11/24/2009

சூரியின் ஜெஸ்டஸ் - வாரத்தின் எட்டாம் நாள் - 1

இரண்டாம் அத்தியாயம் மிகவும் பெரியதாக உள்ளதால் அதை சில பகுதிகளாக பிரிக்க எண்ணுகிறேன். மூன்று பகுதிகள் வரும் என எண்ணுகிறேன்.

முதல் அத்தியாயம் இங்கே


அத்தியாயம் - 2
வாரத்தின் எட்டாம் நாள் (பகுதி - 1)

முந்தைய அத்தியாயத்தில் நான் சொன்ன விஷயங்கள் நடந்து ஒரு மாதமாகிய நிலையில் சைபர்கஃபேயில் இருந்தேன். எனது மின்னஞல் பெட்டியைத் திறந்தால் அதில் லாஃபன்ஷ்டைன் என்பவரிடமிருந்து ஒரு அஞ்சல் வந்திருந்தது. “என்னம்மா கண்ணு, பாத்து ரொம்ப நாளேச்சே? சௌக்கியமா”? என்று அதில் கேட்டிருந்தது. முதலில் அது யார் என்பது புரியவில்லை. மறுபடி படித்தேன். அடியில் பிராந்து பிடிச்ச தொப்பிக்காரன் என்று கையெழுத்து இருந்தது. சட்டென அன்று பூங்காவில் சந்தித்த அந்த விசரர் நினைவுக்கு வந்தார். அப்புறம்தான் தனது வெவ்வேறு பெயர்களை அவர் கூறியது நினைவுக்கு வந்தது. அவற்றில் இப்பெயரும் ஒன்று என்பதும் நினைவுக்கு வந்தது.

எனக்கு ஒரே புதிராக இருந்தது. முதலில் இணைய இணைப்பை எங்கிருந்து பிடித்தார்? அப்படியே வந்தாலும்என்னுடைய மின்னஞ்சல் முகவரி அந்த திகம்பர விசரருக்கு எப்படி கிடைத்தது?

ஒரு மாதத்துக்கு முந்தைய அந்த நினைவுகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்தன. நான் வேண்டுமென சொல்லாமலேயே மறைத்த எனது பெயரை அவர் அறிந்திருந்தார். அதே கசங்கல் தத்துவப்படியே ஏன் எனது மின்னஞ்சலை அவர் அறிந்திருக்க முடியாது? ஏதோ மாயம் செய்து இரு காப்பி கோப்பைகளை வரவழைத்தவரால் இதுகூட செய்ய முடியாதா என்ன? இவ்வாறெல்லாம் யோசித்ததில் அவரால் எனக்கு மின்னஞ்சல் அனுப்ப முடிந்ததில் ஆச்சரியமே இல்லை என்ற முடிவுக்கு வந்தேன்.


லாக்-ஆஃப் செய்துவிட்டு வெளியே வந்தேன். சூரியன் பளீரென காய்ந்து கொண்டிருந்தான். மணியைப் பார்த்தேன். முற்பகல் 11 மணி. ஒரு உந்துதலில் அவரைத் தேட முடிவு செய்தேன்.

இதற்கு முன்னால் சுமார் நாற்பது முறைகள் நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் என் கண்களில் பட்டவரை இத்தருணம் நானே தேடிப்போக வேண்டியிருக்கும் என மனதில் பட்சி சொல்லியது.

மனம் போன போக்கில் நடந்தேன். கடைகளின் கண்ணாடி ஜன்னல்கள், சாலை போக்குவரத்து ஆகியவற்றை பராக்கு பார்த்துக் கொண்டே சென்றேன். ஒரு பஸ் நிறுத்தத்தில் நின்றேன். பக்கத்திலிருந்தவர் வைத்திருந்த செய்தித் தாளில் பதினோராம் மாதம் பதினோராம் தேதி என்று இருந்தது.அப்போது சொல்லி வைத்தாற்போல 11-ஆம் எண் பஸ் வந்தது. அதில் ஏறினேன். அந்த வழித்தடத்தின் கடைசி நிறுத்தத்துக்கு டிக்கெட் வாங்கினேன்.

பஸ் நின்றதும் இறங்கினேன். சுற்றும் முற்றும் பார்த்தேன். புறநகரில் கும்பலோ அதிக கட்டிடங்களோ இல்லாத இடத்துக்கு வந்திருந்தேன். இருக்கும் கட்டிடங்களும் அங்குமிங்குமாக சிதறிக் கிடந்தன. அப்படியே தெருவோரமாக ஒரு கிலோமீட்டர் நடந்தேன். ஒரு சிறு குன்று தென்பட்டது. குன்றடிவாரத்தில் ஒரு புளியமரம் இருந்தது. அதன் கீழே ஒரு பாறை. அதன்மேல் உட்கார்ந்து சுற்றுமுற்றும் ஒரு இலக்குமில்லாமல் வேடிக்கை பார்த்தேன்.

எலும்பும் தோலுமாக இருந்த ஒரு கலப்பின நாய் தெருவின் அடுத்த பக்கத்தில் யாரையோ தேடுவது போல நின்று அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருந்தது. என்னைப் பார்த்ததுமே நூல்பிடி கணக்காக என்னை நோக்கி தெருவை கிராஸ் செய்து ஓடி வந்தது. அவ்வழியே சென்ற காரை மயிரிழையில் தவிர்த்து வந்தது பற்றி அது கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. என் காலை முகர்ந்து பார்த்து என்னை சுற்றி சுற்றி வந்தது. என்னைப் பார்த்து குரைத்தது. நான் உள்ளங்கையை நீட்ட அதை நக்கியது. மறுபடியும் குலைத்தது. பிறகு மறுபடியும் தெருவை கிராஸ் செய்து எதிர்ப்பக்கத்தில் நான் அதை முதலில் பார்த்த இடத்திற்கே சென்றது. அங்கிருந்து என்னைப் பார்த்து குரைத்தது. நானும் தெருவை கடந்து அதன் அருகில் சென்றேன். உடனே ஐம்பது மீட்டர் தூரம் ஓடி அங்கிருந்து என்னைப் பார்த்து குரைத்தது. தெருவின் அப்பக்கம் அங்குமிங்குமாக செடி கொடிகள் மரங்கள் ஒரு சிறு காடுபோல இருந்தன. மனித நடமாட்டமே இல்லை. அந்த நாய் என்னை இவ்வாறே வழிநடத்திச் சென்றது. அவ்வப்போது நான் அதைத் தொடர்கிறேனா எனப்தையும் பார்த்தது. மரங்கள் அடர்த்தியாக இருந்த பகுதிக்கு இப்போது நாங்கள் வந்திருந்தோம்.

கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர்கள் நடந்திருப்பேன் என எனக்குப் பட்டது. கடைசியில் ஒரு மூங்கில் புதர் தென்பட்டது. அங்கு வந்ததும் நாய் மூன்று முறை குரைத்தது.

நானும் நாயின் அருகாமைக்கு சென்றேன். அங்கு இருந்த ஒரு பெரிய பாறையின் மேல் அந்த விசர் கிழவர் பத்மாசனத்தில் இருந்தார். நாய் அவரை களிப்புடன் சுற்றியது, தனது சந்தோஷத்தை ப்ளொள் என்று குரைத்து வெளிக்காட்டியது. தான் ஏதோ சாதித்த திருப்தியில் அவரை வலம் வந்தது.

கிழவர் என்னைப் பார்த்தர், உரக்கச் சிரித்தார்.

நான் அபத்தமாக உணர்ந்தேன். மூங்கில்களால் சூழப்பட்ட இந்த இடத்தில் உள்ள அப்பாறையில் அமர்ந்திருந்த திகம்பரக் கிழவரிடம் எனக்கு என்ன வேலை இருக்க முடியும்? முட்டாள்தனமாக பேச்சை ஆரம்பித்தேன். “ஒங்களோட மெயில் கெடச்சுது”. சங்கடமாக உணர்ந்தேன்.

“கவலைப்படாதேடா கண்ணா, நீ இங்க இருக்கற காட்டுலே ஒன்னை யாரு பார்க்கப் போறாங்க"? என்று என் நண்பன் ராக் வேன் தூரத்திலிருந்து எனக்கு சொல்வது போல ஒரு உணர்ச்சி. நான் சொன்ன வாக்கியமும் இலக்கண சுத்தமாகத்தானே இருந்தது என மனதை தேற்றிக் கொண்டேன்.

ஒரு மாதம் முன்னால் பூங்காவில் உணர்ந்தது போலவே இங்கும் நான் நிஜத்துக்கும் மாயத் தோற்றத்தும் இருப்பதாக உணர்ந்தேன். சற்றே குமட்டியது.

எனது எண்ண ஓட்டங்களை லாஃபன்ஷ்டைன் புரிந்து கொண்டார்.

“ரொம்பக் கஷ்டப்படாதே அப்பனே. முதல் முறையா ரம் குடிப்பது போலத்தான்   இருக்கும். போகப்போக பழகிடும். கவலைப்படாதே”.

அந்த நாயை தடவிக் கொடுத்தார். மீண்டும் அது களிப்புடன் ‘ப்ளொள்’ எனக் குரைத்தது.“ஒண்ணு தெரியுமா, இவனை உன்னை அழச்சுண்டு வர அனுப்பினேன்.சூரப்பயல்,தன்னோட வேலையை சரியாத்தான் செஞ்சிருக்கான்”.

“ஓக்கே ஸராமா. உன் வேலை இப்போதைக்கு முடிஞ்சது” என்று நாயிடம் சொன்னார். அதுவும் சந்தோஷமாக வாலை ஆட்டிக் கொண்டே பிஸ்கட்டை நோக்கிப் பாய்ந்தது. கிழவர் மீண்டும் உரக்கச் சிரித்தார். அதனால்தான் அவருக்கு லாஃபன்ஷ்டைன் என்ற பெயரும் வந்தது என நினைத்து கொண்டேன். என்னை நோக்கிக் கூறினார், “சரி இங்கே வந்து என் பக்கத்திலே உட்கார். நல்ல சூரிய வெளிச்சம், நீல வானம், ஒசந்த மரங்கள், பசுமையா புற்கள், குளுமையா காத்து. வேற என்ன வேணும் ஒனக்கு? ஒக்காரு, ரிலேக்ஸ் பண்ணு”.

சங்கடமாக புன்னகை செய்தேன். அவரிடமிருந்து சில அடிதூரத்தில் அதே பாறை மேல் அமர்ந்தேன். நிஜமாகவே சுற்றிலும் எழில் நிரம்பிய காட்சிகள்தான். அவற்றை அனுபவித்தவாறு அமர்ந்தேன்.

முதலில் உணர்ந்த அன்னிய சூழ்நிலை மெதுவாக விலக ஆரம்பித்தது. வெகு தூரத்திலிருந்து ஒரு குயில் கூவியது. அவ்வளவு சிறிய பறவைக்கு அப்படி ஒரு குரலா? இவ்வளவு தூரம் தளிவாகக் கேட்கிறதே என எண்ணினேன். அக்குரல் காடு முழுவதும் பரவியது.

கிழவருடன் பேசணும், ஆனால் என்ன பேசுவது எனப் புரியவில்லை. ஒரு கிறுக்கரிடம் என்னதான் பேசுவது? சொல்லப்போனா, நானே ஒரு வகையிலே லூசுதானே. பாருங்களேன், இம்மாதிரி நார்மலான வாழ்க்கையை விட்டுவிட்டு இந்த காட்டுப் பிரதேசத்துக்கு வந்து அவர் பக்கத்துல வந்து உட்கார்ந்திருக்கிறேன். எனக்கும் வேறு வழியில்லைதான். ஒரு விதமான உந்துதல்தான் என்னை இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. எனது பிரத்தியேக நகைச்சுவை உணர்வு என்னை இந்த இடத்தில் கட்டிப்போட்டு வைத்துள்ளது என்றும் கூறலாம்.

கிறுக்கரோ இல்லையோ, ஜெஸ்டஸ் மற்றவர்கள் உணர்வுகளை அழகாகவே புரிந்து கொண்டார். எனது நினைவுகளை அப்படியே துல்லியமாக படிக்கிறார் என்றே தோன்றியது. அவர் பேச ஆரம்பித்தார். “என்னப்ப வைட் ஹார்ட், என்னை என்ன வேணுமானாலும் கேள்வி கேள். நான் தப்பா எடுத்துக்க மாட்டேன்”

எனக்கு நிம்மதியாக இருந்தது. அவரை ஓரக்கண்ணால் பார்த்தேன். போன முறை பூங்காவில் பார்த்தபோது அவருக்கு ரொம்பத்தான் வயசான மாதிரி இருந்தது. ஆனால் இப்போதோ அவரது வயதை அறுபதுக்கு மேல் மதிப்பிட இயலாது.துணிந்து பேச ஆரம்பித்தேன். ஆனால் ஆரம்பமே செயற்கையாக இருந்தது.

“எல்லோரும் நீங்க பைத்தியம்னு சொல்றாங்க. ஆனாக்க எனக்கு அப்படித் தோணல.” கொஞ்சம் யோசித்து, தயக்கத்துடன் சொன்னேன், “கொஞ்சமா கிறுக்குன்னு சொல்லலாம்”. பிறகு, “அப்படிப் பாத்தாக்க எல்லோருமே ஒருவகையில கிறுக்குதான்”.

அவர் சிரித்தார். இந்த சிரிக்கறதை அடிக்கடி சொல்ல வேண்டியிருக்கு, ஏனென்றால் ஒவ்வொரு முறையும் அவர் உரக்கவே சிரித்தார். அதை சொல்லவில்லையென்றால் அவருக்கு அநீதி செய்தவனாவேன். அவர் சிரித்தபோது இன்னொரு ஷாக் எனக்கு. அவரோட முப்பத்திரண்டு பற்களும் பளீரென மின்னின. போன தடவை வெறுமனே ஈறுகள் மட்டும்தான். ஆக, அவர் ஒரு புது பொய்ப்பல் செட் வாங்கியிருக்கிறார், அல்லது யாராவது நல்லவர் அதை அவருக்கு வாங்கி தந்திருக்க வேண்டும்.

அவர் சொன்னார், “நீ சொல்லறதும் சரிதான். ஒரு வகையில் பாத்தாக்க நான் நெஜம்மாவே பைத்தியம், கிறுக்கு, பித்தன், விசரன்தான். அது பத்தியெல்லாம் நான் அலட்டிக்கிறதே இல்லை. என்னை பொருத்தவரைக்கும் எல்லாமே கனவுதான். அதுவும் லிமிட்டு எதுவும் இல்லாத கனவுன்னா ஜாலிதான். அப்போ யதார்த்தமும் கனவும் ஒழுங்கா ஒண்ணு சேரும். அதுங்களுக்கு முழு சுதந்திரம். ரொம்பவும் தமாஷாகத்தான் இருக்கும்!” அவர் கெக்கே கெக்கே என சிரித்தார்.

இதுதான் சான்சுன்னு நான் சீரியசாகவே சொன்னேன், “ஆனாக்க நீங்க உண்மையையும் எதார்த்தத்தையும் எப்படி கண்டுக்காம விட முடியும்? எப்பவுமே கற்பனைலே வாழ்ந்தாக்க பயித்திரக்கார ஆஸ்பத்திரிலதான் எல்லாமே முடியும். ஆனா ஒங்களை சொல்லல”.

அவர் என்னை விழித்துப் பார்த்தார். அவரது கண்கள் நெருப்புத் துண்டங்கள் போல ஜொலித்தன. திடீரென எனக்கு இரண்டடி முன்னால் ஒரு பெரிய சுவர் நிற்பதுபோல உணர்ந்தேன். அது முடிவில்லா நீண்ட சுவர். மேலேயோ, இடப்பக்கமோ, வலப்பக்கமோ அதன் முடிவைக் காண முடியாத கான்க்ரீட் சுவராக அது தென்பட்டது. எவ்வளவு காலம் அதன் முன்னாலும் நின்று முயற்சித்தாலும் அதைத் தாண்டிச் செல்ல முடியாது என்றே பட்டது.

மெதுவாக அவரது கண்கள் மிருதுவாயின, மென்மையாகவும் இரக்கம் வாய்ந்ததாகவும் மாறின. அவர் பேசியபோது தேவதைகள் பாடுவது போன்ற உணர்வு.

“கன்ணா, சீரியசா பேசிண்டிருந்தால் பேசிண்டே இருக்கலாம். அதுக்கு முடிவே கிடையாது. அதுவே போதையாயிடும். அதை ஒருபோதும் செய்யாதே. இதை ரொம்ப குறைச்சலான பேர்தான் புரிஞ்சிண்டிருக்காங்க. நீ நீயாகவே இரு, நான் செய்யறதை பார், சந்தோஷமா இருப்பே. அதில்லாம பகுத்தறிவு வாதங்களுக்கு போனாக்க உனக்குத்தான் எப்பவுமே தொல்லை”.

நான் அதை ஜீரணிக்க ஒரு நிமிடம் கொடுத்தார். பிறகு புன்னகையுடன் மேலே கூறினார், “இப்ப மட்டும் ஒரே ஒரு முறை கற்பனை பற்றிய ஒன்னோட ஆட்சேபணைக்கு பதில் சொல்லறேன். மத்தப்படி இது பத்தியெல்லாம் நான் பேசறதேயில்லைங்கறதை மட்டும் புரிஞ்சுக்கோ. கவனமாக் கேட்டுக்கோ”

மறுபடியும் கொஞ்சம் நிறுத்தினார். நான் சாவதானமாக மரங்களையும் வானத்தையும் பார்த்தவண்ணம் இருந்தேன். தனது கூவலால் குயில் மறுபடியும் காடு முழுவதையும் களிப்பில் ஆழ்த்தியது. அக்கூவலை கவனமாக கேட்டார் அவர். பிறகு இன்னொரு முறை சிரித்துவிட்டு, தான் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார்.

“இப்ப இப்படி யோசியேன். திடீர்னு ஒரு நாளைக்கு பணம் தேவைப்படறது. அன்னிக்கு பேங்குக்கு போகணும்னு ஒன்னோட மனசு நெனச்சுக்கிறது. உடனேயே பாங்குக்கு போறதுக்கு முன்னாலே என்னென்ன செய்யணும்னு மனசு ஒத்திகை பாக்கறது இல்லையா? காலைலே நேரத்துக்கு எழுந்துக்கணும், காலைக் கடன்களை முடிக்கணும். ஹோட்டல்ல போய் டிபன் பண்ணனும், பாங்கு காலை பத்து மணிக்கு திறக்கும். பெரிய கியூ வரதுக்கு முன்னாலேயே போயிடணும்னு வேறே நினைச்சுப்பே. அதுக்கு போக பஸ்ஸை வேற பிடிக்கணும். அதுக்காக பஸ் ஸ்டாப்புக்கு வரணும். பஸ்லே ஏறணும். டிக்கெட் வாங்கணும். சரியான ஸ்டாப்புல எறங்கணும்.

பாங்குலே போய் பணம் எடுக்கிற ஃபாரம் எடுத்து தொகையை நிரப்பி டெல்லர்கிட்ட தரணும். இதெல்லாம் நீ வீட்டிலே குளிக்கச்சயே நெனச்சுப்பே. அப்புறம் வீட்டுக்கு வந்ததும் பணத்தை பெட்டியில வச்சு பூட்டுவே. இப்படியே சொல்லிண்டு போகலாம், ஆனால் இது போதும்னு நினைக்கிறேன். இப்ப சொல்லு, இதெல்லாம் கற்பனை இல்லேன்னா வேற எதுதான் கற்பனை”?

ஏதோ எங்கேயோ குத்தியது போல நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன். அவர் சொன்னது அத்தனையும் ரெண்டு நாள் முன்னாடி சிறிதும் பிசகாம நடந்தது. கற்பனை பற்றி அவர் சொன்னதெல்லாம் இப்போது சரியாகவே பட்டன. இருந்தாலும் இன்னும் ஒரு ஆட்சேபணை என்கைவசம் இருந்தது. “ஆனாக்க மிஸ்டர் ஜெஸ்டஸ், நீங்க சொல்லறது நான் நடக்கவேண்டியதை பற்றி திட்ட்ம் போட்டது.  மனம்னு நீங்க சொன்னாலும் சரி, மூளைன்னு சொன்னாலும் சரி, அதுக்கு பிளான் போடறதில் திறமை இருக்குத்தானே”.

“இந்த மாத்ரி வார்த்தையோடல்லாம் விளையாடாதே அப்பனே. முதல்ல இந்த மிஸ்டர் போடறதை நிறுத்து. என்னை பாகஸ், ஜெஸ்டஸ், லாஃபன்ஷ்டைன், அங்கிள், அப்பச்சி அப்படீன்னு ஒனக்கு தோணற மாதிரி கூப்பிட்டுக்கோ. எனக்கு ஒண்ணும் ஆட்சேபணை இல்லை.  இப்போ நீ சொல்லற திட்டம் போடறது, நினைச்சுக்கிறது, கனவு காணறது, கற்பனை செய்யறது எல்லாத்துக்குமே ஒரே அடிப்படைதான். நினைச்சுக்கறது கனவு காணறது ரெண்டுமே ஒன்ணுதான். என்ன, முதல்ல சொன்னதுக்கு நீ கண்ணை திறந்து வச்சுப்பே, ரெண்டாவதுக்கு கண்ணை மூடிப்பே, அவ்ளோதான்”.

நமது வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கத்தைப்பற்றி அவர் இவ்வாறு சொல்வது என்னை சற்றே பாதித்தது.

நான் சொன்னேன், “கனவு காணறது, கற்பன செய்யறது நினைக்கறது இவை எல்லாம் வெவ்வேறு பாகஸ். நினைக்கறதும் திட்டம் போடறதும் தினசரி வாழ்க்கையிலே இருக்கும் நிஜங்களோட தொடர்போட கூடியது. அப்படியில்லாம இங்கேயே உட்கார்ந்து கனவு கண்டுண்டிருந்தா நிஜங்கள் கடைசியா ஒங்களைத் தாக்கும். அந்த நிஜங்களிலே முதலாவதா பசியைச் சொல்லலாம். மீதி நிஜங்கள் எல்லாம் தானாகவே அது பின்னாலே வரும்”. அசைக்க முடியாமல் வாதம் செய்ததாக நான் நினைத்துக் கொண்டேன். பெருமையாக புன்னகை வேறு புரிந்தேன்.

லாஃபன்ஷ்டெஇன் கொஞ்ச நேரம் பேசாமல் இருந்தார். பிறகு சொன்னார், “நான் ஏற்கனவே ஒங்கிட்ட சொன்னாப்போல இந்த விவாதம் இப்போ முடிவடையறது. அப்படி இல்லேன்னாக்க நாம பேசிண்டே இருந்தாலும் அது முடியாது. அதனால ஒரு பிரயோசனமும் இல்லை”.

எனக்குக் கொஞம் ஏமாற்றம்தான். ஆனால் அதே சமயம் அவர் சொன்னது விசித்திரமாக இருந்தது. ஏதோ நடக்கப் போவதை சூசகமாக உணர்த்தியது.

அவர் சீரியசாகவே சொன்னார், “இந்த வாழ்க்கையே ஒரு அபத்தம்தான். இங்கே ஒன்னோட புத்தியை காப்பாத்திக்கணும்னா வாழ்க்கையை எதிர்நீச்சல் போடாம அதனோட போக்கிலேயே அபத்தமா வாழ வேண்டியதுதான்”. அவர் உரக்கச் சிரித்ததில் எனக்கு தூக்கிவாரிப் போட்டது. என்னை மேலும் மேலும் புதிரில் ஆழ்த்த விரும்புவது போல இருந்தார் இந்தப் புதிர்க் கிழவர். பகுத்தறிவோட பேச அனுமதி இல்லை, ஆகவே நல்ல பதில் இல்லாததால் பேசாமல் உட்கார வேண்டியிருந்தது.

இப்போ அவர் சொன்னார், “எப்படி அபத்தமா வாழறதுங்கறதை நான் இப்போ காண்பிக்கிறேன். ஒரு சின்ன கேம் விளையாடுவோமே”.

“என்ன பண்ணப் போறீங்க”?

“கற்பனையா விளையாடறது. இதுல எண்ணிக்கைக்கு அப்பாற்பட்ட சாத்தியக் கூறுகள் உண்டு, ரொம்பவுமே ஜாலியாகவும் இருக்கும்”.

அடப்பாவமே, இந்த மாதிரி முட்டாள்தனமா விளையாடவா இவ்வளவு தூரம் மெனக்கெட்டு வந்தேன்? அவரை கூர்ந்து பார்த்தேன். ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை, சரியான கல்லுளி மங்கன்! எதையும் கண்டுக்காம மேலே பேசினார், “இப்ப நீ கொஞ்ச நேரத்துக்கு முன்னமே சொன்னதையே எடுத்துக்குவோமே. நிஜங்கள் வரும்போது பசியோடத்தான் ஆரம்பிக்கிறதுன்னு சொன்னே இல்லையா, இப்ப ஒனக்கு பசிக்கலையா”?

இதை கேட்டவுடனேதான் எனக்கும் என்னோட அகோரப் பசி உரைத்தது. பசியால் வயிறு பொருமியது நன்றாகக் கேட்டது. இப்போ சாப்பாட்டுக்காக ரொம்ப தூரம் திரும்பப் போகணுமே என்கிற எண்ணம் அலுப்பா இருந்தது. அதுக்காக கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர்கள் நடக்கணுமேன்னு நினைக்கவே அயற்சியா இருந்தது. பேசாமல் கையிலே ஏதாவது டிபன் பார்சல் பண்ணின்ண்டு வந்திருக்கலாமேன்னு கூட தோன்றியது. என்னுடைய எண்ண ஓட்டங்களை அந்தக் கிழவர் ரசித்துப் பார்த்து கொண்டிருந்தார்.

அவர் சிரித்தவாறு கூறினார், ”இப்போ நாம இங்கேயே சாப்பிடுவதாக கற்பனை செய்வோமே”, என்று. எனது முகம் போன போக்கைப் பார்த்து, “இதென்ன குழந்தைங்க சொப்பு விளையாடி சாப்பிடுவது போல பாவனை செய்யும் விஷயம்னு நினைத்தாயா”? என்று இலக்கண சுத்தமாக கேட்டார்.

பைத்தியமாவதற்கு முன்னால் ஏதோ பல்கலை கழகத்தில் இவர் பேராசிரியரா இருந்திருக்கணும். ஏனென்றால் அவர் பேச்சு தோரணை இப்போ அப்படித்தான் இருந்தது. நான் ஏதாவது சொல்வதற்கு முன்னால் அவர் அவருக்கே உரித்தான சிரிப்புடன் மேலே பேசினார், “இங்கப் பார் கண்ணா, எப்படி கற்பனை தனது உண்மையான முகத்தைக் காண்பிக்கிறதுன்னு. இதோ பார்!”

திடீரென அவர் என்னைக் கேட்டார், “உணவு எங்கேருந்து வரதுன்னு சொல்லு பார்க்கலாம்”?

“பூமிலேருந்துதான், வேறெங்கேயிருந்து வர முடியுமாம்”, என நான் பதிலளித்தேன்.

“சபாஷ். பூமிதான், அன்னை பூமிதான், பூமாதேவி. அதனால நாம இப்போ அதே அன்னையை வேண்டறதுதானே லாஜிக்கலாக இருக்கும்? அன்னையை சாப்பாடு போடுமாறு கேட்போமா”?

“லாஜிக்கல்தான், ஆனால் குழந்தைத்தனமாவும் இருக்கே” என்றேன் நான். என்னை ஆமோதிப்பது போல சிரித்து விட்டு, அதே சமயம் நான் சொல்வதை புறங்கையால் தள்ளினார்.

“நீயே பார்”, அன்னை பூமி நமது பிரார்த்தனைக்கு இரங்கிவிட்டாள்” தன் முன்னால் இருந்த வட்டமான கற்பலகையை சுட்டிக் காட்டினார். அதுவரை நான் அதை எப்படி பார்க்கத் தவறினேன் என்பது எனக்கு புரியவில்லை. “உண்மையில் இது ஒரு மூடி மட்டுமே. அதன் கீழே ஒரு ஹாட்பாக்ஸ். அதிலே நமக்கு வேண்டிய எல்லா உணவும் கிடைக்கும்.  சாப்பாடு, குடிப்பதற்கான பானங்கள், சூடாகவோ, குளிர்ச்சியாகவோ நாம் கேட்பதற்கேற்ப. முதலில் பசியை அதிகமாக்க ஏதேனும் குடிப்போம். லெமனேட் பரவாயில்லைதானே”?

நான் பேசாமல் இருந்தேன். இதற்கு பதிலளிப்பது எனக்கு கௌரவக் குறைவாய் பட்டது.

பாஃப்ளோஸ், ஜெஸ்டஸ், லாஃபன்ஷ்டைன் ஆகிய பெயர்களைத் தாங்கிய அக்கிழவர் அநாயாசமாக கற்பலகையை தள்ளினார். அதன் கீழ் ஒரு ஓட்டை தென்பட்டது. அதி அவர் கையைவிட்டு இரு லெமனேட் போத்தல்களை எடுத்தார். பனிக்கட்டியின் சில்லிப்பில் அவை இருந்தன. தனது ஆட்காட்டி விரல்களால் அவற்றின் சீல்களை உடைத்து எனக்கு ஒரு போத்தல் தந்தார், தனக்கு ஒன்று எடுத்துக் கொண்டார்.

ஆச்சரியத்தால் திறந்த எனது வாய் அப்படியே நின்றது. எனது மூளையை யாரோ எனது மண்டையோட்டிலேயே வைத்து பிசைந்தது போன்ற உணர்வு.

“ஒன்னோட திறந்த வாயைப் பாத்தா கண்டிப்பா உனக்கு தாகமா இருக்கணுமே. அதுல ஈ ஏதாவது போறதுக்கு முன்னாலே குடி அப்பனே”, என்றார் அவர்.

ஒரு ரோபோ போன்று அந்த போத்தலை உதட்டுக்கு கொண்டு சென்றேன். லெமொனேட் குளிர்ச்சியாகவும், புளிப்பாகவும் இருந்தது. சில விழுங்குகள் எடுத்துக் கொண்டேன்.

பிறகு பாறையில் இருந்த அந்த ஓட்டைக்கு சென்று பார்த்தேன். அது காலியாக இருந்தது. பேசாம திரும்ப என் இடத்திற்கே வந்து உட்கார்ந்தேன். லெமனேட் அபார சுவையுடன் இருந்தது.

“எப்படி இருக்கு”? என பாஃப்ளோஸ் கேட்டார்.

“திவ்யமா இருக்கு” என்றேன் நான்.

“கனவும் நிஜமும் ஒன்று சேரும் இடத்துல அப்படித்தான் இருக்கும்”
என்னவோ போங்க, இந்த பைத்தியத்தை என்னால் வார்த்தைகளால் வெல்லவியலாது என்பது புரிந்து விட்டது. பேசாம அவர் சொன்னபடியே நடப்பது என திடீரென தீர்மானித்தேன். விளைவுகள் நாசமா போகட்டுமே!

“வாத்து ஈரல் கறி வேணுமா”? என்று கேட்டார் அவர்.

“எனக்கு ஒண்ணூம் ஆட்சேபணை இல்லை”

கையை ஓட்டைக்குள் விட்டார். கேட்ட உணவு ஒரு தட்டில் ஸ்பூன்கள், ஃபோர்க்குகளுடன் வந்தது. எப்படி வந்ததுன்னு ஏன் கவலைப்படணும், சாப்பிட்டால் போதும் என்ற மனநிலைக்கு நான் வந்தேன்.

“எனக்கு வேண்டியது கேக்குகள், வியன்னா கட்லெட” என்று அவர் சீரியசாக கூறினார்.

மறுபடியும் கை உள்ளே சென்றது. இரண்டு தாம்பாளங்களில் அப்பொருட்களும் வந்தன. அவரும் உண்ண ஆரம்பித்தார். நான் பாதி சாப்பிட்டு முடித்தவுடன் அவர் கேட்டார், “கோழிக்கறி பற்றி நண்பர் என்ன நினைக்கிறார்?”

“இந்தப் பொருட்கள் எல்லாம் நான் புத்தகத்தில்தான் பார்த்திருக்கிறேன். ஆனாக்க இன்னிக்கு என்ன கொடுத்தாலும் சாப்பிடறேன்” என்றேன் நான்”.

மறுபடியும் கைக்கும் ஓட்டைக்கும் இடையே ஒரு சதி நடந்தது. கோழிக்கறி வந்தது. ஈரல் கறிக்கு பிறகு அதையும் ஒரு கை பார்த்தேன்.

“பயித்தியமா இருக்கறதுலேயும் ஆதாயம் உண்டு டோய்” நான் கெக்கே கெக்கே என சிரித்தேன்.

“அப்படிச் சொல்லு என் நண்பா”, அவர் நான் கூறியதை ஆமோதித்தார்.

இரு காக்கைகள் பறந்து வந்தன. சற்றே தள்ளி தரையில் வந்து உட்கார்ந்தன. அவற்றை நோக்கி சில உணவுத் துண்டுகளை பாகஸ் வீசினார். மூங்கில் புதருக்கு பின்னால் ஒரு சலசலப்பு கேட்டது. ஒரு கலைமான் காற்றை முகர்ந்து கொண்டே வந்தது. அது எங்களைப் பார்த்தது. தயக்கமேயில்லாமல் பாகஸ் அருகே வந்து அவரது தோள்களை நக்கியது. பாகஸ் ஓட்டையிலிருந்து கைநிறைய பீன்ஸ் எடுத்து பாறை மேல் பரப்பினார். கலைமான் சந்தோஷமாக பீன்ஸ்களை மேய்ந்தது. கனவு காண்கிறோமா என்ற ஐயத்தில் என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். வலித்தது. இதுதான் உண்மை என எனக்குள்ளேயே முணுமுணுத்து கொண்டேன். எனக்கே நான் என்ன சொல்லவருகிறேன் என்று புரியவில்லை.

நான் சாப்பாட்டு ராமன் அல்ல. என் வயிறு மிகவேகமாகவே நிரம்பிவிட்டது. சாப்பிடும் வேகத்தை மட்டுப்படுத்தி, கொறித்தேன். நல்ல ஏப்பமும் வந்தது. இது ஒன்றும் கனவாக இருக்க முடியாதே என்றும் எண்ணினேன்.

பாகன்ஹைமரோ தன்பங்குக்கு சூப், ஒருவகை புலவு, மட்டன் கறி, சப்பாத்தி மற்றும் ரயிதா ஆகியவற்றை உள்ளே தள்ளினார். எலும்பும் தோலுமாக இருக்கும் அவர் உடலில் இத்தனை உணவும் எங்கே போகிறது என வியப்படைந்தேன். கடைசியாக அவரும் திருப்தியாக ஏப்பம் விட்டார். (இன்னும் ஆலிலை போல ஒட்டிக் கிடந்த) தன் வயிற்றைத் தடவியவாறே அவர் சொன்னார், “முதல் ஏப்பம் சாப்பிடறதை நிறுத்தணும்னு சொல்லறது. இரண்டாம் ஏப்பமோ இன்னமும் சாப்பிட்டா சங்குதாண்டின்னு சொல்லறது. ராத்திரி சாப்பாடு வரைக்கும் நாம சாப்பிட்டது தாங்கும்னு நினைக்கிறேன்”.

ராத்திரி சாப்பாடா, சரியாப் போச்சு. இன்னும் மூணு நாளுக்கு தேவையானதை உள்ளே தள்ளியாச்சு. “கையலம்பிக்கலாமே” என்று சொல்லிக் கொண்டே ஒரு சொம்புத் தன்ணீருடன் ஓட்டையிலிருந்து வெளியே எடுத்தார். கையலம்பிய பிறகு மிகுந்த உணவை புற்கள் மேல் போட்டார். காக்கைகள் அவற்றின் மேல் பாய்ந்தன..

“இப்போ விஸ்கி”, பாஃப்ளியோஸ் ஓட்டையிலிருந்து விஸ்கி போத்தல் இரண்டு கப்புகளுடன் எடுத்தார். ஒருவருக்கொருவர் கப்புகளை உயர்த்தி அவற்றை ஒன்றையொன்று தொடச் செய்தோம்.

“உங்க ஆரோக்கியத்துக்கு”, அவர் கூறினார்.

“பைத்தியக்காரத்தனம் வாழ்க”, இது நான்.

எல்லாம் முடிந்ததும் லாஃபன்ஷ்டைன் காலி தட்டுகள், பாட்டில், கப்புகள், ஸ்பூன்கள் எல்லாவற்றையும் திரட்டி அந்த ஓட்டைக்குள் போட்டார். அதுவும் இந்த விந்தை மனிதர் போட்டது எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொண்டது. போகிற போக்கில் கிழவர் ஒரு யானையை உள்ளே போட்டிருந்தாலும் ஆச்சரியப் படமுடியாது என்றே எனக்குத் தோன்றியது.

ஜெஸ்டஸ் கல் மூடியால் அந்த ஓட்டையை மூடினார். போய் எழுந்து அந்த ஓட்டையின் உள்ளே பார்க்க வேண்டும் என்ற எனது ஆவலை அடக்கிக் கொண்டேன். ஆனால் அதனால் ஒரு பலனும் இருக்காது, அந்தச் சனியன் பிடித்த ஓட்டையில் ஒன்றுமே காணக்கிடைக்காது என்பதையும் உணர்ந்தேன்.

“என்ன கண்ணா திருப்தியா”, ஜெஸ்டஸ் கேட்டார்.

“இதை கேட்கவும் வேணுமா”

ஒரு மெல்லிய காற்று வீசிக் கொண்டிருந்தது. சிறிது நேரம் ஒன்றுமே பேசாமல் அமர்ந்திருந்தோம். ஒன்றையும் நினைக்கும் நிலைமையில் நான் இல்லை. தூக்கம் கண்களை சொக்கியது. திடீரென பாக்ஸ்டன் பேசுவது ஏதோ கனவு போல ஒலித்தது

“கற்பனையோட சக்தியை பாத்தே இல்லையா. பித்தனாக இருப்பதில் இதுதான் சௌகரியம். நான் சொல்லறதை நீ ஒத்துப்பேன்னு தெரியும். இனிமே மேலே பேசலாம்”.

நான்கு நொடிகளுக்கு நிசப்தம் நிலவியது. காற்று இலைகளுடன் சலசலவென ரகசியம் பேசியது.

“அந்தச் சின்னப் பறவையை பாத்தியா”, அவர் என்னைக் கேட்டார். வேண்டாவெறுப்பாக பாதி கண்ணைத் திறந்து பார்த்தேன்.

நான் முன்பின் பார்த்தறியாத ஒரு நீல வண்ணப் பறவை அது. தலையில் மஞ்சள் நிற சீப்பு மாதிரி ஒரு கொண்டை. கருஞ்சிவப்பு அலகு, நீண்ட மஞ்சள் நிற வால், வெண்மையான நகங்கள். இம்மாதிரியான பறவையை நான் பார்த்ததே இல்லை. பாக்ஸ்டெண்டினின் குரல் மந்திரம் போல ஒலித்துக் கொண்டிருந்தது.

“இந்தப் பறவையும் நான் கற்பனை செஞ்சதுதான். மந்திர உலகத்திலேருந்து வந்திருக்கு. அது ஒரு தூதன் மாதிரி. மேலும் விருந்தாளிகள் வந்திருக்கிறதா அது சொல்லறது. இந்த நிகழ்ச்சி கூட நான் இப்போ கற்பனை செய்யறதுதான், இது நினைவிருக்கட்டும்”?

“அதுக்கென்ன இப்போ”, என்று முணுமுணுத்தேன் நான்.

அந்தப் பறவை திடீரென கிறீச்சென கத்தி விட்டு படபடவென பறந்து சென்றது. அந்த கிறீச் சப்தம் என்னை தூக்கத்திலிருந்து முழுக்கவே எழுப்பியது. பாகன்ஷ்டைனை பார்த்தேன். அவரோ ஏற்கனவே எழுந்து நின்று கொண்டிருந்தார். பறவை சென்ற திக்கை சுட்டிக் காட்டினார். அது ஏற்கனவே நூறு மீட்டர்களுக்கும் அப்பால் சென்று விட்டிருந்தது. இருந்தாலும் அதன் மஞ்சள் நிற வாலை நன்கு பார்க்க முடிந்தது. ஜெஸ்டஸ் எனக்கு கைலாகு கொடுத்து எழுப்பி விட்டார்.

“அது எங்கே பறந்து போச்சுன்னு பார்த்தே இல்லை”, அவர் வேகமாகக் கூறினார், “அங்கேதான் நாம விருந்தாளிகளை பார்க்கப் போறோம்”

“விருந்தாளிகாளா”, இன்னும் என்னுடைய மயக்க நிலை தெளியவில்லை.

“அதுவும் அழையா விருந்தாளிகள்”, என்று மேலும் கூறினார்.

“வா போவோம்”, என்னைக் கைபிடித்து இழுக்காத குறை.

மூங்கில் புதரைத் தாண்டிச் சென்றோம். பறவை ஏதோ ஒருமரக்கிளையில் சென்று அமர்ந்திருக்க வேண்டும். என்னால் அதை பார்க்க முடியவில்லை. ஆனால் அது எங்கே இருக்கிறது என்பதில் பாகன்ஹைமருக்கு ஐயமே இல்லை. “அந்த வழியேப் போகணும்”, மரங்களின் ஊடே ஒரு இடைவெளியை காண்பித்தார். நாங்கள் வேகமாகச் சென்றோம். பல முட்புதர்கள் வழியில் இருந்தன. சீரற்ற தரை. ஆகவே எங்கள் முன்னேற்றமும் தடைபட்டது. திடீரென எனக்கு தோன்றிய ஒரு ஐயத்தை கேட்டேன்.

“விருந்தாளிகள் வந்திருக்காங்க சரி, ஆனா நாம ஏன் அவங்களை போய் பாக்கணும்”?

“அழையா விருந்தாளிகள்னு கூடச் சொன்னேனே” இது பாக்ஸ்டன்.

“அழையா விருந்தாளிகளா” எனக்குப் புரியவில்லை.

“நீயே பார்க்கப்போறே”, என்று கூறியவாறு வேகத்தை அதிகமாக்கினார். இருபது நிமிடங்கள் நடந்தோம். எங்கே போக வேண்டும் என்பதில் பாக்‌ஷ்டோபெருக்கு சந்தேகமே இல்லை. அடர்த்தியாக மரங்கள் இருந்த ஒரு இடத்துக்கு நாங்க்அள் வந்தோம். நிற்குமாறு பாகன்போர்க் சைகை காட்டினார். முன்னால் இருந்த இலைகளை மெதுவாக விலக்கிப் பார்த்தோம். நாங்கள் இருந்த இடம் சற்றே மேட்டுப் பகுதி. இலைகளுக்கப்பால் எழுபது மீட்டர் தூரத்துக்கு கிட்டத்தட்ட வெட்டவெளியாக இருந்தது.

ஒரு பையனும் பெண்ணும் பயத்துடன் ஒருவர் கையை ஒருவர் பிடித்து நின்று கொண்டிருந்தனர். இருவரும் ஜீன்ஸ் அணிந்திருந்தனர். இரு பெரிய தடியன்கள் அவர்கள் வழியை மறித்து நின்றிருந்தனர். ஒருவன் கையில் பிஸ்டல் இருந்தது. இன்னொருவன் கத்தி வைத்திருந்தான். அவற்றால் இந்தப் பையனையும் பெண்ணையும் பயமுறுத்திக் கொண்டிருந்தனர். அவர்கள் கொள்ளையடிக்கும் முயற்சியில் உள்ளனர் என்பது வெளிப்படையாகவே தெரிந்தது

(தொடரும்)

(ஆன்லைனில் ஜெஸ்டஸ் ஆங்கில மூலத்தை வாங்க இங்கே செல்லவும்).

அன்புடன்,
டோண்டு ராகவன்

7 comments:

Simulation said...

மரண மொக்கையா இருக்கே!

-சிமுலேஷன்

சைவகொத்துப்பரோட்டா said...

naan kadavul...?

Anonymous said...

கதையோ கட்டுரையோ படிக்கும் போது நம்மை உள் இழுத்துச செல்ல வேண்டும். நாம் கதை தான் படித்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வின்றி யாரிடமோ பேசிக் கொண்டிருப்பது போன்ற உணர்வு வரவேண்டும்.
மன்னிக்கவும் இந்த கதையைப் படிக்கும் போது அது வரவே இல்லை. அங்காங்கே படு தமிழாக எழுதுவதை தவிர்க்கலாமோ. உரையாடல்கள் ரொம்ப பார்மலா எழுத்தோ எழுத்துத்
தமிழில் இருக்கு. சராசரி வாசகனுடைய பார்வையில் இது மனதை தைக்கவில்லை என்றே சொல்லணும்.

Narayanan

Anonymous said...

கொடூரமா இருக்கு. இதற்கு வீணடிக்கும் நேரத்தில் நீங்க வேற ஏதாவது நல்ல வேலை பார்க்கலாம்.

Anonymous said...

Dondu Sir,

Ennamo manasula otta matingudhu...something wrong either with original story or with translation....

ரவிஷா said...

வாக்கியங்களை அப்படியே translation செய்கிறீர்களா இல்லை ஒரு மொத்த அத்தியாயத்தையும் படித்து கருத்துக்களை மட்டும் எழுதுகிறீர்களா?

வாக்கியங்கள் ஒரே குழப்பமாகவும் ஒன்றோடொன்று ஒட்டவும் இல்லை!
Original புத்தகத்திலேயும் இப்படி இருக்குமானால், சாரி, படிக்கிறவர்களை ரொம்பவே படுத்தும்!

Nat Sriram said...

//மரண மொக்கையா இருக்கே!

-சிமுலேஷன்
//

Same blood...

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது