மூச்சுத் திணற 1000 கிலோமீட்டர்களுக்கு மேல் கார்ப்பயணம் போனதில் ஒரு மைனஸ் பாயிண்ட் இந்த எங்கே பிராமணன் சீரியலை பார்க்க முடியாமல் போனதே. ஆனால் என்ன எபிசோடுகளின் வீடியோ கிடைக்கும் சுட்டிதான் தெரியுமே. கீழே வரும் இரு எபிசோடுகளும் அம்முறையில் காணப்பட்டவையே. இம்மாதிரி செய்யும்போது இன்னொரு விஷயத்தையும் கண்டறிந்தேன். அதாவது கூகள் குரோம் உலாவியை விட நெருப்பு நரியை பாவிப்பதே சிறந்தது. முன்னதில் பாதி பிரேம்தான் தெரிகிறது. புதன் மாலைக்குள் வீட்டுக்கு வந்து விட்டதால் நேரடியாகவே அன்றைய எபிசோடை ஜெயா டிவியில் பார்க்க முடிந்தது. புதன், வியாழன், வெள்ளி எபிசோடுகள் பற்றிய வர்ணனை பிறகு தருவேன்.
பகுதி - 54 (20.04.2009):
நீலகண்டன் நாதன் வீட்டருகே குடியிருக்கும் பால்கார தனபாலை தேடிவருகிறார். தனபால் வீட்டில் இல்லை. நீலகண்டன் சிபாரிசில் தனபால் மாடு வாங்க கடன் வாங்கி, டியூ கட்டாததால் அவருக்கு அலுவலகத்தில் பிரச்சினை. அப்போது வாசலுக்கு வந்த வசுமதி அவரை தங்கள் வீட்டுக்கும் வருமாறு அழைக்கிறாள். மாட்டுக்காரர் விஷயத்தை வசுமதியிடம் கூற, வசுமதி அசோக் அந்த மாட்டோடு பேசிய விஷயத்தை நீலகண்டனிடம் கூறுகிறாள். அதற்குள் தனபாலே அங்கு வந்துவிட அவரை பார்த்து பேசிவிட்டு பிறகு நாதன் வீட்டுக்கு வருவதாக நீலகண்டன் கூறுகிறார்.
தனபாலிடம் பேசும்போதுதான் மாட்டுக்கு ஏதோ வியாதி என்றும், பால் கறப்பதில்லை என்றும் தெரிகிறது. ஆகவே டியூ கட்டவியலாது என தனபால் கூறிவிடுகிறார். அப்போது நீலகண்டன் அசோக் அவரது மாட்டுடன் பேசியது பற்றி கேட்க தனபாலும் அதை உறுதி செய்கிறார். கடைசியில் நீலகண்டன் மாட்டை தன் வீட்டில் வந்து கட்டுமாறு கூறிவிட்டு நாதன் வீட்டுக்கு செல்கிறார்.
வசுமதியிடம் இந்த அசோக் மற்றும் மாட்டு விஷயத்தை பற்றி விவாதித்து அசோக்கை ஒரு நல்ல மனோதத்துவ நிபுணரை பார்க்க செய்ய வேண்டும் என்று நீலகண்டன் கூற வசுமதியும் ஆமோதிக்கிறாள். ஆனால் நீலகண்டன் நாதனிடம் இது பற்றி பேசி அவரையும் இதற்கு ஒத்து கொள்ள வைக்க வேண்டும் என கேட்டு கொள்கிறாள்.
வையாபுரியும் அவர் மனைவியும் சினிமாவுக்கு கிளம்பும் ஆயத்தங்களில் இருக்கின்றனர். அப்போது அங்கு அவசரமாக ஓடிவந்த சிங்காரத்தின் மகன் தனது அன்னைக்கு பிரசவ வலி எடுத்திருப்பதாக கூற, வையாபுரி தனது மனைவியின் ஆட்சேபணைகளை அலட்சியம் செய்து சிங்காரத்தின் மனைவியை ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார். ஒரு அடாவடி அரசியல்வாதிக்குள்ளும் ஒரு மனித இதயம் இருக்கும் இக்காட்சி மனதுக்கு நிறைவை அளிக்கிறது.
சாம்பு சாஸ்திரிகள் வீட்டில் அவரிடம் சௌந்தர்யலஹரியும் கனகதாரா ஸ்தோத்திரமும் பாடம் கேட்ட பக்கத்தாத்து மாமி அவருக்கு நன்றி சொல்கிறாள். அந்த ஸ்லோகங்களின் பெருமை பற்றி பேசுகிறார் சாம்பு அவர்கள்.
“இது என்ன சார், சௌந்தர்ய லஹரி மற்றும் கனகதாரா ஸ்தோத்திரம்? இதெல்லாம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன், இதென்ன விவகாரம்” என நண்பர் கேட்க, அந்த ஸ்லோகங்களை விவகாரம் எனக் கூறியதற்காக சோ அவரை செல்லமாக கண்டித்துவிட்டு அவற்றின் பெருமைகள் பற்றி பேசுகிறார். சௌந்தர்ய லஹரி என்பது 100 ஸ்லோகங்கள் அடங்கிய தொகுப்பு. ஈசனால் அம்பிகையின் புகழை பாடுவதாக அவை அமையப்பட்டுள்ளன. அவற்றை சிவபெருமான் சங்கரருக்கு அளிக்க அவரும் அத்தொகுப்பை பெற்று செல்லும்போது நந்திதேவரால் வழிமறிக்கப்பெற்று அதிலிருந்து 59 ஸ்லோகங்களை பறித்து செல்கிறார். பார்வதி தேவி அந்த 59 ஸ்லோகங்களை சங்கரரே இயற்றும்படி அருள் பாலிக்கிறார்.
கனகதாரா ஸ்லோகமானது ஒரு ஏழையின் குடும்பத்துக்கு சங்கரர் மனமிறங்கி லட்சுமி தேவியை ஆராதித்து ஸ்லோகங்கள் பாடி தங்க மழை பொழிய வைக்கும் நிகழ்ச்சியை உள்ளடக்கியது.
சாம்பு சாஸ்திரிகளிடம் பக்கத்தாத்து பெண்மணி தனது வேண்டுகோளுக்கு இணங்கி பாடம் சொன்னதற்கு தான் அவருக்கு என்ன கைம்மாறு செய்ய வேண்டும் எனக் கேட்க, அவர் அடுத்த ஆண்டு தனது மகனுக்கு திருமணம் செய்விக்கும்போது வரதட்சிணை ஏதும் வாங்கலாகாது என கேட்டு கொள்கிறாள். அப்பெண்மணியும் அதற்கு ஒப்புகிறார்.
சாம்பு சாஸ்திரிகளது மனைவி செல்லம்மாள் தான் இனி பட்டு உடுத்தப்போவதில்லை என தான் நிர்ணயம் செய்ததைக் கூற, வரதட்சிணை வாங்குவது மற்றும் பட்டைத் தவிர்ப்பது ஆகிய சம்பந்தமாக பரமாச்சார்யாள் ‘தெய்வத்தின் குரலில்’ எழுதியபடி இங்கு நடப்பது குறித்து மகிழ்கிறார்.
பகுதி - 55 (21.04.2009):
நீலகண்டன் வீட்டில் அவரும் பர்வதமும் அசோக் பசுமாட்டுடன் பேசியது பற்றி விவாதிக்கிறார்கள். அப்போது சாம்பு சாஸ்திரிகள் வருகிறார். நாதன் வீட்டுக்கு போய் தினசரி பூஜை செய்யவியலுமா என பர்வதம் கேட்க சாம்புவும் சம்மதிக்கிறார். அப்போது நீலகண்டன் அவரிடம் அசோக் பசுவுடன் “பேசிய” விவரத்தைக் கூறி அம்மாதிரி பசுமாட்டுடன் பேச இயலுமா என்று கிண்டலாக கேட்கிறார். சாம்புவோ துளியும் அசராமல் “தாராளமாக பேசலாமே” எனக் கூறிவிடுகிறார். நீலகண்டன் திகைக்கிறார். பிறகு இது சம்பந்தமாக பல விளக்கங்கள் சாம்பு தருகிறார். நீலகண்டன் ஏற்க மறுக்கிறார்.
இது பற்றி சோவின் நண்பர் மேலும் விவரங்கள் கேட்க, சோ ராமாயணத்தில் கைகேயியின் தந்தை மிருக பாஷைகளை அறிந்தவர் எனக்கூறி அது சம்பந்தமான நிகழ்ச்சியையும் கூறுகிறார். ஜனஸ்ருதி என்னும் மன்னனின் கதையையும் கூறுகிறார்.
இங்கே நீலகண்டன் சாம்பு வெறுமனே போய் நாதன் வீட்டில் பூஜை செய்தால் போதும் என்றும், பாகவதர் அசோக்கை கெடுத்தது போல அவரும் செய்ய வேண்டாம் என்றும் கூறுகிறார்.
வேம்பு வீட்டில் அவர் மகளை பெண்பார்க்க கிரியும் அவன் அன்னையும் வருகின்றனர். பரஸ்பர விசாரணைகள். கிரியின் அப்பா ஏன் வரவில்லை என்பதை கேட்க, அவன் தாயார் அவர் காலேஜ் ப்ரொஃபசர் என்றும், அன்று ஏதோ ஸ்பெஷல் கிளாஸ் எனவும் கூறுகிறாள்.
நாதன் வீட்டிற்கு சாம்பு வந்து நீலகண்டன் மனைவி பர்வதம் தன்னை அங்கு அனுப்பியது பற்றி கூற, நாதனுக்கும் சந்தோஷம். அவர் பூஜை அறைக்கு செல்ல, நாதன் வசுமதியிடம் சாம்பு பற்றி கூறுகிறார். முக்கியமாக அசோக்குக்கு திருவண்ணாமலையில் சாப்பாடு போட்டு இடம் கொடுத்தது சாம்புவின் தங்கை என்றும் கூறுகிறார்.
வேம்பு வீட்டில் அவர் தனக்கு கிரியின் வரன் பிடித்திருக்கிறது எனக்கூற, அவர் மனைவியும் தமக்கையும் அவசரப்படவேண்டாம் என அவரை எச்சரிக்கிறார்கள். பையனின் தந்தையை பார்த்து பேச வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறார்கள். இந்த வரனில் ஏதோ ஒரு கோளாறு இருப்பதாக அவ்விரு பெண்மணிகளும் அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார்கள்.
பாகவதர் வீட்டில் அவர் மூத்த மகனும் மருமகளும் வந்திருக்கிறார்கள். வீட்டில் சுமுகமான சூழ்நிலை நிலவுகிறது. அப்போது சாப்பாடு நேரம். எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடலாம் என மருமகள் கூற அன்று ஏகாதசி ஆதலால் பட்டினி என பாகவதரின் மனைவி கூறுகிறார். “ஏகாதசிக்கு இரண்டு சாப்பாடு” என தான் கேள்விபட்டிருப்பதாக மருமகள் கூற, பாகவதர் அதற்கு விளக்கம் சொல்ல ஆரம்பிக்கிறார்.
சோவிடம் அவர் நண்பர் இது பற்றி கேட்க, அவர் “தெய்வத்தின் குரலில்” பரமாச்சார்யார் கூறியதை இங்கு மேற்கோள் காட்டுகிறார். இவ்வாறான தவறான பொருள் வருவதற்கு சுலோகத்தை பாதியில் விடுவதே காரணம் என்பதை எடுத்துரைக்கிறார். ஏகாதசி அன்று செய்ய வேண்டியவை இரு விஷயங்கள், அதாவது உடல் சுத்தம் மற்றும் மனச்சுத்தம் என்றுதான் அதற்கு பொருள் என்பதையும் முழு சுலோகத்தையும் கூறி அவர் விளக்குகிறார்.
நாதன் வீட்டில் சாம்பு பூஜை முடிந்து கற்பூரம் காட்ட, அசோக் அதை கண்ணில் ஒத்தி கொள்கிறான். அவர் தன் வீட்டுக்கு வந்து பூஜை செய்வது தனக்கு பிடித்தமாக உள்ளது என்றும் கோவிலில் இருப்பது போன்ற உணர்வு வருகிறது எனவும் கூறுகிறான். மேலே அவன் பேசப்பேச சாம்பு அவனை சிலாகிக்கிறார்.
எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நவீன அறிவியலின் வழிமுறைகள்
-
நவீன அறிவியல் என்பது என்ன? அதன் தர்க்கம் என்ன? ‘இதைப்பற்றி இன்னார் ஓர்
ஆய்வேட்டில் சொல்கிறார்’ என்றால் அது அறிவியலுண்மையா? என் சொந்த அனுபவம்
என்றால் அது அற...
9 hours ago
1 comment:
டோண்டு சார்..
http://broadwaypaiyan.blogspot.com
வாங்க.. வந்து பாருங்க.
ஹசன் ராஜா..
Post a Comment