12/24/2006

நான் ரசித்த ஹிந்தி சீரியல்கள் - 1

ஹம்லோக்:
சமீபத்தில் 1984-85 ல் நான் தில்லியில் வசித்து வந்த போது திடீரென ஃபோன் அடித்தது. சென்னையிலிருந்து எஸ்டிடி. என் மைத்துனன் பேசினான். "டோண்டு, எனக்காக ஒரு காரியம் செய்ய வேண்டுமே" என்று ஆரம்பிததான். நான் சட்டென்று கூறினேன், இங்க பாருடா, டிவி-லே ஹம்லோக் காண்பிச்சிட்டிருக்கான். இப்போ பேச நேரம் இல்லை. உன் தங்கையுடன் பேசிக் கொள் அவள் எனக்கு விஷயத்தை பின்னால் கூறுவாள்" என்று கூறி, ஒலி வாங்கியை என் வீட்டம்மாவிடம் கொடுத்துவிட்டு சீரியலை பார்க்கச் சென்றேன். அவன் அதற்காகக் கோபித்துக் கொண்டு அடுத்த முறை சென்னை சென்றபோது ரொம்ப நேரம் (5 நிமிடங்கள்) பேசாமல் இருந்துவிட்டு பிறகுதான் பேசினான்.

இங்கே எதற்கு இதை கூறினேன் என்றால், ஹம்லோக் என்ற சீரியலை நான் எந்த அளவுக்கு பார்த்து வந்திருக்கிறேன் என்பதைக் கூறவே. வாரத்துக்கு மூன்று நாள் ஹம்லோக் காட்டப்பட்டது. அது ஒளிபரப்பாகும் நேரங்களில் தில்லி தெருவெல்லாம் வெறிச்சோடி கிடக்கும். அடுத்த நாள் பள்ளிகளிலும் அலுவலகங்களிலும் முந்தைய நாள் காட்டப்பட்ட எபிஸோடை பற்றி எல்லோரும் காரசாரமாக விவாதம் புரிவார்கள். ஒவ்வொரு எபிசோட் முடிந்ததும் திரைப்பட நடிகர் அசோக் குமார் நடந்து முடிந்த பகுதியை அலசுவார். அடுத்த எபிசோடில் என்ன காட்டப் போகிறார்கள் என்பதையும் கோடி காட்டுவார். (அதே சமயம் சென்னையில் முதல் சில எபிசோடுகளில் ஜெமினி கணேசனும், பிறகு வி.எஸ்.ராகவனும் எபிசோடுக்கு முன்னால் அதில் வரப்போகும் நிகழ்ச்சிகளை பற்றி கதை சுருக்கம் அளிப்பார்கள். சீரியல் என்னவோ ஹிந்தியில்தான் வரும்).

பசேஸர் ராமுக்கு மூன்று பெண்கள், பட்கி (பெரிய சகோதரி்), மஜ்லி (நடு சகோதரி), சுட்கி (குட்டி சகோதரி), இரண்டு பிள்ளைகள், லல்லு, நன்னே. பசேஸர் ராமின் மனைவி, பாட்டி, தாத்தா (பசேஸர் ராமின் அம்மா மற்றும் அப்பா). பசேஸர் ராம் ஏற்கனவே ஒரு மனைவியை இழந்தவர். அவர் வழியில் இரண்டு பெண்கள், ஏற்கனவே மணமானவ்ர்கள். ஆனால் முதல் சில எபிசோடுகளுக்கு பிறகு காணாமல் போனவர்கள்.

மேற்கண்ட குடும்பத்தினரை சுற்றியே கதை போகிறது. பாட்டி கூட சில எபிசோடுகளுக்கு பிறகுதான் கதைக்கே வருகிறார். அதே போல வெளிநாட்டு சித்தப்பா (பசேஸர் ராமின் தம்பி), சித்தி மறறும் அவர் குழந்தைகள் ஆகியோரும் நடுவில் வந்து சேருகின்றனர். குடும்பத் தலைவிக்கு திடீரன ஒரு தம்பியையும் அவரது குடும்பத்தினரையும் வேறு கதையில் புகுத்தினர். அதாவது ராக்கி சகோதரன் (உடன்பிறவா சகோதரன்). இந்த குடும்பம் தமிழ்க் குடும்பம். அவ்வப்போது தமிழில் வேறு டயலாக் வரும். தமாஷாக இருக்கும்.

மேலே கூறியவை எல்லாம் கதையில் மிக நாசுக்காகச் சேர்க்கப்பட்டன. தில்லியில் பொருளாதார ரீதியில் கீழ் நடுத்தர குடும்பம். இருப்பது வாடகை வீடு. இந்த குடும்பத்தில் நடக்கும் தினப்படி நிகழ்ச்சிகள். அதுதான் சீரியல். ஒவ்வொரு பாத்திரத்தையும் சிற்பி செதுக்குவதுபோல நன்றாகவே செதுக்கியிருந்தனர். இன்னொரு விசேஷம், இதை எத்தனை பேர் கவனித்தார்கள் என்று தெரியவில்லை. அதாவது, ஒவ்வொரு எபிசோடிலும் வரும் நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகும் தேதியன்றே நடை பெறுவதாகக் காட்டியிருப்பார்கள். உதாரணத்துக்கு 1985 ஜனவரி 26-ஆம் தேதி அன்று ஒளிபரப்பப்பட்ட எபிசோடில் அன்று காலை லைவாக காட்டப்பட்ட அணிவகுப்பை காட்டி, அதை குடும்பத்தினர் பார்ப்பதுபோல அமைத்திருந்தார்கள். திடீரென பாட்டி கத்துவாள், "பார் உங்கள் தாத்தாவும் அணிவகுப்பில் போகிறார்" என்று. (அப்பாத்திரம் ஓய்வு பெற்ற ராணுவ வீரர், அவரும் அந்த பரேடில் மார்ச் செய்ததாக நிகழ்ச்சி). அதே போல அந்த ஆண்டு தீபாவளியின் போது ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியிலும் அதே உத்தி. பல எபிசோடுகளில் தினசரி காலண்டரை ஏதாவது ஒரு ஷாட்டில் காட்டுவார்கள். அது எபிசோட் ஒளிபரப்பாகும் தேதியையே காட்டும். இதனால் என்ன ஆயிற்றென்றால், பார்வையாளர்களுக்கு நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பாகப் பார்க்கும் உணர்ச்சியைத் தரும். இந்த விஷயமும் அந்த சீரியலின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம்.

அக்காலக் கட்டத்தில் ஹிந்துஸ்தான் டைம்ஸில் சுதீர் தார் அவர்களது கேலிச் சித்திரம் ஒன்று வந்தது. அதில் மீட்டிங் நடக்கும் ஹாலில் அமைப்பாளர்களைத் தவிர பார்வையாளர்கள் இல்லாமல் ஈ அடிக்கும். ஒரு அமைப்பாளர் இன்னொரு அமைப்பாளரைப் பார்த்து பல்லைக் கடிப்பார், "எந்த முட்டாப்பயபுள்ள ஹம்லோக் சமயத்துல இந்த மீட்டிங்கின் நேரத்தை வச்சான்?"

சீரியலின் இன்னொரு சிறப்பு என்னவென்றால், பார்வையாளர்கள் கொடுத்த எதிர்வினைகளுக்கேற்ப பிந்தைய எபிசோடுகளை மாற்றி வடிவமைத்ததுதான். முக்கியமாக இந்த பட்கியின் பாத்திரத்தையே எடுத்துக் கொள்வோம். எல்லோருக்கும் நல்லது சொல்லும் இந்த பாத்திரம் தனக்கு என்று வரும்போது மட்டும் சுயநலமாக நடந்து கொள்ளும். மக்களுக்கு அந்த பாத்திரத்தின் மேல் ஒரு எரிச்சலே பிற்காலத்தில் வந்தது. அதற்கேற்ப ஒரு எபிசோடில் பக்கத்து வீட்டுக்காரி அப்பாத்திரத்தின் பலவீனங்களைத் தாக்கி, கிழி கிழி என்று கிழித்து தோரணமிடுவார். இதெல்லாம் பார்வையாளர்கள் கொடுத்த எதிர்வினையின் பலனே.

100வது எபிசோடில் பட்கியின் திருமணம் காட்டப்பட்டது. அன்று தில்லி தெருக்களே ஈயடித்தன. கடைக்காரர்கள் கூட கடைகளைப் பூட்டிக் கொண்டு வீடு போய் சேர்ந்தார்கள். அவ்வப்போது லாஹூருக்கு பெரிய மனிதர்கள் யாராவது வரும்போது வேண்டுமென்றே ஹம்லோக்கில் சுவாரசியமான நிகழ்ச்சிகளை அமிர்த்தசர் டிவியில் காண்பித்து லாஹூர் நிகழ்ச்சிகளை பிசுபிசுக்க செய்துவிடுவதாக பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் வேறு அவப்போது பொருமுவார்கள். அதே அரசு அதிகாரிகளில் அதற்குப் பின் வந்த "புனியாத்"தில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பப் பட்டபோது, அவ்வாறு பொருமாமல் அவர்களும் அந்த எபிசோட்டைப் பார்த்தனர். அது பற்றி அடுத்த பதிவில் மேலும் விவரமாக.

இம்மாதிரி சீரியல்களை முழுதும் ரசித்து பார்க்க எனது ஹிந்தி அறிவு மிகவும் பயன்பட்டது. தில்லியில் இருந்த 20 வருடங்களுமே, வெளியூரில் இருக்கும் எண்ணமே வராதவகையில் கழிந்தன என்பதையும் இப்போது மகிழ்ச்சியுடன் நினைவு கூறுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6 comments:

Cervantes said...

அடுத்து Nukkad பற்றித்தானே பதிவு?

கிருஷ்ணன்

Harry Potter said...

நீங்க இந்த வரிசையில் எழுதப் போகும் மத்த சீரியல்களை பத்திய பதிவுங்களையும் ஆவலோட எதிர் நோக்கறேன்.

முகம்மது யூனுஸ்

Vajra said...

அடுத்த்ய் அனேகமாக புனியாத்,

நிச்சயமாக "மஹாபாரத்"

என்ன டோண்டு அவர்களே சரியா ?

dondu(#4800161) said...

புனியாத், பிறகு ராமாயணம், பிறகு மஹாபாரத்ம். நுக்கட் வேறு இருக்கிறது. ஏ ஜோ ஹை ஜிந்தகியை மறக்க இயலுமா? தர்ப்பண் வேறு இருக்கிறது. மால்குடி டேஸ்? சர்க்கஸ், ஃபவுஜி, இம்திஹான், அஜ்னபி. ஓரிரு பாகிஸ்தானிய சீரியல்கள் வேறு. பார்ப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

koothaadi said...

Dondu
This message was posted by the anony ,and the he left the question to you ..if u have interested continue the discussion FYI

//Anonymous has left a new comment on your post "சதாமின் மரணம் ஒரு பழிவாங்கல் மட்டுமா":

//புஷ் யையும் தூக்கில் போட வேண்டும் என்ற வாதமே தவறானது. புஷ்யும் சதாமும் ஒன்றல்ல..வெற்று அமெரிக்க எதிர்ப்புக்கு நான் ஆதரவாளன் அல்ல .//

Can U explain?

அநியாயமாக, உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, பிற நாடுகளின் இறையாண்மையை கிஞ்சித்தும் மதிக்காமல் படையெடுத்து... ஆறு இலட்சத்திற்கும் அதிகமான அப்பாவிகள் கொல்லப்பட புஷ் காரணமா இல்லையா?

ஜனநாயக முகமூடி போட்டுக்கொண்டால் கொலைகளையும் நியாயப்படுத்தலாமா?

ராஜ்வனஜின் பதிவைப் படியுங்கள் ஆரஞ்சுஏஜண்டின் அவலத்தை படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.

தேசப்பாதுகாப்பு, தீவிரவாதம் என்ற காரணங்களை கணக்கிலெடுக்காமல் பார்த்தால் நிறைய சீக்கியர்களைக் கொன்றவர் என்று இந்திராகாந்தியையும் குற்றம் சொல்ல முடியுமே சார்!

டோண்டு சார் தவறாக எண்ணாவிட்டால்... ஒரு கேள்வி!

சதாம் என்பதற்காகவோ, முஸ்லிம் என்பதற்காகவோ அல்லாமல்... அமெரிக்காவின் அடாவடித்தனத்துக்காகவே முஸ்லிம்களும் சதாமின் தூக்கைக் கண்டிக்கும் நிலையில்... அமெரிக்காவை இவ்விடயத்தில் கொண்டாடுபவர்கள் ஒரு குறிப்பிட்ட இனத்தவராகவே இருப்பது ஏன்?

வெள்ளையரின கொடுங்கோலன் மிலோசெவிக்கை உலக நீதிமன்றத்திடம் ஒப்படைத்ததைப் போல சதாமையும் ஒப்படைத்திருந்தால்... புஷ்சின் ஜனநாயக முகமூடி கிழிந்துவிடும் என்பதால் தான் அவசராவசரமாக அல்லக்கைகளை வைத்து ஒரு பழிவாங்கல் நடத்தப்பட்டது.

//சதாமுக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்க்கவில்லை. அதனைச் செய்து முடிக்க கையாண்ட சூழ்ச்சியைத்தான் எதிர்க்கிறோம். // - நல்லடியார் சொன்னது.


சு.வி

//

dondu(#4800161) said...

உங்கள் பதிவில் பின்னூட்டம் இட்டுவிட்டேன் கூத்தாடி அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது