2/06/2010

அவுட்சோர்சிங்குல அப்படி என்னத்தான் நடக்குது?

என் கணினி குரு முகுந்தனிடமிருந்து வந்த மின்னஞ்சலை கீழே தருகிறேன். எஞ்ஜாய்!!!!!!!!!!

ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பாப்பீங்க?

(நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா. நானும் விவரிக்க ஆரம்பிதேன்).

வெள்ளைக்காரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியணும். அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும். இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்.

அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்.

இந்த மாதிரி அமெரிக்காவுல, இங்கிலாந்துல இருக்குற Bank, இல்ல எதாவது கம்பெனி, நான் செலவு செய்யத் தயாரா இருக்கேன். எனக்கு இத செய்து கொடுங்க கேப்பாங்க. இவங்கள நாங்க Clientனு சொல்லுவோம்.

சரி

இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு Sales Consultants, Pre-Sales Consultants. .... இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க. காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்? ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா? அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், முடியும்னு பதில் சொல்றது இவங்க வேலை.

இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருப்பாங்க?

MBA , MS னு பெரிய பெரிய படிப்பெல்லாம் படிச்சி இருப்பாங்க.

முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு MBA படிக்கணும்?

(அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது).

சரி, இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா?

அது எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிங்கலேயும் இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க.

இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைக்கும் 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50 நாள்ல எப்படி முடிக்க முடியும்? ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே?

இங்கதான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான். ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும் தெரியாது,என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது.

இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒன்ன நாங்க deliver
பண்ணுவோம். அத பாத்துட்டு ஐய்யோ நாங்க கேட்டது இதுல்ல, எங்களுக்கு இது
வேணும், அது வேணும்னு புலம்ப ஆரம்பிப்பான்.

அப்புறம்? - அப்பா ஆர்வமானார்.

இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்னு சொல்லுவோம்.

CR- னா?

Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க வேலை பார்த்துட்டோம். இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்னு சொல்லுவோம். இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்.

அப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது.

இதுக்கு அவன் ஒத்துபானா?

ஒத்துகிட்டு தான் ஆகணும். முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா?

சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?

முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம். இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு. இவரது தான் பெரிய தலை. ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு.

அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னு சொல்லு.

அதான் கிடையாது. இவருக்கு நாங்க பண்ற எதுவும்யே தெரியாது.

அப்போ இவருக்கு என்னதான் வேலை? - அப்பா குழம்பினார்.

நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன் குழி பறிப்பானு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன் ஆகுறதுதான் இவரு வேலை.

பாவம்பா

ஆனா இவரு ரொம்ப நல்லவரு. எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்.

எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?

ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு. நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும்தான் இவரோட வேலை.

நான் உன்னோட அம்மாகிட்ட பண்றது மாதிரி?!

இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு நிறைய அடி பொடிங்க இருப்பாங்க.

இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?

வேலை செஞ்சா தானே? நான் கடைசியா சொன்னேன் பாருங்க... டெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க மட்டும்தான் எல்லா வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த டெவலப்பர்,வேலைக்கு சேரும் போதே இந்த குடும்பத்தோட மானம், மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க.

அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே? அவங்களுக்கு என்னப்பா வேலை?

இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது இவனோட வேலை. புடிக்காத
மருமக கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம் இங்குறது மாதிரி.

ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா? புதுசாத்தான் இருக்கு. சரி, இவங்களாவது வேலை செய்யுராங்களா. சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?

அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா, அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்க்கை முழுவதும் உறுத்திக்கிட்டு இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை செய்துக்கலாம்னு சொல்லுவாங்க

கிளையன்ட் சும்மாவா விடுவான்? ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?

கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டீமுக்குள்ளையே காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்.

எப்படி?

நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு. அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சு நீ இருமின, உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை. இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம். அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு, இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்.

சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தான?

அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம தான் இருக்கணும்.

அப்புறம்?

ப்ராஜக்ட் முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான ஒன்ன பண்ணி இருக்குற மாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்.

அப்புறம்?

அவனே பயந்து போய், எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒன்னு, ரெண்டு பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க. இதுக்கு பேரு Maintanence and Support. இந்த வேலை வருஷ கணக்கா போகும். ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது மாதிரி. தாலி கட்டினா மட்டும் போதாது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு இப்போ தான் கிளைன்டுக்கு புரிய ஆரம்பிக்கும்.

எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுப்பா.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

நல்லாத்தான் இருக்கு. இதற்கு முன் இதை எங்கோ படித்த நினைவு இருக்கிறது.

kailash,hyderabad said...

எனக்கும் நெறைய விஷயம் இப்பதான் புரிஞ்சிருக்கு.

dondu(#11168674346665545885) said...

@சைவ கொத்து பரோட்டா
உண்மைதான். இப்பத்தான் கூகளிட்டு பார்த்தேன், 4530 ஹிட்ஸ் வந்துருக்கு.

பார்க்க:

அன்புடன்,
டோண்டு ராகவன்

கிருஷ்ண மூர்த்தி S said...

இப்போது நான் பார்த்தபோது கூகிள் ஆண்டவர் 4710 தேடல் முடிவுகள் இருப்பதாகச் சொல்கிறார். ஒவ்வொரு லின்கிலும் எத்தனை ஹிட்ஸ் என்று தனித்தனியாகத் தான் பார்க்க முடியும்.

எந்த ஒரு நடைமுறையிலும் நல்லதும் கெட்டதுமாகப் பக்க விளைவுகள் கொஞ்சம் இருக்கத் தான் செய்யும். எது முக்கியமானது என்பதை நாம் தான் சீர்தூக்கிப் பார்த்து, ஒத்து வருவதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

உதாரணமாக, ஜெயலலிதா காலத்தில் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினார்கள், வேலை செய்யவில்லை! அப்போது ஒரு விஷயம் தெளிவாகவே புரிந்தது, அரசு இயந்திரம் உருப்படியாக இருக்க வேண்டுமானால், அரசு ஊழியர்கள் வேலை செய்யாமல் இருந்தாலே போதுமேன்றோ, அல்லது இவர்கள் செய்ததாகச் சொல்லிக் கொண்ட வேலைகள் எதுவுமே பைசாப் பெறாதது என்பதை, அந்தப் போராட்டம் அழகாக நிரூபித்தது.

நாலாயிரம் ரூபாய் தொகுப்பு ஊதியத்திற்கு எடுக்கப்பட்ட தற்காலிக ஊழியர்களை வைத்து, நிலைமையை சமாளிக்க முடியும் என்பதை அந்தப் போராட்டம், outsourcing ஐப் பயன்படுத்தினால் இன்னும் என்னென்னவெல்லாம் வெளியே வரும் என்பதையும் நிரூபித்தது.

Outsourcing தேவையான இடத்தில் தேவையான அளவில் பயன்படுத்தினால், மிகப் பெரிய பொருளாதார ஊக்கியாக இருக்கவும் முடியும்! அரசின் ஊதாரித்தனமான சம்பளச் செலவைக் குறைக்கவும் முடியும்!

இதற்குக் கண்டனம் தெரிவிக்க ஓடிவருகிறவர்கள்,

முதலில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு செலவிடும் சம்பளம், சலுகைகளுக்கு ஈடாக வேலை செய்கிறார்களா?

மக்களுடைய தேவைகள், எதிர்பார்ப்புக்களை இவர்களால் நிறைவேற்ற முடிகிறதா அல்லது இவர்களால் மக்களுக்கு உபத்திரவம் தான் அதிகமா?

அரசு நிர்வாகத்தின் ஒரு அங்கமாக இருப்பதை விட்டு விட்டு, தங்களுக்கு சலுகைகளை அள்ளி வழங்கும் அரசியல்வாதிகளின் கைப்பாவைகளாக இருக்கிறார்களா இல்லையா?

இதையெல்லாம் கொஞ்சம் விவரமாகத் தெரிந்துகொண்டு அப்புறம் பதில் சொல்லலாம்!

Unknown said...

4530 hits தான் வந்திருக்கு. இந்த மாதிரி நிறைய பதிவு போடுங்க சார். கான்செப்ட் பதிவு போட்டு கழுத்தறுக்காதீங்க

சைவகொத்துப்பரோட்டா said...

//@சைவ கொத்து பரோட்டா
உண்மைதான். இப்பத்தான் கூகளிட்டு பார்த்தேன், 4530 ஹிட்ஸ் வந்துருக்கு.

பார்க்க:

அன்புடன்,
டோண்டு ராகவன்//

மிக்க நன்றி பார்த்து விட்டேன்.

குப்பன்.யாஹூ said...

Thanks for sharing, already some other blogger has posted this, but still its nice and brings laugh. But this is about software development, sales. (selling ERP, Finacle, SAP etc, TCS and Infosys is master in this drama...)

BPO project is also same like this with little variation.

Anonymous said...

1.ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் ராசி ஆச்சாமே?
2.ராகுல் காந்தி திமுகவை முடுக்க/ஒடுக்க ஆயத்தங்கள் உன்மையா?
3.பமபாயில் இந்த சிவ சேன ஏன் இப்படி அலம்பல்?
4,ஷாருக்கன் பம்பாய் விசயத்தில் எப்படி ?
5.ராசாவுக்கு இவ்வளவு சுதந்திரம் கருணாநிதி வீட்டில் இது எப்படி?

dondu(#11168674346665545885) said...

கேள்விகள் கேட்ட அனானிக்கு
நன்றி. டோண்டு பதில்களை நிறுத்திவிட்டேன். கொஞ்ச நாட்களாகவே இது பற்றி எண்ணி வந்தேன். போன வியாழனன்று கூட பதிவு வரவில்லை. வந்த சில கேள்விகளையும் நிராகரித்திருந்தேன்.

இருப்பினும் இப்போது வெளிப்படையாக சொல்வதே சரியாக இருக்கும்.

இத்தனை நாள் ஒத்துழைப்பு தந்தவர்களுக்கு நன்றி.

இருப்பினும் உங்களது கேள்விகளுக்கு இங்கேயே பதிலளித்துவிடுகிறேன்.

1.ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் ராசி ஆச்சாமே?
பதில்: எனக்கு நம்பிக்கை இல்லை. ஒரே குடும்பத்தில் அரசியல் ஆர்வத்துடன் ஒருவருக்கு மேல் வந்தால் இப்படித்தான் போட்டி பொறாமை ஆகியவை வரும், அது மனித இயற்கை.

2.ராகுல் காந்தி திமுகவை முடுக்க/ஒடுக்க ஆயத்தங்கள் உண்மையா?
பதில்: அது உண்மையோ பொய்யோ தெரியாது, ஆனால் நான் ராகுல் காந்தி நிலையில் இருந்தால் அதைத்தான் செய்ய முயற்சிப்பேன். 2011-ல் திமுக காங்கிரஸ் கூட்டணி நீடிப்பது காங்கிரசுக்கே நல்லதல்ல.

3.பமபாயில் இந்த சிவசேனா ஏன் இப்படி அலம்பல்?
பதில்: ஓட்டு பொறுக்கி அரசியல்.

4,ஷாருக்கான் பம்பாய் விசயத்தில் எப்படி?
பதில்: கிரிக்கெட்டை ஒரு விளையாட்டாக மட்டும் பார்க்க முயன்றிருக்கிறார். சிவசேனாவுக்கு இது பிடிக்கவில்லை, அவ்வளவுதான்.

5.ராசாவுக்கு இவ்வளவு சுதந்திரம் கருணாநிதி வீட்டில் இது எப்படி?
பதில்: நம்பமுடியாத அளவுக்கு ஒரு வதந்தி உள்ளது. அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் உங்கள் கேள்வியில் குறிக்கப்பட்டுள்ள விஷயம் ஆச்சரியத்தை வரவழைக்காது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சங்கர்லால் said...

//கேள்விகள் கேட்ட அனானிக்கு
நன்றி. டோண்டு பதில்களை நிறுத்திவிட்டேன். கொஞ்ச நாட்களாகவே இது பற்றி எண்ணி வந்தேன். போன வியாழனன்று கூட பதிவு வரவில்லை. வந்த சில கேள்விகளையும் நிராகரித்திருந்தேன்.//


டோண்டு அவர்களுக்கு வணக்கமும் நன்றிகளும்.
ஒவ்வொரு நாளும் டோண்டுவிடம் கேள்வி கேட்டு 32 வழக்கமாய் கேள்விகள் கேட்பவர் எனும் அடை மொழியுடன் இனி வர முடியது என எண்ணும் பொது மனம் ?

டோண்டுவின் இந்த ,முடிவுக்கு எதாவது காரணம் உண்டா?

மற்றவர் களுக்கு எப்படியோ எனக்குத் தெரியாது.வியாழக்கிழமை அதிகாலை
05 மணிக்கு டோண்டுவின் பதில் பதிவை பார்க்கும் வாய்ப்பு இனி?

அவரின் பதில் களில் அவரது துணிவு,தன்னம்பிக்கை,பழுத்த அலுவலக அனுபவம்,போலித் தன்மை இல்லா சொல்லாற்றல்,கிண்டல் கேலி பேசுவோரை சமாளிக்கும் மொழியாற்றல்,பார்ப்பன துவேஷத்தை எதிர் கொள்ளும் பேராண்மை, மாற்றுக் கருத்து உள்ளவர்கள் எத்துணை புனைப் பெயர்களில் வந்தாலும் அடையாளம் கண்டு கொள்ளும் திறமை ,அவர்களைன் பின்னுட்டங்களை கையாண்ட திறமை


அனைத்துக்கும் என் நெஞ்சு நிறை நன்றிகள் பாரட்டுக்கள்,வாழத்துக்கள்.

தொடரட்டும் அவர்தம் எழுத்தார்வம்
வெல்லட்டும் அவர்தம் மொழியார்வம்
பெருகட்டும் அவர்தம் வாசகர்கள்
சிறக்கட்டும் அவர்தம் பண்புகள்


வாழ்த்துக்களுடன் நன்றி.
சங்கர்லால்

dondu(#11168674346665545885) said...

@சங்கர்லால்
பிரத்தியேகக் காரணங்கள் என்று ஏதுமில்லை. திடீரென அலுத்துவிட்டது, அவ்வளவுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ராமுடு said...

Mr.dondu Ragavan,
Excellent article.. I am literally laughing by looking at the desc of outsourcing and how it is happening.. kalakkareenga..

Thanks.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது