சமீபத்தில் 1946-ல் பிறந்த நான் சிறு வயதில் ஆனந்த விகடன் மற்றும் கல்கி மட்டும் படித்து உள்வாங்கிக் கொண்டிருந்தேன். குமுதம் அவ்வப்போது திருட்டுத்தனமாக படிப்பதுண்டு. அப்போது பல எழுத்தாள ஜாம்பவான்கள் உண்டு. அவர்களில் நாடோடியும் ஒருவர். இப்பதிவு அவரைப் பற்றித்தான். இது பகுதி 1. பக்தி 3 வரைக்கும் அவரைப் பற்றி எழுதும் உத்தேசம்.
கூகளில் தேடினால் அவரைப் பற்றி அதிகம் கிடைக்கவில்லை. ஆகவே ஐம்பதுகள், அறுபதுகளில் பிரபலமாக இருந்த அவரைப் பற்றி என் நினைவுகளிலிருந்துதான் எழுத வேண்டும். அவர் அக்காலத்தில் எழுதியவற்றைப் பார்த்தால் இப்போதும் ஆச்சரியமாக இருக்கிறது. இப்போது அவர் செயலாக இருந்திருந்தால் சுவையான வலைப்பதிவுகள் தந்திருப்பார். தன் மனைவி சரசு, மகள் அனு என்னும் அனுராதா, தம்பி அரட்டைக் கல்லி பாலு, அடுத்த வீட்டு அண்ணாசாமி ஐயர் ஆகியவர்கள் அவரது கட்டுரைகளில் அதிகம் வலம் வருபவர்கள்.
அவரது எழுத்துகள் ஆச்சரியம் அளிப்பதற்கு காரணமே தற்காலத்துக்கும் பொருந்தும் வண்ணம் அவை இருப்பதேயாகும். அவர் தனது மனோரதம் என்னும் தேரிலேறி நினைத்த இடங்களுக்கெல்லாம் போய் வருவார். அவர் அதிகம் செல்லும் இடம் அதிசயபுரி என்னும் ஊராகும். அப்போது சிறுவனாக இருந்த நான் அது ஒரு உண்மையான இடம் என்றெண்ணியிருந்திருக்கிறேன். இப்போதுதான் புரிகிறது. அவர் நம் நாட்டைத்தான், அதுவும் தமிழ்நாட்டைத்தான் குறிப்பிட்டுள்ளார் என்று.
ஒரு சமயம் திடீரென எல்லோரிடமிருந்தும் அவரவர் பணம் காணாமல் போய் விடும். முதலில் எல்லோரும் திகைக்கின்றனர். என்ன செய்வது, வேலைக்கு போக வேண்டுமே?திருதிருவென விழித்து கொண்டு பஸ் ஸ்டேண்ட், மின்ரயில் நிலையம் ஆகியவற்றுக்கு வருவார்கள். அங்கும் நிலைமை இன்னும் மோசம். அங்கு வேலை செய்பவர்கள், அலுவலகத்தில் உள்ள பணம் எல்லாமே மாயமாக மறைந்திருக்கும். பிறகு அவரவர் வேலை செய்யும் கம்பெனி முதலாளிகள் மூலம் விவரம் அறிந்து எல்லா சேவைகளையும் அளித்து அதற்கான பண விவரங்களை அளித்து, மாதக் கடைசியில் அவற்றுக்கு ஈடான வேறு சேவை பெறுவார்கள். ஒவ்வொருவரிடமும் ஒரு அட்டை கொடுக்கப்பட்டு அவர் மேற்கொண்ட விவகாரங்களின் தகவல் அதில் பொறிக்கப்பட்டு என்றெல்லாம் நாடோடி அவர்களின் கற்பனை போகும். இப்போது அதை படிக்கும்போதே உங்களுக்கு அந்த அட்டையை பற்றிய ஒரு ஐடியா வந்திருக்கும்தானே? நீங்கள் நினைப்பது சரியே. க்ரெடிட் கார்டுதான் அது. ஆனால் இது சம்பந்தப்பட்ட அக்கட்டுரை 1950-களிலேயே வந்து விட்டது.
அதே போல நாட்டில் எல்லோருக்கும் சம்பளம் குறைந்த பட்சம் ஆயிரம் (1955 விலைவாசி கணக்கில்) என்று அதிசயபுரியின் மந்திரி நிர்ணயிக்க, அது விளைவிக்கும் கூத்து பற்றி படிப்பவரை குலுங்க குலுங்க சிரிக்க வைத்தார் நாடோடி. படிப்பவர்தான் சிரித்தனர். அனுபவித்தவர்? பணம் மட்டும் இருந்தது. வியாபாரிகளும் பணத்தை பார்த்ததும் உல்லாசமாக செலவழிக்க ஆரம்பித்தனர். உற்பத்தி குறைந்தது. விலைகள் விஷம்போல ஏறின. சம்பளம் மறுபடியும் உயார்த்தப்பட்டன. Too much money chasing too little goods என்ற நிலை உண்டாயிற்று. விளைவு? Inflation எனப்படும் பணவீக்கம்.
நாராயணன் என்னும் எழுத்தாளர் ரொம்ப ஏழை. அடித்து பிடித்து வைகுந்தம் போய் அந்த சாட்சாத் நாராயணனையே கேட்கிறார், தான் ஏன் வறுமையுடன் பிறந்தோம் என. முதலில் கடவுள் நாராயணனுக்கு இவர் சொல்வது விளங்கவில்லை. பிறகு ஞான திருஷ்டியை உபயோகித்து எழுத்தாள நாராயணன் பூலோகத்திலிருந்து வந்திருப்பதாக உணர்கிறார். அது எப்போதோ அழிந்து விட்டதாக இத்தனை நாள் அவர் நினைத்து கொண்டிருந்திருக்கிறார். இருந்தாலும் அது பற்றி பிறகு நாரதரை கேட்டுக் கொள்வோம் என சுதாரித்து கொண்டு எழுத்தாளரை பார்த்து "இங்கே பார்" என விரலை அசைக்கிறார். எழுத்தாளர் நாராயணன் முன்னால் பரம தரித்திரரான வெங்கட்ராம ஐயர் தோன்றுகிறார். எழுத்தாளரிடம் வெங்கட்ராம ஐயர் அழமாட்டாக் குறையாகக் சொல்கிகிறார்.
"ஐயா, நீங்கள் எழுதிய நாவல் "ஏழை படும்பாடு" என்னும் கதையில் நாயகன் நான். என் சிறு வயதிலேயே தந்தை இறந்து விட்டார். பிச்சையெடுத்து படித்து வேலைக்கு போய் என் தம்பி தங்கைகளை முன்னுக்கு கொண்டு வந்தேன். அவர்கள் எல்லோரும் நன்றி மறந்து என்னுடைய பணத்தை கொள்ளையடித்தனர். கடைசியில் நான் காச நோய் கண்டு இருமி இருமி உயிரை விட்டேன். எனக்கு ஏன் இத்தனை கஷ்டம் கொடுத்தீர்கள்" என சோகமாகக் கேட்கிறார். எழுத்தாள நாராயணன் அவர் மேல் எரிந்து விழுகிறார். இதென்ன எழவாப் போச்சு. உம்மேல் எனக்கு என்ன விரோதமா? ஏதோ கற்பனையில் ஒரு பாத்திரம் படைத்தேன். ஏழைக்கு உன் பெயரை வைத்து தொலைத்தேன். இல்லையென்றால் அண்ணாசாமி ஐயர் என்று கூட பெயரை வைத்திருக்க முடியும். ஆனால் அவர் வந்து கேட்பாரே, நடக்கும் காரியமாகப் பேசும் ஐயா" என்கிறார். வெங்கட்ராம ஐயர் மறைய கடவுள் நாராயணன் மறுபடியும் வருகிறார். "என்ன ஸ்வாமி, புரிந்ததா? நீங்கள் வெங்கட்ராம ஐயருக்கு சொன்னது உமக்கும் பொருந்தும். போய் வாரும் ஐயா" எனக் கூறுகிறார்.
இவ்வாறாக நாடோடி அவர்கள் வாழ்க்கையே அபத்த களஞ்சியம், இதில் பாவம் புண்ணியம் எல்லாம் அவரவர் மனநிலைக்குட்பட்டதே என்ற இருப்பியல் தத்துவத்தை சில வார்த்தைகளில் புரிய வைக்கிறார். உலகே மாயம் என்றும் கூறலாம்.
ஐம்பதுகளின் நடுவில் நாடோடி மறுபடி அதிசயபுரிக்கு மனோரதத்தில் ஏறி பயணிக்கிறார். தெருவில் பலர் நடக்கின்றனர். சிலர் கால்களில் பெரிய குண்டு கட்டப்பட்டுள்ளது. ஏன் என்று புரியாமல் விழிக்கிறார் நாடோடி. அங்கு அப்பக்கமாக வந்தவர் விளக்குகிறார். குண்டு கட்டப்பட்டிருப்பவர்கள் வேகமாக நடப்பவர்கள். மெதுவாக நடப்பவர்களுக்கு அவர்களைப் பார்த்து தாழ்வுணர்ச்சி ஏதும் வந்து விடக்கூடாது என்பதற்காகவே அவர்களையும் மெதுவாக நடக்கச் செய்யும் முயற்சி இது என முழங்குகிறார் வந்தவர். "ஏன் மெதுவாகப் போகிறவர்களை வேகமாகச் செல்லலாமே" என்றபோது வந்தவர் இருகோடுகள் தத்துவத்தை விளக்குகிறார். புரியாதவர்கள் சமீபத்தில் 1969-ல் பாலசந்தர் இயக்கத்தில் வெளியான இரு கோடுகள் படத்தில் ஜயந்தி கூறும் விளக்கத்தை கேட்டுக் கொள்க. அதே லாஜிக்படி அதிகம் விற்பனையாகும் பத்திரிகைகளுக்கு பக்கங்கள் கட்டுப்பாடு. எல்லா நல்ல எழுத்தாளர்களும் அதிக சன்மானத்துக்கு ஆசைப்பட்டு அங்கு போவதால் அந்த சன்மானங்களுக்கு அதிக வரி என்றெல்லாம் அரசு தூள் பண்ணுகிறது.
இப்போது ஒரு சிறு டைவர்ஷன்.
இதில் இன்னொரு அபத்தமான தமாஷ் என்னவென்றால், 1970-களில் தமிழகத்தில் நிலவிய பயங்கர மின்சக்தி தட்டுப்பாட்டைக் குறித்து மேலே கூறப்பட்ட கட்டுரை வெளியான ஆனந்த விகடனிலேயே வெளியிடப்பட்ட ஒரு தலையங்கம்தான்.
அதன் சாரம் பின்வருமாறு. மின்சக்தி கிடைக்காது பல நிறுவனங்கள் நஷ்டம் அடைகின்றன. ஆனால் சில நிறுவனங்களோ ஜெனெரேட்டிங் செட்கள் போட்டு தாங்களாகவே மின் உற்பத்தி செய்து பொருள்களை உற்பத்தி செய்து லாபம் அடிக்கின்றனர். இதனால் அவ்வாறு ஜெனெரேட்டிங் செட்கள் இல்லாதவர் மனத்துயரம் அடைகின்றனர். ஏழைகளுக்கு ஆதரவான அரசு தாய்மை உணர்வோடு செயல்பட்டு, அந்த செட்களை பறிமுதல் செய்து, ஒரு பொது இடத்தில் நிறுவி மின்சாரத்தை எல்லோருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும்.
மறுபடியும் நாடோடி அவர்களின் இக்கட்டுரைக்கே வருவோம்.
என்ன நடக்கிறதென்றால், வேகமாகச் செல்பவர்கள் அவர்கள் நலம் விரும்பும் நண்பர்களால் அடக்கி வாசிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். ஆகவே அவர்கள் வேண்டுமென்றே மெதுவாக நடக்கின்றனர்.குண்டு மாட்டப்படாமல் தப்பிக்கின்றனர். இதனால் உண்டாகும் வேறு பொருளாதார விளைவுகள் என்றெல்லாம் கட்டுரை அமர்க்களமாகப் போகிறது.
ஏன் என்று தெரியவில்லை. கடந்த சில நாட்களாக நாடோடியின் இக்கட்டுரை எனக்கு அடிக்கடி நினைவுக்கு வந்து தொலைக்கிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நவீன அறிவியலின் வழிமுறைகள்
-
நவீன அறிவியல் என்பது என்ன? அதன் தர்க்கம் என்ன? ‘இதைப்பற்றி இன்னார் ஓர்
ஆய்வேட்டில் சொல்கிறார்’ என்றால் அது அறிவியலுண்மையா? என் சொந்த அனுபவம்
என்றால் அது அற...
9 hours ago