10/28/2009

மடிக்கணினி அனுபவங்கள்

நேற்று காலை என் வீட்டம்மா சில கோவில்க்ளுக்கு போக வேண்டும் எனக்கூற பழக்க தோஷத்தில் முதலில் அதை ஏற்க மறுத்தேன். அவரும் மேலே வற்புறுத்தாது சென்று விட்டார். பிறகு எனக்கு கொஞ்சம் உறுத்தியது.

எனது முக்கிய ஆட்சேபணையே எனது மொழிபெயர்ப்பு வேலைதான். அது எப்போது வேண்டுமானாலும் மின்னஞ்சல் மூலம் வரும். ஆகவேதான் கணினி திறந்து, இணையத் தொடர்புடன் ஒரு நாளின் பெரும்பாலான பகுதிகளில் இருக்கும். ஆனால் இப்போதுதான் மடிக்கணினி வந்து விட்டதே. மேலும் ரிலையன்ஸ் டேட்டா கார்ட் வேறு இருக்கிறது.

முதலில் ரிலையன்ஸின் வாடிக்கையாளர் பிரிவுக்கு ஃபோன் செய்து எனது சேவைகள் தெரிவுக்கு அகில இந்திய அளவில் இணையத்தில் மேய இயலுமா என்பதை தெளிவுபடுத்திக் கொண்டு, முதன் முறையாக சென்னைக்கு வெளியில் செல்வதால் ஏதேனும் பிரத்தியேக அமைவுகள் செய்து கொள்ள வேண்டுமா எனக் கேட்டதற்கு, அவர் அமைவுகளில் ஹைப்ரிட் தரவுகளை பெற்றுக் கொள்ளும் தெரிவை டிக் செய்யச் சொன்னார். அதன்படித்தான் எற்கனவே தெரிவு இருந்தது என்பதை உறுதி செய்து கொண்டேன்.

பிறகு வீட்டமாவை அழைத்து கோவில்களுக்கு செல்லலாம் எனக் கூற, அவர் மகிழ்ச்சியுடன் கரூர், நாமக்கல், திருச்சி ஸ்ரீரங்கம், திருவிண்ணகர ஒப்பில்லா அப்பன் கோவில், திருநள்ளாறு என்று நிகழ்ச்சி நிரல் தயார் செய்தார்.

காலை 8 மணிக்கு இந்த முடிவு செய்தவுடன், எனது காருக்கு சொல்லி, அதை 09.30 மணிக்கு வர ஏற்பாடு செய்தேன். வீட்டுக் காவலுக்கு ஆளை நிறுத்தினோம். கிட்டத்தட்ட 10 மணிக்குத்தான் கிளம்ப முடிந்தது.

போன தடவை செல்லும்போது கரூர் பெருமாள் தரிசனம் செய்ய இயலாது போயிற்று. சொல்லிவைத்தாற் போல கோவில் நடையை மாலை 7 மணிக்கே சாத்தி விடுவதே காரணம். இம்முறை ஆகவே முதலில் கரூர், பிறகு நாமக்கல் எனச் சென்றதில் இரண்டு இடங்களிலும் நல்ல தரிசனம். இந்த இடத்தில் பெருமாள் கோவில்களுக்கே உரித்தான ஒரு அசௌகரியத்தையும் கூறத்தான் வேண்டும். அதாகப்பட்டது கோவில் நடை திறப்பது மிகக் குறுகிய கால அளவில்தான். அதிலும் ஒரு கோவிலில் திடீரென நடுவில் திரையெல்லாம் போட்டு படுத்துகிறார்கள். வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்களின் நலன் புறக்கணிக்கப்படுகிறது.

சிவன் கோவில்களில் இப்பிரச்சினை இல்லை. அதிகம் இல்லை. அதிக நேரம் திறந்து வைத்திருக்கிறார்கள். ரொம்ப நாளாக மனதில் உறுத்தும் விஷயம் இது. இப்போதுதான் அதைக்கூற சந்தர்ப்பம் வந்தது.

உடனேயே திருச்சி வந்து ஹோட்டலில் ரூம் போடும்போது, இரவு 11 மணி ஆகிவிட்டது.

மடிக்கணினியை திறந்து டேட்டா கார்டை பொருத்தி, இணைய இணைப்புக்கு க்ளிக் செய்தால் அது அமர்க்களமாக வந்தது. வாடிக்கையாளர் 4 மின்னஞ்சல்கள் மொழிபெயர்ப்புக்காக அவர் ஏற்கனவேயே எனக்கு தொலைபேசி மூலம் கூறியது போல வந்திருந்தன. அவற்றை முடித்து விட்டு படுக்கச் செல்லும்போது நள்ளிரவைத் தாண்டி முப்பது நிமிடங்கள் ஆகிவிட்டிருந்தன. இப்போது இந்தப் பதிவை போட்டு விட்டு திருவரங்கம் செல்ல வேண்டும். ஒரு ஏவிஜி ஸ்கேன் செய்தாயிற்று, Adaware ஸ்கேனும் இப்போதுதான் ஓக்கேயாக முடிந்தது.

செல்பேசிக்கு எனது லேண்ட் லைனுக்கு வரும் அழைப்புகளை திசை திருப்பியதன் மூலம் ஏதாவது வாடிக்கையாளர் அழைப்புகள் தவறுமோ என்ற ஐயம் அகன்றது. அது நடந்து 6 வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது கணினியும் நம்முடன் கூடவே வரும் என்பதால் இன்னொரு சுதந்திரமும் வந்தது.

அதற்காக டெஸ்க்டாப்பை விட்டுவிட இயலுமா? இப்போதே எனது மடிக்கணினியில் உருவாக்கும் கோப்புகளை எனக்கே மின்னஞ்சல் செய்து கொண்டு அவற்றை வீட்டுக்கு சென்றதும் டெஸ்க் டாப்பிலும் இறக்கி கொள்கிறேன். ஆகவே தரவுகள் இரு வெவ்வேறு இடங்களில் பத்திரமாக இருக்கின்றன.

இந்த அனுபவம் சில நாட்களிலேயே பழகிவிடுமாகத்தான் இருக்கும். இருப்பினும் இப்போதைக்கு இந்த சுதந்திரம் தரும் மனநிறைவு வந்தது வந்ததுதான். அதை ரிகார்ட் செய்வதே இப்பதிவு.

வாழ்க்கை அற்புதமயமானது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

22 comments:

துளசி கோபால் said...

//வாழ்க்கை அற்புதமயமானது.//

வாழ்க்கை மட்டுமா? மடிக் கணினியும்தான்:-))))))

ராஜசுப்ரமணியன் said...

எல்லாக் கோவில்களிலும் ஸ்வாமி-அம்மனின் (தாயாரின்) தரிஸனம் உங்கள் இருவருக்கும் கிடைக்கட்டும். எனக்கும், என் ”வீட்டம்மா”விற்கும் சேர்த்து வேண்டிக்கொள்ளுங்கள்.

காலையில் உங்கள் க்ஷேத்ராடனப் பதிவைப் பார்த்து/படித்து மனம் மகிழ்ச்சியானது.

வாழ்க்கை அற்புதமயமானது - உண்மை

வால்பையன் said...

//வாழ்க்கை அற்புதமயமானது.//

இன்னும் உள்ளே வாருங்கள், நான் அற்புதத்தின் நடுவே நின்று கொண்டிருக்கிறேன்!

Rajan said...

தல! நமக்கு முன்னாடி வந்துட்டீங்க போல,

ஹர ஹர ஹர ஹர ஹர ஹர
மகா தேவா !

மெனக்கெட்டு said...

//
அதற்காக டெஸ்க்டாப்பை விட்டுவிட இயலுமா? இப்போதே எனது மடிக்கணினியில் உருவாக்கும் கோப்புகளை எனக்கே மின்னஞ்சல் செய்து கொண்டு அவற்றை வீட்டுக்கு சென்றதும் டெஸ்க் டாப்பிலும் இறக்கி கொள்கிறேன்.
//
ஏன் மின்னஞ்சல் செய்ய வேண்டும்?

ஒரு pen drive (flash disk) ல் காப்பி செய்து டெஸ்க்டாப்பில் மாற்றிக்கொள்ளலாமே?

வஜ்ரா said...

இந்த உங்களுக்கே மின்னஞ்சல் செய்து கொண்டு காப்பி செய்துகொள்வது அவ்வளவு நல்ல விஷயம் அல்ல.

ஆகவே, மடி கணினியோ, டெஸ்க் டாப்போ, இரண்டுக்கும் பொதுவாக ஒரு 500 MB அல்லது 1 TB external hard disk வைத்துக்கொண்டு அதில் பிரதிகளை வைத்துக்கொள்ளுங்கள். வாரம் ஒரு முறை உங்கள் கோப்புகளை synchronize செய்துகொள்ளுங்கள் (இதற்காகவே நிறைய software இருக்கின்றன எ.டு., AllwaySync). அதுவே மிகவும் பாதுகாப்பான வழி.

என்றைக்காவது சிஸ்டம் அவுட் என்றால், உடனடியாக அனைத்துத் தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.

கௌதமன் said...

// மடிக்கணினியில் உருவாக்கும் கோப்புகளை எனக்கே மின்னஞ்சல் செய்து கொண்டு அவற்றை வீட்டுக்கு சென்றதும் டெஸ்க் டாப்பிலும் இறக்கி கொள்கிறேன்.//
Sir, why not copy to a pen drive?
Also 350GB, 500 GB - USB storage devices are available now.

குப்பன்.யாஹூ said...

டோண்டு சார் ப்லக்பெர்ரி க்கு மாறுங்க, எடை மிகுந்த மடிக் கணினி எதற்கு.

ப்ளாக்பெர்ரி க்கு மாறுங்க.

மங்களூர் சிவா said...

மடிக்கணினி உபயோகமானதுதான் இதுபோன்ற சமயங்களில் எனக்கு தெரிந்த பலபேர் வீட்டுல வாங்கிவெச்சிகிட்டு சினிமா பார்க்கவும் கேம்ஸ் விளையாடவும்தான் செய்கிறார்கள் :((

Romeoboy said...

வாழ்கையை சுகமாக அனுபவிகிரிங்க சார் ..

மாயவரத்தான் said...

அதான் கூகுள் வெச்சுருக்கீங்களே. கூகுள் டாக்குமெண்ட் உபயோகிக்க வேண்டியது தானே?

மாயவரத்தான் said...

//என்றைக்காவது சிஸ்டம் அவுட் என்றால், உடனடியாக அனைத்துத் தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியும்//

அன்றைக்குப் பார்த்து மடிக்கணினியும், எக்ஸ்டர்னல் ஹார்டு டிரைவும் அவுட்டானால் என்ன செய்வதாம்?

வால்பையன் said...

//மடிக்கணினி உபயோகமானதுதான் இதுபோன்ற சமயங்களில் எனக்கு தெரிந்த பலபேர் வீட்டுல வாங்கிவெச்சிகிட்டு சினிமா பார்க்கவும் கேம்ஸ் விளையாடவும்தான் செய்கிறார்கள் :(( //

நாங்கள் அதை தான் செய்து கொண்டிருக்கிறோம்!

dondu(#11168674346665545885) said...

//இந்த உங்களுக்கே மின்னஞ்சல் செய்து கொண்டு காப்பி செய்துகொள்வது அவ்வளவு நல்ல விஷயம் அல்ல.//
ஏன் அவ்வாறு கூறுகிறீர்கள்? நான் மடிக்கணினி வாங்கும் முன்னாலிலிருந்தே இதைத்தான் செய்து வருகிறேன். பெங்களூருக்கு சென்றபோது நிலுவையில் இருந்த கோப்புகளை எனக்கே கூகள் மெயிலில் மின்னஞ்சல் செய்து கொண்டு அங்கு எனது மைத்துனனின் கணினியில் கீழிறக்கி, அங்கு இருந்த நாட்களில் அவற்றில் வேலை செய்து, கிளாம்பி வரும்போது அதுவரை இற்றைப்படுத்தப்பட்ட கோப்புகளை, திரும்பவும் ஜிமெயிலுக்கு அனுப்பி, சென்னையில் எனது டெஸ்க்டாப்பில் கீழிறக்கிக் கொண்டேன்.

கூகள் மெயில் வைரசுகளை அனுமதிப்பதில்லை. வேறு என்ன தேவை?

அன்புடன்,
டோண்டு ராகவன்

ரவி said...

அன்றைக்குப் பார்த்து மடிக்கணினியும், எக்ஸ்டர்னல் ஹார்டு டிரைவும் அவுட்டானால் என்ன செய்வதாம்/////////////

மெயில்ல இருந்து மறுபடி டவுன்லோடு செய்வமில்ல ?

மாயவரத்தான் said...

//மெயில்ல இருந்து மறுபடி டவுன்லோடு செய்வமில்ல ?//

மெயிலும் ஊத்திக்கிச்சின்னா என்னா பண்ணுவீங்க?!

பேசாம ஒரு டைப்-ரைட்டர் கொண்டு போய் அதிலயும் டைப் அடிச்சு வெச்சுக்கலாம். டைப்-ரைட்டரிலயும் ரிப்பன் தீந்திட்டிச்சின்னா பேப்பரில கையால எழுதி வெச்சு எடுத்து வரலாம்.

பேனாவில இங்க் தீந்து போயிடிச்சின்னா?!

வஜ்ரா said...

//
அன்றைக்குப் பார்த்து மடிக்கணினியும், எக்ஸ்டர்னல் ஹார்டு டிரைவும் அவுட்டானால் என்ன செய்வதாம்?
//

ஒரு வேளையில் ஒரு சம்பவம் நடக்க 50% வாய்ப்பு இருக்கிறது. அதே வேளையில் இரண்டு சம்பவம் நடக்க இன்னும் வாய்ப்புகள் கம்மி.

ஒரே வேளையில் டெஸ்க்டாப், லேப்டாப் மற்றும் எக்ஸ்டர்னர் ஹார்ட் டிஸ்க் எல்லாமே செயலிழக்க வாய்ப்பு மிகவும் குறைவு.


அதை அனைத்தையும் நீங்கள் வேண்டுமென்றே 5 வது மாடியிலிருந்து தொபக்கடீர் என்று தூக்கிப் போட்டால் ஒழிய நடக்காது.

நம் கோப்புகளை நாம் தான் பாதுகாத்துக்கொள்ளவேண்டும். இப்படித்தான் யாஹூ பிரிஃப் கேஸ் என்று அறிமுகப்படுத்திப் பலர் அதில் வைத்தார்கள். டெஸ்க் டாப்பும் கவுந்து விட்டது, இப்பொழுது யாஹூ பிரீஃப் கேசும் கவுந்துவிட்டது. மார்ச் 2009 முதல் அது செயலிழந்துவிட்டது.

ஜீ மெயில் இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் உங்கள் மெயில்களைப் பாதுகாக்கவியலும் ? என்றைக்காவது எல்லாமே அவுட்டு என்று மெயில் வந்தால் என்ன செய்வீர்கள் ?

நம் விஷயங்களை நாமே பாதுகாக்காமல் பிறர் மேல் பழி போட முடியாது. ஆகவே, ஒன்றுக்கு இரண்டு ஹார்ட் டிஸ்குகள் கூட வைத்துக்கொண்டு வாரம் ஒரு முறையோ, மாதம் ஒரு முறையோ synchronize செய்து கொள்வது புத்திசாலித்தனம்.
வருடம் ஒரு முறை அல்லது ஆறு மாதம் ஒரு முறை அதையெல்லாம் dvd யாகக்கூட பதிந்து வைத்துக்கொள்ளலாம்.

விண்டோஸ் போன்ற அன்ஸ்டேபிள் ஆப்பிரேட்டிங் சிஸ்டம் வைத்திருப்பவர்கள் அடிக்கடி backup எடுத்துக்கொள்வது அவர்களுக்குத்தான் நல்லது.

நான் ஊதுற சங்கை ஊதிட்டேன்.. இனி மக்கா உங்கள் சமத்து...

dondu(#11168674346665545885) said...

@வஜ்ரா
மடிக்கணினியும் சரி, டெஸ்க்டாப்பும் சரி இவ்விரண்டையும் மாற்றி மாற்றி பயன்படுத்துகிறேன். விடியற்காலை ஐந்து மணி வாக்கில் மடிக்கணினியை ஆன் செய்து ஏவிஜி மற்றும் அட் அவேரை இற்றைப்படுத்திக் கொள்கிறேன்.

பிறகு முந்தைய நாள் இரவில் டெஸ்க்டாப்பில் இற்றைப்படுத்தி எனக்கு நானே மின்னஞ்சல் செய்து கொண்டவற்றை மடிக்கணினியில் இறக்கிவிடுவேன்.

காலை 5.15-க்கு ஏவிஜி ஸ்கேன் தானாக ஆரம்பித்துவிடும். அது ஒரு மணி நேரம்போல எடுக்கும். அச்சமயத்தில் வாடிக்கையாளரின் கோப்புகளில் வேலை செய்வது, தமிழ்மணத்தில் கொட்டம் அடிப்பது ஆகியவற்றை செய்து விடுவேன்.

ஏவிஜி ஸ்கேன் முடிந்ததும், அட் அவேர் ஸ்கேனை முழு கணினிக்கு ஆரம்பிப்பேன். அது நடக்கும் 40 நிமிடங்களுக்கு. காலை 10 மணிவாக்கில் மடிக்கணினியை மூடும் முன்னால் அதில் இற்றைப்படுத்திய கோப்புகளை மறுபடி எனக்கு நானே மின்னஞ்சல் செய்து கொள்ளவேண்டியது.

பிறகு டெஸ்க்டாப்பை திறந்து மேலே மடிக்கணினி விஷயத்தில் நான் செய்த எல்லாவற்றையும் இங்கும் செய்வேன்.

இதுவரை நன்றாகவே போய் கொண்டிருக்கிறது. பார்ப்போம்.

நீங்கள் சொன்னதுபோல மடிக்கணினி, டெஸ்க்டாப் ஆகிய இரண்டுமே சேர்ந்து செயலிழந்து போவதன் சாத்தியக்கூறு குறைவுதான். பிறகு இருக்கவே இருக்கிறது கூகள் மெயில் ஆர்கைவ்ஸ். கடந்த ஐந்து ஆண்டுகாலமாக அவை எனக்கு உறுதுணையாக உள்ளன.

இன்னும் ஒருவிஷயம். எனது மொழிபெயர்ப்புகள் பணம் கிடைக்கும்வரை நிச்சயம் பாதுகாக்கப்படவேண்டியவையே. பில் பணம் வந்ததும் அவையும் ஆர்கைவ்ஸாகத்தான் பயன்படும். அவ்வளவாக முக்கியத்துவம் இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//ஒரு pen drive (flash disk) ல் காப்பி செய்து டெஸ்க்டாப்பில் மாற்றிக்கொள்ளலாமே?//

டோண்டு சார் செய்வது சரிதான். பென் டிரைவுகள் மிகச் சிறிது. காணாமல் போய்விட்டால்?

இன்னோரு பார்டிஷன் போட்டு synchronise செய்து கொண்டாலும் இரண்டு பார்டிஷனும் இருக்கும் மடிக் கணினியே திருடு போய்விட்டால் என்ன செய்வது?

எல் கே said...

romba latea solrenu ninaikiren. ippa mail synchornizationu oru option iruku..pen drivela itnha option varuthu.. so nenga forward panna tevai illai...anegama ippa neenga use pannikitu irukalam. illati try panni parunga

dondu(#11168674346665545885) said...

@LK
நான் ஒரு முறை மேஜை கணினியை உபயோகித்து, ஏதேனும் கோப்புகளை இற்றைப்படுத்தினாலோ, புது கோப்புகள் உருவாக்கினாலோ கணினியை மூடும் முன்னர் அவற்றை எனக்கே மெயில் செய்து கொள்கிறேன்.

அடுத்த உபயோகம் மடிக்கணினியில்தான். முதல் வேலையாக அக்கோப்புகளை தரவிறக்கிக் கொண்டு மடிக்கணினியையும் இற்றைப்படுத்தி விடுகிறேன். இவ்வாறுதான் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக செய்து வருகிறேன்.

உடனுக்குடன் செய்து கொள்வதால் எந்த குழப்பமும் இல்லை. எனக்கெதற்கு பெண்ட்ரைவ் எல்லாம்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

எல் கே said...

ரைட் அண்ணன்..

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது