7/24/2010

மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் டோண்டு ராகவன் குற்றவாளியாக நின்றபோது

சமீபத்தில் 1962 செப்டம்பர் 14-ஆம் தேதி இரவு ஏழரை மணியளவில் சென்னை டி-1 போலீஸ் ஸ்டேஷன் போலீசாரால் அப்பக்கம் சைக்கிளில் வந்த நான் வாலாஜா ரோடில் நிறுத்தப்பட்டேன். எனக்கு ஒன்றும் புரியவில்லை, சைக்கிள் லைட் எரிந்து கொண்டுதான் இருந்தது. அப்புறம் பார்த்தால் தெருநடுவில் ரேஷ் ட்ரைவிங் என பிடித்திருக்கிறார்கள். பெயரை கேட்டு வயதையும் கேட்டார்கள், எங்கே வேலை செய்கிறேன் என்றும் கேட்டார்கள்.

நான் மாணவன், புதுக்கல்லூரியில் பி.யு.சி. படிக்கிறேன், வயது 16 என்றதும் நம்பாமல் பொய் சொல்கிறேன் என்றார்கள். நல்ல வேளையாக கல்லூரி நூலக அட்டை எதேச்சையாக பையில் இருந்ததோ பிழைத்தேனோ (வீட்டில் அதை பத்திரமாக வைக்காது மறதியாக பாக்கெட்டிலேயே இருந்ததும் நல்லதற்கே). எது எப்படியானாலும் சைக்கிளை ஸ்டேஷனிலேயே விடவேண்டியிருந்தது. அடுத்த நாள் காலை எக்மோர் மேஜிஸ்டிரேட் கோர்ட்டுக்கு போக நானும் என் அத்தை பிள்ளையும் பஸ் ஏறினோம்.

கோர்ட்டில் நல்ல கும்பல். மேஜிஸ்டிரேட் பெண்மணி வந்தவுடனேயே கேஸ்களை கூப்பிட ஆரம்பித்து விட்டார்கள். முதலில் டி ஸ்டேஷன் கேஸ்கள் கூப்பிட ஆரம்பித்தனர். முதலாமவ்ர் கூப்பிடப்பட்டு அவர் கேஸ் பைசல் செய்யப்பட்டதும் இரண்டாவதாக ராகவன், ராகவன் என டவாலி கத்த நான் முன்னேற, அந்தப் பாவியோ “நாராயணன் மகன் ராகவன்” என்றதும் திரும்பி வந்து விட்டேன். சற்று நேரம் கழித்துத்தான் அந்த மடையன் நரசிம்மன் என இருந்ததை நாராயணன் என படித்து தொலைத்திருக்கிறான் என புரிந்து கொண்டேன். டூ லேட். எனது முறை தவறியது தவறியதுதான். டி1 ஸ்டேஷன் போலீஸ்காரர் என்னிடம் ஓப்பனாக சொன்னார், பேப்பர் திரும்ப மேஜிஸ்ட்ரேட்டிடம் செல்ல வேண்டுமானால் சம்பந்தப்பட்ட கிளார்க் கையில் நான்கணா வைத்து அழுத்தும்படி. நான் பயம் காரணமாக அதை செய்யவில்லை.

சில நாட்கள் கழித்து சம்மன் வரும் என சொன்னார்கள். பிறகு என் தந்தை என்னுடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து எனது சைக்கிளை போலீசில் பேசி வாங்கித் தந்தார். அவருக்கு தெரிந்த ஏ.சி. மூலம் கேஸையே தள்ளச் செய்தார். (சாதாரண நியூசன்ஸ் கேசானதாலோ, எனக்கு வயது குறைவு என்பதாலோ என்னவென்று தெரியாது. ஆனால் இதுதான் நடந்தது).

என்ன ஆச்சரியம்? 29 நாட்கள் கழித்து சம்மன் வேறு வந்தது. என் தந்தை போலீஸ் ஸ்டேஷனில் விசாரிக்க, அது தவறாக அனுப்பப்பட்டது என்றும், அதை கண்டு கொள்ள வேண்டாம் எனவும் கூறப்பட்டது. இருப்பினும் நான் போய் வைத்தேன் என வைத்துக் கொள்ளுங்கள். அதே போலீஸ்காரர் எனது பெயர் லிஸ்டில் இருப்பதை உறுதி செய்தார். ஆனால் 15 நிமிடம் கழித்து என்னிடம் நேரே வந்து பேசாமல் வீட்டுக்கு போகும்படி கூறிவிட்டார். ஆக, என்ன நிஜமாக நடந்தது என்பது இப்போதும் எனக்கு தெரியாது.

ஆனால் அச்சமயம் கூறப்பட்ட அபராதத் தொகைகள்தான் தமாஷ். நான் செய்த குற்றத்துக்கு அபராதம் ஒரு ரூபாய். அதே சமயம் ஜட்ஜ் குற்றம் செய்தாயா எனக் கேட்டால் இந்த ஒரு ரூபாயுடன் தப்பிக்கலாம், இல்லை என வாது புரிந்தால் அபராதம் சகட்டுமேனிக்கு ஏறிவிடும். ஆகவே எல்லோருமே குற்றத்தை ஒப்புக் கொண்டு விடுவார்கள், கோர்ட் நடவடிக்கைகளும் சீக்கிரம் முடியும்.

ஆனால் இம்மாதிரி ஒப்புக் கொண்டு தப்பிப்பது எல்லா குற்றங்களுக்குமே சாத்தியம் எனக் கூற முடியாது. இருவர் அல்லது பலர் தெருவில் சண்டை போட்டு போலீசாரல் கைது செய்யப்பட்டால், ஜட்ஜ் அவர்களை சண்டை போட்டீர்களா எனக் கேட்பார். ஆமாம் என்றால் அடுத்த கேள்வி ஏன் சண்டை போட்டீர்கள் என்பதேயாகும். அபராதமும் சற்றே ஹெவிதான் (15 ரூபாய்). அதாவது இது சீரியஸ் குற்றமாக கருதப்படுகிறது.

ஒரு 20 வயது வாலிபரை கேட்ட கேள்வி, அவர் தெருவில் காற்றாடி விட்டாரா என்பதாகும். அவர் ஆமாம் எனக் கூற அபராதம் 50 ரூபாய் எனக் கூறப்பட்டது. அக்காலக் கட்டத்தில் அது பெரிய தொகை. நான் கூட நினைத்தேன், இதற்கு ஏன் இவ்வளவு அபராதம் என்று. பிறகு மாஞ்சா நூலில் கழுத்து அறுபட்டு சில மரணங்கள் நிகழ்ந்த பிறகுதான் இது தேவையே என்பதை நான் உணர்ந்தேன்.

அதுவும் ஜூலை 24-27 தேதியிட்ட நக்கீரன் இதழில் அம்மாதிரி மாஞ்சா கயிற்றல் கழுத்து அறுபட்டு மரணமடைந்த திருப்பதி என்பவரின் கதையை படித்ததும் இது எவ்வளவு சீரியசான கிரைம் என்பது புரிகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

13 comments:

Madhavan Srinivasagopalan said...

//தெருநடுவில் ரேஷ் ட்ரைவிங் என பிடித்திருக்கிறார்கள். //

Rash driving in cycle ?
Then what to call bike riding by warm blooded youngsters these days..?

அருள் said...

மிதிவண்டியில் சென்னையின் வீதிகளில் 'ஹாயாக' போய் வந்திருக்கிறீர்கள். கொடுத்துவைத்தவர் நீங்கள்.
இந்த காலத்தில் சென்னையின் சாலைகளில் மிதிவண்டியில் பாதுகாப்பாக செல்ல வாய்ப்பிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உடற்பயிற்சி, மாசுபாடு குறைதல், விபத்து தடுப்பு, வீண் செலவு இல்லாமை - என மிதிவண்டியால் எத்தனையோ நன்மைகள் உண்டு.

அரசங்கம் மேம்பாலங்கள் கட்டுவதைக் கைவிட்டு மிதிவண்டிக்கும், நடப்பதற்கும் வழிவிடவேண்டும். மகிழுந்துகளும் தனியார் வண்டிகளும் கட்டுப்படுத்தப்பட வேண்டும். பேருந்துகள் எண்ணிக்கை அதிகமாக வேண்டும்.- இப்படி 'போக்குவரத்தில் ஒரு பொற்காலம்' வரவேண்டும்.

இதற்கெல்லாம் பன்னாட்டு மகிழுந்து நிறுவனத்தினர் விட்டுவிடுவார்களா என்ன?

ஏதோ போங்கள் - டோண்டுசார், மிதிவண்டியில் போனீங்க, அதுஒரு பொற்காலம்தான். பொறாமையா இருக்கு.

dondu(#11168674346665545885) said...

@அருள்
சைக்கிளை இப்போதும் சென்னை வீதிகளில் ஓட்டலாம். அது அவ்வளவாக பரவலாக தென்படாததற்கு முக்கியக் காரணம் மக்களின் பொருளாதார வசதிகள் பெருகியதால்தான். சைக்கிளில் செல்வது அவமானமாகக் கருதப்படுகிறது என்பது விசனத்துக்குரியது.

நான் எனது நாற்பது வயதுகளில் தினசரி போக வர 40 கிலோமீட்டர்கள் சைக்கிள் விட்ட விவரங்களை காண இப்பதிவுக்கு செல்லவும், http://dondu.blogspot.com/2006/04/3.html

மனதுதான் வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அபி அப்பா said...

சைக்கிள் சவாரி உடம்புக்கும் பாக்கெட்டுக்கும் ரொம்ப நல்லது என்பதே என் கருத்தும். பை தி பை உங்க அத்தை பிள்ளையா?:-)

dondu(#11168674346665545885) said...

@அபி அப்பா
அத்தை பிள்ளை --> அத்தையின் பிள்ளை

ஆறாம் வேற்றுமைத் தொகை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

வானிலை அறிக்கை:

இன்று சென்னை அதன் சுற்றுப்பட்ட நகரங்கள் அனைத்திலும் இடியுடன் கூடிய கண மழை பெய்யக் கூடும். குடை எடுத்துச் சென்றாலும் பயன் இருக்காது , சும்மா பிச்சுக்கிட்டு மழை கொட்டப் போகுது.

ஆருயிர் அருள் அண்ணன் பதிவை ஒட்டிய பின்னூட்டம் இட்டதும் கட் அண்ட் பேஸ்ட் செய்யாததும் இதற்கு காரணம் என இன்சாட் 1பி-ல் இருந்து வரும் தகவல்கள் உறுதி செய்கின்றன.

R.Gopi said...

ரெக்கை கட்டி பறந்தீரே டோண்டு அய்யா....

நானும் சமீபத்தில் (1992 ஆம் ஆண்டு), அண்ணாமலை படத்தில் ரஜினி சைக்கிள் விட்டு பார்த்தது தான்... அதற்கு பிறகு நீங்களோ, ரஜினியோ அல்லது வேறு பிரபலங்களோ சைக்கிளை ஓட்டி பார்த்தத்தில்லை....

அருள் said...

டோண்டு ராகவன் Said...

// //சைக்கிளை இப்போதும் சென்னை வீதிகளில் ஓட்டலாம். அது அவ்வளவாக பரவலாக தென்படாததற்கு முக்கியக் காரணம் மக்களின் பொருளாதார வசதிகள் பெருகியதால்தான். சைக்கிளில் செல்வது அவமானமாகக் கருதப்படுகிறது என்பது விசனத்துக்குரியது.// //

நம்மைவிட பலமடங்கு அதிக பொருளாதார வசதிகொண்ட ஐரோப்பிய நாடுகளில் மிதிவண்டிகள் கணிசமாக பயன்படுத்தப்படுகின்றன. மிதிவண்டியை ஊக்கப்படுத்த அங்கு ஏராளமான வசதிகள் செய்துதரப்படுகின்றன. குறிப்பாக பாரிஸ் நகரின் வாடகை மிதிவண்டித்திட்டம் இப்போது உலகப்புகழ் பெற்றுவிட்டது.

பாரிஸ் மிதிவண்டித்திட்டம்: http://en.wikipedia.org/wiki/Vélib'

பாரிஸ் நகரைப் பின்பற்றி இப்போது உலகின் சுமார் 125 நகரங்கள் வாடகை மிதிவண்டியைப் பயன்படுத்துகின்றன.

உலகெங்கும் வாடகை மிதிவண்டித்திட்டங்கள்: http://en.wikipedia.org/wiki/Community_bicycle_program

கடந்த ஆண்டு புவி வெப்பமடைதல் குறித்த ஐ.நா. காலநிலை மாற்ற மாநாட்டிற்காக டென்மார்க்கின் கோபன்ஹெகன் நகருக்கு சென்ற போது - அங்கு மிதிவண்டிக்காக செய்யப்பட்டிருந்த வசதிகளையும், ஏராளமானோர் கொட்டும்பனியிலும் மிதிவண்டிகளில் சென்றதையும் கண்டு அசந்துவிட்டேன். அங்கு எல்லோரிடமும் பணம் இருக்கிறது (பணம் இல்லாதவர்களுக்கு அரசாங்கமே இலவச சம்பளம் கொடுப்பது வேறு கதை). எல்லோரிடமும் மகிழுந்து இருக்கிறது. ஆனாலும் பெரும்பாலான மக்கள் மிதிவண்டியில் போகிறார்கள்.

மிதிவண்டிப்பயணத்தைக் கொண்டாட அங்கு ஒரு உலக விழாவே அண்மையில் நடத்தப்பட்டது. காண்க: http://velo-city2010.com

மனதுதான் வேண்டும் என்பது ஓரளவுக்கு உண்மைதான். ஆனால், அரசாங்கம் உரிய வசதிகளை செய்து தராததும், தனியார் வாகன எண்ணிக்கை பலமடங்கு அதிகமானதும், மிதிவண்டிகளை ஏழைகள்தான் ஓட்டுவார்கள் என்பதுபோன்ற மூடநம்பிக்கையும் நமது போக்குவரத்து முறையை சீரழித்துவிட்டன.

மிதிவண்டிகளுக்கு பாதுகாப்பான வழி,மிதிவண்டி நிறுத்திவைக்க தனி இடம், வசதியான நடைபாதைகள், அதிகமான பொதுபோக்குவரத்து வசதிகள் போன்றவையும் மிதிவண்டிப் பயணத்தை ஊக்குவிக்க தேவை.

அருள் said...

R.Gopi said...

// //நானும் சமீபத்தில் (1992 ஆம் ஆண்டு), அண்ணாமலை படத்தில் ரஜினி சைக்கிள் விட்டு பார்த்தது தான்... அதற்கு பிறகு நீங்களோ, ரஜினியோ அல்லது வேறு பிரபலங்களோ சைக்கிளை ஓட்டி பார்த்தத்தில்லை....// //

பிரபலங்கள் மிதிவண்டி ஓட்டி பார்க்கவேண்டும் என்கிற உங்கள் ஆசைக்காக:

http://www.gazettenet.com/2009/12/16/carbon-generation-gap

http://www.gazettenet.com/files/images/20091215-202133-pic-683626334.display.jpg

இந்த படத்தில் மிதிவண்டி ஓட்டுபவர் நமது சென்னை நகர மேயர் மா.சுப்பிரமணியன். ஆனால், மிதிவண்டி ஓட்டும் இடம்தான் சென்னை இல்லை. இது கோபன்ஹெகன் நகரம், டென்மார்க் (2009 டிசம்பர்). அவருக்கு அருகில் மிதிவண்டி ஓட்டுபவர் மெக்சிகோ நகர மேயர்.

dondu(#11168674346665545885) said...

Hi Dondu,

Congrats!

Your story titled 'மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் டோண்டு ராகவன் குற்றவாளியாக நின்றபோது' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 26th July 2010 03:50:02 AM GMT



Here is the link to the story: http://ta.indli.com/story/309505

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

நன்றி தமிழிஸ்

அன்புடன்,
டோண்டு ராகவன்

Jey said...

அந்த காலத்து நடைமுறையை அழகாக எழுதியுள்ளீர்கள். சைக்கிளிலேயே ரேஷ் டிரைவிங்கா... இப்போ பைக் டிரைவிங்கும் அதுமாதிதானா சார்:)

dondu(#11168674346665545885) said...

//இப்போ பைக் டிரைவிங்கும் அதுமாதிரிதானா சார்:)//
பைக்கெல்லாம் ஓட்டத் தெரியாது எனக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

ஓ.. உங்களுக்கு பழச மறக்காத நல்ல குணமும் இருக்கா..
அருமையான பதிவு

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது