சமீபத்தில் 1954-ல் கல்கியின் கடைசி தொடர்கதையான அமரதாரா முழுமையடைவதற்கு முன்னமேயே காலன் அவரை நம்மிடமிருந்து பிரித்து விட்டான். நல்லவேளையாக அவர் வைத்திருந்த கதை குறிப்புகளை வைத்து அவர் மகள் ஆனந்தி தொடர்கதையை முடித்து வைத்தார். என்னதான் அவர் முயற்சி செய்திருந்தாலும் கல்கியே எழுதியிருந்தால் போல இருக்குமா?
நேற்று கஸ்தூரி சீனுவாசன் நூலகத்திலிருந்து கல்கியின் வாழ்க்கை வரலாறாகிய "பொன்னியின் புதல்வர்" எடுத்து வந்தேன். எழுதியது சுந்தா அவர்கள். சமீபத்தில் 1974-ல் அது கல்கியில் வாராவாரம் தொடராக வந்தது. அச்சமயம் நான் சுந்தா அவர்கள் வீட்டுக்கு போய் இத்தொடர் சம்பந்தமாக பேசியது பற்றி எனது இப்பதிவில் போட்டுள்ளேன்.
சுந்தா அவர்களிடம் கி.ராஜேந்திரன் கல்கியின் வாழ்க்கை வரலாறை எழுத வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அவரும் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு வேலையில் இறங்கினார். ரொம்ப விஸ்தாரமாகவே தகவல்கள் சேகரித்திருக்கிறார். கல்கி அவர்கள் தன் வாழ்நாளில் பல விஷயங்களை தொட்டிருக்கிறார். அவற்றில் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி நோட்டு புத்தகங்கள் போட்டுக் கொண்டு விவரங்கள் சேகரித்திருக்கிறார். கல்கி எழுதிய அத்தனை புத்தகங்களையும் கட்டுரைகளையும் படித்திருக்கிறார். அவருடைய சமகாலத்தவர்களை விவரமாக பேட்டி கண்டு பல அரிய தகவல்கள் சேர்த்துள்ளார். இப்போதெல்லாம் கூகளில் ஓரிரு க்ளிக்குக்ளில் விஷயம் பெறுகிறோம். அவர் இந்த நூல் எழுதிய காலத்தில் அவையெல்லாம் ஏது? ஒரு டாக்டரேட் என்ன, கல்கியை பற்றி பல விஷயங்களில் பல டாக்டரேட் பெறும் அளவுக்கு அவர் உழைத்தார்.
அவருடன் நான் மேலே கூறிய தருணத்தில் பேசிக் கொண்டிருந்த போது பேச்சுவாக்கில் அவருக்கும் சிட்டி, கு.ப.ரா. மற்றும் தி.ஜானகிராமனிடம் ஏற்பட்ட விவாதங்கள் "சிறிது வெளிச்சம்" என்ற வாசகர் வட்ட வெளியீட்டு புத்தகத்தில் வந்திருப்பதாகக் கூறியிருக்கிறேன். இரண்டு நாட்களுக்கு பிறகு தனது அடுத்த வீட்டுக்காரரிடம் போய் என்னை தருவிக்குமாறு கேட்டிருக்கிறார். அந்த மனிதரும் எனக்கு தகவல் அனுப்பி உடனே அவர் வீட்டிற்கு வரச் சொன்னார். என்னவோ ஏதோ என்று நானும் பதறி ஓடி வந்தேன். இருக்காதா பின்னே, அந்த பக்கத்து வீட்டுக்காரர் என் சொந்த பெரியப்பாவாயிற்றே. அவர் வீட்டிற்கு போனால் சுந்தா அவர்கள் முன்னறையில் அமர்ந்திருக்கிறார். என்ன விஷயம் என்று கேட்ட போது என்னிடம் சிறிது வெளிச்சம் புத்தக விவரம் கேட்டிருக்கிறார். அதாவது புத்தகப் பெயர் சட்டென்று நினைவுக்கு வர மறுத்திருக்கிறது. அதற்காகத்தான் நான் வரவழைக்கப்பட்டேன். விஷயத்தை நான் மறுபடி கூற, உடனே கி.ராஜேந்திரனுக்கு ஃபோன் போட, அன்று இரவே புத்தகம் அவர் வீட்டிற்கு வந்து விட்டது. இதை எதற்கு சொல்கிறேன் என்றால் கல்கியின் வாழ்க்கை வரலாறுக்காக அவரும் கி.ராஜேந்திரனும் என்ன செலவை வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்திருக்கிறார்கள்.
இப்போது புத்தக நாயகன் கல்கியிடம் வருவோம். சுந்தா அவர்களது புத்தகத்தை நான் ஆதாரமாக வைத்துக் கொள்ளப் போகிறேன். அப்படியே எனக்கு கல்கி சம்பந்தமாக இருக்கும் ஞாபகங்களும் உதவிக்கு வரும்.
அடுத்த பதிவில் பார்ப்போமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
புத்தாண்டு
-
புத்தாண்டில் வழக்கமான மலைத்தங்குமிடத்தில் இருப்பேன். (31 காலைமுதல் 1 மாலை
வரை) ஆர்வமிருக்கும் நண்பர்கள் வந்து என்னுடன் தங்கலாம். செலவுகளைப்
பகிர்ந்துகொள்ளு...
9 minutes ago
6 comments:
எனக்கும் கல்கி கதைகள் பிடிக்கும்.
ஆனா இது என்ன சார் நீங்க சமீபத்தில் 1954-ன்னு சொல்லி அலட்சியமா 52 வருஷங்களை கடந்துட்டீங்க?
இங்க மட்டுமில்லை உங்க பல பதிவுகள்ளே கூட இந்த மாதிரியே எழுதறீங்க. தமாஷா இருக்கு.
சரி அத்த வுடுங்க. அமரதாரா படிச்சதில்லை. ஏன்னாக்க அத கல்கி முழுசா எழுதல்லியே. அதனாலேயே ஒரு அவர்ஷன்னு வச்சுக்குங்களேன். இப்ப எங்காச்சும் கெடச்சா படிக்கலாம்னு இருக்கேன்.
முனிவேலு
நன்றி முனிவேலு அவர்களே.
எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் எனது வாழ்வில் நடந்த பல நிகழ்ச்சிகள் என்னைப் பொருத்தவரை நேற்று நடந்தது போல உள்ளன. இப்போதுதான் படேல் இறந்த செய்தி கேட்டது போல இருக்கிறது. ஆனால் அது நடந்து 56 வருடங்கள் ஆகிவிட்டன.
இந்த விஷயத்தைப் பற்றி நான் போட்ட ஒரு பதிவு இதோ.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி e_murali அவர்களே. தியாகபூமி அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். தவற விடாதீர்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
<=== ஆனா இது என்ன சார் நீங்க சமீபத்தில் 1954-ன்னு சொல்லி அலட்சியமா 52 வருஷங்களை கடந்துட்டீங்க? ===>
முனிவேலு ஐயா, நீங்க இவரது ப்ளாக்குக்கு புதுசுன்னு தெரியுது.
"முனிவேலு ஐயா, நீங்க இவரது ப்ளாக்குக்கு புதுசுன்னு தெரியுது."
கவலைப்படாதீர்கள் சிவப்பிரகாசம் அவர்களே. முனிவேலு அவர்களுக்கு இது கண்டிப்பாக பழகி விடும். :))))
அன்புடன்,
டோண்டு ராகவன்
தியாகபூமி கதையைப் பத்தி எழுதறீங்களா?
முகம்மது யூனுஸ்
Post a Comment