"சமீபத்தில் 1955-ல் நான் திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலை பள்ளியில் படித்த போது" என்று ஆரம்பித்து நான் எழுதிய/எழுதும் போதெல்லாம் பல வலைப்பதிவர்கள் டென்ஷன் ஆவது வழக்கம். என்ன செய்வது, எனக்கு எல்லாமே சமீபத்தில் நடந்தது போலவே தோன்றுகிறதே. என் வாழ்வில் நான் நேரடியாக அனுபவித்த பல நிகழ்ச்சிகள் என் நினைவுக்கு வரும்போது சும்மா வருவதில்லை. முழு அளவில் வருகின்றன. அவற்றை மறுபடியும் உணர முடிகிறது.
என்ன செய்வது, சமீபத்தில் 1962-லேயே நான் “சமீபத்தில் 1951-ல் ஒண்ணாப்பு படிச்சபோது” எனக்கூறி எனது பெரியப்பாவை டென்ஷனுக்குள்ளாக்கியவன்.
இது பற்றி நான் ஒரு பதிவில் கூறியதிலிருந்து இப்பதிவுக்கு ரெலெவண்டானதை கூறுவேன்.
"நான் சாதாரணமாக கிழமையைக் கூற சில நிமிடங்கள் ஆகும். கூறப்பட்டத் தேதிக்கு மிக அருகில் உள்ள தேதியில் என் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி ஏதாவது இருந்தால் அதிலிலிருந்து வொர்க் அவுட் செய்வேன். ஒருவர் 1964 ஜனவரி முதல் தேதிக்கானக் கிழமையைக் கேட்க, அவரிடம் புதன் என்று கூற, எப்படி கண்டு பிடித்தீர்கள் என்று கேட்க, அவரிடம் ஏப்ரல் முதல் தேதி 1957 ஆம் வருடம் திங்கள், அதிலிருந்து கண்டுபிடித்தேன் என்று கூறி விடுவேன். ஆகவே நேரம் பிடிக்கும். அதே நேரத்தில் என் வாழ்வில் நடந்த அந்த குறிப்பிட்ட நிகழ்ச்சியை அசைபோடவும் நேரம் கிடைக்கும். அதனால்தான் நான் என் பதிவுகளில் சமீபத்தில் 1955 வருடத்தில் என்றெல்லாம் எழுத முடிகிறது.
உதாரணமாக, மேலே குறிப்பிட்ட 1957, ஏப்ரல் 1-ஆம் தேதி நயா பைசா அமுலுக்கு வந்தது, அதன் சம்பந்தப்பட்ட நினைவுகள், அன்று என் வாத்தியார் கே. ராமஸ்வாமி அய்யர் அவரிடம் உதை வாங்கியது, நான் மட்டும் உதை வாங்குவானேன் என்ற நல்லெண்ணத்தில் என் நண்பன் டி.வி. ரங்காச்சாரியையும் போட்டுக் கொடுத்தது எல்லாம் ஞாபகம் வரும். மறுபடியும் என் வயது 11 ஆகி விடும். அம்புடுத்தேன்."
பொதுவாகவே என்னை மாதிரி பெருசுகள் காலம் எவ்வளவு வேகமாகச் செல்கிறது என்பதை குறித்து வியப்படைந்துள்ளோம். இது பற்றி யோசித்ததில் எனக்கு சில விஷயங்கள் தோன்றின. அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.
முதலில் தோன்றுவது வாழ்நாளின் சதவிகிதம். விளக்குவேன். உதாரணத்துக்கு 1955-ஐயே எடுத்து கொள்வோம். கல்கியில் "அமரதாரா" என்ற தொடர்கதை வந்து கொண்டிருந்தது. அதில் ஒரு கோர்ட் சீன். நான்கு வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சியை பற்றி ஒரு சாட்சி வாக்குமூலம் அளிக்க எனக்கு சற்றே வியப்பு. அதாவது, அவ்வளவு ஆண்டுகளுக்கு பின்னால் சாட்சி எப்படி ஞாபகம் வைத்து கொண்டு சாட்சி அளிக்கிறார் என்று. ஆனால் இப்போது? 2002 ஜனவரி நமக்கு சமீபத்தில் இருப்பது போலத்தானே தோன்றுகிறது? என்னைப் பொருத்தவரை இப்போது நான்கு ஆண்டுகள் என்பது என் வயதில் 6.6% தான். ஆனால் 1954-ல் அதே காலம் என் ஆயுளில் 50%-க்கு மேல். இன்னும் கூறப்போனால் எனக்கு நினைவு தெரிந்து அப்போது 5 ஆண்டுகள்தான் ஆகியிருந்தன, ஆகவே 80% என்றுகூட கூறலாம். இதே கணக்கில் பார்த்தால் நான் திருவல்லிக்கேணியை விட்டு 23-ஆம் வயதில் நங்கநல்லூருக்கு குடிபெயர்ந்தபோது நான் நினைவு தெரிந்தபின் அங்கு வாழ்ந்த 14 ஆண்டுகள் என் அப்போதைய வயதில் 50%-க்கு மேல். ஆகவே ரொம்ப நாள் நான் திருவல்லிக்கேணியில் வாழ்ந்த உணர்வு. அதே உணர்வு இப்போது வர வேண்டுமானால் கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் தேவைப்படும்.
இப்போது வேறு கோணத்திலிருந்து நோக்குவேன். Windows 95 என்பது எவ்வளவு பழையதாகத் தோன்றுகிறது? பத்து ஆண்டுகளிலேயே எனக்கு அது அரதப் பழசாகத் தோன்றுகிறதே. ஆகவே இங்கே இன்னொரு மெக்கானிஸம் வேலை செய்கிறது. கணினித் துறையில் உள்ள தொழில் நுட்பங்களின் ஆயுள் ஓரிரு ஆண்டுகளே. ஏனெனில் நிகழ்ச்சிகள் அவ்வளவு அடர்த்தியாக வருகின்றன. பத்தாண்டுகளுக்கு முன்புவரை கூட இருந்த வி.சி.ஆர்கள் எங்கே போயின?
நான் விமானப்படையில் பொறியாளர் தேர்வுக்காக மைசூரில் மூன்று நாட்கள் நேர்க்காணலுக்காக சென்றிருந்தேன். எல்லா நாட்களும் நிகழ்ச்சிகளால் நிரம்பியிருந்தன. மூன்றாம் நாள் அன்று அங்கு ரொம்ப நாள் இருந்தது போல் உணர்வு.
Now to sum up:
காலத்தை பற்றி நம் புரிதல்கள் இரண்டு தளங்களில் நடக்கின்றன. சாதாரண ரொட்டீன் வாழ்க்கை மற்றும் பல நிகழ்ச்சிகளால் நிரம்பிய வாழ்க்கை ஆகியவையே அவை. வெறுமனே தினமும் எழுந்து, சாதாரணமாக பொழுதைக் கழிக்கும்போது நாட்கள் வெகு சீக்கிரம் ஓடி விடுவது போலத் தோன்றுகிறது. ஆனால் அதுவே ஒரு குறிப்பிட்ட காலநேரம் (உதாரணத்துக்கு ஒரு மாதம்) பல நிகழ்ச்சிகள் நிரம்பியிருந்தால் கணிசமானதாகவே தோன்றுகிறது. வாழ்நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருந்து பல நிகழ்ச்சிகளால் அதை நிரப்பிக் கொள்கிறவர்கள் தங்கள் வாழ்நாளை இன்னும் அதிக அளவில் அனுபவிக்கின்றனர் என்றே தோன்றுகிறது.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
கூழாங்கல்லில் இருந்து மலைகளை உருவாக்க நான்கு வழிகள்
-
பயணங்கள் வழியாக இயற்கையை விரித்துக்கொள்ளும் கனவு இன்று நம்மில் சிலருக்கு
உண்டு. ஆனால் அப்பயணத்தை எப்படி நடத்துவதென்று தெரிவதில்லை. பெரும்பாலும்
தவறான சுற்ற...
4 hours ago
7 comments:
டோண்டு சார்,
நீங்க சொல்றது நூத்துல ஒரு வார்த்தை.
நான் எழுதற திரும்பிப் பார்க்கிறேன் தொடருல ஒவ்வொரு பதிவும் எழுதும் போது 25 வருஷத்துக்கு முன்னால நடந்த சம்பவத்த எழுதறது போலவே தோன்றதில்ல. அந்த நாள்ல அவங்க போட்டுக்கிட்டிருந்த சட்டை கலர் வரைக்கும் அப்படியே சினிமா காட்சிகளைப் போல என் கண்முன் வருவதுண்டு.
நான் டைரி எழுதியிருந்தாலும் அது வெறும் அத்தகைய நிகழ்வுகள் நடந்ததற்கான குறிப்பு மட்டுமே. ஆனா the moment I start writing என்னையுமறியாம அந்த சம்பவங்களின் முழுப்பரிமாணமும் கண்முன் தோன்றுகிறதே என்று வியந்திருக்கிறேன்.
உங்களுடைய பதிவைப் பார்த்ததும்தான் புரிகிறது. இறைவன் படைத்த படைப்புகளில் மனித மூளைதான் மிகச் சிறந்தது என்பது எத்தனை சத்தியம்!
காலம் எப்பொழுதும் நினைவில் வைக்கப்படுவதற்கு அப்பொழுது நிகழும் சம்பவங்கள், அதன் தொடராக நம் வாழ்வில் ஏற்படும் தொடர் மாற்றங்கள் இவை தான் காரணம்.
உதாரணத்திற்கு -
நீங்கள் உங்கள் திருமணத் தேதியை மறந்து விட்டீர்கள் என்றால் - அது மன்னிக்க முடியாத குற்றம். ஏனென்றால், அது உங்கள் வாழ்க்கையின் ஒரு திருப்பு முனையாக அமையும். மகிழ்ச்சியானதா, துக்ககரமானதா என்பதெல்லாம் மற்றவை.
அதே போல கல்லூரியின் முதல் நாள், இறுது நாள், மனைவி அல்லது காதலியைச் சந்தித்த நாள் என பலவும் இந்த ரகம். சில சமயங்களில், இந்த தேதி வரலாற்றில் ஒரு அங்கமாக மாறும் பொழுதும் அதியொட்டிய நிகழ்வுகளாலும் முக்கியத்துவம் பெற்று விடுகின்றன.
என்னால், மறக்க முடியாத சம்பவம் - எம்ஜிஆர் இறந்த தினம். அன்று இரவு நீண்ட நேர்ரம் ஆகி விட்டது - பணி முடிந்து திரும்புவதற்கு. அடையார் பார்க் ஹோட்டலில் வேலை. மௌண்ட் ரோட்டில் ஒரு நண்பர் நள்ளிரவில் இறக்கி விட, கூவத்தின் மீதுள்ள பாலம் கடந்து, புதுப்பேட்டை வழியாக எக்மோர் போவேன்.
அப்பொழுது ஒருவர் சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்தார். என்ன என்று தற்செயலாகப் பார்த்த பொழுது, எம்ஜிஆர் மரணமடைந்த் செய்தியை ஒட்டிக் கொண்டிருந்தார். அதுவரையிலும் செய்தி வெளியிடப்படவீல்லை. நள்ளிரவில் தான் அறிவிக்கப்பட்டது.
அதில் விஷேசம் என்ன வென்றால் - அவர் ஒட்டிக் கொண்டிருந்தது - ஒரு நாள் முந்தித் தான் ஒட்டப்பட்ட மற்றொரு சுவரொட்டியின் மீது.
அது ஆர்வி, ஒரு பல்கலைக் கழகத் திறப்பு விழாவிற்காக தமிழகம் வருகை தருவதை அறிவிக்கும் சுவரொட்டி.
அந்த ஏழை தொழிலாளிக்கு உத்தரவு கொடுக்கப்பட்டதா என தெரியாது. ஆனால், அவர் சமயோசிதமாக அந்தப் பழைய சுவரொட்டிகளையும் மறைத்துக் கொண்டிருந்தார்.
பின்னர் விடிந்ததும் மௌண்ட் ரோட் கொள்ளை அடிக்கப்பட்டதும் இன்று வரை மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சியாக இருக்கிறது.
இன்று காலங்களும் அது செயல்படும் விதமும் குறித்து நீங்கள் விளக்கிய பொழுது, மீண்டும் பளிச்சென்று ஞாபகம் வந்து விட்டது.
பாராட்டுகள் டோண்டு சார்....
நன்றி ஜோசஃப் அவர்களே. உங்கள் வாழ்க்கையையே எடுத்து கொள்வோம். பம்பாயில் எலெக்ட்ரிக் ட்ரெயினில் மகள் கூட்ட நெரிசலால் இன்னொரு கம்பார்ட்மெண்டுக்கு போனபோது நீங்கள் நினைத்ததெல்லாம் அருமையாக எழுதியிருந்தீர்கள் அல்லவா? அதே நிகழ்ச்சியை உங்கள் மகள் அதே தீவிரத்துடன் உணர்ந்திருக்க மாட்டார், ஏனெனில் அப்போது அவர் ஒரு குழந்தை. கூடவே துணைக்கு ஒரு அம்மாள் இருந்ததால் வேடிக்கை பார்த்துக் கொண்டு கூட இருந்திருக்கலாம். ஆக, இந்த இடத்தில் பார்வை கோணம் என்பதும் முக்கியம் அல்லவா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
எம்.ஜி.ஆர். அவர்கள் இறந்த போது நான் தில்லியில் இருந்தேன். அங்கேயே மிகவும் அமர்க்களம் நடந்தபோது, இங்கே கேட்க வேண்டுமா என்ன?
அன்றுதானே கருணாநிதி அவர்கள் சிலை உடைக்கப்பட்டது? மறுபடி வீரமணி அவர்கள் அதே இடத்தில் மறுபடி கருணாநிதி அவர்களது சிலையை வைக்க முயன்றபோது, அந்த இடம் ராசியில்லை (!!) என்று கருணாநிதி அவர்கள் மறுத்துவிட்டதாகவும் கேள்விப்பட்டேன். உண்மையா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு,
நீங்க சமீபத்துல என்று ஆரம்பிக்கும்போது பலருக்கும் டென்சன் வருவது உன்மைதான் (நான் உடபட). சில வாரங்களுக்கு முன்னால் நண்பர்களுடன் பக்கத்து ஊரான ஹைடல்பர்கில் பேசிக்கொண்டிருந்தபோது சமீபத்தில் 1982-ல் நான் ஒன்னாம் வகுப்புச் சேர்ந்தபோது என்று ஆரம்பித்தால் எனது பள்ளித் தோழர்களே என்னை ஒரு மாதிரியாய்ப் பார்த்தார்கள். சட்டென உங்கள் ஞாபகம் வந்தது.
உங்கள் "சமீபத்தில்..." வார்த்தைக்கு டென்சன் ஆகும் ஒவ்வொருவரும் ஒருநாள் தெரிந்தோ,தெரியாமலோ, மனதாலோ, வார்த்தையாலோ தாங்களும் அதையே உபயோகிக்கும்போது "அந்த சமீபத்தை.." அனுபவப்பூர்வமாய் உணர்வார்கள். :-)
"சில வாரங்களுக்கு முன்னால் நண்பர்களுடன் பக்கத்து ஊரான ஹைடல்பர்கில் பேசிக்கொண்டிருந்தபோது சமீபத்தில் 1982-ல் நான் ஒண்ணாம் வகுப்புச் சேர்ந்தபோது என்று ஆரம்பித்தால் எனது பள்ளித் தோழர்களே என்னை ஒரு மாதிரியாய்ப் பார்த்தார்கள். சட்டென உங்கள் ஞாபகம் வந்தது."
நன்றி முத்து அவர்களே. இதே எண்ணத்தை வைத்துத்தான் என் அபிமான எழுத்தாளர் இஸாக் அசிமோவ் அவர்கள் தன் புத்தகங்கள் இரண்டிற்கு "In memory yet green" & "With joy still felt" என்ற கவித்துவமான தலைப்புகள் கொடுத்தார். இரண்டுமே அவர் சுய சரிதைகள்தான், ஒன்றன் பின் ஒன்றாக எழுதப்பட்டன.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"காலத்தை பற்றி நம் புரிதல்கள் இரண்டு தளங்களில் நடக்கின்றன. சாதாரண ரொட்டீன் வாழ்க்கை மற்றும் பல நிகழ்ச்சிகளால் நிரம்பிய வாழ்க்கை ஆகியவையே அவை. வெறுமனே தினமும் எழுந்து, சாதாரணமாக பொழுதைக் கழிக்கும்போது நாட்கள் வெகு சீக்கிரம் ஓடி விடுவது போலத் தோன்றுகிறது. ஆனால் அதுவே ஒரு குறிப்பிட்ட காலநேரம் (உதாரணத்துக்கு ஒரு மாதம்) பல நிகழ்ச்சிகள் நிரம்பியிருந்தால் கணிசமானதாகவே தோன்றுகிறது. வாழ்நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருந்து பல நிகழ்ச்சிகளால் அதை நிரப்பிக் கொள்கிறவர்கள் தங்கள் வாழ்நாளை இன்னும் அதிக அளவில் அனுபவிக்கின்றனர் என்றே தோன்றுகிறது."
எனக்கு நீங்க சொல்றது கொஞ்சம் புரியறது, கொஞ்சம் புரியல்லே.
முனிவேலு
Post a Comment