2/10/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 30 & 31)

எபிசோட் - 30 (08.02.2010) சுட்டி - 1 & சுட்டி - 2

இன்றைக்கான எபிசோட் ஆரம்பமாவதற்கு முன்னமேயே சோ அவர்கள் தான் திருநள்ளாறு பற்றிய விவரங்களை சொல்லும்போது வந்து விழுந்துவிட்ட ஒரு தகவல் பிழையை கூறுகிறார். அதாவது முசுகுந்தனுக்கு இந்திரனால் கொடுக்கப்பட்டவை சிவலிங்கங்கள் அல்லவென்றும், அவை மூர்த்திகளே என்றும் கூறி, இதை சிங்கப்பூரிலிருந்து நிரஞ்சன் நந்தகோபன் என்பவர் தனக்கு சுட்டிக்காட்டியதையும் கூறுகிறார். பிறகு எபிசோட் ஆரம்பிக்கிறது.

தன்னை சந்தேகித்து விசாரிக்கும் போலீஸ்காரரிடம் அசோக் பொறுமையாக விளக்க முற்பட, அங்குவரும் சிங்காரம் நிலையை சரிசெய்கிறான். நீலகண்டன் வீட்டுக்கு வருகிறார் பாகவதர். அவரிடம் மன்னிப்பு கேட்ட அவரிடம் நீலகண்டன் அதெல்லாம் தேவையில்லை எனக்கூறிவிடுகிறார். பிறகு பாகவதர் அதுபற்றி பேசும்போதெல்லாம் அவரை அது பற்றி பேசாது வேறுவிஷயங்களையே நீலகண்டனும் அவர் மனைவியும் பேசி பேச்சை மாற்றுகின்றனர். சிறிது நேரம் கழித்து இதை பாகவதர் குறிப்பிட்டு பிறகு தான் இன்னொரு நாள் சாவகாசமாக வருவதாகக் கூறி விடைபெறுகிறார்.

சாம்புவின் வீட்டுக்கு நாரதர் வேற்று ரூபத்தில் வருகிறார். அவரை பார்க்கும்போதே சாம்பு சாஸ்திரிகளுக்கு மனம் புல்லரிப்பது நன்கு தெரிகிறது. கடவுளுக்கு மனிதன் கடன்பட்டுள்ளான், அதைத் தீர்க்கும் வழியே எல்லோரிடத்திலும் கடவுளை காண்பதேதான் என்று கூறும் நாரதர் அதே போல கடவுளும் மனிதனிடம் கடன்பட்டுள்ளதால் அவதாரங்கள் நிகழ்கின்றன எனவும் கூறுகிறார்.

அப்படியா என சோவின் நண்பர் கேட்க, நாரதர் கூறுவது கவித்துவமாக இருந்தாலும், அவதாரம் என்பது துஷ்ட நிக்கிரகம், சிஷ்ட பரிபாலனம் என்பதற்காகவே என தெளிவுபடுத்துகிறார். (இந்த சீரியலில் இம்மாதிரியாக பல இடங்களில் சோவின் வியாக்கியானம் சீரியலில் சொல்லப்படுவதுடன் லேசாக மாறுபடுகிறது, அதையும் சோ அவர்கள் அவ்வப்போது கூறிவருகிறார் என்பதை இந்த இடத்தில் இப்போதைக்கு சொல்லி வைத்துவிடுகிறேன்). ராமாவதாரத்தின் நோக்கம் ராவண வதம் மட்டுமல்ல என்றும், பிருகுமுனிவர் தனக்கிட்ட சாபம் பலிக்க வேண்டும் என்பதற்காகவும் மகாவிஷ்ணு ராமாவதாரம் எடுத்தார் எனவும் சோ சுட்டிக்காட்டுகிறார்.

நாரதர் மேலே பேசுகிறார். அசோக் செய்வது தெய்வீக காரியத்துக்குள் வருகிறது என சாம்பு சாஸ்திரிகளுக்கு கோடிகாட்டிவிட்டு அவர் விடைபெற்று செல்கிறார்.

நாரதர் கூறியவை சாம்பு சாஸ்திரிகளுக்கு திரும்பத் திரும்ப ஒலிக்கின்றன. அப்போது அங்கு வரும் அசோக் தன்னால் முடிந்த அளவு வேதபடிப்புக்கு பிள்ளைகளை சேர்க்க முயற்சிக்கப் போவதாக சொல்லி அவர் ஆசியை வேண்டுகிறான். ஜெயவிஜயீபவ என சாம்பு சாஸ்திரிகள் ஆசி அளிக்கிறார்.

அசோக் இது சம்பந்தமாக ஒருவர் வீட்டுக்கு சென்று அவர் பிள்ளையை வேதம் படிக்க அனுப்புமாறு கேட்கிறான், அவரும் சற்று யோசிக்கிறார். ஆனால் அவரது மனைவி அது முடியாது என நிர்தாட்சண்யமாகக் கூறிவிடுகிறாள்.

(தேடுவோம்)

எபிசோட் - 31 (09.02.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
நாதன் வீட்டில் சமையற்கார மாமி வசுமதியிடம் அசோக் ஒவ்வொரு வீடாகச் சென்று தன்னிடம் வேதம் படிக்க வீட்டுக்கு ஒரு பிள்ளையாக அனுப்புமாறு கேட்பதாக கூறுகிறாள். அப்பக்கம் வரும் நாதனுடன் வசுமதி இது பற்றி விவாதிக்கிறாள். அசோக் செய்வது வேண்டாத வேலை என கோபப்படும் நாதன், முதலில் அவனுக்கே வேதம் முழுசாக தெரியாதென்றும், இருக்கும் நான்கு வேதங்களுடன் கூடவே மேலும் இரு வேதங்கள் உள்ளன என்று கூறுகிறார்.

இது நிஜமா என நண்பர் கேட்க, சோ அவர்கள் இரண்டு மட்டுமல்ல, எண்ணற்ற வேதங்கள் மேற்கொண்டு உள்ளன என்று கூறுகிறார். அது பற்றி சில விவரங்களும் தருகிறார். பரத்வாஜ முனிவர் வேதங்கள் அனைத்தையும் கற்க முயன்று முன்னூறு ஆண்டுகள் உயிருடன் இருக்கும் வரம் பெற்றதாகவும், அத்தனை ஆண்டுகள் கழிந்த பின்னரும் அவர்வ் கற்றது கைம்மண்ணளவே என இந்திரன் அவருக்கு எடுத்துரைத்ததாகவும் கூறுகிறார்.

அசோக்கின் இந்த முயற்சி ஆரம்பத்திலிருந்தே தோல்வியைத்தான் தழுவப்போகிறது என்றும், உலகம் பல விஷயங்களில் முன்னேறிவரும்போது அசோக் பின்னோக்கி செல்ல விரும்புகிறான் என்றும் அவர் கூறுகிறார்.

சாம்பு வீட்டுக்கு பிரியா தனது சீனியர் அட்வொகேட் அனந்தராம ஐயரை அழைத்து வருகிறாள். தன் மாமனார் சாம்பு சாஸ்திரிகளிடம் அவரை அறிமுகம் செய்வித்து அவர் அசோக்குடன் பேச விரும்புவதாக கூறுகிறாள். சாம்பு சாஸ்திரிகளும் அசோக்கை வரவழைக்கிறார்.

அசோக் வேதம் கற்று கொடுக்க நினைப்பதை தான் கேள்விப்பட்டதாகவும், அவன் தனது பேரனை மாணவனாக அங்கீகரிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறார். அப்பையனின் தாய் தந்தையரின் அனுமதி அதற்கு தேவை என கூறுகிறான் அசோக். அவர்கள் உயிருடன் இல்லையென்றும், ஒரு விமான விபத்தில் இருவருமே இறந்து விட்டனர் என அனந்தராமன் கூறுகிறார்.

இந்த பெரும் சோகம் பையனுக்கு அளிக்கப்பட்டது ஒரு வேளை அவன் ஞான மார்க்கத்தில் வருவதற்கு ஏதுவாக அமைந்திருக்கலாம் என அசோக் கூற, blessing in disguise-ஆ என பிரியா கேட்கிறாள்.

ஆதி சங்கரர் மூலம் உலகுக்கு நல்லது செய்தார் கடவுள், நம்மாழ்வாரால் நாலாயிர திவ்யபிரபந்தம் சாத்தியமாயிற்று என அசோக் கூறுகிறான்.

இது பற்றி நண்பர் கேட்க, நம்மாழ்வாரின் பிரபந்தங்கள் ராமானுஜரின் வைணவக் கொள்கைகளுக்கு அடிப்படையாக இருந்தது என கூறுகிறார். பிறகு பல இடங்களில் சிதறிக்கிடந்த பிரபந்தங்கள் நாதமுனிகளால் ஒருங்கிணைக்கப் பட்டன என்பதையும் கூறுகிறார்.

அசோக் சாத்திரங்களால் மனிதன் கெடமாட்டான் என்றும், அனந்தராமன் தன் பேரனை அழைத்து வருமாறும் கூறுகிறான்.

நாதன் வீட்டுக்கு பிரியாவும் அனந்தராமனும் வந்திருக்கின்றனர். அசோக்கிடம் அனந்தராமனின் பேரன் வேதம் கற்றுக் கொள்ளப்போவதாக அறிந்த நாதனும் வசுமதியும் அவரிடம் அவர் அவ்வாறு செய்யலாகாது என கூறி அதற்கான வாதங்களையும் முன்வைக்கின்றனர். தங்கள் பிள்ளை அசோக் தேவையின்றி ஒரு லட்சியவாதியாக இருந்து மற்றவர்களையும் கெடுக்கிறான் என அவர்கள் வெளிப்படையாக கூறுகின்றனர். வக்கீலுக்கு குழப்பம் வருகிறது.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5 comments:

Anonymous said...

கேள்விகள்:

எம்.கண்ணன்.

1. வடிவேலு, சிங்கமுத்து விவகாரம் - விகாரமாகிவருகிறதே ? தினந்தோறும் எல்லா டிவி காமெடி நிகழ்ச்சிகளிலும் இருவரும் கலக்குகிறார்கள். ஆனால் நிஜவாழ்வில் இப்படி ஆகிவிட்டதே ?

2. அஜீத் - கருணாநிதி பாராட்டு விழாவில் பேசிய தைரியமான பேச்சுக்கும், விஜய் வேட்டைக்காரனுக்காக சன் குழுமம் செய்த கெடுபிடிகளில் பம்மிப்போய் நேரலை நிகழ்ச்சிகளில் களை இழந்த பொலிவுடன் பங்கேற்றதற்கும் உங்கள் கருத்து என்ன ?

3. பிடி.கத்திரிக்காய் (அல்லது அது மாதிரி GM (Genetically Modified) உணவு வகைகளை) சாப்பிடுவீர்களா ?

4. கலைஞர் டிவியில் தினமும் இரவு 9.30மணிக்கு வரும் 'அபிராமி' சீரியல் பார்ப்பதுண்டா ? முழுவதும் பிராமண குடும்பக் கதை. கௌதமியும் மாமி வேஷத்தில். (குரல் தான் சரியில்லை)
(கலைஞர் டிவியில் பிராமணீயத்தைத் தூக்கிப் பிடிக்கும் சீரியல்?)

5. சமீபத்தில் காசு கொடுத்து வாங்கிய புத்தகங்கள் எவை ? படித்தாகிவிட்டதா ?

6. கடந்த சில மாதங்களாக ஏன் உங்கள் அனுபவ பதிவுகள் வருவதில்லை ?

7. உங்களுடைய லேட்டரல் திங்கிங் புதிர்களைப் போல தற்போது விகடனும் வெளியிட ஆரம்பித்துவிட்டதே ?

8. ரஜினி தனது முதல் பெண் (ஐஸ்வர்யா தனுஷ்) திருமணத்தை ஐயங்கார் பாணியில் நடத்தினார். இரண்டாவது பெண் (சௌந்தர்யா) திருமணம் ஐயர் பாணியா ? (கமல் என்ன செய்வார் என நீங்கள் நினைக்கிறீர்கள் (அவரது பெண்கள் திருமணத்திற்கு)?)

9. சாருவிடம் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில்வந்ததா ? (நீயா நானாவிற்கு துட்டு தருகிறார்களா தற்போது என)

10. பெண்கள் அணியும் ஜீன்ஸ் பேண்டில் ஜிப் எதற்கு ?

dondu(#11168674346665545885) said...

@கண்ணன்
டோண்டு பதில்களை நிறுத்தி விட்டேன். போதும் எனத் தோன்றியதே காரணம்.

இருப்பினும் நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு இங்கேயே பதிலளிக்கிறேன்.
1. நடிப்பு வேறு வாழ்க்கை வேறு என்பதை நாம் இன்னும் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பதே இந்த திகைப்புக்கு காரணம். மற்றப்படி அது ஒரு இடியாப்ப விவகாரம், இன்று அடித்து கொள்வார்கள், நாளை சேர்ந்து கொள்வார்கள்.

2. எல்லாம் கல்லா நிரப்பும் பிரச்சினைதான்.

3. எதற்கு வம்பு? இப்போதைக்கு தவிர்த்து விடுவேன். பீட்டா சோதனைகள் நடக்கும்போது நான் அங்கு சென்று பரிசோதனை எலியாக இருக்கும் ஆசை எப்போதுமே எனக்கு கிடையாது.

4. இல்லை பார்ப்பது இல்லை. பிராமண குடும்பக் கதைகள் வேணது வந்து விட்டன, உதாரணம்: இரண்டாம் சாணக்கியன். நீங்கள் கூறியதற்காக இன்று பார்க்க முயற்சி செய்கிறேன்.

5. கண்ணதாசனின் மூன்று புத்தகங்கள் மனவாசம், வனவாசம் மற்றும் அர்த்தமுள்ள இந்து மதம் - 10 பாகங்கள் ஒரு புத்தகமாக. எல்லாம் படித்து விட்டேன்.

6. போட்டால் போயிற்று.

7. தள்ளி நின்று யோசித்தல் என்பது சுவாரசியமான பொழுதுபோக்கு. மனவலிமையை அதிகரிக்கும். விகடனுக்கு புத்தி வந்திருக்கிறது. மகிழ்ச்சி.

8. ரஜனியின் மனைவி ஐயங்கார் (ஒய்.ஜி. மகேந்திரனின் மனைவியின் சகோதரி). ரஜனி ஒரு ராவ் (மாத்துவரா என தெரியாது). ஐயங்கார் வீட்டு கல்யாணமோ, அல்லது ராவ் குடும்ப சம்பிராதாய கல்யாணமோ புரிந்து கொள்ளக் கூடியது. ஐயர் திருமணம்? காரணம்?

9. பதில் வரவில்லை, வரும் என எதிர்நோக்கவும் இல்லை.

10. ஜீன்ஸை அவிழ்க்கவே மாட்டார்கள் என நினைத்தீர்களா?

கேள்விகள் சம்பந்தப்பட்ட பதிவுக்கு ஏற்ப இருந்தால் நலம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

அய்யோ ஐயோ போச்சே !! வடை போச்சே !! விடை ஏதும் தெயரியலைன்னா உங்ககிட்ட கேட்கலாம்!!!! இப்ப நீங்களும் கதவை சாத்திட்டா நாங்க எங்க அய்யா இனி கேட்போம் ?????

Anonymous said...

ஜெஸ்டஸ் -ஐ மட்டும் நிறுத்திராதீக ப்ளீஸ் !!!!!!!!!!!!!!!!!!

Anonymous said...

“சுடுங்க எஜமான் சுடுங்க. இத்தனை நாளா வாயினாலே சுட்டீங்க, இப்ப, போங்க போய் துப்பாக்கி எடுத்துட்டு வந்து சுடுங்க எஜமான் சுடுங்க”, கூடவே அவரது கெக்கெக்கே என்னும் சிரிப்பு. ஜன்னல் பலகைகள் அதிர்ந்தன. இப்போது நால்வரும் நாலா பக்கங்களிலும் கழுத்தைத் திருப்பி யார் பேசுவது என்பதை பார்க்க ஆரம்பித்தனர்.//

இதுக்கு அப்புறம் என்ன சார் ஆச்சு ???ஏன் இவ்வளவு நாள் கேப் விடுரியள்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது