முதல் அத்தியாயம் இங்கே
வாரத்தின் எட்டாம் நாள் (பகுதி - 4)
திருடர்கள் எங்கள் பார்வையிலிருந்து மறைந்ததும் பாக்ஸ்டன் கொரில்லாக்களை பார்த்துச் சொன்னார், “காட்டு ராஜாக்களே, ரொம்ப நன்றி. நீங்க என்னோட கற்பனைலேருந்துதான் வந்தீங்க, அங்கேயே போயிடுங்க”.கொரில்லாக்கள் களிப்புடன் சத்தம் எழுப்பின. ஒன்றையொன்று பார்த்து தலையாட்டின. ஒரு கொரில்லா சுமார் எழுபது அடி தூரம் அப்பால் சென்று இன்னொரு கொரில்லாவை நோக்கி நின்று கொண்டது.
இன்னொரு கொரில்லா தன் வலிமையான கரங்களில் பாகஸை அலேக்காக தூக்கி பந்தை வீசுவது போல அவரை தூரத்திலிருந்த கொரில்லாவை நோக்கி எறிந்தது. பாகஸ் பல குட்டிக்கரணங்கள் அடித்தவாறே களிப்புடன் கத்திக் கொண்டே பறந்தார். அவர் தோலைத் துருத்தி நின்று கொண்டிருந்த எலும்புகளிலிருந்து சூரிய வெளிச்சம் பிரதிபலித்தது.
இரு கொரில்லாக்களும் அவரை பிடித்து ஒன்றுக்கொன்றை நோக்கி எறிந்தன. ஏதோ பந்து விளையாடுவது போல இருந்தது. நான் ஆச்சரியத்துடன் எல்லாவற்றையும் பார்த்தவாறு நின்று கொண்டிருந்தேன். இந்தப் பெரிசு ஆச்சரியம் மேல் ஆச்சரியமாய் காட்டுகிறதே என எண்ணினேன்.
அந்தரத்தில் அவர் உடல் பாரபோலா பாதையில் செல்ல, தரை மீது அவர் நிழலோ நேர்க்கோட்டில் சென்றது.
இம்முறையில் சிறிது நேரம் கொரில்லாக்கள் விளையாடின. பிறகு ஒரு கொரில்லா பாக்னோராமை குழந்தையை கீழே விடுவது போல மெதுவாக நிற்க வைத்தது. தலைசுற்றி கீழேவிழப்போக்றார் என நான் எண்ண, அவரோ ஸ்டெடியாக சிரித்தவாறே நின்றார். கொரில்லாக்கள் முன்னால் ஜப்பானியர் செய்வது போல குனிந்து வணங்கி,“மிக்க நன்றி ராஜாக்களே, என்னை இவ்வாறு கௌரவப்படுத்தியதுக்கு”என்றார்.
கொரில்லாக்களும் அதே முறையில் அவரை குனிந்து வணங்கின. பிறகு சட்டென அருகிலிருந்த மரத்தில் ஏறி அங்கிருந்து மரத்துக்கு மரம் கிளைக்குக் கிளை தாவி அப்பால் சென்றன. அவை கண்பார்வையிலிருந்து அகலும்வரை நான் பார்த்த வண்ணம் நின்றிருந்தேன். பிறகு நானும் அந்த பைத்தியக்கார கிழவரும் ஒருவரை ஒருவார் பார்த்த வண்ணம் நின்று கொண்டிருந்தேன். அவர் என்னை புன்னகையுடன் பார்த்தார்.
“நல்லதொரு காட்சி”, என்னால் இதைக் கூறாமல் இருக்க முடியவில்லை.
அவர் சிரித்தார். “நீ நினைத்தாய், அவ்வாறே நடந்தது. இதிலென்ன அதிசயம்”?
நல்லா சொன்னாரையா, அதிசயம் இல்லையாம், ஹூம் என நான் நினைக்க, என் நினைப்பை காதால் கேட்டது போல அவர் சந்தோஷத்துடன் சிரித்தார்.
கானகத்தில் திடீரென எல்லாம் நிசப்தம் ஆயிற்று. பறவைகளின் ஒலி கூட கேட்கவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தேன். எங்கள் இருவரைத் தவிர யாரையுமே காணவில்லை.
“நாம் மறுபடியும் நமது பாறைக்கு போகும் நேரம் வந்துவிட்டது”, என்றார் ஜெஸ்டஸ்.
நான் சொன்னேன், “இப்போதைக்கு வேண்டும் அளவுக்கு அனுபவங்கள் வந்துவிட்டன. இதற்குமேல் என்னால் தாங்காது. நகரத்துக்கு செல்லும் ஹைவே இங்கேயிருந்து பக்கத்தில்தான். இங்கேயே நான் விடை பெற்று கொள்ளலாம் என நினைக்கிறேன். உங்களுக்கு ஆட்சேபணை இல்லைதானே”
“கண்டிப்பா திரும்பிப் போகத்தான் போறே. ஆனாலும் நாம தொடங்கின இடத்துக்கே திரும்பறதுதான் நல்லது. இன்னொரு ரகசியம் தெரிஞ்சுக்கோ, எதுவுமே ஆரம்பித்த இடத்தில்தான் முடியும். இதை யாரிடமும் சொல்லிடாதே”. சிறிது நேரம் சிரித்துவிட்டு மேலே சொன்னார், “நாம இதையெல்லாம் ஆரம்பிச்சது மூங்கில் புதர் கிட்டே இருக்கற அந்தப் பாறையில்தான். அங்கேதான் முதல்ல போகணும். அங்கே போய் எல்லாத்தையும் முடிச்சுக்கலாம்”.
நான் தயக்கத்துடன் ஒப்புக் கொண்டேன். அவரது மசங்கல்-கசங்கல் தத்துவத்தில் என்னால் ஒரு குற்றமும் கண்டுபிடிக்க முடியவில்லை. இவ்வளவு விஷயங்கள் நடந்தும் எனக்கு களைப்பு என்பதே சுத்தமாக இல்லை என்பதும் என்னை வியப்பில் ஆழ்த்தியது. அதற்கு மாறாக என்னுள் சக்தி கொப்பளித்து எழுந்தது.
நான்காம் முறையாக அந்த வழியில் சென்று மூங்கில் புதர்களை அடைந்தோம். அதே வழமையான பாறைமீது அமர்ந்தோம்.
முந்தைய நாள் என்னை பாகஸிடம் அழைத்துவந்த அந்த கலப்பின நாய் வாலை ஆட்டிக் கொண்டே வந்தது. எங்களைச் சுற்றிச்சுற்றி வந்தது. பாக்ஸ்டனின் காலை நக்கியது. பாகஸ் கைநிறைய பிஸ்கட்டுகளை எடுத்து வீசினார். நாய் அவற்றின் பின்னே ஓடியது.
ஒருவருக்கொருவர் பேசாமல் நீண்ட நேரம் ஓய்வாக அமர்ந்திருந்தோம். முழு விழிப்பு நிலை மற்றும் தூக்க நிலைக்கு இடையில் நான் இருந்தேன். எண்ணங்கள் எனது மனதின் ஆழத்தில் உருவாயின. ஆனால் மேலே வந்து மிதக்கவில்லை. மிகவும் சந்தோஷமாக உணர்ந்தேன்.
பாகஸ் மிருதுவாக முணுமுணுத்தார், “இப்படித்தான் கற்பனை வேலை செய்யும். கற்பனையும் யதார்த்தமும் அழகாக ஒன்றாகும்”.
அவரது இந்த வார்த்தைகள் எனக்கு புரியவில்லை. “என்ன சொல்லறீங்க”, என நான் துடிப்புடன் கேட்டேன்.
“கடந்த இருபத்திநாலு மணி நேரமாக சுவாரசியமான பல விஷயங்களை நான் கற்பனை செஞ்சேன் இல்லையா”, என்றார் அவர்.
“என்னது, எல்லாத்தையும் கற்பனை செஞ்சீங்களா? அப்போ நிஜமாகவே நடந்தது எல்லாத்தையும் என்னன்னு சொல்லுவீங்க”?
“அதெல்லாம் நடந்தாலும் சரி இல்லேன்னாலும் சரி, எல்லாமே நான் கற்பனை செஞ்சதுதான்.
“ஆனாக்க அதெல்லாம் உண்மையிலேயே நடந்துதே”, நான் விடவில்லை.
“அதெல்லாம் நடந்தா மாதிரி கற்பனை செஞ்சதும் நானே”
“ஆனால் நான் ஒரு தனி சாட்சியா அங்கேயே இருந்தேனே.
“உன்னையும் கூடத்தான் கற்பனை செஞ்சேன்”
மசங்கல்-கசங்கல் தத்துவத்துக்குக் கூட இது கொஞ்சம் ஓவராகத்தான் எனக்குப் பட்டது.
“சரிதான் நிறுத்துங்க சார். நீங்க என்னையும் கற்பனை செஞ்சிருந்தாலும் எனக்குக் கவலையில்லை. நான் அப்போ அங்கே இருந்தேன். இப்போ இங்கே இருக்கேன்”.
ஒரு கேலியான புன்முறுவல் பூத்தார் அவர்.
“நீ அங்கே இருந்ததாக கற்பனை செஞ்சே. நீ என்னை கற்பனை செஞ்சே, நான் உன்னைக் கற்பனை செஞ்சேன்”.
என்னுள் எரிச்சல், ஆவேசம் கோபம் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக எழுந்தன. நான் கத்தினேன், “அப்படீன்னாக்க கடந்த 24 மணி நேரமா ஒண்ணுமே நடக்கலங்கறீங்களா”?
அவர் என்னவோ அமைதியாகத்தான் பேசினார், “ஒரு நிகழ்வை கற்பனை செய்து கொள்வதும், அதை பார்ப்பதும் வேறு வேறு அல்ல. இதுக்காவெல்லாம் அலட்டிக்கலாகாது. போகட்டும் விடு. அது சரி, நீ எந்த 24 மணி நேரங்களை பற்றி பேசறே”?
இந்தக் கேள்வியால் நான் மறுபடியும் கோபம் அடைந்தேன். “ஒங்களோட அந்த விளங்காத நாய், அந்த பாழாப்போன கருப்பு ஓட்டைகள், அந்த ஆணும் பெண்ணும், அந்தத் திருடங்க ஹாரியும் ஜக்கும், கொரில்லாக்கள், நாகப்பாம்பு எல்லாம்தான்”
பாக்னோமூரா தன் கையை உயர்த்தினார். என் மணிக்கட்டை தன் ஆள்காட்டி விரலால் சுட்டியவாறு கேட்டார், “இப்போ மணி என்ன சொல்லு கண்ணா”?
இத்தனை நேரம் கடிகாரத்தையே மறந்திருக்கிறேன். நேரம் பிற்பகல் இரண்டு மணி, தேதி 11, அதாவது நான் காட்டுக்குள் வந்த அதே நேரம், அதே தேதி. ஆடிப்போய் விட்டேன். நேற்று 11-ஆம் தேதி என்றால் இரவு காட்டில் தங்கிய பிறகு இன்று 12-ஆகத்தானே தேதி இருக்க வேண்டும், அது எப்படி? ஒரு வேளை கடிகாரம் நின்று விட்டதா எனப் பார்த்தேன். இல்லை, அதுபாட்டுக்கு ஓடிக்கொண்டிருந்தது. குழப்பங்கள் சுனாமி போல என் மேல் படர்ந்தன. கடந்த 24 மணி நேரங்களில் நடந்த விஷயங்கள் உண்மையே என் எனது மூளையின் ஒவ்வொரு செல்லும் உணர்த்தியது. அதன் நினைவுகளும் துல்லியமாகவே இருந்தன.
வழக்கம்போல பாகஸ் எனது எண்ண ஓட்டங்களை அனாயாசமாகப் படித்தார்.
“ஒரு கனவின் நினைவுகளும் தெளிவாகவே இருக்கறதுல ஆச்சரியம் இல்ல. ஞாபகசக்தியை வச்சுண்டு மட்டும் எதையும் நிரூபிக்க முடியாது. அது வெறும் மாயை. ஆனால் மாயை என்னங்கறதெல்லாம் புரிஞ்சுக்க உனக்கு இன்னும் வேளை வரல்ல. அதுக்காகவெல்லாம் கவலைப்படாதே. வருவது அத்தனையையும் அப்படியே சந்தோஷமா ஏத்துக்கோ”.
ரொம்ப நேரம் யோசித்தவாறே அமர்ந்திருந்தேன். ஒன்றும் தேறவில்லை.
கடைசியில் பாகஸ் சொன்னார், “ரொம்பவெல்லாம் யோசிக்காதே. அது நல்லதல்ல”. என் முதுகில் லேசாகத் தட்டினார். எல்லா கவலைகளும் என்னை விட்டகன்றன. இப்ப என்ன ஆயிடுத்து? கடந்த 24 மணி நேரம் நடந்த நிகழ்ச்சிகள் உண்மையே. ஆகவே என் கடிகாரத்தின்படி நேற்றிய தேதியிலேயே நான் இன்னும் இருந்தால், என் வாழ்நாளில் அதிகப்படியாக ஒரு நாள் கிடைத்தது. இதையெல்லாம் யோசித்தவாறே நான் உரக்கச் சிரித்தேன். எல்லா டென்ஷன்களும் என்னை விட்டு நீங்கின. பாக்ஸ்டனும் என் சிரிப்பில் கலந்து கொண்டார். காடு முழுக்க எங்கள் சிரிப்பொலிகள் எதொரொலித்தன.
“இந்த விஷயத்தை இங்கே முடிச்சுப்போம். முதலில் சாப்பிடுவோம், பிறகு டாட்டா சொல்லுவோம்” என்றார் அவர். நானும் சரி எனச் சொல்ல, அவர் கருங்குழியின் மூடியை விலக்கினார். தேவையான உணவு, பாத்திரங்கள், கப்புகள், தட்டுகள் ஆகியவற்றை எடுத்து கொண்டோம். கடைசியில் மதுவும் அருந்தினோம். அவ்வப்போது எதேச்சையாக பார்ப்பது போல கடிகாரத்தைப் பார்த்தேன். அது என்னமோ சாதாரணமாகத்தான் இயங்கியது. சாப்பிட்ட பிறகு மிகுந்த எல்லாவற்றையும் குழிக்குள் போட்டு மூடினோம் என்பதை சொல்லவும் வேண்டுமோ?
பாகஸ் இப்போது ஒரு மந்திரம் போல சொற்களை உச்சரித்தார்,“எல்லாமே கனவுதான். கனவு கண்டேன், காண்கிறேன், எப்போதுமே காண்பேன், கடவுளே உனக்கு என் நன்றிகள்”.
நான் புன்னகை செய்தேன். பாகஸ் பிரதிட்சணமாக தன்னைத்தானே சுற்றி ஒவ்வொரு திக்கை நோக்கியும் வணங்கினார். என் தோள்மேல் கையை வைத்து, “ஓக்கே, வா போகலாம். ஹைவே வரைக்கும் உன்கூடவே வரேன். அங்கே உனக்காக யாரோ காத்துட்டிருக்காங்க. அவங்களோட நீ உன் வீட்டுக்கு செல்லலாம்”.
மறுபடியும் வந்த வழியே சென்றோம். திருட்டு முயற்சி நடந்த இடத்துக்கு வந்தபோது ஆவலுடன் சுற்றும்முற்றும் பார்த்தேன். அம்மாதிரி நிகழ்ச்சி நடந்ததற்கான அடையாளமே இல்லை. “ஏன் சிரமப்படறே”, பாகஸ் கேலியாக சிரித்தார். நான் பேசாமல் இருந்தேன். ஒரு விஷயம் சந்தேகத்துக்கிடமின்றி கற்றுக் கொண்டேன். பாகஸோட பேசியோ விவாதித்தோ ஒண்ணும் சாதிக்க முடியாது. சாத்தியமற்றதை சாத்தியமாக்குவார், சாத்தியமானதை செய்ய முடியாததாகவும் ஆக்குவார்.
நெடுஞ்சாலையின் ஓரத்துக்கு வந்து நின்றோம். அங்கு ஒரு பென்ஸ் கார் ரிப்பேராகி நின்று கொண்டிருந்தது. அதன் சொந்தக்காரர் அருகில் செய்வதறியாது நின்றிருந்தார். அவரே ஓட்டி வந்திருக்கிறார், கார் ரிப்பேராகி இருக்கிறது. யாராவது உதவிக்கு வருவார்களா என்று நோக்கும் முகபாவத்தில் இருந்தார். பாகஸை பார்த்ததுமே அவர் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. பாகஸ் விடவில்லை. “என்ன சார் ஏதாவது உதவி தேவையா” என்று கேட்டார்.
“என்னோட பென்ஸ் கார் நின்னு போச்சு”
“உங்க கிட்டத்தான் செல்போன் இருக்குமே. ஏதாவது மெக்கானிக்குக்கு ஃபோன் செய்யலாமே”. இது கூட எனக்குத் தெரியாதா, சரியான லூசுப்பயலா இருக்கானே கிழவன் என காரோட்டி எண்ணியது என்னாலேயே உணர முடிந்தது.
“அதெல்லாம் செய்யாம இருப்பேனா? மெக்கானிக் இங்கே வர இன்னும் ஒரு மணி நேரம் ஆகும்”.
“நான் கேட்டது அடிப்படையான கேள்வி, அதை தவிர்க்க முடியாது. ஒன்றன்பின் ஒன்றாகத்தான் வாதங்கள் முன்னேற வேண்டும் என்பதை தாங்கள் அறிய மாட்டீர்களா”, ஒரு பாஸ்டன் நகர கல்வியாளர் பேசும் உச்சரிப்பில் பாகஸ் பேச, நானே அசந்து விட்டேன்.
காரோட்டியின் கண்கள் வியப்பில் விரிந்தன. பாகஸை மேலும் கீழும் பார்த்தார். ஒரு முன்னாள் பேராசியர் இப்போது பைத்தியமாகி உள்ளார் என தீர்மானித்தது போல தோன்றியது. பாகஸ் என்னைச் சுட்டிக் காட்டியவாறே சொன்னார், “என்னோட பையன் ஒங்க காரை சரிப்படுத்துவான்”.
அந்தக் காரோட்டி இந்த பேக்காவது ரிப்பேர் செய்யறதாவது என்ற சந்தேகம் முகத்தில் தெரிய என்னை உற்றுப் பார்த்தார். அதில் தப்பேயில்லை. ஏனென்றால் எனக்கு நிஜமாகவே கார் ரிப்பேர் எல்லாம் தெரியவே தெரியாது. நன் தயங்கினேன். காரோட்டி முகத்தில் பொறுமையின்மை கூத்தாடியது. எல்லாம் உடனே நடக்க வேண்டும் என்ற பணக்காரர்களுக்கே உரிய அவா தெரிந்தது அவர் முகத்தில்.
பாகஸ் என்னை முன்னால் தள்ளினார். “போய்த்தான் பாரேன்” என்றார். நான் முட்டாளாக இருக்கும் உணர்வு எனக்குள். பென்ஸ் காரின் பேனட்டை திறந்து உள்ளே இருந்த காரேமோரே சமாச்சாரங்களை விழித்து பார்த்தவாறு நின்றேன். திடீரென என் கைகள் தாங்களாகவே என்னிச்சையின்றி செயல்பட ஆரம்பித்தன. சில ஒயர்களை இழுத்தேன், சில நட்டுகளை இறுக்கினேன். என்னென்ன செய்தேன் என்பதை சத்தியமாக இன்றுவரைக்கும் நான் அறியேன்.
பாகஸ் காரோட்டியிடம் சொன்னார், “சார், இப்ப இஞ்சினை ஸ்டார் பன்ணூங்க”.
அவரும் ஸ்டார்ட் கீயை இயக்க, இஞ்சின் உயிர்பெற்றது. நான் அவசர அவசரமாக ஆளைவிடு என்னும் மனநிலையில் பேனட்டை மூடினேன். மறுபடியும் உள்ளே பார்க்கும் தைரியம் இல்லை.
அந்த மனிதர் என்னைப் பார்த்தார். “நீங்க நகரத்துள் போகணுமா”
“ஆம்”, என்றேன்.
“ஏறிக்குங்க. நான் உங்களை கொண்டுபோய் விடறேன்".
காரை சுற்றி டிரைவரின் பக்கத்து சீட் இருக்கும் பகுதிக்கு சென்றேன். பாகஸ் என் முதுகில் செல்லமாக தட்டினார். பிறகு பார்ப்போம் என அந்த செய்கை தெளிவாகக் கூறியது. காரோட்டியின் அருகில் அமர்ந்தேன்.
“பை” என்றார் பாகஸ். நான் அவருக்கு டாட்டா காட்டினேன். பென்ஸ் கார் வேகமெடுத்தது. பாகசுக்கு லிஃப்ட் கொடுக்க அந்த மனிதர் ஏன் முன்வரவில்லை என நான் யோசித்தவண்ணம் இருந்தேன். காரில் செல்லும்போது அவர் என்னுடன் பேசினார்.
“என் பெயர் டோரியன் பிளாங்க்”.
பெயர் எனக்கு பரிச்சயமாக இருந்தது, “நீங்கள் நகரத்தின் சிறந்த வக்கீல் அல்லவா”?
நான் கேட்டது அவருக்கு மகிழ்சியாக இருந்தது. “அப்படித்தான்னு நினைக்கிறேன்”.
என் பெயர் “வைட் ஹார்ட்” என்றேன்.
“அந்த கிழவர் உங்கள் அப்பாவா”?
“அப்படியெல்லாம் இல்லை. எனது நெருங்கிய நண்பர் மாதிரி”
“நல்லா படிச்சவர் மாதிரி இருக்கார். பைத்தியமாவதற்கு முன்னால் பேராசிரியராக இருந்திருப்பாரோ.
“அவ்வாறே இருக்க சான்ஸ் இருக்கு”.
“உங்களுக்கு நிச்சயமா தெரியாதா”?
“அவருக்கு ஒரு மாதிரியான செலக்டிவ் அம்னீசியான்னு சொல்லலாம், தன்னோட வாழ்க்கையில சில விஷயங்கள் அவருக்கு ஞாபகத்துல இல்லை”.
“அடேடே. அவரை மாதிரி உச்சரிப்பில் பேச நான் எவ்வளவு ஆயிரம் டாலரும் கொடுக்கத் தயாரா இருக்கேன். அது சரி, நீங்க என்ன பன்ணறீங்க மிஸ்டர் ஹார்ட்"?
“ஒண்ணும் விசேஷமா இல்லை. நான் ஃப்ரீலேன்ஸ் எழுத்தாளன்”.
“அதுல பணம் வரதா”?
“ரொம்பவெல்லாம் இல்லை. உண்மையைச் சொல்லணும்னா, அப்பப்ப என்னோட மகிழ்ச்சிக்காக எழுதுவேன்”.
அவர் உதடுகளை சுழித்தார். என்னை நம்பாதது தெளிவாகத் தெரிந்தது.
“நான் கொஞ்சம் அதிர்ஷ்டம் செஞ்சவன். எங்க தாத்தா வச்ச சொத்து இருக்கு. அதை வச்சுண்டு சௌக்கியமா வாழ முடியும்”.
அவர் அதை ரசிக்கவில்லை என்பது தெளிவாகப் புரிந்தது. வாழ்வில் லட்சியம் ஏதும் இல்லாதவர்கள் அவருக்கு பிடிக்காது என்பதும் புலப்பட்டது.
ப்ரியாண்ட் சதுக்கத்தில் கார் சிவப்பு விளக்குக்காக நின்றது. “நான் இங்கேயே இறங்கிக்கிறேன். வீடு பக்கத்திலேதான்” என நான் கூறிவிட்டு இறங்கி அவரிடம் விடை பெற்றுக் கொண்டேன்.
பச்சை விளக்கு வந்ததும் பென்ஸ் கார் விருட்டென அந்த இடத்தை விட்டு அகன்றது. அது கண் பார்வையிலிருந்து நீங்கியதும் அருகிலுள்ள ஹோட்டலுக்கு சென்று காபி பருகினேன்
பிறகு வீட்டையடைந்தேன். வீடு என்பதை அதை ஒரு கூண்டு எனக்கூறுவதே பொருத்தமானது. குளித்தேன், உடை மாற்றினேன், பிறகு படுக்கையில் வீழ்ந்தேன். போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டேன். இன்னும் 24 மணி நேரம் விடாது தூங்கினாலும் பரவாயில்லை. ஏற்கனவே இந்த வாரத்தின் எட்டாவது நாள் கைக்கு வந்தாயிற்று என சம்பந்தமில்லாமல் தூங்குவதற்கு முன்னால் ஒரு எண்ணம் என் மனதில் ஓடியது.
காலையில் எழுந்ததும் முதல் வேலையாக வெளியில் போடப்பட்டிருந்த பேப்பரை பிரித்து பார்த்தேன். தேதியை பார்த்தால் 13-க்கு பதில் 12 எனக் காட்டியது.
பல் தேய்த்தேன், முகம் கழுவினேன், காப்பி அருந்தினேன், குளித்தேன். இதெல்லாம் நிஜமாக செய்கிறேனா, அல்லது அவையும் கற்பனைதானா என மயங்கினேன். நான் இப்போ வசிப்பது அமெரிக்காவா, இங்கிலாந்தா இந்தியாவா என மயங்கும் ரேஞ்சுக்கு என்ணங்கள் என்னுள் அலைமோதின.
திடீரென பாகஸின் குரல் என் காதுகளில் “அப்படியே லூசுல உடுப்பா. வருவதை அப்பாடியே ஏர்றுக் கொள்” என எனக்கு கூறுவது போன்ற உணர்வு வந்தது. “தினசரி செய்யற வேலையை செய்தால், எல்லாம் சரியாகும். முக்கியமா நீ வழக்கமா செய்யற சுடோக்கு குறுக்கெழுத்து போட்டியை விடாதே” என்று வேறு எனக்கு அது சொல்வதாக ஒரு பிரமை.
பேப்பரை ஒரு எழுத்து விடாமல் படித்தேன். பதினோராம் பக்கத்தைப் பிரித்தேன். சுடோக்கு என்னை வரவேற்றது. மகிழ்ச்சியுடன் பேனாவைக் கையில் எடுத்தேன்.
(தொடரும்)
ஆன்லைனில் ஜெஸ்டஸின் ஆங்கில மூலத்தை வாங்க இங்கே செல்லவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
2 comments:
ஏதோ சொல்வார்களே "கடைவிரித்தேன் கொள்வாரில்லை" என்று, அந்த கதைதான் நினனவுக்கு வருகிறது.
//ஏதோ சொல்வார்களே "கடைவிரித்தேன் கொள்வாரில்லை" என்று, அந்த கதைதான் நினனவுக்கு /வருகிறது//
இந்த பின்னோட்டத்தை நான் போடவில்லை
Post a Comment