6/03/2008

சினிமா படங்கள் சில ஏன் இன்னும் மனதில் நிற்கின்றன? (குடும்பப் பாடல், பழைய நினைவுகள்)

போன பதிவில் பூர்வ ஜன்ம படங்களைப் பார்த்தோம். இப்போது குடும்பப் பாடலின் முறை.

கதாநாயகனும் கதாநாயகியும் சிறு வயதில் ஒன்றாகப் பழகியிருப்பார்கள். பிறகு பலகாலம் பிரிந்து சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பார்கள். அப்போது எப்படி அடையாளம் காண்பார்களாம்? அதற்குத்தான் குடும்பப் பாட்டு துணை செய்கிறது. இந்த விஷயத்தில் ஒன்று எனக்கு புரிவதே இல்லை. ஆறு ஏழு வயதில் பெற்ற சமவயது நண்பர்களை 20 ஆண்டுகள் கழித்து ஒரேயடியாக அடையாளமே காணமுடியாமல் போவது நிஜமாகவே நம்ப இயலவில்லை. என்னுடன் மூன்றாம் வகுப்பு படித்த ஆனந்தராவை 25 வருடங்களுக்கு பிறகு சந்தித்தபோதும் ஒருவரை ஒருவர் சுலபமாகவே அடையாளம் கண்டு கொண்டோம். சரி அப்படியெல்லாம் ஆர்க்யூ செய்தால் படத்தில் வரும் குடும்பப்பாடலை ரசிக்க இயலாமல் போய்விடுமே.

ஆகவே கொஞ்ச நேரத்துக்கு மூளையை கழட்டி வைப்போமே. அப்படி கழட்டிவைத்துவிட்டு இக்காட்சியைப் பார்த்தால் நிஜமாகவே நன்றாக உள்ளது. ஹிந்திப் படம் 'ஷோலா அவுர் ஷ்ப்னம்', நடிப்பு தர்மேந்திரா, தரளா. 1961-ல் வந்தது. 'ஜீத் ஹீ லேங்கே பாஜி ஹம்தும்' என்று தொடங்கும் இனிமையான பாடலை நாயகனும் நாயகியும் சிறுவயதில் பாடிவிட்டு பிரிகிறார்கள். பல ஆண்டுகள் கழித்து நாயகன் அப்பாட்டைப் பாட நாயகி மெதுவாக அவனை புரிந்து கொள்கிறாள். அவளது நினைவுகள் மெதுவே வீணையை சுருதிகூட்டும் மென்மையோடு தூண்டப்பட, நாயகியின் முகபாவங்கள் அற்புதமே. இந்த அழகில் இப்படத்தை நான் பார்த்ததேயில்லை. இந்த ஒரு க்ளிப்பிங்கை மட்டும் அவ்வப்போது பார்த்துள்ளேன். இருப்பினும் முழுபடத்தின் கதையுமே மனதில் ஓடிவிட்டது. அவர்களை சந்திக்கவைக்கும் தோழனின் முகத்தில் என்ன பெருமிதம்?




இன்னொருபடம் சமீபத்தில் 1973-ல் வந்த "யாதோன்கீ பாராத்". தமிழில் அது எம்ஜிஆர் நடிப்பில் வந்தாலும் இங்கு ஹிந்தி வெர்ஷனையே எடுத்து கொள்கிறேன். யாதோன்கீ பாராத் எனத் துவங்கும் பாடலை குடும்பமே ஒருகாலத்தில் பாடியிருக்கிறது. அதில் மூன்று சகோதரர்கள். பிறகு முவரும் பிரிந்து விடுகின்றனர். நடிப்பு தர்மேந்திரா (தமிழில் எம்ஜிஆர்), விஜய் அரோரா (தமிழில் எம்ஜிஆர், கஷ்டம்டா சாமி), மற்றும் தாரீக் (ஆமிர்கானின் உறவினர், தமிழில் தெலுங்கு நடிகர் பெயர் தெரியவில்லை). பிரிந்தவர் கூடும்போது அவர்களது முகபாவங்கள் அற்புதம். ஆனால் இந்த குடும்பப் பாடலை கிண்டல் செய்யும் இந்த லொள்ளுசபா க்ளிப்பிங்கை கொஞ்சம் பாருங்களேன். எம்ஜிஆர் அவர்கள் உயிருடனிருந்து பார்த்தால் நொந்துவிடுவார்.

இதே யாதோன்கீ பாராத் மெட்டிலேயே ஒரு பாடல் "தங்கச்சீ உன்னை" என்று எஸ்.வி.சேகரின் 'எல்லாமே தமாஷ்தான்' என்னும் நாடகத்தில் வந்த குடும்பப்பாடல். இதில் சிறுவயதில் பிரிந்த தன் அண்ணனை கண்டறிய அப்பெண் இப்பாடலை உபயோகிக்கிறார். தன் பெண்ணையும் இப்பாடலை தினமும் கேட்கச் செய்கிறார். அவள் பெண்ணே நொந்துபோய், "மாமா கிடைக்கும்வரை இந்தக் கேவலமான பாட்டை தினமும் கேட்க வேண்டுமா" என அலுத்து கொள்கிறாள்.

ஆனால் ஒன்று. இம்மாதிரி பழைய நினைவுகள்/குடும்பப் பாடல்கள் வந்து கதாநாயகனும் நாயகியும் சேருவது பல முறை பார்த்தாலும் எடுக்கும் விதத்தில் எடுத்தால் ஒவ்வொரு முறையும் சுவாரசியத்துடன் பார்க்க இயலுகிறது.

மன்னிக்கவும் கிண்டலும் சேர்ந்து விட்டதால் பதிவில் மொக்கையைத் தவிர்க்க இயலவில்லை. ஆகவே இப்பதிவுக்கு மொக்கை லேபலையும் சேர்க்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

15 comments:

வால்பையன் said...

ரொம்பநாள் கழிச்சு மொக்கை விருந்து போட்டதற்கு நன்றி

திரிசூலத்துல சிவாஜியும் கே,ஆர்,விஜயாவும் போனில் பேசும் வசனம் கூட சூப்பர்

வால்பையன்

Anonymous said...

தங்களின் இந்த பதிவு
"அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே" எனும் பாணியில் 40 வயதை கடந்தவர்களுக்கு பழய காலத்து திரைப் பட பாடல் நினைவுகள் "ஆட்டோ கிராப்" போல் வந்து நிழலாடும்.

20-25 வருடகளுக்கு முன்னால் வந்த படங்களில் நல்ல கதைஅம்சம், அருமையான பாடல் காட்சிகள்,அர்த்தம் பொதிந்த பாடல் வரிகள்,மனதை மயக்கும் இனிய இசை.
குடும்ப படங்களில் வந்த வசனங்கள்
அருமையிலும் அருமையல்லவா

Anonymous said...

//தர்மேந்திரா (தமிழில் எம்ஜிஆர்), விஜய் அரோரா (தமிழில் எம்ஜிஆர், கஷ்டம்டா சாமி), //

MGR ன் "நாளை நமதே" பற்றிதானே சொல்லியுள்ளீர்கள்.
MGர் படத்தில் அவருக்கு ஜோடி இல்லாமல் இருந்தால் வாத்தியாரின் ரசிகமணிகள் சும்மா விடுவார்களா சார்.
அதுவும் ஹிந்தி படத்தில் தாரிக்கின் பாத்திரத்தில் நடித்த தெலுங்கு நடிகர்
அய்யோ பாவம்

bala said...

//தமிழில் எம்ஜிஆர், கஷ்டம்டா சாமி), மற்றும் தாரீக் (ஆமிர்கானின் உறவினர், தமிழில் தெலுங்கு நடிகர் பெயர் தெரியவில்லை). பிரிந்தவர் கூடும்போது அவர்களது முகபாவங்கள் அற்புதம். ஆனால் இந்த குடும்பப் பாடலை கிண்டல் செய்யும் இந்த லொள்ளுசபா க்ளிப்பிங்கை கொஞ்சம் பாருங்களேன். எம்ஜிஆர் அவர்கள் உயிருடனிருந்து பார்த்தால் நொந்துவிடுவார். //

டோண்டு அய்யா,
எனக்கு தெரிந்த வரை எம் ஜீ ஆரை விட கேவலமா நடிப்பதற்கென்றே பிறந்து வந்தது மஞ்ச துண்டின் ஆஃப்ஸ்ப்ரிங் மு க முத்து அய்யா தான்.தமிழர்களின் போதாத காலம் அந்த மூஞ்சியால் சினிமாவில் முன்னுக்கு வரவில்லை.வந்திருந்தா நம்ம லொள்ளு சபா கும்பலுக்கு அட்சய பாத்திரம் போல அள்ள அள்ள குறையாத அளவுக்கு மேட்டர் தந்திருப்பார்.

பாலா

dondu(#11168674346665545885) said...

//அதுவும் ஹிந்தி படத்தில் தாரிக்கின் பாத்திரத்தில் நடித்த தெலுங்கு நடிகர்
அய்யோ பாவம்//
அந்த ரோலுக்கு நடிக்க வரும்படி கமலஹாசனைக் கேட்டாங்களாம். ஏனோ அவர் மறுத்துட்டதாக சொன்னாங்க.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//எனக்கு தெரிந்த வரை எம் ஜீ ஆரை விட கேவலமா நடிப்பதற்கென்றே பிறந்து வந்தது மஞ்ச துண்டின் ஆஃப்ஸ்ப்ரிங் மு க முத்து அய்யா தான்.//
இந்த அழகுக்கு அவர் எம்ஜிஆரை இமிடேட் செய்தாராம்.

கொடுமைடா சாமி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Raj Chandra said...

//அதுவும் ஹிந்தி படத்தில் தாரிக்கின் பாத்திரத்தில் நடித்த தெலுங்கு நடிகர்
அய்யோ பாவம்//
- I think it is Sasi kumar.

Anonymous said...

//மு க முத்து அய்யா தான்.//
இந்த அழகுக்கு அவர் எம்ஜிஆரை இமிடேட் செய்தாராம்.//

1970 -1972 கழக வரலாற்றில் ஒரு பெரிய பூகம்ப பிளவுக்கு கட்டியங்கூரியவரல்லவா மு.கா.முத்து.

கலைஞர் ஐயாவின் 70 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் செய்த தவறுக்கு(அவரின் அரசியல் கணக்குகளை மீறி)
அச்சாரம் போட்டவர் "பிளையோ பிள்ளை'' ( mgr ஐ காப்பி அடித்து நடித்த முதல் படம்)

மதுரை மாநாடு MGR -"மாவட்டம்,வட்டம்,பொதுக்குழு உறுப்பினர் கணக்கு கேட்பேன்"
என்று பேசி வேகமாக செல்ல கூட்டத்தில் 90 விழுக்காடு கலைந்து அவ்ர் பின்னால் செல்ல.
,தலைவர் கலைஞர் பேசிகிறார் என் மதுரை முத்து கெஞ்ச ஆனால் mGr போனதும் மாநாட்டு அரங்கமே காலி.
தலைவர்
கலைஞரின் கோபம்(MGR நீக்கம்) கழக பிளவுக்கு காரணமாய்விட்ட்டது.

(காங்கிரஸ் இந்திரா காந்தியின் யோசனைபடி,இதயம் பேசுகிறது 'மணியன்" துணையுடன் "இதய வீணை" காஷ்மீர் படப் பிடுப்பில் -வருமான வரி ஏய்ப்புகள்,உலகம் சுற்றும் வாலிபன் திரைப் பட வெளிநாட்டு படப்பிடிப்பில் போது நடந்த அந்நிய செலவாணி சட்ட மீறல்கள் -ஆகியவற்றை காட்டி மிரட்டலுக்கு பயந்த mgr புதியகட்சி காண எண்னம் கொண்டிருந்தார் என்பர் ஒரு சாரர்-உண்மை எதுவோ கடவுளுக்குதான் தெரியும்)

எப்படி இருந்தாலும் "நாடோடியாய்"
இருந்தவரை "மன்னாக" மாற்றி சுமார் 13 வ்ருடங்கள் அரியனையில் அமரச் செய்து அழகு பார்த்த பெருமை "சமையல் காரன்"(நடித்த 2 வது படம்) முத்துவை சாரும்

தலைவர் கலைஞர் ஐயாவின்
(மு)டிபறித்த.(க)ர்த்தா.முத்து
பின்னாளில் திரைப் பட வாய்ப்பு இழந்து,உடல் நலம் கெடுக்கும் கெட்ட குணங்களின் குடியிருப்பய் மாறி,எதற்கும் கலங்காத இமயத்தை(தமிழினத் தலைவர் கலைஞர்) நிலைகுலையச் செய்தவர்,

பின் தன் நிலை வருந்தி ,திருந்தி தற்சமயம் மகனில் ஆதரவில் மீண்டும் திரைபட உலகில் இரண்டாவது இன்னிங்கிஸ்(அருமையாக பாடும் திறமையுள்ளவர்)தொடக்கம்

இதில் கிளைமாக்ஸ்

70 ஆண்டுகால சமுதாய பொதுவாழ்விலும்
50 ஆண்டு கால அரசியல் வாழ்விலும்
5 முறை முத்தான முதல்வராய்
சரித்திரம் படைத்த ஓய்வில்லாச் சூரியன்

தன் மக்ன் முத்து திருந்தி திரும்பி வந்ததை பார்த்து கண் கலங்கி

"எப்படி வந்திருக்க வேண்டியவன்

அப்பா நீ"

என்று

சொன்னதை கேட்டதும் கலைஞரின் எதிர்ப்பாளரின் கண்கூட கலங்கியதை இந்த நாடே அறியும்


"தான் ஆடவில்லையம்மா
சதை ஆடுது
அது
தந்தை என்றும்
மகன் என்றும்
சதிராடுது"


நினைவலைகளை கல்லுரிக் காலத்திற்கு
ஊர்வலமாய் சென்று வர உதவிய டோண்டு சாரின் இப் பதிவை பாரட்டுவோம்

Anonymous said...

1.டோண்டு ஐயாவும்,பெரியவர் மாயவரத்தாரும் பெருமைபட்ட தாமரையின் கர்நாடக வெற்றிக்கு 1000 கோடிக்கு மேல் செலவழித்த கர்நாடக"வைகுண்ட ராமன்கள்" கள் குவாரி அதிபர்கள் ரெட்டி சகோதரர்கள் பற்றி செய்தி பற்றி கருத்து என்ன?

2.ஹோகனேக்கல் கொண்டான் எடியுரப்பா அவர்கள் கர்நாட மாநில " கலைஞர்"(tamil nadu c.m) போல் மொழி,கலாச்சாரம்,தண்ணிர் உரிமை,வாழும் பகுதிகளின் உரிமை
இவைகளுக்காக எந்த தியாகமும் செய்வேன் என பேச ஆரம்பித்துவிட்டார் பார்த்தீர்களா?

3.இனி காவேரிப் பிரச்சனை விடாக் கொண்டான் கொடாக் கண்டான் கதைதானா?


4.குஜராத் முதல்வர் மோடி அவர்களின் ஆட்சி,நிவாக,பொருளாதார முறைகளை அங்கு சென்று தெரிய முயலுவதாக செய்திகள்.

ஆனால் வாஜ்பாய் அவர்களின் வழி நடப்பேன் என்கிறாரே,அத்வானி ஜிக்கு
எதிரானவரா?(அத்வானிக்கும் -வாஜ்பாயுக்கும் சுமுகம் இல்லை எனபதாக செய்திகள் வந்தன)

5.ஜாதகப் படி "எடியூரப்பா-எட்டியூரப்பா " மாறியதால் இந்த வெற்றி என்கிறார்கள்.
பரவாயில்லை
(யாகங்கள் நடத்துவோருக்கு நல்ல நேரம்-ஸ்ரீதரின் "காதலிக்கநேரமில்லை" படத்தில் டி.எஸ்.பாலையா சொன்னது மாதிரி பணம் கொட்டோ கொட்டென்று கொட்டப் போகிறது)

ஏற்கனவே நமது தமிழக அரசியல்
(1967 க்குப் பின் வந்த திராவிட கழகங்களின் ஆட்சி,கட்சி இவைகளில் புதிய அனுகுமுறை( கூட்டணி வெற்றிகளை அட்ச்த்திர சுத்தமாக கணிக்கும் ராஜதந்திரம்
மொழிப்பற்று,பிற்பட்டடோர்நலம் பேணல்,தண்ணிர் உரிமை காத்தல், இதில் அவர்(அண்ணன் எ(ட்)டியூரப்பா) நல்ல தேர்ச்சி பெற்றுள்ளவர் ( பெரிய பிற்பட்ட லிங்கா இனத்தை சேர்ந்தவர்)என அவர் வாழ்க்கை வரலாறு சொல்லும் போது
நம்மீது "எட்டி" காயாய் காய்ந்து விடக் குடாது?( எட்டிக்காய் கசக்கும்" என்பார்கள்)

இத்துப்போன ரீல் said...

//நடிப்பு தர்மேந்திரா (தமிழில் எம்ஜிஆர்), விஜய் அரோரா (தமிழில் எம்ஜிஆர், கஷ்டம்டா சாமி), மற்றும் தாரீக் (ஆமிர்கானின் உறவினர், தமிழில் தெலுங்கு நடிகர் பெயர் தெரியவில்லை)//
அந்த தெலுங்கு நடிகர் புகழ் பெற்ற "சிரிசிரி முவ்வா" படத்தில் நடித்த சந்திரமோகன்!..சமீபத்தில் தங்க காசு மோசடியில் அடிபட்டாரே அவரேதான்!...
//அந்த ரோலுக்கு நடிக்க வரும்படி கமலஹாசனைக் கேட்டாங்களாம். ஏனோ அவர் மறுத்துட்டதாக சொன்னாங்க.//
இது தவறான தகவலாகத்தான் இருக்க வேண்டும்.அந்த காலகட்டத்தில் கமலை அதிகம் பேருக்குத் தெரிந்து இருக்காது.எம்ஜியார் படத்தில் நடித்து தமிழ்நாடு முழுமைக்கும் ஒரே படத்தில் அறியத்தெரியும் வாய்ப்பை அவர் எப்படி இழக்க விரும்புவார்!....

//டோண்டு அய்யா,
எனக்கு தெரிந்த வரை எம் ஜீ ஆரை விட கேவலமா நடிப்பதற்கென்றே பிறந்து வந்தது மஞ்ச துண்டின் ஆஃப்ஸ்ப்ரிங் மு க முத்து அய்யா தான்.தமிழர்களின் போதாத காலம் அந்த மூஞ்சியால் சினிமாவில் முன்னுக்கு வரவில்லை.வந்திருந்தா நம்ம லொள்ளு சபா கும்பலுக்கு அட்சய பாத்திரம் போல அள்ள அள்ள குறையாத அளவுக்கு மேட்டர் தந்திருப்பார்.

பாலா//
பாலா அண்ணன் அவர்களே!....சூப்பர்.. இந்தவகையில் லொள்ளு சபா தன் அரிய அட்சய பாத்திரத்தை இழந்து விட்டதில் எனக்கு பெரிய வருத்தம்!..

dondu(#11168674346665545885) said...

//அந்த காலகட்டத்தில் கமலை அதிகம் பேருக்குத் தெரிந்து இருக்காது.எம்ஜியார் படத்தில் நடித்து தமிழ்நாடு முழுமைக்கும் ஒரே படத்தில் அறியத்தெரியும் வாய்ப்பை அவர் எப்படி இழக்க விரும்புவார்!....//
நான் கூறியதை 1976-ஆம் ஆண்டு ஒரு சினிமா பத்திரிகையில் வந்த கமலின் பேட்டியில் படித்தேன். (பத்திரிகையின் பெயர் நினைவுக்கு வரவில்லை, ஆனால் பஞ்சு அருணாசலம் அதன் ஆசிரியர் என்று ஞாபகம்). மாட்டேன் என்பதை வெளிப்படையாகக் கூறாது, கால்ஷீட்டு பிரச்சினையை காட்டி சமாளித்தார் என்றும் படித்தேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

இத்துப்போன ரீல் said...

//நான் கூறியதை 1976-ஆம் ஆண்டு ஒரு சினிமா பத்திரிகையில் வந்த கமலின் பேட்டியில் படித்தேன். (பத்திரிகையின் பெயர் நினைவுக்கு வரவில்லை, ஆனால் பஞ்சு அருணாசலம் அதன் ஆசிரியர் என்று ஞாபகம்).//

நீங்கள் சொல்லும் பத்திரிக்கை "பிலிமாலாயா" வாக இருக்கும்.எனென்றால் அந்த நேரத்தில் பேசும்படமும்,பிலிமாலயா வும் தான் புகழ்பெற்று இருந்தன.சினிமா பத்திரிக்கைகளும் இப்போது உள்ளது போல் அதிகமாக இருக்கவில்லை.மேலும் பிலிமாலயாவில்தான் திரு.பஞ்சு அருணாசலம் இணையாசிரியராக இருந்தார்....மற்றபடி எனக்கு அந்த பேட்டியைப் பற்றி தெரியாது!...

dondu(#11168674346665545885) said...

நினைவுபடுத்தியதற்கு நன்றி. பிலிமாலயாதான் அது. எம்ஜிஆரும் சரி சிவாஜியும் சரி, இம்மாதிரி வளரும் கலைஞர்கள் தம்முடன் நடிக்க நேரிட்டு அவர்கள் ஷாட் நன்றாக வந்தால், அதை எடுத்துவிட ஏற்பாடு செய்வார்கள். அந்த மாதிரி கமல் அவர்கள் மாதவனுக்கு செய்யாது, அன்பே சிவம் எடுத்ததால்தான் அது காவிய ரேஞ்சுக்கு வந்தது.

அதே ஈகோ பிரச்சினையால்தான் சிவாஜியும் எம்ஜிஆரும் பிறகு சேர்ந்து நடிக்கவேயில்லை. இந்த் ஆஸ்பெக்டை அவர்கள் இருவருமே தனித்தனி பேட்டிகளில் தொட்டு காட்டியுள்ளனர்.

இதுவே ஹிந்தியில் பல நட்சத்திரங்கள் சர்வ சாதாரணமாக ஒரே படத்தில் நடிப்பார்கள். அதற்கு ஹிந்தியின் இந்தியா மற்றும் உலகளாவிய மார்க்கெட் அளவும் காரணமாக இருக்கலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//அந்த மாதிரி கமல் அவர்கள் மாதவனுக்கு செய்யாது, அன்பே சிவம் எடுத்ததால்தான் அது காவிய ரேஞ்சுக்கு வந்தது.//

அன்பே சிவம் மார்க்சிய அடிப்படை கொண்டதாயிற்றே!
கவனிக்கலையா நீங்க!

kumar

Cheyyar Thamizh said...

////அதுவும் ஹிந்தி படத்தில் தாரிக்கின் பாத்திரத்தில் நடித்த தெலுங்கு நடிகர்
அய்யோ பாவம்//
- I think it is Sasi kumar.////

இல்லை சார் ! அவர் பெயர் சந்திர மோகன். கருப்பு- வெள்ளை படங்களில் இருந்து தெலுங்கில் இவர் இன்னமும் (அப்பா வேடங்களில்) நடித்துகொண்டிருக்கிறார் !

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது