எனது முந்தையப் பதிவில் பதிவர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இட்ட ஒரு பின்னூட்டமே இப்பதிவுக்கு காரணம். அப்பின்னூட்டம் இதோ:
“உதாரணமாக, ஜெயலலிதா காலத்தில் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினார்கள், வேலை செய்யவில்லை! அப்போது ஒரு விஷயம் தெளிவாகவே புரிந்தது, அரசு இயந்திரம் உருப்படியாக இருக்க வேண்டுமானால், அரசு ஊழியர்கள் வேலை செய்யாமல் இருந்தாலே போதுமேன்றோ, அல்லது இவர்கள் செய்ததாகச் சொல்லிக் கொண்ட வேலைகள் எதுவுமே பைசாப் பெறாதது என்பதை, அந்தப் போராட்டம் அழகாக நிரூபித்தது.
நாலாயிரம் ரூபாய் தொகுப்பு ஊதியத்திற்கு எடுக்கப்பட்ட தற்காலிக ஊழியர்களை வைத்து, நிலைமையை சமாளிக்க முடியும் என்பதை அந்தப் போராட்டம், outsourcing ஐப் பயன்படுத்தினால் இன்னும் என்னென்னவெல்லாம் வெளியே வரும் என்பதையும் நிரூபித்தது.
Outsourcing தேவையான இடத்தில் தேவையான அளவில் பயன்படுத்தினால், மிகப் பெரிய பொருளாதார ஊக்கியாக இருக்கவும் முடியும்! அரசின் ஊதாரித்தனமான சம்பளச் செலவைக் குறைக்கவும் முடியும்!
இதற்குக் கண்டனம் தெரிவிக்க ஓடிவருகிறவர்கள், (முதலில் கீழ்க்கண்ட விஷயங்களை அவதானிக்கட்டும்)
முதலில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு செலவிடும் சம்பளம், சலுகைகளுக்கு ஈடாக வேலை செய்கிறார்களா?
மக்களுடைய தேவைகள், எதிர்பார்ப்புக்களை இவர்களால் நிறைவேற்ற முடிகிறதா அல்லது இவர்களால் மக்களுக்கு உபத்திரவம் தான் அதிகமா?
அரசு நிர்வாகத்தின் ஒரு அங்கமாக இருப்பதை விட்டு விட்டு, தங்களுக்கு சலுகைகளை அள்ளி வழங்கும் அரசியல்வாதிகளின் கைப்பாவைகளாக இருக்கிறார்களா இல்லையா”?
இரண்டாம் உலக யுத்தம் முடிந்து ஜெர்மனி மீண்டும் பொருளாதார அற்புதத்தை (Wirtschaftswunder) அனுபவித்தபோது, அவர்கள் சந்தித்த முக்கிய பிரச்சினை ஆள்பலக்குறைவுதான். பல புதிய வேலைகள் உருவாயின, சில வேலைகள் உள்ளூர் மக்களால் நிராகரிக்கப்பட்டன. அவர்றை செய்ய ஆட்கள் அவசியம் தேவை. ஆகவே வெளிநாட்டவர்களை உள்ளே விட்டனர்.
அவர்களை விருந்தாளி தொழிலாளர்கள் (Gastarbeiter) என அழைத்தனர். எல்லாம் நல்லபடியாகவே போயிற்று, பொருளாதார முன்னேற்றம் தொடர்ந்த வரையில். ஆனால் அதற்குள் கிட்டத்தட்ட இரு தலைமுறைகள் புது தொழிலாளர்கள் உள்ளே வந்து விட்டனர். ஜெர்மனியில் இப்போது இருக்கும் பொருளாதார சங்கடத்தில் இந்த வேலையாளிகளை வரவேற்க ரொம்ப பேர் ஆசைப்படுவதில்லை. துருக்கியர்கள், கிழக்கு ஐரோப்பிய நாடினர் ஆகியோர் முக்கியமாக உள்ளூர் மக்களால் தாக்கப்பட்டனர்.
இதற்கு மாறாக அமெரிக்கா, மற்றும் மேற்கத்திய நாடுகளில் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக இருந்து வரும் நிலைமைதான் அவுட்சோர்சிங். அதாவது யாரும் அவர்கள் தேசங்களுக்கு செல்ல மாட்டார்கள். வெளிநாட்டு வேலையாளிகள் அவரவர் நாட்டிலேயே இருப்பார்கள், ஆனால் இணையத்தின் உதவியோடு அவர்கள் அந்தந்த நாட்டின் பல வேலைகளை இந்தியாவிலிருந்தே செய்வார்கள். அந்த நாடுகளில் உள்ள பல கம்பெனிகளில் முழு டிபார்ட்மெண்டுகளே காணாமல் போயின. உதாரணமாக விற்பனைக்கு பிந்தைய சேவைகள், மனிதவளத் துறைகள் ஆகியவை.
இப்போது இதுவும் பல அரசியல்வாதிகளின் கண்களை உறுத்த ஆரம்பித்துள்ளன. அமெரிக்க அதிபர் ஒபாமா தொடங்கி பல நாடுகளில் இந்த அவுட்சோர்சிங் விரோதப் போக்கு நிலவுகிறது. அதை தடுக்க வரிவிதிப்பு சட்டங்களில் திருத்தங்கள் கொண்டுவர எண்ணுகின்றனர். ஆனால் அவையெல்லாம் சுலபமாக நடக்குமா எனத் தெரியவில்லை. எது எப்படியானாலும், அமெரிக்க ஐரோப்பிய சம்பளங்கள் தந்து உள்ளூர் மக்களை முழுநேர வேலையில் ஈடுபடுத்துவது இனிமேல் பிராக்டிகலாக இருக்குமா எனத் தெரியவில்லை.
நமது நாட்டிலேயே மாஃப்வா போன்ற நிறுவனங்கள் பல கம்பெனிகளுக்கா ஆட்களை வேலைக்கு எடுக்கும் சேவையளிக்கின்றன. தனிப்பட்ட முறையில் பெண்ணீன் கல்யாணத்துக்காக முழு சேவைகளையும் ஒப்பந்தத்துக்கு செய்யும் கேட்டரர்ஸ் பெருகிவிட்டனர். எல்லாம் வாழு, வாழவிடு என்னும் பார்வை கோணத்தில்தான் நடக்கின்றன.
நான் செய்யும் வேலையையே எடுத்து கொள்ளுங்கள். முழுநேர மொழிபெயர்ப்பாளர்கள் குறைந்து விட்டனர். என்னைப் போன்ற ஃப்ரீலேன்சர்களே அதிகம். இன்று மொழிபெயர்ப்புகள் தேவைப்படலாம், திடீரென தேவைப்படாமல் போகலாம். அப்போது முழுநேர ஊழியர்களை என்ன செய்வது என்ற பிரச்சினை வரும்? நல்ல வேலை தெரிந்தவர்கள் தாராளமாக கிடைக்கும் நிலையில் அவுட்சோர்சிங் செய்வதே புத்திசாலித்தனம் என்பதை பலரும் உணர்ந்துள்ளனர்.
நான் ஐ.டி.பி.எல்.-ல் வேலை செய்தபோது எங்கள் உதவி பொது மேலாளர் ஜலானி அவர்கள் பேசாமல் கம்பெனி கார்கள் அத்தனையையும் டிஸ்போஸ் செய்து விட்டு வாடகைக் கார்களை வைத்துக் கொள்ள ஆலோசனை கொடுத்தார். அப்போது வேலையில் இருந்த டிரைவர்களை சும்மா உட்காரவைத்து சம்பளம் கொடுத்தாலும், மொத்தத்தில் கம்பெனி பணம் சேமிக்கும் என்பதை ஒரு பெரிய ஆய்வுமூலம் எடுத்து காட்டினார். பதறிப்போன டிரைவர்கள் அவருக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். காரணம் என்ன? அதுவரை அவர்கள் ரிப்பேர் செய்யும் காராஜுகளுடன் கமிஷன் ஒப்பந்தம் போட்டு கொண்டு ஒவ்வொரு வண்டியிலும் மாதாமாதம் ஆயிரக்கணக்கான ரூபாய்கள் பில்லாகும்படி செய்து வந்தது நின்று விடுமே? வெறும் சம்பளத்தை வைத்து சொகுசு வாழ்க்கையெல்லாம் வழமுடியாதே என்பதுதான் அவ்ர்தம் எதிர்ப்புக்கு காரணம்.
ஐ.டி.பி.எல். தொழிலாளர்களின் நிர்ப்பந்தத்துக்கு பணிந்தது அதன் வீழ்ச்சிக்கு இன்னொரு காரணமாக அமைந்தது என்பதைக் கூறவும் வேண்டுமோ?
அன்புடன்,
டோண்டு ராகவன்
நவீன அறிவியலின் வழிமுறைகள்
-
நவீன அறிவியல் என்பது என்ன? அதன் தர்க்கம் என்ன? ‘இதைப்பற்றி இன்னார் ஓர்
ஆய்வேட்டில் சொல்கிறார்’ என்றால் அது அறிவியலுண்மையா? என் சொந்த அனுபவம்
என்றால் அது அற...
10 hours ago
21 comments:
Hi Dondu,
Congrats! Your story titled 'அவுட்சோர்சிங் பற்றி சில எண்ணங்கள்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 6th February 2010 09:50:02 PM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/181178
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
நன்றி தமிலிஷ்
அன்புடன்,
டோண்டு ராகவன்
அருமையான பதிவு.மறுக்கொவோ, மறக்கவோ முடியாத உண்மைகள் நன்றி அய்யா.
யாராவது முன்வந்து, இந்த விஷயத்தைத் தொட்டுப் பேசுகிறார்களா என்று இது வரை காத்திருந்தேன்.
அவுட்சோர்சிங் இனிவரும் காலத்தில் தவிர்க்க முடியாததாகவே ஆகிவிடும் என்பது உறுதியாகிக் கொண்டிருக்கிறது.
இங்கே மாற்றம், படிப்படியாகப் பலதுறைகளிலும் வந்து கொண்டு தான் இருக்கிறது. வெளியே அவ்வளவாகத் தெரியவில்லை.
முன்னால் எதிர்த்துப் பார்த்த தொழிற்சங்கங்கள் எல்லாம், இப்போது ஏதோ ஒரு சின்ன சலுகையைப் பெற்றுக் கொண்டு, சத்தம் அதிகம் போடாமல் ஒத்துக் கொள்கிறார்கள்.
அவுட்சோர்சிங்கில் சில நல்ல விஷயங்கள் இருக்கின்றன.
முதலாவதாக,ஒரு விஷயத்தில் தேவைப்படும் தொழில் நுட்பத்திற்காக, அல்லது ஆட்களைப் பயிற்றுவிக்கிற, அவர்களை மேற்பார்வை பார்க்கிற தொல்லையெல்லாம் கிடையாது.
அடுத்ததாக, ஒரு குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள், ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்து முடித்தாகவேண்டும் என்பது, அனேகமாக எந்த ஒரு நிறுவனத்திலும், தானுடைய ஊழியர்களை வைத்து நடப்பதே இல்லை.
எல்லாவற்றிற்கும் மேலாக, நிறுவனங்கள், வேலையைத் தகுதியுள்ளவர்களிடம் ஒப்படைத்து விட்டு, முக்கியமான வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவதற்கு, இந்த முறை பெரிதும் கை கொடுக்கிறது.
கடைசியாக, செலவு கம்மியாக ஆகிறது.
இப்படித் தேவைப்படுகிற சேவைகளை, அவுட்சோர்சிங் முறையில் தகுதியுள்ளவர்களிடமிருந்து பெறுவதில்,புதிய வாய்ப்புக்கள் நிறைய உருவாகின்றன. போட்டிச் சந்தையில், திறமைக்கு அதிக முன்னுரிமை அளித்தே ஆக வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
இங்கே அரசு, அரசு நிர்வாகம், அரசு ஊழியர்கள் என்று பார்த்தால், வெறும் வேலை, சம்பளம் என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், சேர்த்துப் பார்க்க வேண்டிய நிறைய விஷயங்கள் இருக்கின்றன.
முதலில், அரசு இயந்திரம், அதன் ஜனங்களுக்குப் புரியக் கூடியதாக, சிநேகிதபூர்வமாக இருக்க வேண்டும். இங்கே நாம் பழைய பிரிட்டிஷ் முறையையே வைத்துக் கொண்டிருப்பதில், வெள்ளைத் துறைக்குப் பதிலாக வேறொரு உள்ளூர்த் துறைக்கு கைகட்டி அடிமை மாதிரி நடத்தப் படுகிற தன்மை தான் இருக்கிறது.
ஒரு சின்ன விஷயம், அதை முடிவெடுப்பதில் கூட ஏகப்பட்ட ஏறுவரிசை, இறங்குவரிசையில் கோப்புக்கள் தயாராகிக் கடைசியில், முடிவு மட்டும் எடுக்கப் படாமல் இருக்கும் ஒரு முட்டாள்தனமான அரசு நிர்வாகத்தைத் தான் நாம் சுமந்து கொண்டிருக்கிறோம்.
நிலவரி, அதன் வருமானம் தான் பிரதானம் என்ற நிலையில் ரெவின்யூ டிபார்ட்மென்ட் என்ற ஒன்று ப்ரிடிஷ்காரர்களால் கொண்டுவரப்பட்டது. ஐ சி எஸ் தேர்வில் வெற்றி பெற, ஒரு மாவட்டத்தைப் பற்றிய அத்தனை விவரங்களும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று இருந்தது. இன்றோ?
ஆட்டுக்கு தாடி எதற்கு? மாநிலத்துக்கு கவர்னர் எதற்கு என்றெல்லாம் கேட்டவர்கள், முக்கியமாகக் கேட்டிருக்க வேண்டிய கேள்வி மாவட்ட ஆட்சித் தலைவர் என்று ஒருவர் எதற்கு?
நிர்வாகத்தின் பலவகையான அடுக்குமுறைகள் எப்போதுமே குழப்பத்தைத் தவிர வேறோன்றையுமே சாதித்ததில்லை.
அரசு, அரசு நடைமுறைகளைப் பொறுத்தவரை, முதலில் வேண்டியது நிர்வாகத்தில் இருக்கும் கழுதை ரேஸ் முறையை ஒழித்து, சுருக்கமான, நேரிடையான அதிகார அமைப்பு.
இப்போதிருக்கும் நடைமுறையில், ஒரு அரசு ஊழியர் நேர்மையாகப் பணியாற்றுகிறார் என்று கற்பனைக்கு வைத்துக் கொண்டாலுமே கூட, அதனால் ஜனங்களுக்கு எந்தவிதமான பயனும் இருக்காது.
அடுத்தது, மற்ற வணிக நிறுவனங்களுக்கும் அரசுக்கும் முக்கியமான வேறுபாடு, மற்ற நிறுவனங்கள், வணிக நிறுவனமாகவோ, தர்ம ஸ்தாபனமாகவோ இருக்க முடியும்.
அரசு என்பது ஒரு குறைந்தபட்ச வேலைகளை, பொது நலனுக்காக நிர்வகிக்கும் சேவை அமைப்பாக மட்டுமே, ஜனநாயகத்தில் நீடிக்க முடியும்.
வரிப்பணத்தை வீணடிக்கவோ, விரயம் செய்யவோ எவருக்கும் உரிமையில்லை. இதை மனதில் வைத்துக் கொண்டு பார்த்தால், அரசு ஊழியர்களுடைய சம்பள செலவினங்களுக்கே, வரி வருவாயில் அறுபது சதவீதத்துக்கு மேல் செலவாகி விடுகிறது. எதற்காக வரி வசூலிக்கப் படுகிறதோ அந்தக் காரியம் நடப்பதே இல்லை.
இந்த விஷயங்களையும் சேர்த்துக் கொண்டு, இன்னும் பேச வேண்டியவை இருக்கின்றன, இந்த விஷயத்தில் பின்னூட்டமாகவோ, அல்லது தங்களுடைய கருத்தாகவோ தெரிவித்தால், அது பயனுள்ளதாக இருக்கும்.
வெறும் வசவு, காழ்ப்புணர்வுடன் வரும் பின்னூட்டங்களுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்கவேண்டிய நிலை தவிர்க்கப் படும்.
பேசலாமே!
எந்த முன்னேற்ற பாதைக்கும் தடைக்கல் அறிவாள் சுத்திகளால் தான் முதலில் வரும்.
கொஞ்சமும் ஞாய உணர்ச்சி இல்லாத மனிதர்கள் தான் யூனியன்களில் தலைவர்களாக இருக்கிறார்கள். அனைத்து யூனியன்களும் வேலை செய்யாமல் சம்பளம் வாங்குவது எப்படி என்று டாக்டர் பட்டம் வாங்கும் அளவுக்கு ஆராய்ச்சி செய்து வைத்திருக்கின்றன. அவர்கள் அதில் பயன் படுத்தும் மூளையை தங்கள் செய்ய சம்பளம் வாங்கும் வேலையில் செலவு செய்திருந்தால் இந்தியர்கள் இன்னேரம் அவுட் சோர்சிங்க் என்று அமேரிக்க கம்பெனிகளின் வேலையைச் செய்து சம்பாதிக்கும் நிலையில் இருக்க மாட்டார்கள்.
//
எல்லாம் வாழு, வாழவிடு என்னும் பார்வை கோணத்தில்தான் நடக்கின்றன.
//
சொன்னாலும் சொன்னீங்க, இது நூத்துல ஒரு வார்த்தை...
நான் வாழ நீ சகனும் என்ற ஒரே உன்னதக் கோட்பாட்டுடன் வாழ்ந்துகொண்டிருக்கும், pardon my language, கம்யூனிஸ்டு கழிசடைகளும் பாட்டாளி வர்கத்து பெண்kuri களும்(எல்லாம் அவர்கள் பயன் படுத்தும் மார்க்ஸ்வாத மந்திரங்கள் தான்!) இதை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்.
திரு.வஜ்ரா!
டோண்டு ராகவனின் யோம் கிப்பூர் பதிவுகளை இருந்து, உங்களை, உங்களது பதிவுகள், பின்னூட்டங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன்.
எந்த முன்னேற்றப்பாதையை இப்போது ஆண்டுகொண்டிருப்பவர்கள், அல்லது கொஞ்ச காலமே ஆண்டாலும் உங்கள் அபிமானத்துக்குரியவர்கள் தேர்ந்தெடுத்துச் செயல்பட்டார்கள், அரிவாள் சுத்தியல் அதற்கு முட்டுக் கட்டையாக எப்படி இருந்தது என்பதைக் கொஞ்சம் விவரமாக, அல்லது ஆதாரத்தோடு எழுதியிருந்தால் நன்றாக இருக்கும்.
ஆத்திரம் அறிவை மறைக்கும்போது, அங்கே வேகமாக முன்வருவது கழிசடையான மொழி மட்டும் தான் என்பதை நீங்களும் நிரூபித்திருக்கிறீர்கள்.
கம்யூனிஸ்டுகளிடம் குறைசொல்வதற்கு நிறைய இருக்கின்றன, ஆனால் அவர்களைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் வாய்க்கு வந்தபடி பேசுவதனால் மட்டும் எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை.
/இந்தியர்கள் இன்னேரம் அவுட் சோர்சிங்க் என்று அமேரிக்க கம்பெனிகளின் வேலையைச் செய்து சம்பாதிக்கும் நிலையில் இருக்க மாட்டார்கள்./
நீங்கள் சொல்வதைப் பார்த்தால் எதோ அமெரிக்க கம்பனிகள் வந்து வலுக்கட்டாயமாக அவுட்சோர்சிங் முறையை இந்தியர்கள் மீது திணித்து விட்டதாகப் படுகிறது.
கோணல் பார்வையைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், கிடைத்த வாய்ப்பை இந்தியர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்ட விதம் தெரியும்.
அரசு, ஆளுபவர்கள் தயவு இல்லாமலேயே, இந்தத் துறை தன்னை வளர்த்துக் கொண்டதும் புரியும்! இது தானாகவே தன்னை வளர்த்துக் கொண்ட துறை.
பதிவின் உள்ளடக்கத்தை ஒட்டி, அதன் மீது உங்களுடைய கருத்து, படிப்பவர்களுக்க்கு உபயோகப்படும் விதத்தில் இருக்குமேயானால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.
//நீங்கள் சொல்வதைப் பார்த்தால் எதோ அமெரிக்க கம்பனிகள் வந்து வலுக்கட்டாயமாக அவுட்சோர்சிங் முறையை இந்தியர்கள் மீது திணித்து விட்டதாகப் படுகிறது.//
வஜ்ரா அந்த பொருளில் சொல்லவில்லை என நினைக்கிறேன்.
கம்யூனிஸ்டுகளால் மிகவும் ஆக்கிரமிப்புகளுக்கு உட்படுத்தப்பட்ட யூனியன்களின் செயல்பாடு கம்பெனிகள் இயற்கையான முன்னேற்றம் பெறுவதிலிருந்து தடுத்து வந்துள்ளது. அந்த யூனியன்களுக்கு சோஷலிச சார்பு கொண்ட மத்திய/மாநில அரசுகள் ஆதரவு தந்ததும் நிலைமையை மோசமாக்கியது.
இவ்வாறெல்லாம் நடக்காது இருந்திருந்தால் இந்தியாவிலேயே பொருளாதார முன்னேற்றம் தொழில் முன்னேற்றம் ஆகியவை ஏற்பட்டிருக்கும், ஆகவே அவுட்சோர்சிங் வேலைகள் மேல் அத்தனை சார்பு வந்திருக்காது என்றுதான் வஜ்ரா சொல்ல முயன்றிருக்கிறார் என நான் கருதுகிறேன்.
இந்தியாவில் தொழிற்சங்கவாதிகள் உரிமைகள் பற்றி மட்டும் பேசினார்கள். கடமைகளை மறந்தார்கள். யூனியன் நிர்வாகிகள் பெரும்பாலும் முழுநேரமும் யூனியன் ஆபீசுகளிலேயே இருந்து, தாங்கள் எந்த வேலைக்காக சம்பளம் வாங்கினார்களோ அந்தச் வேலையைச் செய்வதில் சுணக்கம் காட்டினார்கள் என்பதே நிஜம்.
மத்திய நிலக்கரி சுரங்களில் இருக்கும் யூனியன் லீடர்கள் தனிப்பட்ட முறையில் செல்வம் ஈட்டும் மாஃபியாக்கள் ஆயினர்.
அவர்களில் பெரும்பாலானோர் சுத்தியல் அரிவாள்காரர்கள்.
அதைத்தான் வஜ்ரா கூற முயன்றுள்ளார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்பான நண்பர் திரு டோண்டு,
ஒரு முக்கிய விடயம் விடப்பட்டு விட்டது! வேலை செய்பவர்களுக்கு ஊக்கம், சூழல், வேண்டிய வசதிகள், போன்ற பல விடயங்கள் தேவை! வேலை மட்டுமே செய் என்பது thinking in isolation தான்! உதாரணத்திற்கு ஒரு நம்ம ஊரு local போலீஸ் நிலையத்தை எடுத்துக்கொள்ளுங்கள்! சுமார் ஐம்பது வருடத்திற்கு முன்பு இவைகள் எப்படி இருந்ததோ, ஒரு முன்னேற்றமும் இல்லாமல் இப்பொழுதும் அப்படியே தான் இருக்கிறது! என்ன, இபோழுது போலீஸ்காரர்களிடம் செல் போன் உள்ளது! அதுவும் அவர்களின் சொந்தத காசு அது! மற்ற நாடுகளுடன் (அதாவது முன்னேறும் நாடுகளுடன்) நீங்கள் compare செய்தீர்களானால், நம் நாட்டின் காவல் நிலையங்கள் என்ன, மற்ற எல்லா இடங்களும் சுமார் ஐம்பது வருடங்கள் பின் தங்கியே இருக்கின்றன! Where is the upgradation, where is the maintenance and where is the monitoring?
அரசு அலுவலகங்களில் யாரும் வேலை செய்வது இல்லை என்பது ஒரு பக்கம். அது உண்மையென்று எல்லோருக்கும் தெரியும் மேலும் கண்கூடாக பார்க்கலாம்! அதே சமயம், நம் அரசு பேருந்துகளில் டிக்கெட் கொடுப்பவர் செய்யும் வேலை, வேறு எங்கும் நீங்கள் பார்க்கமுடியாத உழைப்பு! இந்த பேருந்துகளை ஓட்டுபவரும் பாவம்! இடமே இல்லாத, ஆக்கிரமிக்கப்பட்ட தெருக்கள், கண்டபடி ஓடும் இரு சக்கர வாகனங்கள், சரியாக பராமரிக்க படாத பேருந்துகள் போன்றவைகளை தாண்டி இவர்கள் நேரத்திற்கு பொய் சேரவேண்டும். இல்லையேல், வசவு (பொது மக்களிடம் மற்றும் மேல் அதிகாரிகளிடம்)
மற்றும் மெமோ! என்ன அராஜகம் சார் இது??? இந்த ஊரிலெல்லாம் வண்டி ஓட்டுவது சுலபம்! யாரும் குறுக்கே வர மாட்டார்கள், பயமில்லை, மற்றும் அருமையான (அருமை என்பது மிக சாதாரணமான வார்த்தை) சாலைகள்! ஆனால் சென்னையில் அல்லது தமிழகத்தில் எந்த ஒரு ஊரிலும் பெரிய வண்டிகளை ஊட்டுவது என்பது எல்லோருக்கும் ரத்தக்கொதிப்பை உண்டாக்கும் விடயம்!
சொல்ல வருவது என்னவென்றால், அரசு அலுவலர்கள் வேலை செய்யாததற்கு காரணங்கள் அவர்கள் மட்டுமே அல்ல!!! ஆதலால், இவைகளை outsource செய்வது என்பது ஒரு முழுமையான மற்று செயல்பாடு அல்ல!
அன்பான நண்பர் திரு கிருஷ்ணமூர்த்தி,
நீங்களும் மேல் சொன்ன கருத்துகளை போலதான் எழுதிருகிரீர்கள் என்பதை புரிந்துகொண்டேன்!
ஒரு நோட், அதாவது நீங்கள் கம்யூனிஸ்ட்களை ஆதாரத்துடன் எதிர்கொள்ளவேண்டும் என்பதைப்போன்ற கருத்துகொண்டு திரு வஜ்ராவிற்கு பதில் எழுதியது போல புரிந்து கொண்டேன்! என் புரிதல் சரியென்றால், நீங்கள் திரு வினவு அவர்களின் தளத்திற்கு வந்து பாருங்கள்! அவர்கள் எழுதும் கட்டுரைகளுக்கு நான்
பதில் எழுதிக்கொண்டிருக்கிறேன், ஆதாரங்களுடன்! எப்படியும் அவர்கள் 95% பின்னூட்டத்தை எப்படியும் அழித்துவிடுவார்கள் (கட்டுரைக்க ஒவ்வாத பின்னூட்டம் என்ற எடம் வைத்திருக்கிறார்கள், அதில் இருக்கும்) . சிலதை போடுவார்கள். நேரம் கிடைத்தால் பாருங்கள்!
நன்றி
திருவாளர்.நோ!
வினவு மாதிரித் தளங்களில் எழுதுவதற்கெல்லாம் பதில் சொல்வதை விட எனக்கு உருப்படியான வேலைகள், வாசிப்பு நிறைய இருக்கிறது.
டோண்டு சார்!
வஜ்ரா என்ன நினைப்பில் எழுதினார் என்பது அவர் வார்த்தைகளிலேயே இருக்கிறது.
தொழிற்சங்கங்கள் என்பவை பக்க விளைவு தான்! ஆணிவேர், தொழில் நடத்துபவர்களின் அணுகுமுறையில் மட்டுமே இருக்கிறது. அது சரியாக இல்லாத போது, தொழிற்சங்கங்கள் தவிர்க்க முடியாதவையே!
நான் ஒரு தொழிற்சங்கவாதியாக இருந்தவன், அதே நேரம் உரிமை என்பது கடமையோடு சம்பந்தப் பட்டது என்பதையுமே புரிந்து கொண்டிருப்பவன்.
வீணாக, ஒரு தரப்பை மட்டுமே குற்றம் சாட்டிக் கொண்டு நேரத்தை வீனடிப்பதைவிட, இந்தப் பிரச்சினையின் தன்மை என்ன, இதற்கு மாற்று இருக்கிறதா, அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விகளோடு மட்டும் ஒரு பிரச்சினையை அணுகுவது மட்டுமே சரியாக இருக்கும் என்று நம்புகிறேன்!
உதாரணமாக, இன்றைக்கு நமக்குப் பயன்படாத அரசு இயந்திரம், நிர்வாகம் எல்லாம், அரிவாள் சுத்தியல் சம்பந்தப்படாத சுத்த சுயம்ப்ரகாசமான ஊழலுக்கு மட்டுமே விளைநிலமாக இருக்கும் பிரிட்டிஷ் இறக்குமதி. அது உருப்படியாகச் செயல் படுகிறதா, செயல்பட வைக்க முடியுமா என்ற கேள்வியை முதல் பின்னூட்டத்தில் எழுப்பியிருந்தேன்.
இங்கே ஆளும் கட்சியாக எவர் வந்தபோதும் சோஷலிசம் பேசியே ஆக வேண்டிய நிர்பந்தம்! ஏன், பிஜேபி கூடத் தான் ஒரு சமயத்தில் காந்தீய சோஷலிசம் பேசினார்கள்!
அடுத்து, வேலை செய்பவர்களைக் குறித்து! வேலை செய்பவர்களை மட்டுமே குறை சொல்வதில் பயனில்லை. நிர்வாகம் எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பதுமே, வேலை செய்பவர்களின் தரத்தை நிர்ணயிக்கும் காரணிகளில் முக்கியமானதாக இருக்கிறது!
கொஞ்சம் புரிந்து கொண்டு இன்னும் பேசுவோம்!
தங்களின் கருத்துக்களையும் படித்தேன். மற்றவர்களின் பின்னூட்டங்களையும் படித்தேன். இதில் அரசு ஊழியர்களைப் பற்றியும்,சங்களைப் பற்றியும் படித்தேன். டேண்டுவின் நிலை ஏற்ப்புடையது. ஆனால் அங்கும் ஏமறுவபன், ஏய்ப்பவன் என்ற இரண்டு வகை உண்டு. ஏமாறுவபன் நிலை பரிதாபம், ஏமாற்றுவன் நிலை கொண்ட்டாட்டம் என்றுதான் உள்ளது. குறிப்பாக தொ.மு.சா போன்ற சங்களின் செயல்பாடு வஜ்ராவின் சொல்லில் நியாயம் இருப்பது போல இருந்தாலும். தனியார் நிறுவனங்களில் கசக்கிப் பிழியும் வர்த்தக நிறுவனங்களில் தோழர்களின் சேவை நிறைவாக உள்ளது. கம்யூனிஸ்ட்கள் மட்டும் இல்லை என்றால் குறைந்த பட்ச ஊழியம்,சரியான வேலை நேரம் எனபது இருக்காது என்பதை கோவை மற்றும் திருப்பூர் போன்ற நகரங்களின் நிறுவனங்களைக் கண்டு அறியலாம். நன்றி.
//
கம்யூனிஸ்டுகளால் மிகவும் ஆக்கிரமிப்புகளுக்கு உட்படுத்தப்பட்ட யூனியன்களின் செயல்பாடு கம்பெனிகள் இயற்கையான முன்னேற்றம் பெறுவதிலிருந்து தடுத்து வந்துள்ளது. அந்த யூனியன்களுக்கு சோஷலிச சார்பு கொண்ட மத்திய/மாநில அரசுகள் ஆதரவு தந்ததும் நிலைமையை மோசமாக்கியது.
இவ்வாறெல்லாம் நடக்காது இருந்திருந்தால் இந்தியாவிலேயே பொருளாதார முன்னேற்றம் தொழில் முன்னேற்றம் ஆகியவை ஏற்பட்டிருக்கும், ஆகவே அவுட்சோர்சிங் வேலைகள் மேல் அத்தனை சார்பு வந்திருக்காது என்றுதான் வஜ்ரா சொல்ல முயன்றிருக்கிறார் என நான் கருதுகிறேன்.
//
தெளிவு படுத்தியதற்கு நன்றி டோண்டு சார்.
...
நாய் வேசம் போட்டால் குரைத்துத்தான் ஆகவேண்டும் என்பது போல பா.ஜ.க கூட சோசியலிசம் பேசியே வந்துள்ளது அதற்கு அரசியல் காரணத்தைத் தவிர்த்து வேறு முக்கிய காரணம் ஒன்று உண்டு, சோசியலிசத்தை கடைபிடிக்கும் கட்சியாக இருந்தால் மட்டுமே கட்சிக்கு அங்கீகாரம் வழங்கப்படும் என்று சட்டம் உள்ளது.
//
வீணாக, ஒரு தரப்பை மட்டுமே குற்றம் சாட்டிக் கொண்டு நேரத்தை வீனடிப்பதைவிட, இந்தப் பிரச்சினையின் தன்மை என்ன, இதற்கு மாற்று இருக்கிறதா, அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விகளோடு மட்டும் ஒரு பிரச்சினையை அணுகுவது மட்டுமே சரியாக இருக்கும் என்று நம்புகிறேன்!
//
அதையே நீங்களும் (தொழிற்சங்கவாதிகளும்) செய்தால் நன்றாக இருக்கும்.
சும்மா சும்மா பந்த், ஹர்தால், ஸ்ட்ரைக் என்றால் மக்கள் வாழ தாங்களே வழி செய்து கொள்வார்கள். உங்கள் வேலைகளை அவுட் சோர்ஸ் செய்து உங்களை வேலையைவிட்டு நீக்கிவிடவும் வாய்ப்பு உள்ளது.
வேலை போகும் பயம் மட்டுமே ஒருவனை வேலை செய்ய வைக்கும். இது தான் உண்மை. வேலை போகாது என்றால் அவன் உழைக்கவே மாட்டான்.
அரசு வேலைகளில் நடக்கும் விஷயம் இது: வேலை பார்ப்பவனுக்கு வேலை கொடு, வேலை பார்க்காதவனுக்கு சம்பளம் கொடு, பிரமோஷன் கொடு...என்பது. எல்லாம் யூனியனைஸ்ட் லேபர்களால் வந்த வினை.
வேலை பார்ப்பவன் எவ்வளவ் நாள் தான் தன்மானத்தை இழந்து இப்படி வேலை பார்ப்பான் ? பிரைவேட் கம்பெனிக்குத் தாவிவிடுவான். யாருக்கு இழப்பு ?
கம்யூனிஸ்டுகளால் நிகழக்கூடிய நன்மைகளாகக் கருதப்படும் உழைக்கும் நேரம், சரியான சம்பளம் எல்லாம் நிர்வாகம் செய்துவிட்டால் அவர்களது தேவை இல்லாமல் போய் அவர்கள் (as a species) அழிந்து போவார்கள்.
கம்யூனிஸ்டுகள் நாட்டின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடுபவர்கள் என்பதற்கு இந்திய அரசு இயந்திரம் இயங்கும் விதத்திலேயே தெரியும்.
கம்ப்யூட்டர் முதல் செல் போன் கொண்டு வந்த தனியார்மயம் வரை கடுமையாக இன்றும் எதிர்ப்பவர்கள் அறிவாள் சுத்தி கோஷ்டி தான்.
ஏன் என்றால் அவர்களின் தேவை இனி இல்லாமல் போக அது வாய்ப்பளிப்பத்தால் அதை எதிர்க்கிறார்கள்.
It becomes a question of existence for commies.
நேரடிய விஷயத்துக்கு வருகிறன்.
இந்த அகவிலைப்படி (DA ?) அப்படிங்கற component நிறுத்தினா அனைத்தும் வழிக்கு வரும்...
Outsourcing itself will become waste once this is done!
All Government projects go beyond Costs because of this. There is no precise 'Control of Cost' for any project.
*All college students should be made to work 1 year in Government project (Field work)
Outsourcing - should only be done for UNKNOWN expertise. My opinion.
//
ஆத்திரம் அறிவை மறைக்கும்போது, அங்கே வேகமாக முன்வருவது கழிசடையான மொழி மட்டும் தான் என்பதை நீங்களும் நிரூபித்திருக்கிறீர்கள்.
//
அந்த மொழியெல்லாம் எனக்கு கம்யூனிஸ்டுகள் தான் சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள்.
ரொம்ப நன்றி.
உங்கள் சில கருத்துக்களுடன் நான் உடன்பட்டுத்தான் ஆகவேண்டும். உங்களுக்குப் பட்டறிவு அதிகம் என்று நினைக்கிறேன். சரியாகத் தான் சிலவிஷயங்கள் சொல்லியிருக்கிறீர்கள்.
ஆனால், என் கம்யூனிஸ வெறுப்பு ஆதாரமற்றது என்பது உங்கள் குற்றச்சாட்டாக இருப்பின் அதற்கு ஆதாரம் எல்லாம் தந்து விழக்கும் மூடில் நான் இல்லை. எனக்கு அவுங்கன்னா ஒரு அலர்ஜி. நல்லவங்களா கூட இருக்கலாம். கம்யூனிஸ்ட் என்றால் வேண்டாம். அவ்வளவு தான்.
அனானி எழுப்பியிருந்த அகவிலைப்படி, அல்லது பஞ்சப்படியை நீக்கி விட்டால்..குறித்து.
இரண்டாம் உலகப்போர் முடிவில், இங்கே பதுக்கலும் கள்ள மார்க்கெட்டும் தலைவிரித்தாடிய போது, வேலை செய்து பிழைத்தவர்கள் போராட்டத்திற்குத் தள்ளப் பட்ட நிலையில், பிரிட்டிஷ் அரசே வழங்கிய அல்லது இறங்கி வந்து ஒத்துக் கொண்டாக வேண்டியதாக, விலைவாசியை ஒரு அளவுக்காவது சமாளிக்கக் கூடிய சம்பளம் என்பது ஆனது.
அகவிளைப்படியே வேண்டாம்! போது விநியோக முறையில் உள்ள குளறுபடிகளை ஒழித்து, விலைவாசியை ஒரு கட்டுக்குள் வைத்திருக்க அரசு முன்வந்தால் போதுமே!
1977 ஜனதாக் கட்சி ஆட்சியில் இருந்த கொஞ்ச காலத்திலேயே, விலைவாசி உயர்வைக் கட்டுப் படுத்துவதில் கணிசமான வெற்றியைப் பெற்ற கதையைக் கொஞ்சம் திருப்பிப் பார்த்தாலே போதும்.
அடுத்து, திரு வஜ்ரா!
உங்களுடைய, திரு அரவிந்தன் நீல கண்டனுடைய மிக நல்ல பதிவுகளைப் படித்திருக்கிறேன். இருவரிடமும் இருக்கும் நல்ல அம்சங்களையும், அறிவேன்.
சோஷலிசம் அரசியல் சாசனத்தில் கோட்பாடு அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், சட்டபூர்வமான நிர்பந்தம் எல்லாம் கிடையாது.
ஜனசங்க அடையாளத்தை உதறிவிட்டுப் புது வேஷம் கட்டிக் கொண்டார்கள்! பாரதீய ஜனதா கட்சியாகப் பேர் மாற்றிக் கொண்டு, காந்தீய சோஷலிசம் எங்களுடைய கொள்கை என்று பிரகடனப்படுத்திக் கொண்ட போது, கெக்கலி கொட்டி சிரிக்கிற விஷயமாக அது இருந்தது.
காந்தி, சோஷலிசம் இரண்டையும் வெறுத்த ஒரு கும்பல், திடீரென்று இரண்டையும் சேர்த்துத் திருநீறாகப் பட்டை போட்டுக் கொண்டு வந்த போது ஜனங்கள் அதை நம்பவில்லை என்பது தெளிவாகவே அவர்களுக்கு தேர்தல் முடிவுகள் சொல்லியது.
அப்புறம், அவர்களே மறந்து போன விஷயமாகவும் போனது!
நான் இங்கே காம்ரேடுகளை ஆதரித்தோ, தொழிற்சங்க வாதியாகவோ பேசவில்லை!
எனக்கென்று சுயமான அரசியல், ஆன்மீகக் கருத்துக்கள் இருக்கின்றன.என்னுடைய வலைப்பக்கங்களில் அதைத் தெரிந்து கொள்ளலாம்.
நான் சொன்னதில் எந்தத் தீர்வும் உங்களுக்கு ஒப்பக் கூடியதாக இல்லை என்றால் உங்கள் தீர்வாக என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதையாவது சொல்லலாமே?
//சோஷலிசம் அரசியல் சாசனத்தில் கோட்பாடு அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், சட்டபூர்வமான நிர்பந்தம் எல்லாம் கிடையாது.//
நீங்கள் கூறுவது போல இல்லை என்றுதான் நினைக்கிறேன்.
இது பற்றி நான் இரண்டு பதிவுகள் போட்டுள்ளேன், அவற்றை பின்னூட்டங்களுடன் பார்க்க:
http://dondu.blogspot.com/2008/01/blog-post.html
http://dondu.blogspot.com/2008/08/blog-post_13.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார்,
42 ஆவது, அப்புறம் 44 ஆவது சட்டத் திருத்தம் பற்றிய நினைவு எனக்கு இருக்கிறது. அது இந்தியாவை, ஒரு சோஷலிச நாடாக பெயின்ட் அடித்து மாற்ற இந்திரா எடுத்த அரசியல் ஸ்டன்ட் என்பதும், அதை நீக்கியது அதே மாதிரி இன்னொரு அரசியல் ஸ்டன்ட் என்பது வரை சரி.
அரசியல் கட்சிகள், சோஷலிசத்தை தங்களுடைய கொள்கையாக ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்ற நிர்பந்தம் எப்போதுமே சட்டரீதியாக இருந்ததில்லை என்று மட்டும் தான் நான் சொன்னேன்.
காந்தியையும், சோஷலிசத்தையும் சேர்த்து, ஜனசங்கம், தனக்குப் புதிய அடையாளம் தேடிக்கொள்ள எடுத்த முயற்சியைப் பற்றியோ, அது தோல்வியடைந்து வேறு வேறு அவதாரங்களை எடுக்க வேண்டி வந்ததைப் பற்றியோ பேசிக்கொண்டிருப்பது பதிவின் உள்ளடக்கத்தை விட்டு நாம் விலகி போய்க்கொண்டிருக்கிறோம் என்பதை மட்டுமே காட்டுகிறது.
இந்தப் பதிவில் அவுட்சோர்சிங் முறை, தவிர்க்கமுடியாதது, அதை அரசு ஊக்குவித்து ஒன்றும் வளரவில்லை, வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட சாமர்த்தியம் சிலரிடம் இருந்ததால் தானாகவே வளர்ந்த துறை, அடுத்து அரசு ஊழியர்கள் வேலை செய்வதில்லை என்பது ஒருபுறம், அப்படி அவர்கள் வேலை செய்து விட்டால் மட்டும் இப்போதிருக்கும் முறையில் எந்த உருப்படியான பலனும் ஜனங்களுக்குக் கிடைக்கப்போவதில்லை என்பதாக சில கருத்துக்களை முன்வைத்திருக்கிறேன்.
@கிருஷ்ணமூர்த்தி
நீங்கள் சொலவ்தும் உண்மைதான். இனிமேல் என்ன செய்ய வேண்டுமென்பதை மட்டும் பார்ப்பதே நலமாக இருக்கும். இருப்பினும் இந்த நிலைமை ஏன் வந்தது என அறிந்து கொள்வதும் நலம். அப்போதுதன் ஜாக்கிரதையாக இருந்து சரித்திரம் திரும்பவும் நடக்க வாய்ப்பு தராது தவிர்க்கலாம்.
அரசு யந்திரத்தை கட்டுப்பாடின்றி விட்டால் என்ன நடக்கும் என்பது குறித்து நான் சிந்தித்ததை ”அடியைப்பிடிடா பாரதபட்டா” என்னும் பதிவு போட்டுள்ளேன். பார்க்க: http://dondu.blogspot.com/2008/11/blog-post_20.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
//
அரசியல் கட்சிகள், சோஷலிசத்தை தங்களுடைய கொள்கையாக ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்ற நிர்பந்தம் எப்போதுமே சட்டரீதியாக இருந்ததில்லை என்று மட்டும் தான் நான் சொன்னேன்.
//
ஆனால் கட்சி ஆரம்பிப்பவர்கள் அதை கொள்கை ரீதியில் கடைபிடிப்பதாக பொய் சொல்லியே ஆகவேண்டும். இல்லையென்றால் கட்சிக்கு அங்கீகாரம் வழங்கப்பட மாட்டாது.
//
அவுட்சோர்சிங் முறை, தவிர்க்கமுடியாதது, அதை அரசு ஊக்குவித்து ஒன்றும் வளரவில்லை, வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட சாமர்த்தியம் சிலரிடம் இருந்ததால் தானாகவே வளர்ந்த துறை,
//
அரசு ஊக்குவிப்பு பெறாத துறை என்பது சரி. ஆனால் அது ஏன் தானாக உருவாக வேண்டும் ?
necessity is the mother of invention என்பதை நாம் கொஞ்சம் ஞாபகப்படுத்திக்கொள்வது நல்லது.
லைசன்ஸ் பெர்மிட் ராஜ் மூலம் அனைத்து வியாபாரங்களையும் கிட்டத்தட்ட நொடித்துவிட்ட அரசின் கீழ் வாழும் மக்கள் வாழ தாங்களே வழி தேடிய போது கிடைத்த வழி அவுட்சோர்ஸிங்கில் சம்பாதிப்பது. நம் உழைப்புக்கு சொந்த நாட்டில் மதிப்பு இல்லாத போது அது வெளிநாட்டுக்கு உதவுகிறது. எவ்வளவு கொடுமையான விஷயத்தை இந்திய அரசு தனது வியாபார ஊக்குவிப்பின்மையால் வளரவிட்டிருக்கிறது என்பதை யோசியுங்கள்.
//
அரசு ஊழியர்கள் வேலை செய்வதில்லை என்பது ஒருபுறம், அப்படி அவர்கள் வேலை செய்து விட்டால் மட்டும் இப்போதிருக்கும் முறையில் எந்த உருப்படியான பலனும் ஜனங்களுக்குக் கிடைக்கப்போவதில்லை என்பதாக சில கருத்துக்களை முன்வைத்திருக்கிறேன்.
//
அவர்கள் செய்யவில்லை, செய்தாலும் பிரயோசனமில்லை என்னும் போது அவர்களையெல்லாம் "போங்கடா வீட்டுக்கு" என்று அனுப்ப முடியாதா ?
அவுட் சோர்சிங் பற்றிய பதிவின் கருத்துகள் பல விவாதங்களை தொடங்க வைக்கும்.
தனியார் நிறுவனங்களில் அவுட் சோர்சிங் பணிகளை ஒழுங்காக செய்யும் நபர்கள் அதே பணிகளை அரசு நிறுவனங்களில் சரியாகச் செய்வதில்லை.இதற்கு தங்களின் பதில் ?
கொஞ்சம் கடுமையாய் நடந்து கொள்ளும் அதிகாரிகள் அவுசோர்சிங் ஒப்பந்தக் காரர்களால் மிரட்ப்படுகிறார்களே இதற்கு என்ன தீர்வு?
அரசுத்துறைகளில் அவ்ட்சோர்சிங் முறைய்ல் நடைபெறும் பல ANNUAL MAINTENANCE CONTARCT களில் பணிகள் செய்யப்படுவதில்லை. கைமாறும் பணங்கள் தான் இன்று இடைதேர்தலை ஆட்டி படைக்கிறது.இதை மறுக்கிறீர்களா?
குறிப்பு: இது மாதிரி பதிவினை ஒட்டி வரும் கேள்விகள் அனுமதிக்கப்படுமா.?
@சங்கர்லால்
1. தனியார் நிறுவனங்களில் அவுட் சோர்சிங் பணிகளை ஒழுங்காக செய்யும் நபர்கள் அதே பணிகளை அரசு நிறுவனங்களில் சரியாகச் செய்வதில்லை. இதற்கு தங்களின் பதில்?
பதில்: அரசு நிறுவனங்களில் வேலை செய்பவரை சுலபத்தில் வேலை நீக்கம் செய்ய முடியாது என்ற தெனாவெட்டுதான் நீங்கள் சொல்வதற்கு காரணம்.
2. கொஞ்சம் கடுமையாய் நடந்து கொள்ளும் அதிகாரிகள் அவுசோர்சிங் ஒப்பந்தக்காரர்களால் மிரட்டப்படுகிறார்களே இதற்கு என்ன தீர்வு?
பதில்: ஒப்பந்தக்காரர்களை கேட்டால் அவர்கள் கூறுவது பெரும்பாலும் இப்படியாகத்தான் இருக்கும். அதாகப்பட்டது, நாங்கள் ஏற்கனவேயே வெட்ட வேண்டியவர்களுக்கு வெட்டித்தான் இந்த வேலைகளை பிடித்தோம். நாங்கள் போட்ட பணத்தை எடுத்து, லாபம் சம்பாதிக்க வேண்டாமா?
3. அரசுத்துறைகளில் அவ்ட்சோர்சிங் முறையில் நடைபெறும் பல ANNUAL MAINTENANCE CONTARCT களில் பணிகள் செய்யப்படுவதில்லை. கைமாறும் பணங்கள் தான் இன்று இடைதேர்தலை ஆட்டி படைக்கிறது.இதை மறுக்கிறீர்களா?
பதில்: மறுப்பதற்கு முன்னால் ஏதேனும் குறிப்பிட்ட உதாரணங்கள் தாருங்கள் என்றுதான் கேட்கிறேன்.
4. இது மாதிரி பதிவினை ஒட்டி வரும் கேள்விகள் அனுமதிக்கப்படுமா.?
பதில்: With pleasure.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//
உதாரணமாக, இன்றைக்கு நமக்குப் பயன்படாத அரசு இயந்திரம், நிர்வாகம் எல்லாம், அரிவாள் சுத்தியல் சம்பந்தப்படாத சுத்த சுயம்ப்ரகாசமான ஊழலுக்கு மட்டுமே விளைநிலமாக இருக்கும் பிரிட்டிஷ் இறக்குமதி. அது உருப்படியாகச் செயல் படுகிறதா, செயல்பட வைக்க முடியுமா என்ற கேள்வியை முதல் பின்னூட்டத்தில் எழுப்பியிருந்தேன்.
//
ஆஹா....என்ன ஒரு கண்டுபிடிப்பு...
நிலாவில் காலடி வைத்தோம், செவ்வாயில் டின்னர் சாப்பிடுவோம் என்று அலட்டிக் கொள்பவர்கள் அறுபது வருடம் ஆகியும் பிரிட்டனை குறை சொல்வது உங்களுக்கே அசிங்கமாக இல்லை??
சரி, அரசு ஊழியர்களில் எத்தனை பேர் வாங்குகிற சம்பளத்துக்கு வேலை பார்க்கிறார்கள்??? இவர்கள் எல்லாம் பிரிட்டிஷ் காரர்களா??
அரசு ஊழியர்கள்யுக்கு ஒன்று என்றால் ஓடிவரும் கம்யூனிஸ்ட்டுகள், அரசு ஊழியர்களால் மக்கள் படும் நிரந்தர அவஸ்தைக்கு எந்த பதிலும் சொல்வதில்ல்லையே ஏன்??
என்ன கொடுமைடா சாமி! கம்யூனிஸ்டுகளைப் போல மோசமான ஒரு வர்க்கம் இனி உலக சரித்திரத்திலேயே வராது!
எம்ஜியாரின் கடைசி காலப் படங்களில் ஐ சரி ஐ சரி என்று சொல்லிக் கொண்டே ஒரு காமெடிப் பீஸ் வரும்! அது மாதிரித் தான், அதுசரி! உங்களுடைய வாதமும் இருக்கிறது.
முதலில், பிரிடிஷ்காரன் நாட்டை விட்டுப்போய் அறுபது ஆண்டுகள் ஆனபின்னாலும் அவனையே குறைசொல்லிக் கொண்டிருக்கலாமா?
வெள்ளைக் காரன் போய்விட்டான் என்பது மட்டும் உண்மை! அவன் காலடித் தடத்தில் தான், சட்டம், தேர்தல், நீதித்துறை, அரசு இயந்திரம் எல்லாமே போய்க் கொண்டிருக்கிறது என்பதைக் கூடப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால், உங்களிடம் பேசுவதில் அர்த்தமே இல்லை. லைசன்ஸ் ராஜ், பெர்மிட் ராஜ் கம்யூனிஸ்டுகளின் வேலை இல்லை! சிவப்பு நாடா, சிவப்பு நாடா என்று சொல்கிறார்களே, அது வெள்ளைக் காரன் நமக்குக் கொடுத்துவிட்டுப் போன சீதனம்! அதுவுமே கூட கம்யூனிஸ்டுகளுக்கு சம்பந்தமில்லாதது!
இரண்டாவதாக, எதையுமே புரிந்து கொள்ளாமல், ஒரு கண்மூடித்தனமான வெறுப்பில் மட்டுமே பின்னூட்டம் எழுதுகிற நீங்கள், இந்தப் பதிவின் ஆரம்பத்தையோ, அதற்குப் பிறகு தொடர்ந்த விவாதங்களையோ பார்க்கவில்லை என்பது நன்றாகவே தெரிகிறது.
மூன்றாவதாக, என்னுடைய பின்னூட்டங்களில் அரசு ஊழியர்களை அல்லது for that matter எவராக இருந்தாலும் கண்மூடித்தனமாக ஆதரிக்கிற, அல்லது வக்காலத்து வாங்கிக் கொண்டு ஓடிவருகிற தன்மை எங்கே இருக்கிறது சொல்லுங்கள் பார்ப்போம்!
Post a Comment