கேள்விகள் கேட்போருக்கு வழக்கமான ஒரு வேண்டுகோள். சில சமயம் எங்காவது இணையத்தில் படித்ததை ஆதாரமாக வைத்து கொண்டு கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதில் தவறில்லை. ஆனால் அப்படியே தமது கேள்விகளின் பின்புலனையும் கூறினால் சௌகரியமாக இருக்கும். நானே கூகளிட்டு பார்ப்பதுண்டு என்பது நிஜமே. ஆயினும் அந்த சுட்டி ரெடியாக கிடைத்தால் அதை தேடும் நேரம் விரயமாகாமல் பதிலில் இன்னும் அதிக முனைப்பாக இருக்கலாம் அல்லவா?
ராஜன்1. பரிசுகளை வென்றுள்ள திரைப்படங்களில் 98 சதவிகித திரைப்படங்களின் டிவி ரைட்ஸ்கள் கலைஞர் டிவியிடம்தான் உள்ளனவாம். திரைப்படங்களை மிகக் குறைந்த விலைக்கு வாங்கியதால் அவர்களுக்கு பரிவு காட்டும் பொருட்டு இந்த ஏற்பாடு?பதில்: கேள்விலேயே பதில் தொக்கி நிற்கிறதே. ஆமாம் உளியின் ஓசையின் கதை என்ன? அதை யார் துணிந்து வாங்கினார்கள்? சன் குழுமம்?
2. யாருக்காக யாரால் ஆட்சி செய்யப்படுகிறது?பதில்: முதல்வர்தம் மக்களால் அவர்தம் மக்களால் நடத்தப்படுகிறது அவரது மக்கள் ஆட்சி.
3. ஜீ தமிழ்த் தொலைக்காட்சியும், சன் தொலைக்காட்சியும் ஒரே நாளில் அரை மணி நேர வித்தியாசத்தில் 'சுப்பிரமணியபுரம்' திரைப்படத்தை ஒளிபரப்பியதில் இருக்கும் மர்மம்?பதில்: உண்மைத் தமிழனின்
இப்பதிவைப் பார்க்கவும்.
4. 'பூ' பார்வதியையும், 'பொம்மலாட்டம்' ருக்மணியையும் தாண்டி த்ரிஷாவுக்கா?பதில்:
கிளாமராய நமஹ5. கமலஹாசனின் 50 ஆண்டு திரையுலக வாழ்க்கை?பதில்: பிரமிக்க வைக்கிறது.
அனானி (06.10.2009 மாலை 05.2-க்கு கேட்டவர்)1. DMK leader Mr.Karunanithi has donated his Gopalapuram house for the use of hospital for the treatment of poor people. His sons have given their consent for this. What is your comment for this?பதில்: காரணங்கள் எதுவாக இருப்பினும் கலைஞரின் இந்த சமிக்ஞை வரவேற்புக்கு உரியதே.
2. Is Saratkumar going to the dmk fold once again?பதில்: சரத்துக்கு வேறு போக்கிடம்தான் ஏது?
நான் நினைக்கிறேன், ஒரு நேரத்தில் ஒரு நடிகர் மட்டுமே தமிழக அரசியலில் பிரகாசிக்க முடியும். எம்ஜிஆர் இருக்க சிவாஜி, பாக்கியராஜ், டி. ராஜேந்தர் ஆகியோர் பிசுபிசுத்து போனார்கள். அதே போல விஜயகாந்த் ஒரு மாதிரி முன்னேற கார்த்திக், சரத் ஆகியோர் அடிபடுகின்றனர். எஸ். வி சேகர் கூட இதை நினைத்து யோசிக்க வேண்டியுள்ளது.
3. Will ramadoss join with dmk again?பதில்: 2011-க்குள் என்னென்னவோ நடக்கலாமே. இப்பவே ஏன் மண்டையை உடைத்துக் கொண்டு யோசிக்க வேண்டும்?
4. Why is Jeyalaitha doing all the damage the admk?பதில்: தெரியவில்லையே. விநாசகாலே விபரீத புத்தி.
5.it seems the tamil nadu will be ruled by dmk for ever. is it true? (based on state govt employees'100 %support, huge money power, huge cadre power, free schems, free medical help to poor, strong allainace,weak admk) பதில்: அரசியலில் எதுவும் நடக்கலாம். விஜயகாந்தை குறைத்து மதிப்பிடலாகாது. தமிழக வாக்காளர்களையும் குறைத்து மதிப்பிடலாகாது. திடீரென ஜனாதிபதி ஆட்சி தேர்தல் நேரத்தில் வந்தால், தேர்தலில் கண்டிப்பான செயல்பாடுகள் வந்தால், பணபலம் பிரயோசனப்படாது.
கந்தசாமி1. கந்து வட்டி பிசினஸ்காரர்கள், பதுக்கல் வியாபாரம் செய்பவர்கள், அடுத்தவர் சொத்தை அபகரிக்கும் எத்தர்கள், அரசுக்கு வரிகட்டாமல் ஏய்ப்பு செய்யும் களவாணிகள், வாங்கும் சமபளத்திற்கு நியாயமாய் வேலை செய்யாமல் லஞ்சம் வாங்கும் கபோதிகள், நியாயமற்ற அரசியல்வாதிகள், இவர்களில் ஒரு பகுதியினர் திருப்பதி வெங்கடாசலபதியை பார்ட்னராய் பாவித்து வரும் கொள்ளையில் ஒரு பகுதியை கோவில் உண்டியலில் போடும் செயல் பற்றி உங்கள் கமெண்ட்?பதில்: இந்த வழிமுறை ஆண்டாண்டுகாலமாக நடந்து வருவதுதானே. இதில் புதிது ஒன்றும் இல்லையே. தனது திருட்டில் பாதியை நாணயமாக உண்டியலில் போடும் திருடனின் கதை மதனகாமராஜன் காலத்திலிருந்தே இருந்து வருகிறதே.
2. இது மாதிரி நம் மாநிலத்தில் நடை பெறும் ஒரு செயலாய் எதை சொல்வீர்கள்? (அரசியல் சம்பந்தப்பட்டது)பதில்: இலவச டிவி, இலவச வாயு இணைப்புகள் ஆகியவை என்னவாம்?
3. இலவசம் கொடுத்து இளிச்சவாயராய் ஆக்கும் போக்கு பற்றி?பதில்: உங்கள் முதல் கேள்வியில் கூறிய உதாரணங்களே.
4. உலகவெப்பமயமாதலின் இயற்கையின் கோபம்தான் ஆந்திர கர்நாடக வெள்ளமா?பதில்: அப்படித்தான் என்று பல சீரியஸ் விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர். அதே சமயம் கோபம் என்றெல்லாம் நான் கூற மாட்டேன். எதிர்வினை என்றுவேண்டுமானால் கூறலாம். எதற்கும்
பாலாவின் பதிவைப் பாருங்கள்.
5. ஒரு கிலோ அரிசி ரூபாய் 100 ஆந்திராவில், இனி? பதில்: ஆந்திராவில் துவரம் பருப்பு என்ன விலை ஒரு கிலோவுக்கு?
எம். அருணாச்சலம்1. நடிகை புவனேஸ்வரியின் செயலுக்கும், மருத்துவரின் அரசியல் flip-flop க்கும் ஏதாவது வேறுபாடு காண்கிறீர்களா?பதில்: புவனேஸ்வரிக்கும் மருத்துவருக்கும் என்ன சம்பந்தம்?
2. நடிகர் வடிவேலுவின் விஜயகாந்துக்கு எதிரான வீராப்பு பேச்சும், பின்பு தேர்தல் சமயத்தில் அதே வடிவேலு பேச்சுமூச்சே இல்லாமல் போனதற்கும், திருமா, குருமா போன்றவர்களின் இலங்கை வீராப்பு பேச்சுகள் சமயம் வரும்போது (தேர்தல் சமயம்) சத்தமின்றி மறந்து போய் அதுவரை எதிர்த்து வந்த காங்கிரஸ் கட்சியுடனேயே கூட்டு வைப்பதற்கும் ஏதாவது வேறுபாடு காண்கிறீர்களா?பதில்: அது பற்றிக் கூறவேண்டுமானால் பின்புலனில் நடந்த பேரங்கள், கொடுக்கல் வாங்கல்கள் ஆகியவை என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும். அவை எனக்குத் தெரியாதே.
அனானி (08.10.2009 காலை 10.52-க்கு கேட்டவர்)1. நோபல் பரிசுக்கு தெரிவாகியுள்ள, சிதம்பரத்தில் பிறந்த, அமெரிக்கர், இங்கிலாந்தில் வசிப்பவர், டாக்டர்.வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் - பிராமணர் என்ற ஒரே காரணத்திற்காக தமிழக அரசியல் வட்டாரத்தில் கொண்டாடப்படவில்லையே? என்ன கொடுமை சார் இது?பதில்: அவர் என்ன சாதி என்று தெரியவில்லை. ஆனால் பிராமணராக இருக்கும் வாய்ப்பு அதிகமே. ஆகவே அதனால் மட்டுமே தமிழக அரசு அவரைக் கண்டு கொள்ளவில்லையென்றால் நஷ்டம் அவருக்கல்ல. அவர் எப்போதோ தமிழகத்தின் சுழற்சியை விட்டுப் போய்விட்டார்.
சவகிருஷ்ணா1. புவனேசுவரி வழக்கில் தினமலர் ஆசிரியர் கைது செய்யபட்டது சரிதானே ஏன் ரமேசை கைது செய்யவில்லை பதில்: முக்கியமாக பத்திரிகைகளுக்கு லீக் செய்த போலீசாரைத்தான் கண்டிக்க வேண்டும். SITA சட்டத்தின் அக்கிரமங்களை சாடவேண்டும். நடிகை புவனேஸ்வரியை போலீசார்களே போலி வாடிக்கையாளரை ஏற்பாடு செய்து அவரை வரவழைத்து பிடித்த நிகழ்ச்சி முதல் பார்வையிலேயே provocation policière என அறிய முடிகிறது. இப்போது பத்திரிகைகளுக்கும் அவ்வாறு செய்தி தந்த போலீசார்தான் முதல் குற்றவாளி.
எம். கண்ணன்1. மது அருந்தும்போது அதை நல்ல கோப்பையில் ஊற்றி அதில் ஐஸ் கட்டியோ, சோடாவோ, லெமனேட், கோலா, தக்காளி சாறு என கலந்து அரைக் கப்பை அரை மணிநேரம் உறிஞ்சியபடி, வறுத்த முந்திரிகளையோ, நல்ல உருளை சிப்ஸ் அல்லது கடலை/வெங்காய மிக்ஸ் என நண்பர்களுடன் அளவளாவியபடி எஞ்சாய் செய்யாமல் டாஸ்மாக்கில் பல்வேறுவித மணங்கள், வாந்தி மற்றும் இன்னபிற சமாச்சாரங்களுடன் கல்ப் அடிப்பதில் என்ன சுகம் கிடைக்கப்போகிறது ? ஃபைவ் ஸ்டார் பார் எல்லாம் வேண்டாம். ஏன் தமிழக அரசு டாஸ்மாக்கை கள்ளுக்கடை சாராயக்கடை ரேஞ்சுக்கே வைத்திருக்கிறது ? (ஒருவித குடோன் போல)பதில்: இதற்கான பதிலைக் கூற வேண்டியவர் வால்பையனே. ரோசா மற்றும் ஜ்யோவ்ராம் சுந்தரைக் கூட கேட்களாம். ஆனால் வெறும் தம்ஸ் அப்புக்கு ஃபிளாட் ஆகும் முக்கிய மடிப்பாக்கம் பதிவர் இதற்கான விடையைக் கூறுவாரா எனத் தெரியவில்லை.
2. டில்லியிலும் சரி சென்னையிலும் சரி மத்திய/மாநில அரசுப் பணிகளில் இருப்போர் வெளியூர் செல்லும்போது அந்த அந்த ஊர் அரசு அதிகாரிகளை ரூம் புக் பண்ணி, கார் புக் பண்ணி என ஒருவிதமாக வேலை வாங்கிக்கொள்கிறார்களே? இவர்கள் பண்ணும் அலம்பல் (அதைக் கொண்டா, இதைக் கொண்டா என) ஜாஸ்தியாக இருக்கிறதே ? மேலும் இவர்கள் மக்கள் பணத்தில் தானே 2 அல்லது 3 கார், ஜீப் என எல்லாவற்றிற்கும் உபயோகிக்கிறார்கள்?பதில்: இதெல்லாம் காலத்தின் கட்டாயம். இல்லாவிட்டால் ரிப்போர்ட் நல்லபடியாக இருக்காது. உதாரணத்துக்கு மிக யோக்கியமான ஆய்வு அதிகாரி வந்து தனக்குரிய படிகளுக்குள் தங்கி செலவு செய்து காலணாவுக்குக் கூட ஓசி பெறாது உண்மையான அட்வெர்ஸ் ரிப்போர்ட் தருபவர்கள் மகாத்மாக்கள் என போற்றப்படுவார்களா? ஏண்டா போயும் போயும் இந்த யோக்கிய மொட்டை நாய் நம்ம இன்ஸ்பெக்ஷனுக்கு வந்தான் என்றுதானே நொந்து கொள்வார்கள் கீழ்மட்ட அதிகாரிகள்?
3. தினமலர் செய்தி ஆசிரியர் லெனின் கைதுக்குப் பிறகு அனைத்து நாளிதழ், வார இதழ்களும் சுதாரிக்குமா? விவேக்கின் பேச்சு ஓவராகத் தெரிகிறதே?பத்திரிகைகளும் சரி நடிக நடிகையரும் சரி ஒருவரைச் சார்ந்து மற்றவர்கள் இருப்பதுதான் நிஜம். நடிகர்கள்/நடிகைகள் மிகவும் உணர்ச்சிப்படுபவர்கள். சிலருக்கு அம்மாதிரி தருணங்களில் ஓவரா சீன் காட்டுவது வழக்கமே.
4. விஜய் டிவியில் கோபிநாத் நடத்திய 'உங்களில் ஒருவன் உலகநாயகன்' நிகழ்ச்சியில் கமல்ஹாசன் 'பார்ப்பண மகளிர் - ஷாப்டாச்சா என்றெல்லாம் பேசி தமிழை கொலைசெய்கின்றனர். அதை கேலிசெய்துதான் தான் சில தமிழ் சம்பந்தப்பட்ட கேலிகளை படத்தில் வைத்ததாகவும் சொன்னார். எந்த பார்ப்பண மகளிர் தற்போதெல்லாம் 'ஷாப்டாச்சா' என்று பேசுகின்றனர் ? கமல் பழகிய பார்ப்பன மகளிர் 20- 25 ஆண்டுகள் முந்தைய பார்ப்பன மகளிராக இருக்கலாம். இவரின் 'ஹே ராம்' படத்தில் இந்தி ட்ரீம் கேர்ள் ஹேமமாலினி இதே 'ஷாப்டாச்சா' வசனத்தை எப்படி பேசினார்? அவருக்கு இயக்குனராக சொல்லிக் கொடுத்தது யார்?பதில்: கமலஹாசன் ஒரு கலை வியாபாரி. நல்ல சரக்கைத் தருகிறார். அது போதுமே. அவரது தனிப்பட்ட கருத்துகள் அவருடையவை.
5. அதென்ன பார்ப்பண மகளிர்? தற்போது பார்ப்பனர் அல்லாத இளைஞிகளும் சிவா என்பதை ஷிவா எனவும் சக்தி என்பதை ஷக்தி எனவும் தானே உச்சரிக்கின்றனர். (அலைபாயுதே முதல் ஆரம்பித்த பழக்கம்)பதில்: சிவா என்பதற்கு சரியான வடமொழி உச்சரிப்பு ச-வுக்கும் ஷ-வுக்கும் இடையில் இருக்கும். அதற்கான எழுத்துரு தமிழில் வேண்டுமானால் ஸ்லோக புத்தகங்களில்தான் தேட வேண்டும். மேலும் அவை கிரந்த எழுத்துக்களே.
6. கர்நாடகம் - ஆந்திரம் வெள்ள சேதத்திற்குப் பிறகு நதி நீர் இணைப்பு முயற்சிகள் வலுப்பெறுமா? இல்லை எதிர்ப்பு வலுக்குமா? இந்த அளவிற்கு சேதமடைய நேர்ந்ததற்கு ஆந்திராவில் முதல்வர் ரோசைய்யாவின் கட்டளைகளைக் கேட்டு நடக்க விருப்பமில்லாத அதிகாரிகள்/அமைச்சர்களும் காரணமா?பதில்: வெள்ளம் பாட்டுக்கு வரும், போகும். அவற்றால் எல்லாம் நதிநீர் இணைப்பு வரும் என நான் நம்பவில்லை. நாட்கள் ஆக ஆக அதற்கான சாத்தியக் கூறுகள் குறைந்துதான் வருகின்றன. மற்றப்படி ரோசையாவின் வார்த்தைகளை அதிகாரிகள் கேட்கவில்லை என்பது எனக்கு புதிய செய்தி.
ஆந்திராவில் வெள்ளம் பற்றி நம்ம என்றென்றும் அன்புடைய பாலா
பதிவு போட்டுள்ளார். படியுங்கள், சுவாரசியமாக இருக்கிறது.
7. ஜெ. நாளை சென்னை வருகிறாராமே? மழை பெய்யுமா?பதில்: வந்தால் மட்டும் போதாது. உளறவும் வேண்டும். அப்போதுதானே நல்லார் ஒருவர் உளறேல் எல்லோர்க்கும் பெய்யெனப் பெய்யும் மழை என்ற வாக்கு பலிக்கும். ஆனால் அதற்கு முதலில் அவர் நல்லாராக இருக்க வேண்டுமே என்கிறீரா? சரி, சரி.
8. பொக்ரான் அணுகுண்டு சோதனை ஃபெயிலியர் என விஞ்ஞானி சந்தானம் சொல்லுகிறாரே ? ஏன் இத்தனை வருடம் கழித்து? அதை மறுக்கும் அரசு மற்றும் கலாம் கூறும் பதில்கள் ஆணித்தரமாக இல்லையே?பதில்: சந்தானத்தின் மோட்டிவேஷன் புரியவில்லை. இருப்பினும் நமது குழப்பங்களை அம்மாதிரி வெளிச்சத்தில் காட்டுவது துரதிர்ஷ்டவசமானது.
9. பாமக மூன்றாவது அணி என்கிறதே? அடுத்த தேர்தலில் திமுக, அதிமுக இருவரும் பாமகவை சேர்த்துக் கொள்ளாவிட்டால் மருத்துவர் ஐயா என்ன செய்வார்?பதில்: அதனால்தான் மூன்றாம் அணி என்கிறாரோ அவர்.
10. விஜய் டிவி புதிது புதிதாக நிகழ்ச்சிகளை வைத்தாலும், தாம்பரம் தாண்டி (அதாவது பெருநகரங்களைத் தவிர) அதன் ரீச் இல்லையாமே? ஆனாலும் க்ரியேடிவிடி என்பதைவிட - வெளிநாட்டு டிவி நிகழ்ச்சிகளை ஸ்டார் டிவி இந்தியில் காப்பி அடிக்க, அதை அப்படியே தமிழ்ப் படுத்துகிறது விஜய். இதைப் பார்த்து சன், கலைஞர் மற்ற டிவிக்கள் காப்பி அடிக்கிறது. டி.ஆர்.பி.யில் வெற்றி பெற ஒரிஜினலாக நிகழ்ச்சியே தயாரிக்க முடியாதா?பதில்: அப்படியே கிரியேட்டிவிடி வைத்தால் மட்டும் என்ன ஆகிவிடுமாம்? கலைஞர் டிவி நோகாமல் அதையும் நகல் செய்யப் போகிறது. ஆகவே இதற்கென ஒரு கான்சப்டை ஏன் மெனக்கெட்டு யோசித்து வைத்துக் கொள்ள வேண்டும்?
எம். அருணாச்சலம்1. இன்னும் ஏன் "தமிழக மனித உரிமை கழகம்" நடிகைகளின் மானம் காக்க களத்தில் குதிக்கவில்லை?பதில்: யார் அவர்கள்?
2. கூடவே, "பெண் உரிமை சங்கமோ அல்லது கழகமோ" ஒன்று உள்ளதே, அதுவும் சேர்ந்து கோதாவில் குதித்தால், "சபாஷ், சரியான போட்டி" என்று சொல்ல இயலுமா?பதில்: ஆக, இதெல்லாம் தமாஷ்தான் மச்சி என்கிறீர்கள்!
3. Do you think Immoral Traffic Act provides for the arrest of gigolos also for indulging or soliciting in immoral acts? If so, do you think any present day "actors" will be a prime suspect for the TN police?பதில்: ஆண்விபசாரிகளும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே. இந்த SITA சட்டம் புகுந்து பார்த்தால் பல முன்முடிவுகளை வைத்துள்ளது. ஊசி வழிவிடாது நூல் வரமுடியாது என்னும் தோரணையில் சிந்திக்கிறது. சட்டத்தின் நோக்கம் குழப்பமாக உள்ளது. உடல் உறவு குற்றமில்லை, ஆனால் அதற்காக ஆசைகாட்டி வரவழைப்பது குற்றம் என்கிறது. மற்றவரை அதில் ஈடுபடுத்தி பணம் சம்பாதிப்பது குற்றம் என்கிறது. எல்லாமாக சேர்ந்து இச்செயலில் ஈடுபடும் ஒரு சாராரை மட்டும் தண்டிக்கிறது.
அனானி (32 கேள்விகள் கேட்பவர்)1. தினமலர் நாளிதழின் செய்தி ஆசிரியர் லெனினை, போலீசார் கைது செய்ததற்கு தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு. தானும் ஒரு பத்திரிக்கையாளர் எனச் சொல்லி பெருமைப்படும் கலைஞரின் அடுத்த மூவ்?பதில்: தான் திரைத்துறையிலும் இருப்பதாகவும் கூறிக்கொள்கிறாரே?
2. முல்லைப் பெரியாறில் புதிய அணை விவகாரத்தில் ஜெ-யின் சப்போர்ட் கலைஞருக்கு,இது எப்படி இருக்கு?பதில்: மாநிலத்தின் நலன் என வரும்போது அவ்வாறு இணைவது நல்லதே. இப்பவாவது புத்தி வந்ததே.
3. தீவிரவாதம் மற்றும் தீவிரவாதிகளை ஒழிக்க ராணுவ உதவி என்கிற பெயரில் அமெரிக்கா அளித்த கோடிக்கணக்கான பணத்தை பாகிஸ்தான் மிஸ்யூஸ் பண்ணியது கண்டு இனி அமெரிக்கா என்ன செய்ய்யும்?பதில்: இத்தனை நாள் தெரியாமலா இருந்திருக்கும்? என்ன், இப்போது அவர்களுக்கும் தெரியும் என்பது மற்றவருக்கும் தெரிந்து விட்டது, அவ்வளவே.
4. காந்தியின் விடுதலை இயக்கம், பெரியாரின் தன்மான இயக்கம், அண்ணாவின் தமிழியக்கம், ஜெயப்பிரகாஷ் நாராயணனின் எதேச்சாதிகார எதிர்ப்பு இயக்கம், லோகியா, கிருபளானிகளின் சோஷலிச இயக்கம் பற்றி?பதில்: காலத்தின் கட்டாயங்கள். ஆனால் அவற்றில் பெரியாரின் தன்மான இயக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட சாதியாரை அளவுகடந்த முறையில் அவமரியாதை செய்வதாக ஆகிப்போனது கோமாளித்தனமே. அவரை சீரியசாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.
5. இலங்கை அகதிகளுக்கு இந்தியாவில் நிரந்தர குடியுரிமை:திமுகவின் ஆதரவு பற்றி?பதில்: போகாத ஊருக்கு வழியாகத்தான் எனக்குப் படுகிறது..
6. இலங்கை அகதிகளுக்கு இந்தியாவில் நிரந்தர குடியுரிமை:ஜெ-யின் எதிர்ப்பு?பதில்: ஜெ அவர்களின் ஆட்சேபணை ஏற்கக் கூடிய்தே.
7. தமிழ்குடிதாங்கிகளின் நிலை இதில்?பதில்: அவர்களோ இடிதாங்கிய நிலையில் பதவி சுகம் இன்றி அவதிப்படுகின்றனர். அவர்களது நிலை பற்றி இங்கே என்ன வந்தது?
8. காங்கிரசுடன் உறவில் சிக்கல் வருமா திமுகவுக்கு?பதில்: பண/அதிகார பங்கீட்டில் சிக்கல் வந்தால் வரும்.
9. அமைச்சர் சிதம்பரம் இந்த விசயத்தில்?பதில்: அவர் என்ன ஸ்பெஷல் இதில்?
10. பொருளாதாரச் சரிவு, வேலைவாய்ப்பின்மை, சாமானியனுக்கு மருத்துவக் காப்பீடு கிடைப்பதில் கூடச் சிரமம் எனச் சொல்லப்பட்ட அமெரிக்காவின் இன்றைய நிலை?பதில்: ஒன்றும் மாறுதல்கள் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.
11. அமெரிக்காவின் பணக்காரர்கள் பாடு இப்போது எப்படி?பதில்: எல்லா பிரச்சினைகளையும் மீறி, கடனின்றி நல்ல நிலைமையில் ஒருவன் தேவையான பணத்துடன் இருந்தால்தான் அவன் பணக்காரன் எனக் கருதப்படுவான். இது எங்குமே பொருந்தும். அதன்றி கடன் தொல்லைகளால் பீடிக்கப்பட்டு அதே சமயம் பந்தா காட்டுபவன் பணக்காரனாக இருக்க முடியாது. அதுதான் பணக்காரர்கள் என அழைக்கப்படும் இப்போதைய பணக்கார அமெரிக்கர்களது நிலை. அவர்கள் ஒரு பெரிய ரோல்லர் கோஸ்டரில் பயணம் செய்கின்றனர். பாவம் அவர்கள்.
12. முல்லைப்பெரியாறு விவகாரம்: மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் வழக்கு. இது காலம் கடந்த ஒன்றா?பதில்: இப்போதைக்கு அப்படித்தான் தோன்றுகிறது. தனது குடும்பத்தினருக்கு மட்டும் அமைச்சகப் பதவிகள் கேட்டு காவடி எடுக்கும் முயற்சிகளை இதிலெல்லாம் கலைஞர் காட்ட மாட்டார்.
13. இந்த விசயத்தில் கலைஞரின் அடுத்த கடிதம் என்ன சொல்லும்?பதில்: கண்ணீர் விடும் தமாஷாகத்தான் இருக்கும். நமக்கும் சிரித்து சிரித்து கண்ணீர் வரும்.
14. மத்திய அரசுக்கு எப்போதும் கேரளா மேல் ஒரு எக்ஸ்ட்ரா பாசம்? ஏன்?பதில்: அம்மாநிலத்தில் காங்கிரஸ் பதவிக்கு வரும் வாய்ப்பு உண்டு, தமிழகத்தில் வாய்ப்பு லேது. அவ்வளவுதான் விஷயம்.
15. ஹோகனேக்கல் தண்ணிர் வருமா வராதா?பதில்: மழை பெய்தால் வரலாம், வானத்திலிருந்து.
16. தளபதி துணைமுதல்வர்-மாவீரன் அண்ணன் மத்திய இரசாயன அமைச்சர்- 3 மாத செயல் பாடு -ஒரு ஒப்பீடு?பதில்: அழகிரி சந்தோஷமாக இல்லை. குறுநில மன்னர் பேரரசன் அவையில் துணையின்றி இருப்பதாக உணருவது போல அவர் தில்லியில் உணர்கிறார் என நினைக்கிறேன்.
17. புவனேஸ்வரி பேட்டி பற்றிய கசமுசா பற்றி உங்கள் விமர்சனம்?பதில்: நடிகை புவனேஸ்வரியை போலீசார்களே போலி வாடிக்கையாளரை ஏற்பாடு செய்து அவரை வரவழைத்து பிடித்த நிகழ்ச்சி முதல் பார்வையிலேயே
provocation policière என அறிய முடிகிறது. முதலும் கோணல் முற்றும் கோணல்.
18. ரஜினிகூட?பதில்: ஏன் அவர் மட்டும் என்ன ஸ்பெஷல்?
19. இந்த விசயத்தில் தினகரன் சம்பந்தப்பட்டிருந்தால் தலைவர் என்ன செய்திருப்பார்?பதில்: மாறன் சகோதரர்களுடன் அவருக்கு இருக்கக்கூடிய உறவுதான் அதை தீர்மானிக்கும். இப்போதைக்கு நல்லபடியாக இருப்பதால் தலைவர் அடக்கி வாசித்திருப்பார்.
20. நடிகர் சங்கம் இந்த அளவுக்கு பெரிது பண்ணியிருக்குமா?பதில்: இந்தளவுக்கு பண்ணியிருக்காது என்றுதான் நினைக்கிறேன். மேலும் அது பார்ப்பனர்களால் நடத்தப்படும் பத்திரிகை இல்லையே?
21. பொதுவாய் நடிகை என்றாலே ஏன் இப்படி கிசு கிசு?பதில்: சம்பந்தப்பட்ட நடிகையின் துயரம் அறியாத வக்கிரம் பிடித்தவர்களுக்கு நடிகை என்றாலே கிசுகிசுதான்.
22. உங்கள் அனுபவத்தில் இது மாதிரி காயப்படாத இந்தி நடிகைகள் யார் யார்?பதில்: காயப்பட்ட நடிகைகளா? காயப்படாத நடிகைகளா? கேள்வி புரியவில்லையே? மேலும் நான் தில்லியில் வசித்தபோது பாலிவுட் பற்றிய கிசுகிசு பத்திரிகைகள் எல்லாம் படித்ததில்லை. (உதாரணம் ஸ்டார்டஸ்ட்).
23.தமிழ் நடிகைகள்?பதில்: முந்தைய கேள்வியின் குழப்பம் இங்கும் தொடர்கிறது.
24. ஆந்திர, கர்நாடக வெள்ளச்சேதம் உலக வெப்பமயமாதலின் எச்சரிக்கையா?பதில்: அது ஒரு புறம் இருக்க, சம்பந்தப்பட்ட மாநிலங்களில் நடந்த பல முன்நிகழ்ச்சிகள் காரணமாக அமைந்து விட்டன. என்றென்றும் அன்புடன் பாலாவின்
இப்பதிவை மறுபடியும் நான் இங்கு சுட்டுகிறேன்.
25. நதிநீர் இணைப்பு இதற்கு ஒரு தீர்வாகுமா?பதில்: நதிநீர் இணைப்பு இப்போதைக்கு கஷ்டமே. காலம் செல்லச் செல்ல மேலும் அதிகம் சிக்கலாகும்.
26. ராஜகுமாரன் ராகுல்ஜி இனியாவது இதற்கு எதிர்ப்பு செய்வதை நிறுத்துவாரா?பதில்: சுற்றுப்புறச் சூழலுக்கு அதனால் வரும் பாதிப்புகளையும் அலட்சியம் செய்ய முடியாதில்லையா?
27. அவரின் தலித் பாசம்? உண்மையா?பதில்: அப்படிப் பார்த்தால் எந்தத் தலைவருமே தேற மாட்டார்களே.
28. தமிழ் நாட்டில், அடைமழை, கனமழை, புயல்மழை எனக் கொட்டும் இலவசங்களில் மூழ்கியிருக்கும் பாமர மக்களை காங்கிரஸ் பக்கம் மாற்ற அவரால் முடியாது போலுள்ளதே?பதில்: கஷ்டம்தான் ஆனால் முயன்றால் முடியும். அதற்கு முன்னால் ஒரு காரியம் செய்ய வேண்டும். தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்னாலேயே திமுக மந்திரிசபைக்கு தாங்கள் தரும் ஆதரவை நிறுத்தி குடியரசுத் தலைவர ஆட்சியை நிறுவி, நல்ல கவர்னரை நியமித்து பாரபட்சமற்ற முறையில் தமிழகத் தேர்தலை நடத்த வேண்டும். இலவச வைபவங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். முடியுமா?
29. ராஜீவ் காந்தி படுகொலை கேஸ் நளினி, இப்போது?பதில்: இன்னும் சிறையில்தான் இருக்கிறார். விடுதலைப் புலிகள் ஒடுங்கியுள்ள இந்த நிலையில் அவரைப் பற்றி யார் கவலைப்படப் போகிறார் என்று தெரியவில்லை.
30. அ.தி.மு.க., வுடன் இனி உறவு இல்லை! பா.ம.க.வின் திடீர் அறிவிப்பு ஏன்? எதற்கு அச்சாரம்?பதில்: அது மருத்துவருக்கே தெரியாது. எனக்கு மட்டும் எப்படித் தெரியும்?
31. டெல்லி மேல்சபை உறுப்பினர் பதவி நஷ்டமா டாக்டருக்கு? (அதிமுகவின் ஒப்பந்தம் இனி?)பதில்: அது கண்டிப்பாகக் கிடைக்காது என்று ஏதேனும் சமிக்ஞை அவருக்கு கிடைத்திருக்கும் என நினைக்கிறேன். அதனால்தான் இப்போது அவர்களாகவே வெளியேறியுள்ளனர் எனத் தோன்றுகிறது.
32. திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம்,அடுத்து மதுரையில் அழகிரியாரின் கோரிக்கை பற்றி?பதில்: அவரது கோரிக்கை என்ன? மதுரையிலும் மத்தியப் பல்கலைக்கழகம்? எனக்கு தெரியவில்லையே.
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்