3/01/2010

சோவின் எங்கே பிராமணன் - எபிசோடுகள் - 38-41

கடந்த வாரம் பல வேலை நெருக்கடிகளால் செவ்வாயன்றும் வியாழனன்றும் இரண்டிரண்டு எபிசோடுகளாக கவர் செய்ய இயலவில்லை. இப்போது நான்கு எபிசோடுகளையுமே கவர் செய்து இப்பதிவை இடுகிறேன்.

எபிசோடு - 38 (22.02.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
பாகவதர் மனைவிக்கு ஜலதோஷம் சுரம். அவள் ஆவி பிடிக்கிறாள். மகன் சிவராமன் சங்கடப்படுகிறான். தனது மனைவி ராஜி சமைக்கட்டுமே என்கிறான். அவன் அன்னை வேண்டாம் என்கிறாள். இருப்பினும் மனது கேட்காது ராஜியிடம் சென்று லீவ் போடும்படி சொல்ல அவள் அதை மறுத்து எதிர்வாதம் செய்கிறாள். மாமியாரை மாட்டுப் பெண் கவனிக்க வேண்டும் என எந்த சாத்திரத்தில் சொல்லியிருக்கிறது என அவள் திருப்பிக் கேட்கிறாள்.

அதானே என நண்பர் சோவிடம் கேட்க, சாத்திரத்தில் அவ்வாறு கூறியிருந்தால் மட்டும் கேட்டுவிடப் போகிறார்களா என கேலியாக பேசுகிறார். புகுந்தவீட்டில் ஒரு பெண் எவ்வாறெல்லாம் இருக்க வேண்டும் என்பதை குறிக்கும் ஒரு ஸ்லோகத்தையும் கூறுகிறார். ஒரு பெண் மகாலட்சுமி மற்றும் வீட்டின் எஜமானி. ஆனால் அதற்கெல்லாம் முன்பாக அவள் தன்னை அதற்கு அருகதை உடையவளாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்.

சிவராமன் மற்றும் ராஜியின் வாதம் தொடர, பேரன் ராமசுப்பு வந்து தான் லீவ் போட்டு பாட்டியை கவனித்து கொள்வதாக கூறி, அப்பா அம்மா இருவரையும் அடக்குகிறான்.

உமா வீட்டில் இல்லாத நேரமாக பார்த்து ரமேஷ் அவளது அலமாரியை குடைகிறான். நடுவில் வந்து விட்ட உமா அவனை சாடுகிறாள். பிறகு அசோக்குடன் சேர்த்து தன்னை சந்தேகப்படுவது எவ்வளவு அபத்தமானது என்பதையும் எடுத்துரைக்கிறாள். ரமேஷும் சந்தேகம் தீர்ந்து அவளிடம் மன்னிப்பு கோருகிறான்.

(நான் ஏற்கனவே ஒரு பதிவரின் பின்னூட்டத்துக்கு பதிலளித்தது போல இந்த தொடரில் கணவன் மனைவியை சந்தேகிப்பது, ஒருவரை ரௌடி வைத்து மிரட்டுவது என்பதெல்லாம் வந்தாலும் அப்பிரச்சினைகளை மற்ற சீரியல் கதைகளில் செய்வது போல சோ அவற்றையெல்லாம் சவ்வு மாதிரி இழுக்கமாட்டார்தான். காதும் காதும் வைத்தது போல உமாவே தன் பிரச்சினையை கையாண்டு அதை தீர்த்து வைத்தாள்).

(தேடுவோம்)

எபிசோடு - 39 (23.02.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
நாதன் வீட்டு பூஜைக்கு சென்றுள்ளார் சாம்பு. தனது தீர்த்த யாத்திரை விவரங்களை ஒரு டயரியில் குறித்து வைத்து அதை நாதனிடம் காட்ட நினைத்திருக்கிறார். ஆனால் டயரியை மறந்து விட்டார். ஆகவே சாம்புவின் மனைவி தன் மகள் ஆர்த்தியிடம் அதை கொடுத்து சாம்புவிடம் சேர்ப்பிக்குமாறு கூறுகிறாள்.

நாதன் வீட்டுக்கு வந்த ஆர்த்தி அந்த ரௌடி ராயப்பேட்டை ருக்கு செல்பேசியில் பேசிக் கொண்டே வெளியில் செல்வதை பார்த்து திடுக்கிடுகிறாள். ஆனால் அவன் அவளை கவனிக்கவில்லை. வசுமதியிடம் தான் சாம்புவை மிரட்டியதற்காக பணம் வாங்க வந்திருக்கின்றான் அவன்.

ஆர்த்தி இப்போது வீட்டினுள் வந்ததும் வசுமதிக்கு உறுத்தலாக இருக்கிறது. யாரையாவது அவள் வெளியே பார்த்தாளா என சுற்றி வளைத்து கேட்க, ஆர்த்தி யாரையுமே பார்க்கவில்லை என சாதிக்கிறாள்.

வீட்டுக்கு வந்த ஆர்த்தி தன் அம்மாவிடம் தன் சந்தேகங்களை கூறுகிறாள். அதுவரைக்கும் சாம்பு சாஸ்திரி மிரட்டப்பட்டதை கூட அறிந்திராத அவள் அன்னை திடுக்கிடுகிறாள். வசுமதி அந்தளவுக்கு தாழ்ந்து போவாளா என்று அவள் கூற, ஆர்த்தி நிதானமாக விளக்கங்கள் தருகிறாள்.

பிறகு நாதன் ஆபீசுக்கே போய் அவரிடம் தன் சந்தேகங்களை கூற அவர் முதலில் கோபத்துடன் மறுக்கிறார். பிறகு அவரையும் கன்வின்ஸ் செய்கிறாள் ஆர்த்தி. அப்படியே அவர் விசாரித்து வசுமதி மேலே தப்பில்லை என்றால் தான் எந்த தண்டனை வேண்டுமானாலும் ஏற்பதாகவும் கூறுகிறாள்.

நாதன் வீட்டினர் சாம்புவை இன்ஸல்ட் செய்தது அப்பெண்ணுக்கு தாங்கவில்லை. ஆகவே கோபப்பட்டு சண்டை போடுகிறாள், இதில் தவறென்ன என நண்பர் கேட்க, சோ அவருக்கு பரீட்சித்து கதையை கூறுகிறார். பரீட்சித்து ஒரு சமீகர் என்னும் முனிவர் மௌனவிரதத்தில் இருந்தபோது தனது கேள்விக்கு பதிலளிக்காததை தனக்கு அவமானம் செய்ததாக எண்ணி கோபத்தால் உண்மை புரியாமல் தியானத்தில் இருந்த அவர் கழுத்தில் செத்த பாம்பை போட்டு செல்கிறான். அதை அறிந்த முனிவரின் புதல்வன் அரசன் இன்னும் ஏழு நாட்களுக்குள் தட்சன் என்னும் பாம்பால் கடிக்கப்பட்டு சாவான் என சபிக்கிறான். இதை பின்னால் அறிந்த அவனது தந்தை, அரசன் அறியாமல் செய்த ஒரு தவறுக்காக அவனை இந்த அளவுக்கு சபிக்ககூடாது என கடிந்துரைக்கிறார். அவசரப்பட்டு இம்மாதிரி செய்வதால் ராஜ்ஜியத்தின் நலன்கள்தான் பாதிக்கப்படும் என்றும் அவர் கூறுகிறார்.

(தேடுவோம்)

எபிசோடு - 40 (24.02.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
நாதன் அலுவலகத்திலுருந்து வீட்டுக்கு காரில் வந்து இறங்குகிறார். அப்போது சிங்காரத்திடம் ராயப்பேட்டை ருக்கு பற்றி விசாரிக்க அவன் அது யார் என்று தெரியாது என்கிறான். நாதன் மேலும் வற்புறுத்த மைதிலி தன்னை வரவழைத்து சாம்பு சாஸ்திரிகளை மிரட்டச் சொன்னதையும், தான் மறுத்து விட்டதையும் கூறுகிறான். பிறகு வசுமதியை இதில் குற்றம் காண முடியாது என்றும், மைதிலிதான் தூண்டிவிட்டாள் என்றும் கூற, நாதன் கோபத்துடன் வீட்டுக்குள் வருகிறார். அங்கு மைதிலியும் வசுமதியும் பேசிய வண்ணம் அமர்ந்திருப்பதை கண்டு மைதிலியை முதலில் சாடுகிறார். மைதிலியோ வசுமதி கேட்டுக் கொண்டதால்தான் அப்படி செய்ததாக கூற, வசுமதியோ பழியை அவள் மேல் தூக்கிப் போட, சிறிது நேரத்துக்கு களேபரமாக இருக்கிறத்.

மைதிலி வசுமதியை திட்டி விட்டு அப்பால் சென்றதும் வசுமதி உட்கார்ந்து அழ, நாதன் அவளை மேலும் கண்டிக்கிறார். அசோக் எப்போது வரவேண்டும் இருக்கிறதோ அப்போதுதான் வருவான் என்பதையும் கூறுகிறார். பிறகு அவளை சமாதானம் செய்ய முயற்சிக்கிறார். அவருக்காக இம்முறையும் தானே சாம்புவிடம் மன்னிப்பு கேட்பதாக கூறிவிட்டு, இனிமேல் இவ்வாறு அவள் நடந்து கொண்டால் தான் வீட்டை விட்டே போய் விடுவதாக கூறுகிறார்.

இதென்ன இம்மாதிரி நாதன் பேசுகிறார் என சோவின் நண்பர் கேட்க, அவர் ராமானுஜரின் வாழ்விலிருந்து நடந்த நிகழ்ச்சிகளை உதாரணங்களாக தருகிறார். அவர் மனைவி தஞ்சம்மாள் அகங்காரத்தால் ராமானுஜர் தன்னுடைய குருவாக கருதும் திருக்கச்சி நம்பியை அவமானம் செய்கிறாள். ராமானுஜர் கண்டிக்கிறார். பிறகு பிட்சை கேட்டு வரும் விஷ்ணு பக்தனிடம் பிட்சை போட ஒன்றுமில்லை என பொய் உரைக்கிறாள். அதையும் ராமானுஜர் சாடுகிறார். கடைசியாக ராமானுஜரின் குருவான பெரிய நம்பியின் மனைவியையும் தஞ்சம்மாள் அவமதிக்க, அவளை அவளது பிறந்தகத்திற்கு அனுப்பிவிட்டு, சன்னியாசியாக தீட்சை பெறுகிறாr.

வசுமதியை சமையற்கார மாமி தேற்றுகிறாள்.

பாகவதர் வீட்டில் அவர் மனைவியை கறிகாய்காரன் அவமரியாதையாக பேச, அவரது மருமகள் ராஜி சீறி வந்து கறிகாய்காரனுடன் சண்டை போடுகிறாள். இந்த விஷயத்தை அறிந்த பாகவதர் ராஜியின் கேரக்டரை புரிந்து கொள்ளாமல் தடுமாற, தன் கணவன் சிவராமனிடம் தான் வேண்டுமென்றே வெவ்வேறு விதமாக நடந்து கொண்டு தன்னை யாரும் ப்ரெடிக்ட் செய்ய முடியாத நிலையில் வைத்திருப்பதாக கூறுகிறாள்.

வேத பாடசாலையில் அசோக் கிளாசுக்கு வர தாமதம் ஆனதை சகபண்டிதர் ஒருவர் முதல்வரிடம் புகாராக கூற, அங்கு வரும் அசோக்கிடம் முதல்வர் விளக்கம் கேட்கிறார். தனக்கு பிட்சை கிடைப்பதில் தாமதம் ஆவதாகவும் ஆகவே இங்கும் தாமதம் எனக்கூறிவிட்டு, எப்படி இருந்தாலும் தான் செய்தது தவறே, அதற்காக மன்னிப்பு கேட்பதாக கூறுகிறான்.

(தேடுவோம்)

எபிசோடு - 41 (25.02.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
கோவிலில் வைத்து சாம்பு சாஸ்திரிகளிடம் நாதன் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்கிறார். சாம்புவோ வசுமதியின் கோணத்தை எடுத்து பேச நாதன் இன்னும் நெகிழ்ந்து போகிறார். சாம்பு தீர்த்தயாத்திரைக்காக தன்னிடம் நாதன் கொடுத்த செக்கை திருப்பித் தர அவர் அதை ஏற்க மறுத்து விடுகிறார். அப்பணத்தை வைத்து கொண்டு என்ன வேண்டுமானால் செய்து கொள்ளலாம் எனக் கூறிவிட்டு அவர் சாம்புவிடம் பூஜைக்கு திரும்ப வருமாறு கூறுகிறார். சாம்புவின் பெண் ஆர்த்தியின் புத்தி கூர்மையையும் சிலாகிக்கிறார்.

சாம்புவின் மனைவியோ இம்முறை அதிகமாக கோபப்படுகிறாள். செக்கை எப்படியும் திருப்பித் தரவேண்டும் என தெளிவாகவே கூறுகிறாள். மகனோ செக்கை பணமாக மாற்றிக் கொள்ளுமாறு யோசனை கூற அது நிராகரிக்கப்படுகிறது. சாம்புவை நாதன் வீட்டினர் taken for granted ஆக ஆக்கியதை குறைகூறுகிறாள் அவரது மனைவி. பூஜைக்கும் போகக்கூடாது என்பதை சாம்பு ஏற்கவில்லை.

ஆர்த்தியிடமிருந்து நடந்ததை அறிந்து கொண்ட அவள் மன்னி பிரியாவிடம் அவள் குழந்தையை பற்றி விசாரிக்க, குழந்தை தான் இட்டுக்கட்டிய பாட்டை பாடியதும் தூங்கிவிடுகிறது எனக்கூற, அது என்ன பாட்டு என ஆர்த்தி கேட்க, பிரியாவும் பாடிக்காட்ட நாத்தியும் மதனியும் சேர்ந்து குமாளாமாக அப்பாடடை பாடுகின்றனர்.

உமாa வீட்டில் கிளிஜோசியம் பார்க்கின்றனர். பிற்கு இதை அறிந்த ரமேஷ் இது மூடநம்பிக்கை எனக்கூறுகிறான். பிறகு தங்களது குடும்பத்தில் மீண்டும் அமைதி நிலவ கிரெடிட் யாருக்கு என விளையாட்டாய் கேட்க, உமா சீரியசாகவே ஆஞ்சநேயருக்கே எனக் கூறுகிறாள்.

ஆஞ்சநேயர் வெறும் குரங்குதானே என சோவின் நண்பர் கேட்க, அவர் ஆஞ்சநேயர், சுக்ரீவன், வாலி போன்றவர்கள் வானரங்களே, குரங்குகள் அல்ல என தெளிவுபடுத்துகிறார். நல்ல வேத அறிவு உள்ளவர்கள் என்றும் அழுத்தமாக சொல்கிறார். அவrகள் ஒன்றும் திருப்பதியில் நம் கையிலிருந்து வாழைப்பழத்தை பிடுங்கும் குரங்குகள் இல்லை என்றும் கூறுகிறார்.

உமா தன் அன்னை தனக்கு சொல்லிக் கொடுத்த ஆஞ்சநேய தோத்திரத்தை சொல்லிக் காட்டுகிறாள்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

No comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது