12/23/2009

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 5 மற்றும் 6)

எபிசோட் - 5 (21.12.2009) சுட்டி - 1 மற்றும் சுட்டி - 2

நீலகண்டன் வீட்டிற்கு உமாவின் வரவிருக்கும் சீமந்தத்துக்கு அவரையும் அவரது குடும்பத்தாரையும் அழைக்க அவரது சம்பந்திகள் வந்துள்ளனர். நீலகண்டனுக்கும் பர்வதத்துக்கும் மிக்க மகிழ்ச்சி. சீமந்தத்தை நடத்தவிருக்கும் புரோகிதர் சாம்பு சாஸ்திரிகளா எனக்கேட்க, இல்லை அவர் கிடைக்காததால் வேம்பு சாஸ்திரிகளையே ஏற்பாடு செய்ததாக உமாவின் மாமியார் கூறுகிறார். பிறகு நாதனையும் அழைக்க வேண்டும் என முடிவாகி, இரண்டு நாட்கள் கழித்து சம்பந்திகள் இரு தரப்பினருமே சேர்ந்து சென்று நாதனை அழைக்க முடிவு செய்கின்றனர்.

நாதன் வீட்டில் அவர் “என்ன நீலகண்டன் தாத்தாவாகப் போகிறீர்களா” எனக்கேட்க, “அவர் இப்போ வெறும் நீலகண்டர் இல்லை, திருநீலகண்டர்” என வசுமதி எடுத்துக் கொடுக்க ஒரே சிரிப்பு.

“யார் அது திருநீலகண்டர்” என நண்பர் கேட்க, 63 நாயன்மார்களில் ஒருவரான திருநீலகண்டரின் கதையை சோ சொல்கிறார். குயவராய் தொழில் புரிந்த அவர் சிவனடியார்களுக்கு திருவோடு செய்து தந்து சிவத் தொண்டு புரிபவர். பெண்சபலம் உடைய அவரை அவரது மனைவி ஒரு முறை கோபித்து “எம்மைத் தீண்டினால் திருநீலக்ண்டம்” எனச் சூளுரைக்க, “எம்மை என்று பன்மையில் கூறியதால், உன்னை மட்டுமல்ல, பெண்களையே தொடேன்” என அவர் எதிர் சூளுரைக்கிறார். பிறகு சிவபெருமானே அடியார் ரூபத்தில் வந்து தம்பதியர் நடுவில் இருந்த விலக்கத்தை நீக்கி அவர்களுக்கு இளமையை திரும்பத் தருகிறார்.

பர்வதம் சமையற்கார மாமியை சென்று பார்க்கிறாள். சீமந்தம் நடக்கும் தினத்தில் நாதனின் தங்கை பிள்ளைக்கு பம்பாயில் திருமணம் நடக்கவிருப்பதால் நாதன் வசுமதி சீமந்தத்துக்கு வருவது சந்தேகம் எனக்கூறிய சமையற்கார மாமி இது தான் சொன்னதாக வசுமதிக்கு தெரியவேண்டாமென கேட்டு கொள்கிறாள்.

சீமந்தத்தை ஆடம்பரம் இல்லாமல் செய்யலாம் என அசோக் ஆலோசனையை கூறியதௌ பற்றி அறிந்து கொண்டு “இவன் யார் அதைச்சொல்ல” என நாதன் பொறுமையின்றி பேசுகிறார். அங்கு வரும் அசோக்கிடமும் அது பற்றி கேட்க, அவன் விஸ்தாரமான விளக்கம் தருகிறான். வைதிக காரியங்களே பிரதானமாக இருந்தால்தான் பிறக்கப் போகும் குழந்தை நல்லபடியாக பிறக்கும் எனக் கூறி, தேவையற்ற ஆடம்பரங்களுடன் சடங்குகளை பணம் படைத்தவர்கள் செய்யும்ப்போது, அதை பார்த்து நடுத்தர வர்க்கத்தினரும் அவர்களை காப்பி அடித்து செலவுகளை தலைமேல் போட்டுக் கொள்வதையும் குறை கூறுகிறான் அவன். அசோக் அப்பால் சென்றதும் உமாவின் மாமனார் அசோக் சொல்வது நியாயமாகத்தான் படுகிறது எனக் கூறுகிறார்.

நீலகண்டன், பர்வதம், அவர் சம்பந்திகள் ஆகியோர் நாதனிடம் விடை பெற்று புறப்படுகின்றனர். அசோக் அவர்களிடம் புரோகிதம் பண்ணிவைக்கும் வேம்பு சாஸ்திரிகளுக்கும் பத்திரிகை வைப்பது நலம் எனக்கூற, உமாவின் மாமனாரும் ஏற்றுக் கொள்கிறார்.

செர்வீஸ்காரர்களுக்கும் ஏன் அழைப்பு தரவேண்டும் என சோவின் நண்பர் கேட்க, சோ அவர்கள் அதுதான் இந்துமத தர்மம் என விளக்குகிறார். தசரதர் யாகம் செய்யும்போது எல்லா வர்ணத்தவரையும் மரியாதையாக நடத்தி தக்க சன்மானங்கள் தந்து கௌரவித்ததையும் அவர் கூறுகிறார். ஆபஸ்தம்ப சூத்திரத்தில் இவை பற்றி சொல்லப்பட்டவையயும் விவரிக்கிறார்.

எல்லோரும் சென்றதும் வசுமதி கோபத்துடன் அசோக் இவ்வாறே நடந்து கொண்டிருந்தால் எல்லோரும் அவனை லூசு எனக் கூறுவார்கள் என கோபத்துடன் கூறுகிறாள். நாதன் அசோக்கிடம் தானும் வசுமதியும் பம்பாய்க்கு தன் தங்கை மகனது கல்யாணத்துக்கு போகப்போவதால் அசோக்தான் தங்கள் சார்பில் உமா வீட்டு சீமந்தத்துக்கு செல்ல வேண்டும் என அவனிடம் கூறுகிறார்.

சீமந்தம் நன்றாக வைதீக முறைப்படி நடக்கிறது. சீமந்தத்தின் காரணம் பற்றி சோவிடம் அவர் நண்பர் கேட்க, அவரும் பும்சவனம், சீமந்தம் ஆகியவற்றை விளக்குகிறார்.
(தேடுவோம்)

எபிசோட் - 6

(ஆறாம் எபிசோடுக்காக நோட்டு புத்தகம் பேனா சகிதம் காத்திருந்தால் ராபணா என எட்டாம் எபிசோட்டை போட்டு வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்டனர் ஜெயா டிவியினர். கிட்டத்தட்ட கால் மணி நேரம் நடந்த கூத்துக்கு பிறகு மறுபடியும் டைட்டில்சாங் எல்லாம் போட்டு ஆறாம் எபிசோடுக்கு அசடு வழிய திரும்பி வந்தனர்).

சீமந்தம் பற்றி சோ விளக்குகிறார். கர்ப்பகாலத்தில் பெண்ணை எவ்வாறெல்லாம் நடத்த வேண்டும், அவளை எப்படியெல்லாம் சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் ஹிந்து சாத்திரங்கள் சொன்னதை பட்டியலிட்டு விட்டு, அவை எல்லாம் இப்போது மருத்துவரீதியாகவும் தரப்படும் அறிவுரைகளே என்று முத்தாய்ப்புடன் முடிக்கிறார்.

சீமந்தத்தின் முக்கிய அங்கமான ராகாமகம் என்னும் மந்திரம் உச்சரிக்கப்பட்டு முள்ளம்பன்றியின் முள்ளால் உமாவுக்கு அவள் கணவன் வகிடு எடுப்பது போன்ற பாவனை காண்பிக்கப்படுகிறது. அது பற்றியும் சோ விளக்குகிறார்.

சீமந்தம் முடிந்து எல்லோரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். பர்வதம் உமாவின் மாமியார் ஸ்ரீமதியிடம் எல்லா ஏற்பாடுகளும் பிரமாதம், சாப்பாடும் பிரமாதம் எனக்கூறி, கேட்டரிங் யாருடையது எனக் கேட்க, உமாவின் மாமியாரும் கேட்டரர் பற்றி கூறுகிறார். நீலகண்டனின் மகன் ராம்ஜி கல்யாணத்துக்கு அந்த கேட்டரரையே வைத்துக் கொள்ளலாம் என அவர் சம்பந்தி கூற, கேட்டரர் கிடச்சுட்டார்னு கல்யாணம் வச்சுக்க முடியாது என நீலகண்டன் கலாய்க்கிறார். உமா தன் தம்பியிடம் அவனுக்கு பெண் பார்க்கலாமா எனக் கேட்க அவன் டன்டன்னாக அசடு வழிகிறான். ஏதோ காதல் விவகாரம் இருக்கு என உமா போட்டு கொடுக்க, கலகலப்பு இன்னும் அதிகமாகிறது. எது எப்படியானாலும் தனக்கு வரப்போகும் மாட்டுப்பெண் பக்தியுடன் இருக்க வேண்டும், ஆசார அனுட்டானம் தெரிந்தவளாக இருக்க வேண்டும் என நீலகண்டன் கூற பர்வதம் அவள் பங்குக்கு நொடிக்கிறாள்.

உமாவுக்கு பிறக்கப் போவது ஆணா பெண்ணா என்பதை ஸ்கேன் பண்ணிப் பார்த்தார்களா என வேம்பு சாஸ்திரிகள் கேட்க, அவ்வாறு செய்வது சட்ட விரோதம் என நீலகண்டனும் அவர் சம்பந்தியும் கூறுகின்றனர். ஆணோ பெண்ணோ நல்லபடியாக பிறந்தால் போதும் என பர்வதம் கூறுகிறாள்.

நுணலும் தன் வாயால் கெடும் என்னும் கணக்காக வேம்பு சாஸ்திரிகள் எல்லாம் தெரிந்த சிரோன்மணி அசோக் உமாவுக்கு என்ன குழந்தை பிறக்கும் என்பதை கூறலாமே எனக் கிண்டலாகக் கேட்டு, சொந்தச் செலவில் சூன்யம் வைத்துக் கொள்கிறார். அவர் முறைப்படி மந்திரங்கள் உச்சரித்திருந்தால், அவற்றின் அதிர்வுகளை உமாவின் கருவிலுள்ள குழந்தை பெற்றிருக்கும், அதையும் இவர் உணர்ந்திருந்தால் பிறக்கப் போகும் குழந்தை ஆணா பெண்ணா என வேம்பு சாஸ்திரிகளே கூறிடலாமே தான் எதற்கு என அசோக் வினயமாக பதிலளிக்கிறான். வேம்பு சாஸ்திரி திடுக்கிடுகிறார். தான் சொன்ன மந்திரங்களில் என்ன குறைவு என அவர் துணுக்குற்று கேட்க, எல்லோர் எதிரிலும் வேண்டாம், அவரிடம் தான் தனியாக கூறுவதாக அவன் தயங்க வேம்பு சாஸ்திரிகள் அவன் இப்போதே கூற வேண்டும் என பிடிவாதம் பிடிக்கிறார். அவரது மந்திரங்களில் ஸ்வரப்பிழை இருந்ததாக அசோக் கூறுகிறான்.

“ஸ்வரப்பிழையா, இது என்ன கச்சேரியா” என சோவின் நண்பர் வியக்க, கச்சேரியாக அமையக்கூடாது என்பதுதான் சரி என சோ விளக்குகிறார். வேதத்தின் ஸ்வரத்தை மாற்றல், அவசரப்படல், உணர்ச்சியின்றி அதை உச்சரித்தல், சொல் மாற்றிக் கூறுதல், அனாவசியமாக தலையெல்லாம் ஆட்டி சேஷ்டைகள் செய்தல் முதலியவை அடங்கிய ஆறு குறைகளை சோ அவர்கள் பட்டியலிடுகிறார். இந்திரனைக் கொல்லும் ஆற்றல் பெற்ற பிள்ளை பெறும் வரம் வேண்டி தவம் இருந்த ஸ்வஷ்டா என்னும் தேவத்தச்சன், தனது கோரிக்கையை ஸ்வரப்பிழையுடன் கூறியதில் இந்திரனால் கொல்லப்படும் மகன் என உருமாறி, அவனுக்கு பிறக்கும் மகனை இந்திரன் கையால் சாவதாக வரும் கதையையும் சோ கூறுகிறார். தினசரி வாழ்க்கையிலும் இம்மாதிரி தொனி மாறிய வரவேற்புரைகள் விபரீத பொருளை தருவதையும் உதாரணத்துடன் விளக்குகிறார்.

அசோக்கை வேம்பு சேலஞ்ச் செய்ய அவன் “ராகாமகம் சுகபாகாம்” எனத் துவங்கும் மந்திரத்தை எவ்வாறு உச்சரிக்க வேண்டும் என்பதை அவனே செய்து காட்டி வேம்பு சாஸ்திரிகள் தவறிய இடத்தையும் சுட்டிக் காட்டுகிறான். வேம்பு சாஸ்திரிகள் கூடவே வந்த இன்னொரு புரோகிதர் அசோக் சொல்வது சரியே என உறுதிபடுத்த வேம்பு ச்ச்ஸ்திரிகளின் கோபம் அதிகரிக்கிறது. லௌகீக நிர்ப்பந்தங்களினாலேயே தான் தவறியதாகவும், எங்கே பிராமணன் என அலையும் அசோக் அந்த தேடலை விட்டுவிட்டு அவனே வர்ணரீதியான பிராமணனாக உருவெடுக்க வேண்டியதுதானே என சேலஞ்ச் செய்கிறார்.

(தேடுவோம்)

அன்புடன்,
டோண்டு ராகவன்

1 comment:

Anonymous said...

romba mukkiyam...

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது