சூரியுடன் பேசியதில் முதலில் தீர்மானிக்க வேண்டிய விஷயம் பாத்திரங்களின் பெயர்கள்தான். அவன் என்ன செய்தானென்றால், இந்தியப் பெயர்களை சுருட்டி அமெரிக்க பெயர்களாக தந்தான். உதாரணம் ராகவன் Rock Van ஆனான் (அது அடியேனைத்தான் குறிக்கிறது என்பதை கூறிவிட்டேன்). நான் எவ்வாறு இப்பாத்திரத்தை குறிப்பிடுவது? கதை நடக்குமிடம் அமெரிக்கா என்பதற்கு சில சமிக்ஞைகள் புத்தகத்தில் உண்டு. நான் ராகவன் என்று எழுதினால் அர்த்தமே வேறாகி விடுமே. எல்லா பாத்திரங்களுமே என்.ஆர்.ஐ. ஆகிவிடுவார்களே. அது கதையின் போக்கையே திரித்து விடுமே. அதற்காக ராக் வேன் என்றே எழுதலாமா?
அவனைக் கேட்டால் பெயர்களை அப்படியே வைத்து கொள்ளச் சொல்கிறான். அப்படியே செய்து பார்க்கிறேன். மொழிபெயர்ப்புக்கு செல்கிறேன்.
ஜெஸ்டஸ்
ஆங்கில மூலம். வி.எஸ். சூரி (Copyright@V.S.Sury)
(தமிழாக்கம்: டோண்டு ராகவன்)
அத்தியாயம் - 1
வந்தாரையா ஜெஸ்டஸ்
அவரால்தான் நான் முதன்முதலாக பல கோடி டாலர்களுக்கு அதிபதியானேன்.
அவர் இன்னும் உயிருடன்தான் இருக்கிறார். எலும்புகள் மட்டுமே மனிதனாக உருவானது போல ஒல்லிப்பிசானாக இருக்கிறார். அவரது வயது? அது இருக்கும் எழுபதிலிருந்து நூறு வரை. அது அவரை நீங்கள் எப்போது எங்கு, எப்போது எந்தச் சூழ்நிலையில் சந்திக்கிறீர்கள் என்பதை பொருத்தது. வெளிப்பார்வைக்கு அவர் பைத்தியமாகவே தோற்றமளிக்கிறார். பித்தன், பிராந்தாக இருக்கிறார். அவரது செய்கைகளோ மேலும் பைத்தியக்காரத்தனமாகவே காட்சியளிக்கின்றன.
அவரால் நான் எப்படி கோடீஸ்வரனானேன் என்பதைக் கூறும் முன்னால் மேலும் இரு நபர்களை அறிமுகம் செய்ய வேண்டியிருக்கிறது.
முதலாமவர் ஈடு இணையற்ற மைக்கேல் மேக்னம். அவர் யார் எனத் தெரியாதவர்கள் இரட்டை ஆயுள் தண்டனை பெற்று ஐம்பது ஆண்டுகள் தனிமைச் சிறையில் இருந்து இப்போதுதான் வெளிவந்திருக்க வேண்டும். ஷேக்ஸ்பியர் அல்லது ஐன்ஷ்டைனை தெரியாமல் யாராவது இருந்து விடலாம், ஆனால் இவரைத் தெரியாமல் இருப்பவர்கள்? ஒரு வேளை தொட்டிலில் இன்னும் இருக்கும் குழந்தைகளை வேண்டுமானால் உதாரணமாக கூறலாம். மைக்கேல் மேக்னம் உலகிலேயே பெரிய பணக்காரர் என்பது எல்லோரும் அறிந்ததே (உலகிலேயே என்ன, அண்டசராசரத்திலேயே என்று கூட கூறலாம், நான் ஆட்சேபிக்க மாட்டேன்).
நானும் அவரும் ஒரு சேட்டின் மூலம் ந்ண்பர்களானோம். அவர் மாதிரி ஒருவருக்கு சாதாரணமாக சேட் செய்ய நேரம் எல்லாம் எங்கே இருக்கிறது? இருப்பினும் விதியின் விளையாட்டினால் அவர் ஒரே ஒரு முறை உலகளாவிய வலைத்தளம் ஒன்றின் சேட் அறையில் அதில் என்னதான் இருக்கிறது என்பதைப் பார்க்கலாம் என்பதற்காகவே நுழைந்திருக்கிறார். தனது உண்மைப் பெயரை தவிர்த்த ஒரு பயனர் பெயரில் வந்தார். இம்மாதிரி சேட் அறைகளில் காலத்தை விரயம் செய்வது எனக்கும் பிடிக்காதுதான். ஆனால் அதே விதியின் விளையாட்டு என்னையும் அதே நேரத்தில் சேட் ரூமுக்கு கொண்டு வந்தது. ஒருவர் மற்றவருடன் அந்த ஒரு தினம் மட்டும்தான் சேட் செய்தோம். அதிலேயே இனிமேல் சேட் அறைகள் பக்கமே போக வேண்டாமென முடிவு செய்து, மின்னஞ்சல் முகவரிகளை பரிமாறிக் கொண்டோம்.
நான் அறிமுகம் செய்ய விரும்பும் மற்றவர் பிரசித்திபெற்ற மனோதத்துவ நிபுணர் கார்ள் குஸ்டாஃப் யுங் (Carl Gustav Jung). நான் கல்லூரியில் படிக்கும் நாட்களில் அவரது எழுத்துக்களால் கவரப்பட்டேன். அவற்றில் ஓரிடத்தில் அவர் ஒத்திசைவுத்தன்மை (synchronicity) என்னும் கோட்ப்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளார். அதாகப்பட்டது விசித்திரமான தற்செயல் நிகழ்ச்சிகள் என்று குன்சாகக் கூறலாம். அவர் இன்னும் பல விஷயங்கள் இது பற்றி கூறியுள்ளார், ஆனால் நான் தேவையில்லாமல் உங்களை போர் அடிக்க விரும்பவில்லை. நான் முதலில் குறிப்பிட்ட அந்தப் பயித்தியக்காரர் இந்த ஒத்திசைவுத்தன்மையின் முக்கிய முடிச்சாவார் என்று மட்டும் கூறிவிடுகிறேன்.
அவரை நான் முதன்முதலாக பார்த்தபோது நகரத்தின் பூங்காவில் நான் உலாவிக் கொண்டிருந்தேன். அவரை முதன்முறை பார்க்கும்போதே அவர் பைத்தியம் என்பதை கண்டுகொண்டேன். அந்த ஒல்லிப்பிச்சான் கிட்டத்தட்ட நிர்வாணமாகவே இருந்தார். ஒரே ஒரு கோமணம் மட்டும் உடை என்ற பெயரில் கட்டியிருந்தார். சிறுவர்கள் அவரை சீண்டிக் கொண்டிருந்தனர். வேறு விசேஷம் ஏதும் இல்லை. ஆகவே அவரை உடனேயே மறந்து விட்டேன்.
எதேச்சையாக நான் அவரை ஒரு தெருவில் சென்று கொண்டிருந்தபோது பார்த்தேன். கிட்டத்தட்ட இருநூறு மீட்டர்கள் தொலைவிலிருந்து அவரைப் பார்த்தாலும் அது அவர்தான் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. அவரை அடுத்த வாரமும் பார்த்தேன், அதற்கடுத்த வாரம் கூட.
இப்போதுதான் நான் சொன்ன ஒத்திசைவுத்தன்மை வருகிறது. எப்போதெல்லாம் நான் வெளியே சென்றாலும் அவரை சில நொடிகளுக்கு சற்றே தொலைவில் பார்க்க நேர்ந்தது. இந்த விசித்திரமான நிகழ்வுகள் பற்றி மைக்கேல் மேக்னத்திடம் ஒரு மின்னஞ்சலில் பேசினேன். அவர் முதலில் எனக்கு இது சம்பந்தமாக பதிலளிக்கவில்லை. இருந்தாலும் நான் விடவில்லை. அந்த பைத்தியக்கார கிழவர் எனக்கு தினசரி தரிசனம் தர ஆரம்பித்தார். கடைசியாக மேக்னம் பதிலளித்தார். அது ஒரு விசித்திரமான தற்செயல் என்பதைத் தவிர்த்து வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை என்றார் அவர். அது பற்றி அலட்டிக் கொள்ள வேண்டாம் எனவும் கூறினார். இந்த நிகழ்வுகள் விசித்திரமான தற்செயல் அல்ல, மேக்னத்தை சிக்க வைக்க விரிக்கப்பட்ட வலை என்பது பிறகுதான் தெரிந்தது. விளக்குகிறேன். மூன்றாம் முறையாக நான் இதுபற்றி பேசியபோது மேக்னம் இது அடுத்த நாளைக்கு தொடராது எனக்கூறி அதற்காக ஒரு டாலர் பந்தயமும் வைத்தார்.
அந்த பைத்தியக்காரக் கிழவரை அடுத்த நாளும் பார்த்தேன். அதை மின்னஞ்சல் மூலம் மேக்னத்துக்கு உடனே தெரிவித்தேன். அவர் எனக்கு ஒரு டாலர் தரவேண்டும் எனக் கூறிவிட்டு. அடுத்த நாளைக்கான பெட்டாக நான் வெற்றி கொண்ட டாலர், கூட ஒரு டாலர் சேர்த்து இரண்டு டாலர்களை வைத்து இன்னொரு பந்தயம் போட்டேன். அதையும் ஜெயித்தேன்.
மேக்னம் இது வரை இம்மாதிரி தோற்றதே இல்லை. ஆகவே அவருக்கு எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என வெறி வந்து, ஒவ்வொரு நாளும் பந்தயத் தொகையை இரட்டித்து கொண்டே போனார். இரண்டு டாலர்கள் நான்கு டாலர்கள் ஆயின, நான்கு எட்டாயின. பதினாறும் முப்பத்திரண்டும் அடுத்தபடியாக வந்தன. 64, 128, 256 என்று போய்க்கொண்டே இருந்தது. இவ்வாறு தொடர்ச்சியாக 35 நாட்கள் கழிந்தன.
மேக்னத்துக்கு எப்படியாவது தான் தோற்றதை பிடிக்கும் வெறி. அந்த கிழட்டு பைத்தியக்காரர் எனக்கு காட்சியளிப்பதை நிறுத்தவில்லை (அவர் வாழ்க), மேக்னமும் நான் சொல்வதை முழுமையாகவே நம்பினார் (அவரும் வாழ்க).
நான் ராமானுஜமோ பாஸ்கராச்சாரியோ இல்லைதான். இருப்பினும் 35 நாட்களுக்கு பிறகு நான் வெற்றி பெற்றது 235 டாலர்கள் என்பதை அறிய அத்தனை அறிவு தேவையில்லை. அது எவ்வளவு என்பதை அறிய டிஜிட்டல் கால்குலேட்டரை நாடினால் போதும். (நீங்களும் அதை பயன்படுத்தலாம். பயப்படாதீர்கள் அது உங்களைக் கடிக்காது).
மேக்னத்துக்கு நான் இப்போது அனுப்பிய மின்னஞ்சலில் அவர் எனக்கு தரவேண்டிய தொகை கோடிக்கணக்கான டாலர்களாக மாறியதை கூறினேன். இத்துடன் விளையாட்டை நிறுத்திக் கொள்ளுமாறும் கூறினேன். ஆனால் ஒன்று சொல்ல வேண்டும். மேக்னம் நிஜமாகவே பெரிய மனிதனே. இவ்வளவு பணம் இழந்தது குறித்து வெறும் ஒரு சிரிப்பானை தன் பதிலில் போட்டு பணத்தை எந்த வங்கியில் எந்த ஊரில் என் பெயரில் செலுத்த வேண்டும் என்று மட்டும் கேட்டார்.
உடனேயே என் மனதுக்கு தோன்றியது ஜூரிக் நகரமே. அங்குதான் மிகவும் பத்திரமான வங்கிகள் உண்டு. அவற்றில் சிறந்த வங்கி D’or D’or et Fils (டோர் டோர் அண்ட் சன்ஸ்) ஆகும். அதன்படி அந்த வங்கியில் அவர் அடுத்த 24 மணி நேரத்துக்குள் எனக்கான கணக்கைத் துவக்கி அத்தனை கோடி டாலர்களையும் அதில் போட்டு வங்கிக் கணக்கு எண், கடவுச்சொல் எல்லாவற்றையும் எனக்கு அவர் என்க்ரிப்டட் அஞ்சல் மூலம் தெரியப்படுத்தினார். நிஜமாகவே அவர் மகான். (அந்த கோடிக்கணக்கான ரூபாய்கள் அவரைப் பொருத்த வரை ஒரு ஜுஜுபி என்பது வேறு விஷயம்).
சில நாட்கள் நான் ஊரில் இல்லை. திரும்பி வந்த அன்று நான் வழக்கமாக செல்லும் நகராட்சிப் பூங்காவில் உலாவிக் கொண்டிருந்தேன். அந்த இடத்தில் எனக்காக பொன்முட்டை இட்ட அந்த வாத்தை சந்தித்தேன் என்பதை கூறவும் வேண்டுமோ? அந்தப் பைத்தியக்காரர் ஒரு மரத்தடியில் தேமேனென்று அமர்ந்து செடி கொடிகள், பறவைகள ஆகியவற்றை ஒரு கேனத்தனமான புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
அவரால்தானே நான் கோடீஸ்வரன் ஆனேன்? ஆகவே அவரை சற்றே அருகாமையிலிருந்து பார்க்க நினைத்தேன். எதேச்சையாக போவது அவரருகில் சென்றேன், அவரது நிர்வாண நிலை, மற்றும் வெளிப்புறத் தோற்றம் ஆகியவை பற்றி நான் ஏற்கனவேயே குறிப்பிட்டுள்ளேன்.
நான் சற்றே தயங்கினேன். பைத்தியங்கள் என்ன வேண்டுமானால் செய்யலாம். அவர்களில் சிலர் வன்முறையில் இறங்கக் கூடும். சிலரது யானை பலம் ஊரறிந்ததே.
இருபது மீட்டர் தொலைவிலிருந்து பார்க்கும்போது அவரது நெற்றியிலும், கண்ணருகேயும் கன்னங்களிலும் பல சுருக்கங்கள் இருந்தன. அவரது கண்கள் நீலமாக இருந்தன. என் மனதில் அவருக்கு தமாஷாக நன்றி கூறிவிட்டு கிளம்ப எத்தனித்தேன். அவர் என்னைத் தன்னருகில் அழைத்தார். பற்கள் இல்லாத அவரது ஈறுகள் கருமையாக இருந்தன. இருப்பினும் அவரது புன்னகை அழகாக இருந்தது. அவரால் நான் கவரப்பட்டு அவரருகில் சென்று நின்றேன். தானருகே அமருமாறு எனக்கு சைகை செய்தார். நானும் அமர்ந்தேன்.
“அது என்னோடது கண்ணா, கொடுத்துடு.”, என்று அவர் எனது சட்டைப்பையை பார்த்தவாறே கூறினார். என்னையறியாமலேயே அதையும் அதிலிருந்த பேனாவையும் கெட்டியாக பிடித்துக் கொண்டேன்.
“பாதியாவது கொடப்பா.” என்றார் அவர். நிஜமாகவே அந்த ஆள் பைத்தியம் என்பதை உணர்ந்தேன். சட்டைப் பையிலிருந்த பேனாவை எடுத்து, மூடியைத் திறந்து அவரிடம் கேலியாகக் கேட்டேன், “எந்தப்பாதியை சொல்லறீங்க, பேனாவா, மூடியா?” என்று.
அவர் வேகமாக தலையை ஆட்டி மறுத்தார். இந்தப் பாதிகள்லே எதையுமே நான் கேக்கலை. இன்னொரு பாதி” என்றார்.
அது என்ன இன்னொரு பாதி என நான் அவரைக் கேட்க, “டோர் டோர் அண்ட் சன்ஸ் வங்கில நீ போட்டு வச்சிருக்கும் பணத்தைத்தான் சொல்றேன்” என்று தெளிவாகக் கூறி புன்னகையும் செய்தார்!
எனக்கு தூக்கிவாரிப் போட்டது, பேச்சே எழவில்லை. அவருக்கு எப்படி இந்த மைக்கேல் மேக்னம் விஷயம் தெரியும்? இது சாத்தியமே இல்லை, நடக்கவும் நடக்காது. அவர் கூறுவது என் காதில் விழவில்லை என்பது போல நடித்து, “என்ன சொல்றீங்க?” எனக்கேட்டேன். அதையும் நம்பிக்கை இல்லாமலேயே செய்தேன்.
அவர் மிகச் சாதாரணமாக பதிலளித்தார், “இந்த விளையாட்டுதானே வாணாங்கறது. நான் சொன்னது டோர் டோர் அண்ட் சன்ஸ் வங்கியை. அந்தப் பேர்ல உலகத்திலேயே ஒரு வங்கிதான் இருக்கு. அதே போல உலகிலேயே ஒரு மைக்கேல் மேக்னம்தான் இருக்கார், அதாவது பல ஆயிரம் கோடிகளின் அதிபதி. அவர் ஒன்னோட நண்பரும் கூட. நான் சொன்னது புரிஞ்சுதா, இல்லை மறுபடியும் சொல்லணுமா?”
எனக்கு நாக்கு வெளியே தள்ளிவிட்டது. பேச இயலவில்லை. வெறுமனே மண்டையை மண்டையை ஆட்டினேன். வேறு யாராவது நாங்கள் பேசுவதை கேட்கிறார்களா என்பதை பார்த்தேன். நல்லவேளையாக நாங்கள் ஒரு தனிமையான இடத்தில் இருந்தோம்.
கிழவர் மேலே பேசினார். “என்னாலத்தானே ஒனக்கு அந்த கோடிக்கணக்கான டாலர்கள் கிடைத்தன. அதனாலே அதில் பாதியை எனக்குத் தருவதே நியாயம். நான் மட்டும் பேராசைக்காரனாக இருந்தால் தொண்ணூறு சதவிகிதம் கேட்டிருப்பேன். ஆனாக்க நான் நியாயஸ்தன் தெரியுமா”.
மெதுவாக சுதாரித்துக் கொண்டேன். யோசிக்க ஆரம்பித்தேன். என்னிடம் ஒரு பலவீனம் உண்டு. யாராவது என்னுடன் வாதிட்டால் கடைசியில் அவரது வாதங்களை ஒத்துக் கொள்ளும் மனநிலைக்கு வந்து விடுவேன். இந்தப் பைத்தியத்தின் வாதம் சரியாகவும் நியாயமாகவும் எனக்கு தோன்றியது. நிஜமாகவே அவரை நான் விடாமல் 35 நாட்கள் தொடர்ச்சியாக பார்க்காதிருந்தால் என்னுடைய கோடிகள் ஏது?
புன்னகை புரிந்தேன். “சரி, நீங்கள் சொல்வதை ஒத்துக்கிறேன்”.
“நல்ல மனுஷனுக்கு இதுதான் அழகு. நிஜமாகவே எனக்கு பாதி பணம் தருவியா? ஏமாத்தல்லாம் மாட்டியே?”
“இல்லவே இல்லை, இது என் வாக்குறுதி.”
“அது.” என்றார் கிழவர், “என்னை யாருமே ஏமாத்த முடியாது. அதுக்கு முயற்சித்தால் என்ன ஆகும்னு தெரியுமா? இப்போதைக்கு ஒத்துக் கொண்டுவிட்டு, அப்பால் சென்றதும் தப்பிக்கவெல்லாம் முடியாது. நான் என்ன செய்வேன் தெரியுமா? நீ போதும் போதும் என்று கதறும் வரை நான் எனது கொட்டைகளை நசுக்கிக் கொள்வேன்”. இது ஏதோ பெரிய ஹாஸ்யம் போல அவர் சிரித்தார். நான் புன்னகை புரிந்தேன். இது கொஞ்சம் ஓவர்தான் என என் மனதுக்குப் பட்டது.
“ஓகோ, நீ என்னை நம்பலைன்னு தெரியறது. இப்போ பாக்கறயா”? என்றார் அவர்.
அதெல்லாம் வேண்டாம் எனக் கூற நினைத்தேன். ஏதோ அசிங்கமாகச் செய்யப் போகிறார் என அஞ்சினேன். பைய நழுவலாம் எனவும் எண்ணீனேன்.
கிழவரோ கைகளை தனது தொடைகளின் நடுவே கொண்டு சென்று தன் கொட்டைகளை பிடித்து அமுக்கினார்.
என் கொட்டைகளில் பயங்கர வலி ஏற்பட்டது. ஐயோ என கத்தினேன். அழுத்தம் அதிகமாயிற்று. உயிர் போவது போன்ற வலியில் துடித்தேன். நகரவே முடியவில்லை. போலீசார் செய்யும் சித்திரவதைகளில் அதுவும் ஒன்று என்பது அபத்தமாக என் நினைவுக்கு வந்தது. மயக்கம் வந்தது.
அந்தப் பைத்தியம் நல்லவேளையாக தன் கொட்டைகளை விட்டு கையை எடுத்தது. “இது சும்மா ஒரு சாம்பிள்தான்”, என்று கூறியது.
நான் சுதாரிக்க சிறிது நேரம் பிடித்தது. அதிசயத்திலும் அதிசயமாக வலி வந்த ஜோரிலேயே மறைந்தும் போனது.
நான் சொன்னேன், “ஏங்க இது தேவையா? நான் மாட்டேன்னு எங்கே சொன்னேன்? வேணும்னா எழுதித் தரட்டுமா”.
அவர் புன்னகை புரிந்தார்.
“ஓக்கே. சும்மா தமாஷ்தான் பண்ணினேன். உன்னை எனக்கு பிடிச்சிருக்கு. நீ நல்லவன். இப்போ நான் உங்களுக்கு சீரியசா ஒரு விஷயம் சொல்லறேன்.”
திடீரென தன் வலது கையால் புல்தரையை துழாவி மண்ணையும் புற்களையும் சேர்த்து எடுத்தார். தனது உள்ளங்கையை எனக்கு காண்பித்தார். அதில் சேறு கலந்த புற்களும் மணலும் இருந்தன. இடது உள்ளங்கையில் ஒன்றும் இல்லை. இரண்டையும் தராசில் நிறுக்கும் பாவனையில் வைத்தார். மிகைப்பட நடிக்கும் கலைஞன் போல அவர் உரக்கப் பேச ஆரம்பித்தார்.
“எனது இடக்கையில் இருக்கறது ஒன்னோட கோடிக்கணக்கான டாலர்கள். வலது கையிலோ வெறும் சேறு, புல், மணல். இரண்டுக்கும் ஒரே எடை என்பதை நான் அறிகிறேன். ஆனால் எனக்கு பிடிச்சது வலது கையில் இருக்கறது மட்டுமே”.
பார்க்கவே தமாஷாக இருந்தது. அசோகன் போல அவரது ஓவர் ஆக்டிங் இருந்தது. உதடுகள் தேவைக்கதிமாக அசைந்தன. நான் விழுந்து விழுந்து சிரித்தேன்.
அப்புறம் அவர் செய்த காரியம் எனது சிரிப்பை பட்டென நிறுத்தியது. அவரைத் திகிலுடன் பார்த்தேன். வலது உள்ளங்கையில் இருந்ததை என்னமோ சாக்லேட் சாப்பிடுவது போல வாயில் போட்டு மெல்ல ஆரம்பித்தார் அந்தக் கிறுக்கர். பற்கள் இல்லாத ஈறுகளில் அந்த மணல்துகள்கள் என்ன பாடுபடுத்தும் என எண்ணவே பயமாக இருந்தது. எதையும் துப்பாமல் மென்று விழுங்கினார் அவர்.
“எனது அபிமான எழுத்தாளர் சொல்வது போல இங்கே கனவு காண்பவர்கள் நாம் இருவருமே என்றார்” யார் அவரது அபிமான எழுத்தாளர் என அபத்தமாக சிந்தித்தேன். அதைவிட அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. என்னையறியாமலேயே நான் அவரை விரும்ப ஆரம்பித்துவிட்டேன்.
நான் கேலியாகச் சொன்னேன், “மன்னிக்கணும் திகம்பரச் சாமியாரே, நீங்க யாரா வேணா இருந்துட்டு போங்க. ஆனாக்க நான் கொஞ்சம் நார்மலாகவே இருக்க விரும்பறேன். ஒங்களுக்கு அதில் ஏதும் ஆட்சேபணை இல்லையே? சிரிப்பதற்கு மன்னிக்கவும்.”
“திகம்பரச் சாமியாரா நானா, அட இது கூட நல்லாத்தானே இருக்கு” எனக்கூறி அவர் சிரித்தார், “ஆனா பாரப்பா, நாம ரெண்டு பேருமே கனவு காணறவங்கதான்.’
எனக்குப் புரியவில்லை. தேவைக்கதிகமாகவே புருவங்களை உயர்த்தி விட்டேன் போலிருக்கிறது. அவர் விளக்கினார், “ரொம்ப சிம்பிள். நானும் கனவு காணறேன், நீயும் கூடத்தான். அதைத்தான் சொன்னேன்”.
இந்த மனிதரை பார்த்ததிலிருந்து எதுவும் நேராகவே நடக்கவில்லை. இனிமேலும் புத்திசாலித்தனமாக நினைத்து ஒன்றும் ஆவதற்கில்லை. அவரோட போக்கிலேயே போக முடிவு செய்தேன்.
“ஐயா மரியாதைக்குரிய தத்துவ ஞானியே, நீங்கள் கற்பனை செய்யறீங்க. நான் கனவு காணறேன். இரண்டும் வெவ்வேறில்லையா”?
“கூர்ந்து பார்த்தால் வித்தியாசமே இல்லையப்பா. இந்த சுவாரசியமான விஷயம் பற்றி நாம் பின்னொரு சமயம் முழுமையாக விவாதம் செய்யலாம். நீ கனவு காணறேன்னு நான் ஏன் சொன்னேன் தெரியுமா”?
“சொல்லுங்க’
“நீ பல கோடிகளுக்கு அதிபதின்னு கனவு காணறே, பாவம் அப்பா நீ”.
எனக்கு எரிச்சலாக இருந்தது.
“என்ன சொல்லறீங்க தல? மைக்கேல் மேக்னம்னு ஒருத்தர் உண்மையாகவே இருக்கார். நானும் நீங்களும் எவ்வளவு நிஜமோ அவரும் அந்தளவு நிஜம். அவரோட நான் வச்ச பந்தயம் நிஜம். என்னோட மின்னஞ்சல்களோட அச்சுக்காப்பிகளை வேணும்னா காண்பிக்கிறேன். அந்த வங்கியோ எல்லாத்தையும் விட நிஜம்”.
“ஆனாக்க உன்னோட கோடிக்கணக்கான டாலர்கள்தான் நிஜமேயில்லை”
“என்ன சொல்லறீங்க”, என நான் கத்தினேன். ஒவ்வொரு தருணத்திலும் இந்த பைத்தியக்கார மனிதர் ஏதாவது எதிர்பாராததை பேசினார் அல்லது செய்தார்.
அவர் எனது தோள்மாட்டிப் பையை சுட்டிக்காட்டினார்.
“ஒன்னோட செல்பேசியை எடுத்து வங்கிக்காரர்களுடன் பேசவும்” என ஆலோசனை கூறினார்.
என்னிடம் செல்பேசி இருப்பது அவருக்கு எப்படித் தெரியும்? வெறுமனே குருட்டாம்போக்கில சொன்னாரோ. இருக்கும். அப்படின்னாக்க நிஜமாகவே அவர் பைத்தியமா? எனக்கு சரியாக புலப்படவில்லை. அப்படி பைத்தியம் இல்லையான்னாக்க சேறு, புல் எல்லாம் எப்படி சாப்பிட்டார். கிட்டத்தட்ட நிர்வாண கோலத்தில் கற்கள் மீது எப்படி உட்கார முடிகிறது? பின்னால் குத்தாதா? எனக்கு புரியவில்லை. ஒரே குழப்பமாக இருந்தது.
வசியம் செய்யப்பட்டவன் போல செல்பேசியை எடுத்தேன், வங்கியின் எண்ணை அதன் கோட் எண்களுடன் சேர்த்து அழுத்தினேன், கடவுச் சொல்லையும் உள்ளிட்டேன்.
“டோர் டோர் & சன்ஸ் என ஒரு மரியாதைக்குரிய, பணக்களையுடன் கூடிய குரல் பேசியது.
நான் யார் என்பதை விளக்கி, மைக்கேல் மேக்னம் பற்றியும் கூறினேன் (அது தேவையேயில்லை, அவரைத் தெரியாதவர்கள் யார்). எனக்கும் அவருக்கும் இடையே நடந்த எல்லா விஷயங்களையும் விளக்கினேன். அந்தக் குரலுக்குரியவர் எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டார். பிறகு சொன்னார்.
“எல்லாமே உண்மைதான் சார்”. என் அருகில் இருந்த கிழவரைப் பார்த்து கேலியாக புன்னகை செய்தேன்.
“அப்போ என்னோட கோடிக்கணக்கான டாலர்கள்?”
“எல்லாமே ரொம்ப ரொம்ப பத்திரமா ரொம்ப ஃபிக்சடா இருக்கு”. என்னமோ சரியில்லை என என் மனதுக்குப் பட்டது.
“ஃபிக்சடா? அப்படீன்னா?”
“அப்படித்தான் சார். உங்க பணம் பத்திரமா உறைநிலையில் இருக்கு”.
நான் உறைந்து போனேன்.
“என்ன சொல்லறீங்க?”
“உங்களுக்கு தெரியாதுன்னு நினைக்கிறேன். எங்க கிட்டே பலவிதமான கணக்குகள் உண்டு. மேக்னம் உங்களுக்காக உருவாக்கின கணக்கு ஒரு மாதிரியான ஒரு வழிப்பாதை. இதுல பணத்தைப் போடத்தான் முடியும், வெளியே எடுக்க முடியாது. விரும்பினால் நீங்கள் கூட சில கோடி டாலர்களை அதில் போடலாம்”
“இதென்னய்யா பேத்தலா இருக்கு”?
“எங்களிடம் வெவ்வேறு வகை வாடிக்கையாளர்கள் உண்டு. அவர்கள் கேட்கும் முறையில் கணக்குகளை செட் அப் செய்வதே எங்கள் கடமை. மேக்னம் அவர்கள் இக்கணக்கை உங்களுக்காகவே உருவாக்கினார்”.
“ஆனால் சில தருணங்களில் அதிலிருந்து பணம் எடுக்க வழி செஞ்சிருப்பாங்களே”?
“கண்டிப்பாக, அது இல்லாமலா”
“எப்பப்போ பணம் எடுக்கலாம்”? என நான் ஆவலுடன் கேட்டேன்.
“உங்கள் மரணத்துக்கு பின் பணம் முழுக்க மேக்னத்தையே சேரும், வேறு ஏதாவது விவரம் வேணுமா”?
செல்பேசி இணைப்பை துண்டித்து எரிச்சலுடன் அதை கீழே எறிந்தேன்.
உட்கார்ந்திருந்த கிழவர் கையைக்கூட ஊன்றாமல் சட்டென ஸ்ப்ரிங் போல எழுந்து, செல்பேசியை எடுத்து என்னிடம் கொடுத்தார்.
மைக்கேல் மேக்னத்துக்கு டெலிஃபோன் செய்து அவரிடமும் பேசினேன். ஜூரிக் வங்கிக்காரருடன் பேசியதைக் கூறிவிட்டு அவரிடம் கத்தினேன், “என்ன எழவு வேலை சார் இது”?
நான் மேலும் திட்டிய அதிகப்படியான வசவுகளை பொறுமையாகக் கேட்டுவிட்டு அவர் சொன்னார், “என்னப்பா அவ்வளவு சுலபமா கோடிகள் கிடைக்குமா? அவற்றுக்காக உழைக்க வேண்டாமா?” நான் மௌனமாக இருந்தேன்.
“வேறு ஏதேனும் சொல்லணுமா?”, அவர் கேட்டார்.
“இல்லை, நன்றி”. செல்பேசியை பைக்குள் திரும்ப வைத்தேன்.
பிறகு சிரிக்க ஆரம்பித்தேன். வயிறு நோவ சிரித்தேன். பைத்தியக்கார கிழவரும் சிரிப்பில் கலந்துக் கொண்டார்.
அந்த வழியாகச் சென்ற சிலர் எங்களை அதிசயத்துடன் பார்த்தனர். எங்கள் இருவரில் யார் உண்மையான பைத்தியம் என்பதில் அவர்களுக்கு சம்சயம் என நினைக்கிறேன். சிரிப்பு மெதுவாக அடங்கியது, இருப்பினும் அவ்வப்போது களுக் சிரிப்புகள் வந்தன.
பித்தர் கூறினார், “எனது அபிமான எழுத்தாளர் சொல்லறது போல..”, நான் ரெடியாக இருந்தேன்.
“விஷயம் இப்படித்தான் முடியும்”, நான் எடுத்துக் கொடுத்தேன்.
“அனாமத்தா வந்தது, அனாமத்தா போயே போயிந்தி”, என அவர் முடித்து வைத்தார்.
ஒரு நிமிட மௌனத்துக்கு பிறகு அவர் சொன்னார்,
“இப்போ ஒன்னோட மனப்பாரம் குறைந்திருக்குமே”.
“ஆமாம். ஒரு வகையிலே பார்த்தால் அப்பணம் என்னோடதே அல்ல. ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தில் அதன் தரவுகளை ஒரு வங்கிக் கணினியின் வன்தகட்டின் ஒரு மூலையில் சிறை வச்சிருக்காங்க. அதன் இருப்பு என்னைப் பொருத்தவரை ஒரு கனவுதான். கவித்துவமா சொல்லணும்னாக்க இந்தக் கனவு மேக்னம், நீங்கள், நான் ஆகியோர் ஒன்றாக கண்ட கனவு”.
பித்தர் அதை ஆமோதித்தார். தூரத்து மேகங்களைப் பார்த்த வண்ணம் அவர் சொன்னார்,
“வாழ்க்கை என்பதே முடிவுறாத மகா கனவுதான். அந்த பெரிய கனவுக்குள் நீயும் நானும் குட்டிக் கனவுகளைக் காண்கிறோம்”.
அவர் கூறுவது கிட்டத்தட்ட எல்லாமே புரிவது போல ஒரு தோற்றம் வந்தது. அது சிறிது நேரத்துக்குத்தான், பிறகு பழையபடி புரியாத நிலைதான். இரவு மெதுவாகப் பரவ ஆரம்பித்தது. காற்றில் குளிர் அதிகமாயிற்று.
பித்தர் சொன்னார், “நல்லா பொழுது போச்சு. ஒரு சின்ன செலிப்ரேஷன்?”. அவரை ஒரு கேள்விக்குறியுடன் பார்த்தேன்.
தன் பின்பக்கம் கைகளை கொண்டு சென்று பிறகு முன்னே கொண்டு வந்தார். அவர் கையில் இரண்டு பேப்பர் கப்புகள் இருந்தன. அவற்றில் சூடான ஃபில்டர் காப்பி. நல்ல நறுமணத்துடன் கூடிய காப்பி. அவர் இதை எப்படி நிகழ்த்தினார் எனத் தெரியவில்லை. அதற்காகக் கவலையும் படவில்லைதான். இரண்டு பேரும் மௌனமாக காப்பியை உறிஞ்சினோம்.
ஒரு மெல்லிய எல்லைக்கோட்டுக்கு முன்னால் நிற்பது போன்ற உணர்வு எனக்கு. கோட்டின் அப்பக்கத்தில் என்ன இருக்கிறது என்று கூட தெரியவில்லை. அது ஒரு கனவுகளின் உலகமாக இருக்கலாம், அல்லது அடி தென்படாத ஆழமான பகுதியாகக் கூட இருக்கலாம். அங்குதான் அவர் நிற்பதாக எனக்குப் பட்டது. அவர் என்னை அழைப்பதாக உணர்ந்தேன். தயக்கத்துடன் நின்றேன். அப்பகுதி என்னை மிகவுமே கவர்ந்தது.
சட்டென தற்போதைய உண்மை நிலைக்கு திரும்பினேன். அதாவது நான் உண்மை என நினைத்த நிலைக்கு. அந்த பித்தர் என்னை கூர்ந்து கவனித்தார். அவர் உதட்டில் லேசான புன்னகை.
“நன்றி, ஆனால் வேண்டாமே” நான் என்ன சொல்கிறேன் என்பது எனக்கே புரியவில்லை.
காப்பியை குடித்து முடித்தோம். பித்தர் சொன்னார்,
“நமது சந்திப்பு நன்னாவே போச்சு. உன்னை எனக்கு பிடிச்சிருக்கு. எப்போ வேணும்னாலும் நீ என்னை சந்திக்கலாம்”. அவர் நட்பை பேசாமல் ஏற்றுக் கொண்டேன். ஏன் என்பது இன்றுவரை எனக்குத் தெரியவில்லை.
“எங்கே, எப்போ நாம பாத்துக்கிறது” என என்னையறியாமலே உடனேயே கேட்டேன்.
“அது பத்தியெல்லா நீ கவலைப்படாதே. என்னை சந்திக்கணும்னு ஒனக்குத் தோணினால் போதும். மீதி விஷயங்கள்ளாம் தானே நடக்கும்”, என்றார் அவர். இது ஒரு விசித்திரமான பதில். வெளிச்சம் வேகமாக மறைந்தது. நாங்கள் எழுந்து நின்றோம். திடீரென அவர் என்னைக் கட்டி அணைத்தார். அவரது அழுக்கான உடலிலிருந்து கெட்ட வாசனையை என்னையறியாமலேயே எதிர்பார்த்திருந்தேன் நான். என்ன ஆச்சரியம்? அவர் உடலிலிருந்து மல்லிகை மணம் வீசியது. இனிமையாக அது இருந்தது. எனக்கு அதே சமயம் குழப்பமாகவும் இருந்தது.
அவருடன் கைகுலுக்கினேன். அவர் பெயரைக்கூட அதுவரை கேட்கவில்லை என எண்ணினேன். அவர் நான் நினைப்பதை உடனே உணர்ந்தார். உரக்கச் சிரித்து விட்டு நான் கேட்காத கேள்விக்கு பதிலளித்தார்.
“இன்னிக்கு என்னோட பேர் ஜெஸ்டஸ். நாளைக்கு அது ஜெஸ்டிகஸ்னு ஆகலாம், அல்லது லாஃபன்ஷ்டைன், அல்லது பேகஸ், பேக்ஸ்டன், பேகின்ஸ்கி, பாக்ளியேர், என்று முடிவில்லாமல் மாறலாம். பேசாம ஒண்ணு செய்யேன். ஒவ்வொரு முறையும் என்னை சந்திக்கற போதும் புதுப்புது பெயரால என்னைக் கூப்பிடேன்”.
விசித்திரமான இந்த மாலைப்பொழுதுக்கு அது ஒரு சரியான முடிவாகவே எனக்குப் பட்டது. சுற்றும் முற்றும் பார்த்தேன். இரவு முழுமையாக பரவியிருந்தது. பார்க்கில் வெளிச்சம் கம்மி. கிழவர் கூறினார்,
“இப்போது உடனே சிறுநீர் கழிக்கணும், முட்டிண்டு வருது”. நான் தலையை அசைத்தேன். அவர் ஒரு மரத்தின் பின்னால் சென்றார்.
வேண்டுமென்றே நான் அவரிடம் என் பெயரைக் கூறவில்லை. அவர் மரத்தின் பின்னாலிருந்து குரல் கொடுத்தார்.
“குட் நைட் வைட் ஹார்ட் (Wide Heart). சிரமத்தை பாக்காம காலி கப்புங்களை எடுத்து குப்பைத் தொட்டியில் போடுறு. எனக்கு குப்பை போடறது பிடிக்காது”.
என் பெயரை அவர் அறிந்திருப்பது எனக்கு வியப்பாக இல்லை. லாஜிக்கலாகவே இருந்தது. மேக்னம், டோர் & டோர் வங்கி ஆகியவற்றை அறிந்திருப்பவருக்கு என் பெயர் தெரிவதில் என்ன அதிசயம்? கணினி வல்லுநர்கள் மசங்கல் தத்துவம் என்று கூறுவார்கள். அது மென்பொருள் விஷயங்களில் வரும். ஆனால் இந்த மாலைப்பொழுதோ மசங்கலையும் மீறி கசங்கலுக்கும் சென்றுவிட்டது. அந்தப் பித்தர் வெளியே வருவார் என காத்திருந்தேன். அவர் வரவேயில்லை. மரத்தின் பின்னால் போய் பார்த்தால் அங்கும் இல்லை. மாயமாக மறைந்திருந்தார்.
விவரிக்கமுடியாத ஒரு குதூகல உணர்வு என்னைச் சூழ்ந்தது. காலி கப்புகளை குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு பார்க்கின் வாசலை நோக்கி சீட்டி அடித்தவாறே நடந்தேன்.
(தொடரும்)
(ஆன்லைனில் ஜெஸ்டஸ் ஆங்கில மூலத்தை வாங்க இங்கே செல்லவும்).
அன்புடன்,
டோண்டு ராகவன்
7 comments:
//மசங்கல் தத்துவம்// FUZZY LOGIC ஆ? மொழி பெயர்ப்பு அருமை.
@அமர பாரதி
நன்றியெல்லாம் சுஜாதாவுக்கே உரித்தானது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நான் தங்கள் மொத்த மொழிபெயர்ப்பையும் குறுப்பிட்டேன். அந்த ஒரு வார்த்தையை மட்டுமல்ல.
இவ்வளவு மொன்னையான மொழியில் முழு புத்தகத்தையும் படிப்பது வாசகனுக்கு கடுமையான அயர்ச்சியை தரும். மொழியை கொஞ்சம் லூசாக்குங்கள்
Sir,
Questions about translation:
1. When translating should the translator attempt to bring the same
- style (ex: lengthy sentences and words)
- tone
- feelings
of the author?
2. If there is no equivalent word or phrase what the translator should do?
///நமது சந்திப்பு நன்றாகவே போயிற்று. உன்னை எனக்கு பிடித்திருக்கிறது. எப்போ வேணும்னாலும் நீ என்னை சந்திக்கலாம்”.///
Sir,
நானும் ஒரு மொழி பெயர்ப்பாளர் என்கிற முறையில் ஒரு சின்ன suggestion.
ஒரே நேரத்தில் இப்படி உரையாடலை colloquial மற்றும் Standard conversation ஆகவும் மாற்றினால் படிக்கும் போது தடையாக இருக்கிறது.
கவனிக்க.
மற்றபடி, ஒரே ஒரு முறை மட்டும் படித்து பார்த்து விட்டு போட்டு விட்டீர்களோ?
-வித்யா
நன்றி வித்யா. நீங்கள் சொல்வது சரிதான். அதை ஏற்றுக் கொள்கிறேன். இப்போது உரையாடல்களை பேச்சுத் தமிழில் மாற்றி விட்டேன். பார்க்கவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment