5/03/2009

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 03.05.2009

தேவையற்ற சப்சிடிக்களைத் தவிர்க்க வேண்டும்
வீட்டு எரிவாயு சிலிண்டர்கள் நுகர்வோருக்கு ஒரு புதிய தலைவலி. ஒவ்வொருவரும் தத்தம் வினியோகஸ்தரிடம் சென்று மீண்டும் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதற்கு எல்லா சம்பந்தப்பட்ட ஆவணங்களின் மூலம் மற்றும் நகல்களுடன் வர வேண்டும். அவர்கள் 24 டோக்கன்கள் தருவார்கள். ஒவ்வொரு முறையும் சிலிண்டருக்காக புக் செய்து பெறும்போதும் ஒரு டோக்கனை ரசீதுடன் சேர்த்து சிலிண்டரை கொண்டுவரும் ஆளிடம் கையெழுத்திட்டு ஒப்படைக்க வேண்டும். அவை 24 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ள வேண்டியது. சற்று முன்னாலேயே (உதாரணத்துக்கு 20 மாதங்களில்) தீர்ந்து விட்டால், மிகுதி காலக்கட்டத்துக்கு துந்தனாதான்.

இப்போதே இது எப்படியெல்லாம் திரிதல் உபயோகத்துக்கு வரப்போகிறது என்பதை யாருமே ஊகிக்க இயலும். சிலருக்கு ஒன்றரை மாதங்கள் சிலிண்டர்கள் வரலாம். 24 மாத முடிவில் அவரிடம் சில டோக்கன்கள் மிஞ்சலாம். அவை இப்போது எந்த ரேட்டில் மற்றவர்களிடம் போகும் என்பதை ஊகியுங்களேன்? இதுவரை இருந்த நிலை என்னவென்றால், 30 நாளுக்கு ஒருமுறைதான் புக்கிங்கே அமுலுக்கு வரும். அதாவது, ஒருவர் 25 நாளில் புக் செய்தால் அதை பதிவு செய்வார்கள், ஆனால் அதன் வெயிட்டிங் முறை எண் 30 நாட்கள் முடிந்த பிறகுதான் கணக்கில் எடுத்து கொள்ளப்படும். இதே மாதிரி டோக்கன் முறைதான், ஆனால் அதில் உள்ளது போல இங்கு பிளாக்கில் எல்லாம் விற்க முடியாது. இப்போது வேண்டுமென்றே பிளாக் வியாபாரத்தை ஊக்குவிப்பது போல இந்த டோக்கன் முறை வந்துள்ளது.

இண்டேன் தரப்பில் சொல்லப்படுவது என்னவென்றால், உண்மையான நுகர்வோருக்கு சிலிண்டர் செல்ல வேண்டும், ஆகவே இந்த டோக்கன்கள் எனக் கூறுகின்றனர். யதார்த்த நிலையோ நான் மேலே சொன்னது போலத்தான் இருக்கும் என அஞ்சுகிறேன். டோக்கன்கள் விற்பனைக்கு சென்றால் அப்போது என்ன செய்வார்களாம்?

இத்தனை கெடுபிடிகளுக்கும் காரணம் என்னவென்று பார்த்தால், சிலிண்டர்களுக்கு அளிக்கப்படும் சப்சிடிதான். வீடுகளுக்கு கொடுக்கப்படும் 14.2 கிலோ எடையுள்ள ஒரு சிலிண்டரின் விலை 315 ரூபாய்கள். ஆனால் உண்மையாகவே அதன் விலை 700 ரூபாய்களுக்கும் மேல். என்ன நடக்கிறதென்னவென்றால், துண்டு விழும் ரூபாய்கள் சப்சிடி ஆகும். அவ்வாறு சப்சிடி பெறுபவர்கள் எல்லோருமே தினக்கூலிகள் அல்ல. இது முற்றிலுமே ஓட்டு பொறுக்கும் பிரச்சினை. மேலும், இண்டேன் கம்பெனி சிலிண்டருக்கு அரசு நிர்ணயித்த விலையோ 700க்கும் மிகக்குறைவே (கிட்டட்தட்ட 550 ரூபாய்கள் என அறிகிறேன்). ஆகவே இந்த சிலிண்டர்களை நிரப்புவதில் இண்டேனுக்கும் அக்கறை இல்லாமலிருப்பது புரிந்து கொள்ள்ளக் கூடியதே. சுதந்திர சந்தையில் உள்ளே புகுந்து அரசு குளறுபடி செய்வதற்கான உதாரணமாகவே இதை எடுத்து கொள்ளலாம்.

இந்த அழகில் திமுக அரசு ஏழைகளுக்கு இலவச அடுப்பு, வாயு சிலிண்டர்கள் தருகிறேன் பேர்வழி எனச் செயல்பட்டு நிலைமையை இன்னும் சிக்கலாகியுள்ளது. மேலும், வீட்டு உபயோகத்துக்கான 14 கிலோ சிலிண்டர்களை வினியோகம் செய்யும் பையன்களை சரிக்கட்டி, ஹோட்டல்கள், கார்கள் ஆகியவற்றில் பயன்படுத்துகின்றனர். பிறகு ஏன் தட்டுப்பாடு ஏற்படாது?

இதற்கு என்ன வழி? எனக்கு தோன்றுவதை கூறுகிறேன். பேசாமல் இந்த சப்சிடியை ஒழியுங்கள், அல்லது கணிசமாக குறையுங்கள். இண்டேன் கம்பெனிக்கு தரும் விலையும் யதார்த்தத்தை ஒட்டியிருக்க வேண்டும். பிறகு பாருங்கள், இந்த கோட்டா முறையெல்லாம் ஒழிந்து மக்களும் தேவையின்றி பதுக்க மாட்டார்கள்.

1949-ல் ஜெர்மன் ஃபெடெரல் குடியரசு ஸ்தாபிக்கப்பட்டு, Reichmark விலக்கப்பட்டு Deutschmark வந்து, ரேஷன் முறையும் ஒழிக்கப்பட்டது. அதுவரை காலியாக இருந்த கடைகளில் எங்கிருந்தோ பொருட்கள் வந்து ஷெல்ஃப்களை அலங்கரித்தன. அதுவரை அரசு சப்சிடி சார்ந்த குறைந்த விலையால் பொருட்களை விற்பவருக்கு ஊக்கம் இல்லாமல் இருந்ததே முந்தைய நிலைக்கு காரணம் என்பது பின்னால் புலப்பட்டது.

வடுவூர் குமாருக்கு ஒரு கேள்வி
பொது கட்டிடங்களில் ஒரு விஷயம் நீங்கள் கவனித்திருக்கலாம். வாட்டர் கூலர்கள் எல்லாமே டாய்லட்டுகளுக்கு அருகில்தான் அமைந்திருக்கும். சாஸ்திரி பவனில் இதை நான் எழுபதுகளிலேயே கவனித்துள்ளேன். ஆக வாட்டர் கூலர் இருக்கும் இடம் பயங்கர நாற்றமாக இருக்கும். மத்தியப் பொதுப்பணித் துறையில் உள்ள எனது சக சிவில் இஞ்சினியர்களை விசாரித்தபோது, அவர்கள் கூறியதென்னவென்றால், தண்ணீர் பைப் கனெக்‌ஷன்கள் காரணமே இது என்பார்கள். அதாவது கக்கூசுக்கு செல்லும் தண்ணீர்தான் வாட்டர் கூலர்களுக்கும் என்றாகிறது. வாட்டர் கூலருக்கும் டாய்லட்டுகளுக்கும் இடையில் ஒரு குறைந்தபட்ச இடைவெளி ஸ்பெசிஃபிகேஷனில் உண்டு என்றும் கூறப்பட்டது.

ஆனால், நடைமுறையில் அந்த குறைந்தபட்ச இடைவெளியை அவர்கள் அதிகப்பட்சமாக எண்ணியே செயல்பட்டு வந்துள்ளனர் எனத் தெரிகிறது. ஒரு நீண்ட காரிடாரில் ஒரு மூலையில் டாய்லட்டும், இன்னொரு மூலையில் வாட்டர் கூலர் அமைத்தல் பிரச்சினை கணிசமான அளவில் குறையும். ஆனால் அவ்வாறு செய்ய மாட்டார்கள், ஏனெனில் வாட்டர் பைப் நீளம் அதிகமாகி விடுமாம். இங்குதான் நம்ம வடுவூர் குமாருக்கு ஒரு கேள்வி. வாட்டர் பைப் மீட்டருக்கு என்ன ரேட். ஒரு ஐம்பது மீட்டர் அதிகமாகுமா, ஒரு கூலருக்கு? மொத்த கட்டிடத்தின் மதிப்பு கோடிக்கணக்கில் செல்லும்போது, இந்த அதிக விலை சுண்டைக்காய்தானே. ஆனால் பலன் அனேகம் அல்லவா? சுகாதார பாதுகாப்பு, வாட்டர் கூலருக்கருகில் நாற்றமின்மை ஆகியவற்றையும் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும் அல்லவா? அதுவும் கட்டிடங்கள் அறுபது ஆண்டுகளுக்கு குறையாமல் இருக்கப் போகின்றன. (சாஸ்திரி பவன் கட்டியே நாற்பது ஆண்டுகளுக்கு மேலாயிற்று). இத்தனை ஆண்டுகளூம் அந்த நாற்றம் விடாமல் இருந்து வந்திருக்கிறது, இன்னும் இருக்கப் போகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

29 comments:

ராஜ சுப்ரமணியம் said...

வாட்டர் கூலரை டாய்லெட்டிற்கு அருகில் அமைப்பது இந்தியாவின் எல்லா அலுவலகங்களிலும் வழக்கமான ஒன்று. கோடி கோடியாக செலவழிக்கும் DRDO போன்ற அமைப்புகளில் கூட நாற்றம் பிடித்த இதே வழக்கம்தான்.

எரிவாயு சிலிண்டருக்கு இனி டோக்கன்கள் வாங்கவேண்டும் என்பது புதிய செய்தியாக உள்ளது. தினமும் 3 பேப்பர்கள் படிக்கிறோம், இந்த செய்தியை எப்படி விட்டோம் எந்த் தெரியவில்லை. link தர இயலுமா?

dondu(#11168674346665545885) said...

லிங்க் என்று எதுவும் இல்லை. உங்கள் வீட்டில் அடுத்த முறை சிலிண்டருக்கு புக்கிங் செய்ய முயன்றால், அதை டெலிஃபோன் மூலம் செய்ய மாட்டாட்டார்கள். உங்களை நேரிலேயே வரச்சொல்வார்கள். இரண்டு நாட்களுக்கு முன்னால்தான் எங்கள் வீட்டில் இது நடந்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ராமகுமரன் said...

ஓட்டல் போன்ற வணிக ரீதியான நிறுவனங்கள் உபயோகிக்கும் எரிவாயு அளவை கண்கானிக்க ஒரு நல்ல திட்டத்தை உருவாக்க வேண்டும். அதை விடுத்து சப்சிடியை குறைக்க சொல்வது கொசுவிற்கு பயந்து வீட்டை கொளுத்துவது போல்தான் உள்ளது. நம் நாட்டில் இன்னும் நிறைய ஏழைகள் இருக்கிறார்கள் சார், அவர்களால் 700 ரூபாய் கொடுத்து சிலின்டர் எல்லாம் வாங்க முடியாது. வீடுகளுக்கு மின்சாரம் போல் பைப்லைனில் எரிவாயு இணைப்பை உருவாக்கலாம் இதன் மூலம் சிலின்டர் விநியோகத்தில் உள்ள தில்லுமுல்லுகளை ஒழிக்க முடியும்.

dondu(#11168674346665545885) said...

//நம் நாட்டில் இன்னும் நிறைய ஏழைகள் இருக்கிறார்கள் சார், அவர்களால் 700 ரூபாய் கொடுத்து சிலின்டர் எல்லாம் வாங்க முடியாது.//
டாஸ்மாக், புதுப்பட ரிலீசுக்கு பிளாக்கில் டிக்கெட் எல்லாம் வாங்குவது யார் என நினைக்கிறீர்கள்? அரசு இங்கு தரும் சப்சிடி அங்குதான் செல்கின்றன என்பதை அறிவீர்களா? சப்ளை, டிமாண்ட் உள்ளடங்கிய ஏற்பாட்டில் இம்மாதிரி அரசு ஓட்டு பொறுக்குவதற்காக செய்யும் அழுகினி காரியங்களே பிரச்சினைக்கு காரணம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ராமகுமரன் said...

டாஸ்மாக்கில் பனக்காரர்கள் யாரும் மதுவாங்குவதே இல்லையா. எல்லா வசதிபடைத்தவர்களும் பாரிலோ அல்லது ஸ்டார் ஹோட்டலிலோ மது அருந்துவதில்லை . பலரும் டாஸ்மாக்கில் வாங்கிதான் குடிக்கிறார்கள். புதுப்பட ரீலிசிற்கும் ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் பிளாக்கில் டிக்கெட் வாங்குவதில்லை பணம் அதிகம் வைத்துக்கொண்டு எப்படி செலவழிக்கலாம் என்று தோன்றுபவர்கள்தான் பிளாக் டிக்கெட் வாங்குவதற்கு அஞ்சுவதில்லை. நீங்கள் மேல் மத்திய மற்றும் உயர்வர்க்க (Upper middle and rich ) நிலையில் இருந்து பார்க்கிறீர்கள். எத்தனையோ குடும்பங்கள் (poor and lower middle class )பணத்தை வீண் செலவு செய்யாமல் (மது மற்றும் பிளாக் சினிமா போன்ற கேளிக்கைகளுக்கு செலவழிக்காமல் ) இருந்தும் வாழ்க்கையை நடத்த எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் , அவர்களுக்கு இந்த சப்சிடியை நீக்குவது என்பது ஒரு கூடுதல் பாரம்

dondu(#11168674346665545885) said...

@ராம்குமார்
என்னதான் சொன்னாலும் இம்மாதிரி செயற்கையாக விலையை குறைப்பதெல்லாம் இவ்வாறுதான் பிளாக் மார்க்கெட்டிங் செய்ய வழி அளிக்கிறது என்பது எனது கருத்து.

எங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி தனது அக்கம்பக்கத்தில் சிலிண்டர்களை பலர் சர்வ சாதாரணமாக அதிக விலைக்கு விற்பது பற்றி கூறுகிறார். அவரே பலமுறை அம்மாதிரி செயல் பட்டுள்ளார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ராமகுமரன் said...

சில இடங்களில் அவ்வாறு நடப்பது உண்மைதான் . அதை நிவர்த்தி செய்ய விநியோகத்தில் நாம் சில கட்டுப்பாடுகளை கொண்டுவர வேண்டும். உதாரண‌த்திற்கு ஒரு சிலின்டர் எங்கு உபயோகிக்க‌ப்படுகின்றது என்பதை கண்கானிக்க ஒரு சிப் போன்ற உபகரணத்தை பொருத்தலாம் அல்லது ஒரு வீட்டிற்கு அளிக்கப்பட்ட சிலன்டர் அதில் உள்ள எரிவாயு தீர்ந்து போகும் வரை அந்த ரெகுலேட்டருடன் மட்டும் உபயோப்படும் வகையில் செய்யலாம். கலர் டிவி தருவது போன்ற செயல்கள் தேவையற்றது ஆனால் இது ஒரு அத்தியாவசிய தேவை இதற்கு அரசு தரும் மானியத்தை ரத்துசெய்வதென்பது நல்லதல்ல‌

dondu(#11168674346665545885) said...

@ராம்குமார்
இம்மாதிரி எல்லா இடங்களிலும் இப்படித்தான் முதலில் ஏழைகளுக்காக ஆரம்பிப்பதாக கூறிகொண்டுதான் காரியங்கள் ஆரம்பிக்கும். ஆனால் உண்மையின் என்ன நடக்கின்றதென்றால், யார் ஏழைகள், அவர்களுக்கு மட்டும்தன் சப்சிடி என செயல்பட முடிகிறதா? ஒட்டு மொத்தமாக பல ஒழுங்கீனங்களுக்கே இம்மாதிரி சப்சிடிகள் துணை போகின்றன.

நாட்டின் தொழில் முன்னேற்றமே இதனால் பாதிக்கப்படும். ரஷ்யாவில் கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு மெட்ரோ ரயில் டிக்கட்டுகளின் விலையை இம்மாதிரி செயற்கையாக குறைத்து வைத்ததும் சோவியத் யூனியன் அழிந்ததற்கு ஒரு முக்கிய காரணம் என்பதை சரித்திரம் சொல்கிறது.

நரகத்துக்கு செல்லும் பாதையின் அடிக்கற்கள் இம்மாதிரி “நல்லெண்ணங்களே”.

அதுவும் இந்த சிலிண்டருக்கான சப்சிடி அதன் அடக்க விலையின் பாதிக்கும் மேலே. பிறகு ஏன் துர் உபயோகம் வராது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

அக்னி பார்வை said...

அந்த வாட்டர் கூலர் விஷயத்தை நானும் கவனித்திருக்கிறேன்.. எனா செய்ய முடியும் அதிக பச்சம் ஒரு புகார் கடிதம் அவ்வளவுதான்

வடுவூர் குமார் said...

எப்போதும் உங்களுக்கு தான் கேள்வி வரும் இப்போது எனக்கா அதுவும் உங்களிடமிருந்தா?
குடிதண்ணீர் வழங்கி சிங்கையிலும் கூட அதும் விமான நிலையத்தில் கூட கழிவறைக்கு பக்கத்தில் தான் இருக்கும் அது எதற்கென்றால் வெளியேறும்(குடிக்கும் போது) தண்ணீர் வெளியேறும் வழியை எளிமையாக வைக்க.கழிவறைக்கு பக்கத்தில் தான் இருக்கவேண்டும் என்ற நியதி கிடையாது.நம் அரசாங்க அலுவலகங்களில் கடைபிடிக்கப்படும் Red Tapisum முறையாக இருக்கும்.ஆதாவது ஒரு கட்டிடத்தில் அங்கு வைத்து அதற்கு அனுமதி கிடைத்த பிறகு வேறு இடத்தில் வைத்தால் அனுமதி மறுக்கப்படுமோ என்ற குருட்டு நம்பிக்கையாக கூட இருக்கக்கூடும்.
பைப் விலையெல்லாம் கட்டிடத்தின் செலவில் ஜூஜுபி.
நம்மூரில் வாட்டர் கூலர் பக்கத்தில் கட்டாயம் டம்ளர் இருக்கவேண்டும்.ஒரு சின்ன உதாரணம் பார்க்கனும் என்றால் நம்ம தலமைசெயலம் முகப்பில் ஒரு குடிதண்ணீர் வழங்கி வைத்து ஒரு டம்ளர், செயினுடன் இணைத்து வைத்துள்ளார்கள்.அந்த இடத்தில் 5 அடி உயரம் மட்டுமே உள்ளவர் டம்ளர் ஐ தூக்கி குடிக்கமுடியும் மற்றவர்கள் முட்டி கொஞ்சம் மடக்கி/குனிந்து தான் குடிக்க முடியும்.ஒரு மாநிலத்தின் அதுவும் தலைமை செயலகத்தின் முகப்பில் இப்படி இருந்தால் அரசாங்க கட்டிடங்களில் மாற்ற தைரியம் இல்லாமல் கழிப்பறை பக்கத்திலேயே வைப்பார்கள் அதை நாமும் சகித்துக்கொள்ள வேண்டும்.
பூனைக்கு யார் மணி கட்டுவது தான் இதில் பிரச்சனை.
பொதுத்துறையிலும் வேலை பார்த்ததால் நான் சொல்வது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
அவ்வப்போது எனக்கு ஒரு யோஜனை வருவதுண்டு... ஆதாவது நமது தேசத்தில் நம் காசு போட்டு நல்ல கழிப்பறை கட்டி வியாபாரமாக செய்தால் இரண்டே வருடங்களில் கோடிஸ்வரன் ஆக முடியும்.பலருக்கு கொடுக்க பணம் இருக்கும் ஆனால் அதற்கு தகுந்த சேவை செய்ய வழியில்லாமல் (சில அரசே கட்டுப்பாடில்) இருப்பதே இதற்கெல்லாம் காரணமோ என்று கூட யோசிக்க தோணுகிறது.
பதில் பெரிதாக போய்விட்டது - மன்னிக்கவும்.

dondu(#11168674346665545885) said...

@வடுவூர் குமார்
மிக்க நன்றி. இதைத்தான் உங்களிடம் எதிர்பார்த்தேன். இக்கேள்வியை அக்காலகட்டத்தில் நான் சிவில் கோட்டகப் பொறியாளர் ஒருவரிடமே கேட்டேன். அவரும் வாட்டர் கனெக்‌ஷன் விஷயத்தைத்தான் கூறினார். டாய்லட் என்பதை எல்லோருமே க்ளீனாக வைத்து கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார். (They are supposed to keep it clean).

அன்புடன்,
டோண்டு ராகவன்

sury siva said...

இந்த புதிய முறை எப்பொழுது அமலுக்கு வருகிறது அல்லது வந்துவிட்டதா ?
உடன் தெரிவிக்கவும்.

சுப்பு ரத்தினம்.

dondu(#11168674346665545885) said...

@சூரி
வந்து விட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//
எரிவாயு சிலிண்டருக்கு இனி டோக்கன்கள் வாங்கவேண்டும் என்பது புதிய செய்தியாக உள்ளது. தினமும் 3 பேப்பர்கள் படிக்கிறோம், இந்த செய்தியை எப்படி விட்டோம் எந்த் தெரியவில்லை. link தர இயலுமா?
//

தினமும் மூணு தடவை குளிக்கிறேன், ஆறு தடவை சாமி கும்பிடுகின்றேன்...எனக்கு பாபா காட்சி தரல்லையே....பாபா பட டயலாக் தான்...டெல்லிகனேஷ் சொல்லுவார்.

Anonymous said...

குழாய் மூலம் சமையல் வாயு விநியோகிப்பதே சாலச்சிறந்தது. தற்போது இருக்கும் உபயோகத்திற்கு ஏற்ப மின்சார கட்டணம் வசூலிப்பதை போல் இதற்கும் வசூலிக்கலாம். வீடு,வணிகம்,குறுந்தொழில் என்று கட்டண விகிதத்தையும் எளிதாக மாற்றி அமைக்க முடியும்.

Anonymous said...

//
சில இடங்களில் அவ்வாறு நடப்பது உண்மைதான் . அதை நிவர்த்தி செய்ய விநியோகத்தில் நாம் சில கட்டுப்பாடுகளை கொண்டுவர வேண்டும். உதாரண‌த்திற்கு ஒரு சிலின்டர் எங்கு உபயோகிக்க‌ப்படுகின்றது என்பதை கண்கானிக்க ஒரு சிப் போன்ற உபகரணத்தை பொருத்தலாம் அல்லது ஒரு வீட்டிற்கு அளிக்கப்பட்ட சிலன்டர் அதில் உள்ள எரிவாயு தீர்ந்து போகும் வரை அந்த ரெகுலேட்டருடன் மட்டும் உபயோப்படும் வகையில் செய்யலாம்.
//

தோசையை சாப்பிடுவதை விட்டு தோசையில் உள்ள ஓட்டைகளை எண்ணும் வேலையில் நாடாளு அரசு இறஙக்வேண்டும் என்று எண்ணுவது மஹா மூடத்தனம்.

மானியத்தைக் கொடுப்பதே சில சட்டங்களின் அடிப்படையில். அது சரியாக பயன் படுத்தப்படாத போது அதை வேறு ஒரு சட்டம் கொண்டு சரிபார்ப்பது என்பது ஏற்கனவே லஞ்சம் வாங்கும் போலீசுக்கு லைசன்ஸ் கொடுத்து லஞ்சம் வாங்கச்சொல்வது போல உள்ளது.

ரவிஷா said...

1995 வாக்கில் சென்னையில் இருந்த ஒரு கேஸ் சிலிண்டர் டிஸ்ட்ரிப்யூஷன் கம்பெனிக்கு சாஃப்ட்வேர் எழுத கூப்பிட்டார்கள்! அந்த கம்பெனியின் உரிமையாளரிடன் டிஸ்கஷன் செய்து கொண்டிருந்தபோது ஒரு விஷயம் சொன்னார்! அதாவது வீடுகளில் உபயோகப்படுத்தும் சிலிண்டர் 13.5 கேஜி அளவு! அதையே கடைகளில் உபயோகப்படுத்தும் சிலிண்டர் அளவு 25கேஜி. எல்லா வீடுகளுக்கும் 13.5கேஜிதான்! ஆனால் முஸ்லிம் வீடுகளுக்கு மட்டும் 25கேஜி சிலிண்டர்கள் கொடுப்பார்களாம்! ஏனென்றால் அவர்கள் லா படி (ஷரியத்?) ஒருவருக்கு நான்கு மனைவிகள் இருக்கலாமாம்! அதனால் தான் இப்படி என்றார்! அதை சொல்லிவிட்டு அவரே இதையும் சொன்னார்! இப்படி கொடுப்பதில்தான் பல முறைகேடுகள் வருகின்றது என்று! இப்போதும் அப்படியா ஏன்று தெரிந்தால் சொல்லுங்க்களேன்?

வஜ்ரா said...

ரவிஷா,

ஒரு மனைவி உள்ள வீட்டுக்கு 13.5 கிலோ சிலிண்டர் என்றால் 4 மனைவிக்கு 13.5 X 4 = 54 அல்லவா வரணும். கணக்கு இடிக்குதே...!

Jay said...

//விஷா,

ஒரு மனைவி உள்ள வீட்டுக்கு 13.5 கிலோ சிலிண்டர் என்றால் 4 மனைவிக்கு 13.5 X 4 = 54 அல்லவா வரணும். கணக்கு இடிக்குதே...!//

கணக்கு பண்ணா இடிக்கும்தான்.. ;-)

மணிகண்டன் said...

சுதந்திர சந்தை, சுதந்திர சந்தைன்னு கூப்பாடு போட்டுக்கிட்டு இருக்கீங்க. சுதந்திர சந்தைனால வந்த பிரச்சனை போது அதை பத்தி வாய திறக்கமாட்டேங்கறீங்க.

மணிகண்டன் said...

ஜெய், ரவிஷா, வஜ்ரா, டோண்டு - இந்த பின்னூட்டங்கள் ஒன்னும் ரசிக்கற மாதிரி இல்லையே ! ஏன் இந்த வெறி ?

dondu(#11168674346665545885) said...

@மணிகண்டன்
சுதந்திர சந்தையினால் பிரச்சினை ஒன்றும் இல்லை. இல்லாத வியாபாரத்தை கற்பனை செய்து கொள்வது, அதை நம்பி கடன்களாக தருவது, அவற்றை மற்றவருக்கு விற்று, மற்றவர்களும் குருட்டுத்தனமாக வாங்குவது போன்ற விஷயங்கள் செய்யக் கூடாதவை. அவற்றையெல்லாம் செய்ய குருட்டுத்தனமாக அமெரிக்க அரசே ஆதரித்தது. யார் மடத்தனமாக செயல்பட்டாலும் அவர்களுக்கு சங்குதான்.

இதில் கொடுமை என்னவென்றால் பெரிய தலைகளை பணம் கொடுத்து காப்பாற்றும் முயற்சி. இதுவும் சுதந்திர சந்தைக்கு விரோதமானதே.

ஆனால் இம்மாதிரி நடந்து தோவியடைந்த சோஷலிச சந்தைகளால் நாடுகளே உலக வரைபடத்திலிருந்து மறைந்தது போல இங்கு நடக்காது. அதுதான் சுதந்திர சந்தையின் பலமும் கூட.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ரவிஷாவின் பின்னூட்டம் எனக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது, ஏனெனில் இம்மாதிரி இசுலாமியர் வீடுகளுக்கு மட்டும் பெரிய சிலிண்டர் என்பதை நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை.

ஆனால் ரவிஷா தனது தொழிலில் இந்த விஷயத்தை நேரில் எதிர்க்கொண்டுள்ளார். ஆகவேதான் நான் அமைதி காத்தேன். அவர் பொய் கூற வேண்டிய அவசியம் இல்லை. மென்பொருள் நிரல்கள் எழுது சமயம், வாடிக்கையாளரின் தேவைகளை மனதில் கொள்வது முக்கியம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

DFC said...

//நம் நாட்டில் இன்னும் நிறைய ஏழைகள் இருக்கிறார்கள் சார், அவர்களால் 700 ரூபாய் கொடுத்து சிலின்டர் எல்லாம் வாங்க முடியாது.//

இது என்ன புது கதையா இருக்கு?
எழைகளுக்காகதான் மண்ணெனை(Kerosene,)கிஸ்னாயில்
எல்லாம் அரசு மலிவு விலையில் அளிக்கிறதே... அப்புரம் கேஸ் எதுக்கு???...

டோன்டு ஐய்யா சொன்ன மாதிரி இந்த
கேஸ் மானியத்தை ஒழித்து கட்ட வேண்டும்.

கொஞம்விட்டா எல்லாத்தயும் எழை பட்டியலில் சேத்துருவீங்க போல..கேஸ் சிலின்டர் வாங்குபவன் எழை கிடையாது..

Jay said...

//ஜெய், ரவிஷா, வஜ்ரா, டோண்டு - இந்த பின்னூட்டங்கள் ஒன்னும் ரசிக்கற மாதிரி இல்லையே ! ஏன் இந்த வெறி ?//

வெறி எல்லாம் ஒன்னுமில்லை. ரவிஷா போட்ட கமென்டை பாக்கவில்லை.. வஜ்ரா எதொ நமது அரசியல் கலைஞர்களை பத்தி சொல்ல... நெனச்சி அப்படி ...
சரி அதவிடுங்க...

கணக்கு பண்றதுன்னு வந்துட்டா இடிக்கும்ன்னு நினைக்கிறேன், மணி நீ என்ன சொல்ற?

வால்பையன் said...

சிலிண்டர் போடும் ஆட்களுக்கு மாத சம்பளம் 400 ரூபாய்!
சிலிண்டருக்கு 5 ரூபாய் வாடிக்கையாளர்கள் கொடுத்தால் வாங்கி கொள்ளலாம், தரவில்லையென்றால் கேட்க கூடாது!

ஒருநாளைக்கு 20 திலிருந்து 40 சிலிண்டர்கள் வரை போடக்கூடும்!

அதில் வரும் வருமானத்தை வைத்து தான் வண்டிக்கு பெட்ரோல் அவருக்கு பெட்ரோல் மற்றும் குடும்பம்!

ஏன் ப்ளாக்கில் விற்க மாட்டார்கள்!

dondu(#11168674346665545885) said...

@வால்பையன்
மாதம் 400 ரூபாய்தான் சம்பளமா? அதுவும் இக்காலத்திலா? உண்மையாக இருந்தால் ஏன் இந்த குறைந்த சம்பளத்துக்கு வருகிறார்கள் என்பதையும் யோசிக்க வேண்டும்.

ஒன்று வேலையில்லா திண்டாட்டமாக இருக்க வேண்டும் அல்லது இதில் சைட் பிசினசுக்கு அதிக வாய்ப்பு இருக்க வேண்டும். எது எப்படியானாலும் இம்மாதிரி கண்மூடித்தனமாக சப்சிடி தர்க்கூடாது என்னும் என் எண்ணம் வலுப்பெறுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சரவணன் said...

சப்சிடி இல்லாத கமர்ஷியல் 19-கிலோ சிலிண்டர் எந்தக் கட்டுப்பாடும், தட்டுப்பாடும் இன்றி எவ்வளவு வேண்டுமானாலும் கிடைக்கிறது. வசதி இருப்பவர்கள் அதற்கு மாறிக்கொள்ளலாமே! எவ்வித முகவரிச்சான்றும் தேவையில்லை. எப்பொழுது கேட்டாலும் அன்றே சப்ளை செய்யப்படுகிறது.

சரவணன் said...

சப்சிடி இல்லாத கமர்ஷியல் 19 கிலோ கனக்ஷன் பெற்றுக்கொள்வதே இதற்குத் தீர்வு. முகவரிச்சான்று தேவையில்லை. எப்பொழுது கேட்டாலும் அன்றே சப்ளை செய்கிறார்கள்.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது