பழம்பெரும் பத்திரிகையாளர் மலர் மன்னன் அவர்கள் திண்ணை பத்திரிகையில் எழுதிய இக்கட்டுரையை அவர் அனுமதி பெற்று இங்கிடுவதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். அவர் கட்டுரை முடிந்ததும் அண்ணா அவர்களைப் பற்றி என்னுடைய நினைவுகளை முதல் பின்னூட்டமாக வெளியிடுவேன். இப்போது மலர்மன்னன் அவர்கள்.
அண்ணா இப்போது இல்லையாமே, நிஜந்தானா?
அண்ணா அவர்கள் மறைந்து விளையாட்டுப்போல் முப்பத்தாறு ஆண்டுகளாகிவிட்டன என்கிறார்கள். எனக்கென்னவோ அவர் இன்னமுங்கூடத் தமிழ் நாட்டின் ஏதோ ஒரு மூலையில், வேளை கெட்ட நடுநிசியில், மிகத்தாமதமாகக் கூட்டத்திற்கு வந்து, அப்படி வந்து சேருகிறவரை அனைவரின் எரிச்சலுக்கும் ஆளாகி, ஆனால் வந்துசேர்ந்ததுமே அனைவரின் மகிழ்ச்சிக்கும் ஆளாகி, பொடி போட்டுப்போட்டுத் தொண்டையிலிருந்து வரவேண்டிய குரல் நாசியின் வழியாகவும் வர நேர்ந்து, தமக்கே உரிய கரகரப்பான குரலில் பேசிக்கொண்டிருப்பதாகத்தான் தோன்றுகிறது.
அண்ணா மாதம் முப்பது நாளும் வெவ்வேறு ஊர்களில் பேசிக்கொண்டிருப்பவராக இருந்ததால் அவர் எங்கோ இருந்துகொண்டிருப்பதான உணர்வே எனக்கு இருந்துவருகிறது.
அண்ணாவை நன்கு அறிந்தும், அவரோடு பழகியும் மகிழ்ந்தவர்களின் தலைமுறை அருகி வருகிறது. ஆகையால் அவர் தொடங்கிய தி.மு.கழகம் மற்றும் திராவிட இயக்கங்களின் வழியாக மட்டுமே அவரைப் பற்றிய புரிதலும் தெரிதலும் அமைந்துவிடும் சாத்தியக்கூறு உள்ளது.
முதலில் நான் கூறவிரும்புவது அண்ணாவின் அபிமானிகள் திராவிட இயக்கத்திற்கும் கட்சிகளுக்கும் வெளியேயும் இருந்தார்கள்; இன்னமுங்கூட இருப்பார்கள் என்றே நம்புகிறேன். அதுபோலவே அண்ணாவை வெறுப்பவர்களும் இருந்தார்கள், இன்னமும் இருக்ககூடும். ஆனால் அண்ணாவுடன் ஒரு மணிநேரம் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிட்டியிருந்தாலே போதும், அவரை வெறுக்கத் தோன்றாது என்பது மட்டுமல்ல, அவரை மிகவும் மதிக்கவும் நேசிக்கவுமான மனநிலையும் தானாகவே உருவாகிவிடும். எவராயினும் அவரிடமிருந்து தொலைவில் இருக்கிறவரைதான் அவரைத் திட்டித் தீர்த்துக்கொண்டிருக்க முடியும்.
அண்ணாவுடனான எனது முதல் அறிமுகம் ஐம்பதுகளின் தொடக்கத்தில்தான். சிதம்பரத்தில், மாணவப் பருவத்தில். சூரி என்கிற நண்பர் வரைந்து கொடுத்த அண்ணாவின் உருவப் படத்தில் அண்ணாவிடம் கையொப்பம் வாங்கியதிலிருந்து அது தொடங்கியது.
எனது பால பருவம், தமிழ் என்று ஓர் உயர்தனிச் செம்மொழி இருப்பதாகவோ, விந்திய பர்வதத்திற்குத் தெற்கே ஒரு நாகரிகம் இருப்பதாகவோ படித்தவர்கள் மத்தியிலே கூட அறியப்படாத பிரதேசங்களில் கழிந்தது. பாரதத்தின் தெற்குப்பகுதியிலிருந்து வருவோர் மொத்தமாக மதராசிகள் என்றே அறியப்பட்ட காலம்.
எனவே தமிழ் நாட்டிற்கு வரநேர்ந்து, முதல் முதலில் அண்ணாவின் மேடைப்பேச்சைக் கேட்கவும் நேர்ந்தபோது பரவசமடைந்தேன். எனது தாய்மொழி கேட்பதற்கு எவ்வளவு இனிமையாக, எத்தனை வளமாக உள்ளது என்பதை முதலில் உணர்ந்தது அவரது பேச்சைக் கேட்டபோதுதான். அதன் பிறகு ரா.பி. சேதுப் பிள்ளை, பொன். முத்துராமலிங்கத் தேவர், சோமசுந்தர பாரதியார், ம.பொ.சி. எனப் பலரது மேடைப் பேச்சுகளைக் கேட்கும் வாய்ப்பைப் பெற்று மகிழ்ந்தபோதிலும், என்ன இருந்தாலும் முதல் காதலுக்கு உள்ள மகிமையே தனிதான் அல்லவா, தமது மேடைப் பேச்சால் என்னைக் கவர்ந்தவர் அண்ணாவுக்கு இணையாக வேறெவரும் இல்லையென ஆயினர்.
சிதம்பரத்திலிருந்து ஐம்பது மைல் சுற்றளவுக்கு அண்ணா எங்கு பேசினாலும் ஒரு போதைக்கு அடிமையானவன் போலப் போய்க் கேட்கும் பழக்கம் ஏற்பட்டுவிட்டது.
எனினும், அன்ணாவிடம் பேசிப்பழகும் வாய்ப்பு சேத்தியா தோப்பு என்ற ஊரில்தான் கிட்டியது. இவ்வாறு ஊர், ஊராகப் போய் அண்ணாவின் பேச்சைக் கேட்கத் தொடங்கியதாலேயே உள்ளூர் தி.மு.க வினரின் நட்பும் ஏற்படலாயிற்று.
சேத்தியா தோப்பில் அண்ணா பேசிய கூட்டம் முடிந்தபோது நடுநிசி தாண்டிவிட்டிருந்தது.
சாப்பாட்டுக்கு என்ன செய்ய? அதன்பின் எப்படி ஊர் திரும்புவது? புவனகிரி ரத்தின. பாலகுருசாமி, சாப்பாட்டிற்கு ஏற்பாடாகியுள்ளது, வா என்னுடன் என்று அழைத்துச் சென்றார். அதன் பயனாக ஒரு சத்திரத்தில் அண்ணாவின் அருகில் அமர்ந்து உண்ணும் வாய்ப்பினைப் பெற்றேன்.
அது எனக்குப் பழக்கமில்லாத, முழுக்க முழுக்க அசைவச் சாப்பாடு!
+++
பலப்பல ஆண்டுகளுக்குப் பின் புதுச்சேரியில் காரை சிபியின் வீட்டில் சாப்பிடுகிறேன். என்னுடன் என் மகள் பூரணியும் இருக்கிறாள். இலையில் சோற்றுக்கு அயிரை மீன் குழம்பும் தொட்டுக் கொள்ள வஞ்சிர மீன் வறுவலும்! மகள் பூரணிக்கு சாம்பாரும் ஏதோவொரு மரக் கறியும்.
மீன் சாப்பிடும் பழக்கம் எனக்கு உண்டு என்கிற அதிர்ச்சியான உண்மை அப்போதுதான் என் மகளுக்குத் தெரிய வந்தது.
"எப்படியப்பா, இவ்வளவு அனாயாசமாக மீனை உரித்து உரித்துச் சாப்பிடுகிறாய்?' என்று திகைப்புடன் கேட்டாள், பூரணி.
முள்ளையும், சதையையும் சேர்த்துக் குழப்பிக்கொள்ளாமல், எப்படிப் பதமாக மீனை உண்ண வேண்டும் என்று எனக்குக் கற்றுக் கொடுத்தவர் அண்ணா அவர்கள். சேத்தியா தோப்பில், வேளை கெட்ட வேளையில் அளிக்கப்பட்ட அசைவ விருந்தில். இதனை அன்று நான் பூரணியிடம் சொல்லாமல் சிரித்தேன் என்றாலும் இப்போது நினைத்துக் கொள்கிறேன்.
மீன் இல்லையேல் சாப்பாடே இல்லை என்னும்படியான மேற்கு வங்கத்தில் பிற்காலத்தில் நான் வசிக்க நேர்ந்தபோது, அண்ணா கற்றுத் தந்த பாடம் மிகவும் உதவியாக இருந்தது.
அண்ணா மீன் குழம்புப் பிரியர். முக்கியமாக நெத்திலிக் கருவாட்டுக் குழம்புப் பிரியர். எனினும், மன்னார்குடி செல்ல நேர்ந்தால் அவர் மன்னை நாராயணசாமி வீட்டு மீன் குழம்பைவிட சவுரிராஜ ஐயங்கார் வீட்டு வற்றல் குழம்பைத்தான் சோற்றுக்குப் பிசைந்துண்ணவோ, இட்டலிக்குத் தொட்டுக்கொள்ளவோ விரும்புவார்.
கட்டுக் குடுமியும், நெற்றியில் பட்டை நாமமுமாகப் பொலியும் மன்னார்குடி நகராட்சித் தலைவர் சவுரி ராஜ ஐயங்கார் அண்ணாவின் நண்பர். பிற்காலத்தில் எம்ஜிஆருக்கும்தான்!
சவுரி ராஜ ஐயங்கார் மட்டுமா, எத்தனையோ பிராமண நண்பர்கள், அண்ணாவுக்கு. காஞ்சியிலே பிறந்து வளர்ந்தவர் வேறு, வைணவ அந்தணர் மிகுந்த பிரதேசம்!
அண்ணாவை ஒரு இலக்கியப் படைப்பாளியாக என்னால் கருத முடிந்ததில்லை. ஆனால் அவர் நல்ல படைப்புகளை அடையாளம் கண்டு படிக்கக் கூடியவராக இருந்தார். தமிழில் புதுமைப் பித்தன், கு.ப.ராஜகோபாலன் ஆகியோரின் படைப்புகளை அவர் ரசித்துப் படித்தார். பாரதியாரின் கவிதைகள் மட்டுமின்றி, கட்டுரைகளும், வ.ரா.வின் உரைநடையும் அவருக்கு மிகவும் பிடித்திருந்தன. சரஸ்வதி, சாந்தி, ஆகிய பத்திரிகைகளை விரும்பி வாசித்தார். புதிதாக ஜயகாந்தன்னு ஒருத்தர் எழுதுகிறார், நன்றாக இருகிறது, படி என்று பரிந்துரைத்தார். தற்காலத் தமிழ் இலக்கியம் குறித்துக் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்ள எவரும்அருகே இல்லாததை ஒரு குறையாக உணர்ந்தார். தி.மு.க. வுக்குப் பின்னர் வந்த க. ராஜாராம்தான் அண்ணாவுக்கு ஈடாகத் தரமான படைப்புகளை அடையாளங்காணக் கூடியவராக இருந்தார்.
கண்ணதாசனும் அத்தகையவராக இருந்தார்.
அண்ணாவின் எழுத்தை என்னால் சிலாகிக்க இயலாது என்றாலும், தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் அவர் மிகச் சிறந்த மேடைப் பேச்சாளராகத் திகழ்ந்தார் என்பதை அறிவேன். கட்சி தொடர்பில்லாத பொதுவான கூட்டங்களில் அவர் கலந்துகொள்வதாக இருப்பினும் அவரைத்தான் கடைசியாகப் பேசுமாறு கேட்டுக்கொள்வார்கள். ஏனெனில் அவர் பேசிவிட்டால் வந்ததன் பயன் கிட்டிவிட்டது என்பதுபோல் கூட்டம் கலைந்து போய்விடும்!
சென்னை ராயப்பேடையில் லாயிட்ஸ் சாலையிலிருந்து உள்வாங்கும் தெரு ஒன்று உண்டு; லட்சுமிபுரம் என்பது அதன் பெயர். அங்கு லட்சுமிபுரம் யுவர் சங்கம் என்ற பெயரில் ஒரு சங்கம் நடத்தி வந்தார்கள். அதில் விசேஷம் என்னவென்றால், உறுப்பினர் பெரும்பாலும் ஐம்பது வயதைத் தாண்டிவிட்ட "யுவர்'கள்! அதிலும் அநேகமாக அனைவரும் பிராமணர்கள். வழக்கறிஞர்கள், கல்விமான்கள், உயர் உத்தியோகஸ்தர்கள். இந்தச் சங்கம் அடிக்கடி ஆசை ஆசையாக அழைப்பது அண்ணாவைத்தான். கச்சேரியை ரசிப்பதுபோல் அண்ணாவின் பேச்சை ரசித்து மகிழ்வார்கள். அன்ணாவுக்கும் அங்குபோய்ப் பேசுவதில் விருப்பம் அதிகம். சபையினர் நாடிபிடித்துப் பார்த்தவர் போல் அவர்களின் ரசனைக்கும் அறிவுநிலைக்கும் ஏற்பப் பேசுவார்.
எனக்குத் தெரிந்து கட்டணம் செலுத்திப் பேச்சைக் கேட்கும் ஏற்பாடு அண்ணா பேசும் கூட்டத்தில்தான் இருந்தது. எல்லாம் ?வுஸ் புல் கூட்டங்கள்! மக்கள் கச்சேரி கேட்கப் போவதுபோலத்தான் அண்ணாவின் பேச்சைக் கேட்கப் போவார்கள். கண்ணதாசன் தாம் நடத்திய "தென்றல்' வார இதழில் ஒருமுறை "கடற்கரையில் அண்ணா' என்ற தலைப்பில் ஒரு சிறு கவிதை எழுதியிருந்தார். அதன் இறுதி வரி, "பாட்டென விளம்பிப் போனார்' என்று முடியும். கூட்டத்திற்கு வந்தவர்களின் கருத்தைப் பிரதிபலிப்பதாக. அது முற்றிலும் உண்மை.
ஆனால் இதையெல்லாம்விட, அண்ணாவின் பெருந்தன்மை, மனிதாபிமானம், சக மனிதனுக்காகப் பதறித் துடித்து, இயன்ற உதவிகளைச் செய்ய முற்படும் இயல்பு, எவ்வளவு ஆத்திரமூட்டப்படினும் நிதானமிழக்காத, அதற்காக வெறுத்து ஒதுக்காத பண்பு, ஆகியவையே இன்றளவும் அண்ணாவின் அபிமானியாக என்னை இருத்தியுள்ளன.
1957ல் அண்ணா முதல் முதலாகத் தமது சொந்த ஊரான காஞ்சிபுரத்தில் சட்டமன்றத் தேர்தலில் நின்றபோது, ஈ.வே.ரா அண்ணா மீது பழி தீர்த்துக்கொள்ள தொகுதி முழுவதும் எதிர்ப்புப் பிரசாரம் செய்தார். பொதுக் கூட்டங்களில் மிகவும் தரக்குறைவாக அண்ணாவை விமர்சித்தார். தி.க.வினர் அண்ணாவின் பிறப்பையே கேள்விக்குறியாக்கி இழிவாகப் பேசினார்கள். ஆனால் ஈ.வே.ரா வுக்கு எதிராக ஒரு வார்த்தையும் எம் அண்ணாவின் வாயிலிருந்து வரவில்லை.
அண்ணாவின் உயர் பண்புகளுக்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளை என்னால் தரமுடியும். அவற்றுள் சிலவற்றையாவது பதிவு செய்யப் பார்க்கிறேன்.
அண்ணாவுக்குத் தமது கட்சியில் மிகவும் விருப்பமான நபர் ஒருவர் உண்டென்றால் அது ஈ.வி.கே. சம்பத்துதான். அவரை மட்டும்தான் பொதுக் கூட்டங்களிலும் உரிமையுடனும் பாசத்துடனும் "அவன்' என்று ஒருமையில் குறிப்பிடுவார். "நான் பிரித்துண்ணும் பகடா பொட்டலத்திலிருந்து எடுத்துண்பவன் சம்பத்" என்பார். அவ்வளவு அந்நியோனியமாக இருந்த சம்பத்துதான் 1962ல் தி முகவிலிருந்து விலக நேர்ந்தது, கருணாநிதியின் போக்கு காரணமாக. அண்ணா அவரே சொன்னதுபோலச் சூழ்நிலையின் கைதியாகிவிட்டிருந்தார்.
பொதுவாக அரசியல் கட்சிகளில் ஒருவர் வெளியேறிச் சென்றால் அவர்மீது குற்றம் சொல்வதுதான் கட்சித் தலைமையின் வழக்கம். ஆனால் சம்பத் விலகியது பற்றி அண்ணா என்ன சொன்னார் தெரியுமா?
"சமபத்து ஒரு வைரத் தோடு (தோடு என்றுதான் சொன்னார், கடுக்கன் என்றல்ல). என் காதுகளில் புண் வந்திருக்கிறது. அதனால் அந்தத் தோட்டைக் கழற்றி வைத்திருக்கிறேன்' என்றுதான் சொன்னார், எம் அண்ணா.
1967 தேர்தல் முடிவு அடுக்கடுக்காக வெற்றிச் செய்திகளைக் குவித்துக்கொண்டிருந்தபோது மற்றவர்கள் உற்சாகத்தால் அகமகிழ்ந்திருக்கையில் அண்ணா பிரமிப்புடனும் சிறிது கவலையுடனும்தான் காணப்பட்டார். ஆட்சி செய்யும் பொறுப்பு தி.மு.க.வுக்கு மிக விரைவாக வந்துவிட்டதாகவே எண்ணுவதாகக் கூறினார்.
விருதுநகரில் பெ.சீனிவாசன் என்ற மணவர் தலைவரான தமது கட்சி வேட்பளரிடம் காமராஜர் தோல்வியடைந்த செய்திகேட்டு மற்றவர்கள் உற்சாகத்தில் எகிறிக்குதித்தபோது, அண்ணா மிகவும் வியாகூலத்துடன் "அவர் தோற்றிருக்கக் கூடாது' என்று வருந்தினார். இவ்வளவுக்கும் காமராஜர் வன்மத்துடன் 1962 தேர்தலில் நடேச முதலியார் என்ற பஸ் முதலாளியை நிறுத்தி ஏராளமாகப் பணச் செலவு செய்யவைத்து அண்ணாவைத் தோற்கடித்து மகிழ்ந்தவர்தான்!
காமராஜர் தோற்ற செய்தி கிடைத்தவுடன் எம் அண்ணா எடுத்த முதல் நடவடிக்கை விருதுநகரில் வெற்றிக் கொண்டாட்டம், ஊர்வலம் என்று தம் கட்சியினர் அட்டகாசம் எதுவும் செய்துவிடக்கூடாது என்பதுதான். காங்கிரசின் தலையாய தூணான காமராஜரையே தோற்கடித்த விருதுநகர் அன்று ஏதோ துக்க தினம் அனுசரிப்பதுபோலத்தான் காணப்பட்டது, தி முக வெற்றிபெற்ற போதிலும்!
ஆட்சிப் பொறுப்பு தி முகவைத் தேடி வந்தவுடன் எம் அண்ணா செய்த முதல் காரியம் காமராஜர், அப்போதைய முதல்வர் பக்தவத்சலம் ஆகியோரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றதோடு, அவர்களின் ஆலோசனையையும் ஒத்துழைப்பையும் வேண்டியதுதான்!
பதவி ஏற்றதும் அதுவரையில் இரு ந்த அரசுச் செயலர்கள், காவல் துறை உயர்
அதிகாரிகள் ஆகியோர் முந்தைய காங்கிரஸ் ஆட்சியினரால் நியமிக்கப்பட்டு அதற்கே விசுவாசமாயிருப்பார்கள் ஆதலால் அவர்களையெல்லாம் மாற்றவேண்டும் எனத் தம்பிமார் வலியுறுத்தினார்கள். ஆனால் எம் அண்ணா அதற்கு இணங்கவில்லை. "அப்படிச் செய்வது அவர்கள் மேலும் நம்மிடமிருந்து விலகியிருக்கச் செய்துவிடும். நமக்கு அவர்கள் மீது நம்பிக்கை இல்லை என்று சொல்வதுபோலாகும். பார்க்கப் போனால் அவரக்ள்தான் ஆட்சிப் பொறுப்பில் நிரந்தரமாக இருப்பவர்கள். அரசியல் கட்சிக்கார்களான நமது ஆயுள் ஐந்தாண்டுகள்தான். பக்தவத்சலம் ஆட்சியில் யார் யார் எங்கெங்கு இருந்தார்களோ அங்கங்கு தொடரட்டும் ' என்று சொன்னார் எம் அண்ணா.
ஐ.ஜி. யாக இருந்த அருள், அண்ணாவை ஒரு சந்தர்ப்பத்தில் மிகவும் அவமரியதையாக நடத்தினார். அருளைப் பழிவாங்கத் தம்பிமார் துடித்தனர். "அருள் தோள் மீது ஒரு ஈ உட்காரவும் அனுமதிக்க மாட்டேன்' என்றார் எம் அண்ணா.
இருபதாண்டு காங்கிரஸ் ஆட்சியில் பழகிப்போன தலைமைச் செயலக அதிகாரிகள் புதியவர்களான தி.மு.க வினர் எப்படி நடந்துகொள்வார்களோ எனச் சஞ்சலத்துடன் இருந்தனர். அவர்களின் கலக்கம் களைவதற்காகவே கோட்டைக்குள் நுழையுமுன் கொடிமரம் எதிரில் அனைவரையும் அழைத்துக் கூட்டம் நடத்தி அவர்களையும் தம் தம்பிமார்களாக்கிக் கொண்டுவிட்டார் எம் அண்ணா!
தி முக பதவியேற்ற சில மாதங்களுக்குள்ளாகவே மாணவர்களுக்கும் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கும் மிகப் பெரிய மோதல் வெடித்தது. அந்தச் சமயம் முதல்வர் அண்ணா மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதிக்குத் தாமகவே சென்று மாணவர்களிடம் மன்னிப்புக் கோரினார்! "ஏன் முன்னதாக வரவில்லை?' என்று மாணவர்கள் அதட்டினார்கள். போக்குவரத்துத் தொழிலாளர்கள் பஸ்களை சாலையில் குறுக்கும் நெடுக்குமாய் ஸிக் ஸாகாக நிறுத்தியிருந்ததால் வரமுடியவில்லை என்று ஒரு குழந்தையைப் போலச் சமாதானம் சொன்னார் எம் அண்ணா.
தொண்டை வறள்வதால் குடிக்கத் தண்ணீர் கேட்டார். கோபத்தில் இருந்த மாணவர்கள் அவ்ருக்குத் தண்ணீர் கொடுக்கவும் மறுத்தனர். அதற்காக அவர்க்ள் மீது ஆத்திரம் கொள்ளவில்லை எம் அண்ணா.
இன்றோ, உயர் பதவி வகிப்போர் போராடுவோரின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசுவதே அரும் பெரும் செயலாகப் பாராட்டப்படுகிறது.
இவை எல்லாம் எனது கற்பனை அல்ல. 1967-68 என்பது சமீப காலம்தான். ஹிந்து அலுவலகம் சென்று அந்தக் காலத்து ?ஹிந்து இதழ்களைப் புரட்டினால் இவையெல்லாம் நடந்த நிகழ்ச்சிகள்தாம் என்பது தெரியவரும்.
இன்னும் சொல்வதற்கு என்னிடம் செய்திகள் உண்டு. ஆனால் அண்ணாவின் ஞாபகம் மிகுந்த வேதனைக் குள்ளாக்குகிறது. நுங்கம்பாக்கம் அவென்யு சாலையில் ஒன்பதாம் எண் இல்லத்திற்கு ஓடிச் சென்று அண்ணாவின் குறும்புப் புன்னகை தவழும் முகத்தைக்காண மனம் துடிக்கிறது. ஆனால் எம் அண்ணா இப்போது இல்லையாமே, நிஜந்தானா?
அடுத்த தவனையில் மேலும் சிறிது சொல்கிறேன், எம் அண்ணாவைப் பற்றி.
மலர்மன்னன்
திண்ணையில் வெளியானது.
A novel-writing workshop at Walnut Creek, California.
-
I conducted a workshop on writing novels in Chennai for Manasa
Publications. Now, my friends in the USA are asking me to hold similar
classes there. A one-...
2 hours ago
2 comments:
பதிவு நான் இட்டதாயினும் கட்டுரை மலர் மன்னன் அவர்களுடையது. சிறிது நேரம் முன்புதான் இக்கட்டுரையைத் திண்ணையில் படித்தேன். உடனே அவரிடம் தொலைபேசியில் அனுமதி வாங்கி இங்கு வெளியிடுகிறேன்.
1967 தேர்தல் வெற்றியை அண்ணா அவர்களே எதிர்ப்பார்க்கவில்லை. அவர் நின்றதென்னவோ தென் சென்னை பாராளுமன்றத் தொகுதிக்குத்தான். தி.மு.க. தன் பலத்தை அதிகரித்துக் கொள்ளும் என்றுதான் அவர் எதிர்பார்த்தார். தி.மு.க.வுக்கு 130க்கும் மேல் இடங்கள் கிடைத்தன. காங்கிரஸுக்கு 50க்கும் கீழே. பல முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் (காமராஜ் அவர்கள் உட்பட) தோல்வியுற்றனர்.
முதன் மந்திரியாக பதவி ஏற்பதற்கேதுவாக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்தார். அவர் இடத்தை முரசொலி மாறன் அவர்கள் நிரப்பினார். அண்ணா அவர்கள் எம்.எல்.சி.யாக நியமனம் பெற்று முதல்வரானார்.
அவர் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் கூட இல்லை. அதிலும் கடைசி சில மாதங்கள் படுத்த படுக்கையாக இருந்தார். இருப்பினும் அவர் ஆட்சிக்காலத்தையும் பலர் காமராஜர் ஆட்சிக்கு சமமாகவே நோக்குகின்றனர். அவருக்குப் பிறகு வந்த எல்லா முதல்வர்களுமே அண்ணா மற்றும் அவருக்கு முன்னால் வந்த முதல் மந்திரிகளை விட பல படிகள் கீழேதான் இருந்தனர்.
அண்ணா அவர்களுக்கு புற்று நோய் என்று தெரிந்த காலக்கட்டத்தில் ஒரு நாள் சட்டசபையில் ஒரு எதிர்க்கட்சி உறுப்பினர் அவர் ஆட்சி அடுத்த தேர்தலில் தோல்வியடையும் என்னும் பொருளில் அவரை நோக்கி "Your days are numbered" என்று சீற, அண்ணா அவர்களோ அவருக்கே உரித்தான கரகரத்த குரலில் "But my steps are measured" என்று கம்பீரமாகக் கூறினார். மேலும் பிறகு கூறுவேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"அந்தச் சமயம் முதல்வர் அண்ணா மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதிக்குத் தாமகவே சென்று மாணவர்களிடம் மன்னிப்புக் கோரினார்! "ஏன் முன்னதாக வரவில்லை?' என்று மாணவர்கள் அதட்டினார்கள்."
இந்த நேர்க்காணலை என் தந்தை ஆர். நரசிம்மன் (Brigadier) அவர்கள் ஹிந்து பத்திரிகைக்காகக் கவர் செய்தார். அன்றையக் காலை ஹிந்துவில் அப்போதைய போலீஸ் கமிஷனர் குப்புசாமி அவர்கள் ஆயுதங்களுடன் சட்டக் கல்லூரி வாசலில் தாக்குவதற்காக நின்ற தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு முன்னால் தலையைக் குனிந்து கலைந்து போகுமாறு கெஞ்சுவது போன்ற புகைப்படம் வந்திருந்தது. அது பற்றி பேசும்போது அண்ணா அவர்களே It is not only shameful but is quite damaging to the image of the Government as well (quoting from memory) என்று தயங்காமல் ஒத்துக் கொண்டார். உடம்பு சரியில்லாத அந்த மனிதர் பொறுமையை விடாது கடைபிடித்து எல்லோர் உள்ளங்களையும் கொள்ளை கொண்டார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment