12/17/2009

டோண்டு பதில்கள் - 17.12.2009

கேள்விகள் ஏதும் வராததால் 10.12.2009-க்கான டோண்டு பதில்கள் பதிவு வரவில்லை. இந்த வாரக் கேள்விகளுக்கு செல்வோமா?

அனானி (32 கேள்விகள் கேட்டவர்)
1. உலகிலயே அழகிய பெண்களைக் கொண்ட நாடு நம் நாடா?

பதில்: ஆம். விளக்குகிறேன். பெண்களைப் பொருத்தவரை அவர்கள் அழகாகத் தெரியவேண்டியது ஆணகள் கண்ணில்தான். அப்போதுதான் இனவிருத்தியே நடக்கும் என்பது ஆண்டவன் சித்தம்.

ஆனால் ஒவ்வொரு ஊரிலும் ஆண்களின் ரசனை மாறுபடுகிறது. சீனாவில் சிறிய பாதங்களையுடைய, சப்பை மூக்குப் பெண்களே அன்னாட்டு ஆண்களின் கண்களுக்கு அழகாகத் தெரிகின்றனர். ஐரோப்பாவில் பருத்த மார்பகங்களையுடைய பெண்களை பசுக்களுக்கு ஒப்பிட்டு கேலி செய்கின்றனர். ஆனால் இந்திய துணைக்கண்டத்து ஆண்களுக்கு, குறிப்பாக ராஜ் கபூர், டோண்டு ராகவன் ஆகியோருக்கு அதுதான் பிடித்த விஷயமே.

ஆக, என்ன சொல்ல வந்தேன்? அவரவர் நாட்டுப் பெண்கள் சம்பந்தப்பட்ட ஆண்களின் கண்களுக்கு அழகாகத் தெரிவார்கள்.

2. பகல் தூக்கம் போடுகிறவர்களை பற்றி?
பதில்: கடந்த ரெண்டு நாட்களாக மொழிபெயர்ப்பு வேலை அதிகமானதால் பகலில் தூங்க நேரம் இல்லை. இக்கேள்விக்கு ஒரு பகல் தூக்கம் போட்டு விட்டு பதில் சொல்கிறேனே.

3. தமிழ் நாட்டில் எத்தனையோ கட்டுப்பாடுகள் இருந்தும், ‘பலான’ படங்கள் இன்னும் வருகின்றனவே. இது எப்படி?
பதில்: பட்டினப் பிரவேசம் என்னும் பாலசந்தரின் படம் ஒன்று Conquerors of the golden city" என்னும் ஆங்கிலப் படத்தின் தழுவல் என படித்திருக்கிறேன். அந்த ஆங்கிலப்படம் ஒரு திரைப்பட விழாவில் சமீபத்தில் அறுபதுகளில் சென்னைக்கு வந்த போது ஓடியன் தியேட்டரில் போட்டார்கள். அதில் வரும் சில பலான காட்சிகளுக்காக கூட்டம் அம்மியது. அடிதடி எல்லாம் நடந்தது.

தனது ஒரு சுற்றுப்பயணக் கட்டுரையில் இதயம் பேசுகிறது மணியன் இதே படம் அமெரிக்காவில் ஒரு தியேட்டட்ரில் பார்க்க ஆளின்றி ஈயடித்தது பற்றி எழுதினார். எதுவுமே குறைந்த சப்ளையில் இருந்தால் அதற்கு கிராக்கி இருக்கத்தான் செய்யும். அதுவும் பலான விஷயங்கள் பலான காரணங்களுக்காக பலான முறையில் எல்லாம் தடை செய்யப்பட்டால் இப்படித்தான் நடக்கும்.

4. பொதுவாய் வாழ்க்கையில் முன்னேற வயது ஒரு தடையா?
பதில்: இல்லை இல்லவே இல்லை. முதல் முத்லாக 56 வயதில்தான் கணினியை தொட்டிருக்கிறேன். இப்போது அதை கற்றுக்கொண்டு நான் இன்னும் அதிகமாக எனது மொழிபெயர்ப்புத் துறையில் முன்னேறுகிறேன்.

ஒரு சராசரி மனிதனான என்னாலேயே இதைச் செய்ய முடிந்தபோது மற்றவர்களுக்கு என்ன தடை? வயசெல்லாம் ஒரு பொருட்டே அல்ல.

5. உலகில் உண்மையான பொதுநலவாதி யார்?
பதில்: ஏசு கிறிஸ்துவைத்தான் உண்மையான கம்யூனிஸ்ட் என பலரும் நம்புகின்றனர், நான் உட்பட.

நம்ம ஊர் பக்கம் வந்தால், தான் பெற்ற மந்திர உபதேசத்தை கோவில் உச்சியில் நின்று எல்லோருக்கும் உபதேசித்த ராமானுஜர் நினைவுக்கு வருகிறார்.

6. சிறந்த சேமிப்பு வழி முறைகள் எவை?
பதில்: சேமிப்பு நல்லதுதான், தேவைதான்.
அதற்காக ஒரேயடியாக சேமித்து கொண்டே இருக்க வேண்டுமா? என்ன சௌகரியங்களோ அவற்றையும் அனுபவிக்க வேண்டாமா? அது பாட்டுக்கு அது, இது பாட்டுக்கு இது. அவை எந்த அளவில் பேலன்ஸ் செய்ய வேண்டும் என்பது அவரவர் வாழ்க்கை உள்விவகாரம். ஓரளவுக்குமேல் அதில் மற்றவர் தலையீடு இருக்க அனுமதிக்கலாகாது.

எனக்கு 12 வயதாயிருந்த போது, காங்கிரஸ் பொருட்காட்சிக்கு சென்றிருந்தேன். கூடவே என் அத்தை பிள்ளையும் (என் மனைவியின் அண்ணன்) வந்தான். எனக்கு என் அம்மா 70 பைசா தந்தார். அவனுக்கு என் அத்தை இரண்டு ரூபாய் தந்தார். அப்போதே டட்ச் ட்ரீட் முறைதான். உள்ளே செல்ல டிக்கட் 12 பைசா. பிறகு இரண்டு சித்திரக் கதை புத்தகம் ஒன்று 12 பைசா வீதம் வாங்கினேன். ஆக 36 பைசாக்கள் செலவு. வெறுமனே பொருட்காட்சியை சுற்றி வந்தேன். கூட வந்த அத்தை பிள்ளையோ அத்தனைப் பணத்தையும் செலவழித்தான். சில சமயம் எனக்கும் சில பொருட்கள் வாங்கித் தர முன்வந்தான். (அவனுக்கு எப்போதுமே தாராள மனசு). ஆனால் நான் மறுத்துவிட்டேன். பிறகு வீட்டுக்கு திரும்பினோம். போகவர நடை மட்டுமே. என் அம்மாவிடம் பெருமையாக நான் மீதம் பிடித்ததைக் காட்ட அவர் அதை எடுத்து வேறு செலவுக்கு உபயோகித்தார். அதற்காக அவரைக் குற்றம் சொல்ல இயலாது. வீட்டு நிலவரம் அப்படி. ஆனால் அதே சமயம் நான் 70 பைசாவையுமே செலவழித்திருந்தாலும் அவர் ஒன்றும் கூறியிருந்திருக்க மாட்டார்தான்.

இங்குதான் நான் நேரிடையாகவே ஒரு பாடம் கற்றேன். அதாவது செலவழிக்க வேண்டியதை செலவழிக்க வேண்டும் என்பதுதான் அது. மீதம் செய்தால் இம்மாதிரி கைமீறிப் போவதையும் எதிர்ப்பார்க்கத்தான் வேண்டும்.


7. தமிழா... இன உணர்வு கொள்! என்கின்றனரே... இது பற்றி?
பதில்: தமிழர் உணர்வு, ஈழத் தமிழர் உணர்வு, தெலுங்கர் உணர்வு, தெலிங்கானா உணர்வு என்று இப்போதெல்லாம் மாவட்டத்துக்கு மாவட்டம் ஆட்டம் போடுகின்றனவே. அவரவருக்கு ரொம்பவே நேரம் இருக்கிறது போல.

8. கோவில் விழாக்களில், சாமியாடுதல்' என்று கூறி, சாராயம் குடித்து, குறி சொல்வது தமிழர் பழக்கம்; மற்ற மாநிலங்களில் எப்படி?
பதில்: எல்லா மாநிலங்களிலும் இது உண்டு. ஹிந்திப் படங்களில் பார்த்ததில்லையா?

9. நாணம், பயிர்ப்பு, இவை எல்லாம்?
பதில்: ஆண்களின் மனவமைதிக்காக உருவாக்கப்பட்டவை. அவற்றையே பெண்களுக்கான அழகாக வைத்தது வேறு காம்ப்ளிகேஷன்களை வளர்த்தது வேறு விஷயம்.

10. வெளி மாநிலத்தவர்கள், காஷ்மீரில் நிலம் வாங்கவோ, காஷ்மீரிகள், வெளிமாநிலத்தாருக்கு விற்கவோ முடியாது என்பது பற்றி?
பதில்: சட்டப்பிரிவு 370 என நினைக்கிறேன். இந்த சலுகை நேருவால் காஷ்மீர மக்களுக்கு அவர்களது இணைப்பைப் பெறுவதற்காக தரப்பட்டது. அவர் செய்த பல சொதப்பல்களில் காஷ்மீரும் ஒன்று.

அவர் செய்த முதல் குளறுபடி காஷ்மீர பிரச்சினையை கையாண்ட விதமே. பட்டேல் உறுதியாக நடவடிக்கை எடுத்து பாக் படைகளை காஷ்மீரத்திலிருந்து துரத்திக் கொண்டிருந்த நேரத்தில் இந்த மனிதர் ராபணா என்று பாதுகாப்பு கவுன்சிலுக்கு போனார். அவர்கள் இட்ட ஷரத்துப்படி போர்நிறுத்த எல்லை என்று "தற்காலிகமாக" உருவாக்கப்பட்டது. அது இப்போதும் அப்படியே இருப்பதுதான் இந்த தற்காலிகத்தின் லட்சணம். காஷ்மீருக்கு தனி அந்தஸ்தெல்லாம் யாரும் கேட்காமலேயே இந்த மனிதர் கொடுத்துள்ளார். மக்கள் வாக்கெடுப்புக்கும் ஒத்துக் கொண்டார். அதாவது எல்லாமே இந்தியாவின் நலனுக்கு விரோதமாக அமைந்தது. இதில் என்ன துரதிர்ஷ்டமான நிலை என்றால். இவர் ரொம்ப நல்லவர். எல்லோரும் தன்னைப் போல என நினைத்தவர். ஆனால் இந்தியாவுக்கு தேவை நல்லவர் அல்ல, ஒரு வல்லவர். இவர் அது அல்ல.

11. உலகில் டிவி' ரிமோட் மட்டும் கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால்...என்னவாயிருக்கும்?
பதில்: வீடுகளில் ரிமோட்டைக் கைப்பற்றுவதற்காக சண்டை இருக்காது.

12. மயக்கும் விழிப்பேச்சில் வல்லவர்கள் ஆண்களா, பெண்களா?
பதில்: பெண்கள் என்றால் அது அவர்களிடம் எதிர்பார்க்கப்படுகிறது என்னும் வகையில் அவர்கள் பெருமிதம் கொள்ளலாம். ஒரு ஆணை அவ்வாறு கூறினால், அவனா நீயி என தன்னை கேட்பதாக எண்ணிக் கொண்டு அவன் சண்டைக்கு வருவான்.

13. வெளிநாட்டில் வேலைப் பார்க்கும் இந்தியர்களின் தற்போதைய நிலை எப்படி?
பதில்: வெளி நாட்டினர் அதிகமாக வேலை செய்யும் எந்த நாட்டிலுமே அந்த வெளிநாட்டவர்களது நிலைமை நிலையானதில்லை. இந்தியர்கள் மட்டும் எப்படி விதிவிலக்காக முடியும்?

14. பசியால் ஒருவன் மாண்டு போவது போன்ற கொடுமைக்கு பொறுப்பு யார்?
பதில்: தனியொருவனுக்கு உணவில்லையேல் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி.

15. ஊரை கலக்கும் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் பார்ப்பதுண்டா?
பதில்: இல்லை, விஜய் டிவியெல்லாம் பார்ப்பதில்லை.

16. அமெரிக்க அதிபர் ஒபாமா உண்மையில் மாற்றங்களைக் கொண்டு வந்ததன் பலன் என்ன?
பதில்: ஒபாமா எனக்கு லிண்டன் ஜான்சனைத்தான் நினைவுபடுத்துகிறார். அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்னால் நான் எழுதியது, “சமீபத்தில் 1964-ல் ரிபப்ளிக்கன் வேட்பாளர் கோல்ட்வாட்டர் தேவையானால் வட வியட்னாம் மேல் குண்டுகளும் வீசலாம் என்றார். லிண்டன் ஜான்ஸனோ வியட்னாம் யுத்தத்தை பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்க்கப் போவதாக எலெக்‌ஷன் மீட்டிங்குகளில் கூறி வந்தார். இப்போது இந்த ஒபாமா ஈராக் யுத்தத்தைப் பற்றிப் பேசுவதுபோல என வைத்து கொண்டால் தவறில்லை. ஜான்ஸன் வெற்றி பெற்றார். ஆனால் என்னாயிற்று? ஜான்ஸன் காலத்தில்தான் யுத்தமே கடுமை அடைந்து, 1968 துவக்கத்தில் டெட் தாக்குதல் நடந்து அமெரிக்காவின் மானமே கப்பலேறியது. அடுத்து வந்த நிக்ஸன்தான் வியட்னாமிய யுத்தத்தை முடித்து வைத்தார். நிக்ஸன் தவறே செய்யவில்லை எனக் கூற மாட்டேன். ஆனால் அவர் அமெரிக்காவின் நலன்கள் எனக் கருதுவதில் விட்டுக் கொடுக்காமல் இருந்தார். நிக்ஸனைப் பற்றி பல ஜோக்குகள் இருந்தாலும், வெளியுறவு விவகாரங்களில் ஒரு ஜோக்கும் அவரைப் பற்றி இல்லை என்பதை நிக்சனை மிகவும் எதிர்த்த பத்திரிகையாளர்களே கூறியுள்ளனர்”.

17. தேமுக தலைவர் விஜயகாந்தின் அரசியல் பாணி வெற்றி பெறுமா?
பதில்: இப்போதைக்கு வெற்றியடைவது போலவே தோன்றுகிறது. நடக்கப்போவதை யார் அறிவார்?

18. பொதுவாய் ஒருவன் அசடு வழிவது என்றால்?
பதில்: ஏதோ ஃபிகரிடம் மாட்டிக்கொண்டான் என்று கூறலாமே.

19. பரந்த உலகில் பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் வாழமுடியுமா?
பதில்: பத்திரமான வங்கிகளில் கொழுத்த கணக்கு இருந்தால் அவ்வாறு வாழலாம்.

20. ஆந்திராவில் காங்கிரஸ் நிலை?
பதில்: ஆப்பில் மாட்டிய குரங்கின் நிலைத்தான்.

21. பலர் கேள்வி கேட்பது, நீங்கள் பதில் சொல்வது இது பற்றி?
பதில்: கேட்பவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறியேன். ஆனால் என்னைப் பொருத்தவரை இது ஒரு சேலஞ்சுதான். எந்தக் கேள்வி எங்கிருந்து வரும் என்பது தெரியாது, எல்லாவற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும். நினைவு தெரிந்த நாளிலிருந்து என்னிடம் ஒட்டிக் கொண்டிருக்கும் இத்திறமை பற்றி நான் இட்டப் பதிவிலிருந்து சில வரிகள்:
எனது சட்டம் ஒரு கழுதை பதிவில் அனானி ஒருவரின் கமெண்ட் ஒன்று வந்துள்ளது. அதில், “ஒரு சில பதிவுலக நண்பர்கள் தற்சமயம் கேள்வி பதில் சுவை குன்றியிருப்பதாகவும் கேள்விகள் வரத்து குறைவாய் இருப்பதாகவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதை சுவை உடையதாய் மாற்ற ஒரு எளிய வழி. வெள்ளிக்கிழமை தொடங்கி-வியாழன் இரவு வரை நடக்கும் அரசியல், சமுக, கலையுலக நிகழ்வுகளை வைத்து தாங்களே ஒரு கேள்வி பதில் நிகழ்வினை நடத்தினால் அது நிச்சய்ம் அனைவரையும் விரும்பி படிக்க வைக்கும்”.

அவருக்கு பதில் கூறவே இப்பதிவு.

நன்றி அனானி. ஆனால் அதில் எனக்கு விருப்பம் இல்லை. நானே எனக்கு நானே கேள்வி கேட்பது எனக்கு நானே தண்ணீர் வாயில் ஊற்றிக் குடிப்பதற்கு சமம். அதுவே மற்றவர்கள் ஊற்றும்போது அந்த ஸ்பீட் என் கண்ட்ரோலில் இல்லை, இருப்பினும் அதை சமாளிப்பதுதான் சாதனை. மற்றவர்கள் எந்த கேள்வி கேட்டாலும் நான் பதிலளிக்க முயலுகிறேன்.

எனது துபாஷி வேலையும் கிட்டத்தட்ட அம்மாதிரிதான். விசிட்டரோ உள்ளூர் வாடிக்கையாளரோ என்ன பேசுவார்கள் என்று அறிய இயலாது. ஒரு சமயம் டி.சி. மோட்டார் ஸ்பீட் கண்ட்ரோல் பேசலாம், அடுத்த நிமிடம் காபரே பற்றிப் பேசலாம். விருந்தாளி மனைவியை அழைத்து வராததாதால் வரும் பிரச்சினைக்கு அவர் அதை கையில் எடுத்து கொண்டால் சரியாகி விடும் என்று கூறியதை முன்னாலேவா ரிகர்ஸ் செய்து கொள்ள முடியும்?

22. பலரால் சுட்டிக்காட்டப்படும் ஸ்விஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களின் கறுப்புப்பணம் எவ்வளவு?
பதில்: 1500 பில்லியன் டாலர்கள் என இந்த உரலில் கூறியுள்ளனர்.

23. தலைவர் கலைஞர் - சன் டீவி மாறன் குடும்ப உறவு இப்போது?
பதில்: பரஸ்பர நம்பிக்கை எப்போதோ போயிற்று.

24. மதுரை அழகிரியாரின் நெருக்குதலுக்கு இந்தத் தடவை தலைவரின் உறுதியான முடிவு தொடருமா?
பதில்: எதையும் சொல்லும் நிலையில் தலைவரே இல்லை. நான் எப்படி சொல்வது?

25. வாழும் தமிழக அரசியல் தலைவர்களில் இலங்கைத் தமிழர்களின் மீது உண்மையான பாசம் கொண்டவர்?
பதில்: கலைஞர்னு சொன்னா ஒத்துண்டுடப் போறேளா?

26. வாழும் தமிழக அரசியல் தலைவர்களில் இலங்கைத் தமிழர்களின் மீது போலியான பாசம் கொண்டவர்?
பதில்: மேலே சொன்ன பதிலை கண்டிப்பா யாரும் ஒத்துக்கலைத்தானே?

27. தமிழ் சினிமாவின் சார்லி சாப்ளின் யார்?
பதில்: ஜே.பி. சந்திரபாபு

28.காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்? தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு சாத்யமா?
பதில்: எங்கே தமிழகத்திலா? இப்போதைக்கு நோ சான்ஸ்

29. தற்சமயம் உள்ள தமிழ்த் தொலைக்காட்சிகளில் உருப்படியான நிகழ்ச்சி எது?
பதில்: ஜெயா டிவியில் சோவின் எங்கே பிராமணன் (திங்கள் முதல் வியாழன் வரை இரவு 8 முதல் 8.30 வரை வாரத்துக்கு நான்கு நாட்களுக்கு)

30. உலகில் எதிரிகளே இல்லாதவர்கள் யாரேனும் உண்டா?
பதில்: எனக்குத் தெரிந்து அவுரங்கஜீப், அவர் இறக்கும் தருவாயில். ஏனெனில் எல்லா எதிரிகளையும் அவர் கொன்று தீர்த்து விட்டார்.

31. டெஸ்ட் போட்டி தர வரிசையில் முதலாம் இடத்துக்கு முன்னேறி விட்டதே இந்தியா?
பதில்: மிக்க மகிழ்ச்சி. டெண்டுல்கர், தோனி, சேவாக் ஆகியோர் தலா நிறைய கோல்கள் போட்டு இந்தியாவுக்கு இந்த இடத்தைத் தேடித் தந்துள்ளனர்.

32. பாரதி விழா( 11.12.2009) கொண்டாடங்கள் இந்த வருடம் எப்படி?
பதில்: மன்னிக்கவும்


எம். கண்ணன்
1. எங்கே பிராமணன் - 2ஆம் பாகம் திங்கள் (டிசம்பர் 14 முதல்) - கதையை எப்படி கொண்டு செல்வார் சோ ? உங்கள் யூகம் என்ன?
பதில்: ஜூலை 27, 2009 தேதியிட்ட எனது இப்பதிவில் நான் இவ்வாறு யூகத்தை வெளியிட்டிருந்தேன்.

“வர்ண ரீதியான பிராமணனை தேட அசோக்கால் முடியாமல் போன நிலையில், அம்மாதிரியான தேடலே அவசியமா என்பதுதான் எனது மனதில் எழுந்துள்ள இப்போதைய கேள்வி.

அதே சமயம், “அசோக் தேடிய ரேஞ்சுக்கு உண்மையான, வர்ணரீதியான பிராமணன் இப்போது இல்லை என்பது நிலைநிறுத்தப்பட்டாலும், அதை அடையும் பாதையில் இருப்பதாக நான் சாரியார், சாம்பு சாஸ்திரிகள், மற்றும் சிகாமணியை அடையாளம் காண்கிறேன்” என்றும் நான் சீரியலின் கடைசி பகுதிக்கான ரிவ்யூவில் எழுதியிருந்தேன். ஒரு வேளை இந்த சீரியலின் இரண்டாம் பகுதியில் இது சம்பந்தமாக ஏதேனும் சொல்லப் போகிறார்களா என்பதை அறிய நானும் ஆவலுடன் இருக்கிறேன்.

அதாவது, வர்ணரீதியான பிராமணன் என்னும் ஆதரிச நிலையை 100% அடைய முடியாவிடினும், அதை அடையும் முயற்சியில் யாராவது இருக்கிறார்களா என்பதையாவது பார்க்கலாம் அல்லவா? புத்தகமும் சரி சீரியலும் சரி நிறுத்தப்பட்ட இடம் முடிவான இடமா அல்லது வெறும் திருப்பு முனையா என்பதையும் இந்த எக்ஸ்டென்ஷன் - அது நிஜமாகவே வரும் பட்சத்தில் - ஆராயுமோ?

அசோக்கின் இந்த முயற்சியில் மாஜி நாத்திகர் நீலகண்டன் ஏதேனும் பங்கு வகிப்பாரா? சாம்பு சாஸ்திரிகள் முயற்சியில் வேத பாடசாலை நன்கு உருவானதா? இம்மாதிரி பல கேள்விகள் எனது மனதில் உள்ளன. மேலும் சாம்பு சாஸ்திரிகள், பிரியா, உமா, பாகவதர், சிகாமணி, சாரியார் ஆகியோரையும் பார்க்க மனம் விழைகிறது.

எது எப்படியாயினும் சோ அவர்கள் நினைப்பதுதான் நடக்கப் போகிறது”.

ஆனால் இரண்டாம் பார்ட்டின் முதல் எபிசோடிலேயே எனது ஊகங்கள் தவறானவை எனத் தெரிந்து விட்டது. நாரதர் கூறியபடி தன்னுள்ளேயே அசோக் வர்ணரீதியான பிராமணனைத் தேடப் போகிறான். தேவையானால் தன்னையே நல்ல பிராமணனாக உருவாக்கிக் கொள்ளப் போகிறான். அது மிகுந்த பிரயாசைகளுக்கு வழிவகுக்கும். என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென் திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் அருளால் நானும் முரளி மனோகரும் மாற்றி மாற்றி பதிவுகள் போட்டு எல்லா எபிசோடுகளையும் கவர் செய்வோம். இப்போது நாவல் ஏதும் இல்லை படித்து கெஸ் செய்ய.

2. பூணூல் போடாத பிரபலங்கள் என விகடன் பொறுப்பாசிரியர் ரவிபிரகாஷ் சில பிரபலங்களை சுட்டியுள்ளார்.(ஆசிரியர் சாவி, ஆனந்த விகடன் ஆசிரியர் பாலசுப்ரமணியன், ஹாய் மதன், பத்திரிகையாளர் ஞாநி) அவர் சொல்லியுள்ள காரணம் அவருக்குப்(ரவிபிரகாஷுக்கு) பொருந்தலாம். ஆனால் மற்ற பிரபலங்கள் ? http://vikatandiary.blogspot.com/2009/11/blog-post_30.html
பதில்: பூணல் போடுவதும் போடாததும் சம்பந்தப்பட்ட பார்ப்பனரின் விருப்பம். மற்றப்படி இதற்கு சிறிதும் சம்பந்தம் இல்லாதவர்கள் கருத்து கூற ஒன்றும் இல்லை. அவரவர் விருப்பம் பொருத்தவரை டோண்டு ராகவனும் சம்பந்தப்படாதவனே. அவனுக்கு தனது பூணல் பற்றி மட்டும்தான் பேசும் உரிமை உண்டு.

3. ஆந்திரா - தெலுங்கானா பிளவு பற்றி உங்கள் கருத்து என்ன ? இது மாதிரி ஒவ்வொரு மாநிலத்திலும் பிளவுகள் வந்தால் நாடு என்னாகும்?
பதில்: நண்பர் பத்ரி அவர்கள் தெலுங்கானா பற்றிய தனது பதிவில் இது குறித்து அற்புதமாக எழுதியுள்ளார். அதில் உள்ள கருத்துத்தான் என்னுடையதும்.

4. ஜூன் வரை வெயிட்டீஸ் என்கிறார் கருணாநிதி. குடும்ப உறுப்பினர்களின் தொல்லை மிக அதிகமாகிவிட்டதோ?
பதில்: எந்த ஜூன் என்று சொன்னார்? 2010-ஆ அல்லது 2011-ஆ?

5. பாமக நிறுவனர் ராமதாசின் மீதான கொலைவழக்கில் அவர் விடுவிப்பு - மீண்டும் மஞ்சள் துண்டு போர்த்தும் படலமா?
(http://lite.epaper.timesofindia.com/mobile.aspx?article=yes&pageid=4&sectid=edid=&edlabel=TOICH&mydateHid=11-12-2009&pubname=Times+of+India+-+Chennai&edname=&articleid=Ar00402&publabel=TOI)
பதில்: அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.

6. டிசம்பர் சீசன் துவங்கிவிட்டதே. கச்சேரிகளுக்கு கூடிப் போகச் சொல்லி வீட்டம்மாவின் தொந்தரவு கிடையாதா?
பதில்: எங்கள் இருவருக்குமே அதில் ஆர்வம் இல்லை.

7. இந்த வருடம் சென்னையில் குறைந்த மழை - கோடையில் தண்ணீருக்குத் தட்டுப்பாடு வருமா?
பதில்: எப்போதுமே தென்மேற்கு பருவ மழையால் நமக்கு மழை அவ்வளவு இல்லை. வடகிழக்கு பருவ மழைதான் முக்கியம். இந்த ஆண்டு அது நன்றாகத்தான் உள்ளது என நினைக்கிறேன். எங்கள் தோட்டத்து கிணற்றில் நீர் தரை அளவுக்கு வந்து விட்டது.

எதற்கும் இருக்கட்டும் என நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையத்துக்கு ஃபோன் (28271004) போட்டேன். இந்த ஆண்டு பருவ மழைகள் இரண்டுமே சென்னையில் நார்மல் என பதில் வந்தது.

8. லண்டனின் தேம்ஸ் நதி போல கூவத்திலும் படகில் செல்லும் பாக்கியம் நமது வாழ்நாளிலாவது கிட்டவேண்டும் என ஸ்டாலின் மெனெக்கெடுவது போல தெரிகிறதே? சாத்தியம் தானா?
பதில்: நல்ல நகைச்சுவை

9. குருவி, வில்லு, வேட்டைக்காரன் - எது பார்த்தால் தலைவலி குறையும் அல்லது கூடும் ? (3 படப் பெயர்களுக்கும் தொடர்பு இருப்பது போல உள்ளதே?) சன் டிவி குழுமத்தில் அடாவடிகளால் இனிமேல் விஜய் அந்தப் பக்கம் தலைவைத்துப் படுப்பாரா? இல்லை வேட்டைக்காரன் விளம்பரத்திற்காக தொடர்ந்து பல ஊர்களிலும், தியேட்டர்களிலும் வந்து ரசிகர்களுக்கு கை அசைக்க வைக்கப்படுவாரா?
பதில்: விஜய்க்கு இருக்கும் நிர்ப்பந்தங்கள் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.

10. புதிய தலைமுறை பத்திரிக்கை - யாருடையது ? சன் குழுமமா? இல்லை வேறு யாராவதா? எப்படி 5 ரூபாய்க்கு விற்க முடிகிறது? அதுவும் இவ்வளவு டிவி விளம்பரங்களுடன்?
பதில்: அது எஸ்.ஆர்.எம். குழுமத்தைச் சேர்ந்தது. ஆசிரியர் மாலன். மாணவர்களை குறிவைத்து லாபநோக்கின்றி வெளியிடப்படுகிறது. அடக்கவிலை 13 இருக்க, பத்திரிகையின் விலை 5 ரூபாய்கள் மட்டுமே.

விஷய்ம் தெரிந்த பதிவுலக நண்பருக்கு ஃபோன் போட்டு தெரிந்து கொண்டது. அவர் யார் என்பதை நான் சொல்லப்போவதில்லை. அவரே அதை பின்னூட்டத்தில் கூறினால் ஆட்சேபணையும் இல்லை.


வால்பையன்
1. மோடி பூணூல் போடாத பார்ப்பானா
பதில்: மோடி பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். நீங்கள் சொல்லும் தலித்துகள் மேல் வன்கொடுமை இந்தியாவின் எல்லா மாவட்டங்களிலும் நிகழ்கிறது. அதற்காக மோதியை கண்டித்தால், முகவையும் கண்டிக்க வேண்டியிருக்கும்.

அவரைப் போல தனக்கோ தன்குடும்பத்தாருக்கோ சொத்து சேர்க்காது, ஊழலின்றி ஆட்சி புரியும் ஒரு முதல்வரும் வேறு மானிலங்களில் தற்போது இல்லை என்பதுதான் நிஜம்.


கந்தசாமி
இவைகளுக்கு உங்கள்( ஸ்பெஷல்)சூப்பர் கமெண்ட்?
1. பெண்​கள் அசைக்க முடி​யாத சக்​தி​: மு.க.ஸ்டா​லின் -அப்போ ஜெயலலிதா!

பதில்: ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவர். அரசியல் விரோதி. அவ்ரை பெண்ணாக திமுகவினர் நினைக்கவில்லை, அவரும் அதை எதிர்பார்க்கவில்லை. உண்மையில் அவரது மந்திரிசபையில் அவர் மட்டுமே ஆண் என இந்திரா காந்தி, கோல்டா மையர், மார்க்கரெட் தாட்சர் ஆகியோர் பற்றி குறிப்பிட்டது ஜெயுக்கும் பொருந்தும்.

2. கூட்​டணி வைப்​பேன்:​ விஜ​ய​காந்த்-அதிமுகவுடனா?
பதில்: திமுக தோற்க வேண்டுமானால் இதுவும் நடக்க வேண்டும். ஆனால் இந்த மனப்பாங்கு விஜயகாந்திடமோ ஜெயலலிதாவிடமோ இருக்கும் எனத் தோன்றவில்லை.

3. திரைப்​ப​டத் தொழி​லா​ளர் நல​வா​ரி​யம் அமைப்பு​: முதல்​வர் கரு​ணா​நிதி-பாசம்ன்னா இதுதான்
பதில்: பந்தபாசமோ பாசம்.

4. வங்கி ஊழி​யர்​கள் இன்று வேலை​நி​றுத்​தம்?-இது ஓவராயில்லை?
பதில்: ஸ்டேட் பாங்கில் இருந்து ஓய்வு பெற்ற எனது நண்பனுடன் பேசினதில் இதில் பிரமோஷன் குழப்பங்கள் முக்கியப் பங்கு வகிப்பதை அறிந்து கொண்டேன்.

5. வேடிக்கை பார்க்​கும் அமைப்​பு​தான் தேர்​தல் ஆணை​யம்:​ ராம​தாஸ்-நெசமாலுங்களா!
பதில்: இப்போது இருக்கும் தலைமை தேர்தல் கமிஷனர் இருக்கும் நிலையில் ராமதாசர் கூறுவது முழுக்கவே புறக்கணிக்க முடியாதுதான். ஏதோ நரேஷ் குப்தா இருக்கிறாரோ, கமிஷனின் பேர் பிழைக்கிறதோ.

6. நெல்லை விடு​தி​க​ளில் போலீ​ஸôர் திடீர் சோதனை​: ரூ.​ 41 லட்​சம் பறி​மு​தல்; அதி​மு​க​-வினரி​டம் விசா​ரணை-பழி ஒரிடம் பாவம்!
பதில்: 41 லட்சத்தை பறிமுதல் செய்பவர்கள் 41 கோடிகளை கண்டுகொள்ளாமல் விடுவது விசித்திரமே.

7. பாடாய் படுத்​தும் ஏ.டி.எம்.கள்-மெசினை நம்பினோர்...
பதில்: அவற்றுக்கு நல்ல செக்யூரிடி தேவை. பல மெஷின்களில் இந்த விஷயம் புறக்கணிக்கப்படுகிறது. மற்றப்படி ஏடிஎம்மே வேண்டாம் என இருக்கும் என் போன்றவர்களுக்கு பல உள் விஷயங்கள் தெரியாது என்பதும் நிஜமே.

8.ஆலங்​கு​டி​யில் குருப் பெயர்ச்சி வழி​பாடு-நல்ல அறுவடை சாமிகளுக்கு!
பதில்: ஆலங்குடியில் மட்டும்தானா? தமிழகத்தின் மீதி கோவில்களில் இல்லையா?

9. தமி​ழ​கத்தை பிரிக்​கும் கோரிக்​கைக்கு ‘இந்​து​முன்​னணி’ எதிர்ப்பு-அப்படி போடு அறுவாளை
பதில்: இந்து முன்னணியினரோ பாஜக-வோ அடிமட்டத்திலிருந்து தங்கள் அரசியல் தளத்தை அமைத்து, பலம் இருக்கும் த்குதிகளில் மட்டும் போட்டியிட்டு மெதுவாக வளர வேண்டியவர்கள். தேவையில்லாத ஸ்டண்டுகள் எல்லாம் காரியத்துக்காகாது.

10. திரு​வண்​ணா​மலை நகைக் கடை​யில் 5 கிலோ தங்​கம் திருட்டு -கணக்கு இருக்கா!
பதில்: யாரிடம்?


மீண்டும் அடுத்த வாரம் கேள்விகள் வந்தால் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

18 comments:

Anonymous said...

1.வாழும் மனிதர்களுக்கு வாழ்கைக்குத் தேவையான அழகின் அளவீடு என்ன?
2.பொதுவிழாக்களில் தங்களைத் தாங்களே பாராட்டிக் கொள்கிறவர்கள் பற்றி?
3.தமிழக காங்கரசாரின் சத்தியமூர்த்திபவனில் தற்போதைய செல்வாக்கு நிலவரம் ?
4.தமிழக அரசு அரசு உயர் அதிகாரிகளை அடிக்கடி பணிமாற்றம் செய்வது சரியா?
5.அரசால் கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாதபோது கள் இற்க்குவோரின் கோரிக்கையை நிறைவேற்ற தயங்குவது ஏன்?

Anonymous said...

மீண்டும் அடுத்த வாரம் கேள்விகள் வந்தால் சந்திப்போமா?

ஏன் என்ற கேள்வி -இங்கு
கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம் - கொண்ட
மனிதன் வாழ்ந்ததில்லை

பகுத்தறிவு பிறந்தததெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே(2)
உரிமைகளைப் பெறுவதெல்லாம் உணர்ச்சிகள் உள்ளதினாலே (2)

ஓராயிரம் ஆண்டுகளாக ஆகட்டுமே
நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே (ஓராயிரம்)
வரும் காலத்திலே நம் பரம்பரைகள்
நாம் அடிமை இல்லை என்று முழங்கட்டுமே
(ஏன் என்ற கேள்வி)

நீரோடைகள் கோடையில் காய்ந்திருக்கும்
மழைக்காலத்தில் வெள்ளங்கள் பாய்ந்திருக்கும் (நீரோடைகள்)
நம் தோள்வலியால் அந்த நாள் வரலாம்
அன்று ஏழை எளியவர்கள் நலம் பெறலாம்

முன்னேற்றம் என்பதெல்லாம் உழைப்பவர் உழைப்பதினாலே
கடமைகளை புரிவதெல்லாம் விடுதலை வேண்டுவதாலே

சைவகொத்துப்பரோட்டா said...

"திரு​வண்​ணா​மலை நகைக் கடை​யில் 5 கிலோ தங்​கம் திருட்டு -கணக்கு இருக்கா!

பதில்: யாரிடம்?"


கிச்சு கிச்சு

கேள்வி:கள்ள ஓட்டைத் தடுக்க, ஓட்டு போட வருபவர்களை போட்டோ எடுக்க தேர்தல்
கமிசன் எடுத்துள்ள முடிவு, கள்ள ஓட்டை தடுக்க வகை செய்யுமா?

வால்பையன் said...

ஏழு மணிநேர கேப்புல அடுத்த பதிவை போட்டா இது எப்படி கவனிக்கப்படும்!?

வால்பையன் said...

//தமிழ் நாட்டில் எத்தனையோ கட்டுப்பாடுகள் இருந்தும், ‘பலான’ படங்கள் இன்னும் வருகின்றனவே. இது எப்படி?//

அது என்ன கட்டுப்பாடு!?

மேலை நாடுகளில் ப்ளூபிலிம் நடிகர்களுக்கு சங்கமே இருக்கிறது!

வால்பையன் said...

//கோவில் விழாக்களில், சாமியாடுதல்' என்று கூறி, சாராயம் குடித்து, குறி சொல்வது தமிழர் பழக்கம்; மற்ற மாநிலங்களில் எப்படி?//

கிரிஸ்துவ மதத்தில் கூட சிலர் தீடிரென்று சம்பந்தமில்லத மொழியில் உளருவதை பார்த்திருக்கிறேன்!

குழப்ப மனநிலை உள்ளவர்கள் அனைவருக்கும் இந்த மாதிரி நடக்க வாய்புண்டு!

வால்பையன் said...

//வெளி மாநிலத்தவர்கள், காஷ்மீரில் நிலம் வாங்கவோ, காஷ்மீரிகள், வெளிமாநிலத்தாருக்கு விற்கவோ முடியாது என்பது பற்றி?//

காஷ்மீர் நமக்கு சொந்தமா என்ற சந்தேகம் இந்தியாவுக்கே உண்டு போல!

வால்பையன் said...

//உலகில் டிவி' ரிமோட் மட்டும் கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால்...என்னவாயிருக்கும்?//

டீவிக்கு மட்டுமல்ல, இனி எல்லா பொருளுக்கும் ரிமோட் வரப்போகிறது!

வெகு தொலைவிலிருந்தும் இயக்க முடியும் என்பது கூடுதல் தகவல்!

வால்பையன் said...

//காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்? தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு சாத்யமா?
பதில்: எங்கே தமிழகத்திலா? இப்போதைக்கு நோ சான்ஸ்//

எப்”போதை”க்கும் நோ சான்ஸ்!

வால்பையன் said...

/தற்சமயம் உள்ள தமிழ்த் தொலைக்காட்சிகளில் உருப்படியான நிகழ்ச்சி எது?
பதில்: ஜெயா டிவியில் சோவின் எங்கே பிராமணன்//

எத்தனை உருப்படிகள்!?

வால்பையன் said...

//மோடி பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். நீங்கள் சொல்லும் தலித்துகள் மேல் வன்கொடுமை இந்தியாவின் எல்லா மாவட்டங்களிலும் நிகழ்கிறது. அதற்காக மோதியை கண்டித்தால், முகவையும் கண்டிக்க வேண்டியிருக்கும்.//

மு.க.வை கண்டிக்க சிரபபட்டு, மோடியை கண்டிக்காமல் விட்டீர்களோ!?

தமது சொந்த மாநிலத்தில் இம்மாதிரியான பிரிவினையை ஆதரிக்கும் ஒருவர் எவ்வாறு முதலமைச்சராக இருக்கலாம், அது மோடியாக இருந்தாலும் சரி, மு.க.வாக இருந்தாலும் சரி!
கண்டிப்பதற்கு என்ன காசா கேட்டார்கள்!

dondu(#11168674346665545885) said...

//மு.க.வை கண்டிக்க சிரபபட்டு, மோடியை கண்டிக்காமல் விட்டீர்களோ!?//
மோடியோ, முகவோ இரட்டைக் குவளை முறையை ஆதரிக்கிறார்கள் என தட்டையாகக் கூறிவிட முடியாது. பிரச்சினை பல இடங்களில் வேரூன்றியுள்ளது. வெறுமனே அரசாணை போட்டு நிலைநிறுத்த முடியாது.

நான் மோடியை ஆதரிப்பது அவரது ஊழலற்ற ஆட்சிக்கும், தனிப்பட்ட முறையில் தனக்கும் தன் குடும்பத்துக்கும் சொத்து சேர்க்காமல் செயலாற்றுவதற்கும்தான்.

இப்போதுள்ள முதன் மந்திரிகளில் மோடிக்கு சமமாக இந்த விஷயத்தில் யாருமே இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வஜ்ரா said...

//
15. ஊரை கலக்கும் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் பார்ப்பதுண்டா?
பதில்: இல்லை, விஜய் டிவியெல்லாம் பார்ப்பதில்லை.
//

என்ன இது...
கூடை வைத்திருப்பவர்களுக்கெல்லாம் பெட்ரோமாக்ஸ் லைட் கொடுப்பதில்லை என்பது மாதிரியான ஒரு பதில்...
இதெல்லாம் ஒரு பதிலா ?

Unknown said...

இதெல்லாம் ஒரு கேள்வி அதற்க்கு ஒரு பதில், மு.க போல தானே கேள்வி கேட்டு தானே படிச்சிக்கதான் லாயக்கு

Anonymous said...

Mr. Dondu

I see only 6 posts under your 'Nehru Legacy' folder. Where can i find the rest? Indra's 1975-1983 time period.

Regards
-Venkat

Anonymous said...

கேள்விகள்:

எம்.கண்ணன்

1. தெலுங்கானா, ஆந்திரா போராட்டங்களினால் திரைப்படத்துறைக்கும், போக்குவரத்து மற்றும் வணிகத்துறைக்கு மிகுந்த நஷ்டமாமே ? தமிழ் நடிக/நடிகர்கள், இயக்குனர்கள் இனி ஹைதராபாத் சென்று படம் எடுக்க யோசிப்பார்கள் தானே ?

2. கோபன்ஹேகனில் இன்று நிறைவுறும் Climate மாநாட்டில் எடுக்கப் போகும் முடிவுகளால் காமன்மேன் எனப்படும் இந்திய / தமிழக பிரஜைக்கு என்ன என்ன பாதிப்புகள் ஏற்படும் ? கார் / 2 வீலர் வாங்கக்கூடாது, ஜெனரேட்டர் உபயோகம் பண்ணக்கூடாது, ஏஸி உபயோகிக்கக்கூடாது என அன்றாட வாழ்வில் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தும் முடிவுகள் ஏற்படுமா ? மேலும் நம் நாட்டின் முன்னேற்றத்திற்கான தொழிற்சாலை / கட்டுமானம் கட்டுவதில் தடைகள் வருமா ? இதனால் முன்னேற்றம் பாதிக்குமா ?

3. வைரமுத்துவும் வாலியும் இணைந்து கலைஞரின் பெண் சிங்கம் படத்துக்கு பாடல் எழுதப் போகிறார்களாமே ? அடுத்த வருட விருது இருவருக்கும் பகிர்ந்து அளிப்பதற்காகவா இது ? இல்லை யாருடைய ஜால்ரா அதிகம் என பார்ப்பதற்காகவா ?

4. தமிழ்ப் பட ஹீரோயின்கள் இந்திக்கும் போய்விட்டதால், அனுஷ்காவின் ராஜ்ஜியம் இங்கு வருமா ?

5. குமுதத்தில் முதல்வாரம் கௌதமி பேட்டி, அடுத்த வாரம் வாணி கணபதி பேட்டி. வரும் வாரங்களில் சரிகா, சிம்ரன் பேட்டிகள் வருமா ?

6. இவர்களில் யார் யார் - இட்லிவடை குழாமில் உறுப்பினர் - எ.அ.பாலா, பா ராகவன், பத்ரி, தேசிகன், பெனாத்தல் சுரேஷ், ஹரன் பிரசன்னா, ரஜினி ராம்கி, பாஸ்டன் பாலாஜி, சு.க்ருபாஷங்கர், இதில் யார் சரக்கு மாஸ்டர் ? எ.அ.பாலா ?

7. அத்வானி ஆக்டிவாக நடமாடிக்கொண்டிருக்கையிலேயே (வாஜ்பாய் மாதிரி அல்லாமல்) அவருக்கு கடைசி நாள் குறித்து - அவரை ராஜினாமா செய்யவைத்து - போதும் உங்கள் இருப்பு என சொல்வது என்ன மாதிரியான ஆர்.எஸ்.எஸ். அரசியல் ? அவராகவும் ஏன் தானே ஒதுங்காமல் இப்படி இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கிறார் (கட்சியில், பதவியில்) ?

8. நிதின் கட்கரி பாஜக தலைவரானால் - அவர் சொல்லுவதையெல்லாம் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்களில் உள்ள பாஜக தலைவர்கள், தொண்டர்கள் கேட்பார்களா ? மகாராஷ்டிரத்திலேயே சிவசேனா பிரச்னைகளில் அவரால் ஏதும் செய்து வெற்றி பெற முடியாத நிலையில் இந்தியா அளவிற்கு பஜக தலைவரானால் யார் கேட்கப்போகிறார்கள் ?

9. கூடாரவல்லி கொண்டாடுவது உண்டா ? வைகுண்ட ஏகாதசிக்கு வழக்கமாக எந்த கோயில் விசிட் ? திருவல்லிக்கேணியா ? நங்கநல்லூரேவா ?

10. சன் டிவியில் இரவு 10.30மணிக்கு 'விஜய் டிவியின் நடந்தது என்ன பாணியில்' காசியில் இருக்கும் அகோரிகள், நர மாமிசம் சாப்பிடுவதையும் காட்டினார்கள் (புதனன்று) - பார்த்தீர்களா ?

Anonymous said...

இதெல்லாம் ஒரு கேள்வி அதற்க்கு ஒரு பதில், மு.க போல தானே கேள்வி கேட்டு தானே படிச்சிக்கதான் லாயக்கு

itharku ungkal pathil yenna?

dondu(#11168674346665545885) said...

//itharku ungkal pathil yenna?//
மௌனம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது