பகுதி - 56 (22.04.2009):
நீலகண்டன் வீட்டுக்கு சாம்பு வருகிறார். நாதன் வீட்டுக்கு போய் வெறுமனே பூஜை செய்யாது, தேவையின்றி அசோக்குடன் பேசுவதாகவும் அப்படியெல்லாம் அனாவசியமாக பேச்சு வைத்து கொள்ள வேண்டாம் எனவும் நீலகண்டன் அவரை எச்சரிக்கிறார். சாம்பு விடை பெற்று கிளம்பும் நேரத்தில் வீட்டின் புறக்கடையிலிருந்து மாடு கத்தும் சத்தம் கேட்க, சாம்பு விவரம் கேட்கிறார். நீலகண்டன் தனபாலிடமிருந்து மாட்டை சீஸ் செய்த கதையைக் கூறுகிறார். பிறகு அது வியாதியுள்ள மாடாகியதால், அதை அடிமாடாக விற்கப் போவதாகவும் கூற, சாம்பு அவருடன் பேசி பசுவை தானே எடுத்து கொள்வதாக கூறுகிறார். பசுவை பராமரிப்பது புண்ணியம் என்றும் கூறுகிறார். இப்போது திரையில் வரும் சோவின் நண்பர் மற்ற மிருகங்களைக் காட்டிலும் பசுவுக்கு அப்படி என்ன சிறப்பு எனக் கேட்க, சோ அவர்கள் அதை பல புராணங்களிலிருந்து உதாரணங்களைத் தந்து விளக்குகிறார்.
கிருபா வீட்டில் வேம்பு சாஸ்திரியின் மகள் ஜயந்தியை பெண் பார்த்துவிட்டு வந்த கிரி அவனுடன் பேசிக் கொண்டிருக்கிறான். பெண் தனக்கு பிடித்திருப்பதாகக் கூறுகிறான். அவனது மற்றும் ஜயந்தியின் ஜாதகத்தைப் பார்த்த கிருபா, நல்ல பொருத்தம் இருப்பதாகக் கூறுகிறான். அதே சமயம் பிராப்தம் என்றும் இருக்கிறது என பூடகமாகக் கூறுகிறான். பிறகு கிரி விடைபெற்று சென்றபிறகு இது பற்றி பிரியா அவனை விளக்கம் கேட்க, அவளிடம் சில விஷயங்களை கூறும்போது பேசுவது காதில் விழாமலிருக்க வாய்ஸ் ஓவர் செய்யபடுகிறது. இவனுக்கு இவ்வளவு விஷயம் தெரிந்திருக்கிறதா என ஆச்சரியப்படுகிறாள் பிரியா. ஒரு வேளை கிரியே அவனிடம் சொல்லியிருப்பானோ என்ற சந்தேகம் வேறு அவளுக்கு. அப்படியெல்லாம் இல்லை என கிருபா கூறிவிடுகிறான்.
வையாபுரி வீட்டுக்கு வரும் அவரது கட்சிக்காரன் சிங்காரத்தின் மனைவி பிரசவத்தில் இறந்தது பற்றி கூற, வையாபுரி பாதி சாப்பாட்டை அப்படியே விட்டுவிட்டு இறந்தவருக்கான அந்திமக்கிரியைகளை செய்விக்க விரைகிறார். சிங்காரத்திடம் இப்போதைக்கு அவன் மனைவி இறந்த செய்தியை தெரிவிக்க வேண்டாம் எனவும் முடிவு செய்கிறார். சிங்காரத்தின் பையனை தன் வீட்டிற்கு கொண்டு வருகிறார். இது ஒன்றும் அவரது மனைவிக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. வையாபுரி பாத்திரத்துக்கு இன்னொரு பிளஸ் இந்த காட்சியில்.
நாதன் வீட்டில் சாம்பு சாஸ்திரிகள் பசுமாட்டை நீலகண்டன் அடிமாடாக விற்கப்போவது பற்றி கூறி அதை தான் பராமரிக்க முயற்சி செய்யப்போவதாக கூறி, அதற்காக நாதனிடம் 5000 ரூபாய் கடனாக கேட்கிறார். நாதனோ அப்பணத்தை தானமாகவே தருகிறார்.
வேம்பு கிரியின் வீட்டுக்கு வருகிறார். அவன் தந்தை அப்போது வெளியில் கிளம்பி கொண்டிருக்கிறார். அவன் தாய் வேம்புவை வரவேற்று, தான் பார்ப்பனத்தி என்றும் ஆனால் தன் கணவர் பார்ப்பனர் இல்லை என்ற உண்மையை கூறுகிறார். தான் 28 ஆண்டுகளுக்கு முன்னால் காதல் வசப்பட்டு தன் கணவரை மணந்ததாகவும், அப்போது தெரியாத சுயஜாதி அபிமானம், இப்போது தன் மகனது திருமணம் நடக்கவேண்டிய தருணத்தில் ரொம்பவும் தன்னை பாதிப்பதாகவும் அவள் கூறுகிறாள். தன் மகனை பிராமணனாகவே வளர்த்திருப்பதாகவும், மூன்று வேளை சந்தியாவந்தனம் எல்லாம் அவன் செய்வதாகவும் அவள் கூறுகிறாள். தன் மகன் ஒரு பிராமணப் பெண்ணையே மணக்க வேண்டும் என தான் இப்போது ஆசைப்படுவதாக அவள் கூறுகிறாள்.
சோவும் அவர் நண்பரும் இப்போது திரையில் வருகின்றனர். பழங்காலத்தில் பிராமணன் யார் என்பதில் தெளிவான நிலை இருந்ததாகவும், இப்போதுதான் குழப்பங்கள் எனவும் சோ கூறுகிறார். அதற்கு இரு கதைகள் கூறுகிறார். ஜபலா என்னும் பெண்மணியின் புத்திரன் சத்யகாமன். கௌதம மகரிஷியிடம் வந்து தன்னை மாணாக்கனாக ஏற்குமாறு கேட்க அவர் அவனது தந்தையின் பெயரை கேட்கிறார். அதற்கு அவன் தந்தையின் பெயர் தனக்கோ தன் தாய்க்கோ கூட தெரியாது என்றும், ஜபலாவின் மகனான தான் சத்யகாம ஜாபாலி என்று கூறி அவரை வணங்குகிறான். தைரியமாக அவன் உண்மையே பேசுவதால் அவன் பிராமணனே என முனிவர் முடிவு செய்து அவனை ஏற்று கொள்கிறார்.
இன்னொரு கதையில் ஒரு பிராமண ரிஷி வருகிறார். அவரது கோபம் பதிக்கு சேவை செய்யும் ஒரு பெண்ணிடம் பலிக்கவில்லை. பிறகு அப்பெண் காட்டிய தர்மவியாதர் என்ற கசாப்பு கடைக்காரனிடம் அவர் செல்கிறார். தர்மவியாதரோ தனது தாய் தந்தையர் சேவையில் ஈடுபட்டவர். அவரிடமிருந்து கடமையாற்றுவதின் முக்கியத்துவம் பற்றிய உபதேசத்தை இவர் பெறுகிறார். ஆக, தர்மவியாதர் ஒரு பிராமணர் என சோ கூறுகிறார்.
பகுதி - 57 (23.04.2009):
கிரியின் தாயார் தொடர்ந்து வேம்புவிடம் பேசுகிறார். பெரிய மனது பண்ணி அவர் பெண்ணை தனக்கு மாட்டு பெண்ணாகத் தரவேண்டும் என அவரை வேண்டுகிறாள். தன் வீட்டில் கேட்டுவிட்டு சொல்வதாகக் கூறிவிட்டு வேம்பு கிளம்புகிறார்.
நீலகண்டனுக்கு பணம் கொடுத்துவிட்டு சாம்பு மாட்டை தன் வீட்டுக்கு ஓட்டிச் செல்கிறார். அவர் மனைவிக்கு ரொம்ப சந்தோஷம். அதற்கு லட்சுமி என பெயர் வைக்கிறாள்.
நாதன் வீட்டுக்கு வரும் நீலகண்டன் அவரிடம் அசோக்கை ஒரு மனோதத்துவ நிபுணரிடம் அழைத்து செல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். நாதனும் ஒத்து கொள்கிறார். தானே அசோக்குக்காக ஒரு மனோதத்துவ நிபுணரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்குவதாக கூறி விட்டு செல்கிறார். நீலகண்டன் டாக்டர் மார்க்கபந்துவிடம் அசோக் பற்றி பேசிவிட்டு வரும் சனியன்று மாலை 6 மணிக்கு அப்பாயிண்ட்மெண்ட் பெறுகிறார்.
சோவின் நண்பர் இதே மாதிரி ராமருக்கு குழப்பம் ஏற்பட்டபோது அதை வசிஷ்டர் எவ்வாறு தீர்த்துவைத்தார் என கேட்கிறார். சோ அவர்கள் இதற்கு பதிலாக வசிஷ்டர் முயற்சியின் முக்கியத்துவத்தை ராமருக்கு எடுத்துரைத்ததை கூறினார். அப்படியானால் எல்லாமே முயற்சியாலேயே நிறைவேறி விடுமா என ராமர் சந்தேகப்ப்பட, வசிஷ்டர் இத்தருணத்தில் பூர்வ ஜன்ம வினைகளின் அளவும் அதன் பங்கை வகிப்பதாகக் கூறுகிறார்.
கிருபா வீட்டில் அவனும் பிரியாவும் வேம்பு சாஸ்திரிகளுடன் அவர் கிரிவீட்டில் கண்டறிந்த உண்மை பற்றி பேசுகின்றனர். இப்போது என்ன செய்வது என வேம்பு கேட்க, அது அவரது குடும்ப விஷயம் என கிருபா கூறிவிடுகிறான். கிரியின் தந்தை பார்ப்பனர் இல்லை என்பது கிருபாவுக்கு நிச்சயமாகவே தெரியாதா என வேம்பு அவனை கேட்க, கிருபா கோபப்பட்டு பேசுகிறான். ஆனால் வேம்பு அந்தண்டை போனதும் தன் மனைவியிடம் இந்த விஷயம் தனக்கு ஏற்கனவே கிரியின் அன்னையின் தந்தை மூலமாகத் தெரியும் என ஒத்து கொள்கிறான். வீட்டுக்கு போன வேம்பு தன் மனைவியிடமும் அக்காவிடமும் இது பற்றி கூற அவர்கள் காரசாரமாக விவாதிக்கின்றனர். அவர்கள் பேசுவது வாய்ஸ் ஓவரில் மூடப்படுகிறது. கடைசியில் வேம்பு இனிமேல் இந்த வரன் வேண்டாம் என முடிவு எடுப்பது போன்ற தோற்றம் தரப்படுகிறது.
பகுதி - 58 (24.04.2009):
நாதனும் வசுமதியும் அசோக்கிடம் மனத்தத்துவ நிபுணரை பார்க்க வரும்படி கூற அவன் ஒட்டுமொத்தமாக மறுத்து விடுகிறான். நாதன் கோபப்பட்டு அவனை வீட்டை விட்டு வெளியே கொட்டும் மழையில் தள்ளிவிடுகிறார். பிறகு வசுமதி அவரிடம் மன்றாட மனமிரங்கி மீண்டும் அசோக்கை உள்ளே அழைத்து கொள்கிறார்.
அடுத்த நாள் சமையற்கார மாமியிடம் இது குறித்து அவன் பேச நேர்ந்தபோது தான் மனநிலை குன்றியவன் என்பதைக் காட்ட தான் ஏதேனும் பைத்தியக்காரத்தனமான வேலை எல்லாம் செய்யவில்லையே என அவன் கூறுகிறான். அப்படியானா அவன் பசுவிடம் பேசிய விஷயம் என அந்த மாமி கேட்க, மாமி கடவுள் படத்துக்கு முன்னால் நின்று வாய்விட்டு பிரார்த்தனை செய்வது போலத்தான் அது என விளக்குகிறான். சமையற்கார மாமி என்ன பதில் சொல்வது எனத் தெரியாது திகைக்கிறார். பாகவதர் அசோக்குக்கு நலா பேச கற்று தந்துவிட்டதாய் வசுமதி நொடிக்கிறாள். சமையற்கார மாமி அப்படியானால் பாகவதரை விட்டு பேசச் சொல்லி அசோக்கை சம்மதிக்க வைக்கலாமே என ஆலோசனை கூற வசுமதி ஏற்று கொள்கிறாள்.
வையாபுரி வீட்டில் அவர் தன் மனைவியிடம் சிங்காரத்தின் மகனைக் காணாமல் விசாரிக்க அவன் ஓடிப் போய்விட்டான் என அவள் கூறுகிறாள். வையாபுரி மிகவும் கோபப்படுகிறார்.
தன் வீட்டுக்கு வந்த பாகவதரிடம் நாதன் எல்லாவற்றையும் விளக்க அவர் அசோக்குக்கு மனோதத்துவ நிபுணரின் அனுமதி தேவைப்படவில்லை என அழுத்தம் திருத்தமாகக் கூறிவிடுகிறார். ஆகவே தான் இது சம்பந்தமாக அசோக்குடன் பேசுவதற்கில்லை என தெளிவும்படுத்திவிடுகிறார். கோபம் வந்தாலும் அதை அடக்கிக் கொண்டு நாதன் வந்துவிட, வசுமதி தானே பாகவதரை தேடி வருகிறாள். அவளிடமும் பாகவதர் அதையே கூறுகிறார்.
“இப்படி ஏன் சார் எல்லோருக்கும் சந்தோஷம் தராது எரிச்சல் அளிக்கும் வகையில் இவர் பேசுகிறார்” என நண்பர் கேட்க, சோ நோயாளிக்கு மனம் குளிரும் வகையில் அவனுக்கு ஒரு தொந்திரவும் இல்லை என பொய் கூறும் மருத்துவர் நல்லவரா அல்லது நோயாளிக்கு பிடிக்காத கசப்பு மருந்து அல்லது வலிகொடுக்கும் ஊசி போடும் மருத்துவர் நல்லவரா என கேட்கிறார். மேலும், விபீஷணன் ராவணனுக்கு அறிவுரை தந்த போது ராவணன் அவன்மேல் கோபப்பட்டபோது விபீஷணன், சிரிக்க சிரிக்க பேசும் நண்பனை விட மனம் விரும்பாத நல்ல அறிவுரைகள் தருபவனே சிறந்தவன் என கூறியது பற்றியும் சோ பேசுகிறார்.
வசுமதி பாகவதர் மனம் நோக மேலும் பேசிவிட்டு அப்பால் செல்கிறாள்.
எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்று விஷ்ணுபுரம் பரிசளிப்பு விழா! வருக!
-
விஷ்ணுபுரம் விருது இன்று கோவையின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாக
ஆகியுள்ளது. தமிழின் தலைசிறந்த இலக்கிய விருதாகவும் இது கருதப்படுகிறது. இந்த
விழாவில் கலந்து...
18 hours ago
4 comments:
ராகவன், இது you tubeல் கிடைக்குமா?
ஏன் யூ ட்யூப்? அதுதான் ஒவ்வொரு எபிசோடின் வீடியோவுக்கும் சுட்டி தந்திருக்கிறேனே. அதை க்ளிக் செய்து பார்ப்பதுதானே?
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஜெர்மன், பிரன்ச் மொழியிலிருந்து நல்ல இலக்கியப் படைப்புகள் தமிழில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளதா? ஆம் எனில் தகவல் தந்தாள் மகிழ்வேன்.
ஃபிரெஞ்சிலிருந்து தமிழில் நேரடியாக மொழிபெயர்க்கப்பட இரு புத்தகங்கள் 1. குட்டி இளவரசன் (Le petit prince by Saint Exupery)
2. அன்னியன் (L'étranger by Albert Camus)
இரண்டையும் செய்தவர் அல்லியான்ஸ் பிரான்ஸேஸின் ஸ்ரீராம்).
மற்றப்படி நான் கேள்விப்பட்டவையெல்லாம் சம்பந்தப்பட்ட மொழிகளிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டு அங்கிருந்து தமிழுக்கு வந்தவை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment