12/03/2009

டோண்டு பதில்கள் - 03.12.2009

கேள்விகள் கேட்போருக்கு வழக்கமான ஒரு வேண்டுகோள். சில சமயம் எங்காவது இணையத்தில் படித்ததை ஆதாரமாக வைத்து கொண்டு கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதில் தவறில்லை. ஆனால் அப்படியே தமது கேள்விகளின் பின்புலனையும் கூறினால் சௌகரியமாக இருக்கும். நானே கூகளிட்டு பார்ப்பதுண்டு என்பது நிஜமே. ஆயினும் அந்த சுட்டி ரெடியாக கிடைத்தால் அதை தேடும் நேரம் விரயமாகாமல் பதிலில் இன்னும் அதிக முனைப்பாக இருக்கலாம் அல்லவா?

அனானி (27.11.2009 காலை 04.54-க்கு கேட்டவர்)
1. தாய் தமிழகத்தில் கோஷ்டி சண்டைகளற்ற கட்சியாக காங்கிரஸ் மாறும் காலம் வருமா? எப்போது?
பதில்: கனவுகள் காணும் உங்கள் உரிமையை மதிக்கிறேன், அவ்வ்வ்வ்.

2. கிருபானந்தவாரியார் அவர்களின் மறைவுக்கு பிறகு அவரைப் போன்ற (வாரிசாக) சமய சொற்பொழிவாளர்களில் இன்று பிரபலம் யார்?
பதில்: சமய சொற்பொழிவுகள் எல்லாம் நான் இப்போது கேட்பதில்லை. எனக்கு தெரிந்த ஒரே ஒருவர் சுகி சிவம் மட்டுமே. சுதா சேஷய்யன்?

3. ஐந்து வயது சிறுமியை கற்பழிக்கும் செய்திகளில் வரும் காமக் கொடூரங்களுக்கான தண்டனை குறைவாய் உள்ளது போல் இருக்கிறதே?
பதில்:  கோவாவில் ஆயுள் தண்டனை கூட தரப்பட்டுள்ளது.  இங்கு பார்க்கவும். good touch, bad touch என்னும் தலைப்பில் நான் எழுதிய பதிவையும் பார்க்கலாம்.

4. சென்னைக்கு வாய்ப்பு தேடி வந்து உழைத்து, பெரிய இடங்களைப் பிடித்தவர்களில் அதிகம் பேர் நெல்லையை சேர்ந்தவர்கள் .இது எப்படி சாத்யமாகிறது? (சரவணா ஸ்டோர்ஸ்,சரவண பவன்,விஜிபி,ஈசுன் குருப்ஸ்( ராயல் என்பீல்டு), சிம்ஸன் குருப்ஸ், வசந்த் குருப்ஸ், புகாரி குருப்ஸ், டிவிஎஸ், பெரிய மளிகை கடைகள்,...இன்னும் பிற)
பதில்: சமீபத்தில் 1955-56 கல்வியாண்டில் சென்னை திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலை பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது, எங்கள் வகுப்பாசிரியர் ரங்கா ராவ் அவர்கள் தாமிரபரணித் தண்ணீரை விடாமல் குடித்து வந்தால் நன்கு புத்தி வளரும் எனக் கூறியுள்ளார். அதுதான் நீங்கள் சொல்வதற்கும் காரணமாக இருக்குமோ?

5. தமிழக குடுப்பங்களில் கூட்டுக் குடும்பம் முறை சிதைவுக்கு காரணம் வேலைக்குப் போகும் மனைவிமார்கள் என்ற கருத்து பற்றி?
பதில்: கூட்டுக் குடும்பங்களுக்கான தேவைகள் அருகியதே முக்கியக் காரணம். வெற்றிகரமாக இயங்கி வந்ததாக கருதப்படும் பல கூட்டுக் குடும்பங்களில் தந்தை மறைந்ததுமே சகோதரர்கள் பிரிந்து சென்றதுதான் நடந்துள்ளது. சந்தேகத்துக்கிடமின்றி ஒருவர் தலைவராக நியாயமாக செயல்பட்டால்தான் கூட்டுக் குடும்பங்கள் நிலைக்கும்.

அதே சமயம் பல அலுவலகங்களில் வேலை செய்யும் சகோதரர்களுக்கு இட மாற்றங்கள் வருவதும் முக்கியக் காரணமே.

6. இன்னும் பார்ப்பனர் குடுபங்களில் இந்த பாதிப்பு கம்மி போலிருக்கிறதே எப்படி?
பதில்: அப்படி என பொதுவாக சொல்ல இயலாது என்றே நினைக்கிறேன். எனக்கு தெரிந்த ஒரே பார்ப்பனர்களது கூட்டுக் குடும்பம் கிரேசி மோகன், மாது பாலாஜியுடையதுதான். அவர்கள் நன்றாக இருக்கட்டும் என என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகர நெடுங்குழைகாதனை வேண்டுகிறேன்.

7. பெண்களின் நடை, உடை, பாவனை ரொம்ப மாறியதற்கு சினிமா மட்டும் காரணமா?
பதில்: அதுவும் காரணமே, ஆனால் அது மட்டுமல்ல.

8. கோவில் சொத்துக்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசின் அதிரடி நடவடிக்கை எந்த விதத்தில் பலன் கொடுத்துள்ளது?
பதில்: வெளிப்படையாக பலன்கள் ஏதும் என் கண்களுக்கு தெரியவில்லை. எனது பதில் தவறு, பலன்கள் உண்டு என தெரிந்தால் மகிழ்ச்சியடைவேன்.

9. சென்னையில் கையேந்தி பவன் உணவு... உண்ட அனுபவம் உண்டா? எப்படி?
பதில்: தில்லியில் ஆர்.கே. புரம் தமிழ்ச்சங்கத்தின் முன்னால் தாமஸின் கையேந்தி பவன் ரொம்ப பிரசித்தி. அந்த வட்டாரத்தில் உள்ள பிரும்மச்சாரிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்.

அசைவ கையேந்தி பவன்களுக்கு போகாதிருப்பது நலம். இல்லையென்றால் ரன் படத்தில் விவேக் காக்கா பிரியாணி சாப்பிட்டது போலத்தான் நடக்கும். சைவ கையேந்தி பவன்களிலும் சாம்பார் வடை வாங்காதிருப்பது நலம், சுடச்சுட சாம்பாரில் முந்தைய நாள் வடைகளை முக்க வைத்து படுத்துவார்கள். ஆகவே வடை சூடாக வாங்கி அதன் மேல் சாம்பாரை நீங்களே ஊற்றிக் கொள்வது நலம்.

10. இந்தியப் பெண்களின் முன்னேற்றம் பற்றி?
பதில்: இன்னும் போதாது.

11. ஜொள் விடும் பேரன், பேத்தி எடுத்த பெரிசுகள் பற்றி?
பதில்: பேரன் பேத்தி என்ன கொள்ளுப் பேரன் கொள்ளுப் பேத்தி எடுத்தாலும் ஆண் ஆண்தான். அவர்களில் பலரது மனது அதற்குத்தான் பெரும்பாலும் அலையும்

12. வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதில் யார் கில்லாடி?
பதில்: தனது தேவை என்ன என்பதில் க்ளியராக இருக்கும் ஆணும் பெண்ணும்தான்.

13. பொதுவாய் ஹோட்டல் சர்வர் வேலைகளில் மட்டும் பெண்கள் ஈடுபடுவதில்லை ஏன்?
பதில்: பார்களில் வெயிட்ரஸ்கள் உண்டு. சாதாரண ஹோட்டல்களில் நானும் பெண்கள் இந்த வேலை செய்து பார்த்ததில்லை. ஏன் எனத் தெரியவில்லை.
மேல் நாடுகளில் டாப்லஸ் பார்கள் உண்டு. இந்தியாவில் இல்லை என நினைக்கிறேன்.

14. தினம் மலை போல் குவியும் புத்தகங்கள் (வெளியீடுகள்-பப்ளிகேஷன்ஸ்) எதை உணர்த்துகின்றன?
பதில்: நாட்டில் இன்னும் படிக்கும் வழக்கம் போகவில்லை என்பதை.

15. வேலை வாய்ப்பு அலுவலகத்தை (மட்டும்) நம்பும் நம் இளைஞர்களின் நம்பிக்கை? எதிர்காலம்?
பதில்: பல வேலைகளுக்கு வயது வரம்பு உண்டு. அவை தாண்டினால் அதோகதிதான். வேலை வாய்ப்பு அலுவலகம் என்ன அலாவுத்தீன் விளக்கா வைத்திருக்கிறது? அதை மட்டும் நம்பக் கூடாது.

16. உலக அரங்கில் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் இன்றைய நிலைக்கு காரணம்?
பதில்: அரசியல்தான் காரணம். ஒலிம்பிற்கு விளையாட்டு வீரர்களை விட அதிக அளவில் அதிகாரிகள்தான் செல்கின்றனர். வீரர்களை எடுபிடிகளாக நடத்துகின்றனர்.


கொஞ்சம் விவகாரமான கேள்விகள்
1.ஒரு தண்ணிர் தொட்டியின் நீளம்*அகலம்*உயரம் 10மீ*4மீ*6மீ .அதை முழுவதும் நிரப்ப இரன்டு குழாய்கள் (அ,ஆ)உள்ளன .ஒருகுழாய்(அ) தனியாக தொட்டியை நிரப்ப 17 மணி நேரம் எடுத்துக் கொள்ளும்.அடுத்த குழாய்(ஆ)தொட்டியை தனியாய் நிரப்ப 23 நேரம் எடுத்துக் கொள்ளும்.இரன்டையும் த‌ண்ணிர் நிரப்ப திறந்த 3 மனி நேரத்தில் குழாய் ஆ பழுது பட்டதால் அதன் வால்வு அடைக்கப்பட்டது.தொட்டியை நிரப்ப குழாய் (அ) எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ளும்.தண்ணிர் தொட்டியின் அளவை மறந்து விட வேண்டாம். 
பதில்: குழாய் அ ஒரு மணி நேரத்தில் தொட்டியின் 1/17 பாகத்தை நிரப்பும், குழாய் ஆ அதே ஒரு மணி நேரத்தில் தொட்டியின் 1/23 பாகத்தை நிரப்பும். இரண்டுமாக சேர்ந்து ஒரு மணி நேரத்தில் தொட்டியின் 1/17 + 1/23 = 40/391 பாகத்தை நிரப்பும். ஆகவே முதல் 3 மணி நேரத்தில் இரண்டுமாகச் சேர்ந்து தொட்டியின் 120/391 பாகத்தை நிரப்பியிருக்கும். பிறகு அ மட்டும் வேலை செய்கிறது. அது நிரப்ப வேண்டியது தொட்டியின் 271/391 பாகத்தை. ஆகவே நேரம் (271/391 x 17) = 11 மணி 40 நிமிடங்களை விட சற்றே அதிகமாக.

எஸ்.வி. சேகரின் வண்ணக்கோலங்கள் டி.வி. சீரியலில் சேகருக்கும் அவரது மேனேஜருக்கும் ஜி.கே.  கணக்குப் பாடம் எடுத்திருப்பார். இம்மாதிரிதான் அவர்கள் இருவரையும் ஒரே ஒரு கணக்கைக் கேட்டு படுத்துவார். அப்புறம்தான் விஷயம் தெரியும், கணக்கு வாத்தியாருக்கே அந்த விடை தெரியாதெனவும், பல ஆண்டுகளாக யாராவது அதை கூற மாட்டார்களா என்று அலைந்து கொண்டிருப்பார் என்றும். உங்கள் கேள்வி அதைத்தான் எனக்கு நினைவுபடுத்துகிறது.
பை தி வே இந்தக் கணக்கை போட தொட்டியின் அளவுகள் தேவையே இல்லை.


மீண்டும் ஏதேனும் கேள்விகள் இருந்தால் அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

20 comments:

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//தமிழக குடுப்பங்களில் கூட்டுக் குடும்பம் முறை சிதைவுக்கு காரணம் வேலைக்குப் போகும் மனைவிமார்கள் என்ற கருத்து பற்றி?
//
குடும்பம் கூட்டுக் குடும்பமாக இருந்து, உறுப்பினர்கள் எல்லாம் மனத்தளவில் தனித் தனியே இருந்து என்ன பயன்? அக்காலத்தில் ஒரு குடும்பம் என்றால், ஒருவர் வெளிவேலையைக் கவனித்து வந்தால், இன்னொருவர் வீட்டுவேலையைக் கவனித்துக் கொள்ள, ஒருவருடைய குழந்தைக்கு ஏதாவது ஜுரம் என்று வந்தால் இன்னொருவர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்வது என ஒரு கூட்டாக செயல்பட்டுக் கொண்டு வந்தனர். ஆனால், இப்போது ஒரே வீட்டுக்குள் இருந்தாலும் அவரவர் தங்கள் நலனை மட்டுமே கவனத்தில் கொள்வதால், இந்தக் கூட்டுக் குடும்ப தியரி ஒத்து வருவதில்லை.

Anonymous said...

கொஞ்சம் விவகாரமான கேள்விகள்-2

இரண்டு பெரிய நகர புகை வண்டி நிலயங்களுக்கு இடையே உள்ள தூரம் 200 கி.மி.எதிர் எதிர் திசையில், ஒரே ட்ராக்கில் , இரண்டு ரயில் வண்டிகள், தொலைதொடர்பு சமிக்கை கோளாறு காரணமாய், ஒரே நேரத்தில் தவறுதலாய் புறப்பட்டு விடுகின்றன.இரண்டு வண்டிகளும் மிக நவீனமானவை.100 மீட்ட்ர் தூரத்தில் எதிர் திசையில் திடப்பொருளை பார்த்த உடன் சடன் பிரேக் போட்டு அதே இடத்தில் எந்த ஒரு சேதாரமும் இன்றி நின்று விடும் தொழில் நுட்பம் கொண்டவை.
வண்டி அ வின் வேகம் மணிக்கு 50 mph.வண்டி ஆவின் வேகம் 60kmph.விபத்து இல்லாமல் தப்பித்த வண்டிகள் அ,ஆ கடந்த தூரம்,கடந்த நேரம் என்ன?

dondu(#11168674346665545885) said...

முதலில் வண்டிகள் மோதுவதாக வைத்து கொள்ளலாம். வண்டி அ 50 கிமீ வேகத்தில் செல்கிறது. வண்டி ஆ வோ 60 கிமீ வேகத்தில் வருகிறது.

இரண்டும் மோதும் இடம் அ வண்டி புறப்பட்ட இடத்திலிருந்து இ கிமீ தூரம் இருப்பதாக வைத்து கொண்டால், ஆ வண்டி (200-இ)கிமீ தூரம் வந்திருக்கும். மோதும்போது இரண்டும் ஒரே நேர அளவுக்குத்தான் பயணப்பட்டிருப்பதால், நாம் பெறும் சமன்பாடு

அ/50 = (200-அ)/60

அதாவது, 60 அ = 10,000 - 50 அ

அதாவது 110 அ = 10,000

அ = 1000/11 கி்மீ

பயணப்பட்ட நேரம் = அ/50 = 20/11 மணி

இப்போது அ வந்த தூரத்திலிருந்து 50 அடி, ஆ வந்த தூரத்திலிருந்து 50 அடியை கழிக்கவும். அப்போதுதான் 100 அடி கேப்பில் நிற்கும். 50 அடிகள் செல்ல சம்பந்தப்பட்ட வண்டிகள் எடுக்கும் நேரத்தையும் கழிக்க வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அன்புடன்,
டோண்டு ராகவன்

Raja said...

Quantitative apptitude by RS agarwal book has so many problems of these types.

வால்பையன் said...

//ஐந்து வயது சிறுமியை கற்பழிக்கும் செய்திகளில் வரும் காமக் கொடூரங்களுக்கான தண்டனை குறைவாய் உள்ளது போல் இருக்கிறதே?//

அவர்கள் மனநொயாளிகளாக பார்க்கப்படுவதால் ஏற்ப்படும் பிரச்சனை இது!

மேல் நாடுகளில் அதை தீர்க்கமாக அறிய பல சோதனைகள் செய்யப்படுகிறது, இங்கே எல்லாம் பேசியே சமாளிச்சிகிறாங்க!

வால்பையன் said...

//சென்னைக்கு வாய்ப்பு தேடி வந்து உழைத்து, பெரிய இடங்களைப் பிடித்தவர்களில் அதிகம் பேர் நெல்லையை சேர்ந்தவர்கள் .இது எப்படி சாத்யமாகிறது? (சரவணா ஸ்டோர்ஸ்,சரவண பவன்,விஜிபி,ஈசுன் குருப்ஸ்( ராயல் என்பீல்டு), சிம்ஸன் குருப்ஸ், வசந்த் குருப்ஸ், புகாரி குருப்ஸ், டிவிஎஸ், பெரிய மளிகை கடைகள்,...இன்னும் பிற)//

பிற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வேறு எங்கேயாவது சென்றிருப்பார்கள்!
மனிதமனம் ஒரு சமூக குணம் கொண்டது.

எங்களுக்கு சொந்த ஊர் மதுரை, என் அப்பாவின் நண்பர் ஈரோட்டுக்கு அழைக்க, அவர் வந்து, பின்னாலேயே நாலைந்து குடும்பங்கள் வந்து விட்டது!

வால்பையன் said...

//இன்னும் பார்ப்பனர் குடுபங்களில் இந்த பாதிப்பு கம்மி போலிருக்கிறதே எப்படி?//

ஆமா, அவுங்க மட்டும் குடுமிக்கு குடுமி முடிச்சி போட்டுக்குவாங்க, பிரியமுடியாது பாருங்க!

வால்பையன் said...

//தமிழக குடுப்பங்களில் கூட்டுக் குடும்பம் முறை சிதைவுக்கு காரணம் வேலைக்குப் போகும் மனைவிமார்கள் என்ற கருத்து பற்றி?//

கிராமங்களிலும் பெண்கள் கொளத்து வேலைக்கு போறாங்க,

கூட்டு குடும்பம் ஒழிய ஈகோ, சகிப்புதன்மையின்மை, பொறுமையின்மையே காரணம்.

வால்பையன் said...

//பெண்களின் நடை, உடை, பாவனை ரொம்ப மாறியதற்கு சினிமா மட்டும் காரணமா?//

மாறியதாக தோன்ற வைக்கும் உங்கள் கண்களே காரணம், ஆண்கள் மட்டும் எப்படிவேண்டுமானாலும் மாறலாமா?

என்ன கொடும சார் இது!?

வால்பையன் said...

//இந்தியப் பெண்களின் முன்னேற்றம் பற்றி?//

ஆண்கள் பின்னுக்கு இழுக்காமல் இருந்தால் சரி!

வால்பையன் said...

//கோவில் சொத்துக்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசின் அதிரடி நடவடிக்கை எந்த விதத்தில் பலன் கொடுத்துள்ளது?//

எம்.எல்.ஏ க்களுக்கு சில பல லட்சங்களை கொடுத்திருக்குன்னு நினைக்கிறேன்!

rajan RADHAMANALAN said...

//கொஞ்சம் விவகாரமான கேள்விகள்-௨//

இது விவகாரமான கேள்வியா ?

கொடும பண்ணாதீங்க பாஸு!

rajan RADHAMANALAN said...

//அ/50 = (200-அ)/60

அதாவது, 60 அ = 10,000 - 50 அ

அதாவது 110 அ = 10,000

அ = 1000/11 கி்மீ
//

தல ! வாங்க ரெண்டுக்கும் குறுக்கால நாம போயி படுத்துக்கலாம் !

dondu(#11168674346665545885) said...

//தல ! வாங்க ரெண்டுக்கும் குறுக்கால நாம போயி படுத்துக்கலாம் !//
அப்பவும் வண்டிங்க நின்னுடும் இல்ல?

அன்புடன்,
டோண்டு ராகவன்

அன்புடன்-மணிகண்டன் said...

நன்றாக இருந்தது சார்..
எப்படி இருக்கீங்க???

ஜீவி said...

// 1955-56 கல்வியாண்டில் சென்னை திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலை பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது, எங்கள் வகுப்பாசிரியர் ரங்கா ராவ் அவர்கள் தாமிரபரணித் தண்ணீரை விடாமல் குடித்து வந்தால் நன்கு புத்தி வளரும் எனக் கூறியுள்ளார். அதுதான் நீங்கள் சொல்வதற்கும் காரணமாக இருக்குமோ?//

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அதே கல்வியாண்டில்
திருநெல்வேலி, மதுரை திரவியம் தாயுமானவர் இந்து கல்லூரி சார்ந்த உயர்நிலைப் பள்ளியில் நான் ஃபோர்த் ஃபார்ம்
(ஒன்பதாம் வகுப்பு) படித்திருக்கிறேன். காலை எழுந்து வீட்டில் பல்தேய்த்து, காபி குடித்து, தாமிரபரணி ஆற்றுக்கு பெரிய ஜமாவோடு குளிக்கப் போனோமானால், தினமும் பள்ளி கிளம்ப வேண்டிய நேரத்திற்குத் தான் அவசர அவசரமாக வீட்டுக்கு ஓடி வ்ருவோம்.
மற்ற ஆறுகள் போலல்லாமல், தண்ணீரில் தாமிர வாசனையும், மின்னோட்டமும் உண்டு. இரவிலும் படிப்பது சுமார்தான். 9 மணிக்கே கொட்டாவி கொட்டாவியாக வந்து ஆளை அசத்தும்.
சுத்தமாக பள்ளி நேரத்தில் ஆசிரியர் பாடம் நடத்தும் பொழுது கேட்பது தான். ஆனால், அது எப்படியோ தெரியவில்லை, பாடப்பகுதி அத்தனையும் மனதில் அப்படிப் பதிந்து போய்விடும். தேர்வெல்லாம் ரொம்ப ஈஸியாக ஊதித்தள்ளி விடுவோம்.
அன்னை தாமிரபரணியின் மகிகையே மகிமை!

Anonymous said...

/இப்போது அ வந்த தூரத்திலிருந்து 50 அடி, ஆ வந்த தூரத்திலிருந்து 50 அடியை கழிக்கவும். அப்போதுதான் 100 அடி கேப்பில் நிற்கும். 50 அடிகள் செல்ல சம்பந்தப்பட்ட வண்டிகள் எடுக்கும் நேரத்தையும் கழிக்க வேண்டும்./
/100 மீட்ட்ர் தூரத்தில்/

/50 mph.வண்டி/

வண்டி அ 50 கிமீ வேகத்தில் செல்கிறது./


கேள்வியில் கேட்கப்பட்டுள்ள அளவுகளை பார்க்கவும்.

வால்பையன் said...

//அன்னை தாமிரபரணியின் மகிகையே மகிமை! //

எனக்கு புரியாத புதிர் இது ஒன்று தான்,
நிறைய படித்தவர், அதுவும் 1955/56 ல் ஒன்பதாவது படித்த பழுத்த அனுபவசாலி ஆனால் பாருங்கள், படிக்காதவர்களை விட படித்தவர்களுக்கே இம்மாதிரி ஆனா மூடநம்பிக்கைகள் அதிகம்!

அவரே கொஞ்சம் யோசித்தால் புரியும், அதே தாமிரபரணி தொடங்கி, முடியும் வரை பல லட்சம் பேர் அதை பயன்படுத்துகிறார்கள், அங்கே திருடனும் இருக்கான், பிச்சைகாரனும் இருக்கான், ரேப்பிஸ்டும் இருக்கான், கொலையாளியும் இருக்கான் ஒருவேளை அவையெல்லாம் ஜீவிகுள்ளும் ஒளிந்திருக்குமோ!

நம்மை யாராவது பாராட்டும் போது, அந்த கிரிடிட் எனது ஆசிரியருக்கு சேரணும், நண்பனுக்கு சேரணும், பெற்றோர்களுக்கு சேரணும்னு சொல்றது, அந்த புகழால நமக்கு தலைகணம் வந்துறக்குடாதுன்னு, ஆனா சம்மனே இல்லாம ஆஜராகி தாமிரபரணி புகழ் பாடுறாரே, ஒருவேளை கம்மாகரையில் ஆசிரம் தொடங்கி அம்மாபகவான் மாதிரி எதாவது பண்ணப்போறாரோ!?

கிருஷ்ணமூர்த்தி said...

@வால்ஸ்.

ஜீவி சார் தாமிரபரணி நதியைப் புகழ்ந்து தானே பேசினார்? அதற்கு ஏன் இவ்வளவு காண்டு கஜேந்திரன் கணக்காக் குதிக்கறீங்கன்னே புரியலையே!

ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான அபிமானம்! உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் விட்டு விட்டுப் போங்களேன்! கல்லிடைக் குறிச்சி அப்பளத்திற்குக் கூடத்தான், அங்கே கிடைக்கும் தண்ணீர் தனி ருசி கொடுக்கிறது என்று கதைத்துக் கொண்டிருந்தார்கள்!

லோகோ பின்ன ருசி! ஒவ்வொருவருக்கும் ருசி ஒருவிதம்!

வஜ்ரா said...

//
11. ஜொள் விடும் பேரன், பேத்தி எடுத்த பெரிசுகள் பற்றி?
பதில்: பேரன் பேத்தி என்ன கொள்ளுப் பேரன் கொள்ளுப் பேத்தி எடுத்தாலும் ஆண் ஆண்தான். அவர்களில் பலரது மனது அதற்குத்தான் பெரும்பாலும் அலையும்
..
13. பொதுவாய் ஹோட்டல் சர்வர் வேலைகளில் மட்டும் பெண்கள் ஈடுபடுவதில்லை ஏன்?
பதில்: பார்களில் வெயிட்ரஸ்கள் உண்டு. சாதாரண ஹோட்டல்களில் நானும் பெண்கள் இந்த வேலை செய்து பார்த்ததில்லை. ஏன் எனத் தெரியவில்லை.
மேல் நாடுகளில் டாப்லஸ் பார்கள் உண்டு. இந்தியாவில் இல்லை என நினைக்கிறேன்.
//

இதிலிருந்தே தெரியவில்லையா...

பேரன் பேத்தி எடுத்தாலும் ஆண் ஆண் தான்...ஜொள்விடுவது அவர்களது பிறப்புரிமை அதை அவர்கள் செய்தே தீருவார்கள்.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது