இரண்டாம் அத்தியாயம் மிகவும் பெரியதாக உள்ளதால் அதை சில பகுதிகளாகப் பிரித்தேன். மூன்று பகுதிகள் வரும் என முதலில்எண்ணினேன். ஆனால் அது நான்காக வருகிறது
வாரத்தின் எட்டாம் நாள் (பகுதி - 3)
மூங்கில் புதர்களுக்கு அப்பால் நாங்கள் முதலில் இருந்த அந்தப் பாறைக்கு திரும்ப அதிக நேரம் பிடிக்கவில்லை. சூரியன் மேற்கு தொடுவானத்தை நோக்கிய தனது கடைசி ஓட்டத்தில் இருந்தான். அப்போதுதான் அது வரைக்கும் நான் வீட்டு ஞாபகமே இல்லாமல் இருந்திருக்கிறேன் என்பது உறைத்தது. இருட்டுவதற்குள் வீடு திரும்பவேண்டுமே என்னும் கவலை ஏற்பட்டது. எனது கவலையை உணர்ந்ததுபோல பாகஸ் ஒரு குறும்புப் புன்னகை புரிந்தார்.
அவர் சொன்னார், “தம்பீ, நீ இப்போ வீட்டுக்கெல்லாம் போகல்லே. இங்கேயேத்தான் ராத்திரி தங்கப் போறே. நாளைக்கு கொள்ளைக்காரங்களை பாக்கணும்னுங்கறதை மறந்துட்டியா? அத்தோட, இந்தக் காட்டுலே சுத்தமான காத்து வீசறது. வானமும் தெளிவா இருக்கு. அதுல கோடிக்கணக்கான நட்சத்திரங்களை ஆசைதீர கண்டு களிக்கலாம்”.
“என்னது, இந்தப் பாறை மேல படுத்துக்கறதா, அதுவும் ராத்திரி முழுக்க? படுக்கை இல்லை, போர்வை இல்லை, கொசுவத்தி இல்லை, தலைகாணி கூட இல்லை. விளையாடறீங்களா”?, என நான் ஆச்சரியத்துடன் கேட்டேன்.
நான் சொன்னதைக் கேட்டு பாகஸ் கேலியாக சிரித்தார்.
“அடடா கண்ணா, என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கறயே? ஒன்னையெல்லாம் சிஷ்யனா நான் வச்சுண்டு என்ன செய்யறது? என்னோட வா”.
அந்த இடத்தைவிட்டு விறுவிறு என நடந்தார். நானும் பின்னால் சென்றேன். சட்டென பார்வைக்கு புலப்படாத, வளைந்து வளைந்து சென்ற ஒரு ஒற்றையடிப் பாதையில் பத்து நிமிடங்கள் நடந்தோம். ஒரு சிறு குன்றுக்கருகில் வந்தோம். ஒற்றையடிப்பாதை இரு பாறைகளுக்கிடையே முடிந்தது. அங்கு சென்றதும்தான் அந்தக் குகையின் வாயில் புலப்பட்டது. குகைக்குள் நுழைந்தோம்.
பாகஸ் தன் கைகளை அகல விரித்தார்.
“இங்கேத்தாம்பா ராத்தங்கப் போறோம். ஐந்து நட்சத்திர ஹோட்டல் இல்லைதான், ஆனா நம்ம போன்றவங்களுக்கு இது போதும்”. இப்போதும் என் தயக்கங்கள் மிஞ்சியிருந்தன. இருப்பினும் என்னுள்ளும் புதிதாக ஏதேனும் செய்யும் ஆசை துளிர்விட்டிருந்தது.
நான் சொன்னேன், “ம்ம், செய்வோம். வேறென்ன வழி இருக்கு. பயங்கர மிருகங்கள் ஒண்ணும் வராதில்லையா”?
பாகஸ் சொன்னார், “பயங்கர மிருகங்கள்னே கிடையாது. எல்லாமே சாதுதான்.” நான் சிரித்தேன். பாக்ஸ்டன் குகையின் சுவர்களை அவதானித்தார். ஒரு மூலைக்கு சென்றார். அங்குள்ள தரை சமனாக படுக்க வாகாக இருந்தது.
பாகஸ் அந்த மூலையில் அமர்ந்தார். “இன்னிக்கு மத்தியானம் ஒரு கருப்பு ஓட்டையை பாத்தோமே நினைவிருக்கா? இப்போ நான் உனக்கு ஒரு ரகசியம் சொல்லறேன். பெரிய பௌதிக விஞ்ஞானிகளுக்குக் கூட இது தெரியாது. இந்த அண்டசராசரஹ்திலே இம்மாதிரி என்ணற்ற கருப்பு ஓட்டைகள் உண்டு. இந்த பூமியிலும்தான். இடம்-காலம் சேர்ந்த ஒவ்வொரு புள்ளியுமே ஒரு கருந்துளைதான். இதை நிரூபிக்கணும்னா பக்கம் பக்கமா கணக்குகள் போடணும். அதெல்லாம் உனக்கு வேண்டாம். இப்ப நான் இருக்கிற இடத்திலேயே ஒரு கருந்துளை இருக்கு”.
நான் அருகில் போய் பார்த்தேன். அதே வழக்கமான வட்டமான கற்பலகை தென்பட்டது. தான் செல்லும் இடமெல்லாம் இம்மாதிரி கருந்துளை வர்ரதுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல பாகஸ் தோள்களை உயர்த்திக்கொண்டே எழுந்து நின்றார். கற்பலகையை அகற்றினேன். அடியில் ஒரு குழி இருந்தது.
“உள்ளே கையை விடேன்”, என்றார் அவர். நானும் விட்டேன். கையை வெளியே எடுத்தால் அதில் ஒரு செட் ஜமக்காளம், போர்வை, காற்றடைக்கும் தலையணை என்று வந்தது. மறுபடியும் கையை விட்டு பார்த்தால் இன்னொரு செட் படுக்கை வந்தது. இரண்டிலும் பூக்களின் வாசனை. நாம இருபத்தியோராம் நூற்றாண்டில்தானே இருக்கோம் என்று அவ்வப்போது எனக்குள் கூறிக் கொண்டேன்.
“இன்னும் எடு” பாக்ஸ்டன் தூண்டினார்.
இப்போது கொசுவலைகள் இரண்டு செட் வந்தன. கூடவே அவற்றை நிறுத்த இரும்பு சப்போர்டுகள் வேறு.
“ஒரு ராத்திரிக்கு இது போதும்” என்றேன் நான்.
“ஏதாவது சாப்பிட வேணுமா”
“ஐயோ வேண்டாம். மூணு நாளைக்கு போதுமான அளவு சாப்பிட்டாச்சு.”
“ஏதாவது குடிக்க வேணுமா”?
“ஆட்சேபணையில்லை”
அவர் இரண்டு ஷிவாஸ் ரீகல் பாட்டில்கள், இரண்டு டம்ப்ளர்கள் ஆகியவற்றை ஓட்டையிலிருந்து எடுத்தார். கூடவே ஐஸ் க்யூப்கள்.
“கடைசியா ஓட்டையில் ஒருமுறை கையை விடு. நீ ஏதையோ மறந்துட்டே”
இப்போது என் கைக்கு வந்தது ஒரு சிவப்பு பல்பு.
“இத வச்சுண்டு என்ன பண்ண முடியும்” என்று சலித்து கொண்டேன். கொண்டிருக்கக் கூடாதுதான்.
பாக்டன்ஹோஃப் கேலியுடன் கேட்டார், “மின்சாரம் இல்லாத எதாவது ஒரு பொருளை சொல்ல முடியுமா உன்னால்? எலெக்ட்ரான் இல்லாத ஏதேனும் எலிமண்ட் கேள்விப்பட்டிருக்கையா”?
என்ன செய்யறது? அசட்டுத்தனமா சிரிச்சுக்க வேண்டியதுதான்.
அவர் சொன்னார், “உன் தலைக்கு மேலே இருக்கற துவாரத்துல பல்பை சொருகு”.
என் தலைக்கு ஓரடி உயரத்தில் இருந்த அந்த ஓட்டையில் பல்பை பொருத்தினேன். மென்மையான சிவப்பு வெளிச்சம் குகை முழுவதும் பரவியது.
“வேற ஏதேனும் வேணுமா”
“ஒன்ணும் வேண்டாம் எனது அன்பான அம்மானே”
நிதானமாக ஷிவாஸ் ரீகல் பாட்டிலை காலி செய்தோம். வெளியில் சென்று சிறுநீர் கழித்துவிட்டு வந்து படுத்ததுமே தூங்கி விட்டேன். கனவுகள் இல்லாத ஆழ்ந்த தூக்கம் வந்தது.
கண் விழித்தபோது வெளியே பளீரென வெய்யில் அடித்தது. கருந்துளையிலிருந்து இரண்டு கூஜாக்களில் தண்ணீர் எடுத்தார் பாகன்ஹோஃப். முகம் கழுவிய பின்னார் நல்ல சூடான காப்பி. சிவப்பு விளக்கைப் பார்த்தேன். அதுவாகவே ஆஃப் ஆகியிருந்தது. இனிமேல் எதுக்காகவும் ஆச்சரியப்படக் கூடாது என முடிவு செய்தேன். வந்ததை வரவில் வைப்போம் என இருப்பதே நல்லது என தோன்றியது.
பாக்னிஸ்டோல் எல்லா பொருட்களையும் அந்த ஓட்டைக்குள் இட்டு, கற்பலகையால் மூடினார். பிறகு குகைக்கு வெளியே வந்து முந்தைய நாள் நாங்கள் அமர்ந்திருந்த பாறைக்கு சென்றோம். அதன் மேல் அமர்ந்து சிறிது நேரம் அமர்ந்து காலை வெயிலின் ஆனந்தத்தை பெற்றோம். சுற்றிலும் நூற்றுக்கணக்கான பறவைகளின் சப்தங்கள் மனதுக்கு இதமாய் இருந்தன.
பாக்னியோகஸிடம் நான் கூறினேன், “அந்த திருடங்க இப்போ எந்த நிலைமையில் இருப்பாங்கன்னு தெரியலையே”.“போய் பாத்தாப் போச்சு” எனக் கூறிக் கொண்டே அவர் எழுந்தார்.
முந்தைய மாலை நாங்கள் வந்த வழியே திரும்பச் சென்றோம். அங்கு சென்றதும் என் வாய் ஆச்சரியத்தால் பிளந்தது. பாக்ளியோகஸ் களுக்கென சிரித்தார்.
திருடர்கள் ஜக்கும் ஹாரியும் முட்டி போட்டு அமர்ந்திருந்தனர். அவர்களை சுற்றி ஒரு பெரிய வட்டத்தில் ஆறு சிறுத்தைப் புலிகள் அவர்களையே பார்த்த வண்ணம் பாயத் தயாரான நிலையில் இருந்தன. சிறுத்தைகளது வட்டத்துக்கு வெளியே அந்த இரு கொரில்லாக்களும் இருந்தன.
சிறுத்தைகளை பார்த்ததும் நான் நான் சட்டென நின்றேன். பாகஸ் என் முதுகில் தட்டி முன்னால் முன்னால் செல்லுமாறு தூண்டினார். நாங்கள் வந்த சப்தம் கேட்டு சிறுத்தைகள் திரும்பிப் பார்த்தன. பாகஸை பார்த்தது அவை எழுந்து நின்று சோம்பல் முறித்து அப்பால் கம்பீரமாக சென்றன. என் கண்களையே என்னால் நம்ப இயலாமல் அவற்றை கசக்கிப் பார்த்தேன்.
இரண்டு திருடர்களின் நிலையைப் பார்த்ததும் எனக்கே பாவமாக இருந்தது. இரவு முழுவதும் ஒரே இடத்தில் பயத்தால் உறைந்து இருந்திருக்கின்றனர் என்பது தெளிவாகவே தெரிந்தது. முகமெல்லாம் கொசுக்கடியால் வீங்கியிருந்தது. தலையெல்லாம் தொங்கிய நிலையில் பாதி மயக்கத்தில் ஆழ்ந்திருந்தனர்.
ஹாரி சிரமத்துடன் கண்களைத் திறந்தான். அவன் முன்னால் பாக்ஸ்டன் நின்றிருந்தார். “என்ன கண்ணுங்களா எப்படி இருக்கீங்க”, பாக்ஸ்டன் கேட்டார். ஹாரி தனது வீங்கிய உதடுகளை நாவால் தடவிக் கொண்டான்.
பாக்ஸ்டன் அருகில் பூக்களால் போர்த்தப்பட்ட ஒரு மரத்தை நோக்கி சென்றார். அதன் பின்னாலிருந்து ஒரு சாக்கு மூட்டையை எடுத்து வந்தார். அதை அவிழ்த்து கொரில்லாக்கள் எதிரில் கொட்டினார். அதிலிருந்து பழுத்த கொய்யாப்பழங்கள் ஒரு குவியலாக வெளிப்பட்டன. அவையும் சாவகாசமாக அப்பழங்களை எடுத்து உண்ண ஆரம்பித்தன. “என்ன கண்ணுங்களா ராத்திரி நல்லாத் தூங்கியிருப்பீங்கன்னு நினைக்கிறேன்” என திருடர்களை நோக்கிக் கூறினார். அவர்கள் பதிலளிக்க முயன்று வார்த்தைகள் வெளிவராது தோற்றனர்.
பான்யார்டோ தனக்கு பின்னாலிருந்து ஒரு பாத்திரத்தை எடுத்து ஹாரியிடம் தந்தார். அதிலிருந்த நீரை அவன் விழுங்கினார். பிறகு பாத்திரம் ஜக்குக்கு தரப்பட்டது.
“இன்னும் ரெண்டு நாளைக்கு நீங்க இப்படியே இந்த அழகான காட்டுல இருக்கறதைப் பற்றி என்ன நினைக்கிறீங்க” என பாக்ஸ்டன் கேட்டார். சிறுத்தைகள் வாணாம்னா சிங்கங்களை அனுப்பட்டுமா. இங்கே தேவையான அளவுக்கு நாகங்கள், கட்டுவிரியன்களும் உண்டு”.
ஹாரிக்கும் ஜக்குக்கும் என்ன சொல்வது எனத் தெரியவில்லை. பயத்தில் அவர்கள் நடுங்கினர். ஜக்குக்கு மயக்கம் வரும்போல தோன்றியது. ஹாரி மெதுவாகச் சொன்னான், “ஐயோ சாமி, போதும் சாமி. எங்களை இப்படியே விட்டா ஓடியே போயிடுவோம்”. மேலும் சொன்னான், “நாங்க ஒண்ணும் ஒங்க கிட்ட திருடல்லியே. அதனால எங்கமேல ஒங்களுக்கு என்ன கோபம்”? ஜக்கால் நிற்கவோ நகரவோ முடியவில்லை. அவன் காலெலும்பு முறிந்ததில் எக்கச்சக்கமா வலி இருப்பது தெரிந்தது.
பாக்டன்ஃபோர்ட் கூறினார், “கண்ணுங்களா, என்னிடம் திருடல்லே என்கிறதேல்லாம் இங்கே தேவையில்லாத பேச்சு. திருடறதுங்கறது ஒரு பாவம். புரிஞ்சுதா முட்டாள்களா? நாம எல்லோருமே பூமா தேவியின் குழந்தைகள்தானே. என்ன சொல்றீங்க”?
“பேசாம போலீஸை கூப்பிடலாமே”, இது நான்.
“வேண்டாம்பா, நான் ஏற்கனவே சொன்ன மாதிரி இதனாலே காலணாக்கு பிரயோசனம் இல்லை. ஆறு மாசத்துக்கு முன்னாலேதான் இவங்க ரெண்டு பேரும் ஃபோர்டென்ஹாம் கவுண்டி ஜெயில்லேருந்து நாலாண்டு சிறை தண்டனை முடிஞ்சு வெளியே வந்தாங்க. அதுக்குள்ள இன்னொரு திருட்டுன்னா பாத்துக்கோயேன்”.
ஜக்குக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. “பித்தன் மாதிரி இருக்கீங்க, ஆனா இவ்வளோ தெரிஞ்சிருக்கே உங்களுக்கு. நீங்க ஏதாவது மாறுவேடத்தில இருக்கற சி.சி.டி. யா”?
லாஃபன்ஷ்டைன் ஒரு நிமிடம் விடாது சிரித்தார். “நான் சொன்னதெல்லாம் உன் முகத்துலேயே எழுதியிருக்கே. அதை படிக்க திறமை எல்லாம் தேவையில்லை. அது சரி இன்னும் ரெண்டு ராத்திரி இங்கே இருக்கறதை பத்தி என்ன நினைக்கிறீங்க”?
ஹாரியும் ஜக்கும் ஒன்றாக அலறினார்கள். அவங்களை பார்த்தாலும் பரிதாபமாகத்தான் இருந்தது. அந்த இரண்டு கொரில்லாக்களும் கொய்யா சாப்பிட்டு கொண்டிருந்தாலும் இவர்கள் மேலேயே தம் பார்வையை வைத்திருந்தன. ஜக் அவற்றை நிமிர்ந்து நேராக பார்க்கவும் பயந்தான். அவன் கெஞ்சினான், “ஐயா இங்கே பாருங்க, எனக்கு கால்லே அடிப்பட்டிருக்கு. சிகிச்சை சீக்கிரம் எடுத்துக்காட்டா, காலே போயிடும்”. நான் அதிகக் கருணையுடன் இருப்பேன் என அவன் கணக்கு போட்டது போலத் தோன்றியது, ஏனெனில் இப்போ என்னைப் பார்த்து பேசினான்.
“ஒங்க மாமா கிட்ட சொல்லக் கூடாதா. எங்களைப் போக விடுங்க. நாங்க ஒங்களுக்கு எதிரா எதுவுமே செய்யல்லியே"
பாகஸ் அவனை நெருங்கி அவனது வீங்கிய கன்னத்தைத் தட்டினார். ஜக் பயத்துடன் பின்னே நகர்ந்தான்.
“இப்போ உங்களை போக விட்டா திருடாம இருப்பீங்கன்னு வாக்குத் தருவீங்களா”?
அவங்க வழியில் அவங்க யோக்கியமாகத்தான் இருந்தாங்கறது அவங்க இந்த வாக்கைக் கொடுக்க தயங்கினதிலிருந்து தெரிய வந்தது.
“ஓக்கே நாளன்னிக்கு மறுபடியும் இங்கேயே ஒங்களை சந்திக்கிறேன்”, என்று கூறினார் பாக்ஸ்டன்ஃபோன். தன் கையை ஜக்கின் முகத்துக்கெதிராக வீசினார். அவர் கையில் ஒரு நாகப்பாம்பு இருந்தது. ஜக் வீல் என அலறினான். அவர் ஹாரியை ஓரக்கண்ணால் பார்க்க, அவனுக்கும் வியர்க்க ஆரம்பித்தது.
“சரி, இப்போ ஒன்னோட காலைப் பார்ப்போம்”, எனக்கூறியவாறு பாக்ஸ்டன் அவது டிரௌசர் விளிம்பைத் தூக்கினார். கால் வீங்கியிருந்தது. முழு கருப்பாக நிறம் மாறியிருந்தது.
பாக்ஸ்டன்ஃபோன் திடீரென பாம்பை அவன் காலுக்கருகில் வைக்க, அது சொடேர் என அவன் காலில் ஒரு போடுபோட்டது. வீல் என கத்திய ஜக்குக்கு நினைவு தப்பியது. ஹாரிக்கு வியர்க்க ஆரம்பித்தது. ஒரு கொரில்லா எழுந்து வந்து ஹாரியின் தலையைப் பிடித்து கொண்டது. அவனால் தலையை அசைக்க முடியவில்லை. எதிரில் இருந்த மரத்தின் கிளைகளை வெறித்துப் பார்த்த வண்ணம் இருந்தான். சற்று நேரம் கழித்து கொரில்லா அவன் தலையை விடுவித்து விட்டு அப்பால் சென்று அமர்ந்து கொய்யா பழங்களை மீண்டும் மெல்வதற்கு ஆரம்பித்தத்து. ஹாரி நிம்மதியுடன் தலையை அசைத்தான். ஆனால் உடல் நடுக்கம் என்னவோ குறையவில்லை.
பாக்ளியார்டோ ஜக்கின் கால், கை, உடல் ஆகியவற்றை உருவிவிட ஆரம்பித்தார். ஹாரி பயத்துடன் அதை பார்த்தான். இரண்டு நிமிடங்கள் கழித்து ஜக்குக்கு நினைவு திரும்பியது. கண்களைத் திறந்தான். பாகஸ் தனது உடைந்துபோன காலில் மாசேஜ் செய்வதைப் பார்த்தான். வலியை எதிர்ப்பார்த்து கத்த ஆரம்பித்தவன் டப்பென கத்தலை நிறுத்தினான். ஏனெனில் வலியே இல்லை. அவனால் அதை நம்பவே இயலவில்லை. ஒரு நிமிடம் அமைதியாக இருந்தான். உடலில் இருந்த எல்லா வலிகளும் ஒட்டு மொத்தமாக மறைந்திருந்தன. அதில் ஒரு புது பலம் உருவாவதை உணர்ந்தான். அவனை கொத்திய நாகம் சற்றே தொலைவில் சுற்றிக்கொண்டு படுத்திருந்தது. பாம்பு கொத்தியது இப்போது நினைவுக்கு வர, அவன் உடல் பயத்தால் நடுங்க ஆரம்பித்தது. “பயப்படாதே, நாகம் உன்னைக் கொத்தியதன் மூலம் உன் உடலுக்குள் மருதைத்தான் செலுத்தியது, அதனால்தான் நீ குணம் அடைந்தாய்” என ஜெஸ்டஸ் கூறினார்.
வியப்பால் ஜக்கின் கண்கள் தெரித்து விழுவது போல தோற்றம் அளித்தன. அவனுக்கு பாகஸ் சொன்னது புரியவேயில்லை. ஆனால் தன் உடலுக்குள் நல்ல ஆரோக்கியம் நிலவுவதையும் அவனால் உணராமல் இருக்க முடியவில்லை. திடீரென அவனுக்குள் நன்றி உணர்ச்சி மேலெழுந்தது. பாக்டனின் முகத்தைப் பார்த்தான். அதிலிருந்த அளவற்றக் கருணையைப் பார்த்தான். அவன் கண்களில் நீர் கோத்தது. எல்லாவற்றையும் விடாது ஹாரியும் பார்த்தான். அவன் தனக்குள்ளும் ஏதோ மாறியதை உணர்ந்தான்.
பாக்டொனால்ட் புன்னகையுடன் எழுந்து நின்றார். அவர் சொன்னார், “நிஜமாகவே நான் பைத்தியம் என்றுதான் நினைக்கிறேன். ஏனோ உங்களை எனக்கு பிடிச்சுப் போச்சு”.
இந்த சொற்களை அவர் அலட்டிக் கொள்ளாமல்தான் சொன்னார். இருப்பினும் அவற்றுள் ஒரு கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தி புலப்பட்டது. ஹாரிக்கும் ஜக்குக்கும் தத்தம் மூளை செல்களில் அடிப்படையான மாறுதல்களை உணர முடிந்தது. பாக்டொனால்ட் மேலும் கூறினார், “அடடா, என்ன மறதி எனக்கு! உங்களுக்கு கண்டிப்பா பசிக்குமே. கொஞ்சம் பொறுங்க”.
ஹாரிக்கும் ஜக்குக்கும் அவர் சொலதோ செய்வதோ ஒன்றும் புரியவில்லை. கிழவரையே கூர்ந்து கவனித்தனர்.
“இப்போ நான் கனவு காணறேன். நீங்க ரெண்டு பேருமே எனது கனவில் இருப்பவங்கதான். ஒங்கப் பைக்குள்ளே பேஸ்ட்ரி, சாக்கலேட், ஐஸ்கிரீம் எல்லாமே இருக்கு”.
ஹாரி ஒன்றும் புரியாது விழித்தான். பெரிசுக்கு என்னவோ ஆச்சு, மீண்டும் பயித்தியமாயிட்டாரு என்று கூட நினைக்க ஆரம்பித்து விட்டான். பாக்ளியேர் அவர்களது பையை எடுத்து, திறந்து, தன் கையை அதனுள் விட்டார்.
ஆறு பேப்பர் பிளேட்டுகள் முதலில் வந்தன. அவற்றை எங்கள் எல்லோருக்கும் வினியோகித்தார். அந்த இரண்டு கொரில்லாக்களும் இப்போது எங்களைச் சேர்ந்தவர்கள் ஆனார்கள். ஒன்றுமே புரியாமல் ஹாரியுன் ஜக்கும் தங்கள கையில் இருந்த பேப்பர் பிளேட்டைப் பார்த்தனர். மீண்டும்கையை உள்ளே விட்டு பேஸ்ட்ரீஸ், சாக்லேட் பார்கள், ஐஸ்கிரீம் கோன்கள் ஆகியவற்றை எடுத்து எல்லோருக்கும் அவரவர் பிளேட்டுகளில் தந்தார்.
“முதலில் வயிற்றுக்கு உணவு,” என்றார் அவர் “அப்புறம்தான் பேச்சு”.
நாங்கள் - நான்கு மனிதர்கள், இரண்டு கொரில்லாக்கள் - உண்ண ஆரம்பித்தோம். ஜக் வேகமாக தனது பிளேட்டை காலி செய்தான். அவனுக்கு இன்னும் வேண்டும்போல இருந்தது. அவனையே பார்த்துக் கொண்டிருந்த ஒரு கொரில்லா தனது பிளேட்டை அப்படியே அவனுக்கு தந்தது. “நன்றி” என ஜக் அதனிடம் கூறினான். உடனே அவன் குழப்பத்தில் ஆழ்ந்தான். பாகஸ் சொன்னார், “இதைத்தான் மிருகாபிமானம் என சொல்லலாம். ஒனக்கு இன்னும் வேணுமா ஹாரி”?
ஹாரி தண்ணீர் பாத்திரத்திலிருந்த நீரை அருந்தினான். அப்பாத்திரம் ஒவ்வொருத்தரிடமும் பாஸ் செய்யப்பட்டது. ஹாரி சொன்னான், “இங்கே என்னென்னவோ நடக்கிறது. ஒண்ணும் நம்பறா மாதிரி இல்லை”.
பாகஸ் சொன்னார், “தம்பீ, நான் பைத்தியம், நீ பைத்தியம். இந்த ஒலகமே பைத்தியம். எதுவுமே புரியாதுங்கறது உண்மைதான். அதையெல்லாம் நீ கண்டுக்காதே”. ஜக்கும் ஹாரியும் ஒருவரை ஒருவர் பார்த்து தோள்களை குலுக்கினார்கள். பாகஸ் தனது பேச்சைத் தொடர்ந்தார்.
“நீங்க ரெண்டு பேருமே ஆரோக்கியமாத்தானே இருக்கீங்க. அதுக்காகவே நீங்கள் கடவுளுக்கு நன்றி செலுத்தணும்.
“இங்கேயிருந்து அதிக தூரத்துல இருக்கற ஒரு நாட்டோட ஞானி ஒருவர் சொன்னதை இப்ப நான் சொல்லறேன், “கடவுள் உங்களுக்கு வலிமையா கரங்களை தந்தது நீங்க உழைக்கிறதுக்காகத்தான். அத வச்சு திருடலாமா, மத்தவங்களுக்கு கெடுதல் செய்யலாமா?…என்ன புரிஞ்சுதா?
“நிஜம்மாவே யார் தெரியுமா கோழை? ஒரு பலசாலி பலகீனனை அடிப்பதுதான் வடிக்கட்டிய கோழைத்தனம். ஆயுதம் இல்லாத தன்னோட சகோதரனைத் தாக்கற ஆயுதபாணிதான் பெரிய கோழை”
“அன்பு ஒண்ணுக்காகத்தான் வாழணும். நாம எல்லோருமே சகோதரர்கள். சிரிக்க வேண்டாம். உங்களோட ஆரோக்கியமும் உடல் பலமும் சீக்கிரமே காணாமப் போயிடும். ஆனாக்க அப்போ இதையெல்லாம் உணர்வதற்கான நேரம் கடந்து போயிருக்குங்கறை நீங்கள் அப்போத்தான் உணர்வீங்க”.
ஒன்றும் பேசாமல் அவர்கள் இதையெல்லாம் கேட்டுக் கொண்டார்கள். முதல் தடவையாக அவர்களது கேலியும் கிண்டலும் மூட்டை கட்டி வைக்கப்பட்டன. நன்மைக்கான விதை அவர்களுக்குள் விதைக்கப்பட்டதை பாகஸ் உணர்ந்தார். அது வளர நேரம் பிடிக்கும், ஆனால் நிச்சயம் வளரும்.
ஒரு கொரில்லா எழுந்து எல்லா காலி பிளேட்டுகளையும் எடுத்துப் போய் தரையில் தன் வெறும் நகங்களால் குழி தோண்டி அவற்றை அதில் வைத்து மேலே மண்ணைப் போட்டது. அதன் அச்செயல் இந்தத் திருடர்களுக்கு பல விஷயத்தைச் சொன்னது. ந்நன்கு ஆண்டுகள் சிறையில் கற்றதை விட அதிகம் இதில் கற்றுக் கொண்டனர். அவகளுக்குள் இருந்த கடுமையான மனோபாவம் இளக ஆரம்பித்தது.
பாகஸ் சொன்னார், “ஓக்கே. உங்களை போக அனுமதிக்கலாம்னு நினைக்கிறேன்”
திருடர்கள் முகம் பிரகாசம் அடைந்தது.
“ஆனா அதுக்கு முன்னாலே ரெண்டு விஷயம் இருக்கு”.
அவர்கள் முகங்கள் இருண்டன.
“முதல் விஷயம். இனிமே திருட்டோ, கொள்ளையோ, மத்தவங்களுக்கு கெடுதலோ எதுவெஉமே செய்யக் கூடாது. நீங்க அப்படி செஞ்சாக்க எனக்கு ஒடனே தெரிஞ்சுடும். நீங்க எங்கே இருந்தாலும் இந்த ரெண்டு நண்பர்களையும் அனுப்பிச்சுடுவேன்” – அவர் கொரில்லாக்களை சுட்டிக் காட்டினார்- “கூடவே இந்த நண்பரும் வருவார்” – நாகப்பாம்பை சுட்டிக் காட்டினார்.
இரு திருடர்களும் பயத்தால் நடுங்கினர்.
“எங்கிட்டேயிருந்து உங்களாலே எங்கேயுமே ஒளிஞ்சுக்க முடியாது”
கடுமையான ஷரத்துதான். ஆனால் அதை ஏற்றுக் கொள்ள அவர்கள் அவ்வளவா கஷ்டமும் படவில்லை. ஏனெனில் ஏற்கனவேயே அவர்களுக்குள் மாறுதல்கள் துளிர்விட ஆரம்பித்து விட்டிருந்தன
“ரெண்டாம் விஷயம். நீங்க இங்கே செஞ்சதை வெளியில் வெளிப்படையாக கன்ஃபெஸ் செய்ய வேண்டும். அதை சொல்லறதன் மூலம் வரும் விளைவையும் ஏத்துக்கணும். உலகில எந்தச் செயலுக்கும் எதிர்வினை உண்டு. அதை ஏத்துண்டுதான் ஆகணும், வேறே வழியே இல்லை”.
ஜக் சிறிது தயங்கினான். “போலீஸிடம் போய் இதச் சொல்லணுங்கிறீங்களா”?
“இல்லை. வேற யார் கிட்டவாவது சொல்லணும்”.
“ரெண்டுமே ஒண்ணுதானே”
“இல்லை”
“எங்களுக்கு புரியல்ல”
“காட்டுக்கு வெளியே ஹைவே வரும். அப்புறம் அது ஒரு ஊருக்கு போகும். அங்கே ஏதாவது சர்ச் இருக்கும். அங்கே இருக்கற பாதிரியார் கிட்டே உங்கள் பாவங்களை ஒத்துக்கிட்டு வாக்குமூலம் கொடுங்க.
புரிந்து கொண்டு இருவரும் தலையாட்டினார்கள். “ஓக்கே, இப்போ நீங்க போகலாம் நண்பர்களே. போய் வேலை செய்யுங்கள், நன்றாக அமைதியுடன் வாழுங்கள்”.
அவர்கள் எழுந்து நின்று தத்தம் பொருட்களை எடுத்துக் கொண்டனர். ஜக்குக்கு பயம் விடவில்லை. பாம்பு இருந்த இடத்தை நோக்கினான். அது காணாமல் போயிருந்தது.
கொரில்லாக்கள் அவர்களுடன் நட்புடன் கைகுலுக்கின. நானும் அவர்களுடன் கைகுலுக்கினேன். கடைசியாக பாகஸ் அவர்கள் இருவரையும் அணைத்துக் கொண்டார். அவர்கள் கண்களில் நீர் பளபளத்தது.
அவர்கள் திரும்பிப் பார்க்காமல் அப்பால் சென்றனர். அறுபது மீட்டர்கள் கடந்ததும் அந்த நிலையிலேயே கைகளை உயர்த்தி ஆட்டி விடை பெற்றுக் கொண்டனர்.
(தொடரும்)
(ஆன்லைனில் ஜெஸ்டஸ் ஆங்கில மூலத்தை வாங்க இங்கே செல்லவும்).
அன்புடன்,
டோண்டு ராகவன்
2 comments:
I wonder why there is no comments...! Hmm...
I am still wondering why are they no comments about this story...!!
-same annonymous.
Post a Comment