4. 1971 மார்ச் முதல் 1975 ஜூன் வரை (அவசர நிலை பிரகடனம்)நான்
ஏற்கனவே கூறியபடி இந்த தேர்தலில் காங்கிரசுக்கு அதுவரை கிடைக்காத வெற்றி கிடைத்தது. தமிழகத்தில் முதல் முறையாக ஒரு மனமாச்சரியமும் இன்றி ராஜாஜி அவர்களும் காமராஜ் அவர்களும் ஒரே அணியில் நின்றனர். அவர்களுக்கு படுதோல்வி. இந்திரா காங்கிரசுக்கு தமிழகத்திலிருந்து நிறைய எம்.பி.க்கள் கிடைத்தனர். அசெம்பிளி தேர்தலில் ஒரு சீட்டிலும் நிற்கக் கூட வாய்ப்பு தரவில்லை கருணாநிதி அவர்கள். ஆக காங்கிரசுக்கும் நீண்ட காலத் திட்டத்தில் ஒரு பின்னடைவே. அதற்கு பிறகு இன்று வரை காங்கிரஸ் சிந்துபாத் கதையில் வரும் கிழவன் போல திமுக அல்லது அல்லது அதிமுகவின் முதுகிலேயே சவாரி செய்து வந்து கொண்டிருக்கிறது. ஒரு சிறு செய்தி இப்போதைக்கு. ரே பரேலியில் இந்திராவிடம் தோல்வியுற்ற ராஜ் நாராயண் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். அது பற்றி அப்புறம்.
இங்கு ஒரு சிறு டைவர்ஷன். இதே சமயத்தில்தான் சோ அவர்கள் இயக்கி தயாரித்த முகம்மது பின் துக்ளக் படமும் வந்தது. அதில் துக்ளக் அடித்த கூத்துக்கள் பலரால் வெறும் மிகைபடுத்தப்பட்ட கற்பனையாகவே மக்களால் பார்க்கப்பட்டன. ஆனால் இப்பதிவின் காலக் கட்டத்திலேயே இந்திரா அவர்கள் துக்ளக் மாதிரி உருவாகும் எல்லா சாத்தியக் கூறுகளும் தெரிய ஆரம்பித்து விட்டன. அடுத்தப் பதிவில் அவசர நிலை பற்றி எழுதும்போது இன்னும் விரிவாக எழுதுவேன். இதில் என்ன விசேஷம் என்றால், அப்படம் வந்து 36 ஆண்டுகள் கடந்த நிலையில் அதை இப்போது பார்த்தாலும் காலத்துக்கு பொருத்தமானதாகவே இருப்பதுதான். ஏனெனில் மனித இயல்புகள்
ஆயிரக்கணக்கான ஆண்டு காலமாக ஒருபோலத்தான் இருந்து வந்திருக்கின்றன.
1971 மார்ச்சிலேயே வங்கதேசப் பிரச்சினை ஆரம்பமாகி விட்டது. அதற்கு சற்று முன்புதான் (1970) பாக்கிஸ்தான் பொதுத் தேர்தல் நடந்து முடிந்திருந்தது. அப்போது கிழக்கு பாக்கிஸ்தான் என்று அழைக்கப்பட்டு வந்த வங்க தேசத்தில் ஷேக் முஜிபூர் கட்சியான அவாமி லீகுக்கும் மேற்கு பாகிஸ்தானில் புட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கும் அதிக சீட்டுகள் கிடைத்தன. இருப்பினும் வங்க தேச எம்பிக்கள் முழுமையான பாகிஸ்தானில் பெரும்பான்மை பெற்றிருந்ததால் முஜிபூர்தான் பிரதமராகியிருந்திருக்க வேண்டும். ஆனால் பஞ்சாபியர் டாமினேட் செய்த பாக்கிஸ்தானுக்கு ஒரு வங்க தேசத்தவர் பிரதமராக வருவது அவர்களால் சகிக்க முடியாமல் இருந்தது.
ஆகவே மேற்கு பாகிஸ்தானியர் முஜிபூர் ரஹ்மானின் கட்சி பதவி ஏற்க முடியாதபடி அழுகினி ஆட்டம் ஆடினர். யாஹ்யா கான் முஜிபுரை மார்ச் 25, 1971-ல் கைது செய்து மேற்கு பாக்கிஸ்தானுக்கு கொண்டு சென்றார். அதற்கு அடுத்த நாளிலிருந்து கிழக்கு பாக்கிஸ்தானில் அகோர அடக்குமுறை ஆரம்பமாயிற்று. கிழக்கு பாகிஸ்தானின் கசாப்புக்காரன் என்று பெயர் பெற்ற டிக்கா கானின் அட்டூழியம் கொடி கட்டி பிறந்தது. மதத்தால் மட்டும் நாட்டை ஒன்றாக வைக்க முடியாது என்பது சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப் பட்டது. இந்தியாவிலிருந்து இசுலாமியர் பாகிஸ்தானை பிரித்து சென்று 1947-48-ல் நடந்த கலவரங்கள் எல்லாமே தவிக்கப்பட்டிருக்கக் கூடியவை என்பதும் நிரூபணமாயிற்று. வெவ்வேறு நாடுகளில் இருந்த பாகிஸ்தான் தூதரகங்களிலிருந்து கிழக்கு பாகிஸ்தானை சேர்ந்த அதிகாரிகள் சாரி சாரியாக வெளியேறி இந்தியத் தூதரகங்களில் அடைக்கலம் புகுந்தனர். பாகிஸ்தான் மானம் கப்பலேறியது. நாட்டைப் பிரிவினை செய்த இரு தேசக் கோட்பாடு அடிப்படையிலேயே தவறு என்று அப்போது அவர்களில் பலர் கூறினர்.
இசுலாமியரே இசுலாமியரைக் கொன்ற கூத்தும் நடைபெற்றது. இந்தியாவோ சுமார் 100-120 லட்சம் அகதிகள் வருகையால் மூச்சு திணறியது. இந்த தருணத்தில் இந்திரா அவர்கள் திறமையாகச் செயல்பட்டதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். யாஹ்யா கான் திமிருடன் வெளி நாட்டு நிருபர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தன் இந்திராவை நேரில் பார்த்தால், "வாயை மூடு பொட்டச்சி. எங்க அகதிகளை திருப்பி அனுப்பு" (shut up woman, and let my refugees return) என்று கூறப்போவதாகக் கூறினார். இதைவிட ஒருவர் ஆணாதிக்கத்துடன் பேசியிருந்திருக்க முடியாது. ஆனால் அதே திமிர் பிடித்த ஆண் இந்த வலிமையான பெண்மணியிடம் மண்டியிட நேர்ந்தது.
டிசம்பர் 4 அன்று ஆரம்பித்த யுத்தம், கிழக்கு பாகிஸ்தானில் 16-ஆம் தேதி முடிவுக்கு வந்தது. கிழக்கு பாகிஸ்தானின் இராணுவத் தலைவர் ஜெனெரல் நியாஜி இந்திய ராணுவத் தலைவர் அரோராவிடம் சரணடைந்தார். பாக்கிஸ்தானின் சுமார் 93000 துருப்புகள் இந்தியரிடம் போர் கைதியாக மாட்டிக் கொண்டனர். இப்போது இந்திரா காந்தி புத்திசாலித்தனமான காரியம் செய்தார். ஒரு தலைப் பட்சமாக யுத்த நிறுத்தத்தை அறிவித்தார். பாக்கிஸ்தான் மிகுந்த மனகிலேசத்திலும் அவமானத்திலும் இருந்தது. அதற்கு மேலே யுத்தம் செய்யும் தைரியம் இல்லை. ஆகவே போர் நிறுத்தம் கடைசியில் அமுலுக்கு வந்தது. அப்போதைய ஜெர்மானிய பத்திரிகையான Der Spiegel Niederlage gegen Indien (இந்தியாவிடம் படுதோல்வி) என்ற தலைப்பில் ஒரு இஷ்யூவே போட்டது.
ஷேக் முஜிபுர் ரஹ்மான் மேற்கு பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு வங்க தேசம் இந்தியா வழியாக சென்றார். ஆக, வங்க தேசம் உருவாவதில் இந்தியாவின், முக்கியமாக இந்திராவின், பங்கு ஒரு சரித்திர உண்மை. இந்தியாவைப் பொருத்தவரை 1962-ல் சீனாவிடம் தோல்வி, 1965-ல் பாகிஸ்தானுடன் ஒரு மாதிரி குழப்பமான சண்டை. அதற்கு பிறகு முதன் முறையாக சந்தேகத்துக்கிடமேயில்லாத ஒரு வெற்றி. அப்போது இந்திரா அவர்கள் புகழ் உச்சியில் இருந்தார். எதிர்க்கட்சித் தலைவர் வாஜ்பேயீ அவர்கள் இந்திராவை துர்க்கா என்றார்.
ஜூலை 1972-ல் சிம்லா ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று. அது பற்றி
விக்கிபீடியாவில் பார்க்கலாம். ஆனால் அக்காலக் கட்டத்தில் குமுதத்தில் வந்த ஒரு செய்தித் துணுக்கை இங்கே கூறுவேன். புட்டோவுடன் அவர் தூதுக் குழுவில் ஆகா ஷஹி (அல்லது இலாஹி?) என்ற ஒரு மந்திரி வந்தார். வந்தவர் சும்மா இல்லாமல் கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. ராமமூர்த்தியைப் பார்க்க ஆவல் தெரிவித்திருக்கிறார். ராமமூர்த்திக்கோ ஒரேதிகைப்பு. இருந்தாலும் போய்ப் பார்த்திருக்கிறார். அந்த மந்திரிக்கு முகமன் கூறி ஹிந்தியில் பேச ஆரம்பித்து இருக்கிறார். (நம்ம தேசத்தவர் ஹிந்தி பேசினால் உருது பேசும் பாக்கிஸ்தானியர் எளிதில் புரிந்து கொள்வர்.
உருதுக்கும் ஹிந்திக்கும் அவ்வளவு ஒற்றுமை). அந்த மந்திரியோ ஹாஹாஹா என்று சிரித்து விட்டு, "என்ன சார் தமிழ் பேசணும்னு ஆசைப்பட்டு உங்களைக் கூப்பிட்டா, நீங்க ஹிந்தீலே பேசறீங்களே என்று ஸ்பஷ்டமானத் தமிழில் கூறினார். ராமமூர்த்திக்கு மூச்சே நின்று விட்டது. பிறகுதான் தெரிந்தது அவர் பிரிவினைக்கு முன்னால் திருவல்லிக்கேணியில் அக்பர் சாஹேப் தெருவில் குடியிருந்தார் என்று.
1971 முடிவில் இந்திரா அவர்கள் பாப்புலாரிட்டியின் உச்சத்தில் இருந்தார். ஆனால் அதன் பிறகு மெதுவாக அவரது புகழ் மங்க ஆரம்பித்தது. 1973 மற்றும் 74-ல் பணவீக்கம் தலைவிரித்தாடியது. மக்கள் சுதந்திரங்களில் கைவைக்கு வகையில் பல அரசியல் சட்டத் திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த நேரத்தில்தான் இந்திராவின் இரண்டாவது மகன் சஞ்சய் காந்தி அரசியலில் பங்கெடுக்க ஆரம்பித்தார். பதவி அதனால் வரும் பொறுப்பு ஒன்றுமில்லாமல் தான்தோன்றித்தனமாக நடக்க ஆரம்பித்தார். இந்திரா காந்தியே அவரைப் பார்த்து நடுங்கியதாகவும் கூறுவர்.
தமிழகத்தைப் பொருத்தவரை எம்ஜீஆர் திமுகாவிலிருந்து வெளியேற்றப்பட்டதால் அதிமுக உருவானது. அக்கட்சி முதன்முறையாகப் போட்டியிட்ட திண்டுக்கல் இடைதேர்தலில் அவர் கட்சி அமோக வெற்றி பெற்றது. காமராஜரின் பழைய காங்கிரஸ் இரண்டாம் இடத்திலும், திமுக மூன்றாம் இடத்திலும் இந்திரா காங்கிரஸ் நான்காம் இடத்திலும் இருந்தன. காமராஜ் தனது கட்சிப்பணிகளை செய்து வந்தாலும் பழைய உற்சாகம் எதுவில்லை. ராஜாஜி 1972 மற்றும் அவரது உயிர்த் தோழர் பெரியார் சரியாக ஓராண்டு கழித்து 1973லும் மறைந்தனர்.
1972 ம்யூனிக் ஒலிம்பிக்கில் இஸ்ரேலிய தடகள வீரர்கள் பாலஸ்தீனிய தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். அப்போது மௌனம் காத்த இந்தியா, இஸ்ரேலியர் எதிர் நடவடிக்கை எடுத்த போது மட்டும் கண்டித்தது. இம்மாதிரி வெளியுறவு விவகாரங்களில் பல சொதப்பல்கள் அவை பாட்டுக்கு நிகழ்ந்தன.
நாட்கள் சென்றன. நான் முதலில் குறிப்பிட்டிருந்த இந்திரா காந்தியின் தேர்தல் வழக்கு அது பாட்டுக்கு நடந்து கொண்டிருந்தது. 1975 ஜூன் மாதத்தில் இடி போன்ற தீர்ப்பு வந்தது. இந்திரா காந்தியின் தேர்வு ரத்து செய்யப்பட்டு ராஜ் நாராயண் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் அடுத்த 6 ஆண்டுகள் இந்திரா அரசியலில் ஈடுபட்டு தேர்தலில் நிற்க முடியாத நிலையும் ஏற்பட்டது. அதே காலக் கட்டத்தில் திமுகாவும் இந்திரா காங்கிரஸும் கருத்து வேறுபாடுகளால் ஒன்றை விட்டு இன்னொன்று தூரச் சென்றது. கருணாநிதியை ஊழல் ராஜா என்று இந்திரா வர்ணிக்க, அப்போது ஊழல் ராணி யார் என்று அவர் எதிர்க் கேள்வி கேட்டார். தமிழக அரசு கொண்டு வந்த விதவைகள் மறுவாழ்வுத் திட்டத்தில் இந்திரா காந்தி வேண்டுமானால் நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது. ஆக இரு கட்சிகளுக்குமிடையில் பூசல்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தன. மத்திய அரசை தாக்கி எழுதும் பத்திரிகைகளின் கைகள் கட்டப்பட்டன. அதே சமயம் தமிழக அரசைத் தாக்குபவர்கள் உற்சாகப்படுத்தப்பட்டனர்.
இந்த இடத்தில் நம்ம சோ ஒரு காரியம் செய்தார். எப்போது மத்திய அரசை எதிர்க்க முடியாமல் போயிற்றோ மானில அரசையும் தான் விமரிசனம் செய்யப்போவதில்லை என்று துக்ளக்கில் கொட்டை எழுத்தில் அறிவித்தார். அதனை நிகழ்ச்சிகளும் ஜூன் 12 முதல் ஜூன் 25 வரையிலானக் காலக்கட்டத்தில் ஏற்பட்டது.
ஜூன் 25-க்கு பிறகு நடந்தவற்றை அடுத்தப் பதிவில் காண்போம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்