4/08/2006

குமுதம் ரிப்போர்டருக்கு நன்றி

மூன்று நாட்களுக்கு முன்னால் குமுதம் ரிப்போர்டரிலிருந்து என்னிடம் போலி டோண்டுவைப் பற்றி ஒரு பேட்டி எடுத்தார்கள். பத்ரி, நாராயணன், இகாரஸ் பிரகாஷ், பாரா ஆகியோரிடமும் கேள்விகள் கேட்கப்பட்டன. நாங்கள் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கொடுத்த பேட்டியை அழகாகச் சுருக்கி இன்று வெளியான லேட்டஸ்ட் குமுதம் ரிப்போர்டரில் (13.04.2006 தேதியிட்டது) "தமிழ் இன்டர்நெட்டில் ஒரு பயங்கரவாதி" என்னும் தலைப்பில் 10-ஆம் பக்கத்தில் அது வந்துள்ளது.

அதிலிருந்து ஒரு வரி: "இதனால் தன் அறுபதாம் கல்யாணம் விமரிசையாக நடந்தும் ஒரு பிளாக் எழுத்தாளர், தன் நண்பர்கள் வலியுறுத்துயும் அந்தப் படங்களையே வெளியிடத் தயங்கிக் கொண்டிருக்கிறார்." அது வேறு யாரும் இல்லை நான்தான்.

கடந்த ஒரு வருடங்களாக தமிழ் இணையத்தைப் பீடிக்கும் நோயாக உலவி வரும் போலி டோண்டு என்னும் இவனைப் பற்றி நான் கீழ்க்கண்டப் பதிவுகள் போட்டுள்ளேன்:

1. போலி டோண்டு

2. என் பெயரில் வெளியாகும் பின்னூட்டங்களைப் பற்றி - 2 (இதிலேயே இதன் முந்தையப் பகுதியின் சுட்டியும் உண்டு)

3. திருவிண்ணகர ஒப்பில்லா அப்பன்

4. மனம் பிறழ்ந்தவன் செய்யும் கூத்து இதன் பின்னூட்டங்களை தற்சமயம் மறைத்து வைத்திருக்கிறேன், அவ்வளவு ஆபாசங்கள் அவற்றில்!

5. வலைப்பதிவு நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

ஆக, போன ஆண்டு மே மாதம் 25-லிருந்து இந்தப் பிரச்சினை ஆட்டிப் படைத்து வருகிறது. இப்போது குமுதம் ரிப்போர்டரிலும் வந்து விட்டது. என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகர நெடுங்குழைகாதன் அருளால் எல்லாம் சரியாகும் என்ற நம்பிக்கையும் உண்டு.

இந்தச் செய்கையில் ஈடுபட்டிருக்கும் போலி டோண்டுவைப் பற்றி பிரபல மனத் தத்துவ நிபுணர் டாக்டர் ஷாலினி அவர்கள் கூறியதையும் அதே குமுதம் ரிப்போர்டர் கட்டுரையில் படிக்கவும்.

பிரச்சினையை அழகாக அடுத்த தளத்திற்கு கொண்டு சென்றதற்காக குமுதம் ரிப்போர்டருக்கு நன்றி. அதே குமுதம் ரிப்போர்டரில் போன மே மாதம் வந்த இரண்டு செய்திகளைப் பற்றி நான் போட்ட இந்தப் பதிவில்தான் பிரச்சினையே ஆரம்பித்தது என்பதி நினைக்கவே வேடிக்கையாக இருக்கிறது. (இப்பதிவு போன அக்டோபர் மாதம் மீள்பதிவு செய்யப்பட்டது)

அன்புடன்,
டோண்டு ராகவன்

19 comments:

dondu(#11168674346665545885) said...

இதே விஷயத்தைப் பற்றி இட்லி வடை அவர்களும் பதிவு போட்டுள்ளார். அங்கு நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:

http://idlyvadai.blogspot.com/2006/04/blog-post_114446735402067986.html

பதிவுக்கு நன்றி இட்லி வடை அவர்களே. நானும் இதைப் பற்றிப் பதிவு போட்டுள்ளேன். பார்க்க: பார்க்க:http://dondu.blogspot.com/2006/04/blog-post_08.html

இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டுள்ளான் என்பதைக் காட்ட அதன் நகலை நான் மேலே குறிப்பிட்டுள்ள என் பதிவிலும் பின்னூட்டமாக இடுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Muthu said...

டோண்டு அவர்களே,
அட... அந்த போலியின் பெயர் இந்தளவுக்கு போய் விட்டதா?. யாரோ 'சென்னை சைபர் கிரைம்' பிளாக்கர் நிறுவனத்திடம் அந்தப் பின்னூட்டங்களையெல்லாம் வாங்கியிருப்பதாகச் சொன்னது உண்மைதான் போலிருக்கிறது.

ஆக, அந்த ஆள் விரைவில் புள்ளி விபரத்துடன் மாட்டப்போகிறார். போலிக்கு மனநோய் இருக்கிறது என்று சொல்ல மனநோய் நிபுணர் தேவையே இல்லை. கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு?. பிரச்சனையை உற்று நோக்கும் எவரும் சொல்லிவிடலாம், அதன் துல்லியமான பெயர், அதைச் சரிசெய்யும் முறை இவற்றுக்குத்தான் மனநோய் நிபுணரின் உதவி தேவை.

எனது உளவியல் நோக்கிய கட்டுரை ஒன்று இங்கே. இது போலிக்கு எந்த விதம் பொருந்தும் என்பதை படிப்பவர்கள் சொன்னால் நன்றாக இருக்கும்.

dondu(#11168674346665545885) said...

நன்றி முத்து அவர்களே. போலி டோண்டு யார் என்பது நமக்குத் தெரியும்தானே. அவன் மனைவி படப்போகும் துயரத்துக்காகத்தான் பார்க்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

டிபிஆர்.ஜோசப் said...

நானும் படிச்சேன் சார்.

ரொம்ப நல்லா கவர் பண்ணியிருந்தாங்க. ஆனா ஒன்னு. சென்னையிலருக்கற சைபர் க்ரைம் அதிகாரி ஒருத்தர் கிட்ட கேட்டு அவரோட ஒப்பீனியனையும் போட்ருக்கலாம்.

எதையும் மிகைப்படுத்தாம சுருக்கமா அழகா இருந்தது அந்த கட்டுரை.

இதனால் ஏதாவது நடந்தால் நல்லது.

dondu(#11168674346665545885) said...

நீங்கள் சொல்வது நல்ல யோசனை ஜோசஃப் அவர்களே. சைபர் குற்றம் என்ன என்பதில் மக்களுக்குத் தெளிவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் திகைக்கிறார்கள். அதற்காகவேனும் சைபர் போலிஸின் கருத்தும் உதவியாக இருக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Selvakumar said...

ராகவர் அய்யா,
நான் தமிழ் மண்த்திற்கு மிகவும் புதியவன்.

இருப்பினும், இந்த போலி தங்களை இவ்வளவு தூரம் இம்சை செய்வதை படிக்க நேர்ந்தபோது, மிகவும் வருத்தம் அடைந்தேன்.

அவனை சைபர் கிரைமில் பிடித்தாலும், அவனது மனநிலை அதற்குப்பின் மாறுமா என்பது சந்தேகமே! மனநிலை மருத்துவமனையில் சேர்ப்பது சால சிறந்த்து.

செல்வகுமார்

dondu(#11168674346665545885) said...

நன்றி செல்வகுமார் அவர்களே,

நீங்கள் சொல்வது உண்மையே. மாட்டினாலும் அவன் திருந்த மாட்டான். என்ன செய்வது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Geetha Sambasivam said...

எப்படியோ எல்லாரையும் ஆட்டி வைத்துக் கொண்டிருந்த ஒருவன் மாட்டிக் கொண்டது பற்றி சந்தோஷம். அவன் தொல்லை பொறுக்க முடியாமல் கொஞ்ச நாள் நான் பின்னூட்டப் பெட்டியை மூடி வைத்திருந்தேன். அப்படியும் உங்கள் சஷ்டி அப்தபூர்த்திக்கு நான் வாழ்த்துச் சொன்னதற்கு தன் தனிச் செந்தமிழில் திட்டி வந்தது. அதைப் பிரிக்காமலே அங்கேயே அழித்து விட்டேன். இருந்தாலும் ஒரு இரண்டு, மூன்று நாள் மனம் வேதனை அடைவது தவிர்க்க முடியவில்லை.

dondu(#11168674346665545885) said...

நன்றி வெள்ளைய ராஜா மற்றும் கீதா அவர்களே.

பாதி கிணறுதான் தாண்டியிருக்கிறோம் கீதா அவர்களே. பிரச்சினையை அச்சு ஊடகத்துக்குக் கொண்டு சென்றுள்ளோம். குமுதம் ரிப்போர்டர் போலியின் எழுத்துக்களைப் பார்த்து நொந்து விட்டார். இன்னும் செய்ய வேண்டியவை இருக்கின்றன. மேலும் பல அச்சு ஊடகங்களுக்குச் செல்ல வேண்டும். என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் அருளில் எல்லாம் நல்லபடியாகவே முடியும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

VSK said...

இந்தக் கொடுமையிலிருந்து, நாம் அனைவரும், 'போலிடோண்டு'வின் துணைவியாரும் விரைவினில் மீள, எல்லாம்வல்ல முருகப் பெருமானை மனமார வேண்டிக் கொள்கிறேன்.
தங்களுக்கு அடிக்கடி பின்னூட்டம் இடும் 'புண்ணியத்தால்' அடியேனுக்கு தினசரி ஒரு மெயிலாவது வரத் தவறுவதில்லை!!
:-)

dondu(#11168674346665545885) said...

நன்றி எஸ்.கே. அவர்களே. எல்லாம் முருகன் மற்றும் அவன் மாமன் கண்ணன் துணை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

இதே விஷயத்தைப் பற்றி இட்லி வடை அவர்களும் பதிவு போட்டுள்ளார். அங்கு நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:

http://idlyvadai.blogspot.com
/2006/04/blog-post_
114446735402067986.html
மிக நல்ல வேலை செய்திருக்கிறீர்கள் இட்லி வடை அவர்களே. உங்களுக்கு என் மனப்பூர்வமான நன்றி.

இந்தப் பின்னூட்டத்தை குமுதம் ரிப்போர்டருக்கு நன்றி தெரிவித்து நான் இட்டப் பதிவிலும் பின்னூட்டமாக நகலிடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.
com/2006/04/blog-post_08.html
அன்புடன்,
டோண்டு ராகவன்

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

உன்கள் புண்ணியத்தில் குமுதம் ரிப்போர்டரையும் படித்து விட்டேன்.முன்பெல்லாம் கட்டணச் சேவையாக வைத்திருந்தார்கள் என நினைக்கிறேன்.நன்றி

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

ரிப்போர்ட்டரில் வந்தது.
======================
காலையில் போய் கம்ப்யூட்டரைத் திறக்கிறீர்கள். இ_மெயிலை ஆர்வத்துடன் திறந்தால்...‘‘தே.... மவனே... உன்னைக் கொன்னுடுவேண்டா...’’ என்று ஆரம்பித்து உங்கள் அப்பா, அம்மா, சகோதரி, பிள்ளைகள், நண்பர்கள் என்று எல்லோரையும் வக்கிரமாகத் திட்டி ஒரு அனாமதேய மெயில் வந்திருந்தால், உங்களுக்கு எப்படியிருக்கும்?

தமிழ் இணைய உலகில் ‘பிளாக்’ (ஙிறீஷீரீ) என்று சொல்லப்படும் தனிப்பக்கங்கள் வைத்து எழுதிக்கொண்டிருப்பவர்கள் இம்மாதிரியரு அவஸ்தையில் மாட்டிக் கொண்டு தவிக்கிறார்கள். உலகளாவிய இணைய உலகில், யார் இந்த வேலையைச் செய்பவன் என்று தெரியாமல் பலர் மனம் நொந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.

தமிழில் ‘பிளாக்’ எழுதுபவர்கள் சுமார் 1000 பேர் இருக்கிறார்கள். அதில் சுமார் 300 பேர் தீவிரமாக இயங்குகிறார்கள். தமிழில் எழுதப்படும் இந்த பிளாக்குகள் அனைத்தையும் திரட்டி ‘தமிழ் மணம்’ என்ற இணையதளம் வழங்குகிறது. இதற்கு போனால் யார் யார், என்னென்ன விவரங்களை புதிதாக தங்கள் பிளாக்கில் அப்டேட் செய்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள முடியும்.

இப்படி தமிழ் இணைய உலகில் தீவிரமாக இயங்குபவர்களில் ‘டோண்டு’ ராகவன் என்ற மொழிபெயர்ப்பாளரும் ஒருவர். இவர்தான் அந்த ‘பயங்கரவாதியால்’ கடுமையான பாதிப்புக்குள்ளானவர். இவரிடம் பேசினோம்.

‘‘நான் ‘டோண்டு’ என்ற பெயரில் ‘பிளாக்’ எழுதி வருகிறேன். நான் எழுதிய ஒரு கருத்துக்கு நூறு பேர் வரை ‘கமெண்டுகள்’ எழுதுவார்கள். இது சாதாரணமாக நடக்கும் நிகழ்ச்சி. ஒருமுறை, நான் என்ன சாதி என்பதைக் குறிப்பிட்டு, அதை பகிரங்கமாக ஒப்புக்கொள்வதில் தவறில்லை; எதற்காக என் சாதியை நான் மறைக்க வேண்டும்? என்று குறிப்பிட்டேன். இதைத்தான் அந்த ‘பயங்கரவாதி’ பிடித்துக் கொண்டுவிட்டான். அதைத் தொடர்ந்து என் பிளாக்குக்கு வந்து கெட்ட வார்த்தைகளால் அச்சில் ஏற்றமுடியாத என்னை அர்ச்சித்தவன், என் ‘பிளாக்’ மாதிரியே வேறொரு ‘பிளாக்’கை என் பெயரிலே ‘டிசைன்’ செய்ய ஆரம்பித்து, நான் எழுதும் எல்லாவற்றையும் ‘திருடி’ அங்கே போட்டு, அதில் இடையிடையே சில வார்த்தைகளை மாற்றிப் (கெட்ட வார்த்தைகளை, குறிப்பாக பாலுறுப்புகள் தொடர்பான வார்த்தை) போட்டுவிடுவான். அதைப் பார்ப்பவர்கள், ‘டோண்டு’ ராகவனுக்கு அறுபது வயதாகிறது. இவ்வளவு வக்கிரமான ஆளாக இருக்கிறாரே என்று நினைக்க ஆரம்பித்தார்கள். அது மட்டுமல்ல, என் பெயரில் இவன் மற்றவர்கள் எழுதும் தமிழ் பிளாக்குகளுக்கும் போய் ‘கமெண்ட்’ எழுதவும் ஆரம்பித்தான். கமெண்டுகளா அவை? அய்யோ... படிக்கவே கண் கூசும் கடைந்தெடுத்த வக்கிர வார்த்தைகள் அவை... படிக்கும் ஆண்களுக்கே குமட்டும் என்றால் பெண்கள் என்ன ஆவார்கள்?

இந்த ‘உவ்வே’ சமாச்சாரத்தைக் கண்டுபிடித்த நான் பிறகு எல்லோருக்கும் அதைத் தெரிவித்தேன். நான் எழுதும் ஒரிஜினல் கமெண்டுகளைத் தொகுத்து ஒரு இடத்தில் போட்டேன். இதையும் அவன் மோப்பம் பிடித்து, அந்த கமெண்டுகளுக்கும் போலியாக தனி இடம் ஆரம்பித்து போலி கமெண்டுகளை என் போலவே தொகுக்க ஆரம்பித்துவிட்டான்.

இதோடு விட்டானா என்றால் இல்லை... என் ‘பிளாக்’கைப் படித்துவிட்டு யாராவது ஒரு சின்ன கமெண்டை எழுதிவிட்டால் போதும். அடுத்த நிமிடம் அதை எழுதியவரை ஆபாசமாக அர்ச்சனை செய்து... கொலை மிரட்டல் விட்டு அச்சுறுத்திவிடுகிறான்!’’ என்று மூச்சுவிடாமல் சொல்லி சற்று நிறுத்தினார் டோண்டு ராகவன்.

இதுபோன்ற வக்கிர செய்கைகள் நடந்த ஓர் ஆண்டாக தொடர்ந்து நடந்திருக்கிறது. ஆனால், சமீபத்தில் ஒரு அறுபது வயதுப் பெண்மணி, தன் அமெரிக்க மகளுடன் பேசுவதற்காக இணைய தளத்தைப் பயன்படுத்த ஆரம்பித்தவர், அப்பாவித்தனமாக ‘டோண்டு’வின் ‘பிளாக்’கில் ஒரு கருத்தை எழுதிவிட்டார். அவ்வளவுதான். அவருக்கு வந்து சேர்ந்த மோசமான வார்த்தைகளை அவர் வாழ்நாளில் கேட்டதில்லை. இப்போது அவர் மனரீதியாகப் பாதிக்கப்பட்டு கணிப்பொறியை பார்த்தாலே கை கால் நடுங்கும் அளவுக்குப் போய்விட்டார்.

இந்த சம்பவத்துக்குப் பிறகு, இதை இத்துடன் விடக்கூடாது என்று பாதிக்கப்பட்டவர்கள் முடிவெடுத்திருக்கிறார்களாம்.

இணைய உலகில் இயங்கும் பலரிடம் சாதி குறித்த பிடிமானம் அபரிமிதமாக உள்ளது. ஏனெனில், ‘அங்கே முகம் காட்ட வேண்டாம். தங்கள் அடையாளங்களை மறைத்துக் கொள்ளலாம்’ என்பது ஒரு வசதி. எந்தக் கருத்தையும் தன் ‘பிளாக்’கில் சுதந்திரமாக எழுதிவிடலாம். சில ‘பிளாக்’குகள் இதைப் பயன்படுத்தி இனவாதம், மதவாதம் பேசிவிடுவதும் உண்டு. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தால், அவற்றை இந்த ‘பிளாக்’குகளுக்கு இடம் தரும் இணைய தளங்கள் நீக்கிவிடும்.

ஆனால் இந்த பயங்கரவாதி எப்படியோ ஒருவரின் சாதி, அவரது பின்னணி, அவர் வேலை பார்க்கும் இடம், அவரது கல்லூரித் தொடர்புகள் எல்லாவற்றையும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கண்டுபிடித்துவிடுகிறான். பிறகு அவற்றை பப்ளிக்காக தன் ‘போலி டோண்டு’ பிளாக்கில் வெளியிட்டும் விடுகிறான். அமெரிக்காவில் வசிக்கும் திருமலைராஜன் என்பவரது முழுமுகவரி, அவர் எங்கோ, எப்போதோ எடுத்துக் கொண்ட ஒரு படம் ஆகியவற்றை வெளியிட்டு பெரிய சலசலப்பையே தமிழ் இணைய தள எழுத்தாளர்களிடம் ஏற்படுத்திவிட்டான் அவன்.

இதனால் தன் அறுபதாம் கல்யாணம் விமரிசையாக நடந்தும் ஒரு ‘பிளாக்’ எழுத்தாளர், தன் நண்பர்கள் வலியுறுத்தியும் அந்தப் படங்களை வெளியிடவே தயங்கிக் கொண்டிருக்கிறார். சென்னையிலிருக்கும் ஒரு மூத்த பெண் பத்திரிகையாளருக்கும் இந்தக் கிறுக்குப் பிடித்த பயங்கரவாதியிடமிருந்து ஆபாச மிரட்டல்கள் வர, அவரும் இப்போதெல்லாம் கம்ப்யூட்டரைப் பார்த்தாலே கை நடுங்க ஆரம்பித்துள்ளார்.

‘தமிழ் மணம்’ என்ற பிளாக்குகளைத் திரட்டும் தளம் நடத்துபவர் பெயர் ஆறுமுகம். இவருக்கும் அந்த பயங்கரவாதிக்கும் இதனால் மோதல் வர, அவன் சகட்டு மேனிக்கு அவரைப் பற்றி எழுத ஆரம்பிக்க, அவற்றை ஏதேச்சையாகப் படித்துவிட்ட அவரது குடும்பத்தினர், ‘‘உங்களுக்கு இந்த இணையதள பிஸினஸே வேண்டாம்!’’ என்று பெரும் பிரச்னை செய்திருக்கிறார்கள்.

தமிழில் பிளாக் எழுதுபவர்களில் பிரபலமானவர்களான பத்ரிநாராயணன், பிரகாஷ் ஆகியோரிடம் இதுபற்றிக் கேட்டோம். ‘தாங்களும் இவனால் பாதிக்கப்பட்டவர்களே’ என்ற அவர்கள், தங்கள் கவலையை நம்முடன் பகிர்ந்து கொண்டார்கள்.

‘‘இணையத்தின் பயன்பாடு இப்போது உலகம் முழுக்க அதிகரித்துக்கொண்டே போகிறது. பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் இதைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்கள் புதிதாக உள்ளே நுழைந்தவுடன் அவர்களை மீண்டும் இணையதளம் பக்கம் திரும்ப வராமல் செய்கிறான் இவன். எங்களுக்கும் இவனிடமிருந்து மிரட்டல் கடிதங்கள் வந்திருக்கின்றன. ஆனால் அதை நாங்கள் பொருட்படுத்தவில்லை. ஆனால் பெண்கள் இவனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாவதைத்தான் சும்மா விட்டுவிட முடியவில்லை. சாதாரணமாக, வெளியுலகில் ஒரு தெருவில் ஒரு பைத்தியக்காரன், அவ்வழியாகப் போகும் பெண்களைத் தரக்குறைவாகப் பேசிக் கொண்டிருக்கிறான், அதைத் தட்டிக் கேட்க யாரும் இல்லை என்றால் என்ன செய்வார்கள்... பெண்கள் அந்தத் தெரு வழியாக வருவதையே நிறுத்திவிடுவார்கள். அதுதான் இப்போது நடக்கிறது. தமிழ் இணையத்தில் ஆர்வத்துடன் பங்கெடுக்க வந்த பல பெண்கள் இப்போது இவனது மிரட்டலால் காணாமலே போய்விட்டார்கள்.

இதே அமெரிக்காவாக இருந்தால், இவனை கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளில் பிடித்துப்போட்டு ‘நொங்கு’ எடுத்துவிடுவார்கள். சைபர் கிரைம் தொடர்பாக சட்டங்கள் அவ்வளவு தெளிவானவையாக உள்ளன. ஆனால் இங்கே அப்படிக் கிடையாது. தமிழகத்தில் எங்கு சைபர் கிரைம் நடந்தாலும், அதை எங்கே புகார் கொடுப்பது என்பது பற்றிய தெளிவான விவரங்கள் இல்லை. இதை முறைப்படுத்தாவிட்டால், எதிர்காலத்தில் இன்னும் பயன்பாடுகள் அதிகரிக்கும்போது விபரீதங்கள் ஏற்படும்’’ என்று தெரிவித்தார்கள் இவர்கள்.

இப்படியரு ‘குடைச்சலைக்’ கொடுத்துவரும் அவன் யாரென்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு திறமையுடன் தொழில்நுட்ப ஓட்டைகளைப் பயன்படுத்திச் செயல்படுகிறானாம். அத்துடன் அவன் எழுதும் தமிழ்நடை, உண்மையிலேயே நன்றாக இருக்கிறது என்பதால் அவன் மெத்தப் படித்த அறிவாளி என்று ஒப்புக்கொள்ளும் இவர்கள், எங்கோ அவனுக்கு மனரீதியாக பாதிப்பு ஏற்பட்டு அவனொரு சைக்கோவாக ஆனதால்தான் இப்படி நடந்துகொள்கிறான் என்கிறார்கள். தற்போதைக்கு அவன் யாரென்று ஒருவிதமாக புரிந்திருக்கும் இவர்கள், அவனைப்பற்றி காவல்துறைக்கும் தெரிவித்திருக்கிறார்களாம். ஆனால், அவனைப் பிடிக்க சர்வதேச காவல் துறையின் உதவி தேவைப்படும் என்பதால் தமிழக போலீஸ் கூடுதல் சிரத்தையுடன் செயல்பட்டால்தான் பிடிக்க முடியும் என்கிறார்கள்.

இணையதளத்தில் தகவல்களைத் தேடித்தரும் மென்பொருட்கள் உள்ளன. இவன் பலரையும் பற்றி கன்னா பின்னாவென்று ஆபாசமாக எழுதிவருவதால், இவனால் பாதிக்கப்பட்ட யாரைப்பற்றியாவது தகவல்களைத் தேடினால், இவன் அவர்களைப்பற்றி எழுதிய அசிங்கமான விஷயங்களே வந்து விழுகின்றனவாம். இதுவே இணையதள எழுத்தாளர்களின் அச்சத்தைப் பன்மடங்கு பெரிதாக்கியிருக்கிறது!

தொழில்நுட்பம் வளர வளர எவ்வளவு பிரச்னைகளைத்தான் சந்திக்க வேண்டியிருக்கிறது!

படங்கள்: செந்தில்நாதன்

dondu(#11168674346665545885) said...

இப்போது குமுதம் ரிப்போர்டரின் பதிவு யூனிக்கோடிலும் இட்டுள்ளேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/04/blog-post_10.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

சிவா அவர்களே,

நீங்களும் யூனிகோடில் மாற்றிக் கொடுத்துள்ளீர்கள். மிக்க நன்றி. ஆனால், அதை ஏற்கனவே பதிவாகப் போட்டு விட்டதால், இங்கு வெளியிட வேண்டாமெனப் பார்க்கிறேன். அதற்காக ரிஜக்டும் செய்யவில்லை. அப்படியே வைத்துள்ளேன். உங்கள் விருப்பத்தைக் கூறவும். அவ்வாறே செய்வேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Selvakumar said...

ராகவன் அய்யா,
ஹிஹி. எனக்கும் ஒரு பின்னூட்டம் அந்த பரதேசி இட்டுள்ளான். உங்களை ஆதரிப்பவர்கள்தான் அவன் குறிபோலுள்ளது.
---------------------------------
அந்த பரதேசி இதை படிக்கக்கூடும். அவனுக்கு சொல்லி கொள்வது ஒன்றுதான்.

"புத்தர் கூற்றுப்படி, நீ குடுப்பதை மற்றவர்கள் எடுக்காதபோது, அது உன்னையே இறுதி வரை சாரும். அதுபோல நீ என்ன எழுதினாலும் அதை மற்றவர் எடுக்காதவரை அது உன்னையே சாரும்"

பரதேசி, நான் msn ல தான் இருப்பேன். தைரியம் இருந்தா வாட பார்க்காலாம்."

உன்னை நான் மதிக்கிறதே இல்லை. நீ என்னை எழுதினாலும் அதற்கு நான் மறுப்பு தெரிவிப்பேன்.. வாடா பார்க்கலாம்.

செல்வகுமார்
------------------------

dondu(#11168674346665545885) said...

நன்றி செல்வகுமார் அவர்களே. நம் போன்ற இளைஞர்கள்தான் ஏதாவ்வது செய்ய வேண்டும்!!!!!

அன்புடன்,
டோண்டு ராகவன்
(60 வயது இளைஞன்)

dondu(#11168674346665545885) said...

Thanks P.C.James.

Regards,
Dondu N.Raghavan

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது