எபிசோட் - 28 (03.02.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
ரமேஷும் உமாவும் வீட்டுக்கு வரும்போது அவர்களுக்குள் சுமுக பாவனை மறைந்து விட்டது. அதைபார்க்கும் அவள் மாமனார் மாமியார் திகைக்கின்றனர். காரிலிருந்து இறங்கியதும் வீட்டிற்குள் உமாவை செல்லவிடாமல அவள் கணவன் ரமேஷ் அவளை அசோக்குடன் பேசியதற்காக டோஸ் விடுகிறான். அவள் சொன்ன சமாதானங்களை அவன் பொருட்படுத்தவில்லை. அசோக்கை தான் இனிமேல் பார்க்காமலோ, போனில்கூட பேசாமலோ, எப்போதும் கணவனையே நினைத்து கொண்டிருந்தோ இருந்தால் அப்போதாவது தான் அவனுக்கு நல்ல மனைவி என ரமேஷ் நினைப்பானா என உமா கேட்கிறாள்.
அப்படித்தான் ஒரு பெண் இருக்க வேண்டுமா என சோவின் நண்பர் கேட்க, ஒரு விதத்தில் பார்த்தால் குடும்பத்தில் அமைதி நிலவ அப்படித்தான் இருக்க வேண்டும் என பல இடங்களில் கூறப்பட்டுள்ளது எனவும், வனவாச சமயத்தில் சீதைக்கும் அனசூயை இதைத்தான் வலியுறுத்துகிறார் எனவும் சோ கூறுகிறார்.
இங்கு உமா, அவ்வாறு தான் நடந்து கொண்டாலும் அதையும் நடிப்பு என்றுதான் ரமேஷ் நினைப்பானா என்றும் கேட்டுவிட்டு உள்ளே சொல்கிறாள். என்ன விஷயம் என தாய் கேட்க, ஒன்றும் இல்லை என சொல்லி விட்டு ரமேஷும் உள்ளே செல்கிறான்.
பாகவதர் வீட்டில் அவர் ஆடியோ நாராயணனிடம் ஏமாந்தது குறித்து அவர் மருமகள் ராஜி அவரை போலீசுக்கு அழைத்து சென்று புகார் கொடுத்ததையும், பிறகு பத்திரிகைகளுக்கும் செய்தி கொடுத்ததையும் தன் மனைவியிடம் கூறிய பாகவதர், மருமகளை பாம்பென்று தாண்டுவதா அல்லது பழுதையென கருதுவதா என்பது புரியாமல் இருக்க, அவர்களுக்கு பேசுவதற்கு இணையாக உள்ளே ராஜி தன் கணவனுடன் பேசுகிறாள். தன்னை யாரும் வகைபடுத்திவிட முடியாதபடி நடப்பதை தான் வேண்டுமென்றே செய்வதாக கூறுகிறாள்.
கோவிலில் வைத்து நாதன் அசோக்கை சந்திக்கிறார். அன்று அவனது பிறந்த நாள் என்று அவர் கூற, அதனால் என்ன என அவன் கேட்கிறான். இங்கு இது பற்றி கேள்வி கேட்கும் சோவின் நண்பருக்கு, பிறந்த நாள் கொண்டாடுவது என்பது இப்போதெல்லாம் ரிசுவலாக போனது பற்றி சோ கூறுகிறார். என்ன சாதனையும் இதில் இல்லை என்றும், உண்மை கூறப்போனால் ஒவ்வொரு பிறந்த நாளும் நம்மை மரணத்துக்கு அருகாமைக்கே கொண்டு செல்கிறது என்றும் அவர் கூறுகிறார்.
வீட்டுக்கு வந்து அவன் அன்னை அவன் பிறந்த நாளுக்காக தயாரித்துள்ள விருந்து சாப்பிட வேண்டும் என நாதன் கூற, அசோக் வர மறுக்கிறான். தான் பிட்சை எடுத்துத்தான் சாப்பிட வேண்டும் எனவும் கூறுகிறான். அவனுக்காக தான் வாங்கிய வேட்டி உத்தரியத்தை நாதன் அவனுக்கு அளிக்க முற்படுகிறார். அதை அவர் பிறந்த நாள் பரிசாக இல்லாது, ஒரு பிரம்மச்சாரிக்கு தானமாக தந்தால் தான் வாங்கிக் கொள்வதசக அசோக் கூற நாதன் திகைக்கிறார்.
(தேடுவோம்)
எபிசோட் - 29 (04.02.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
அசோக் தன் பிள்ளை அவனுக்கு எப்படி தானம் என சொல்ல முடியும் என நாதன் திகைக்க, ஒரு நிமிடத்துக்கு தன் அவர் பிள்ளை என்பதை மறக்கும்படி அசோக் கேட்டுக் கொள்ள அவரும் சம்மதிக்கிறார். அசோக் அவரை வணங்கி விட்டு அவர் தரும் தானத்தை பெறுகிறான்.
அப்பா பிள்ளைக்கு தருவது எப்படி தானமாகும் என கேட்கும் தனது நண்பருக்கு சோ தானத்தின் குணங்கள் பற்றி விளக்குகிறார். ஒரு விதத்தில் அசோக் கூறுவது - அதாவது தந்தை பிள்ளைக்கு தானம் தருவது - சாத்திரப்படி பார்த்தால் சரியில்லைதான் என வைத்து கொண்டாலும், தானம் அளிப்பதற்கான சில கட்டுப்பாடுகள் உண்டு என்றும் அதை தனது அப்பா புரிந்து கொள்ள வேண்டும் என அவன் நினைத்திருக்கலாம் எனவும் சோ கூறுகிறார்.
பாகவதர் ஏமாந்தது பற்றிய செய்தி பேப்பரில் வந்திருப்பதை சமையற்கார மாமி வசுமதிக்கு காட்ட, அப்பக்கம் வரும் நாதனும் அதை ஊர்ஜிதம் செய்கிறார். அச்சமயம் அசோக் உள்ளே நுழைகிறான். அவன் நிஜமாகவே நிரந்தரமாக தங்களுடன் இருப்பதற்காகவே வந்து விட்டான் என எண்ணுகிறாள் வசுமதி. ஆனால் அப்படியில்லை என்றும், ஒரு அநாதை ஆசிரமத்துக்காக தான் பழந்துணிகள் கலெக்ட் செய்வதாகவும், அது சம்பந்தமாகவே இங்கும் வந்ததாகவும் அவன் கூறுகிறான்.
வேண்டாவெறுப்பாக அவனிடம் ஒரே ஒரு புடவையை சமையற்கார மாமி மூலமாக கொடுத்தனுப்புகிறாள் வசுமதி. அதை எடுத்துக் கொண்டு கிளம்பும் அவனிடம் சிங்காரம் தானும் துணி தானம் செய்யலாமா என கேட்க, தாராளமாக செய்யலாம் என அசோக்கும் பதிலளிக்கிறான். தன்னிடம் இரண்டு செட் துணிகளை மட்டும் வைத்து கொண்டு மீதியை தானமாக அளிப்பதாக அவன் கூறுகிறான்.
வீட்டை விட்டு வெளியே வரும் வழியில் பாகவதர் உள்ளே வருகிறார். அவர் ஏமாந்த விவரத்தை சிங்காரம் கூற, பாகவதர் வாக்கு தவறியது மிகப்பெரிய குற்றம் என அசோக் மிருதுவாக ஆனால் உறுதியாக அவரிடம் கூறுகிறான். அவரும் பதில் பேச்சு பேசாது ஒத்து கொள்கிறார். தனக்கென சிறிதளவே வைத்து கொண்டு தானம் செய்யும் சிங்காரம் போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என இருப்பதற்கு சிறந்த உதாரணம் என்றும் அசோக் குறிப்பிடுகிறான். பிறகு பாகவதரிடம் விடைபெற்று செல்கிறான்.
அசோக் சொல்வது கேட்கத்தான் நன்றாக இருக்கும் என்றும், இது உண்மையிலேயே சாத்தியமா என சோவின் நண்பர் கேட்க, அது சிரமம்தான் என சோ ஒத்து கொள்கிறார். ஆனால் அதுதான் தேவை என்றும் அவர் கூறுகிறார். ஆசைகளில் மட்டுமல்ல எண்ணங்களுக்கும் ஒரு கணக்கு வேண்டும் எனவும் அதை மீறலாகாது என மகாசுவாமிகள் கூறியிருப்பதையும் அவர் கூறுகிறார்.
உள்ளே வரும் பாகவதரிடம் நாதன் அசோக் பேசியது அதிகப்பிரசங்கம் எனக் கூற, பாகவதர் அவரை மறுத்து அசோக் கூறுவது 100 சதவிகிதம் உண்மை எனவும் தான் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் எனவும் கூறி கலங்குகிறார். போலீசுக்கு போனதில் தன் மானம் சந்தி சிரித்ததுதான் மிச்சம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
அசோக் ஓரிடத்தில் அலைந்து கொண்டிருக்க அவன் தீவிரவாதியாக இருப்பானோ என சந்தேகிக்கும் ஒரு போலீஸ்காரர் அவனை விசாரிக்க துவங்குகிறார்.
(தேடுவோம்)
சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
எங்கே பிராமணன் முதல் பாகத்தில் ஒரு சீன் வரும். நீலகண்டன் திருந்துவது போலவும், சாம்பு சாஸ்திரிகளை அவரும் அவர் மனைவியும் கோவிலில் பார்ப்பது போலவும் வரும் அந்த காட்சி.
அப்போது இருவரும் சாம்பு சாஸ்திரிகளின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது போல காட்சியமைப்பு இருந்தது.
இப்போது இரண்டாம் பாகத்திலும் கோவிலுக்குள் அசோக் தன தந்தையிடம் தானம் வாங்கிக் கொண்டு அவர் காலில் விழுவது போல ஒரு காட்சி இடம் பெற்றது.
கோவிலுக்குள் இறைவனை மட்டுமே வணங்க வேண்டும். மற்றவர்கள் காலில் விழுந்து வணங்குவது கூடாது என்பது மரபு.
இனிமேலாவது இது போல காட்சிகள் வராமல் பார்த்துக் கொண்டால் நல்லது.
Post a Comment