இன்று குமுதம் சினேகிதி வந்தது. அதில் வழமையாக நான் படிக்கும், இந்திரா சவுந்தரராஜனின் “ரங்கநதி” தொடர்கதை காணவில்லை. சரி ஆசிரியருக்கு ஃபோன் போட்டுக் கேட்கலாம் என நினைத்தால், சினேகிதியில் தரப்பட்ட எண்ணில் யாருமே ஃபோனை எடுக்கவில்லை (ஒரு வேளை காலை 10 மணிக்கு அப்புறம்தான் வருவார்களோ). சரி கூகளிட்டு லோகநாயகி அவர்களின் வேறு எண் கிடைக்குமா எனப்பார்த்தால் அவருக்கும் குமுதம் தலைமை நிருபர் திருவேங்கிமலை சரவணனுக்கும் இடையில் கடந்த ஏப்ரல் மாதம் எழுந்த பிரச்சினை பற்றிய கட்டுரை வந்தது.
அப்பிரச்சினை என்னவாயிற்று என்பதைப் பார்க்க திருவேங்கிமலை சரவணன் பற்றி கூகளிட்டால் வை.மு.கோதநாயகி அம்மாள் பற்றி திருப்பூர் கிருஷ்ணன் எழுதியதை அவர் குமுதத்தில் எழுதியதை பதிவர் BSubra எழுதிய பதிவு கிடைத்தது.
சரி, கிடைத்தவரை லாபம். வை.மு.கோ. பற்றி எனது பதிவிலும் போடுகிறேன்.
நன்றி குமுதம் மற்றும் BSubra.
குமுதம்
மறக்க முடியாத மங்கைகள்
‘நாவல் அரசி’ வை மு கோதை நாயகி
திருவேங்கிமலை சரவணன்
அந்தப் பெண்ணுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. காரணம் அவள் பள்ளிக்கூடம் பக்கமே போனதில்லை.
ஆனாலும் அவள் ஒரு கதை எழுதினாள். அதைப் படித்த ஆயிரக்கணக்கான வாசகர்கள் மயங்கிப் போனார்கள். படிப்பவர்களைக் கட்டிப்போடும் வசீகரம் அந்த எழுத்தில் இருந்ததைக் கண்டு எழுத்துலகமே பிரமித்தது. அவள் எழுதிய துப்பறியும் கதைகளைப் படித்து பெண்கள் அதிர்ந்தார்கள். அந்தப் பெண்ணின் பெயர் வை.மு.கோதைநாயகி.
எழுதப் படிக்கத் தெரியாத வை.மு.கோதைநாயகியால் எப்படி இப்படியரு நாவலை எழுத முடிந்தது?
இருபதாம் நூற்றாண்டில் ஈடுஇணையற்ற பெண் எழுத்தாளர் என்று போற்றப்பட்டவர் வை.மு.கோதைநாயகி. நமது இந்திய சுதந்திரத்திற்காக போராடியவர். மேடைப் பேச்சாளர், கவிஞர், நாவலாசிரியர் சமூகநல ஊழியர், பத்திரிகை ஆசிரியர் இப்படி பல முகங்கள் வை.மு.கோதைநாயகிக்கு உண்டு. அவர் எழுதிய காலத்தில் பல்லாயிரக்கணக்கான வாசகர்களைப் பெற்றவர். எழுதியதைப் போலவே வாழ்ந்தும் காட்டியவர். பொதுவாழ்வில் மட்டுமல்லாமல் தனது சொந்த வாழ்க்கையிலும் கடைபிடித்தவர்.
செங்கல்பட்டு மாவட்டம் நீர்வளூர்தான் கோதைநாயகியின் சொந்த ஊர். வெங்கடாச்சாரி_பட்டம்மாள் தம்பதியருக்கு 1.12.1901_ல் மகளாகப் பிறந்தவர். வைணவ குடும்பத்தைச் சேர்ந்த இவர் சின்ன வயதில் கோதை என்றும் ஆண்டாள் என்றும் செல்லமாக அழைக்கப்பட்டவர்.
சிறுவயதிலே திருமணம் செய்து வைக்கும் வழக்கம் இருந்த காலம். அதனால் ஐந்து வயதான கோதை நாயகியை ஒன்பது வயது சிறுவன் வை.மு.பார்த்தசாரதிக்குத் திருமணம் செய்து வைத்தனர்.
சிறுவயதிலேயே மற்றவர்கள் ரசிக்கும் அளவிற்கு கதைகளைக் கூறும் திறன் கோதைநாயகிக்கு இருந்தது. மனைவியின் கதை சொல்லும் திறனைக் கண்ட கணவர் பார்த்தசாரதி, அவருக்கு புராணம், மந்திரங்கள் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்தார்.
ஆரம்ப காலத்தில் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு பழைய கதைகளைச் சொல்லி வந்தார். இவர் கதை சொல்லும் அழகைக் கண்டு, பெரியவர்களும் வந்து உட்கார்ந்து கேட்கத் தொடங்கிவிட்டனர்.
விக்கிரமாதித்தன் கதையிலிருந்து தெனாலிராமன் கதை வரை எல்லாவற்றையும் சொல்லித் தீர்த்துவிட்டார். குழந்தைகளுக்கு இனி புதிய புதிய கதைகளாக எதைச் சொல்வது என்று யோசித்து, அவராக கற்பனை செய்து, மிக அழகழகான கதைகளைச் சொல்ல ஆரம்பித்துவிட்டார். இப்படித்தான் இவருக்குக் கதை எழுதும் ஆசையே வந்தது.
பெண் என்பதால் பள்ளி செல்வது மறுக்கப்பட்ட காலம் அது. அதனால் கோதைநாயகி பள்ளிக்கூடம் போகவில்லை. அதனால் அவருக்கு எழுதப் படிக்கவும் தெரியாது.
ஆனால், வீட்டில் எப்போதும், திருவாய்மொழி, பாசுரங்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும். அவை அவரது மனத்தில் நீங்காமல் குடிகொண்டதால் தமிழ்நடை அவருக்கு சரளமாக வரத் தொடங்கியது. ஆனால் அவரால் எழுதமுடியாது. இவர் சொல்லச்சொல்ல எழுதச் சொன்னார். அப்படி அவர் சொல்லி பட்டம்மாள் எழுதி உருவானதுதான் ‘இந்திரமோகனா’ என்ற முதல் நாவல்.
கதை எழுதத் தொடங்கியதும் கோதைநாயகிக்குப் புதிது புதிதாக கதைகள் எழுதும் ஆற்றல் வரவேண்டும் என்பதற்காக, அவரது கணவர் கோதைநாயகியைப் பல நாடகங்களுக்கு அழைத்துச் சென்றார். பெண்கள் நாடகம் பார்க்க வராத காலமாக இருந்தும், துணிந்து மனைவியை நாடகங்களுக்கு அழைத்துப் போனார். அதன் விளைவு கோதைநாயகி தானே ஒரு நாடகத்தை உருவாக்கத் தொடங்கிவிட்டார். தன் தோழி பட்டமாளிடம் சொல்லச்சொல்லி, அந்த நாடகத்தை எழுதி முடித்தார்.
இதனைத் தொடர்ந்து பட்டம்மாளிடமே அவர் தமிழை எழுதவும் படிக்கவும் கற்கத் தொடங்கினார்.
அந்தக் காலத்தில் பெண்கள் கதை எழுதுவது, பத்திரிகை நடத்துவது என்பது பலரால் ஜீரணிக்க முடியாத விஷயங்களாக இருந்தன. அடுப்பு ஊத வேண்டிய பெண்ணுக்கு இப்படிப்பட்ட அதிகப் பிரசிங்கித்தனமான வேலைகள் எதற்கு என்று பெண்களே எண்ணிய காலம் அது.
இந்த இரண்டு வேலைகளையும் கோதைநாயகி துணிந்து செய்தார். அதனால் அவர் தெருவில் நடந்து போகும்போது, அவர் மீது காறி உமிழ்ந்தவர்கள் ஏராளம். அதை கோதை நாயகி ஒரு பொருட்டாகக் கருதாமல் தொடர்ந்து எழுதினார்.
‘ஜகன்மோகினி’ என்ற பத்திரிகையைத் தொடங்கினார். பலர் பலத்த எதிர்ப்பு காட்டினர் என்றாலும், மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த பத்திரிகைதான் நல்ல வழி என்று பின்வாங்க மறுத்தார்.
அவருக்குத் தெரிந்த பலரே ‘ஜெகன்மோகினி’ பத்திரிகையைக் கொளுத்தினர். இன்னும் சிலர் அவர் கண்ணெதிரிலேயே கொளுத்தி அவர்மீது வீசினர். இதைக் கண்டு கோதைநாயகி அஞ்சவில்லை. தைரியத்தோடு எதிர்கொண்டார். அதுதான் அவர் பிற்காலத்தில் செய்த சீர்திருத்தங்களுக்கு மூலகாரணமாக இருந்தது. ‘‘கொளுத்துவதற்காகவாவது என் பத்திரிகையை வாங்குகிறார்களே, அந்த வகையில் சந்தோசம்தான்’’ என்று சிரித்துக்கொண்டே மற்றவர்களிடம் சொன்னார்.
எழுத்துலகில் கோதைநாயகி பெற்ற பெரிய புகழைக் கண்டு பலர் பொறாமை கொண்டனர். ஆனால் சுத்தானந்த பாரதி அவரை ‘நாவல் ராணி’ என்று பாராட்டினார்.
தமிழ்நாட்டில் ‘ஜகன்மோகினி’ முன்னணிப் பத்திரிகைகளுள் ஒன்றாக முன்னேறியது. கோதை நாயகியின் பல நாவல்கள் ஜகன்மோகினி மூலம்தான் தமிழ் உலகம் பெற்றது. இந்து, முஸ்லிம் ஒற்றுமை, பெண் விடுதலை, தேசபக்தி, மதுவிலக்கு, விதவை திருமணம் ஆகியவற்றை நாவல்கள் மூலம் வலியுறுத்தி எழுதினார்.
தமிழ் நாவலின் தொடக்க காலத்தில்தான் கோதைநாயகி வாழ்ந்ததும் எழுதியதும். தனது படைப்புகளைப் படிப்பவர்கள் மனதைக் கொள்ளைகொள்ளும் வசீகரம் அவரது எழுத்தில் இருந்தது. ஒவ்வொரு நாவல்களும் ஒவ்வொருவிதமாக இருக்கும். அவர் எழுதிய 115 நாவல்களும் 1115 விதங்களில் இருந்தன. யாருக்கும் கைவராத இயல்பு இது.
கோதைநாயகியின் கதைகளை முதலில் வடுவூர் துரைசாமி ஐயங்கார் தமது ‘மனோரஞ்சனி’ இதழில் வெளியிட்டு ஊக்கம் தந்தார். 1925_ல் கோதைநாயகி பொறுப்பில் ‘ஜகன்மோகினி’ என்ற இதழ் வெளிவரத் தொடங்கியது. அதில் அவரது நாவல்கள் தொடர்ந்து பிரசுரமாக, அதன் சர்குலேஷன் எண்ணிக்கை உயரத் தொடங்கியது. சக்கைபோடுபோட்டு வடுவூரார் நடத்தி வந்த ‘மனேரஞ்சனி’ தேக்கநிலையை அடைந்து இதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
‘‘நான்தான் வை.மு. கோதை நாயகிக்காக வைதேகி நாவலை எழுதிக் கொடுத்தேன். இனிமேல் வைதேகி ஜகன்மோகினியில் தொடராது’’ என்று ‘மனோரஞ்சனி’யில் வடுவூரார் குறிப்பிட்டு இருந்தார். வாசகர்கள் இதை நம்பவில்லை. அதற்கு ஏற்றாற்போல் வைதேகி ஜகன்மோகினியில் தொடர்ந்து வந்து ஏராளமான வாசகர்களைப் பெற்றார் கோதை நாயகி.
அந்தக் காலத்தில் கோதை நாயகி மேடை ஏறினால், அவர் பேச்சைக் கேட்க மாபெரும் கூட்டம் கூடும். பேசும்போது இடையிடையே குட்டிக் குட்டிக் கதைகளைச் சொல்லி கூட்டத்தை ஆடாமல் அசையாமல் உட்கார வைக்கும் திறன் அவரிடமிருந்தது.
கர்நாடாக இசையில் வை.மு.கோவுக்கு இருந்த ஆற்றல் அளவிடற்கரியது. அவரது குரல் வளம், உச்சரிப்பு, பாடும் திறன் பலரை அவர் பாட்டுக்கு அடிமையாக்கியிருந்தது. அவர் பாடியதோடு மட்டுமல்லாமல் பல இளம் இசைக்கலைஞர்களையும் ஊக்குவிக்கத் தொடங்கினார். அந்த வரிசையில் முதலிடம் பெற்றவர்தான் டி.கே. பட்டம்மாள்.
எழுத்துலகிலும் இசை உலகிலும் இந்தளவிற்கு ஒருசேரப் புகழ் பெற்றவர் யாருமே இல்லை.
ஒருமுறை வேலூரில் ராஜாஜி தலைமையில் பேசும் வாய்ப்பு கோதைக்குக் கிடைத்தது. ராஜாஜியை முதன்முதலாக அப்போதுதான் சந்திக்கிறார். மடைதிறந்த வெள்ளம் போல் அவர் பேசும்பேச்சைக் கேட்டு மயங்கியவர், ‘‘இனிமேல் நான் பேசும் இடங்களில் எல்லாம் நீயும் வந்து பேசு’’ என்று ராஜாஜி அன்பாக உத்தரவிட்டார். அதன்பிறகு ராஜாஜி பேசிய பின்னர் கோதை பேசுவது என்று பல இடங்களில் நடந்தேறியது.
1932_இல் ‘லோதியன் கமிஷன்’க்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கோதையை வேலூர் சிறையில் அடைத்தார்கள்.
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்ற முதல் பெண் எழுத்தாளர் இவர்தான். ஒரு எழுத்தாளர் என்ற முறையில் சிறையில் இருந்த காலத்தைப் பயனுள்ளதாகப் பயன்படுத்திக் கொண்டார். ஒவ்வொரு கைதியையும் தனித்தனியாக சந்தித்து அவர்கள் சிறைக்குள் தள்ளப்பட்ட காரணங்களைக் கேட்டு அவற்றை நாவலாக எழுதத் தொடங்கினார். சிறைக்கைதிகளை வன்முறை பாதையிலிருந்து திசை திருப்பி காந்திய பாதைக்குக் கொண்டு செல்ல முயன்றார். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றார்.
சிறையில் இருந்தபோது எழுதிய நாவல்தான் ‘சோதனையின் கொடுமை’. ராஜாஜி இதைப் படித்துவிட்டுப் பாராட்டினார்.
லட்சக்கணக்கான வாசகர்களின் உள்ளத்தைக் கவர்ந்த கோதையின் நாவல்கள் பல பிற்காலத்தில் திரைப்படங்களாக எடுக்கப்பட்டன.
ராஜமோஹன், தியாகக்கொடி, நளினசேகரன், சித்தி. போன்ற படங்கள் அவற்றில் சில.
திருமணத்திற்குப்பின் ‘நடிக்கமாட்டேன்’ என்று சொல்லிவிட்டு அமெரிக்கா போய்விட்டு, பத்மினி திரும்பி வந்து நடித்த படம்தான் ‘சித்தி’ இந்த படம் ஆறு விருதுகளை அள்ளித் தந்தது. சிறந்த கதையாசிரியர் விருது கோதைநாயகிக்கு வழங்கப்பட்டது.
ஆனால், இந்த விருது வாங்கும்போது அவர் உயிருடன் இல்லை. தன் மகன் ஸ்ரீனிவாசன், 38 வயதிலேயே விஷக்காய்ச்சலால் இறந்துவிட்ட துக்கம் அவரை படுத்த படுக்கையாக்கிவிட்டது. இந்தத் துக்கத்தின் விளைவு மகன் இறந்த நான்கு ஆண்டுகளில் (20.02.1960) சாவு இவரையும் அழைத்துக் கொண்டது.
துப்பறியும் நாவல் எழுதிய முதல் தமிழ்ப்பெண் எழுத்தாளர். 115 நாவல்களை எழுதி தமிழ் இலக்கியத்தில் அழியா இடம் பெற்றவர். மேடைப் பேச்சால் கூட்டம் கூட்டியவர். இசையால் பலரை கட்டிப் போட்டவர் எல்லாவற்றிற்கும் மேலாக இந்தத் தேசத்திற்கு சுதந்திரம் வேண்டி போராடி சிறை சென்ற தியாகி என்று பல சாதனைகள் அவர் பெயரை உச்சரிக்கச் செய்து கொண்டே இருக்கின்றன.
நன்றி :திருப்பூர் கிருஷ்ணன் கோதை நாகையின் இலக்கியப் பாதை
இப்போது டோண்டு ராகவன். மேலே உள்ள கட்டுரையில் வடுவூர் துரைசாமி ஐயங்காரின் பொறாமை பற்றியும் புது தகவல் ஒன்று கிடைத்தது. ஆனால் ஆச்சரியமாக இல்லை. தான் ஆதரவளித்த ஒரு நபர் தன்னையும் மீறி வளர்வது பலருக்கு பிடிக்கத்தான் இல்லை. அவர் எப்போதும் தன்னைவிட கீழான நிலையில்தான் இருக்க வேண்டும் என்பது அவர்களது வெளியிடப்படாத ஆசை என்றே தோன்றுகிறது.
அதெல்லாம் இருக்கட்டும். லோகநாயகி அளித்த புகாரின் ஸ்டேட்டஸ் இப்போது என்ன? யாருக்காவது தெரியுமா? தரிஞ்சா சொல்லுங்கப்பூ.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நவீன அறிவியலின் வழிமுறைகள்
-
நவீன அறிவியல் என்பது என்ன? அதன் தர்க்கம் என்ன? ‘இதைப்பற்றி இன்னார் ஓர்
ஆய்வேட்டில் சொல்கிறார்’ என்றால் அது அறிவியலுண்மையா? என் சொந்த அனுபவம்
என்றால் அது அற...
12 hours ago
7 comments:
//இன்று குமுதம் சினேகிதி வந்தது.//
அதெல்லாமுமா படிக்கிறீங்க!?
//வடுவூர் துரைசாமி ஐயங்காரின் பொறாமை பற்றியும் புது தகவல் ஒன்று கிடைத்தது.//
அய்யங்கார்கள் துரைசாமி என்றெல்லாமுமா பேர் வைக்கிறார்கள்!? (புரச்சி! புரச்சி!)
சார் உங்களின் வாசிப்பு கடமை உணர்ச்சி சூப்பர்.
இன்னமும் வார தொடர் கதை படிக்கும் ஆர்வம் வியப்பு அளிக்கிறது
//
அய்யங்கார்கள் துரைசாமி என்றெல்லாமுமா பேர் வைக்கிறார்கள்!? (புரச்சி! புரச்சி!)
//
பூனை கண்ணை மூடிகிட்டா ஒலகம் இருண்டு புரச்சி செய்யும். தெரியாதா ?
கதைகளின் மீது உங்களுக்கு ஆர்வம் அதிகமோ ?
ஒரு போட்டிக்காக நான் கூட ஒரு
சிறுகதை எழுதியுள்ளேன்.. வந்து படித்துவிட்டு (
இன்ட்லியில் ஒட்டு போட்டுவிட்டு) கருத்தையும் சொல்லவும்,முடிந்தால்.
நன்றி..
வை.மு.கோ.வைப் பற்றிய இன்னொரு கட்டுரை இங்கே (டோண்டு மீள்பதித்திருக்கும் கட்டுரை இதற்கும் ஆதராமாக பயன்பட்டிருக்கிறது.) - http://koottanchoru.wordpress.com/2009/04/25/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88/
Thank you sir, for your visit & comments to my page (story).
-- Madhavan
Post a Comment