இன்று எனக்கு பிறந்த நாள். இன்றுடன் 62 வயது நிரம்புகிறது. மனது என்னவோ 25 வயதை விட்டு வரமாட்டேன் என்கிறது. இப்போது கேள்விகளுக்கு செல்வோமா?
Radha Sriram
1)பூஜை புனஸ்காரங்களில் நம்பிக்கை உண்டா? அதாவது rituals?தினப்படி செய்யும் வழக்கம் உண்டா?பதில்: இல்லவே இல்லை. அதில் இதுவரை மனம் ஒன்றவே இல்லை. பூஜைக்கு செலவழிக்கும் நேரத்தில் ஏதேனும் மொழிபெயர்ப்பு செய்யலாமே என்ற எண்ணம்தான் வருகிறது. என்னதான் இருந்தாலும் செய்யும் தொழில்தானே தெய்வம்?
2)Art Of Living பற்றி உங்கள் கருத்து?பதில்: மனிதராகப் பிறந்த எல்லோருமே சிந்திக்க இயலும். ஆனால் அந்த சிந்தனைகளை ஒழுங்கு படைத்து சரியான பாதையில் தவறுகள் இன்றி கொண்டு செல்வதே தர்க்க சாஸ்திரத்தின் வேலை. அதைத்தான் இந்த Art Of Living-லும் பார்க்கிறேன். வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தங்களை எப்படி எதிர்க்கொண்டு வெற்றிகரமாக வாழ்வது என்பதை பல வழிகளில் கற்று தருகின்றனர். மற்றப்படி அந்த இயக்கத்துடன் அவ்வளவாக பரிச்சயம் இல்லை.
வேல்பாண்டி
1. கலைஞரிடம் பிடித்தது என்ன? (ஜெ மாதிரி குடும்ப பாசம் என்று சொல்ல வேண்டாம்.)பதில்: அவரது சொல் சாதுர்யம், அயராத உழைப்பு. 10 ஆண்டுகள் எம்.ஜி.ஆரால் ஓரம் கட்டப்பட்டு இருந்தாலும் கட்சி உடையாமல் பார்த்து கொண்டவர் என்ற முறையில் நான் அவரை வியந்து பாராட்டுகிறேன்.
அனானி (28.03.2008 பகல் 1 மணிக்கு கேள்வி கேட்டவர்)
1. மிக அருமையான எழுத்துத் திறமை இருந்தும், வலைப்பதிவுகளில் இருந்து முற்றிலும் விலகி, எழுதுவதையே நிறுத்திவிட்டவர்களில் ஒருவரை மீண்டும் எழுதவேண்டும் என்று நீங்கள் அழைப்பீர்களேயானால் அவர் யாராக இருக்கும்? பதில்: மா.சிவகுமார், நேசமுடன் வெங்கடேஷ்
நடராஜன்:
1. என்னை மாதிரி வேலையத்துப் போயி உங்க கேள்வி பதிலை/blog படிக்கும் - comment ஏதும் போடாதவர்களை பற்றி?பதில்: Silent majority என்ற கான்சப்டை சமீபத்தில் 1969-70-களில் அமெரிக்க குடியரசு தலைவர் நிக்ஸன் பயன்படுத்தினார். அதாவது கருத்து ஏதும் வெளியில் சொல்லாது இருப்பவர்கள்தான் அதிகமாம். கருத்து இல்லாமல் இல்லை, ஆனால் வெளியில் சட்டென்று தெரிவித்து விட மாட்டார்கள் என்பதே அதன் பொருள். அவர்களில் ஒருவராக உங்களைப் பார்க்கிறேன்.
அனானி (28.03.2008 மாலை 6 மணிக்கு கேட்டவர்)
1. "Microsoft Encarta" தமிழர்கள் கீழ்சாதி மக்கள் என உள்ளதை பற்றி உங்கள் கருத்து?பதில்: எல்லோருமேவா கீழ்ச்சாதி மக்கள் என்று கூறப்பட்டுள்ளது? நான் தேடியவரை அவ்வாறு கிடைக்கவில்லையே. நீங்கள் சொன்ன மாதிரி சுட்டிகளுக்கு போனேன், இருப்பினும் எனக்கு அது கிடைக்கவில்லை. நிற்க. அவ்வாறு நீங்கள் சொன்ன மாதிரி கூறப்பட்டிருந்தால் அதை நான் தெளிவாக மறுக்கிறேன். நான்கு வர்ணத்தவர்களும் இந்தியாவின் எல்லா பாகங்களிலும் இருந்து வந்திருக்கின்றனர். இதில் தமிழர்களுக்கான நிலை மாறுபட்டிருக்கவும் என நினைக்க இயலவில்லை. முடிந்தால் சிரமம் பார்க்காது சம்பந்தப்பட்ட வரிகளை இங்கு கூறவும். நீங்கள் புரிந்து கொண்டது சரியா என்பதைப் பார்க்கலாம்.
2. "Prof. Paul Courtright" என்பவரது புத்தகத்தில் விநாயகர் சொல்ல வியாசர் பாரதம் எழுதியதாக உள்ளதை பற்றி உங்கள் கருத்து?பதில்: பக்கா உளறல் என்றுதான் கூற வேண்டும். மஹாபாரததில் வியாசரும் ஒரு பாத்திரமே. அவர் முக்காலமும் அறிந்த முனிவர். மஹாபாரதத்தை தான் சொல்லச்சொல்ல யாராவது எழுத வேண்டும் என்பதற்காக அவர் பிரும்மாவை பிரார்த்திக்க, விநாயகர் வந்து சேருகிறார். அவர் போட்ட நிபந்தனை ஒன்றே ஒன்றுதான். அதாவது வியாசர் சொல்வதை நிறுத்தக் கூடாது என்பதே. வியாசர் எதிர் நிபந்தனை போடுகிறார். அதன்படி விநாயகர் சொல்லப்பட்ட சுலோகங்களின் பொருளை முழுமையாக உணர்ந்த நிலையில்தான் எழுதவே வேண்டும். அதற்கு விநாயகரும் ஒப்புகிறார். நிலைமை இப்படி இருக்க சில வெளிநாட்டு அரைகுறைகள் எழுதினால் அதையெல்லாம் எப்படி ஒத்து கொள்வதாம்?
3. "Microsoft Encarta" சிவபெருமான் பிரும்மதேவரின் பிள்ளை என என உள்ளதை பற்றி உங்கள் கருத்து?பதில்: எனக்கு தெரிந்து பிரும்மாதான் விஷ்ணுவின் பிள்ளை. இங்கே வரும் புதுக்கதையைப் பற்றி என்ன கூறுவது, அது பேத்தல் என்பதைத் தவிர?
காலை 10.43 மணிக்கு மேலே சேர்த்தது:
எந்த வேளையில் பேத்தல் என்று சொன்னேனோ நான் இந்த கேள்வி விஷயத்தில் சொன்னதுதான் பேத்தல் என்று நிரூபணம் ஆகிவிட்டது. பத்ரிக்கு நன்றி. அவர் கூறியதை கீழே தருகிறேன். மேலே இருக்கும் எனது தவறான விடையை அப்படியே வைத்திருப்பதன் காரணம் எனக்கு எதிர்க்காலத்தில் இன்னும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை நினைவுபடுத்தட்டுமே.
//ஸ்ரீமத் பாகவதம், பிரம்மாவின் மூச்சுக்காற்றிலிருந்து சிவன் உருவானார் என்கிறது. திருமழிசை ஆழ்வாரின் நான்முகன் திருவந்தாதி இப்படித் தொடங்குகிறது:
நான்முகனை நாரா யணன்படைத்தான், நான்முகனும்
தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான், - யான் முகமாய்
அந்தாதி மேலிட் டறிவித்தேன் ஆழ்பொருளை,
சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து// ஜீரோ:
1) 2020ற்குள் இந்தியா வல்லரசு ஆகுமா?பதில்: மோடி மாதிரி ஒரு பிரதம மந்திரியும், மாநில முதன் மந்திரிகளும் வந்தால் அவ்வாறு வல்லரசு ஆகும் வாய்ப்பு உண்டு. மற்றப்படி நேரு குடும்பத்தை வைத்து பஜனை செய்து கொண்டிருந்தால் காரியத்துக்கு ஆகாது.
2) இல்லையென்றால் நாம் எது எதில் பின் தங்கியிருக்கிறோம்? பதில்: நமக்கு தன்னம்பிக்கை முதலில் வேண்டும். நாட்டு மக்கள் உழைப்புக்கு அஞ்சக்கூடாது. எந்தக் கொம்பனாக இருந்தாலும் தவறு செய்தால் தண்டிக்கும் மனோ தைரியம் வேண்டும். இதிலெல்லாம் நாம் பின் தங்கியுள்ளோம்.
அருண்மொழி
1. கர்ப்பிணி பெண்களை கூட கொன்றவர்கள் (அதை ஒப்புக்கொண்டப்பின்) கைது செய்யப்படாமல் சுதந்திரமாக நடமாடும் அளவிற்கு சில மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளதே. இப்படி இருந்தால் இந்தியா எப்படி முன்னேறும்?பதில்: ரிகார்ட் செய்தவன் என்ன கூறியிருந்தால் சம்பந்தப்பட்டவன் அவ்வாறு வாக்குமூலம் தந்திருக்க வேண்டும்? தானும் பலரை கொன்றதாகத்தான் கூறியிருக்க வேண்டும். எல்லாவற்றையும் டேப் செய்து போலீசிடம் கொடுத்தால் இவனும் கம்பி எண்ண வேண்டியிருக்கும். ஆகவே போலீசிடம் கொடுக்காது வெறுமனே தான் பேசியதையெல்லாம் எடிட் செய்து அழித்து விட்டு சம்பந்தப்பட்டவன் பேசியதை மட்டும் போட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் பல சந்தர்ப்பங்களில் தனித்தனியாகப் பேசியதை ஒன்றாக்கி புதிய டேப் உருவாக்கியிருக்க வேண்டும். ஆகவேதான் போலீசிடம் கொடுக்க வக்கின்றி இவ்வாறு செய்துள்ளனர் என நினைக்கிறேன்.
அது சரி, இது பற்றி காங்கிரசோ, திமுகவோ ஒன்றும் அதிகம் அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லையே. ஏன் 1984 சீக்கிய படுகொலைகளோ, மதுரை சன் டீவி கலவரங்கள் பற்றியோ கேள்விகள் வரும் என்பதாலா? மற்றப்படி, இதெல்லாம் குஜராத் தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்ற ஒரே அஜெண்டாவில் செய்யப்பட்டது. அது காரியத்துக்கு ஆகவில்லை. இதில் என்ன வேடிக்கை என்றால், பல ஹிந்து ஓட்டுகள் இந்த டேப்புகளினாலேயே மோடிக்கு அதிகம் கிடைத்தன என சில கோஷ்டிகள் சொல்லித் திரிகின்றன. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
குஜராத் தேர்தல் பிரசாரத்தின்போது சோனியா காந்தி மோதியை மரணத்தின் வியாபாரி எனக்கூற மோதி அவருக்கு பதிலடி கொடுத்தார். முதலில் மோதிக்கு மட்டுமே நோட்டீஸ் கொடுத்தது தேர்தல் கமிஷன். பிறகு சோனியாவின் பேச்சை குறிப்பிட்டு கேட்டதும் வேண்டாவெறுப்பாக அவருக்கும் நோட்டீஸ் தந்தது. பிறகு வந்த ரிப்போர்ட்டின்படி இருவருமே நன்னடத்தை விதிகளை மீறியவர்கள் என்று கூற வேண்டியதாயிற்று. அதிலும் மோதிக்கு சற்றே அதிகக் கண்டனம். இவ்வளவு பாரபட்சமாக தேர்தல் கமிஷன் நடந்து கொண்டால் நாடு எப்படி உருப்படும் என்று நினைக்கிறீர்கள்?
இன்னொன்றும் கூறுவேன். 2002-பிப்ரவரியில் நடந்ததை வைத்து அந்த ஆண்டு தேர்தலில் வேணமட்டும் பிரசாரம் செய்து விட்டனர். தலைமை தேர்தல் கமிஷனரும் தன்னால் முடிந்த அளவு மோடிக்கு விரோதமாக செயல்பாடு செய்து பார்த்து விட்டார். இருப்பினும் மோடி அப்போதே ஜெயித்தார். பிறகு 5 ஆண்டுகள் குஜராத்தில் ஒரு கலவரம் கிடையாது, ஒரு தீவிரவாதிகள் தாக்குதல் கிடையாது, அரசு யந்திரம் மிகத் திறமையாகவே செயல்பட்டு குஜராத் முன்னேற்றப் பாதையில் எல்லோரையும் மிஞ்சி சென்று விட்டது. அப்புறமும் பழைய கதைகளை பேசுபவர்கள் 1984 சீக்கியக் கலவரத்தையும் பற்றி பேசத் தயாராக வேண்டும்.
செந்தழல் ரவி:
1. சிங்கப்பூருக்கு இரண்டு டிக்கெட் இலவசமாக கிடைத்தால் பாஸ்போர்ட் எடுப்பீர்களா?பதில்: சிங்கப்பூரோ அல்லது வேறு ஏதாவது வெளிநாட்டுக்கோ போகும் ஆசை அறவே கிடையாது. ஆக நான் போகாததற்கு காரணம் பணப் பற்றாக்குறையில்லை. என்னிடம் தேவையான பணம் உள்ளது. தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனுக்கு நன்றி.
வஜ்ரா:
1. நீங்கள் ஏன் ஒரு முறை கூட வெளி நாடு செல்ல முயற்சிக்கவில்லை?பதில்: மேலே சொன்ன பதில்தான் இங்கும்.
2. ஜெர்மன், ஃப்ரெஞ்சு மொழிகள் கற்ற நீங்கள், அவர்கள் நாகரீகங்களைக் கற்காமல் மொழி பெயர்ப்பு செய்ய முடியாது என்பதை அறிவீர்கள். அவர்கள் நாகரீகங்களை நன்கு அறிய ஒரு முறையாவது ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளுக்குச் செல்ல விருப்பம் ஏற்பவில்லையா?பதில்: யார் சொன்னது அப்படி? நான் செய்யும் மொழிபெயர்ப்புகள் தொழில்நுட்ப விஷயங்கள். அதற்கு இஞ்சினியரிங் அறிவும் மொழி அறிவுமே எதேஷ்டம். மற்றப்படி ஃபிரெஞ்சு ஜெர்மன் நாகரிகங்களைப் பற்றி அம்மொழியில் வெளியாகும் புத்தகங்களிலிருந்து அறிந்து கொள்கிறேன். ஜெர்மனியும் ஃபிரான்ஸும் என் வீட்டுக்கே வரும்போது நான் ஏன் வெட்டியாக காசு செலவழித்து அங்கு செல்ல வேண்டும்? ஒரு சுவிஸ் நாட்டுக்காரருக்கு நான் ஜெர்மன் துபாஷியாக சென்றேன். அவர் நான் பேசும் ஜெர்மன் சுவிஸ் ஜெர்மன் என்று துண்டு போட்டு தாண்டினார். இந்தியாவை விட்டு எங்குமே போகவில்லை என்பதைக் கேட்டு நம்ப மறுத்து விட்டார்.
அனானி (29.03.2008 பிற்பகல் 3.42-க்கு கேட்டவர்)
1. தமிழ் மொழி கடவுளிற்கு புரியாது என்று கூறும் சோ ஏன் சமஸ்கிருதத்தில் பத்திரிகை நடத்தாமல் தமிழில் (அவரது கூற்றுப்படி நீச மொழியில்) நடத்துகிறார்?பதில்: சோ எப்போது அவ்வாறு சொன்னார்? தமிழில் அவருக்கு இருக்கும் ஆளுமை அசாத்தியமானது. சும்மா ஏதாவது கேட்பதற்காகவெல்லாம் இவ்வாறு கேட்கக்கூடாது. என்னைப் பொருத்தவரை நானறிந்த ஆறு மொழிகளிலே தமிழ் மொழிபோல இனிதாவதெங்கும் காணோம்.
அனானி (சென்னைக்கு வந்தால் என்னைச் சந்திக்கலாமா எனக் கேட்டவர்)
1. தமிழ்நாட்டுல சட்டம் ஒழுங்கு கெட்டுப் போச்சு, அதுனால எல்லாரும் மூணு அங்குலத்துல கத்தி வச்சிருக்கணும், அத எப்படி யூஸ் பண்ணத் தெரிஞ்சிருக்கணும்னு தா. பாண்டியனும், நல்ல கண்ணுவும் சொல்லீருக்காங்களே? ஆயுதப்பயிற்சி வேணும்னு இப்படி கூவுறவுங்க, ஆர் எஸ் எஸ-ல் தற்காப்புக்காக சொல்லித் தருகிற தற்காப்புக் கலைகளை விமர்சனம் செய்யிறாங்களே? இது இவர்களின் இரட்டை நிலையை விளக்கவில்லையா? இதை பற்றி உங்கள் கருத்து என்ன?பதில்: ஆயுதம் எடுப்பவன் ஆயுதத்தாலேயே சாவான், கத்தியைத் தீட்டாதே தம்பி புத்தியைத் தீட்டு என்றெல்லாம் இவர்கள் கேள்விப்பட்டதில்லை என நினைக்கிறேன்.
ராஜகோபால் சடகோபன்:
1. Why Srivaishnavites (hardcore Iyengars) do not go to Shiva temples? (When you remove the Ego (basic thing) then only you can have Moksham. The moment Srivaishnavites say Lord Narayana is supreme, the Ego comes).
(If only Lord Narayana can give Moksham only Iyengars will be in Vaiguntam. This seems to be not alright).
Would you share your thoughts if you have any?பதில்: நீங்கள் கூறுவது வீரவைஷ்ணவர்கள் எனக் கூறப்படுபவர்கள் விஷயத்தில் உண்மையே. ஐயங்கார்களில் சமாசனம் என்று ஒரு சடங்கு உண்டு. இரு தோள்களிலும் சங்கு சக்கர முத்திரைகள் நெர்ப்பால் பொறித்து கொள்வதாகும் அது. அதே போல அடுத்த கட்டமாக பரண்யாசம் என்ற சடங்கும் உண்டு. அதை செய்து கொண்டால் பல கட்டுப்பாடுகள் உண்டு. அவற்றில் ஒன்றுதான் சிவன் கோவிலுக்கு போகக் கூடாது என்பது. எனக்கு இக்கட்டுப்பாட்டில் ஒப்புதல் இல்லை. ஆனால் இன்னொரு விஷயம். வீர சைவர்கள் என்றும் இருக்கின்றனர். அவர்கள் பெருமாள் கோவிலுக்கு வரமாட்டார்கள். எல்லாமே தமாஷ்தான். சைவ வைஷ்ணவ சண்டைகள் அநபாய சோழன் காலத்தில் பிரசித்தம். ராமானுஜரை கொலை செய்யும் முயற்சி வரை போயிற்று.
07.04.2008 அன்று சேர்க்கப்பட்டது:
நான் மேலே சொன்ன சில விஷயங்களில் மாறுதல்கள் தேவையாகின்றன. சுட்டிக் காட்டிய என்றென்றும் அன்புடன் பாலாவுக்கு நன்றி:
நான் சமாசனம் என்று குறிப்பிட்டது "சமாஷ்ரயணம்" என்றிருக்க வேண்டும். ஸ்ரீமன் நாராயணனின் மேல் பக்தி கொண்டவர்கள் (அவனையே கதி என்று நம்பி வந்தவர்கள்) அனைவருமே ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆகிறார்கள், அவர்கள் அனைவருமே சாதி பேதமின்றி 'சமாஷ்ரயணம்' பெறுவதற்கு உகந்தவர்கள் ஆகிறார்கள் என்று வைணவ சாத்திரம் கூறுகிறது. பிரம்மோபதேசமும் அப்படியே !
"பரண்யாசம்" அல்லது 'பிரபத்தி' என்பது பூரண சரணாகதித்துவத்திற்கான வழிவகையைக் (means) குறிக்கிறது.
பரண்யாசம் = பரம் + ந்யாசம்
'nyAsam' means saraNAgathy
'Bhara' is Bhaaram - the burden.
BharanyAsam is to surrender one's self and one's bhaaram to Sriman Narayana.
One can be initiated to 'BharanyAsam' by a Guru. பரண்யாசம் எப்போது ஒரு சடங்கானது என்று தெரியவில்லை. அது போலவே, பரண்யாசத்திற்கும், சிவன் கோயில் செல்வதற்கும் சம்பந்தம் கிடையாது!!! நன்றி பாலா அவர்களே.
வால்பையன்:
அரசியல் கேள்விகள்
1. தி.மு.கா.விற்கு அடுத்த தலைவராக நீங்கள் நினைப்பது யாரை?பதில்: ஸ்டாலினை விட அழகிரிக்கு செயல் திறன் அதிகம். ஆனால் ஒன்று கலைஞர் குடும்பத்தைத் தவிர வேறு யாருமே கட்சியில் முன்னேறாதபடிக்கு அக்குடும்பம் கட்சியை குடும்பக் கம்பெனியாக்கியது விசனிக்கத் தக்கதே.
2. கட்சி மாறும் கோமாளிகளை பார்த்து நீங்கள் நினைப்பது என்ன?பதில்: கட்சித் தலைவர்கள் தொண்டர்களை கோமாளிகளாக நினைக்கின்றனர். கட்சி மாறுபவர்கள் தலைவர்களை கோமாளிகளாக நினைக்கின்றனர். எல்லோரும் தத்தம் நலனைப் பாதுகாக்கின்றனர். தொண்டனும் அவ்வாறே செய்தால் பிழைப்பான். இல்லாவிடில் பலியாடாக தீக்குளிக்க வைக்கப்படுவான்.
3. சமீபத்திய பட்ஜெட் பற்றி உங்கள் கருத்து?பதில்: தேர்தலை குறிவைத்து போடப்பட்ட பட்ஜெட். எல்லா ஸ்டண்டுகளையும் அடித்துள்ளனர். தாராளமாக பொதுப் பணத்தை தங்கள் அப்பன் வீட்டுப் பணம் போல வாரிவிட்டுள்ளனர். மொத்தத்தில் கோமாளித்தனமான பட்ஜெட்.
மொக்கை கேள்விகள்
4. மூன்று தலைமுறை வாழ்க்கையை மூன்று மணி நேர படமாக(படையப்பா) தரும் போது
சீரியலில் உங்கள் ஆர்வம் ஏன் அதிகமாக இருக்கிறது?பதில்: மெகா சீரியல்களையும் கச்சிதமாக எடுக்க இயலும். என்ன, அதற்கு நிரம்பவே மெனக்கெட வேண்டும். கோலங்கள் சீரியலின் டைரக்டர் திருச்செல்வம் தனது சீரியலின் கடைசி எபிசோட் வரை தன் எண்ணத்தில் முழுமையாக உள்ளது என்று இந்த
கேள்வி பதில் நிகழ்ச்சியின் போது கூறினார். அது உண்மையாக இருக்கும் என நம்புவோம். மற்றப்படி திரைப்படங்களோ, சீரியல்களோ அவற்றுக்கென்று தனி இடங்கள் உண்டு.
5. உங்கள் பழைய கணினியை எப்போது மாற்றுவீர்கள்? எதாவது சென்டிமென்ட்டா?பதில்: இப்போதுதானே 2002-ல் முதல் முதலாக கணினியே வாங்கினேன். அதற்குள் பழசாகி விடுமா என்ன. திரை மட்டும் தட்டைத்திரை வாங்கி, பழைய திரையை மாற்றியுள்ளேன். அவ்வளவே.
6. ஜாதகம், நியுமராலஜி,வாஸ்த்து இவைகளில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா. ஏன்?பதில்: சுத்தமாக இல்லவே இல்லை.
7. பயங்கர மொக்கை கேள்விகள்
ஜட்டி போடும் பழக்கம் யார் கொண்டு வந்தது? எந்த வருடம்?பதில்: எல்லாம் பிராக்டிகல்் விஷயங்கள். லொங்கு லொங்கென்று வேட்டையில் மிருகங்களைத் துரத்தி ஓடுபோது தனி சேனல்களில் ஆடுவதை எல்லாம் கண்ட்ரோல் செய்யவில்லையேன்றால் பிற்காலத்தில் பாவ மூட்டை சுமக்க நேரிடும் என்று அக்காலத்திலேயே ஒரு மகரிஷி கூறியுள்ளார். ஆகவே வந்தன கோமணங்கள். அவற்றை பொருத்தும் முறைகள் ஆரம்பத்திலேயே வந்து விட்டன. இதற்கெல்லாம் ஆண்டு கணக்கெல்லாம் கூற முடியாது. சமீபத்தில் 330 B.C.? கோமணங்களே ஜட்டிகளாயின. அவ்வளவே.
8. மண்ணுக்கு மணம் உண்டு, நிறம் உண்டு, சுவையும் உண்டு பிறகு ஏன் அதை வைத்து டீ போட முடியாது?(பார்க்க த்ரீ ரோசஸ் டீ விளம்பரம்) பதில்: மணம் நிறம் மற்றும் குணம் ஆகியவை தேவையான ஷரத்துகள். ஆனால் முழுமையானவை அல்ல. போதுமானவையும் அல்ல. ஆகவேதான் மொழியில் மண்வாசனை பற்றி பேசினாலும் உண்மையில் அதற்கு மேலும் யோசிக்கிறோம். இதெல்லாம் ஒரு சொலவடைதான்.
அனானி (31.03.2008, பிற்பகல் 2:37-க்கு கேட்டவர்)
1. தமிழ் வலைப் பதிவுகள் அனைத்தும் தமிழ்மணத்தில் இடம் பெறுமா? தமிழ் மணம் என்பது என்ன என்றே ஒன்றும் புரியவில்லை. வலைப்பதிவுலகத்தைப் பற்றிய அறிவில் ஒரு நிரட்சர குட்சி என்றே வைத்துக் கொண்டு பதில் கூறவும். (மற்றதில் மட்டும் என்ன வாழ்கிறதாம் என்று கேட்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்) பதில்: தமிழ்மணம் என்பது ஒரு திரட்டி மட்டுமே. என்ன புத்திசாலித்தனமாக திரட்டுகிறது. நமக்கெல்லாம் பயனளிக்கிறது என்பதையெல்லாம் ஏற்கனவே பலரும் கூறிவிட்டனர்.
நானும் கூறியுள்ளேன். ஆக, திரட்டி என்பதையும் மீறி இப்போதெல்லாம் எதை திரட்ட வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இல்லாவிட்டால் குப்பை அதிகம் சேரும் அபாயம் உண்டு.
அன்புடன் அனானி (இனிமேல் இப்படியே குறிப்பிடுவதாக கூறியுள்ளார்)
1. இதுவரை உங்கள் பதிவுகளுக்கு வந்த பின்னூட்டங்களின் எண்ணிக்கை எவ்வளவு? ஏதாவது கணக்கெடுத்து வைத்திருக்கிறீர்களா?பதில்: அப்படியெல்லாம் பார்க்கவில்லை. பின்னூட்டங்கள் என்பவை வரும்போது அதற்கான எதிர்வினைகளைப் பெறுகின்றன. பிறகு ஒரு வலைப்பூவின் ஆவணங்களாக மாறுகின்றன.
அடுத்த கேள்வி பதிவு பதிவில் பார்ப்போமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்