பகுதி - 43 (01.04.2009):
சாம்பு சாஸ்திரிகள் வீட்டுக்கு வேம்பு சாஸ்திரிகள் வருகிறார். நாதன் பிள்ளை அசோக்கின் பூணலுக்கு தான் சாம்புவை பரிந்துரைத்திருப்பதாகக் கூறுகிறார். நாதன் நல்ல சன்மானங்கள் தருவார் என்றும் அவர் கூற, ஒரு பிராமணப் பிள்ளையின் பூணலை நடத்தி வைப்பது மிகப் புண்ணியமான காரியம் எனவும் சாம்பு கூறுகிறார்.
நீலகண்டன் பாகவதரை சீண்டுகிறார். பூணல் போடுவதால் என்ன பிரயோசனம், தான் பூணலை கழட்டி எறித்து விட்டதாகவும், காயத்ரி எல்லாம் சொல்வதில்லை எனவும் இருப்பினும் ஆஃபீசில் பிரமோஷன் எல்லாம் அமோகமாக வருவதாகவும் அவர் கூறுகிறார். “பரவாயில்லையே, பூணலைக் கழட்டினா பிரமோஷன் என்பது அவர் ஆஃபீசில் புது ரெகுலேஷனா” என பாகவதர் அவரை லேசாக வாருகிறார். அதனால் எல்லாம் அசராத நீலகண்டன் தானும் நாதனும் காயத்ரி சொல்லாததால் எந்த வகையிலும் பாழாக இல்லையென்றும், பாகவதர் அதை சொல்வதால் எல்லாம் ஓகோ என வாழ்வதில்லை என்றும் நீலகண்டன் கூற, அதற்கு பாகவதர் நாதனுடைய செல்வ நிலையில் நூறிலோ ஒரு பங்கு கூட தனக்கு இல்லையென்றாலும், தனது மன நிம்மதியில் லட்சத்தில் ஒரு பங்கு கூட நாதனிடம் இல்லையே என சுட்டிக் காட்டுகிறார்.
நீலகண்டன் ஒன்றும் புதிதாகச் சொல்லவில்லை எனவும், ராமாயண காலத்திலேயே ராமரிடமே ஜாபாலி என்பவர் இதைவிட தூக்கி அடிக்கும் வகையில் நாத்திகம் பேசிவிட்டதாகவும், இந்த வாதத்துக்கு சார்வாகம் எனப் பெயர் என்றும் கூறிவிட்டு, இவரைப் போன்றவர்களுடன் பேசுவது கால விரயமே எனக் கூறிவிட்டு ஒரு சுலோகத்தை முணுமுணுத்துக்ம் கொண்டே போகிறார்.
அது என்ன சுலோகம் என சோவின் நண்பர் கேட்க, அது சாணக்கிய நீதியில் வருகிறது என்றும், பார்வையில்லாதவனுக்கு கண்ணாடியால் எப்படி பிரயோசனம் இல்லையோ அது போலவேதான் அறிவில்லாதவனுக்கு சாஸ்திர போதனை என அதற்கு பொருள் எனக் கூறுகிறார் சோ. முழுக்கவே அறிவில்லாதவனையோ முழுக்க அறிவுள்ளவனையோ கன்வின்ஸ் செய்வது சுலபம் எனவும் அரைகுறைகள் விஷயத்தில் அது நடவாத காரியம் என பத்ரஹிரி கூறுவதையும் அவர் சுலோகமாக எடுத்துரைக்கிறார்.
உமா அசோக்கிடம் பூணல் பற்றி பல கேள்விகள் கேட்கிறாள். ஒரு தருணத்தில் தனக்கு தெரிந்ததை விட இந்த விஷயத்தில் உமாவுக்கு அதிகம் தெரிந்திருப்பதாய் அவன் சிலாகிக்க உமா தன்னையறியாமல் “வசிஷ்டர் வாயால் பிரும்மரிஷி” என புன்னகையுடன் கூறுகிறாள். அசோக்குக்கோ இதைக் கேட்டதுமே தன்னையறியாமல் ஒரு உணர்வு ஏற்படுகிறது. தன்னையும் வசிஷ்டரையும் கம்பேர் செய்ய வேண்டாம் என அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறான். சந்தியாவந்தனம் செய்வது பற்றி பேசுகையில் அதெல்லாம் விமானத்தில் ஏறுவதற்கான படிகள் என்றும் விமானம் பறக்க ஆரம்பித்ததும் அவை தேவைப்படாது என்றும் கூறுகிறான். இது தனக்கு புரியவில்லை என உமா கூற, தனக்கும் பல விஷயங்கள் புரியவில்லை எனவும், உமாவுக்கு புரிபவை தனக்கு பேசத் தகுந்ததாக இல்லை எனவும் கூறுகிறான். அவன் என்னதைத்தான் தேடுகிறான் என உமா கேட்க, தனக்கே அதுவும் தெரியவில்லை என்கிறான். மேலும் கூறுகிறான், கவலைப்படுவது என்பது மனிதனின் இயல்பு நிலை, எதற்காவது கவலைப்பட்டே தீருவது என்பது மனித இயற்கை என்று. கவலையை ஒழிக்க முடியாது, ஆனால் மனதை ஒழிக்க முடியும் என்றும் கூறுகிறான். இது புரியவில்லை எனக் கூறிய உமாவிடம் ஒரு சிறுகதையை கூறுகிறான். தன் மனைவியை இன்னொருவனுடன் பார்க்கக் கூடாத கோலத்தில் பார்த்து விட்ட ஒருவன் அவளைக் கொல்ல, அந்த இன்னொருவனைக் கொன்றிருக்கலாமே என அவனிடம் மற்றவர் கேட்க, தினம் தினம் ஒருவனை கொல்வதைவிட ஒரே நாளில் அவளைக் கொன்றுவிட்டதாகக் கூறுகிறான்.
ஏன் திடீரென்று இந்த ஜோக் என கேட்கும் உமாவிடம் இக்கதையில் கவலைதான் இன்னொருவன், மனம்தான் மனைவி எனவும் தெளிவு செய்கிறான். தினம் ஒரு கவலையென படுவதை விடுத்து மனதையே அடக்கினால் என்ன ஆகும் என அவன் கேட்க, இவ்வளவு பெரிய விஷயத்தை இவ்வளவு எளிமையாகச் சொன்னதை சிலாகித்து விட்டு, பிறகு விடை பெறும்போது, “வருகிறேன் வசிஷ்டரே” எனக்கூறி விடை பெறுகிறாள். தன்னைப் பொருத்தவரை அவன் வசிஷ்டர்தான் எனவும், ஆனால் ஜோக் அடிக்கிற வசிஷ்டர் எனவும் அவள் கூறிச் செல்கிறாள்.
என்ன சார் இப்படி அசோக்கும் உமாவும் பேசறதா வெங்கட் எழுதியிருக்கார், இளம் ஆணும் இளம் பெண்ணும் காதல் விஷயங்கள் பேச வேண்டாமா என சோவின் நண்பர் அலுத்துக் கொள்ள, இருவரும் டூயட் பாடி, கூடவே 50 பேர் வெண்ணுடையில் நடனம் ஆட வேண்டுமா என சோ அவருக்கு பதிலளிக்கும் விதமாகக் கேட்டு நண்பரை கிண்டல் செய்கிறார். அசோக் பேசுவது உயர்தர ஆத்மவிசாரணைகள் எனக்கூறிய சோ நசிகேதசுக்கு எமன் உபதேசித்த கதையையும் கூறுகிறார். உடல்தான் தேர் என்றும், அதன் இந்திரியங்கள் குதிரைகள் என்றும், அவை போகும் பாதைகள்தான் நடைமுறை வாழ்க்கை என்றும், மனம்தான் கடிவாளம் எனவும் புத்திதான் தேரோட்டி எனவும், ஆன்மாதான் தேரின் உள்ளே உட்கார்ந்திருப்பது எனவும் உருவகப்படுத்தி எமன் நசிகேதசுக்கு கூறுகிறான்.
உமாவும் பர்வதமும் அசோக் பற்றி பேசுகின்றனர். உமாவின் மனது அசோக்கின் பக்கம் ஆகர்ஷிக்கப்படுகிறது எனப் பர்வதம் சந்தேகிக்கிறாள். வெளிப்படையாகக் கேட்காது சுற்றி வளைத்துப் பேச உமா விலாங்கு மீனாக வழுக்குகிறாள். தன் கணவன் நீலகண்டனிடம் இது பற்றி பர்வதம் பேச அவரும் தன் பங்குக்கு அவளை கலாய்த்துவிட்டு சென்று விடுகிறார்.
நாதன் வீட்டில் பாகவதரையும் அவர் மனைவியையும் வரவேற்று அவருக்கும் அவர் குடும்பத்துக்கும் ஜவுளி எல்லாம் வாங்கி விருந்து வைத்து மரியாதை எல்லாம் செய்கிறார் நாதன். வசுமதிக்கு இதில் அவ்வளவு பிடித்தம் இல்லாவிடினும் வெளியில் இனிப்பாகப் பேசுகிறாள்.
பகுதி - 44 (02.04.2009):
பாகவதர் வீட்டில் நாதன் தனக்கு செய்த மரியாதையால் அவர் மனம் நெகிழ்ந்து பேசுகிறார். தனது பேரன் ராமசுப்புவுக்கும் பூணல் போட வேண்டும் எனவும், தன் மகன் அதுபற்றி சிந்திக்காமல் இருப்பதாகவும் பாகவதர் வருத்தப்படுகிறார்.
வையாபுரிக்கு அசோக்கின் பூணல் பத்திரிகை வர, அவர் அச்சமயம் தன்னைப் பேசச் சொன்னால் என்ன செய்வது என நினைத்து திருக்குறள் புத்தகத்திலிருந்து “அந்தணர் என்போர் அறவோர்மற் எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டுஒழுகலான்” என்னும் குறளை பிடித்து அதையும் அதன் பொருளையும் நெட்டுரு செய்ய ஆரம்பிக்கிறார்.
திருக்குறளுக்கும் இந்து மதத்துக்கும் என்ன சம்பந்தம் என சோவின் நண்பர் கேட்க, சோ ஆணித்தரமான உதாரணங்களை முன்வைக்கிறார். அவற்றையெல்லாம் சோவின் குரலிலேயே கேட்க இந்த எபிசோடை ஒருமுறை பார்ப்பதே நலம். மேலே சுட்டி தந்துள்ளேன்.
கைலாயத்தில் நாரதர் சிவபெருமானிடம் பேசுகிறார். அசோக்கிடம் பாகவதர் ரூபத்தில் வந்து பேசியது, திருவண்ணாமலையில் ஒரு பைராகியாக வந்து அவனை ஒரே இடத்தில் இருக்கும்படி உபதேசித்தது, நாடி ஜோசியம் பார்க்கப்போன இடத்தில் திடீரென சூறாவளியாக வந்தது எல்லாம் தானே என்றும், அவை யாவுமே பரமன் ஆக்கினைப்படித்தான் நடந்தன எனவும் நாரதர் விளக்குகிறார்.
சோவின் நண்பர் நாடி ஜோசியம் பற்றி இந்த இடத்தில் மீண்டும் கேட்க, சோ அவர்கள் அதை சரியான மனிதர்கள் செய்யும் விதத்தில் செய்தால் சரியான பலனைத் தரும் எனக் கூறுகிறார். அசோக்கின் விஷயத்தில் சரியான சுவடியும் கிடைத்ததாகவும், அது தேவ ரகசியங்களை உள்ளடக்கியதால்தான் நாரதர் அதைக் காணாமல் போக்கியதாகவும் சோ கூறுகிறார். பிறகு பலவகை நாடி சோதிடங்கள் பற்றிக் கூறுகிறார்.
அசோக் படித்த காலேஜின் முதல்வர் தனது சக ஆசிரியரிடம் நாதன் தமக்கு அசோக்கின் பூணல் பத்திரிகை அனுப்பியதாகவும், அவர் என்ன இருந்தாலும் பெரிய மனிதனே என்றும் தான் அசோக்கை காலேஜை விட்டு நீக்கியதற்காகவெல்லாம் கோபப்படாதது அவர் பெருந்தன்மையையே காட்டுகிறது என அவர் புகழ்ந்து கூறுகிறார். அசோக் எரித்த லைப்ரரி புத்தகத்தின் புது காப்பியை அவர் வாங்கித் தந்ததையும் கூறுகிறார்.
அசோக்கின் பூணல் ஆரம்பிக்கிறது. கூடவே ஸ்க்ரீனின் இடது பாதியில் சோ வந்து ரன்னிங் காமெண்டரி தருகிறார். நான் அவற்றை இங்கு திருப்பித்தர முயற்சிப்பேன். இருந்தாலும் கூறுவேன், மேலே உள்ள சுட்டிக்கு போய் அதை பார்ப்பதே சிறப்பாக இருக்கும்.
உபநயனம் என்ற வார்த்தைக்கு முதலில் சோ பொருள் தருகிறார். மாணவனை குருவிடம் அழைத்து செல்வதெ அது என விளக்குகிறார். இதன் வழிமுறைகள் ஏற்கனவே எங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்ற கேள்விக்கு பதில் தருகிறார். பூணலில் மான் தோல் வைத்து கட்டப்படுவது, அதன் மூன்று இழைகளுக்கான அர்த்தங்கள், அம்மிமேல் காலை வைத்தல், எல்லா உயிரினங்களுக்கும் நலம் வேண்டும் பிரார்த்தனைகள் ஆகியவற்றை அவர் விளக்குகிறார்.
பகுதி - 45 (03.04.2009):
பூணல் தொடர்கிறது. அதற்கான மந்திரங்களில் கவனம் செலுத்தாது நாதன் வந்தவர்களுடன் மணையிலிருந்து சைகை மூலமாக பேசுவது ஆகியவற்றை கவனித்து பொறுக்கமுடியாத நிலையில் சாம்பு அவரிடம் காரியத்தில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறார். பிறகு பிரும்மோபதேசம் நடக்கிறது. நாதன் புரோகிதர் மந்திரம் சொல்ல, அதை அவர் அசோக்கிடம் அதைச் சொல்ல, அசோக்கும் தன் பங்குக்கு அதை கூறுகிறான்.
பிரும்மோபதேச மந்திரத்தின் பொருளை சோ அவர்கள் தெளிவாக நிறுத்தி விளக்குகிறார். அவர் நண்பர் அதை கவனமாக் கேட்டு வருகிறார். இவ்வளவு சின்னங்கள் அவசியமா, அவை இல்லாது வெறுமனே கடவுளை கும்பிட்டால் போதாதா என நண்பர் கேட்க, அவற்றின் அவசியத்தையும் கூறுகிறார். தேசத்தின் மரியாதையை குறிக்கும் கொடியை வணங்குவதும் ஒரு சிம்பாலிசமே எனக் கூறுகிறார். வேதத்தில் கூறப்பட்டவை ரொம்பவுமே நுண்பொருள் பெற்றவை என்பதால், அவற்றையெல்லாம் அவதானிக்க சின்னங்கள் அவசியமே எனவும் கூறுகிறார்.
பூணல் கல்யாணத்தின் ஒவ்வொரு சடங்காக திரையில் வரவர, சோ அவர்களது நேர்முக வர்ணனை மற்றும் விளக்கங்கள் தொடர்கின்றன. எல்லாம் முடிந்ததும் நண்பர் கேட்கிறார், அசோக்குக்கோ நாதனுக்கோ இதெல்லாம் தெரியுமா என. சோ நேரடியாகவே ஒத்துக் கொள்கிறார், அவர்களுக்கு தெரியாது என்று. இங்கு நடந்தவை எல்லாமே சிரத்தையுடன் நடந்ததெனக் கூறவியலாது எனவும், அசோக்குக்கு கூட அவை சரியாக சொல்லப்படவில்லை எனவும் கூறுகிறார்.
மேலே கைலாயத்தில் விஸ்வாமித்திரர் வசிஷ்டருக்கு எப்போது நிஜமான பிரும்மோபதேசம் நடக்கும் என கவலைப்படுகிறார். விளக்கம் கேட்கும் நாரதரிடம் அவருக்கும் இந்த விஷயம் தெரியும் என்றும், தன் வாயால் சொல்ல வேண்டும் என அவர் எதிர்பார்ப்பதாகவும் விஸ்வாமித்திரர் கூறுகிறார். பூவுலகில் அசோக்குக்கு நடந்தது பூணலே இல்லையெனவும், அதில் போடப்பட்டது வெறும் கயிறெனவும் அவனுக்கு எப்போது நிஜமான பிரும்மோபதேசம் நடக்கும் என்பதை முக்கண்ணனே அறிவான் எனவும் விஸ்வாமித்திரர் கூறுகிறார்.
முரளி மனோகர் கூறுவதாவது: சாதாரணமாக பெரிசு புதன், வியாழன் மற்றும் வெள்ளியன்று வரும் எபிசோடுகளுக்கான பதிவை அடுத்த திங்களன்றுதான் போடும். ஆனால் இம்முறை இன்றே போட்டதற்கான காரணம் தனக்குத்தானே கொடுத்துக் கொண்ட பிறந்த நாள் பரிசாக அதை நினைத்ததுதான்.
எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அள்ளிப்பற்றும் சுடர்
-
அன்புள்ள ஜெ, நான் என் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது
நீங்கள் கோவிட் தொற்று காலகட்டத்தில் எழுதிய 136 கதைகளைப் பற்றிப்
பேசிக்கொண்டிருந்தேன். ...
13 hours ago
3 comments:
//சாதாரணமாக பெரிசு புதன், வியாழன் மற்றும் வெள்ளியன்று வரும் எபிசோடுகளுக்கான பதிவை அடுத்த திங்களன்றுதான் போடும். ஆனால் இம்முறை இன்றே போட்டதற்கான காரணம் தனக்குத்தானே கொடுத்துக் கொண்ட பிறந்த நாள் பரிசாக அதை நினைத்ததுதான்.//
என்னது, பெருசுக்குப் பிறந்த நாளா? வாழ்த்துக்கள், டோண்டு சார்!
Many Happy Returns, Sir! Arasiyal baaniyil, Vazhtha vayadu illai, Vananguhiren :)
wish you a happy birthday, sir!!!!!!!!!
Post a Comment