸ் நிலவரம் பற்றிக் கேட்க எல்லோரும் வீட்டுக்குப் போய் விட்டதைக் கூறினேன். நான் ஏன் இன்னும் அங்கேயே இருக்கிறேன் என்பதை கடைசியில் கேட்க, பிளாண்டுக்கும் லீவா என்று "ஆச்சரியத்துடன்" நானும் கேட்டேன். சிறிது நேர மௌனம். அவருக்கு பின்னால் லாம்பா என்னும் ஆஃபீஸர் "ராகவன் போயிருக்க மாட்டான் என்று நான் கூறியது சரியாகப் போய் விட்டது பார்த்தீர்களா" என்று கேட்டது மேனேஜர் டெலிபோன் மவுத் பீசை சரியாக மூடாததால் எனக்குத் தெளிவாகக் கேட்டது.

"உங்களைப்போல் எத்தனைப் பேரை நான் பார்த்திருக்கிறேன்" என்று நான் நினைத்தேன், ஆனால் ஒன்றும் சொல்லவில்லை. இன்னும் சற்று நேரம் அறுத்து விட்டு, பேச்சை முடித்து கொண்டார் மேனேஜர். நானும் விறுவென்று மூட்டை கட்டிக் கொண்டு, கீழே வந்து, என் சைக்கிளில் ஏறி வீடு நோக்கி விரைந்தேன்.


நான் சொல்ல வருவது இதுதான். நிலைமையை எப்போதுமே நமக்கு சாதகமாக மாற்றிக் கொள்வது நல்லது. ஐ.டி.பி.எல்.-லில் வேலை செய்தபோது முதல் இரண்டாண்டுகளுக்கு மொழிபெயர்ப்பு வேலை நெட்டி முறித்த போதும் எனது மற்ற மொழிபெயர்ப்பு வேலைகளை வீட்டிலிருந்த போது செய்து முடித்தேன். ஐ.டி.பி.எல்.-ல் வேலையே இல்லை என்றபோதும் அதற்காக அசராமல் என் போக்கை மாற்றிக் கொள்ளவும் செய்தேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6 comments:

குப்பன்.யாஹூ said...

ன் மனதில் சமீப காலமாக ஒரு எண்ணம்.

ஒரு இணையத்தளம் அல்லது வலைபதிவு தொடங்கி அதில் இந்த மாதிரியான தவறாக மேலாண்மை செய்யும் நிறுவனகள் பெயரை பட்டியல் இட வேண்டும் என்று.

வேலை சேர தவிர்க்க வேண்டிய நிறுவனங்கள் என்ற பட்டியல்

, உள்நாட்டு நிறுவனகள் மட்டும் அல்ல குறிப்பகா மலசிய, துபாய் , அராபிய நாட்டில் உலா நிறுவனகள் பெயர் இதில் சேர்க்க வேண்டும்.

வரும் சந்ததியினர்க்கு இது மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

உதாரணம்:

ஸ்ரீராம் சித்,
துபாய் நீல்கமல் குரூப்
சௌதேர்ன் ரோஅட்வய்ஸ்.

வால்பையன் said...

உங்கள் அய்யன் மோடி இருக்கும் ஊரில் இப்படி ஒரு கம்பெனியா!?

சேம் சேம் பப்பி சேம்!

க. தங்கமணி பிரபு said...

இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.
நாம் செலவழிக்கப்போவது வெறும் 20 வினாடிகள்தான்!! தயவு செய்து

http://www.srilankacampaign.org/form.htm



அல்லது

http://www.srilankacampaign.org/takeaction.htm



என்கிற இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெய்ல் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெய்ல் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்!
அப்படியே இந்த புணிதச்செயலில் உங்கள் நண்பர்களையும் ஈடுபடுத்துங்கள்!! நன்றி!!

கிடியோன் said...

இதுல என்ன இருக்கு.
குஜராத்தில் மட்டுமா இப்படி மன்னார் & கம்பெனிகள் இருக்கின்றன. எல்லா இடங்களிலும் தான் இருக்கின்றது.

இவர்கள் போட்டி உலகில் தானாக அழிவார்கள்.

கலாட்டாப்பையன் said...

\\உங்கள் அய்யன் மோடி இருக்கும் ஊரில் இப்படி ஒரு கம்பெனியா!?

சேம் சேம் பப்பி சேம்!//

மோடி இருப்பதால்தான் அப்படி ஒரு கம்பெனி.....

மங்களூர் சிவா said...

/
நிலைமையை எப்போதுமே நமக்கு சாதகமாக மாற்றிக் கொள்வது நல்லது.
/

well said sir.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது